Monday, May 7, 2012

மீனாட்சியம்மன் கோவில்-மறுமுகம்

மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் 9வது வகுப்பு வரையில் நான் மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனதில்லை. பின் ஒரு கிறுத்தவ வாத்தியார், "மதுரையில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலை பார்க்காமல் இருக்கலாமா? கண்டிப்பாக போ" என்றார். அவருக்காக ஒரு நெருங்கிய நண்பனைக் கூட்டிக்கொண்டு மீனாட்சியம்மனைப் பார்க்கச் சென்றேன். உள்ளே நடக்க நடக்க பிரம்மாண்டம் தலையின் மேல் விரிந்துகொண்டே சென்றது. ஒவ்வொரு சிற்பத்தையும் நான் நின்று பொறுமையாகப் பார்க்க நேரம் பிடித்ததால் நண்பன் ஒரு ஓரத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான். அப்போதுதான் தென்பட்டது அந்த சித்திரவதைச் சிற்பங்கள்! குவென்டின் டாரன்டினோ என்ற ஹாலிவுட் இயக்குனர் கொடூர வன்முறையை எப்படி அழகியலோடு காட்சிப்படுத்துவது என்பதில் தேர்ந்தவர். அவரின் மூதாதையர் எவனோதான் அந்த சிற்பங்களை வடித்திருக்க வேண்டும். சமணத்துறவிகளையும், புத்தத்துறவிகளையும் அந்தகாலத்தில் எப்படியெல்லாம் சித்தரவதைப்படுத்தி, கொடும்வலிக்கு உள்ளாக்கி கொன்றிருக்கிறார்கள் இந்துமதவாதிகள் (சைவர்கள்) என 'அழகாக' எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன அச்சிற்பங்கள்.

மிக உயரமான தடித்த கூரிய ஊசிகளின் மேல் சமணர்களை அப்படியே உட்கார வைத்து ஆசனவாயில் ஊசி ஏற்றி தலைவழியாக ஊசியை வெளியே எடுத்து கொல்வது, சுண்ணாம்பை கொதிக்கவைத்து அதில் உயிருடன் போட்டுக் கொல்வது, இரு கைகளையும் ஒரு இயந்திரத்தில் கோர்த்து அப்படியே உடலை இரண்டாகப் பிய்த்தெடுப்பது போன்ற விதவிதமான கொலை-வகைகளை அழகாக வடித்திருந்தார்கள்! மீனாட்சியம்மன் என்னும் உலகை ஆளும் பரம்பொருள் வீற்றிருக்கும் கோவிலில் தான் இந்த சிற்பங்கள்! முதன்முதலில் எனக்கு மதத்தின் மீதும் கடவுள் என்ற கருத்தியல் உருவாக்கத்தின் மீதும் மிகப்பெரும் வெறுப்பும், அருவெறுப்பும் வந்தது அப்போதுதான். மதத்தின் பெயரலால், கடவுளின் பெயரால் செய்யப்படுவதால் தான் இப்படியான கொடூரங்களைக் கூட கண்டுகொள்ளாமல் போயிருக்கிறார்கள், போகிறார்கள். நியாயப்படுத்த கூட சிலர் தயாராய் இருக்கிறார்கள், குஜராத் கலவரங்களை நியாயப்படுத்தும் கூட்டத்தைப் போல!
இந்த சிற்பங்கள் எங்கோ ஒரு குகையில் காணப்படவில்லை. அன்பே உருவமாக, உலகத்தை ரட்சிக்கும் அருள்மிகு மீனாட்சியம்மனின் 'வீட்டில்' இருப்பதுதான் வியப்பிலும் வியப்பு! மீனாட்சியம்மனே இப்படி இருக்கும்போது சாதாரண மனிதர்களான நம் அம்மாக்கள் நம் வீட்டில் ரத்தக்களறியாக ஒரு திரைப்படம் பார்ப்பதைக் கூட எதிர்க்கிறார்கள்!! என்ன மாதிரியான முரண் பாருங்கள்!!

