Tuesday, July 17, 2012

இலங்கை, 1983 ஜூலை27! நினைவும் ஒப்பீடும்! ஈழமுரசு கட்டுரை!

பொதுவாகவே ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை தமிழக மக்கள் திரிபுகளுக்கு பெயர் போன தமிழக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொள்வதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்யிருக்கும்! ஈழம் குறித்து தமிழக மக்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கருத்துக்களை வைத்திருக்கிறார்கள், அதில் கற்பனைக் கதைகளும் ஏராளம். அதுபற்றி எழுதவேண்டுமானால் தனிப்புத்தகமே எழுதலாம்! ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் உலகத்தமிழர்களால் மறக்கமுடியாத 1983ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை சமயத்தில் நிலவிய தமிழக அரசியல் சூழ்நிலையையும், மக்களின் மனநிலையையும், தமிழகத்தில் நிகழ்ந்த எதிரொலி நிகழ்ச்சிகளையும், அரசியல் மாற்றங்களையும் நினைவுகூர்வதும், அதன் வாயிலாக ஒப்பீட்டு அடிப்படையில் சமகால தமிழக-ஈழஅரசியலை நோக்குவதும் ஆகும்.

2009 முள்ளிவாய்க்கல் படுகொலைகளின் போது க்ரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு பொழுதுபோக்காக அவ்வப்போது வருந்திய தமிழகத் தமிழர்கள் 1983ல் ஒப்பீட்டளவில் கொஞ்சம் தமிழுணர்வுடனே இருந்தார்கள் எனலாம். 1983ஆம் ஆண்டில் தமிழகத்தில் தமிழர் விரோதிகளான சோ, சுப்பிரமணியசுவாமி, இந்துராம் ஆகியோரும், தமிழர்களுக்கு எதிராக தமிழர்களையே மாற்றும் தினமலர், துக்ளக் போன்ற ஊடகங்களும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை. திராவிட இயக்கங்கள் வீரியத்துடன் செயல்பட்ட அக்காலத்தில் தமிழ்மக்கள் தமிழர்களுக்கே உரிய குணங்களோடு, இனப்பற்றோடு, மொழிப்பற்றோடு, யாருடைய மூளைச்சலவைக்கும் ஆட்படாமல் 'தமிழர்களாய்' வாழ்ந்த ஆண்டுகள் அவை. தமிழருக்கு எதிரான எந்த நிகழ்வும், அது இந்திய அளவிலானாலும், உலக அளவிலானாலும் தமிழ்மக்களை கொதிப்படையச் செய்த அந்த காலகட்டத்தில் தான்,  சிங்களக்கைதிகளும் இலங்கை ராணுவத்தினரும் இணைந்து 37க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க்கைதிகளை கொழும்பு சிறைச்சாலையில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்த செய்தி தமிழகத்தை வந்தடைந்தது.

