Tuesday, May 15, 2012

தமிழ் குடியரசு நாடு!

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்! தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி  பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏறவில்லை. காங்கிரஸ் என்னும், இந்தியநாட்டின் சுதந்திரத்துக்கு ஒட்டுமொத்த காப்புரிமை வாங்கிவைத்திருந்த மக்கள் செல்வாக்கில் மூழ்கித்திளைத்த மிகப்பெரும் கட்சியை விழவைக்க திமுகவும், திமுக கொள்கையை ஏற்றுக்கொண்ட பொதுமக்களும் இழந்தது ஏராளம், இழந்த உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்! அப்படி உயிரைக்கொடுத்து போராடி ஓங்கி அடித்த அடிதான் இன்றுவரை காங்கிரஸை தமிழகத்தில் எழமுடியாமல் வைத்திருக்கிறது. ஒரு கட்சியை ஒழிக்கவே இப்படியென்றால் இந்தியா என்ற மிகப்பெரும் நாட்டில் இருந்து ஒரு பகுதியை பிரிக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதிருக்கும்? எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கும்? ஆனால் இன்று தமிழ்தேசியம், தமிழ்தேசியம் என கூக்குரல் இட்டு நரம்பு புடைக்க கத்துபவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஒரு புல்லைக் கூட பிடிங்கிப் போடவில்லை!

மேலும் தற்சமயம் தமிழ்தேசியக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கும் பெரும்பான்மைக் கூட்டத்தினர் ஆதிக்கசாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், உருது பேசுகிறவனை விரட்டுவோம், தெலுகு பேசும் அருந்ததியினரை விரட்டுவோம் என்ற அவர்களின் பகிரங்கமான நாஜித்தனமான அறிவிப்புகளும் தமிழ்தேசியம் என்ற கொள்கையின் மீதே ஒரு கறையை படிவித்திருக்கிறது! இவர்களின் இத்தகைய செயல்கள் இந்திய தேசியமே பரவாயில்லை என்ற ஒரு மனநிலையைதான் தமிழ்ப்பொதுமக்களிடம் உண்டாக்குமேயொழிய தமிழ்தேசிய போராட்டத்துக்கு உதவக்கூடிய எந்த ஒரு ஆக்கபூர்வமான மனநிலையையும் உருவாக்காது, உருவாக்கவில்லை!

ஆனால் இந்த குழப்பங்களையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் மக்கள், ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். தனிதமிழ்நாடு கோரிக்கை என்பது பிரிவினைக்கொள்கை அல்ல! இருப்பதை முன்பு இருந்தது போலவே மாற்றி அமைப்பது. இந்தியா என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 'ஒரே' நாடு கிடையாது. வெள்ளைக்காரர்கள் தங்கள் தனித்தனி காலனிகளை (colony) நிர்வாக வசதிக்காக ஒரே பெரிய காலனியாக ஆக்கினார்கள், அந்த பெரிய காலனிதான் இந்தியா! உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் தேசிய இனம் மட்டுமே பிரதான குடிமக்களாக வாழும்போது, தங்களைத் தாங்களே ஆளும் போது, இந்தியாவில் மட்டும் ஏராளமான தேசிய இனங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வசிக்கும், வசிக்கமுயற்சிக்கும் ரகசியம் இதுதான்! தமிழ்நாடு என்ற ஆங்கிலேயனின் காலனி, இந்தியா என்ற கட்டியமைக்கப்பட்ட ஒரு நாட்டின் (மாநிலமாக) காலனியாக இப்போது இருக்கிறது. அதனால் 'பிரிவினை' என்பது தமிழ்தேசியத்தை வர்ணிக்கும் சரியான வார்த்தை அல்ல. உரிமை என்பதே சரி!

ஒரு அமெரிக்கனால் ஈராக்கியனுக்கு பிரச்சினை வரும், ஒரு ஆங்கிலேயனால் அரேபியனுக்கு பிரச்சினை வரும், ஆனால் இந்தியாவில் மட்டும் இந்தியனால் இந்தியனுக்கே பிரச்சினை வருகிறதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமோ! என்னதான் "வேற்றுமையில் ஒற்றுமை" என சிறுவயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்டாலும் வளர வளர அது மாயை என்பதை புரிந்துகொள்கிறோமா இல்லையா? க்ரிக்கெட் மேட்சைத்தவிர வேறு எதிலாவது இந்தியர்களாக ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறோமா? அட அதையெல்லாம் விடுங்கள். நான் இந்தியன் என மார்தட்டும் தமிழர்கள் எத்தனை பேருக்கு இந்திய தேசியகீதத்தின் அர்த்தம் தெரியும்?

