Tuesday, May 29, 2012

Fuck the people!

                                            


எல்லா விலையும் எப்பயும் எக்கச்சக்கமா ஏறிட்டேதான் இருக்கு! எல்லாருக்குமே வழக்கமா வரும் மின்கட்டணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமா மின்கட்டணம் வந்திருக்கு. முன்னாடிலாம் ஏர்சல், ஏர்டல் மாதிரி ஃபோன் கம்பனிகள் பில்லு அதிகமா போட்டு வீட்டுக்கு அனுப்புவாய்ங்க. நம்ம போய் என்னனு கேட்டா "அது... இது"னு புரியாத மாதிரி ஆயிரம் காரணம் சொல்லுவான். மக்கள் நலனுக்காக இயங்கவேண்டிய அரசு துறைகள்லயே இப்ப இதான் நடக்குது!

பெட்ரோல் ஏழு ரூபாய் அதிகமாயிருக்கு. அதுமட்டுமில்லாம பெட்ரோலும் கிடைக்கல. அப்பக்கூட நாய் மாதிரி வேகாத வெயில்ல அலைஞ்சு, ஒருத்தன் சட்டைய ஒருத்தன் புடிச்சு மக்களுக்குள்ள தான் அடிச்சுக்குறாய்ங்களேயொழிய அரசாங்கத்துக்கு எதிரா போராடுனதா தெரில! இப்படி அங்க இங்கனு இல்லாம எல்லா பக்கமும் நம்மளை '*****' பண்ணுது அரசாங்கம்! மத்த எந்த நாட்டுல இந்த மாதிரி நடந்தாலும் மக்கள் போராட்டம், புரட்சினு இறங்கிறாங்க. ஆனா பிச்சை எடுத்தா கூட நான் ஐ.பி.எல் மேட்ச்சை மிஸ் பண்ண மாட்டேன் என்ற கொள்கையுடைய நம்ம நாட்டில் மக்கள் ஒன்னு பொறுமையா இருக்காங்க, இல்லேனா அதிகமா சம்பாரிக்க வழி தேடுறாங்க, இல்லேனா திருட்டுவேலை செஞ்சு விலைவாசி உயர்வை சமாளிக்கிறாங்க. இது தொடர்ந்து நடந்துட்டே இருக்குறதுனால வாங்குன காசை கரக்டா திருப்பி கொடுக்காம ஏமாத்துறது, ஃப்ராடு வழிகள்ல சம்பாரிக்கிறது,  சக மனிதனுக்கு சின்ன உதவிகள் கூட பண்ணாம எனக்கென்னனு போறது இதெல்லாம் அதிகமா ஆயிட்டே தான் இருக்கும்! நேர்மையா இருக்க கொஞ்ச பேர் கூட நேர்மையை சமரசம் பண்ணிக்க ஆரம்பிச்சிருவாங்க. லஞ்சம் வாங்காம, பொய் சொல்லாம, ஏமாத்தாம வாழவே முடியாதுன்ற நிலைமை வந்துரும்! ஒரு கட்டத்துல நம்ம எல்லாருமே திருட்டு பசங்க ஆயிருவோம். இதெல்லாம் இப்பயே வேகமா நடந்துட்டே தான் இருக்கு! என்ன செஞ்சா தடுக்கலாம், இல்ல என்ன பண்ணா இதெல்லாம் சரியாகும்னு யோசிச்சா தல தான் வலிக்குது. மிகக் கடுமையான ஆற்றாமையிலும், கையாலாகாத்தனத்துலயும் தான் இதை எழுதிட்டிருக்கேன்!  எனக்கு கவிஞர் பிரமிளின் 'சாசனம்' என்ற கவிதை ஒன்றுதான் நினைவுக்கு வந்தது,

"Government
By the People
of the People
For the People என்ற
ஜனநாயக சுலோகம்
பிறந்தது ஆபிரஹாம்
லிங்கனிடம் அங்கே.

அருமையான கருத்து
இருந்தாலும்
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன்தோன்றி
மூத்தகுடி எங்களுக்கு
ஏற்றபடி அதில்
அரிய ஒரு
சிறிய திருத்தம்
Government
By the People
of the People
Fuck the People."இந்திய அரசாங்கத்துக்காகவே மிக அழகாக எழுதப்பட்ட கவிதை. இதைவிட இன்றைய நிலையை எந்த வார்த்தையும் எடுத்துக்காண்பிக்காது! வேறு ஒன்றும் செய்வதற்கில்லை! புலம்புவதையும், பொறுத்துக்கொள்வதையும், ஏமாற்றப் பழகுவதையும் தவிர்த்து!

-டான் அசோக்

 


Monday, May 28, 2012

கடவுள் இருவகைப்படும்!

மனிதன் சமூக-விலங்காக வாழத்தொடங்கிய காலந்தொட்டே கடவுள் என்ற கருத்தியலின் மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் கடவுள் உருவாக்கப்பட்ட அல்லது தோன்றிய அதே நொடியில் தான் கடவுள் மறுப்பு கொள்கையும் தோன்றியிருக்க வேண்டும். அதேபோல் கடவுள் வழிபாடு என்பதற்கான வழிமுறையாக மதங்கள் உருவாக்கப்பட்டது அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பின்புதான்.

பொதுவாகவே கடவுள் இருப்பு-மறுப்பின் மீதான விவாதங்களில் கடவுளை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாத காரணத்தால் விவாதத்தின் முடிவில், "நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு." என்றோ, "அறிவியலால் பதில்சொல்லமுடியாத சக்திதான் கடவுள்" என்றோ கூறிவிட்டு கடவுள்-ஏற்புடையோர் விடைபெறுவது வழக்கம். இந்த இடத்தில் கடவுள் என்ற கருத்தியலை இரண்டு வகைகளாக நாம் பிரிக்கலாம். கடவுள் என்ற இனம்புரியாத மேலேயிருக்கும் எதோ ஒரு சக்தி, அல்லது இயேசு, அல்லா, கிருஷ்ணர் போன்ற வரலாறு (மதக் கதைகள்) உடைய என நம்பப்படும் மதரீதியான கடவுள்கள். இதைச் செய்யும் போது தானாகவே கடவுள் நம்பிக்கையுள்ளோரும் இரண்டு வகைகளாக பிரிவர்!