செய்தி பரவிய சிலமணி நேரத்திலேயே தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் ஆங்காங்கே கடையடைப்பு, தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபடத் துவங்கியிருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையத் தொடங்கினாலே, அதுவும் மத்தியில் கூட்டணியில் அல்லாத வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த குறிப்பிட்ட மாநில அரசுக்கு எந்நேரமும் ஆபத்துதான்! அதுவும் இந்திராகாந்தி போன்ற தடாலடி பிரதமர் இருக்கும்போது மாநில அரசின் தர்மசங்கடத்தை கேட்கவும் வேண்டுமா? தமிழகத்தில் நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த ஈழ ஆதரவாளரும் அப்போதைய தமிழக முதல்வருமான அமரர் எம்.ஜி.ஆர், பிரதமர் இந்திராகாந்திக்கு இலங்கை நிலவரத்தை விளக்கியும், உடனடி நவடிக்கை எடுக்கக்கோரியும் அவசரமாக ஒரு தந்தி அனுப்பினார். அதில், "இலங்கையில் சிங்களவெறியர்களும், சிங்கள ராணுவமும் இலங்கைத் தமிழர்களை இரக்கமற்றமுறையில் கொல்வது, கலவரம் விளைவிப்பது போன்ற செய்திகள் இலங்கையிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. அவை பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கின்றன. இலங்கை ராணுவத்தின் இதுபோன்ற செயல்கள் இங்குள்ள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் கடுமையான கொதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இலங்கைத் தமிழர்களை சிங்களவெறியர்களிடமிருந்து காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை உலகநாடுகள் அறியும் வண்ணம் இந்த பிரச்சினையை ஐ.நாவில் எழுப்பி நீங்கள் நடவடிக்கை எடுத்தால் நான் அதற்காக மிகுந்த நன்றியுடையவன் ஆவேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து முதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2ஆம் தேதி முழு பந்த் அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், கடைகள் என சகலமும் மூடப்பட்டன. பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த 'பந்த்'தில் ஆச்சரியமான, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய ஒரு விஷயம் நடந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மாநில அரசின் 'பந்த்'தில் மத்திய அரசும் பங்குகொண்டது! இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1980ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் இந்திராகாந்தி பிரதமர் ஆனார். மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்திராகாந்தி அதிரடியாக கலைத்த ஒன்பது மாநில அரசுகளில் எம்.ஜி.ஆரின் அதிமுக அரசும் ஒன்று. ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே தொடர்ந்தாலும் அதில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு மாறாக அதிமுக பெரும் வெற்றி பெற்றது. இலங்கைப் படுகொலை தொடர்பான 'பந்த்' விஷயத்தில் மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு முழு ஆதரவு கொடுத்ததை வருங்காலத்தில் காங்கிரஸ் அதிமுகவுடன் இணக்கமான ஒரு கூட்டணி அமைக்க முயன்றதன் எதிரொலியாகவே நாம் கருதவேண்டியிருக்கிறது. வெகு சமீபத்தில் தன் ஆட்சியைக் கலைத்திருந்தாலுமே கூட காங்கிரஸ் அரசுடன் எம்ஜிஆர் இணக்கமாகவே இருந்தார்.  

வெற்றிகரமாக முடிந்த 'பந்த்'தைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்திராகாந்தி விடுத்த எச்சரிக்கையில், "இலங்கை சம்வங்களைப் பார்த்துக்கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது. அங்கு நடப்பது இலங்கை உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும் அதில் இந்திய சுற்றுலா பயணிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இலங்கை ஆதரவுப் போக்கு அப்போதே தொடங்கிவிட்டதை தான் இந்த அறிக்கை நமக்குக் காட்டுகிறது. இனப்படுகொலையை கண்டித்திருக்க வேண்டிய கண்டன அறிக்கை சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதற்கான கண்டனமாக வெளிப்பட்டது.   

ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த தமிழ் மக்களுக்கும், திமுக போன்ற ஈழ ஆதரவு கட்சிகளுக்கும் இந்த கண்துடைப்பு கண்டனம் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தாலுமே கூட மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து ஆகஸ்டு 5ஆம் தேதி ரயில் நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். எம்.ஜி.ஆர் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டியும் கலைஞர் அதை ஏற்க மறுக்க, பின் எம்ஜிஆர் மத்திய அரசை வேண்டி அன்று ஒருநாள் மட்டும் ரயில்களை நிறுத்தச் சொன்னார். அவர் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 5ஆம் தேதி காலை 6மணிமுதல் இரவு 8மணிவரை தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அனைத்தும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இவ்விஷயத்தின் போது கிட்டத்தட்ட அதிமுகவும் காங்கிரசும் தான் கூட்டணிக் கட்சிகள் என்பது போன்ற தோற்றமே பொதுமக்களிடையே ஏற்பட்டது. (1984ல் ஜெயலலிதா எம்.பியாக்கப்பட்ட போது அவர் இந்திராவை சந்தித்து ஆசி பெற்றதை இவ்விடத்தில் நினைவு கூர்தல் அவசியம்.) ஒருவழியாக திமுகவின் போராட்டத்தை நடைபெறவிடாமல் எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக மத்திய அரசின் உதவியுடன் தடுத்தார். தமிழக ஆட்சியாளர்கள் என்னதான் ஈழ ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்ட ஆட்சியாளர்களாக, போராட்டங்களுக்கு எதிரானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு உதாரணம். தியாகி முத்துக்குமார் மரணத்தின் போது போராட்டங்களைத் தடுக்க அப்போதைய திமுக அரசு கடைபிடித்ததும் இதே போக்கைதான். எந்தக் கட்சியாய் ஆனாலும் எதிர்க்கட்சியாய் இருக்கும்போதுதான் போராட்டகுணம் துளிர்க்கும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது வாடிவிடும்! காலம்காலமாக நடைமுறை இதுதான். என்ன செய்வது, இந்திய மத்திய அரசின் அதிகாரம் அப்படி! நினைத்தால் அடுத்த நொடி கலைப்புதான்.

