Saturday, May 5, 2012

ஈழமும் தமிழக மக்களும்!- ஒரு அரசியல் ஆய்வு.

தமிழகத்தில் ஈழ உரிமைப் போராட்டம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும் இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் ஈழம் குறித்த உணர்வுகளை வரலாற்று சம்பவங்களை வைத்து அலசுவதே இந்தக் கட்டுரை! சூழ்நிலைக்கேற்ப மாறும் மக்களின் நிலைப்பாடுகளையும், அதற்கேற்ப அவ்வப்போது மாறி வந்திருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளையும் சில வரலாற்று நிகழ்ச்சிகளால் நினைவூட்டுகிறேன்.

30-3-1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்த போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை கலைஞர் சட்டசபையிலே படித்துக்காட்டி, இந்திய ராணுவத்தின் மீது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால் தான் வரவேற்கச் செல்லவில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்றும் பதிலளித்தார். இந்த சம்வத்தையும், பத்மனாபா கொலையையும் காரணம் காட்டி ஜெயலலிதா மத்திய அமைச்சரவைக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஈழ ஆதரவாளர்களாக இருந்த தமிழக மக்களின் மனநிலை அப்படியே மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாறியதை நாம் கவனிக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்வித்த கோரசம்பவங்களையும், பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தமிழக மக்கள் மறந்துவிட்டார்கள்! தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின் அதிதீவிர ஈழ ஆதரவு கட்சியாக இருந்த திமுக தன் புலி ஆதரவை வெளிப்படையாக காட்டாமல் மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியது.

1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும், 1991 தேர்தலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்த மக்களின் நிலைப்பாட்டில் பெரிய மாறுபாடு இல்லாத நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. இதனால் ராஜீவின் பால் இரக்கம் கொண்டிருந்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக மீண்டும் தன் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த ஜெயலலிதா 1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை து£க்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.

பின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் பேசினார்.

  இதன்பின் தமிழ்நாட்டில் கிடப்பில் கிடந்த தமிழுணர்வு, ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்ட போது இப்போது பேரரிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குக்கு இருக்கும் எதிர்ப்பில் ஒரு துளி கூட அப்போது இல்லை, இப்போது அவர்களைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் எந்த அரசியல்வாதியும் அப்போது எதிர்க்கவில்லை, 2009ல் ஈழப்போரில் நடந்த படுகொலைகள் வெளித்தெரிய ஆரம்பிக்கவும் மீண்டும் எழுந்தது! அதன்பின் நடந்தது சமீபகாலமாக செய்திகளை பின்தொடர்பவர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு விஷயத்தை மேலுள்ள வரலாற்றை வைத்து நாம் கவனிக்க வேண்டும்! தமிழ் மக்கள் எப்போதுமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தின் காரணமாக இப்போது தமிழகத்தில் முளைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் புனைவு.

தியாகி முத்துக்குமாரின் மரணத்தின் போது எழுந்த ஒரு எழுச்சி அலையை அப்போதைய ஆட்சியாளர்கள் அடக்கியதால் தான் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் எதும் எழவில்லை என்போர் உண்டு. ஆனால் உலக வரலாற்றில் இதுவரை நடந்த எந்த புரட்சியையாவது ஆட்சியாளர்கள் எதிர்க்காமலோ, அடக்காமலோ இருந்தார்கள் என வரலாறு உண்டா? ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான்! க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே ஆட்சியில் இருக்கிறார், மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை! ஆட்சியாளர்களின் தொழில் அடக்குவது! புரட்சியாளர்களின் தொழில் அத்துமீறுவது! இதுதானே இதுவரைக்கும் உலகில் புரட்சி என்பதின் நியதி? இதை மறந்து, மறுத்து "ஆட்சியாளர்கள் அடக்கினார்கள் அதனால் எங்களால் புரட்சி செய்ய முடியவில்லை! நாங்கள் அடங்கிவிட்டோம்!" என சீமான், நெடுமாறன் போன்ற அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் அப்போதைய ஆட்சியாளர்களை குறை சொல்வது சரியா?

2009ல் திமுக அரசு காப்பாற்றும் என அமைதி காத்ததும், அதன்பின் அரசியல் காரணங்களுக்காக திடீரென ஈழ ஆதரவாளராய் மாறிய 'ஜெ' காப்பாற்றுவார் என அவரை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்த்ததும், அமைதி காத்ததும் தமிழக மக்களின் அறியாமை தவிற வேறென்ன? கலைஞரையும், ஜெவையும் ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்! "ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவேன்" என ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் சூளுரைப்பதை நம்பி அவருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்போரை, ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்ல?

இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற போது ராஜாஜியை நம்பியா போராடினார்கள் போராளிகள்? தாங்களே களத்தில் இறங்கினார்கள் மக்கள். நண்டு சிண்டெல்லாம் ரோட்டில் இறங்கியது. அரசை ஆட்டம் காண வைத்தது. மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை? இரண்டு காரணங்கள் தான்! ஒன்று இன்று தமிழனுக்கு அன்றுப்போல் தமிழுணர்வில்லை. அதை ஊட்டவேண்டும்! உணர்வின்றி வாழும் பிணங்களை எழுப்பவேண்டும். மற்றொன்று நேர்மையான, உண்மையான தலைவன் இல்லை. ஈழவிஷயத்தை அரசியலுக்காக கையிலெடுக்கும் நடிகர்களே தலைவர்களாய் இருக்கிறார்கள். முன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்! மற்றதெல்லாம் தானாய் நடக்கும்.

3 comments:

ராஜ நடராஜன் said...

நல்ல ஆய்வான கட்டுரையாக இருந்தாலும் நீங்கள் பொருள் படக்கூறும் புரட்சியாளன் அத்துமீறு சொல்லிக்கொண்டு அதிகாரத்தின் பக்கம் நின்ற நிகழ்வு முரணானது.ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க மட்டுமே முடியும்.அதிகாரத்தையும்,அடக்குமுறையையும் மீறி செயல்படுவது வன்முறைகளை தோற்றுவிக்கும்.

ராஜபக்சே ஏமாற்றி விட்டதாக ஓய்ந்த தருணத்தில் கலைஞர் 3 வருடங்கள் கழித்து வாய் திறக்கிறார்.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா பாடியதும் கூட ஜெயலலிதாவால் விமர்சிக்கும் போது எலி வலைக்குள் ஒளிவது மாதிரியே கலைஞர் செயல்பட்டார்.ஜெயலலிதாவும் தனது நலன் சார்ந்த (மத்திய அரசு சிம்மாசன கனவு உட்பட)அரசியலையே நிகழ்த்துகிறார்.

தனது அரசியல் சார்ந்த தமிழ் உணர்வு கலைஞர் கருணாநிதிக்கு இருந்த போதிலும தி.மு.க ஆட்சி காலத்தின் அவரது செயல்பாடுகள் குறித்த அவருக்கு எதிரான விமர்சனமும் இல்லாமல் இல்லை.

தமிழ் உணர்வு குறைவதற்கான கால சூழல்கள் தற்போது நிலவினாலும்,முள்ளி வாய்க்கால் துயரெமெல்லாம் கசியாமல் அடைகாக்கப்பட்டதும்,கால தாமதமாக தவறுகளை தமிழர்கள் உணர்கிறதென்பதே உண்மை.உணர்ந்தும் இணைந்து செயல்படும் தன்மை ஒருவரிடமும் இல்லை.

கலைஞர் கருணாநிதியின் தமிழீழ புதுக்குரலை ஆதரிக்க சிலர் தயங்குவதற்கான காரணமும் கூட 3 மணி நேர உண்ணாவிரதம் போல் ஏதாவது செய்கிறாரோ என்ற சந்தேகத்தையும் கருணாநிதி உருவாக்குகிறார்.அதற்கான ஒரு உதாரணமாக தோழமைக்கட்சியில் இருக்கும் திருமாவளவனைக்கூட டெசோவுக்கு அழைக்காதது.நாளை கலைஞருக்குப் பின் வலுவாக டெசோவை இயக்கி செல்வதற்கும் ஆட்கள் இல்லை என்பதை அவரோடு இணைந்து கொண்ட தலைகளே சாட்சி.

முதலில் மத்திய அரசு பரிந்துரை செய்யும் 13ம் உடன்படிக்கை மறு அமுல்படுத்தலா அல்லது ராஜபக்சே சொல்லும் மறப்போம்!ஒற்றைக்குடியரசில் நிற்பதா அல்லது கனவு நிலைக்கு தள்ளி விடப்பட்ட நிலையில் நிற்கும் தமிழீழமா என்பதை தமிழர்கள் முடிவு செய்வதற்கு ஐ.நா வின் வாக்கெடுப்பிற்கான சூழலை உருவாக்குவது மட்டுமே தீர்வுக்கான வழி.

PRINCENRSAMA said...

//முன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்! மற்றதெல்லாம் தானாய் நடக்கும்.//
:)

பெரியார்தளம் said...

முன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்! மற்றதெல்லாம் தானாய் நடக்கும்.//

Related Posts Plugin for WordPress, Blogger...