அதனால் இயல்பாகவே உலகின் மிகப்பெரிய, பழமையான கேள்வியாக கருதப்படும் "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வியைவிடவும் முக்கியமான கேள்வி, "இருவகைக் கடவுள்களில் உண்மையான கடவுள் யார்?" என்பது. அதற்கான விடை ஒருவேளை மதரீதியான கடவுள் தான் உண்மையான கடவுள் என்பதாக இருந்துவிட்டால் அதிலிருந்து முளைக்கும் மற்றொரு கேள்வி, "எந்த மதத்தின் கடவுள் உண்மையான கடவுள்?" என்பதாக இருக்கும்!! ஆனால் நாம் வழக்கமாக கடவுள் விஷயத்தில் இவ்வளவு விரிவாக செல்வதில்லை! மேலோட்டமாக பேசிச்செல்வதோடு சரி!

மேலேயுள்ள கேள்விகளுக்கான விடைகளை கடவுள் நம்பிக்கையுள்ளோர் அலச ஆரம்பித்தார்களேயானால், சண்டையும் சச்சரவுகளும் கொலைகளும் பெருகுமேயொழிய விடை கிடைக்காது! முதலில் மதம் சார்ந்த கடவுள்களுக்கு வருகிறேன். மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே இணையும் ஒரு புள்ளி "கடவுள் இருக்கிறார்" என்பது. அதேநேரம் எந்தக் கடவுள் உண்மை? எனும் கேள்வி எழும்போது ஒரு மதம் இன்னொரு மதத்தை மறுக்கவே செய்யும். இன்னும் ஒருபடிமேலே போய் இஸ்லாமும், கிறித்தவவும் தவறான கடவுளை (false god) வணங்குபவர்களுக்கு மேலுலகத்தில் தண்டனை உள்ளதாகவும் பறைசாற்றுகின்றது!

ஒரு பேச்சுக்காக கடவுள் இருக்கிறார் எனவும், உலகில் இந்து-இஸ்லாம்-கிறித்தவம் ஆகிய மதங்கள் மட்டுமே இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அதன்படி ஒருவேளை இந்த உலகை அல்லா படைத்திருந்தால் கிருஷ்ணரும், ஏசுவும் கட்டுக்கதைகள். ஏசு (அல்லது அவரது தந்தை) படைத்திருந்தால் அல்லாவும், கிருஷ்ணரும் கட்டுக்கதைகள். கிருஷ்ணர் படைத்திருந்தால் ஏசுவும், அல்லாவும் கட்டுக்கதைகள். ஆகமொத்தம் உலகில் உள்ள முக்கிய மதங்களான மூன்றில் ஏதோ இரண்டு பொய்! ஏதோ இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் முட்டாள்த்தனமாக இல்லாத ஒன்றை இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

இயல்பாகவே நீங்கள் உங்கள் மதம் சார்ந்த கடவுளை வணங்கும்போது பிற மதங்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக எதிர்ப்பதாகவும், மறுப்பதாகவும் தான் பொருள். மதக்கலவரங்களின் போது இந்த மறைமுகமான எதிர்ப்பு வெளிப்படையாக நடக்கிறது. அதனால் இயல்பாகவே ஒவ்வொரு மத-நம்பிக்கையுடையவருமே மதத்துவேஷத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. (Every individual religious person has the potential to perfom a religion oriented crime, either verball or physically). இல்லை நான் மதங்களை மதிப்பவன், எல்லா மதங்களும் எனக்கு சம்மதம் என சொல்வீர்களேயானால் உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்கிறேன், 'மதநல்லிணக்கம்' என்ற ஒரு வார்த்தையை உங்களின் கடவுள் கேட்டால் உங்கள் மேல் கடுங்கோபம் கொள்வாரேயொழிய வேறு கடவுளை வணங்குபவர்களோடு நீங்கள் நல்கிய 'நல்லிணக்கத்திற்காக' பாராட்ட மாட்டார்! மதநல்லிணக்கம் என்பது இல்லாத, போலியான ஒரு வார்த்தையேயொழிய நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது. மேலும் எல்லா மதங்களும் சம்மதம் என்ற கருத்தில் உங்களுக்கு ஏற்பிருந்தாலும் உங்கள் கடவுளுக்கு கண்டிப்பாக இருக்காது. அதனால் நிச்சயமாக மதநல்லிணக்கம் என்பது உங்கள் கடவுளுக்கு பிடிக்காத, ஏற்பில்லாத பாதை என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்!

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ஒரு தீவிர மதப்பற்றுள்ள கிறித்தவர் என வைத்துக்கொள்வோம். திடீரென ஒருநாள் மரணமடையும் நீங்கள், உங்கள் கடவுளான 'இயேசுவை'ப் பார்க்கும் ஆவலோடு வானுலகம் செல்கிறீர்கள்! அங்கு சென்று பார்த்தால் மிகப்பெரிய அதிர்ச்சி! இந்துக்கடவுளான எமதர்மன் அமர்ந்திருக்கிறான்! அவன் சொர்க்கம்-நரகம் என பிரித்தனுப்ப, இறந்தவர்களை நேர்முகத்தேர்வு செய்துகொண்டிருக்கும் போது நீங்கள், "என் பெயர் ஜான் மோசஸ். நான் ஒரு கிறித்தவன்" எனச் சொல்கிறீர்கள். எமன் என்ன செய்வான்? உங்கள் மேல் கடுங்கோபம் கொண்டு நரகத்திற்கு தானே அனுப்புவான்! (இந்த மாதிரி தர்மசங்கடமான கற்பனையை தவிர்க்க வேண்டுமானால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி மேலோகம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் படுஅபத்தமாக இருக்கிறது!) அதேநேரம் நீங்கள் நாத்திகராய் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இறந்து வானுலகம் செல்கிறீர்கள். அங்கே பார்த்தால் ஏசு இருக்கிறார்! உங்களை நேர்முகத்தேர்வு செய்கிறார். அப்போது, "ஏசப்பா உன்னை இன்றுதான் கண்டுகொண்டேன். நான் எந்த மதமும் கிடையாது என்னை உன் பாதங்களின் ஏற்றுக்கொள்" என கதறியழுது காலில் விழுந்தீர்களேயானால் ஏசு உங்களை சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது! இதை ஏன் சொல்கிறேன் என்றால், இருவேறு கடவுள்களுக்குள் எது உண்மையான கடவுள் என முடிவுசெய்யும் பொருட்டு மதக்கலவரங்கள் நடந்திருக்கிறதேயொழிய, ''கடவுள் இல்லை'' என சொன்னவர்களுக்கும் "கடவுள் உண்டு" என சொன்னவர்ளுக்கும் கலவரம் நடந்ததாய் வரலாறு இல்லை! ஆக ஒருவேளை கடவுள் என்பவர் உண்மையில் இருந்தாலுமே கூட "கடவுள் இல்லை" எனச் சொல்வதே சாவுக்குப் பிறகும் நன்மை செய்வதாய் இருக்கிறது! மேலும் அதுதான் கடவுளுக்குப் பிடித்தமாகவும் இருக்கிறது! இப்படியொரு வித்தியாசமான, முரணான ஒரு முடிவிற்குதான் நம்மை இந்த மதங்களும் அவைகளின் கோட்பாடுகளும் இட்டுச் செல்கிறது!

