Wednesday, June 6, 2012

இனி ஈழம் குறித்த இந்திய ஆதரவுக்கு தமிழகத்தின் உதவி என்ன? ஈழமுரசு கட்டுரை.


இந்திய குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட காலந்தொட்டே இந்திய அரசியல்வாதிகள் என்றுமே ஒரு விஷயத்தில் ஒற்றுமையான கருத்து கொண்டிருந்தது கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து ஏதுமில்லாமல் இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அது தனி ஈழம் அமையக்கூடாது, தனி ஈழம் தேவையில்லை என்பதில் தான்!

இந்திய-இலங்கை உறவு வரலாற்றில் முன் எப்போதையும் விட நெருக்கம் மிதமிஞ்சி நிற்பது தற்போதைய மன்மோகன்(சோனியா)-ராஜபக்சே ஆட்சியில்! ஒரு தனிமனிதர் கொலையுண்டதற்கு ஒட்டுமொத்த இனத்தையே பழிவாங்கத் திரிந்த கூட்டமும், இனவெறியில் தமிழர்களை அழிக்க அலைந்த கூட்டமும் சரியாக இணைந்த புள்ளியில் அசைக்கமுடியாத நட்பு முளைத்து, அதில் வெற்றியும் பெற்றபின் இன்று விருட்சமாகியிருக்கிறது. இந்தியாவில் ஆட்சி மாறினால் கூட்டுசதியில் தளர்ச்சி வரலாம், தனி ஈழத்திற்கு இந்தியாவில் சாதகமான சூழ்நிலை உருவாகலாம் என காத்திருந்தவர்களுக்கு சமீபத்திய தன் மாநாட்டுப் பேச்சில் பேரிடியை பரிசாக அளித்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் என்ற பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தனி ஈழத்தை பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் விரும்பவில்லை, தமிழக அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக தனி ஈழ கோரிக்கையை கையிலெடுக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.

இந்திய அளவில் காங்கிரசின் வாக்குவங்கியும், அக்கட்சியின் மீதான நம்பிக்கையும் பல்வேறு உள்நாட்டு பிரச்சினைகளால் பலத்த அடி வாங்கியிருக்கும் சூழ்நிலையில் ஆட்சிமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகியிருக்கிறது.  ஈழப்போர் உக்கிரமாய் நடைபெற்று ஏராளமான உயிர்கள் பறிபோய் கொண்டிருந்த சமயத்தில், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன், "ஈழத்தமிழர் பிரச்சினையை இந்துக்கள்-பவுத்தர்கள் இடையேயான மதப்பிரச்சினையாக ஆரம்பத்தில் இருந்தே பறைசாற்றியிருந்தால் இன்று பாஜகவின் முழு ஆதரவும் ஈழத்தமிழர்களுக்கு இருந்திருக்கும்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு அக்கட்சியின் தலைமையின் சுயநலத்தால் கட்சி முழுவதும் பரவிய ஒன்று. ஆனால் பாஜக இயல்பிலேயே ஒரு ஃபாசிச, நாஜிக்கட்சி. குஜராத்தில் இஸ்லாமியர்களை ஒழிக்க அது என்னவெல்லாம் செய்தது என நமக்குத் தெரியும். இல.கணேசனின் அந்த பேட்டியில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்பாவி உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கும் போது கூட, விழுந்த பிணங்களின் மேல் மதச்சாயம் இருந்தால்தான் ஆதரவு கொடுப்போம் என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிதான் நாளை இந்திய ஆட்சீபீடத்தில் அமரப்போகிறது. போதாக்குறைக்கு சுஷ்மாவின் ஈழ-எதிர்ப்பு நிலைப்பாடும் இப்போது சேர்ந்திருக்கிறது! இச்சூழ்நிலையில் அடுத்து வரவிருக்கும் ஆட்சியில் தனி ஈழத்திற்கான ஆதரவு இந்திய அளவில் எப்படி இருக்கும் என கணக்கிட்டால், எந்த மாதிரியான சாதகமான சூழ்நிலையும் இருக்காது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

