Monday, May 14, 2012

ஹீராதி ஹீரோ!

நம் வாழ்க்கையில் இதுவரைக்கும் எத்தனை ஹீரோக்களை கடந்து வந்திருக்கிறோம்? அப்பாவில் ஆரம்பித்து பிடித்த நடிகரில் இருந்து எத்தனையோ ஹீரோக்கள் நம் வாழ்க்கையில் வருகிறார்கள், இருக்கிறார்கள். சினிமா ஹீரோக்களைப் பற்றியும், சினிமாவின் அசாதாரண ஹீரோக்களைப் பற்றியும், அன்றாட வாழ்க்கை ஹீரோக்களாகிய உங்களையும் என்னையும் பற்றிய குறிப்புதான் இந்த பதிவு!

பொதுவாக அப்பா, ஆசிரியர் போன்ற நிஜவாழ்க்கை ஹீரோக்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடியும். சமூக சிக்கல்களை சமாளிப்பது, அன்றாட வாழ்க்கை நமக்கு இடும் சவால்களை முறியடித்து வாழ்க்கையில் முன்னேறுவது, இது போல. ஒரு கதை சார்ந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பிரச்சினைகளை சுற்றி கதை நகர்கிறது, அந்த படத்தில் அவர் மையப்புள்ளியாததால் அவரை ஹீரோ என்கிறோம். உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கிறது, அந்த வட்டத்தின் மையப்புள்ளியாய் நீங்கள் இருக்கிறீர்கள். இப்படி ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள் நடக்கும் கதைக்கு ஹீரோ அவரவரே! அதனால் இந்த ஹீரோக்களை விட்டுவிடுவோம். கறுப்பும் அல்லாமல் வெள்ளையும் அல்லாமல் சாம்பல் நிறத்தவர்கள் இவர்கள். நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள்! போர் அடிப்பவர்கள்! நிஜவாழ்க்கையைவிட பிரம்மாண்டமான, மிகவும் நல்ல உள்ளம் படைத்த எல்லாம் வல்ல அசாதாரண ஹீரோக்களின் (சூப்பர் ஹீரோக்கள்) வட்டங்களுக்குள் கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

நான் மூன்றாம் வகுப்பு படித்த காலகட்டங்களில் என்னுடன் இருட்டிலும், நான் பயப்படும் ஏனைய எல்லா இடங்களுக்கும் துணைக்கு முகமுடி அணிந்தபடி ஒருவர் வருவார். பேய், ரவுடிகள், கொலைகாரர்கள் என சகலவிதமான வில்லன்களுக்கும் அவர் சிம்மசொப்பனம். அவருடனே ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் வரும். அவர் பெயர் மாயாவி, அவரின் நாயின் பெயர் டெவில். ஒவ்வொரு முறை அவர் வில்லன்களை குத்தும் போதும் 'கும் கும்' என சத்தத்துடன் அவரது மண்டையோடு முத்திரை வில்லன்களின் முகத்தில் பதியும். ராணி காமிக்ஸ் என்ற மாயாவி என்னும் மிகப்பெரிய சூப்பர் ஹீரோவை உள்ளடக்கிய ஒரு ரூபாய் புத்தகம் எப்போது வரும் எப்போது வரும் என காத்திருந்து அப்பாவிடம் கெஞ்சிக் கதறி ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடியகாலங்கள் அவை! மாயாவிகள் பரம்பரையில் அவர் 21வது மாயாவி. அடுத்த மாயாவியாக நாம் இருக்கமாட்டோமா என்றெல்லாம் தோன்றும் எனக்கு. உடன்படிக்கும் மாணவனுடன் சண்டை வரும்போதெல்லாம் மறக்காமல் அவன் முகத்தில் குத்துவேன்! குத்தும் போதெல்லாம் தவறாமல் உள்ளுக்குள் "கும் கும்" என சத்தம் கேட்கும் எனக்கு. அதில் ஒரு ஆனந்தம்.   எனது சூப்பர் ஹீரோ மாயாவி, வில்லன்களின் சிம்மசொப்பனம், மது-சிகரெட் தொடமாட்டார். நல்லதுக்காக என்றும் குரல் கொடுப்பார்! எல்லாவற்றையும் விட முக்கியமாக மாயாவி எனக்கு சொல்லிக்கொடுத்தது அநீதியைக் கண்டால் பொங்கியெழு! கெட்ட விஷயங்களை எப்போதும் செய்யாதே, உன் தன்மை அது அல்ல என்பதே! இப்படிதான் முதல் முதலாக ஒரு சூப்பர் ஹீரோவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது எனக்கு!
இதற்கு அடுத்ததாக ஆறாம், ஏழாம் வகுப்பில் ஒரு சூப்பர் ஹீரோ என் வாழ்க்கையில் வந்தார்! அவர் பெயர் ரஜினி! என் வகுப்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் அவர்தான் சூப்பர் ஹீரோ! மாயாவியைப் போல் அவர் கதாப்பாத்திரம் அல்ல, நிஜ மனிதர். இவர் செய்யும் சாகசங்கள், இவரின் சண்டைகள் என பலவிஷயங்கள் என்னை பரவசப்படுத்தினாலும் மாயாவி போல இவர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யவில்லை. ஹீரோயினோடு ஆடுவார், முத்தம் கொடுப்பார், சிகெரட் பிடிப்பார், மது அருந்துவார் இதோடு சேர்த்து நல்லவற்றுக்காக போராடுவார்! மாயாவியைப் பிடித்த எனக்கு முழுமனதாக இவரைப் பிடிக்கவில்லை. இதையெல்லாம் விட அவரின் மேல் எனக்கு சிறுவயதில் வெறுப்பு வரக்காரணம் எனக்கும் என் ஐந்தாம் வகுப்பு நண்பன் ஒருவனுக்கும் ரஜினியால் சண்டை வந்தது. ரஜினி படங்களில் வரும் பாடல்களை வேறு யாரோதான் பாடுவார்கள், ரஜினி வாய் மட்டும்தான் அசைப்பார் என நான் சொல்ல, இல்லையில்லை ரஜினிதான் பாடுவார் என அவன் சொல்ல கடைசியில் சண்டை பெரிதாகி ஒரேடியாக பிரிந்தோம்! (பின் 15 வருடங்கள் கழித்து முகநூலில் இப்போது மீண்டும் இணைந்திருக்கிறோம். அவனிடம் ரஜினி பற்றி நான் இப்போதெல்லாம் வாய் திறப்பதில்லை!!)

