Thursday, June 7, 2012

பெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள்- தொடர் 1கோவையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியை அனுஷாவுக்கு டாக்டர்களை விட தவளைகளை மிகவும் பிடிக்கும். ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஆவதையே தன் முழுமுதல் லட்சியமாகக் கொண்டு அதை நோக்கி முன்னேறிய அந்த குட்டிப்பெண்ணுக்கு டாக்டர்களையும், அவர்கள் தொழிலையும் பிடிக்காமல் போனதற்கு காரணம் இறந்து இரண்டு ஆண்டுகளான ஒரு உறைந்துபோன தவளையும், இரண்டு உயிர்த்தோழிகளும் தான்!

எட்டு வருடங்களுக்கு முன்னால் வந்துபோன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. பத்தாம் வகுப்பில் முதல் முதலாக அனுஷா கலந்துகொள்ளப்போகும் உயிரியல் லேப் (zoology lab) அது. எத்தனையோ உயிரியல் லேபுகள் அதற்கு முன் அவளை கடந்திருந்தாலும் முதல் முதலாக தவளை என்ற உயிரியல் பொருளை வெட்டப்போகிறாள். ஏற்கனவே அனுஷாவின் அப்பா அவளிடம் "இது மத்தவங்களுக்கெல்லாம் சாதாரண லேபா இருக்கலாம் கண்ணு. ஆனா டாக்டராக போற உனக்கு இதான் மொதல் படி. நீ வெட்டப்போறது தவளை இல்ல, மனுசன்னு நினைச்சுக்க. அதுதான் உன் முதல் பேஷண்ட்" என உசுப்பேற்றிவிட்டிருந்தார்.

அனுஷா இது தொடர்பாக பலரிடம் விசாரித்தபோது ஒவ்வொருவரும் பலவிதமாகச் சொன்னார்கள். அனுஷாவின் தம்பி அன்பு, "பர்த்டே கேக் வெட்டுற மாதிரிதான்க்கா. ரொம்ப ஈசியா இருக்கும். சாஃப்டாக்கி தான் வச்சிருப்பாங்களாம். நீ டக்குனு வெட்டிரலாம். ஆனா வெட்டுறப்ப கொஞ்சம் தள்ளி நின்னுக்க. என் ஃபிரண்டோட அண்ணன் வெட்டுனப்ப தவளை ரத்தம் தெறிச்சுச்சாம். சோ அது மட்டும் தான். மத்தபடி நோ ப்ராப்ளம்." எனச் சொல்லியிருந்தான். இதுபோல் அந்த லேபிற்கு முந்தைய சனியும், ஞாயிறும் லேப் குறித்த ஆராய்ச்சியிலேயே முடிந்தது. டாக்டர் அத்தையிடம் இதற்காகவே சென்று லாவகமாக அறுவைக்கத்தியை பிடிப்பது எப்படி என்பதற்கும் பயிற்சி பெற்றிருந்தாள் அனு. மொத்தத்தில் தான் தவளை வெட்டும் நாளை ஒரு போர்வீரனின் துணிவோடும், பயிற்சியோடும் சந்திக்கத்தயாராக இருந்தாள்!

அனுவின் குடும்பத்தில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்தது. அனைத்து மாணவர்களுக்கும் அறுவைக்கத்தி உள்ளிட்ட லேப் சாதனங்கள் கொடுக்கப்பட்டது. எந்தப் பக்கம் எதை பிடிப்பது என எல்லாருமே குழம்பியிருந்த நிலையில், அனு மிகவும் அழகாக அவளது அறுவைக்கத்தியைப் பிடித்ததைப் பார்த்த அவளது லேப் இன்ஸ்ட்ரக்டர் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவளை சொல்லித்தரச் சொன்னது அவளை அனைவரது பொறாமைக்கும் உள்ளாக்கியது. அவளது நெருங்கிய தோழிகளான லதாவும், நித்தியும் கூட அவளின் இந்த அதீத ஆர்வத்தை கடுப்போடுதான் பார்த்தார்கள். ஆனால் அனு இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக ஓட்டலில் உணவுக்காக காத்திருக்கும் பசித்த விருந்தாளியைப் போல தன் தவளைக்காக காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அனு எதிர்பார்க்காத அந்த அநியாயம் நிகழ்ந்தது. ஆளுக்கொரு தவளை என அளிக்காமல் மூன்று பேர் கொண்ட குழுவுக்கு ஒரு தவளை என அளித்திருந்தார்கள். தனித்தனியாக ஃபீஸ் மட்டும் வாங்கிக்கொள்ளும் பள்ளியின் இந்த அநீதியை அனுவால் ஜீரணிக்க முடியவில்லை! இருப்பினும் அவள் குழுவில் லதாவும், நித்தியும் இருந்தது அவளுக்கு லேசான ஆறுதலைத் தந்தது. தனக்குள் இருந்த டாக்டரை தன் நெருங்கிய தோழிகளின் முன் அரங்கேற்றப்போவதை நினைத்து அவளுக்கு மகிழ்ச்சிதான்.

