Monday, August 20, 2012

'டோனி ஸ்காட்' என்ற மலை நதியில் விழுந்தது!!


படு அயர்ச்சியாக, நான் களைத்து ஓய்ந்திருந்த ஒரு பின்னிரவு நேரம் அது. 'Crimson tide' என்ற ஆங்கிலப்படத்தை அப்போதுதான் என் மடிக்கணிணி தரவிறக்கம் செய்து முடித்திருந்தது. ஒலி-ஒளி தரம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு தூங்கலாம் என பார்க்க ஆரம்பித்து, நேரம் போனதே தெரியாமல் மொத்த படத்தையும் பார்த்துவிட்டுப் படுக்கும் போது மணி அதிகாலை ஐந்து! அந்தப் படத்தில் நடித்திருந்தவர் சினிமா ரசிகர்கள் பலரின் விருப்ப நாயகன் டென்சல் வாஷிங்டன்! அந்த படத்தை இயக்கிய டோனி ஸ்காட்(Tony Scott)யின் விருப்ப நாயகனும் அவரே!  Crimson tide படம் நீர்மூழ்கி போர் கப்பல்களையும், அதில் பணிபுரியும் அதிகாரிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியையும் பற்றியது. இதை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலுமே கூட, நீர்மூழ்கிக்கப்பல்களையும் அதன் செயல்பாடுகளையும், அதிலுள்ள அதிகார அடுக்குகளையும் இவ்வளவு அப்பட்டமாக, பரபரப்பாக படம்பிடித்துக் காட்டிய திரைப்படம் ஏதுமில்லை! ஒரு நீர்மூழ்கிக்கப்பல் கேப்டனே அந்தப் படத்தை இயக்கியதைப் போல அவ்வளவு 'தகவல்கள்' அந்தப் படத்தில் விரவிக் கிடந்தது! அன்றுதான் 'டோனி ஸ்காட்' என்கிற அந்த இயக்குனர் யார் என்ற ஆர்வமும், ஆச்சரியமும் என்னுள் மேலோங்கி அப்போதே அவரைப் பற்றி விக்கிபீடியாவில் தெரிந்தும் கொண்டேன்! (இன்னொரு கூடுதல் தகவல், இவர் க்ளாடியேட்டர் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் இளைய சகோதரர்!)

பின் அடுத்தடுத்து அவரது வெற்றிப்படங்களான Spygame, Topgun, Dejavu, Man on fire, The Taking of pelham, Unstoppable ஆகியவற்றையும் பார்த்தபின், இந்த அளவுக்கு ஒரு மனிதனால் ஒரு படம் எடுக்க, தன் தொழிலில் சிறந்து விளங்க மெனக்கெட முடியுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது! ஒவ்வொரு படத்துக்காகவும் அவர் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் ஏராளம். "பிடித்த இயக்குனர் யார்?" என எப்போது என்னிடம் கேட்கப்பட்டாலும் என் மூளை வாய்க்கு அனுப்பும் முதல் பெயர் டோனி ஸ்காட்! அதுமட்டுமல்லாது எனக்கு ஒரு Inspiration அவர் ஆகவே மாறிப்போனார்!!

இப்படியாகப்பட்ட டோனி ஸ்காட் 19/8/2012, ஞாயிற்றுக்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பாலத்தின் மீதிருந்து நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்! நதியில் விழுந்து இறந்த அவரை பலமணி நேரத்துக்குப் பின் ஒரு மீனைப் போல வெளியில் எடுத்திருக்கிறார்கள். புகழின் உச்சியில், சினிமா கலையின் உச்சியில், என்னைப் போன்ற பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் டோனி ஸ்காட்டுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. அவர் தன் அலுவலகத்தில் எழுதி வைத்திருந்த தற்கொலை வாக்குமூலத்தை காவல் துறை இன்னும் வெளியிடாத நிலையில், அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி காலையில் இருந்து என்னை குடைந்து கொண்டே இருக்கிறது.

நாம் அனைவருமே புகழை நோக்கியும், உச்சியை நோக்கியும், சாதனையை நோக்கியும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். நம் வாழ்வின் பிரதான நோக்கமாக, லட்சியமாக அவற்றைதான் வைத்திருக்கிறோம். ஆனால் எல்லாவற்றிலுமே உச்சத்தில் இருந்த டோனி ஸ்காட்டுக்கே தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஒரு காரணம் இருந்ததென்றால், வளர்ச்சியும்-புகழும்-சாதனையும் மட்டுமே வாழ்க்கையின் பிரதான விஷயம் இல்லை என்பது தெளிவாகிறது! அதையெல்லாம் தாண்டியும் மனிதனுக்காக தேவைகள் என்னென்னவோ இருக்கத்தான் செய்கிறது! "அவை என்னென்ன?" என்ற கேள்விதான் என்னை குடைந்து கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது!!

டோனி ஸ்காட்டின் படங்கள் அவரை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே, அவரை இவ்வுலகில் வாழவைத்துக்கொண்டே இருக்கும். இந்தப் பதிவை அந்த மாபெரும் கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்!      