அடுத்து, "கடவுள் என்பவர் நமக்கு மேல் இருக்கும் புரியாத சக்தி" என்று சமாளிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட வாக்கியத்தை அடிக்கடி உபயோகிப்பவர்களின் சித்தாந்தத்தைப் பற்றி..........

-தொடரும்! 

Tuesday, May 15, 2012

தமிழ் குடியரசு நாடு!

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்! தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி  பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏறவில்லை. காங்கிரஸ் என்னும், இந்தியநாட்டின் சுதந்திரத்துக்கு ஒட்டுமொத்த காப்புரிமை வாங்கிவைத்திருந்த மக்கள் செல்வாக்கில் மூழ்கித்திளைத்த மிகப்பெரும் கட்சியை விழவைக்க திமுகவும், திமுக கொள்கையை ஏற்றுக்கொண்ட பொதுமக்களும் இழந்தது ஏராளம், இழந்த உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்! அப்படி உயிரைக்கொடுத்து போராடி ஓங்கி அடித்த அடிதான் இன்றுவரை காங்கிரஸை தமிழகத்தில் எழமுடியாமல் வைத்திருக்கிறது. ஒரு கட்சியை ஒழிக்கவே இப்படியென்றால் இந்தியா என்ற மிகப்பெரும் நாட்டில் இருந்து ஒரு பகுதியை பிரிக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதிருக்கும்? எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கும்? ஆனால் இன்று தமிழ்தேசியம், தமிழ்தேசியம் என கூக்குரல் இட்டு நரம்பு புடைக்க கத்துபவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஒரு புல்லைக் கூட பிடிங்கிப் போடவில்லை!

மேலும் தற்சமயம் தமிழ்தேசியக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கும் பெரும்பான்மைக் கூட்டத்தினர் ஆதிக்கசாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், உருது பேசுகிறவனை விரட்டுவோம், தெலுகு பேசும் அருந்ததியினரை விரட்டுவோம் என்ற அவர்களின் பகிரங்கமான நாஜித்தனமான அறிவிப்புகளும் தமிழ்தேசியம் என்ற கொள்கையின் மீதே ஒரு கறையை படிவித்திருக்கிறது! இவர்களின் இத்தகைய செயல்கள் இந்திய தேசியமே பரவாயில்லை என்ற ஒரு மனநிலையைதான் தமிழ்ப்பொதுமக்களிடம் உண்டாக்குமேயொழிய தமிழ்தேசிய போராட்டத்துக்கு உதவக்கூடிய எந்த ஒரு ஆக்கபூர்வமான மனநிலையையும் உருவாக்காது, உருவாக்கவில்லை!

ஆனால் இந்த குழப்பங்களையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் மக்கள், ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். தனிதமிழ்நாடு கோரிக்கை என்பது பிரிவினைக்கொள்கை அல்ல! இருப்பதை முன்பு இருந்தது போலவே மாற்றி அமைப்பது. இந்தியா என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 'ஒரே' நாடு கிடையாது. வெள்ளைக்காரர்கள் தங்கள் தனித்தனி காலனிகளை (colony) நிர்வாக வசதிக்காக ஒரே பெரிய காலனியாக ஆக்கினார்கள், அந்த பெரிய காலனிதான் இந்தியா! உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் தேசிய இனம் மட்டுமே பிரதான குடிமக்களாக வாழும்போது, தங்களைத் தாங்களே ஆளும் போது, இந்தியாவில் மட்டும் ஏராளமான தேசிய இனங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வசிக்கும், வசிக்கமுயற்சிக்கும் ரகசியம் இதுதான்! தமிழ்நாடு என்ற ஆங்கிலேயனின் காலனி, இந்தியா என்ற கட்டியமைக்கப்பட்ட ஒரு நாட்டின் (மாநிலமாக) காலனியாக இப்போது இருக்கிறது. அதனால் 'பிரிவினை' என்பது தமிழ்தேசியத்தை வர்ணிக்கும் சரியான வார்த்தை அல்ல. உரிமை என்பதே சரி!

ஒரு அமெரிக்கனால் ஈராக்கியனுக்கு பிரச்சினை வரும், ஒரு ஆங்கிலேயனால் அரேபியனுக்கு பிரச்சினை வரும், ஆனால் இந்தியாவில் மட்டும் இந்தியனால் இந்தியனுக்கே பிரச்சினை வருகிறதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமோ! என்னதான் "வேற்றுமையில் ஒற்றுமை" என சிறுவயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்டாலும் வளர வளர அது மாயை என்பதை புரிந்துகொள்கிறோமா இல்லையா? க்ரிக்கெட் மேட்சைத்தவிர வேறு எதிலாவது இந்தியர்களாக ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறோமா? அட அதையெல்லாம் விடுங்கள். நான் இந்தியன் என மார்தட்டும் தமிழர்கள் எத்தனை பேருக்கு இந்திய தேசியகீதத்தின் அர்த்தம் தெரியும்?

ஒரு நாய்க்குக்கூட பூனை தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காது எனும்போது மனித இனம் எப்படி வேறு தேசிய இனம் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளும்?  இந்தியாவெங்கும் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அமைதி இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கிளப்பிக்கொண்டும், அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டும், இந்திய ராணுவத்தை எதிர்ப்பதும் நடந்து வருவது இதனால் தான்! இந்திய ராணுவத்தை இந்தியர்களே எதிர்க்கிறார்கள் என்றால் நாம் ஒன்றுக்கொன்று ஒவ்வாத பொருட்களை வலுக்கட்டாயமாக ஒன்றாக வைத்திருக்கிறோம் என பொருள். இந்திய தேசிய கட்டமைப்பின் வேரில் இருக்கும் இந்த ஒவ்வாமைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிசெய்ய முனைவது வேரை விட்டுவிட்டு இலைக்கு தண்ணீர் ஊற்றுவது போலாகும். 