அடுத்து இலவசமாக அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டும். காசு இருந்தால் 100, 500ரூபாய் என சீட்டுக்கள் வாங்கி சுலபமாக பார்த்துவிடலாம். முதல்நாள் முதல் காட்சியில் காசு அதிகம் கொடுத்து நாம் பார்க்கும் ரஜினி படங்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒரு திரைப்படத்திற்கும் எல்லார்க்கும் பொதுவான கடவுளான அம்மனுக்கும் வித்தியாசம்
இல்லையா? காசு கொடுத்தால் கடவுளை சீக்கிரம் பார்க்கலாம் என்றால் என்ன மாதிரியான கடவுள் இது, என்ன மாதிரியன பக்தி இது? இதைத்தான் இக்கியூ என்ற ஜப்பானிய கவிஞர் 1400லேயே "அர்ச்சகர்கள் கடவுளை பணக்காரர்களுக்கு கூட்டிக்கொடுப்பவர்கள்" என எழுதினார்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் எத்தனையோ பேர் போகிறார்கள், அம்மனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் நம் குலதெய்வங்களான, முதாதையர்களான முனியாண்டி, கருப்பசாமி, மதுரைவீரன் ஆகியவர்களை வணங்குகிறார்கள். அவர்களின் பூசாரிகளாக பிராமணரல்லாதோர் இருக்கிறார்கள்! மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே எத்தனையோ பிற கடவுள்கள் இருக்கும்போது, ஏன் நம் மூதாதையர்களான இந்த கடவுள்களுக்கு கோவிலின் உள்ளே இடமில்லை? நம்மிடம் அஞ்சு பத்து என அர்ச்சனைத் தட்டில் வாங்கிக்கொள்பவர்கள் ஏன் நம் குலதெய்வங்களுக்கு பூசாரிகளாக இருப்பதில்லை? நம் ஆட்கள் ஏன் மீனாட்சியம்மன் இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்குள் போக அனுமதியில்லை? எதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார்கள்? அனைவரும் அர்ச்சகர் ஆனால் என்ன ஆபத்து நேரப்போகிறது? நம் மக்களிடையே வாழ்ந்து, மக்களைக் காத்து செத்தவர்களை சிறுதெய்வங்கள் எனவும், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்களை பெருதெய்வங்கள் எனவும் ஏன் பகுத்து வைத்திருக்கிறார்கள்? சமணர்களையும் மீனாட்சியம்மன் தானே படைத்திருக்கவேண்டும், அவளின் பேராலேயே அவர்களைக் கொன்று, அவள் இருப்பிடத்திலேயே சிலையாகவும் வடித்திருக்கிறார்களே ஏன்? இதுபோல் ஏராளமான கேள்விகள் உண்டு!

நீங்கள் ஆத்திகர்களாக இருங்கள். சாமி கும்பிடுங்கள். மத நம்பிக்கையோடே இருங்கள். ஆனால் அடுத்தமுறை கோவிலுக்கு செல்லும்போது நேராக மூலக்கடவுளை கும்பிட்டுவிட்டு வராமல், சுற்றி இருப்பவற்றை கவனியுங்கள். சிந்தியுங்கள். கோவிலுக்கு செல்லும்போது கடவுளிடம் வேண்டுவதைத்தவிர நீங்கள் எதையுமே சிந்திப்பதில்லையென்றால் நீங்கள் கண்களை மூடியிருக்கிறீர்கள் என அர்த்தம். கண்களைத் திறங்கள். கடவுளைத்தாண்டி, மதத்தைத் தாண்டி கேள்வி கேளுங்கள்! சாமி கும்பிடுவதைவிட கேள்வி கேட்பது மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது! கேள்வி கேளுங்கள்!


12 comments:

நம்பள்கி said...

நான் அந்த கோவிலில் நிறைய படங்கள் எடுத்துள்ளேன். நீங்கள் சொன்ன சித்திரவதை செய்யும் சிற்பங்கள் எங்குள்ளது? சொன்னால் அடுத்த முறை அதையும் படம் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.

டான் அசோக் said...

ஆயிரம் தூண் மண்டபம் அருகில் இருப்பதாக நியாபகம். பலகாலம் ஆகிவிட்டதால் இடம் சரியாக நினைவில்லை. விசாரித்து சொல்கிறேன்.

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

மெய்ப்பொருள் காண்பதறிவு!

விழித்துக்கொள் said...

neengal kurippittulladhu padi varalaaru irukkindradhu adhepol oruvaralaarum undu samana samayaththavarum neengal kurippittulla adhe thandanayai pandaaram enappadum saiva siththargalukku vazhangi kollappattanar pirage barhamins enappadum ariya poojari aanadhu nadandhulladhu madhan endha roobaththil irundhaalum adhu manidhanai veripidikka vaikkum nandri

Gomathi said...

ஏன் நீங்கள் அந்நியன் படம் பார்த்தது இல்லையா? எவனவன் தவறு செய்கிறானோ அவனுக்கு எமலோகத்தில் எத்தகைய தண்டனைகள் கொடுப்பார்கள் என்பதை பற்றிய சிற்பங்கள் எல்லா கோயிகளிலும் செதுக்கப்படுகின்றன. ஆதலால் அது சமணர்கள் என்று நினைத்தால் அது உங்கள் அறிவின் அளவை காட்டுகிறது.