மாநில, மத்திய அரசுகளின் இந்த கூட்டுச்செயலுக்குப்பின் திமுக பொதுக்குழு என்ன செய்வது என கலந்தாலோசித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பிக்களான வைகோவும், எல்.கணேசனும் (அப்போது வைகோ திமுக சார்பாக டெல்லியில் சுழன்ற போர்வாள்) மேற்கொண்டிருந்த உண்ணாநோன்பை மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை. மேலும் எத்தனையோ நாடுகளின் பிரச்சினைகளை ஐநாவில் எழுப்பிய இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை ஐநாவில் எழுப்பவேண்டும் என எழுந்த எண்ணற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்து மெளனம் சாதித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை சென்றபோது அங்கிருக்கும் தமிழர் தலைவர்களை அவர் சந்திக்க இயலாத சூழ்நிலையும், அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரர் இங்கு வந்து நிலைமைகளை விளக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருந்ததேயொழிய அங்கிருக்கும் தமிழர் தலைவர்களிடம் கருத்துக் கேட்க மத்திய அரசோ மாநில அரசோ தயாராக இல்லை. இதையெல்லாம் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டு குற்றம் சாட்டிய திமுக தலைவர் கலைஞரும், பொதுச்செயலாளர் அன்பழகனும் தத்தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஆகஸ்டு 10ஆம் தேதி அதிரடியாக ராஜினாமா செய்தனர். தமிழ் இனப்படுகொலை குறித்து மத்திய அரசு குறைந்தபட்ச கண்டனம் கூட தெரிவிக்கவில்லையென்றும் (மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்திய சுற்றுலாப்பயணிகள் குறித்த கவலைதான் இருந்ததேயொழிய ஈழத்தமிழர்கள் பற்றிய அக்கறை இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எரிகிற தீயில் எண்ணை ஊற்றும் விதமாக, இலங்கைப் படுகொலைகளை கண்டித்து நெடுமாறன் ஏற்பாடு செய்திருந்த தியாகப்பயணத்தில் பங்கேற்போரை இந்திய அரசு பாதியிலேயே தடுத்துவிடும் என்று ஏளனமாக அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். (இதுகுறித்தும் கலைஞர்-அன்பழகன் கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது) 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றும் இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு என்றும் ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள அரசியல்வாதிகள் அறிக்கைமேல் அறிக்கையாக விடுத்ததை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்! ஆரம்பகாலம்தொட்டே இந்திய அரசு இலங்கையின் சொல்படி நடந்துவந்திருக்கிறதேயொழிய சுயமாகவோ, மக்கள் நலனில் அக்கறை கொண்டோ முடிவெடுத்ததாகத் தெரியவில்லை. வட இந்தியர்களுக்கும் சிங்களர்களுக்கும் இன ரீதியாக இருக்கும் வரலாற்றுத் தொடர்பும் இதற்குக் காரணம் எனலாம். வட இந்தியர்கள் வரலாற்று ரீதியாக தமிழினத்தைவிட சிங்கள இனத்திற்கு நெருக்கமானவர்கள்! நிலைமை இப்படியிருக்க இந்திய அரசிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?