தமிழர்களில் பலருக்கே தனித்தமிழ்நாடு கேலியாகவும், சாத்தியமில்லாததாகவும் தான் தற்சமயம் தெரிகிறது. அவர்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். தற்கால சூழ்நிலை அப்படி! அவர்களின் சந்தேகமும், கேலியும் நியாயம் தான்! அவர்களுக்காகவே இந்தப் பதிவு. தமிழ்நாடு மட்டுமல்ல கிழக்கிந்தியா, காஷ்மீர் என இந்தியா பல இடங்களில் வருங்காலத்தில் உடையத்தான் போகிறது. எத்தனை நாள் தான் ஒரு போலிக்கட்டமைப்பு தாங்கும்? எத்தனைநாள்தான் மணல்வீட்டை கான்க்ரீட் வீடு என ஏமாற்ற முடியும்? ஆனால் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் இந்த ஏமாற்றுவேலையால் பலன் அடைபவர்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்.  ஒரு அட்டைப்பெட்டிக்குள் ஒன்றுக்கொன்று சேராத பொருட்களை என்னதான் இறுக்கமாக அடைத்து, இரும்புக்கயிற்றை வைத்து கட்டினாலும் காலப்போக்கில் அட்டைப்பெட்டி பிரச்சினை தாங்கமால் கிழியத்தான் செய்யும். இயற்கையும், விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் அதேநேரம் ஒரு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியார் இந்தியவிடுதலையை எதிர்த்ததற்கான காரணம், அதிகாரம் வெள்ளைக்காரனிடத்தில் இருந்து இங்கு உயர்பதவிகளில் இருக்கும் உயர்சாதிக்காரர்களிடம் மாறத்தான் போகிறதேயொழிய அது உண்மையான விடுதலையாக இருக்க முடியாது என்ற புரிதல் அவர்க்கு இருந்ததால் தான். அவர் நினைத்தது போலவேதான் நடந்தது என்பதை இன்றும் நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். வரலாறு இப்படி இருக்கும்போது சாதி என்ற ஒன்றை முற்றிலும், வேரோடு அழிக்காமல் ஒரு உண்மையான விடுதலையை நாம் அடைய முடியாது! அப்படி அடைந்தால் அது மீண்டும் அதிகாரமாற்றமாகவே தான் இருக்குமேயொழிய அதன் பேர் விடுதலை அல்ல! அதனால் தான் தனித்தமிழ்நாட்டின் மேல் எதிமறையான தாக்கத்தை உண்டுசெய்யும் தற்கால சாதிய-போலித்தமிழ்தேசியவாதிகளை நாம் மிகக்கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது.
தனித்தமிழ்நாடுக்கான போராட்டம் வெளிப்படையாக, கொள்கைரீதியாக உருவெடுத்து இன்னும் தெருவுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விதை இந்திய அரசாங்கத்தாலேயே ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு காவிரியிலும், ஒவ்வொரு ராணுவ-வன்புணர்விலும், ராணுவத்தால் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவியின் உடல் மீதும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள், ஆதிவாசிகள், பூர்வகுடிகளின் அன்றாட வாழ்க்கையின் மீதும் தூவப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா தேசிய இனங்களும் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை அதிதீவிரமாக முன்னெடுக்கும் போது தமிழ்தேசிய இனத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

கொஞ்சம் பொறுமையாய் இப்போதைக்கு இந்தியனாகவே இருங்கள். இப்போதோ, நெருங்கிவரும் வருங்காலத்திலோ இல்லையென்றாலும் கூட என்றாவது ஒருநாள் நீங்களும் நானும் புதைக்கப்பட்டிருக்கும் இடம் இந்தியமண்ணாக இல்லாமல் தமிழ் குடியரசு நாட்டின் மண்ணாக இருக்கலாம், இருக்கும்!

Monday, May 14, 2012

ஹீராதி ஹீரோ!

நம் வாழ்க்கையில் இதுவரைக்கும் எத்தனை ஹீரோக்களை கடந்து வந்திருக்கிறோம்? அப்பாவில் ஆரம்பித்து பிடித்த நடிகரில் இருந்து எத்தனையோ ஹீரோக்கள் நம் வாழ்க்கையில் வருகிறார்கள், இருக்கிறார்கள். சினிமா ஹீரோக்களைப் பற்றியும், சினிமாவின் அசாதாரண ஹீரோக்களைப் பற்றியும், அன்றாட வாழ்க்கை ஹீரோக்களாகிய உங்களையும் என்னையும் பற்றிய குறிப்புதான் இந்த பதிவு!

பொதுவாக அப்பா, ஆசிரியர் போன்ற நிஜவாழ்க்கை ஹீரோக்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடியும். சமூக சிக்கல்களை சமாளிப்பது, அன்றாட வாழ்க்கை நமக்கு இடும் சவால்களை முறியடித்து வாழ்க்கையில் முன்னேறுவது, இது போல. ஒரு கதை சார்ந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பிரச்சினைகளை சுற்றி கதை நகர்கிறது, அந்த படத்தில் அவர் மையப்புள்ளியாததால் அவரை ஹீரோ என்கிறோம். உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கிறது, அந்த வட்டத்தின் மையப்புள்ளியாய் நீங்கள் இருக்கிறீர்கள். இப்படி ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள் நடக்கும் கதைக்கு ஹீரோ அவரவரே! அதனால் இந்த ஹீரோக்களை விட்டுவிடுவோம். கறுப்பும் அல்லாமல் வெள்ளையும் அல்லாமல் சாம்பல் நிறத்தவர்கள் இவர்கள். நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள்! போர் அடிப்பவர்கள்! நிஜவாழ்க்கையைவிட பிரம்மாண்டமான, மிகவும் நல்ல உள்ளம் படைத்த எல்லாம் வல்ல அசாதாரண ஹீரோக்களின் (சூப்பர் ஹீரோக்கள்) வட்டங்களுக்குள் கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