Gomathi said...

\\மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் எத்தனையோ பேர் போகிறார்கள், அம்மனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் நம் குலதெய்வங்களான, முதாதையர்களான முனியாண்டி, கருப்பசாமி, மதுரைவீரன் ஆகியவர்களை வணங்குகிறார்கள். அவர்களின் பூசாரிகளாக பிராமணரல்லாதோர் இருக்கிறார்கள்! \\

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் 32 கோயில்களில் மட்டுமே நீங்கள் சொல்லும் அளவுக்கு சம்மளம் தரப்படுகிறது. மீதம் உள்ள 10000 மேலான கோயில்களில் ஒரு மாத சம்மளம் 1000 க்கும் குறைவு தான் கிடைக்கும் சம்மளத்தில் எங்காவது புரோகிதம் செய்து வயிறு பிழைக்கிறார்கள்.

ராஜாவை பார்த்து அவன் சாதிகாரன் எல்லாம் கோடிஸ்வரன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனமோ அதே அளவு அறியாமை உங்கள் கேள்விகளிலும் உள்ளது.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே எத்தனையோ பிற கடவுள்கள் இருக்கும்போது, ஏன் நம் மூதாதையர்களான இந்த கடவுள்களுக்கு கோவிலின் உள்ளே இடமில்லை?

உங்கள் பிரச்சனை என்னவென்று புரியவில்லை. மீனாட்சி மட்டும் மூதாதையர் இல்லை. மதுரை வீரன் மட்டும் மூதாதையர் என்று யார் சொன்னது உங்களுக்கு...

அது சரி கிறித்துவ வழிகாட்டில் கோயில் சென்ற உங்களுக்கு இது எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை.

Gomathi said...

நம்மிடம் அஞ்சு பத்து என அர்ச்சனைத் தட்டில் வாங்கிக்கொள்பவர்கள் ஏன் நம் குலதெய்வங்களுக்கு பூசாரிகளாக இருப்பதில்லை?

மீனாட்சி அம்மன் கிராம தெய்வம் அல்ல. உங்கள் குலக் கோயிலை சீர் படுத்துவது உங்கள் கடமை. நீங்களும் சம்பளம் கொடுங்கள். அவர்கள் வந்து தாராளமாக பூஜை செய்வார்கள். அது சரி இறந்த பின்பு செய்யப்படும் ஈம காரியங்களை காலம் காலமாக பிராமணர்கள் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்து குல தெய்வம் எனது கிராம தெய்வம் அல்லது காவல் தெய்வம் என்ற முறையிலேயே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது தான் பழக்கம். அதாவது காணி / கிராம தெய்வங்கள் மட்டுமே குல தெய்வமாக முடியும். சிலர் தீவிர வைண மற்றும் சைவர்கள் ஆகும் பட்சத்தில் வேறு எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்கால் மூல இறைவனையே குல தெய்வமாக கொள்வார்கள்.

உதாரணம் வன்னியர், சக்கிலியர் மற்றும் நாயுடு.

பிராமணர்களுக்கும் குலதெய்வம் அவர் பிறந்த கிராம தெய்வம் தான். இது தங்களுக்கு புரியாமல் போனதில் எனக்கு ஆச்சரியமே....

நம் ஆட்கள் ஏன் மீனாட்சியம்மன் இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்குள் போக அனுமதியில்லை?

அதற்கான தகுதியை குழந்தையில் இருந்தே பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அதற்கான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

எல்லா பிராமணர்களுக்கும் கருவரைக்குள் அனுமதிக்கபடுகிறார்கள் என்பது ஒரு சுத்த பொய்.

ஆச்சாரியார்கள், வேதியர்கள், பண்டாரங்கள், கனபாடிகள், புரோகிதர்கள் என யாரும் கருவரைக்குள் செல்ல அனுமதி இல்லை.

ஆனால் இது போன்ற சட்ட திட்டம் எல்லா கோயில்களிலும் கிடையாது.

உதாரணத்திற்கு இஸ்கான், மேல் மருவத்தூர், சதய் சாயி போன்ற கோயில்களில் இது போன்ற கட்டுபாடு இல்லை.


எதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார்கள்? அனைவரும் அர்ச்சகர் ஆனால் என்ன ஆபத்து நேரப்போகிறது?

சரி இதை உங்களிடம் இருந்தே தொடங்கலாம்.