ஆட்சிக்கு வர பலமான வாய்ப்புள்ள பா.ஜ.க தான் இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்றால் இந்திய ஊடகங்களின் ஈழ-நிலைப்பாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்! அமெரிக்கா இலங்கை மீது கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தபோது மிகப்பெரிய புயல் இந்திய ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் வீசியது. அப்படி ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது "அரசியல் ரீதி'யாக சரியா?" என்ற கேள்வி அந்த குறிப்பிட்ட டைம்ஸ் நவ் விவாதத்தில் எழுப்பப்பட்டது. அந்த கேள்வியே இந்திய ஊடகங்களின் அரசியல், தர்ம-நியாயத்தின் முகத்திரையை கிழித்துக் காட்டுவது போல் இருந்தது. எப்படியெனில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மனித உரிமை மீறல் சார்ந்தது. இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததா இல்லையா என்ற பிரதான கேள்வி, பல ஆதாரங்களுடன் எழுப்பப்பட்டு, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் உலக நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஊடகங்கள் வெளிப்படையாக இந்த வாக்கெடுப்பில் உள்ள மனித உரிமை பிரச்சினையை புறந்தள்ளிவிட்டு அதை அரசியல் ரீதியாக அணுகுவதைதான் மேலே இருக்கும் கேள்வி காட்டுகிறது. கேள்வி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? "இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததா இல்லையா?" என்பதாக இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சியை நடத்திய அர்னப் கோஸ்வாமி, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொண்டார், ஆனால் இந்தியா அதை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை விவாதப்பொருள் ஆக்கினார். அதாவது இலங்கை இந்தியாவின் அண்டை நாடு என்பதால் அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் கூட அதற்கு எதிராக வாக்களிக்க கூடாதாம், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து இருக்க வேண்டும் என்ற ரீதியில் அந்த விவாதம் சென்றது.

மேலும் அந்த விவாதத்தில் பங்கேற்ற ஓரிருவரைத் தவிர அனைவருமே இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை கண்டித்தே பேசினார்கள். கடைசியாக பேசிய குஷ்பு "இங்கு எல்லோரும் இந்தியாவின் இந்த முடிவால் அண்டை நாடுகளிடம் உறவு கெடும் என பயப்படுகிறார்கள். ஆனால் பயத்தை விடவும் மானமும், மரியாதையும் பெரிது. இந்தியா தன் மானத்தையும், மரியாதையையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்து உலக நாடுகள் மத்தியில் காப்பாற்றிக் கொண்டுள்ளது", என்றார்.

அந்த விவாதத்தில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் மாபெரும் அறிவாளியும், எல்லாம் தெர்ந்த ஏகாம்பரம், சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான். அவர், "இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதால் அதனுடனான உறவு கெடுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் காஷ்மீர், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்களை உலக நாடுகள் தோண்ட வாய்ப்பிருக்கிறது. அது நமக்கு ஆபத்து."என்றும் பேசினார்.

சுப்பிரமணியன்சுவாமி இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எப்படி ஒப்புக்கொள்கிறார் பாருங்கள். இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரிந்துவிடும் என்பதால் இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமாம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் திரையில் கீழே ஓடிய வாசகர் கருத்துக்கள் 100% தமிழர்களுக்கு எதிராகவும், சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவாகவும் இருந்ததுதான். இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனையும் இது போன்ற விவாதங்கள் மூலம் சுப்பிரமணியன் சுவாமியாக மாற்றி வருகின்றன இந்திய ஊடகங்கள்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில்
ஐநா வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுத்ததை அடுத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "Chennai forces india to split from Asia, censure srilanka" (சென்னையின் நிர்ப்பந்தத்தின் பேரில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த காரணத்தால் ஆசியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா) என தலையங்கம் எழுதியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் சூழ்ச்சியால் அப்பாவி இலங்கை பாதிக்கப்பட்டுவிட்டதாகவும்(victimized) எழுதியிருந்தது.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கட்சிகளின் நிலைப்பாடுகள், ஊடகங்களின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் மனதில் கொண்டு கணக்குப்போட்டால் அது நமக்கு ஒருவிஷயத்தை தெளிவாக தெரிவிக்கும். இந்தியா ஒருகாலத்திலும் தனி ஈழத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை! சரி, ஈழம் அமைவதற்கு இந்தியாவின் ஆதரவு எதற்கு என இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய நாடான இந்தியாவை புறந்தள்ளவும் முடியாது. இலங்கை குறித்த எந்த முக்கியமான முடிவு எடுப்பதாயினும் இந்தியாவின் கருத்துக்கு உலக அளவின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது! அது இந்தியா பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை பிரித்துக்கொடுத்ததைப் போல் ஏன் இலங்கையில் இருந்து ஈழத்தை பிரிக்கமுடியாது? இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் அது நடந்திருக்கும் என்ற பரவலான பேச்சு ஒன்று உண்டு. அது முற்றிலும் தவறு. வங்கதேசம் முழுக்க முழுக்க இஸ்லாமியநாடு. அங்கிருந்த தலித்துகள் கூட பல ஆண்டுகளுக்கு முன்வே இஸ்லாமியர்களாக மாறியவர்கள். அந்நாட்டை பாகிஸ்தானில் இருந்து பிரித்தால் அதை ஒட்டி அமைந்திருக்கும் இந்திய மாநிலத்தில் எவ்விதமான பிரிவினை கோஷமும் எழாது என்பதை உறுதி செய்தபின்னே பிரிவினைக்கு இந்தியா துணை போனது! ஆனால் ஈழம் அப்படிப்பட்ட விஷயமல்ல. ஒருவேளை நாளை ஈழம் அமைந்துவிட்டால் இந்தியத்தமிழர்கள் மொழிரீதியாக, கலாச்சாரரீதியாக, இந்தியாவை விட ஈழநாட்டினுடன் தான் நெருக்கத்தை உணர்வார்கள். அது எக்காலத்திலும் இந்தியப் பிரிவினை கோஷத்திற்க்கு வழிவகுக்கவல்லது. அத்தகைய பெரிய 'ரிஸ்க்'கை இந்தியா எப்போதும் எடுக்காது!