மாயாவி என்ற கதாப்பாத்திரத்தை சூப்பர் ஹீரோ என சொல்லும் நான், ஏன் ரஜினி என்ற நடிகரை, நிஜ மனிதரை, நம்மைப் போல சாதாரணமானவரை ஏன் சூப்பர்ஹீரோ என சொல்கிறேன்? எது என்னை இப்படி சொல்லவைத்திருக்கிறது? இந்த கேள்விக்கான பதிலில் தான் நம் தமிழ்சினிமாவின் கிறுக்குத்தனம் அல்லது சூட்சமம் அல்லது படுதோல்வி அல்லது மிகப்பெரிய வெற்றி அடங்கி இருக்கிறது!

வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், ஹீமேன், மாயாவி (Phantom) என அடுக்கிக்கொண்டே போகலாம். நம் ஊர் சூப்பர் ஹீரோக்கள் யார்? எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய், சிரஞ்சீவி, ஜூனியர் NTR, தி க்ரேட் பாலய்யா என பட்டியல் நீளும்! வெளிநாட்டினரின் சூப்பர் ஹீரோக்கள் வெறும் கதாப்பாத்திரங்கள். அந்த கதாப்பாத்திரத்தின் தன்மைக்குள் எந்த நடிகர் புகுந்தாலும் (நடித்தாலும்) நம் கண்களுக்கு தெரிவது அந்த கதாப்பாத்திரம் தான். பேட்மேன் கதாப்பாத்திரத்தில் மைக்கேல் கீட்டன் நடித்தாலும், வால் கில்மர் நடித்தாலும், ஜார்ஜ் க்ளூனி நடித்தாலும், க்றிஸ்டியன் பேல் நடித்தாலும் பேட்மேன் பேட்மேனாகத்தான் இருப்பார். பேட்மேனின் ரசிகர்கள் நல்லவற்றின் சின்னமாக (symbol of good) பேட்மேன் என்ற அந்த கற்பனை கதாப்பாத்திரத்தை உருவகப்படுத்திக் கொண்டு பேட்மேனை (hero worship) போற்றுகிறார்கள். அதே சமயம் பேட்மேன் வேடமணிந்த நடிகர்களை வெறும் நடிகர்களாகவும், பேட்மேனின் 'தன்மை' அந்த நடிகர்களுக்கு கிடையாது எனவும் பகுத்தறியும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட பேட்மேன் உயிருடன் தான் இருப்பார். நடிகர்கள் மாறிவிடுவார்கள். இன்னும் ஆயிரம் ஆயிரம் காலம் அவர்களின் குழந்தைகளை வழிநடத்த, inspire செய்ய அந்த கதாப்பாத்திர சூப்பர் ஹீரோக்கள் அவர்களுடனே இருப்பார்கள்.