எத்தனையோ கோயில்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்கள் ஒரு வேலை பூஜை கூட இல்லாமல் உள்ளது.

சரி பிராமணர்கள் தான் பணத்திற்கு பின்பு செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

நீங்கள் ஏன் உங்கள் வேலைகளை விட்டுவிட்டு அந்த கோயில்களில் ஐயராக மாதம் 2000 சம்பளத்துடம் பணி செய்ய கூடாது. அடுத்து நீங்கள் உங்கள் அரசு பதிவேட்டில் பிராமணன் என்று எழுதி கொண்டு இட ஒதுக்கீடு சலுகை பெற மாட்டேன் என்று எழுது கொடுக்க வேண்டும்.

அடுத்து ஏதேனும் ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு ஐந்து வருடம் படிக்க வேண்டும்

இதற்கு சம்மந்தம் என்றால் உடனே எனக்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உடனே ஏதேனும் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுகிறேன்.

( நித்யானந்தா ஆஸ்ரம் மாதிரி எல்லாம் எல்லா ஆஸ்ரமும் இருக்காது :) )நம் மக்களிடையே வாழ்ந்து, மக்களைக் காத்து செத்தவர்களை சிறுதெய்வங்கள் எனவும், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்களை பெருதெய்வங்கள் எனவும் ஏன் பகுத்து வைத்திருக்கிறார்கள்?

அது என்ன காமெடி? தெய்வங்களில் சிறு தெய்வம் என்ன குறு தெய்வம் என்ன? நீங்கள் எதை வைத்து இதை அளவு சொல்கிறீர்கள்? ஒரு வேலை கோயில் இருக்கும் பணத்தை வைத்தா?

அப்படி பார்த்தால் கைலாயம் தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த ஒன்றாக கருதப்படுகிற்து. அங்கு எல்லாம் ஒன்றுமே இல்லையே?

ராமர் மூதாதையர் இல்லை, மீனாட்சி மூதாதையர் இல்லை. ராகவேந்திரர் மூதாதையர் இல்லை. கண்ணன் மூதாதையர் இல்லை. ஆனால் மதுரை வீரன் மட்டும் எப்படி மூதாதையர் ஆக முடியும்.புராணங்கள், இதிகாசங்கள் என்று பார்த்தால் மதுரை வீரன் கதை கூட புராணம் தான். ஏன் உங்களிடம் மதுரை வீரன் பிறப்பிற்கு பிறப்பு சான்றிதழ் இருக்கிறதா என்ன?

இதை பற்றி ஜெய்மோகன் எழுதிய விசயத்தை படிக்கவும்..

http://www.jeyamohan.in/?p=21656

உங்களுக்கு தெளிவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

உங்கள் பதிவில் ந்கைசுவை அதிகம் உள்ளது.

யந்திரம் said...

மதமெல்லாம் அப்படி தான். இத பாருங்க.


இன்றையக் கொடூரம்

astroadhi said...

Anbirkuriya Gomathi Avaragaluku....
Andha kovil sirpangal samargalai kurikavillai endru solgindrergal but Thevarathil 8000 samanargalai kazu etriyathaga thirugana samndhar thiruvalavai pathigathilum,Sekizar paeriya puranathilum,Ottakoothar Thakayaga paraniyulum padi irukindrar....Itharkum mel evidence vendum endral madurai kovil chithirai thiruvizavil 5m nal kazuvetru urchavam endru nadakum....Ungal Thevaram thiruvasagathile itharku eralamana sandugal Ullathu.....Thedi parungal Neraya kidaikum

முருகன் said...

கோமதி அவர்களே... கர்ப்பக்கிரஹத்துக்குள் நுழைய பயிற்சி வேண்டும், ஒழுக்கம் வேண்டும் என்கிறீர்களே..... காஞ்சிபுரத்தில் அண்ணன் தேவநாதன் கிட்ட இருக்குற ஒழுக்கமா வேண்டும்? அவர் என்ன உங்க 5 வருஷ பயிற்சியில ஒழுக்க சீலராயிட்டாரா? வேலை வெட்டி பார்க்காம, அடுத்தவர்களை ஒதுக்கி வைத்தே அவர்களை மட்டப்படுத்தி தங்களை உயர்வாக்கிக்கொள்ளும் இனமே பிராமண இனம். அடுத்தவர்களை ஒதுக்கி வைக்கவே, பயமுறுத்தி வைக்கவே கருவறைக்குள் மற்றவர்கள் நுழையக்கூடாது என்ற விதி. ஏன் 5 வருஷ பயிற்சி இல்லாமல் உள்ள நுழைஞ்சால் என்ன சாமி, கண்ணை புடுங்கிறுமா இல்ல கொன்னு போட்டறுமா ? அண்ணன் தேவநாதன் கிருபையினால் உள்ளே நுழைந்த பெண்கள் இன்னும் நன்றாகத்தானே இருக்கிறார்கள். ஆக, கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைய கடவுள் கிருபை தேவை இல்லை. பூசாரி தயவு போதும்....