Saturday, August 11, 2012

வரலாறு 'படைக்கும்' சீமான்! பார்ட் 2 !

"

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள்."


-இது சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியது! அதாவது எம்.ஜி.ஆர் 1977ல் பதவியேற்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்வே இறந்துவிட்ட பெரியார் எம்.ஜி.ஆரின் பதவியேற்பில் கலந்துகொண்டதாக 'கண்டுபிடித்து' சொன்னார் சீமான்! இந்த கோமாளித்தனம் எழுப்பிய சிரிப்பலைகளே இன்னும் அடங்காத நிலையில் அடுத்த காமடியை செய்துள்ளார் அண்ணன் சீமான்!

ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர் அளித்த NDTV-hindu பேட்டியில், விடுதலைப்புலி போராளிகளுள் மிகவும் முக்கியமானவரான மாவீரன் பால்ராஜ் பற்றிய தவறான தகவல் தான் அது! மலையகத்தமிழர்கள் குறித்த பேட்டிகண்டவரின் கேள்விக்கு, "அண்ணன் பால்ராஜ் கூட மலையகத்தமிழர் தான்" என போட்டாரே ஒரு போடு!

விடுதலைப்புலிகளைப் பற்றி ஒரளவேணும் அறிந்த அனைவருக்குமே மாவீரன் பால்ராஜை தெரியும். பல போர்களில் தன் வீரத்தை நிரூபித்து சிங்கள ராணுவத்துக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர்! தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் பிறந்த ஈழத்தமிழரான அவரை 'மலையகத் தமிழர்' என வாய்கூசாமல் கூறியிருக்கிறார் சீமான்! இலங்கையின் அரசியல் சூழ்நிலை அறிந்தவர்களுக்கு மலையகத்தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான பூர்வீக வித்தியாசம் தெரியும். (மலையகத் தமிழர் என்போர் இந்தியாவில் இருந்து தேநீர் தோட்ட வேலைக்காக இலங்கை சென்றவர்கள். ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள்.)

இதை சாதாரண பிழையாக நாம் கருத முடியாது! விடுதலைப்புலிகளின் ஆஸ்தான தமிழகப்பிரிவு போராளியாக தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் சீமானுக்கு, புலிக்கொடியையே தன்கட்சிக்கொடியாகவும் அறிவித்துள்ள சீமானுக்கு, புலிகள் புலிகள் புலிகள் என எங்கு செல்லினும் கர்ஜிக்கும் சீமானுக்கு மாவீரன் பால்ராஜ் பற்றி கூட தெரியாதது படு அபத்தம், ஆச்சரியம்!! வரலாற்று அறிவு என்பதே இல்லாமல் சூழ்நிலைக்கோ, கேள்விக்கோ ஏற்றவாறு புதிய வரலாறுகளை உருவாக்கும் அவரது தொடர்-செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது. எம்.ஜி,ஆர் குறித்த பொதுக்கூட்டம் என்றால் அதில் எம்ஜிஆரை புகழ்வதற்காக சில வரலாற்று பொய்களை உருவாக்குகிறார், மலையகத்தமிழர் பற்றிய கேள்வி என்றால் அதற்காக சில பொய்களை உருவாக்குகிறார்! இப்படி வரலாறுகளை உருவாக்கும் பொய்-மூட்டையாகவும் வரலாறே தெரியாமல் புரட்சிக்கு கிளம்பிய காமடியனாகவுமே காட்சியளிக்கும் சீமானை என்னவென்று சொல்ல? விடுதலைப்புலிகளின் பெயரையும் அரசியலையும் இவரைப் போல் அரசியலுக்காக exploit செய்து கெடுக்கும் நபர் வேறு யாருமிலர்! பற்றாக்குறைக்கு "அண்ணன் பிரபாகரன் அதைச் சொன்னார், இதைச் சொன்னார், விஜய் பிடித்த நடிகர் என்றார்", என சந்தர்ப்பவாத அறிக்கைகள் வேறு! விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாதது சிங்களர்களுக்கு நன்மையோ இல்லையோ, இவரைப் போன்ற ஈழவியாபாரிகள் கல்லா கட்ட நன்றாகவே பயன்படுகிறது! இவரது அடுக்கடுக்கான பொய்களை நிறுத்தவேணும் விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும்!

(இதுகுறித்து முகநூலில் எனக்கும் நாம் தமிழர் அதிகாரபூர்வ இணைய ஒருங்கிணைப்பாளர் ஒருவருக்குமான வாக்குவாதத்தில் அவரும் பால்ராஜை மலையகத்தமிழர் என்றார். பின் ஆதாரங்கள் கொடுத்தபின் ஆள் எஸ்கேப்! தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி!!)