அதீத பச்சை நிறத்தில் இருந்த தவளையின் நாக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. கல் போல் கடினமாக இருந்த அதன் கால்களும், கைகளும் அகலமாக விரிந்து இருபுறமும் நீட்டியபடி இருந்தன. அடர்ந்த காபி கலரில் குச்சி போல் வெளித்தள்ளியிருந்த தவளையின் நாக்கு அனுவுக்கு தவளை புதியதுதானா அல்லது ஏற்கனவே தன் சீனியர்களால் உபயோகப்படுத்தப்பட்ட பழைய தவளையா என்ற அச்சத்தைத் தந்தது. அவர்கள் இந்த தவளையை வெட்டும்போது நாக்கை தொலைத்துவிட்டு எதோ குச்சியை சொருகி வைத்துவிட்டார்களோ என்ற ஐயமும் அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் தவளையின் உடம்பில் எங்குமே தையல் இருப்பதற்கான அடையாளம் இல்லாததால் அது உபயோகிக்கப்படாத தவளையாக தான் இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.

இப்படி தீவிரமாக அனுவுக்குள் ஆயிரம் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, "அதோட கையப் பாரேன். ஐ லவ் யூ சொல்றப்ப அதை அப்படியே வெட்டிட்டாங்க போல பாவம். ஆனாலும் ஆராய்ச்சிங்கிற பேருல இப்படி தவளையெல்லாம் புடிக்கிறது ரொம்ப கொடுமை நித்தி. அது லவ் பண்ண கேர்ள் தவளையையாச்சும் உயிரோட விட்டாங்களோ என்னவோ பாவம்" என்று உச்சுக்கொட்டியபடியே வருத்தமாக சொன்னாள் லலிதா.

நித்தி, "என்னடி உளர்ற?. தவளைக்கு எப்பிர்றீ கேர்ள் ஃபிரண்டு இருக்கும்?"

"நமக்கெல்லாம் க்ரீட்டிங் கார்ட்ஸ் மாதிரி தவளைக்கெல்லாம் வோக்கல் கார்ட்ஸ்னு ஒன்னு இருக்கு. அது வழியாதான் ப்ரொபோஸ் பண்ணுமா. போன லெசன்ல வந்துச்சேடி." என்றாள் லலிதா.

"ஹ்ம்ம்.. இருக்கும் இருக்கும்.. அத விடு. இப்ப யாரு இதை வெட்டப்போறா? நான் கண்டிப்பா வெட்ட மாட்டேன்பா. இதப் பாத்தா எனக்கு சிக்கன் நியாபகம் வருது. ரத்தம், ஈரல், நெஞ்சுனு ஒவ்வொன்னா வெளிய வரும். எனக்கு பாத்தாலே ஒமட்டும். அதும் சில சமயம் நம்ம அதெல்லாம் பண்றப்ப சிக்கன் உயிரோட இருக்குமா, என் தம்பி சொல்லுவான். பாவம் அதுங்க" என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு எதோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டவள் போல சொன்னாள் நித்தி.

"திங்கிறப்ப மட்டும் நல்லாருக்கா! அதுனாலதான் எப்பவுமே க்ளீன் பண்ணி ஃப்ரிட்ஜ்ல வச்ச சிக்கன் வாங்கிரனும். ஆனா எனக்கு இந்த ஃப்ரிட்ஜ்ல வச்ச தவளைய பாத்ததுல இருந்து இனிமே அதக்கூட சாப்புடுவனாங்குறது டவுட்டுதான்." இது லலிதா.

"அப்படி சொல்ல முடியாதுடி. இந்த வாரம் ரீடர்ஸ் டைஜஸ்ட்ல ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அமெரிக்கால ஒரு ஆண்ட்டி ஃப்ரோஜன் சிக்கன் வாங்கி வெட்டிருக்காங்க. கரக்ட்டா அவங்க வெட்டுறப்ப அந்த சிக்கன் ஒரு தடவை துடிச்சுட்டு அப்புறமா செத்துருச்சாம்."

"என்னது ஃப்ரோஜன் சிக்கன் துடிச்சுச்சா?!!! ரத்தம் வந்துச்சாமா அதுல?" அதிர்ச்சியுடன் கேட்டாள் லலிதா

"அதப்பத்திலாம் ஒன்னும் போடல. ஆனா அது துடிக்கிறப்ப அவங்க கிச்சன் ஃபுல்லா ஒரு லைட் வந்துட்டு போயிருக்கு."