கோமதி செட்டி said...

முருகன் நீங்கள் கிறித்துவரா? ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால் கோயிலில் யார் பூஜை செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் எழுதியுள்ளீர்கள். அதனால் தான் எனக்கு இந்த கேள்வி எழுகிறது.

தங்களுடைய பதில் நகைசுவையாக உள்ளது. ஏன் என்றால் தேவநாதன் என்ற ஒரு பொறுக்கியை வைத்து ஒட்டு மொத்த பிராமணர்களை கணக்கில் எடுத்து கொள்வதும். ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா வைத்து தலித் சமுதாயத்தினரை எடை போடுவதும் ஒன்று. அடுத்து உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில்
பெரும்பாலானவை பண்டாரங்களால் பூஜை செய்யப்படுகின்றன. அதுவும் தவிர அரசாங்க கணக்கீட்டின் படி எஸ் ஸி என்று சொல்லப்படும் பட்டியல் இனத்தவர்களுக்கு கோயில்கள் பல ஆயிரம் உண்டு. அந்த கோயில்களிலும் கோயிலின் வழக்கப்படி பிராமணர்களோ அல்லது பண்டாரங்களோ அல்லது அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடுமபத்தை சேர்த்தன் மக்களோ பூஜை செய்து வருகிறார்கள்.

அதுவும் தவிர எல்லா பிராமணர்களும் எல்லா கோயிலுக்கும் பூஜை செய்ய முடியாது. அதில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்த குருக்கள் சமூகத்தை சேர்த்தவர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். நான் சொலவதற்கான ஆதாரங்க்கள் தமிழ் நாடு இந்து சமய அறநிலை துறையிடன் உள்ளது. நேரிலோ அல்லது தகவல் உரிமை சட்டத்தின் கீழோ இந்த தகவலை தாங்கள் பெற்று கொள்ளலாம்.

உங்களுக்கு ஒரு தேவநாதன் தான் தெரியும்.. அவனை விட மோசமான பல பொறுக்கிகள் கோயிலில் திராவிட அரசியல் செல்வாக்கிள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது இப்பொழுது மட்டும் அல்ல எக்காலத்திலும் சில கெட்டவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

அடுத்து தற்பொழுது உள்ள கோயில்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட சாதிகளுக்கு சொந்தமானது. அந்த கோயிலில் யார் பூஜை செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது அந்த ஜாதி தலைவர்கள். இதில் தலையிட எவருக்கு உரிமை கிடையாது. அந்த ஜாதி மக்கள் தனிப்பட்ட உரிமை.

தமிழகத்தில் பிராமணர்களுக்கு சொந்தமான கோயில் என்று பார்த்தால் 5% கூட இருக்காது. 60% அதிகமான கோயில்கள் வெள்ளாலர் சமூகத்திற்கு சொந்தமானாது. ஆக கோயிலை பற்றி எதுவும் தெரியாமல் இப்படி எழுதுவது வீண்.


அடுத்து கருவரைக்குள் பிறர் போக கூடாது என்று கடவுள் சொல்லவில்லை, ஆகம தர்மம் சொல்கிறது. அந்த ஆகம தர்மத்தை அடிப்படையாக கட்டப்பட்ட கோயில்களில் மட்டுமே இது பொருந்தும். ஆகம் அதர்மத்திற்கு உட்படாத காசி, மதுரா போன்ற கோயில்களில் அனைவருக்கும் அனுமதி உண்டு. அடுத்து பூசாரிக்கும், பண்டாரத்திற்கும், குருக்களுக்கும், ஐயங்கார்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அனைவரும் பிராமணர்கள் கிடையாது.

Gayathiri S said...

vannakam. neangal solvathil oru sila unmai karuthugal irunthalum. mulumaiyaga ettrukolla mudiyathu. pengalin kastangaliyum ,avargalin sarithaigalaium eduthu sona neangal pengalin sathanaigalai eduthu sola maranthuvitergala . samanargalum, pramanrgalum illaynil panpadugalum, kalacharamum pirantirukathu. meendum parpom

Related Posts Plugin for WordPress, Blogger...