Thursday, August 2, 2012

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

“கீழ்சாதினா இப்படிதான் வாழனும்னு நம்ம சாஸ்திரங்களே சொல்லிருக்கு. அப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குறாங்கன்னு” என்று, தான் ஒரு தலித் என்பதால் சிறுவயதில் இருந்து சந்தித்த கொடுமைகளுக்கான காரணத்தைத் தேடி அலைந்து கண்டுகொண்ட ஒரு வட-இந்திய பெண் ‘சத்யமேவஜெயதே’ நிகழ்ச்சியில் சொல்கிறார்.
அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பனியத்தின் மீதும் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்கசாதி வெறியின் மீதும் அமிலம் வீசுகிறது!
தன் சமூகத்தின் மீது பார்ப்பனர்கள் கட்டவிழ்த்த அனைத்து ஏதேச்சிகாரங்களையும் தாண்டி, போராடி, படித்து, பிஎச்டி முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியையாய் இருக்கும் அந்த பெண் இன்னமும் தான் சந்தித்து வரும் அடக்குமுறைகளை கூறும் போது அதை கேட்கும், திராவிட இயக்கங்களால் சாதியை பெருமளவு பின்னுக்குத்தள்ளியிருக்கும் நம் மாநில இளைஞர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்!


அவர் அமர்ந்த பெஞ்சை கழுவிவிட்டு பின் அமர்ந்த சக மாணவர்களை பார்த்த அந்த பெண், தான் பேராசிரியையாய் ஆன பிறகும் தன் தாயின் கையில் துடைப்பத்தைக் கொடுத்து அவர் வீட்டை சுத்தப்படுத்த சொன்ன வீட்டு உரிமயாளரையும் பார்த்திருக்கிறார். ஆக, தலித் என்ற முத்திரை அவர் சாகும் வரையில் அவருடனே தொடரும் எனவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். முழுக்க முழுக்க வட இந்திய சாதிய சூழ்நிலைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் சூழலோடு ஒப்பிட்டு, திராவிட இயக்கங்களின் சாதி ஒழிப்பு பங்களிப்பை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


1960களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பல்வந்த்சிங் ஐ.ஏ.எஸ் சொல்கிறார், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு பார்ப்பனர் இவர் குடித்த க்ளாசை எடுக்க மாட்டாராம்! மேலும் தனக்கு வரவேண்டிய பதவியுயர்வு பலவற்றை பார்ப்பன மேலதிகாரிகள் தடுத்ததையும், இறுதியில் வெறுத்துப்போய் தன் ஐ.ஏ.எஸ் வேலையையே உதறிவிட்டதாகவும் சொல்கிறார்.


பின் பலதரப்பட்ட மக்களிடம் தற்கால சாதிய நடைமுறை பற்றி நிகழ்ச்சியில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சொல்லிவைத்தாற்போல மேல்தட்டு மக்களின் ‘ஃபேஷன் ஸ்டேட்மென்ட்’டான “இப்போதெல்லாம் யார் சார் சாதி பாக்குறா?” என்ற பதிலே ஒட்டுமொத்த பதிலாக வருகிறது. இதற்கு பின்பாக இந்தியாவெங்கும் 2012யிலும் விரவிக்கிடக்கும் தீண்டாமையையும், சாதியத்தையும் ஆராய்ச்சியாளர் இயக்குனர் ஸ்டாலின் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்கிறது நிகழ்ச்சி.


காசியில் அர்ச்சகராக இருக்கும் ஒரு பார்ப்பனரிடம் இது குறித்து கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்கிறார், “நான் ஆச்சாரமான ப்ராமணன். கடவுளின் தலையில் இருந்து வந்தவன். நாளைக்கு நம் கால் நம்மிடம் வந்து நான் தான் உன் உடம்பை தாங்குகிறேன் அதனால் நான் உயர்ந்தவர் எனச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? அனைவரும் சமம் என சொல்லும் நம் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பாவச்செயலாக பார்க்கிறோம்” என்கிறார்.
இந்த இடத்தில்தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கடும் முயற்சியால் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கும் நம் ஊர் தீட்சிதர்கள் என் நினைவுக்கு வந்தார்கள். இப்படியாகப்பட்ட ஒரு வழக்கு போடப்படும் சூழ்நிலையில், அதை உடனே நீதிமன்றம் தள்ளுபடி செய்யாத சூழ்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய முதியவரை தடித்தீட்சிதர்கள் அடிக்கும் சூழ்நிலையில்தான் நம்மூரில் “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்ற பொருந்தா-கோஷமும் கேட்கிறது.