நான் மூன்றாம் வகுப்பு படித்த காலகட்டங்களில் என்னுடன் இருட்டிலும், நான் பயப்படும் ஏனைய எல்லா இடங்களுக்கும் துணைக்கு முகமுடி அணிந்தபடி ஒருவர் வருவார். பேய், ரவுடிகள், கொலைகாரர்கள் என சகலவிதமான வில்லன்களுக்கும் அவர் சிம்மசொப்பனம். அவருடனே ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் வரும். அவர் பெயர் மாயாவி, அவரின் நாயின் பெயர் டெவில். ஒவ்வொரு முறை அவர் வில்லன்களை குத்தும் போதும் 'கும் கும்' என சத்தத்துடன் அவரது மண்டையோடு முத்திரை வில்லன்களின் முகத்தில் பதியும். ராணி காமிக்ஸ் என்ற மாயாவி என்னும் மிகப்பெரிய சூப்பர் ஹீரோவை உள்ளடக்கிய ஒரு ரூபாய் புத்தகம் எப்போது வரும் எப்போது வரும் என காத்திருந்து அப்பாவிடம் கெஞ்சிக் கதறி ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடியகாலங்கள் அவை! மாயாவிகள் பரம்பரையில் அவர் 21வது மாயாவி. அடுத்த மாயாவியாக நாம் இருக்கமாட்டோமா என்றெல்லாம் தோன்றும் எனக்கு. உடன்படிக்கும் மாணவனுடன் சண்டை வரும்போதெல்லாம் மறக்காமல் அவன் முகத்தில் குத்துவேன்! குத்தும் போதெல்லாம் தவறாமல் உள்ளுக்குள் "கும் கும்" என சத்தம் கேட்கும் எனக்கு. அதில் ஒரு ஆனந்தம்.   எனது சூப்பர் ஹீரோ மாயாவி, வில்லன்களின் சிம்மசொப்பனம், மது-சிகரெட் தொடமாட்டார். நல்லதுக்காக என்றும் குரல் கொடுப்பார்! எல்லாவற்றையும் விட முக்கியமாக மாயாவி எனக்கு சொல்லிக்கொடுத்தது அநீதியைக் கண்டால் பொங்கியெழு! கெட்ட விஷயங்களை எப்போதும் செய்யாதே, உன் தன்மை அது அல்ல என்பதே! இப்படிதான் முதல் முதலாக ஒரு சூப்பர் ஹீரோவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது எனக்கு!
இதற்கு அடுத்ததாக ஆறாம், ஏழாம் வகுப்பில் ஒரு சூப்பர் ஹீரோ என் வாழ்க்கையில் வந்தார்! அவர் பெயர் ரஜினி! என் வகுப்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் அவர்தான் சூப்பர் ஹீரோ! மாயாவியைப் போல் அவர் கதாப்பாத்திரம் அல்ல, நிஜ மனிதர். இவர் செய்யும் சாகசங்கள், இவரின் சண்டைகள் என பலவிஷயங்கள் என்னை பரவசப்படுத்தினாலும் மாயாவி போல இவர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யவில்லை. ஹீரோயினோடு ஆடுவார், முத்தம் கொடுப்பார், சிகெரட் பிடிப்பார், மது அருந்துவார் இதோடு சேர்த்து நல்லவற்றுக்காக போராடுவார்! மாயாவியைப் பிடித்த எனக்கு முழுமனதாக இவரைப் பிடிக்கவில்லை. இதையெல்லாம் விட அவரின் மேல் எனக்கு சிறுவயதில் வெறுப்பு வரக்காரணம் எனக்கும் என் ஐந்தாம் வகுப்பு நண்பன் ஒருவனுக்கும் ரஜினியால் சண்டை வந்தது. ரஜினி படங்களில் வரும் பாடல்களை வேறு யாரோதான் பாடுவார்கள், ரஜினி வாய் மட்டும்தான் அசைப்பார் என நான் சொல்ல, இல்லையில்லை ரஜினிதான் பாடுவார் என அவன் சொல்ல கடைசியில் சண்டை பெரிதாகி ஒரேடியாக பிரிந்தோம்! (பின் 15 வருடங்கள் கழித்து முகநூலில் இப்போது மீண்டும் இணைந்திருக்கிறோம். அவனிடம் ரஜினி பற்றி நான் இப்போதெல்லாம் வாய் திறப்பதில்லை!!)

மாயாவி என்ற கதாப்பாத்திரத்தை சூப்பர் ஹீரோ என சொல்லும் நான், ஏன் ரஜினி என்ற நடிகரை, நிஜ மனிதரை, நம்மைப் போல சாதாரணமானவரை ஏன் சூப்பர்ஹீரோ என சொல்கிறேன்? எது என்னை இப்படி சொல்லவைத்திருக்கிறது? இந்த கேள்விக்கான பதிலில் தான் நம் தமிழ்சினிமாவின் கிறுக்குத்தனம் அல்லது சூட்சமம் அல்லது படுதோல்வி அல்லது மிகப்பெரிய வெற்றி அடங்கி இருக்கிறது!

வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், ஹீமேன், மாயாவி (Phantom) என அடுக்கிக்கொண்டே போகலாம். நம் ஊர் சூப்பர் ஹீரோக்கள் யார்? எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய், சிரஞ்சீவி, ஜூனியர் NTR, தி க்ரேட் பாலய்யா என பட்டியல் நீளும்! வெளிநாட்டினரின் சூப்பர் ஹீரோக்கள் வெறும் கதாப்பாத்திரங்கள். அந்த கதாப்பாத்திரத்தின் தன்மைக்குள் எந்த நடிகர் புகுந்தாலும் (நடித்தாலும்) நம் கண்களுக்கு தெரிவது அந்த கதாப்பாத்திரம் தான். பேட்மேன் கதாப்பாத்திரத்தில் மைக்கேல் கீட்டன் நடித்தாலும், வால் கில்மர் நடித்தாலும், ஜார்ஜ் க்ளூனி நடித்தாலும், க்றிஸ்டியன் பேல் நடித்தாலும் பேட்மேன் பேட்மேனாகத்தான் இருப்பார். பேட்மேனின் ரசிகர்கள் நல்லவற்றின் சின்னமாக (symbol of good) பேட்மேன் என்ற அந்த கற்பனை கதாப்பாத்திரத்தை உருவகப்படுத்திக் கொண்டு பேட்மேனை (hero worship) போற்றுகிறார்கள். அதே சமயம் பேட்மேன் வேடமணிந்த நடிகர்களை வெறும் நடிகர்களாகவும், பேட்மேனின் 'தன்மை' அந்த நடிகர்களுக்கு கிடையாது எனவும் பகுத்தறியும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட பேட்மேன் உயிருடன் தான் இருப்பார். நடிகர்கள் மாறிவிடுவார்கள். இன்னும் ஆயிரம் ஆயிரம் காலம் அவர்களின் குழந்தைகளை வழிநடத்த, inspire செய்ய அந்த கதாப்பாத்திர சூப்பர் ஹீரோக்கள் அவர்களுடனே இருப்பார்கள்.