ஒரு நாய்க்குக்கூட பூனை தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காது எனும்போது மனித இனம் எப்படி வேறு தேசிய இனம் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளும்?  இந்தியாவெங்கும் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அமைதி இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கிளப்பிக்கொண்டும், அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டும், இந்திய ராணுவத்தை எதிர்ப்பதும் நடந்து வருவது இதனால் தான்! இந்திய ராணுவத்தை இந்தியர்களே எதிர்க்கிறார்கள் என்றால் நாம் ஒன்றுக்கொன்று ஒவ்வாத பொருட்களை வலுக்கட்டாயமாக ஒன்றாக வைத்திருக்கிறோம் என பொருள். இந்திய தேசிய கட்டமைப்பின் வேரில் இருக்கும் இந்த ஒவ்வாமைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிசெய்ய முனைவது வேரை விட்டுவிட்டு இலைக்கு தண்ணீர் ஊற்றுவது போலாகும். 

தமிழர்களில் பலருக்கே தனித்தமிழ்நாடு கேலியாகவும், சாத்தியமில்லாததாகவும் தான் தற்சமயம் தெரிகிறது. அவர்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். தற்கால சூழ்நிலை அப்படி! அவர்களின் சந்தேகமும், கேலியும் நியாயம் தான்! அவர்களுக்காகவே இந்தப் பதிவு. தமிழ்நாடு மட்டுமல்ல கிழக்கிந்தியா, காஷ்மீர் என இந்தியா பல இடங்களில் வருங்காலத்தில் உடையத்தான் போகிறது. எத்தனை நாள் தான் ஒரு போலிக்கட்டமைப்பு தாங்கும்? எத்தனைநாள்தான் மணல்வீட்டை கான்க்ரீட் வீடு என ஏமாற்ற முடியும்? ஆனால் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் இந்த ஏமாற்றுவேலையால் பலன் அடைபவர்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்.  ஒரு அட்டைப்பெட்டிக்குள் ஒன்றுக்கொன்று சேராத பொருட்களை என்னதான் இறுக்கமாக அடைத்து, இரும்புக்கயிற்றை வைத்து கட்டினாலும் காலப்போக்கில் அட்டைப்பெட்டி பிரச்சினை தாங்கமால் கிழியத்தான் செய்யும். இயற்கையும், விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் அதேநேரம் ஒரு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியார் இந்தியவிடுதலையை எதிர்த்ததற்கான காரணம், அதிகாரம் வெள்ளைக்காரனிடத்தில் இருந்து இங்கு உயர்பதவிகளில் இருக்கும் உயர்சாதிக்காரர்களிடம் மாறத்தான் போகிறதேயொழிய அது உண்மையான விடுதலையாக இருக்க முடியாது என்ற புரிதல் அவர்க்கு இருந்ததால் தான். அவர் நினைத்தது போலவேதான் நடந்தது என்பதை இன்றும் நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். வரலாறு இப்படி இருக்கும்போது சாதி என்ற ஒன்றை முற்றிலும், வேரோடு அழிக்காமல் ஒரு உண்மையான விடுதலையை நாம் அடைய முடியாது! அப்படி அடைந்தால் அது மீண்டும் அதிகாரமாற்றமாகவே தான் இருக்குமேயொழிய அதன் பேர் விடுதலை அல்ல! அதனால் தான் தனித்தமிழ்நாட்டின் மேல் எதிமறையான தாக்கத்தை உண்டுசெய்யும் தற்கால சாதிய-போலித்தமிழ்தேசியவாதிகளை நாம் மிகக்கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது.
தனித்தமிழ்நாடுக்கான போராட்டம் வெளிப்படையாக, கொள்கைரீதியாக உருவெடுத்து இன்னும் தெருவுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விதை இந்திய அரசாங்கத்தாலேயே ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு காவிரியிலும், ஒவ்வொரு ராணுவ-வன்புணர்விலும், ராணுவத்தால் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவியின் உடல் மீதும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள், ஆதிவாசிகள், பூர்வகுடிகளின் அன்றாட வாழ்க்கையின் மீதும் தூவப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா தேசிய இனங்களும் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை அதிதீவிரமாக முன்னெடுக்கும் போது தமிழ்தேசிய இனத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

கொஞ்சம் பொறுமையாய் இப்போதைக்கு இந்தியனாகவே இருங்கள். இப்போதோ, நெருங்கிவரும் வருங்காலத்திலோ இல்லையென்றாலும் கூட என்றாவது ஒருநாள் நீங்களும் நானும் புதைக்கப்பட்டிருக்கும் இடம் இந்தியமண்ணாக இல்லாமல் தமிழ் குடியரசு நாட்டின் மண்ணாக இருக்கலாம், இருக்கும்!