இயக்குனர் ஸ்டாலின் சாதியம் பற்றிய தன் பலவருட ஆராய்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது இஸ்லாம் மதத்தில், கிறித்தவ மதத்தில் இருக்கும் சாதியத்தைப் பற்றியும் கூறுகிறார். இஸ்லாத்தில் சாதி இல்லை, ஆனால் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றும், இஸ்லாம் மதம் எந்த வகையிலும் சாதியத்தை ஆதரிக்காததால், அல்லாவுக்கு பயந்து மசூதிக்குள் தலித் இஸ்லாமியர்களை அனுமதித்துவிட்டு வெளியில் அவர்களை மதிப்பதில்லை எனவும் ஒரு தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் சொல்கிறார்.
அதேபோல் புலையர்கள் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட கிறுத்தவ சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், “எங்கள சர்ச்சுக்குள்ள விட மாட்டாங்க. ஏன்னா எங்க ரத்தம் சிவப்பு அவங்க ரத்தம் நீலம்” என நக்கலாக செவிட்டில் அறைந்ததைப் போல சொல்கிறார். இவர்கள் மதம் மாறினாலும் தலித் முத்திரை என்பது இவர்களை விட்டு அகல மறுக்கிறது என்பதே உண்மை.
இந்த 2012யிலும் வட இந்திய பள்ளிகளில் சத்துணவு நேரத்தில் தலித்துகளை தனியே உட்கார வைக்கிறார்கள். அதனால் பல தலித் மாணவர்கள் சுயமரியாதைக்காக சாப்பிடாமலே கூட இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் தலித்துகளுக்கு கழிவறை கழுவும் வேலை, பள்ளி மைதானம் சுத்தப்படுத்தும் வேலை அந்தந்த பள்ளி ஆசிரியர்களாலேயே கொடுக்கப்படுகிறது. ‘பட்டேல்’ போன்ற உயர்சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற வேலையைக் கொடுக்கமாட்டார்கள். “நாங்க எங்க புள்ளைங்க எந்த தொழில செய்யகூடாதுனு பள்ளிகூடத்துக்கு அனுப்புனோமோ அங்கேயும் அதையே பண்ண சொல்றாங்க” என அழுதபடியே தெரிவிக்கிறார் ஒரு தலித் தாய்.
நம் குழந்தைகளுக்கு நம்மூர் பள்ளிகளில் இது நடந்தால் நாம் கொதிப்போமா இல்லையா? வடநாட்டில் பெயர்களோடு தலைமுறை தலைமுறையாக ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப்பெயர்கள் இவன் இன்ன சாதி என சுலபமாக இனங்காண வைத்துவிடுகிறது.


நிகழ்ச்சியின் இந்த குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கையில் தான் நாமெல்லாம் திராவிட இயக்கத்திற்கும், தந்தை பெரியாருக்கும் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை முழுதாக உணரமுடிந்தது. நம்மூர் திருமணப் பத்திரிக்கைகளில், “பழனிச்சாமிக் கவுண்டரின் பேரனும், பாலுவின் மகனுமான வேலுவுக்கும்…..” என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பழனிச்சாமி என்ற பெயருடன் இருக்கும் ‘கவுண்டர்’, ஏன் பாலு என்ற பெயரிலும், பாலுவின் மகனான வேலுவின் பெயரிலும் இல்லை? ஏனெனில் பழனிச்சாமிக் கவுண்டர் தலைமுறைக்கும், பாலு தலைமுறைக்கும் இடையில் திராவிட இயக்கம் தன் வேலையைக் காட்டியதுதான்!
தமிழகத்தில் அவ்வளவு சுலபமாக நாம் யாரின் சாதியையும் கண்டுபிடிக்க முடியாது. “உங்கள் சாதி என்ன?” என்று தமிழகத்தில் யாரேனும் கேட்டால் நாம் எவ்வளவு கேவலமாக அவர்களைப் பார்க்கிறோம்! சாதிப் பெயரை பொது இடத்தில் சொல்லும்போது குரலை தாழ்த்திச் சொல்கிறோமா இல்லையா? அதன் காரணம் பெரியாரேயன்றி, திராவிட இயக்கமேயன்றி வேறென்ன?


இன்னும் தொடரும் மகா கொடுமை!

                             
1993லேயே மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் இந்திய அளவில் 13லட்சம் பேர் மலம் அள்ளும் தொழிலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மை இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் என்பதுதான் பெருங்கொடுமை!


“நகரங்களிலுமா சாதி பார்க்கிறார்கள்?” என்ற அமீரின் கேள்விக்கு “சாதிப்பெயர் சொல்லி வரன் தேடுவதே சாதி பார்க்கும் பழக்கம் தானே!” என பொட்டில் அடித்ததுபோல் பதில் சொல்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டாலின். மேலும் சாதிகளை ஒழிக்க ஒரே வழி சாதிமறுப்புத் திருமணம் மட்டுமே என்றும் சொல்கிறார். நாங்கள் “அடக்கமான குடும்பம், கலாச்சாரமான குடும்பம், பாரம்பரியமான குடும்பம்” என்றெல்லாம் பெருமை பீற்றுபவர்கள் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதைதான் அப்படி சொல்கிறார்கள், அந்த பழக்கம் முற்றிலும் ஒழியவேண்டும்.
சாதி இல்லை, அது இப்போது புழக்கத்தில் இல்லை என மறைத்து மறைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளவே எல்லாரும் ஆசைப்படுகிறார்களேயொழிய உண்மையான நிலையை ஒப்புக்கொள்ள யாரும் தயார் இல்லை. உடலில் இருக்கும் நோயை மறைத்து வைத்தால் பின் மருத்துவம் எப்படிப் பார்ப்பது?