ஆனால் ரஜினியாக விமலோ, எம்.ஜி.ஆராக தனுஷோ நடிக்க முடியுமா? நம் ஊர் சினிமா ரசிகர்கள் கதாப்பாத்திரத்தன்மைக்கும், அதை ஏற்று நடிக்கும் நடிகர்களின் தன்மைக்கும் வித்தியாசம் உண்டு என புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம், நம் ஊரு சினிமா, கதாப்பாத்திரங்களை ஹீரோக்களாக உருவாக்காமல், நிஜ மனிதர்களை ஹீரோக்களாக உருவாக்கி விட்டுவிடுகிறது! அதனால்தான் தனுஷ் நடிக்கும் ஒரு சினிமாவில் நூறு பேரை அடிக்கும் சண்டைக்காட்சி இருந்தால் ரசிகர்கள், "ரஜினி நடிக்கவேண்டிய படத்துல இவன் ஏண்டா நடிக்கிறான்? இவன் 100பேரை அடிக்கிறான்னா நம்ப முடியுமா மாப்ள?" என புலம்புகிறார்கள்! ஆனால் உண்மை என்ன? தனுஷால் எப்படி நூறு பேரை அடிக்க முடியாதோ அதேபோல் ரஜினியாலும் முடியாது! இன்னும் சொல்லப்போனால் ரஜினி முதியவர். தனுஷ் கண்டிப்பாக ரஜினியை விட பலசாலியாகத்தான் இருப்பார். ஆனாலும் ஏன் இந்த ஒப்பீடு? காரணம் ரஜினியை நம் ரசிகர்கள் நிஜ சூப்பர் ஹீரோவாக உள்மனதில் முடிவுசெய்து கொண்டதுதான்! சினிமாவில் சம்பளத்துக்காக, இயக்குனர் சொன்னதை செய்துபோகும், டூப் போட்டு நடிக்கும் ஒரு நடிகர் எப்படி சூப்பர் ஹீரோ ஆனார்? வெளிநாடுகளில் கதாப்பாத்திர வழிபாடாக மட்டுமே இருக்கும் ரசிகத்தன்மை, இங்கு தனிமனித வழிபாடு ஆகிவிடுகிறது! இதற்கு காரணம் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்.

இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தோமானால் இது எவ்வளவு பெரிய எமாற்றுவேலை என்பது புலப்படும்!! ஒரு நடிகரை ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் பொறுத்திப் பொறுத்தி அந்த நடிகர் தான் அந்த கதாப்பாத்திரம் என மக்களை காலப்போக்கில் நம்பவைத்துவிடுகிறார்கள்! பின் அந்த நடிகர் தன் நிஜவாழ்க்கையிலும் அதேபோல்தான் இருப்பார் என்று நம்பும் மக்கள், அரசியலில் கூட அந்த நடிகருக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள், "தலைவா" என்கிறார்கள், "அரசியலுக்கு வா காத்திருக்கிறோம்" என அழைக்கிறார்கள்! அந்த நடிகர் இறந்துவிட்டாலோ, ஓய்ந்துவிட்டாலோ அடுத்த சூப்பர்ஹீரோவை திரையுலகம் தயார் செய்துவிடுகிறது அல்லது தானே உருவாகிவிடுகிறார்! தலைவராகவும் ஆகிவிடுகிறார்! நான்கு சண்டை படங்களில் நடித்தவுடன், நான்கு படங்களில் ஏழைகளுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்தவுடன் தனக்கு முதல்வராகும் தகுதி வந்துவிட்டதாக நடிகர்கள் எண்ணிக்கொள்வதும் இதனால்தான்!
இப்படி வளரும் நடிகர்கள் ரசிகர்களை இந்த விஷயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். சிந்திக்கவே தெரியாத அடிமைகள் போல் ஆக்கிக்கொள்கிறார்கள்.