கலைஞரின் ராஜினாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பாக அதாவது ஆகஸ்டு 7ஆம் தேதி நெடுமாறன் ஏற்கனவே அறிவித்தபடி திமுகவின் முழு ஆதரவுடன் தியாகப்பயணமாக இலங்கைக்கு செல்ல மதுரையில் இருந்து புறப்பட்டார். அவருடன் குன்றக்குடி அடிகளாரும், குமரி அனந்தனும் இருந்தனர். நெடுமாறன் குழுவினர் படகில் ஏறும்வரை காத்திருந்த தமிழக போலீசார் படகில் ஏறி பத்து மீட்டர் பயணப்பட்டவுடன் மோட்டர் படகில் சென்று அவர்களை கரைக்கு அழைத்துவந்தனர். நெடுமாறனின் படகின் பின்னே நீந்திச்செல்ல முயன்ற 200 தமிழர்களும் கைது செய்யப்பட்டு கரையில் விடுவிக்கப்பட்டனர். அதாவது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சொன்னதைப் போலவே தான் நடந்தது!! இந்த சம்பவத்தைப் பற்றி அறிந்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமே ஏற்ப்பட்டது. எவ்வளவு துணிச்சலான, உயிரைப் பற்றி கவலைப்படாத எதிர்வினை! 2009ல் சட்டக்கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை விட்டதால் எங்களால் போராட முடியவில்லை எனச் சொன்ன 'தமிழக நவயுக போராளிகள்' எங்கே, நீந்திச்சென்ற இவர்கள் எங்கே!!! கரைக்கு நெடுமாறனை அழைத்துவந்த காவல்துறை இலங்கையில் இருந்து தமிழ்த்தலைவர் அமிர்தலிங்கம் அனுப்பியிருந்த கடிதத்தை நெடுமாறனிடம் கொடுத்தனர். அதில் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் கூட்டம் கலைந்து சென்றது.

ஒருவழியாக தமிழகத்தில் பதற்றம் தணிந்தபின் இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகம் வந்துசேர்ந்த குட்டிமணியின் மனைவி ராஜரூபராணிக்கு எம்.ஜி.ஆர் அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. அவர்கள் வசிக்க வீடு ஒதுக்கப்பட்டு, மாதம் 1000ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அவர்களின் குழந்தைகள் இலவசமாக பள்ளியில் படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது அவர்கள் கோரிக்கையை ஏற்று அதன்படி படிப்புக்காக அதுவரை அவர்கள் செலவழித்திருந்த 7500ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழக ஆட்சியாளர்கள் என்றுமே மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதற்கு 1983 ஜூலை அரசியல்நிகழ்வுகள் ஒரு உதாரணம். மத்திய அரசின் மூலம் எம்.ஜி.ஆரின் கைகள் கட்டப்பட்டிருந்ததேயொழிய அவர் மறைமுகமாக புலிகளுக்கு உதவியதை நாம் மறுக்கமுடியாது. இப்படிப்பட்ட, ஈழத்தின்பால் பெரும் அக்கறைகொண்ட தலைவருக்குப் பின் அதிமுக தலைவராக ஆன ஜெயலலிதா தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடைவர முக்கிய காரணமாக இருந்தவர் என்பதும், அதை எதிர்த்து எம்.ஜி.ஆரின் விசுவாசமான தொண்டர்கள் யாருமே இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை என்பதும் காலம் நிகழ்த்திய ஆச்சரியமான கொடுமை!

4 comments:

Sindhai said...

I am sharing your article in my facebook status.

Sindhai said...

I am sharing your article URL in my facebook page

அரவிந்தன் said...

நெடுமாறனோடு குமரி அனந்தனும் சென்றதாக நினைவு

Raj Mohan S said...