ஒட்டுமொத்தமாக தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படிந்திருக்கும் சாதியப் படிமத்தை இந்த நிகழ்ச்சி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்திய அளவில் சாதியம் என்பது ஒரு ‘கெட்ட விசயம்’ என்ற புரிதலே வட இந்தியர்களுக்கு சமீபகாலத்தில்தான் வந்திருக்கிறது. பெரியார் 1940களில் செய்த புரட்சிகளை, கலப்பு மணங்களை, கோயில் நுழைவுகளை இப்போதுதான் இவர்கள் ‘புரட்சி’ என்றே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


தமிழகத்தில் ஒழிந்துவிட்டதா சாதி?

சரி, சாதிகளை மறுத்த திராவிட இயக்கம் வேரூன்றியிருக்கும் தமிழகத்தில் சாதியம் முற்றிலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மையாக இருக்கிறது. இன்னமும் திண்ணியம் மலம் திணிப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு சமூகத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சாதி ஒழிப்பில் தமிழகம் ஒரு அரை நூற்றாண்டு முன்னால் நிற்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.


                              


இது ஒருபுறம் என்றால், சாதியம் நம்மைச் சுற்றி விஷச்செடியாய் வளர்ந்து இருக்கையில் இடஒதுக்கீட்டின் மூலம் மேல்தட்டுக்கு திடீரென ‘ட்ரான்ஸ்ஃபர்’ ஆகியிருக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் சிலர் இடஒதுக்கீட்டை எதிர்க்கத் துவங்கிருக்கும் அவலமும் இங்கே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது, “நான் ஏறிவந்துட்டேன் அடுத்தவன் ஏறுனா என்ன ஏறலேனா எனக்கென்ன!” என்ற சுயநல எண்ணமே இதற்கு காரணம்.

அதுமட்டுமல்லாது இட ஒதுக்கீடு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் உயர்பதவிகளிலும், அரசை ஆட்டுவிக்கும் இடத்திலும், கல்வியை உரிமை கொண்டாடியவர்களுக்கும் இன்று பிரச்சினையாய் இருக்கிறது. இதுவரை நமக்குக் கீழே குப்பை பொறுக்கியவர்கள் இன்று நமக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்களே என்ற வயித்தெரிச்சலில் புகைகிறார்கள். அதாவது இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை, ஆனால் வெகு சாமர்த்தியமாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கே பிரச்சினை என்பதைப் போல பொய் பரப்பி பிற்படுத்தப்பட்டவர்களையே இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசவைக்கிறார்கள்.


பல ஆயிரம் வருடங்களாக மக்களின் மரபணுவிலேயே ஊறிப்போன சாதியை வெறும் பேச்சால் ஒழித்தல் என்பது சாத்தியமில்லாதது. சாதி ஒழிப்பு என்பது இன்றளவில் ஒரு பிரச்சாரமாக, “எடுத்தா எடுத்துக்க” என்ற நிலையிலேதான் இருக்கிறது. கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு நிறைவேற்றப்படும்வரை பெரியார் தோன்றிய தமிழகத்திலேயே கூட சாதி ஒழிப்பில் தேக்கநிலை இருக்கவே செய்யும்.


மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சாதி சங்கங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து வெளிப்படையாகவே சாதி வெறியர்கள் பேட்டி தர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக இல்லாது இருந்த சாதிப்பெயர் சூட்டல் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். புதிதாய் தமிழ் தேசியத்தை கையிலெடுத்திருக்கும் சிலர் தங்களை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சாதிப் பெயர்களை பெயருடன் சுமக்கத் துவங்கியுள்ளனர். அண்ணா, பெரியார் படங்களைக் கூட சாதிச் சங்க போஸ்டர்களில் பயன்படுத்தும் முட்டாள்கள் நிறைந்த சமூகமாக தமிழகம் மெள்ள மாறிவருகிறது. இவற்றையெல்லாம் இப்போதே உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் வடமாநிலங்கள் போல மீண்டும் சாதியம் ஆலமரமாக இங்கே வளர்ந்து நிற்கக்கூடிய வாய்ப்புகள் மேலோங்கும்.
தமிழ்மேட்ரிமோனி, பாரத்மேட்ரிமோனி என இருந்த காலம் போய் இன்று தமிழ் தொலைக்காட்சிகளிலே ஐயர்கல்யாணம்.காம், நாடார்கல்யாணம்.காம் என விளம்பரம் செய்கிறார்கள். கூடியவிரையில் மனிதக்கல்யாணம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கவேண்டும் என சீரியசாகவே தோன்றுகிறது!