இத்தனை வருட தமிழ்சினிமா எத்தனையோ சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் பேட்மேன், மாயாவி போல காலத்தால் அழியாத ஒரே ஒரு கதாப்பாத்திரத்தையாவது உருவாக்கியிருக்கிறதா? நல்லவற்றின் சின்னம் (Symbol of Good) என குழந்தைகள் போற்றும் ஒரு நல்ல சூப்பர் ஹீரோவையாவது உருவாக்கியிருக்கிறதா? எவ்வளவு பெரிய தோல்வி இது?

இன்றுவரை சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும், போற்றும் எனக்கு நம் ஊர் ஏமாற்றுக்கார சூப்பர் ஹீரோக்களின் மேல் அருவெறுப்பாய் இருக்கிறது! கெட்டவைகளை கெட்டவைகளாக காட்ட நல்ல கதாப்பாத்திரங்கள் தேவை! நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்குமான (Good VS Evil) போர் உலகத்தில் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த பக்கத்தில் இணைந்து போரிடவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு அவர்களின் சிறுவயது சூப்பர் ஹீரோக்கள் தான் சொல்லிக்கொடுகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அசாதாரண நல்லவனான சூப்பர் ஹீரோ தேவை! முழுவதுமாக ஒரு குழந்தை நல்லவனாக இதனால் ஆகப்போவதில்லை என்றாலும் வளரும் பருவத்தில் நல்ல தாக்கத்தை இது உண்டுசெய்யும். அந்த கற்பனை கதாப்பாத்திரத்தை நீங்கள் குழந்தைக்கு காட்டிவிட்டால் பின் அந்த குழந்தையின் காட்ஃபாதர் அந்த கதாப்பாத்திரமும் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையும்தான். ஆனால் யாரை சூப்பர் ஹீரோக்களாக நாம் கை-காண்பிக்கிறோம் என்பது மிக அவசியம். என் அப்பா சிறுவயதிலேயே நடிகர்களுக்கும்-கதாப்பாத்திரங்களுக்குமான வேற்றுமையை எனக்கு சொல்லிக்கொடுத்ததால்தான் என்னால் ரஜினி என்ற சூப்பர் ஹீரோ பாடல்களுக்கு வெறுமனே வாய் அசைக்கிறார் என்பதை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருந்தது! அந்த வழிகாட்டுதல் இல்லாததால்தான் என் நண்பன் ரஜினிக்காக என்னுடன் சண்டை போட்டு நிரந்தரமாய் பிரியவும் தயாராயிருந்தான். இந்த அளவுக்கு குழந்தைகளை பாதிக்கும் சூப்பர் ஹீரோக்கள் சரியான, நேர்மையான ஹீரோக்களாய் இருப்பது அவசியம் அல்லவா? 

 ஆனால் நம்மூரில் நல்லவர்களாக நடிக்கும் 'சூப்பர் ஹீரோக்கள்' எப்போதும் மக்களை மூளைச்சலவை செய்து, சுயநலத்துக்காக அதை பயன்படுத்தும்  கெட்டவர்களாகவேதான் உண்மையில் இருக்கிறார்கள். இன்றைய இளையதலைமுறையும் மூளைச்சலவையில் இருந்து தப்பவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையிலாவது சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து ஏமாற்றும் சராசரி மனிதர்களாக இல்லாமல், என்றுமே ஏமாற்றாத கற்பனை கதாப்பாத்திரங்களாக இருக்கட்டும்! (குறிப்பு: அவெஞ்சர்ஸ் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எழுந்த சிந்தனை இது. ஒரு அதிபயங்கர உண்மையான சூப்பர் ஹீரோ ரசிகனாக சொல்கிறேன் ,கண்டிப்பாக அந்தப் படத்தை பார்த்துவிடுங்கள்!)


3 comments:

satheesh singam said...

ஏன் பாஸ் மாயாவி மட்டும் தான் பிடிக்குமா........... ரெக்ஸ் டயானா ஹீரா பிடிக்காத?
இந்த மாடஸ்தி, பிளாஷ்கார்டன், கார்த், இவங்க எல்லாம்?
இந்த ராணி காமிக்ஸ் எவ்வளோ புக் பத்திரமா வைச்சிருந்தேன் தெரியுமா?
7ம் புக் வரை தேடி பிடிச்சி வாங்கி வைச்சிருந்தேன்...........
https://www.facebook.com/photo.php?fbid=230397630406816&l=7f21666f3d

satheesh singam said...

https://www.facebook.com/photo.php?fbid=230397630406816&l=7f21666f3d

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Related Posts Plugin for WordPress, Blogger...