ஆனால் ரஜினியாக விமலோ, எம்.ஜி.ஆராக தனுஷோ நடிக்க முடியுமா? நம் ஊர் சினிமா ரசிகர்கள் கதாப்பாத்திரத்தன்மைக்கும், அதை ஏற்று நடிக்கும் நடிகர்களின் தன்மைக்கும் வித்தியாசம் உண்டு என புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம், நம் ஊரு சினிமா, கதாப்பாத்திரங்களை ஹீரோக்களாக உருவாக்காமல், நிஜ மனிதர்களை ஹீரோக்களாக உருவாக்கி விட்டுவிடுகிறது! அதனால்தான் தனுஷ் நடிக்கும் ஒரு சினிமாவில் நூறு பேரை அடிக்கும் சண்டைக்காட்சி இருந்தால் ரசிகர்கள், "ரஜினி நடிக்கவேண்டிய படத்துல இவன் ஏண்டா நடிக்கிறான்? இவன் 100பேரை அடிக்கிறான்னா நம்ப முடியுமா மாப்ள?" என புலம்புகிறார்கள்! ஆனால் உண்மை என்ன? தனுஷால் எப்படி நூறு பேரை அடிக்க முடியாதோ அதேபோல் ரஜினியாலும் முடியாது! இன்னும் சொல்லப்போனால் ரஜினி முதியவர். தனுஷ் கண்டிப்பாக ரஜினியை விட பலசாலியாகத்தான் இருப்பார். ஆனாலும் ஏன் இந்த ஒப்பீடு? காரணம் ரஜினியை நம் ரசிகர்கள் நிஜ சூப்பர் ஹீரோவாக உள்மனதில் முடிவுசெய்து கொண்டதுதான்! சினிமாவில் சம்பளத்துக்காக, இயக்குனர் சொன்னதை செய்துபோகும், டூப் போட்டு நடிக்கும் ஒரு நடிகர் எப்படி சூப்பர் ஹீரோ ஆனார்? வெளிநாடுகளில் கதாப்பாத்திர வழிபாடாக மட்டுமே இருக்கும் ரசிகத்தன்மை, இங்கு தனிமனித வழிபாடு ஆகிவிடுகிறது! இதற்கு காரணம் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்.

இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தோமானால் இது எவ்வளவு பெரிய எமாற்றுவேலை என்பது புலப்படும்!! ஒரு நடிகரை ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் பொறுத்திப் பொறுத்தி அந்த நடிகர் தான் அந்த கதாப்பாத்திரம் என மக்களை காலப்போக்கில் நம்பவைத்துவிடுகிறார்கள்! பின் அந்த நடிகர் தன் நிஜவாழ்க்கையிலும் அதேபோல்தான் இருப்பார் என்று நம்பும் மக்கள், அரசியலில் கூட அந்த நடிகருக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள், "தலைவா" என்கிறார்கள், "அரசியலுக்கு வா காத்திருக்கிறோம்" என அழைக்கிறார்கள்! அந்த நடிகர் இறந்துவிட்டாலோ, ஓய்ந்துவிட்டாலோ அடுத்த சூப்பர்ஹீரோவை திரையுலகம் தயார் செய்துவிடுகிறது அல்லது தானே உருவாகிவிடுகிறார்! தலைவராகவும் ஆகிவிடுகிறார்! நான்கு சண்டை படங்களில் நடித்தவுடன், நான்கு படங்களில் ஏழைகளுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்தவுடன் தனக்கு முதல்வராகும் தகுதி வந்துவிட்டதாக நடிகர்கள் எண்ணிக்கொள்வதும் இதனால்தான்!
இப்படி வளரும் நடிகர்கள் ரசிகர்களை இந்த விஷயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். சிந்திக்கவே தெரியாத அடிமைகள் போல் ஆக்கிக்கொள்கிறார்கள்.

இத்தனை வருட தமிழ்சினிமா எத்தனையோ சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் பேட்மேன், மாயாவி போல காலத்தால் அழியாத ஒரே ஒரு கதாப்பாத்திரத்தையாவது உருவாக்கியிருக்கிறதா? நல்லவற்றின் சின்னம் (Symbol of Good) என குழந்தைகள் போற்றும் ஒரு நல்ல சூப்பர் ஹீரோவையாவது உருவாக்கியிருக்கிறதா? எவ்வளவு பெரிய தோல்வி இது?

இன்றுவரை சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும், போற்றும் எனக்கு நம் ஊர் ஏமாற்றுக்கார சூப்பர் ஹீரோக்களின் மேல் அருவெறுப்பாய் இருக்கிறது! கெட்டவைகளை கெட்டவைகளாக காட்ட நல்ல கதாப்பாத்திரங்கள் தேவை! நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்குமான (Good VS Evil) போர் உலகத்தில் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த பக்கத்தில் இணைந்து போரிடவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு அவர்களின் சிறுவயது சூப்பர் ஹீரோக்கள் தான் சொல்லிக்கொடுகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அசாதாரண நல்லவனான சூப்பர் ஹீரோ தேவை! முழுவதுமாக ஒரு குழந்தை நல்லவனாக இதனால் ஆகப்போவதில்லை என்றாலும் வளரும் பருவத்தில் நல்ல தாக்கத்தை இது உண்டுசெய்யும். அந்த கற்பனை கதாப்பாத்திரத்தை நீங்கள் குழந்தைக்கு காட்டிவிட்டால் பின் அந்த குழந்தையின் காட்ஃபாதர் அந்த கதாப்பாத்திரமும் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையும்தான். ஆனால் யாரை சூப்பர் ஹீரோக்களாக நாம் கை-காண்பிக்கிறோம் என்பது மிக அவசியம். என் அப்பா சிறுவயதிலேயே நடிகர்களுக்கும்-கதாப்பாத்திரங்களுக்குமான வேற்றுமையை எனக்கு சொல்லிக்கொடுத்ததால்தான் என்னால் ரஜினி என்ற சூப்பர் ஹீரோ பாடல்களுக்கு வெறுமனே வாய் அசைக்கிறார் என்பதை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருந்தது! அந்த வழிகாட்டுதல் இல்லாததால்தான் என் நண்பன் ரஜினிக்காக என்னுடன் சண்டை போட்டு நிரந்தரமாய் பிரியவும் தயாராயிருந்தான். இந்த அளவுக்கு குழந்தைகளை பாதிக்கும் சூப்பர் ஹீரோக்கள் சரியான, நேர்மையான ஹீரோக்களாய் இருப்பது அவசியம் அல்லவா? 

 ஆனால் நம்மூரில் நல்லவர்களாக நடிக்கும் 'சூப்பர் ஹீரோக்கள்' எப்போதும் மக்களை மூளைச்சலவை செய்து, சுயநலத்துக்காக அதை பயன்படுத்தும்  கெட்டவர்களாகவேதான் உண்மையில் இருக்கிறார்கள். இன்றைய இளையதலைமுறையும் மூளைச்சலவையில் இருந்து தப்பவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையிலாவது சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து ஏமாற்றும் சராசரி மனிதர்களாக இல்லாமல், என்றுமே ஏமாற்றாத கற்பனை கதாப்பாத்திரங்களாக இருக்கட்டும்! (குறிப்பு: அவெஞ்சர்ஸ் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எழுந்த சிந்தனை இது. ஒரு அதிபயங்கர உண்மையான சூப்பர் ஹீரோ ரசிகனாக சொல்கிறேன் ,கண்டிப்பாக அந்தப் படத்தை பார்த்துவிடுங்கள்!)