காதல் திருமணங்கள் செய்வோர்க்கு சாதி மறுப்பு இயல்பாகவே அமைந்துவிட்டாலும், சாதி மறுப்பு திருமணம் செய்யவிரும்பும் காதலில் விழாதோருக்கு என பிரத்யேகமாக சாதி மறுப்புத் திருமண இணையதளங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேல் பட்டேல், பானர்ஜி, சாட்டர்ஜி, குப்தா, தேவர், கவுண்டர், பறையர், வன்னியர், முதலியார் என எந்த பெயர்கள் எல்லாம் சாதியைக் குறிக்கிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சட்டப்படி தடை செய்தால் என்ன நட்டம் மொழிகளுக்கு வந்துவிடப் போகிறது? அமெரிக்கா போன்ற நாடுகளில் Nigger, Negro போன்ற சொல்லாடல்களை தடை செய்துள்ளதைப் போல! சாதிச் சான்றிதழ்களிலும் சாதிப்பெயரைக் குறிக்காமல் இடஒதுக்கீட்டுக்காக வகுப்பை மட்டும் குறிப்பிட்டால் காலப்போக்கில் சாதிப்பெயர்களே காணாமல் போகக் கூட வாய்ப்புண்டு. இதெல்லாம் என் அனுமானங்கள். ஆனால் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நிபுணர்களுக்கே வெளிச்சம்.


மீண்டும் சொல்கிறேன், கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு என்பது நிறைவேற்றப்பட்டாலேயொழிய சாதி என்னும் நோய் தாக்கப்பட்ட சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கும்.


அடுத்தமுறை, ‘இப்பலாம் யாரு சாதி பாக்குறா?’ எனச் சொல்லும் முன் உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் பெண்/மாப்பிள்ளை தேடும் முறையையும், கடவுள்சிலை அருகில் பிற்படுத்தப்பட்டோர் போக முடியாத நிலையையும், அதை தடுத்து உயர்சாதியினர் தொடுத்திருக்கும் வழக்கையும், அழுதபடியே புலம்பிய டெல்லி பேராசிரியை அனுபவித்த அடக்குமுறையையும், தனியாக உணவிடப்படும் தலித்துகளையும், வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சாதிச்சங்க போஸ்டர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி நடத்தி ஆயிரம் ஆயிரம் சாதி சார்ந்த விஷயங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
சாதியும், சாதிய அடக்குமுறைகள் ஒழியவில்லை. ஒழிக்கவேண்டும் என்ற பெருங்கடமை நம் முன் உயிருடன் இருக்கிறது!

நன்றி என்வழி இணையதளம்.

Wednesday, August 1, 2012

மூக்குடைபட்ட ஜெயலலிதாவும், முடிசூட்டிய முகர்ஜீயும்!இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக என்பது போல இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக குடியரசுத்தலைவர் தேர்தலை குழாயடி சண்டை போல நடத்தி முடிக்க உதவியிருக்கிறார்கள் அத்வானியும், ஜெயலலிதாவும். குடியரசுத்தலைவர் என்பவர் இந்திய அரசின் மிக உயர்ந்த பதவி என்றாலுமே கூட இங்கிலாந்து அரச குடும்பத்தைப் போல ரப்பர் ஸ்டாம்ப், பொம்மை என்றெல்லாம் ஊடகங்களால் விமர்சிக்கப்படும் ஒரு பதவி. ஆனால் குடியரசுத்தலைவரை முன்மொழிவதும், தான் முன்மொழிந்த வேட்பாளர் குடியரசுத்தலைவர் ஆவதும் தன் சக்தியையும், செல்வாக்கையும் பறைசாற்றும் விஷயமாகவே இந்திய அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.

"யார் ஜனாதிபதி வேட்பாளர்?" என்ற கேள்வியே எப்போதும் எழும் இந்திய ஜனாதிபதி தேர்தல்களில், "யார் யாரெல்லாம் ஜனாதிபதி வேட்பாளர்கள்?" என்ற கேள்வி எழுந்தது இந்த முறைதான்! ஆரம்பத்தில் இருந்தே பலரின் பெயர் அடிபட்டாலும் காங்கிரஸ் தரப்பில் முன்னணியில் இருந்தது பிரணாப் முகர்ஜிதான். துக்ளக் சோ போன்ற ராஜகுருக்கள் காட்டிய ஆசையால் பிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திய அளவில் தன் செல்வாக்கை வெளிக்காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த நினைத்து, நவீன்பட்நாயக்கின் பரிந்துரையின் பேரில் சங்மாவை வெகு அவசரமாக முன்மொழிந்தார்.  பழங்குடி இனத்தவர் என்ற ஒரே தகுதி அவருக்கு போதும் என்ற கணக்கு இந்திய அளவில் வேலை செய்யும் என்ற எண்ணமே காரணம். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் சங்மாவின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கூட அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்பதுதான்! ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் ஓராண்டு முடிந்த கட்டத்தில் அனைத்து இந்திய பத்திரிக்கைகளிலும் பலகோடிகள் செலவில் (கொல்கட்டா-வடகிழக்கு மாநிலங்கள் என எதையும் விடவில்லை) பக்கம் பக்கமாக சாதனைவிளக்க விளம்பரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இது எல்லாமே அகில இந்திய அளவில் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. அதாவது தன் நண்பர் மோடி பாணியை தானும் கையிலெடுத்திருந்தார்.  ஆனால் ஜெ சங்மாவுக்காக அறைகூவல் விடுத்த பின்பும் பி.ஜே.பி தரப்பில் மவுனம் காக்கவே செய்தார்கள். 