//திமுகவின் போராட்டத்தை நடைபெறவிடாமல் எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக மத்திய அரசின் உதவியுடன் தடுத்தார். தமிழக ஆட்சியாளர்கள் என்னதான் ஈழ ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்ட ஆட்சியாளர்களாக, போராட்டங்களுக்கு எதிரானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு உதாரணம். தியாகி முத்துக்குமார் மரணத்தின் போது போராட்டங்களைத் தடுக்க அப்போதைய திமுக அரசு கடைபிடித்ததும் இதே போக்கைதான்.என்ன செய்வது, இந்திய மத்திய அரசின் அதிகாரம் அப்படி! நினைத்தால் அடுத்த நொடி கலைப்புதான்.//

இங்க தான் வாக்காளர்களுக்கு பெரிய 'ஓட்டை' தெரிந்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. நல்ல வேலை இந்திராவோடு நிறுத்திட்டீங்க. ராஜராஜ சோழன்...அதுக்கும் முன்ன விஜயாலயன் எல்லாம் உதாரணமா கொடுக்கல. இரண்டு விஷயம் சொல்ல விட்டுடீங்க.

1, 'இந்திய மத்திய அரசு நினைத்தால் அடுத்த நொடி கலைப்பு தான்' என்பது அதிகார அளவில் இன்றும் நிதர்சனம் தான். ஆனால் எண்ணிக்கையின் அடிப்படையிலான ஜனநாயக அமைப்பில் அன்று இந்திராவிற்கு இருந்த பெரும்பான்மை பலம் கடைசி கட்ட ஈழப் போர் நடந்த பொழுது மன்மோகனிடம் இருந்ததா? தி.மு.க. வைத்தது சட்டமாக இருந்தது. ஆட்சி அவர்கள் தயவில் நடந்தது. ஆனால் அவர்கள் ஏதும் செய்யவில்லை. (காரணம், காஞ்சிபுரம் 'வழக்கறுத்தீஸ்வரர்' கோவில் வட்டாரத்தில் விசாரித்தால் தெரியும்.)

2, MGR , ஜெயலலிதா இருவரும் ஆட்சியை காப்பாற்ற என்னென்னவோ செய்தார்கள்... செய்துவிட்டு போகட்டும். நாங்கள் 'தமிழினத் தலைவர்' என நம்பியது 'கலைஞரை' தானே. அவரும் ஆட்சிக்கு வந்தவுடன் காட்சிக்கு தகுந்த படி முடிவுகளை மாற்றுவார் என்றால் அதற்க்கு ஜெ. பரவாயில்லையே. குறைந்தபட்சம் 'நம்பிக்கெட்டோம்' என்ற தாழ்வுணர்ச்சி இருக்காது. ஜெ. எப்படி இருப்பார் என்று தெரிந்ததே.

3. இந்த வரலாறு அனைத்தும் இன்றைய இணைய இளம் போராளிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் விடாமல் வோட்டு போட்டுக்கொண்டிருக்கும் பெருசுகளுக்கு நல்லாவே தெரியும். தி.மு.க. ஒப்பீட்டளவில் தனது ஈழ ஆதரவை 1984ஐ விட 2009ஆம் ஆண்டு குறைத்துகொண்டது (2ஜி என்பதால் தான் என்பது பரவலாக நம்பப்படுகிற/திணிக்கப்பட்ட உண்மை/பொய்). அதனால் இன்று ஜெ. தனிப்பெரும்பான்மையாக உட்கார்ந்திருக்கிறார்.

படம் பார்த்து மயங்கியவர்கள் அவர்களுக்கு வோட்டு போட்டார்கள். தமிழ் பார்த்து மயங்கியவர்கள் கலைஞருக்கு போட்டோம். வித்தியாசம் ஏதும் இல்லை. மாற்றி போட்டாகி விட்டது. அடுத்த முறை 'கோபம்' இடம் மாறும்.. ஆட்சியும் கை மாறும். இவிங்க எப்போவுமே இப்புடி தானே.. 5 வருஷத்துக்கு ஒரு வாட்டி கோபப்படுவானுங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...