ஆனால் இப்படி இலங்கைக்கு ஏகபோகமாக ஆதரவான இந்தியாவை எதிர்த்து இந்தியத்தமிழர்கள் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அது மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் தங்கள் எகோபித்த குரலை இலங்கைக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் பதிவு செய்ததன் எதிரொளியே அது! திருச்சி சிவா எம்.பி  இந்திய அரசு வாக்கெடுப்பைக் குறித்து எம்பிக்களுக்கு அளித்த நகலை இப்படி விமர்சித்தார், "ஒவ்வொரு முறையும் இந்திய அரசு இலங்கை அரசு அளிக்கும் அறிக்கையை நகலெடுத்து எங்களுக்கு அளிக்கிறதோ எனத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு இலங்கை என்ன செய்தாலும் எங்கள் ஆதரவு அதற்கு உண்டு என இந்தியா தன் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது" என்றார். ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியத் தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகவே எப்போதும் கருதிப் பேசும் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பதிலளித்துப் பேசிய கனிமொழி, "இது தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த மனிதர்களின் பிரச்சினை. இதை இந்தியா மனித உரிமை அடிப்படையில் அணுகவேண்டுமேயொழிய தமிழர்களின் பிரச்சினையாக மட்டும் குறுகிய நோக்கோடு அணுக கூடாது" என்றார்.  அதே நேரம் அதிமுக எம்பிக்களான தம்பிதுரை உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை நகலை பாராளுமன்றத்திலேயே கிழித்தெறிந்து தங்கள் அதிரடியான எதிர்ப்பைக் காட்டினார்கள். இருமுனைத்தாக்குதல் சரியாக வேலை செய்தது! இந்தியா பல ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு எதிராக தன் நிலைப்பாட்டை எடுத்தது! (வாக்களித்ததற்கு பின் மன்மோகன் ராஜபக்சேவிற்கு கெஞ்சும் தொனியில் கடிதம் அனுப்பியது வேறு விஷயம்!)

பொதுவாகவே ஜனநாயக நாடுகளில் மனித உரிமை, நீதி-நியாயம் போன்றவற்றுக்கு இல்லாத முக்கியத்துவம் ஓட்டுகளுக்கும், சீட்டுகளுக்கும் உண்டு! அதுவும் இந்தியா போன்ற உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயகநாட்டில் கேட்கவா வேண்டும்? வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியது மாண்டுபோன லட்சக்கணக்கான ஈழத்தமிழர் பக்கம் இருந்த நியாயம் அல்ல, பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு இருந்த நாற்பது எம்.பி சீட்டுக்கள்! அடுத்து எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாற்பது எம்பி சீட்டுக்களையும் எப்போதும் ஈழத்திற்கு ஆதரவாக கடுமையாக குரல் கொடுத்துக்கொண்டிருக்க வைப்பதே இந்தியாவில் தனி ஈழத்திற்கு இருக்கும் பலத்த எதிர்ப்பை சமாளிக்கும். நியாயம் எல்லாம் ஒருபுறமிருக்க எந்த முக்கிய முடிவை எடுக்கவைக்கவும் அரசியல் நிர்ப்பந்தம் அவசியம். இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் தங்களுக்கு இருக்கும் இந்த மிகப்பெரும் பொறுப்பை புரிந்து மத்திய அரசை வருங்காலங்களில் நிர்பந்திப்பார்களேயானால் ஈழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் நிச்சயம் இருக்கும்!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...