மேலே சொன்னதைப் போல மாநில அரசியல்வாதிகளின் இந்திய அளவிலான செல்வாக்கை நிர்ணயிக்கும் குடியரசுத் தேர்தலில் மம்தா பானர்ஜி ஜெயலலிதாவின் வேட்பாளரை ஏற்க தயாராக இல்லை. அதனால் தன் பங்குக்கு அப்துல் கலாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்க, எழுந்தது குழப்பம்! , (நல்லவேளை மாயாவதி உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் இல்லை. இல்லையென்றால் தன் பங்குக்கு ஒரு வேட்பாளரை அறிவித்திருப்பார்.)  பி.ஜே.பி மம்தாவின் இந்த அறிவிப்பு வந்தவுடன் கலாமின் பதிலுக்காக காத்திருந்தது. அப்துல் கலாமும் தன் விருப்பத்தை முதலில் தெரிவித்துவிட்டு, பின் தான் வெற்றிபெற சாத்தியமில்லாததை உணர்ந்து விலகவும், வேறுவழியில்லாமல் ஜெயலலிதா முன்மொழிந்த வேட்பாளரான சங்மாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பி.ஜே.பி. தொடர்ந்து மம்தாவின் ஆதரவை பிரணாப் வேண்டிக்கொண்டிருக்க, இறுதியில் பிரணாப்பை ஆதரிப்பதாக அறிவித்து ஜெயிக்கும் அணியில் தன் பெயரை இடம்பெறச் செய்தார் மம்தா.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே, அதாவது காங்கிரஸ் அதிகாரபூர்வமாக தன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் முன்பே, பிரணாப் முகர்ஜி வேட்பாளர் என்றால்  ஆதரிப்போம் என சொல்லிவந்த கலைஞர், அதிகாரபூர்வ வேட்பாளராக பிரணாப் அறிவிக்கப்பட்டவுடன் தன் ஏகபோக ஆதரவை உடனே தெரிவித்தார். பிரதீபா பாட்டிலின் மிகவும் அதிருப்திகரமான செயல்பாட்டிற்கு பிறகு அரசியலும் தெரிந்த, உலக நடப்புகளில் தெளிந்த ஒருவரை ஜனாதிபதியாக ஆக்குவதற்கான தேவைகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த வேளையில் பல வருடம் தீவிர அரசியலில் இருக்கும் பிரணாப் முகர்ஜீ சரியான தேர்வாகவே மதிப்பிடப்பட்டார்.

இறுதியாக வேட்புமனு தாக்கம் முடிந்தபின் தன் பங்குக்கு சங்மா, பிரணாப் மீது பல குற்றச்சாட்டுகளை கொழுத்திப்போட்டுக்கொண்டே இருக்க, ஒவ்வொன்றாக பொய் குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இப்படியாகப்பட்ட குழப்படிகள் எல்லாம் இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்த தேர்தலிலும் நடைபெறவில்லை. ஒருவழியாக இந்தியாவின் பதிமூன்றாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜீ.

ஒரு வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிஜேபி ஆதரவின்றி வெற்றி பெற்ற பிரணாப் ஜனாதிபதியாக இருப்பார். ஆட்சிமாற்றம் ஏற்படின் இது பிஜேபி கூட்டணி அரசுக்கு எந்தவிதமான சிக்கல்களை உண்டு செய்யும் என்பதையும் நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். கடந்தகாலங்களில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை சரியாகப் பயன்படுத்தியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன். அவருக்குப் பிறகு வந்த அப்துல் கலாமும், பிரதீபா பாட்டிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாத பொம்மைகளாகவே இருந்த நிலையில் அரசியலில் நல்ல அனுபவம் உள்ள பிரணாப் கண்டிப்பாக ஒரு சவாலாகவே இருப்பார்.

இதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் மத்திய அரசியல் கனவு இந்தியா முழுவதும் பலகோடிக்கு விளம்பரங்கள் செய்தும், அவசர அவசரமாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக சங்மாவை அறிவித்தும் கூட சுக்குநூறாக உடைந்திருகிறது. பிரதமர் கனவில் இருக்கும் முலாயம் சிங், மம்தா, மாயாவதி ஆகியோர் ஜெயலலிதாவைப் போல் திடீரென அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. கடைசி மட்ட தொண்டனில் இருந்து பல போராட்டங்களுக்குப் பின் படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்திருப்பவர்கள். எக்காலத்திலும் ஜெயலலிதா போன்ற ஒரு அரசியல் தெரியாதவரை தங்களை முந்த அனுமதிக்க மாட்டார்கள். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாவது அணி அமைக்கலாம் என முலாயம், அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்றவர்களை சென்னைக்கு வரவழைத்து கைகோர்த்தபடி பேட்டி கொடுத்துவிட்டு, பின் இரண்டே நாட்களில் மூன்றாம் அணிக்கு வாய்ப்பே இல்லை என பேட்டியளித்து அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா! இதை வட இந்திய அரசியல்வாதிகள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்துத்துவ கட்சிகளும், இயக்கங்களும் வேண்டுமானால் ஜெயலலிதாவின் உயர்சாதி பின்புலத்தையும், இந்துத்துவ கொள்கைப் பற்றையும் கருத்தில் கொண்டு அவரை ஆதரிக்க வாய்ப்புண்டேயொழிய மற்றவர்களின் ஆதரவு எக்காலத்தில் ஜெவுக்கு கிடைக்கவாய்ப்பில்லை. இந்துத்துவ கட்சிகளே கூட மோடி இருக்கும்போது ஜெவுக்கு எந்த அளவில் கைகொடுப்பார்கள் என்பதும் சந்தேகமே!