Monday, May 7, 2012

மீனாட்சியம்மன் கோவில்-மறுமுகம்

மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் 9வது வகுப்பு வரையில் நான் மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனதில்லை. பின் ஒரு கிறுத்தவ வாத்தியார், "மதுரையில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலை பார்க்காமல் இருக்கலாமா? கண்டிப்பாக போ" என்றார். அவருக்காக ஒரு நெருங்கிய நண்பனைக் கூட்டிக்கொண்டு மீனாட்சியம்மனைப் பார்க்கச் சென்றேன். உள்ளே நடக்க நடக்க பிரம்மாண்டம் தலையின் மேல் விரிந்துகொண்டே சென்றது. ஒவ்வொரு சிற்பத்தையும் நான் நின்று பொறுமையாகப் பார்க்க நேரம் பிடித்ததால் நண்பன் ஒரு ஓரத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான். அப்போதுதான் தென்பட்டது அந்த சித்திரவதைச் சிற்பங்கள்! குவென்டின் டாரன்டினோ என்ற ஹாலிவுட் இயக்குனர் கொடூர வன்முறையை எப்படி அழகியலோடு காட்சிப்படுத்துவது என்பதில் தேர்ந்தவர். அவரின் மூதாதையர் எவனோதான் அந்த சிற்பங்களை வடித்திருக்க வேண்டும். சமணத்துறவிகளையும், புத்தத்துறவிகளையும் அந்தகாலத்தில் எப்படியெல்லாம் சித்தரவதைப்படுத்தி, கொடும்வலிக்கு உள்ளாக்கி கொன்றிருக்கிறார்கள் இந்துமதவாதிகள் (சைவர்கள்) என 'அழகாக' எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன அச்சிற்பங்கள்.

மிக உயரமான தடித்த கூரிய ஊசிகளின் மேல் சமணர்களை அப்படியே உட்கார வைத்து ஆசனவாயில் ஊசி ஏற்றி தலைவழியாக ஊசியை வெளியே எடுத்து கொல்வது, சுண்ணாம்பை கொதிக்கவைத்து அதில் உயிருடன் போட்டுக் கொல்வது, இரு கைகளையும் ஒரு இயந்திரத்தில் கோர்த்து அப்படியே உடலை இரண்டாகப் பிய்த்தெடுப்பது போன்ற விதவிதமான கொலை-வகைகளை அழகாக வடித்திருந்தார்கள்! மீனாட்சியம்மன் என்னும் உலகை ஆளும் பரம்பொருள் வீற்றிருக்கும் கோவிலில் தான் இந்த சிற்பங்கள்! முதன்முதலில் எனக்கு மதத்தின் மீதும் கடவுள் என்ற கருத்தியல் உருவாக்கத்தின் மீதும் மிகப்பெரும் வெறுப்பும், அருவெறுப்பும் வந்தது அப்போதுதான். மதத்தின் பெயரலால், கடவுளின் பெயரால் செய்யப்படுவதால் தான் இப்படியான கொடூரங்களைக் கூட கண்டுகொள்ளாமல் போயிருக்கிறார்கள், போகிறார்கள். நியாயப்படுத்த கூட சிலர் தயாராய் இருக்கிறார்கள், குஜராத் கலவரங்களை நியாயப்படுத்தும் கூட்டத்தைப் போல!
இந்த சிற்பங்கள் எங்கோ ஒரு குகையில் காணப்படவில்லை. அன்பே உருவமாக, உலகத்தை ரட்சிக்கும் அருள்மிகு மீனாட்சியம்மனின் 'வீட்டில்' இருப்பதுதான் வியப்பிலும் வியப்பு! மீனாட்சியம்மனே இப்படி இருக்கும்போது சாதாரண மனிதர்களான நம் அம்மாக்கள் நம் வீட்டில் ரத்தக்களறியாக ஒரு திரைப்படம் பார்ப்பதைக் கூட எதிர்க்கிறார்கள்!! என்ன மாதிரியான முரண் பாருங்கள்!!

அடுத்து இலவசமாக அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டும். காசு இருந்தால் 100, 500ரூபாய் என சீட்டுக்கள் வாங்கி சுலபமாக பார்த்துவிடலாம். முதல்நாள் முதல் காட்சியில் காசு அதிகம் கொடுத்து நாம் பார்க்கும் ரஜினி படங்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒரு திரைப்படத்திற்கும் எல்லார்க்கும் பொதுவான கடவுளான அம்மனுக்கும் வித்தியாசம்
இல்லையா? காசு கொடுத்தால் கடவுளை சீக்கிரம் பார்க்கலாம் என்றால் என்ன மாதிரியான கடவுள் இது, என்ன மாதிரியன பக்தி இது? இதைத்தான் இக்கியூ என்ற ஜப்பானிய கவிஞர் 1400லேயே "அர்ச்சகர்கள் கடவுளை பணக்காரர்களுக்கு கூட்டிக்கொடுப்பவர்கள்" என எழுதினார்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் எத்தனையோ பேர் போகிறார்கள், அம்மனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் நம் குலதெய்வங்களான, முதாதையர்களான முனியாண்டி, கருப்பசாமி, மதுரைவீரன் ஆகியவர்களை வணங்குகிறார்கள். அவர்களின் பூசாரிகளாக பிராமணரல்லாதோர் இருக்கிறார்கள்! மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே எத்தனையோ பிற கடவுள்கள் இருக்கும்போது, ஏன் நம் மூதாதையர்களான இந்த கடவுள்களுக்கு கோவிலின் உள்ளே இடமில்லை? நம்மிடம் அஞ்சு பத்து என அர்ச்சனைத் தட்டில் வாங்கிக்கொள்பவர்கள் ஏன் நம் குலதெய்வங்களுக்கு பூசாரிகளாக இருப்பதில்லை? நம் ஆட்கள் ஏன் மீனாட்சியம்மன் இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்குள் போக அனுமதியில்லை? எதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார்கள்? அனைவரும் அர்ச்சகர் ஆனால் என்ன ஆபத்து நேரப்போகிறது? நம் மக்களிடையே வாழ்ந்து, மக்களைக் காத்து செத்தவர்களை சிறுதெய்வங்கள் எனவும், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்களை பெருதெய்வங்கள் எனவும் ஏன் பகுத்து வைத்திருக்கிறார்கள்? சமணர்களையும் மீனாட்சியம்மன் தானே படைத்திருக்கவேண்டும், அவளின் பேராலேயே அவர்களைக் கொன்று, அவள் இருப்பிடத்திலேயே சிலையாகவும் வடித்திருக்கிறார்களே ஏன்? இதுபோல் ஏராளமான கேள்விகள் உண்டு!