"இப்ப அந்த ஆண்ட்டி என்ன ஆனாங்க?"

"ஒரு வாரம் கழிச்சு அதே டேபிள்ல கையில அதே கத்தினால வெட்டி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்"

"அய்யயோ.. என்னடி சொல்ற? அந்த சிக்கன் மாதிரி அரைகுறையா செத்தாங்களா? இல்ல முழுசா உண்மையாவே செத்துட்டாங்களா?"

"அது அவங்கள யாராச்சும் டிசக்ட் பண்ணி பாத்தா தான் தெரியும்!" சிரிக்காமல் சீரியசாக சொன்னாள் நித்தி. இப்படி இருவரும் சீரியசாக பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் தவளையை வெட்டும் ஆவலோடு நின்றுகொண்டிருந்த அனுஷா கேட்டுக்கொண்டே இருந்தாள். திடீரென லேப் அதிரும் வண்ணம் ஒரு சத்தம் கேட்டது. அனு மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தாள்.

அவள் பங்குபெற்ற கடைசி உயிரியல் லேப் அதுதான். அதன்பின் யார் யாரோ எவ்வளவோ கெஞ்சியும் காய்கறி வெட்ட கூட அவளை யாராலும் கத்தி எடுக்க வைக்கமுடியவில்லை. பின் தட்டுத்தடுமாறி பத்தாவது முடித்து, பின் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இன்று பேராசிரியையாக இருக்கிறாள். அந்த புகழ்பெற்ற சம்பவத்துக்கு காரணமான அவளது நெருங்கிய தோழிகள் லலிதாவும், நித்தியும் டாக்டர்களாக இருக்கிறார்கள். அந்த தவளையைப் பற்றிய தகவல்கள் ஏதும் பின் காணக்கிடைக்கவில்லை. லலிதா-நித்தியின் புண்ணியத்தில் ஏதேனும் அமிலம் நிறைந்த குடுவையில் நீந்திக்கொண்டிருக்கலாம்.  தவளையை டிசக்ட் செய்து டாக்டர் ஆக துடித்த அவள் கனவை, எந்த அறுவை ஆயுதமும் இல்லாமலேயே லலிதாவும்-நித்தியும் டிசக்ட் செய்திருந்தார்கள். அனுவுக்கு டாக்டர்கள் மேல் வெறுப்பும், தவளைகள் மேல் இரக்கமும் இப்படிதான் வந்தது.

அடுத்து நாம் பார்க்கப்போவது பார்த்திபனைப் பற்றி! மேற்கண்ட 'உயிரியல் லேப்' சம்பவம் நடந்துகொண்டிருந்த அதே நாளில் அதே நேரத்தில் அங்கிருந்து 260கிமீ தொலைவில் மதுரையில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு இரண்டு மாணவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து ஒரு ஐந்து மீட்டர் தள்ளி அவர்களது பைகள் ஒன்றின்மேல் ஒன்றாக கிடந்தன. இருவரில் மாநிறமாய் ஒருவன் நடுவில் அமர்ந்திருக்கிறானே அவன் தான் பார்த்தீபன். ஒரு நீளமான நூலின் ஒரு முனை அவன் கையிலும் மற்றொரு முனை ஒரு ஓணானின் கழுத்திலும் கட்டப்பட்டிருந்தது. அவன் குண்டாய் இருந்த மற்றொருவனிடம் உரக்கக் கத்திக்கொண்டிருந்தான்,

"மாப்ள. இன்னும் மூக்குப்பொடி போட்டுவுடுடா அப்பதான் நல்லா ஆடும். யோசிக்காம போடு மாப்ள!"

"டேய் பார்த்தி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா? செத்து கித்துர போதுடா!" என்றான் கையில் மூக்குப்பொடி மட்டையுடன் இருந்த சரவணன்.

"ஒங்கொப்பத்தா மூக்குலயா போடுற? ஓணாண்டி மூக்குதான! போட்றா பேசாம.. பெரிய காந்தி இவரு.."

உத்தரவு நிறைவேற்றப்பட்டபின் பாவப்பட்ட அந்த ஓணான் ஒன்பது லிட்டர் மது அருந்தியதைப் போல தள்ளாடியது! இப்படி உத்தரவிட்ட பார்த்தியின் ஆறாவது காதலியாக ஆகப் போகிறவள் தான் சற்றுமுன் லேபில் மயங்கி விழுந்த அனுஷா! ஓணான் ஆடி, மயங்கி, அடங்கியது!!!

-தொடரும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...