8 comments:

தேவன் said...

Nice article. We will expect to a situation arise for separate Tamil Nation. Thanks!

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

karutha said...

தேசிய இனங்களின் சிறை கூடம் தான் இந்தியாஎன்ற புரிதலுக்கு வந்து சுமார்நாற்பது ஆண்டுகள் ஆகியும் ஏன் விடுதலை வரவில்லை என்றால் அவ்வாறு வரையறுத்த அமைப்புகளே அந்த கோரிக்கைக்கு உண்மையாக இல்லை !.........................மேலும் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி இந்தியா என்பது தரகுபார்பனிய ஏகாதிபத்திய கட்டமைப்பு என்றும் சாதிய ஒடுக்குமுறையும் தேசிய ஒடுக்குமுறையும் கொண்டு பூர்வகுடி மக்களை ஒடுக்கிவருகிறது என்று வரையறுத்து உள்ளது.................. இதில் இருந்து விடுபடதமிழ் தேசிய ஜனநாயக புரட்சி திட்டத்தை வைத்து வேலை செய்து வருகிறது !

தமிழானவன் said...

நேர்த்தியான எதார்த்தமான பதிவு. இந்தியா உட்பட பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் வெள்ளையர்களால் கிழிக்கப்பட்ட கோடுகளேயன்றி வேறில்லை. தனித்தமிழ் நாடு வேண்டும் என்றளவிற்கு இங்கே பிரச்சனை இல்லை. இந்தியாவின் தமிழ்நாட்டிற்குள்ளேயே தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளன. ஆனால் இந்தியா என்ற் கருத்தின் ஆதிக்கம் எல்லா தேசிய இனங்களின் மீதும் இருக்கிறது. காஷ்மீரிகள், பழங்குடியினர், வட கிழக்கு தேசிய இனங்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவோ சுதந்திரமாக இருக்கிறோம். எதிர்காலத்தில் இந்தியா உடையும் என்று தோன்றவில்லை. இன்றைய உலகமய காலத்தில் தனிநாடு என்பது சாத்தியம் என்று தோன்றவில்லை. பிரிந்து போகும் உரிமையுடய சுயநிர்ணய உரிமையே தேவை எல்லா தேசிய இனங்களுக்கும். இலங்கையிலும் இதுதான் தேவை. மற்றபடி தமிழ்தேசியம் எனப்து எதாவது ஒரு இடத்தில் சறுக்குகிறது, ஜாதிய ஆதரவு, பிற இனத்தவர் மீதான வெறுப்புணர்வு என இனவாதமாகவே வெளிப்படுகிறது. மற்றபடி கிரிக்கெட் தேசபக்தியையும் ஐபிஎல் போட்டிகள் பொய்ப்பித்து விட்டன. போலி தேசபக்தியின் பிம்பமாக பாகிஸ்தான், சீன வெறுப்பு, கசாபபை தூக்கில் போடு, அப்துல்கலாம், ஹஸாரே, அணுஆயுத ஏவுகணை, இராணுவத்தின் புகழ்ச்சி, சச்சின், அமீர்கான் என்று உலாவருகிறது.

சுபானு said...

நல்ல பதிவு..

KRUTHTHIGA KUMARAN said...

Indha padhivai paditha pinbudhan tamilnadu thaninaadaaga vendum endra palarin ennangal melum valuvadaiyum endra nambikkai valarhiradhu. Seeman pondravargalai patriya thangaladhu vimarsanangal avargal poli tamildesiyavaadhi engira ennathal enbadhum purigiradhu.

KRUTHTHIGA KUMARAN said...

Indha padhivai paditha pinbudhan tamilnadu thaninaadaaga vendum endra palarin ennangal melum valuvadaiyum endra nambikkai valarhiradhu. Seeman pondravargalai patriya thangaladhu vimarsanangal avargal poli tamildesiyavaadhi engira ennathal enbadhum purigiradhu.

முனைவர் பரமசிவம் said...

//என்றாவது ஒரு நாள், நீங்களும் நானும் புதைக்கப்பட்டிருக்கும் இடம் இந்திய மண்ணாக இல்லாமல் தமிழ்க் குடியரசு மண்ணாக இருக்கலாம்//

பதிவின் இந்த இறுதிப் பகுதியைப் படித்த போது, என் உடம்பு சிலிர்த்தது நண்பரே.

பாராட்டுகள்; நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...