                                      


மாநில அரசியலில் மட்டுமே ஐம்பதாண்டு காலத்து மேல் இருந்தாலும் கலைஞருக்கு மத்தியில் எப்போதும் செல்வாக்கு உண்டு. மிசா அவசரநிலை காலத்தில் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து எம்.ஜி.ஆர் அண்ணா திமுகவை, அகில இந்திய அண்ணா திமுக என மாற்றியபோதும் கிஞ்சித்தும் பயப்படாமல் திமுகவை மாநில கட்சியாக மட்டுமே தொடர்ந்தவர் கலைஞர். மேலும் மத்தியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் திமுகவின் பங்கு பெருமளவில் இதுவரை இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது நம்பத்தன்மையான கூட்டணிக் கட்சியாக இதுவரை நடந்திருக்கிறது திமுக. ஆனால் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் அதிமுவின் கதையோ இதற்கு நேர்மாறு. ஆதரவை வாபஸ் பெறுவதும், ஆட்சியைக் கவிழ்ப்பதும் தொடர்கதை. ஆனாலும் பிஜேபி அதிமுக கூட்டணியை விரும்புவது கொள்கையளவில் இருக்கும் ஒற்றுமைக்காகத்தானேயொழிய நம்பகத்தன்மை சார்ந்து அல்ல!       

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் திமுக மத்திய அரசியலில் தன் நிலையை காப்பாற்றிக்கொள்ள நிறைய சமரசம் செய்துகொள்கிறதோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நம்பகமான கூட்டணிக் கட்சியாக இருந்தும்கூட காங்கிரஸின் பிடி திமுகவின் மேல் சற்று இறுகியே இருக்கிறது. மேலும் ஈழம் குறித்த திமுகவின் நிலைப்பாடுகள் அனைத்திற்கும் காங்கிரஸ் முற்றிலும் எதிர்நிலையில் இருப்பதும், அதனால் திமுகவின் செயல்பாடுகளில் பலநேரம் பின்னடைவு ஏற்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. திமுக காங்கிரசுக்காக செய்துகொள்ளும் சமரசங்கள் அகில இந்திய அளவில் திமுகவின் மேல் இருந்த நன்மதிப்பை சரித்துக்கொண்டிருக்கிறது. நான் முந்தைய கட்டுரையில் சொன்னதைப் போல இந்திய அரசு எக்காலத்திலும் தனி ஈழத்திற்கு துணையாக இருக்காது. அதேநேரம் தனி ஈழ கோரிக்கைக்கு எதிர்ப்பு காட்டாத அரசை ஆதரிப்பது அவசியம். இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும்வரை திமுகவின் தனி ஈழம் குறித்த நிலைப்பாடு நேரடி பயன்தராது என உறுதியாக கூறமுடியும்.


நடக்க இருக்கும் டெசோ (தனி ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு) மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகிய இந்திய அளவிளான முக்கியத்தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தனி ஈழம் குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட்ட பின்பும் தனி ஈழ ஆதரவாளர் அமைப்பு என்ற பெயரில் நடக்கும் இந்த மாநாடு நிச்சயம் அலைகளை உண்டு செய்யும் என்பதில் மாற்றமில்லை. அதுமட்டுமல்லாது டெசோ அமைப்பினர் ஐநா உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், அவர்களை மாநாட்டுக்கு வரவழைப்பதில் முனைப்பு காட்டுவதும் கூட நன்மையே.  இருப்பினும் தனி ஈழ தீர்மானம் முதல் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்படுமா என அதில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களிடம் கலந்துபேசியபின் ஜனநாயகரீதியில் முடிவெடுக்கப்படும் என கலைஞர் அறிவித்திருப்பது பின்னடைவே!

ஆக திமுக ஆதரவில் மத்தியில் ஆட்சி, திமுக ஆதரவில் ஜனாதிபதி என சகலத்தையும் சாதித்துக்கொள்ளும் காங்கிரஸ் திமுகவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறதா என்பதை திமுக தான் சிந்தித்து முடிவுசெய்யவேண்டும். டெசோ மாநாட்டுக்குப் பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Related Posts Plugin for WordPress, Blogger...