நீங்கள் ஆத்திகர்களாக இருங்கள். சாமி கும்பிடுங்கள். மத நம்பிக்கையோடே இருங்கள். ஆனால் அடுத்தமுறை கோவிலுக்கு செல்லும்போது நேராக மூலக்கடவுளை கும்பிட்டுவிட்டு வராமல், சுற்றி இருப்பவற்றை கவனியுங்கள். சிந்தியுங்கள். கோவிலுக்கு செல்லும்போது கடவுளிடம் வேண்டுவதைத்தவிர நீங்கள் எதையுமே சிந்திப்பதில்லையென்றால் நீங்கள் கண்களை மூடியிருக்கிறீர்கள் என அர்த்தம். கண்களைத் திறங்கள். கடவுளைத்தாண்டி, மதத்தைத் தாண்டி கேள்வி கேளுங்கள்! சாமி கும்பிடுவதைவிட கேள்வி கேட்பது மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது! கேள்வி கேளுங்கள்!


Saturday, May 5, 2012

ஈழமும் தமிழக மக்களும்!- ஒரு அரசியல் ஆய்வு.

தமிழகத்தில் ஈழ உரிமைப் போராட்டம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும் இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் ஈழம் குறித்த உணர்வுகளை வரலாற்று சம்பவங்களை வைத்து அலசுவதே இந்தக் கட்டுரை! சூழ்நிலைக்கேற்ப மாறும் மக்களின் நிலைப்பாடுகளையும், அதற்கேற்ப அவ்வப்போது மாறி வந்திருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளையும் சில வரலாற்று நிகழ்ச்சிகளால் நினைவூட்டுகிறேன்.

30-3-1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்த போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை கலைஞர் சட்டசபையிலே படித்துக்காட்டி, இந்திய ராணுவத்தின் மீது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால் தான் வரவேற்கச் செல்லவில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்றும் பதிலளித்தார். இந்த சம்வத்தையும், பத்மனாபா கொலையையும் காரணம் காட்டி ஜெயலலிதா மத்திய அமைச்சரவைக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஈழ ஆதரவாளர்களாக இருந்த தமிழக மக்களின் மனநிலை அப்படியே மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாறியதை நாம் கவனிக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்வித்த கோரசம்பவங்களையும், பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தமிழக மக்கள் மறந்துவிட்டார்கள்! தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின் அதிதீவிர ஈழ ஆதரவு கட்சியாக இருந்த திமுக தன் புலி ஆதரவை வெளிப்படையாக காட்டாமல் மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியது.

1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும், 1991 தேர்தலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்த மக்களின் நிலைப்பாட்டில் பெரிய மாறுபாடு இல்லாத நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. இதனால் ராஜீவின் பால் இரக்கம் கொண்டிருந்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக மீண்டும் தன் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த ஜெயலலிதா 1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை து£க்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.

பின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் பேசினார்.

  இதன்பின் தமிழ்நாட்டில் கிடப்பில் கிடந்த தமிழுணர்வு, ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்ட போது இப்போது பேரரிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குக்கு இருக்கும் எதிர்ப்பில் ஒரு துளி கூட அப்போது இல்லை, இப்போது அவர்களைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் எந்த அரசியல்வாதியும் அப்போது எதிர்க்கவில்லை, 2009ல் ஈழப்போரில் நடந்த படுகொலைகள் வெளித்தெரிய ஆரம்பிக்கவும் மீண்டும் எழுந்தது! அதன்பின் நடந்தது சமீபகாலமாக செய்திகளை பின்தொடர்பவர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு விஷயத்தை மேலுள்ள வரலாற்றை வைத்து நாம் கவனிக்க வேண்டும்! தமிழ் மக்கள் எப்போதுமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தின் காரணமாக இப்போது தமிழகத்தில் முளைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் புனைவு.

தியாகி முத்துக்குமாரின் மரணத்தின் போது எழுந்த ஒரு எழுச்சி அலையை அப்போதைய ஆட்சியாளர்கள் அடக்கியதால் தான் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் எதும் எழவில்லை என்போர் உண்டு. ஆனால் உலக வரலாற்றில் இதுவரை நடந்த எந்த புரட்சியையாவது ஆட்சியாளர்கள் எதிர்க்காமலோ, அடக்காமலோ இருந்தார்கள் என வரலாறு உண்டா? ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான்! க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே ஆட்சியில் இருக்கிறார், மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை! ஆட்சியாளர்களின் தொழில் அடக்குவது! புரட்சியாளர்களின் தொழில் அத்துமீறுவது! இதுதானே இதுவரைக்கும் உலகில் புரட்சி என்பதின் நியதி? இதை மறந்து, மறுத்து "ஆட்சியாளர்கள் அடக்கினார்கள் அதனால் எங்களால் புரட்சி செய்ய முடியவில்லை! நாங்கள் அடங்கிவிட்டோம்!" என சீமான், நெடுமாறன் போன்ற அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் அப்போதைய ஆட்சியாளர்களை குறை சொல்வது சரியா?

2009ல் திமுக அரசு காப்பாற்றும் என அமைதி காத்ததும், அதன்பின் அரசியல் காரணங்களுக்காக திடீரென ஈழ ஆதரவாளராய் மாறிய 'ஜெ' காப்பாற்றுவார் என அவரை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்த்ததும், அமைதி காத்ததும் தமிழக மக்களின் அறியாமை தவிற வேறென்ன? கலைஞரையும், ஜெவையும் ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்! "ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவேன்" என ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் சூளுரைப்பதை நம்பி அவருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்போரை, ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்ல?

இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற போது ராஜாஜியை நம்பியா போராடினார்கள் போராளிகள்? தாங்களே களத்தில் இறங்கினார்கள் மக்கள். நண்டு சிண்டெல்லாம் ரோட்டில் இறங்கியது. அரசை ஆட்டம் காண வைத்தது. மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை? இரண்டு காரணங்கள் தான்! ஒன்று இன்று தமிழனுக்கு அன்றுப்போல் தமிழுணர்வில்லை. அதை ஊட்டவேண்டும்! உணர்வின்றி வாழும் பிணங்களை எழுப்பவேண்டும். மற்றொன்று நேர்மையான, உண்மையான தலைவன் இல்லை. ஈழவிஷயத்தை அரசியலுக்காக கையிலெடுக்கும் நடிகர்களே தலைவர்களாய் இருக்கிறார்கள். முன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்! மற்றதெல்லாம் தானாய் நடக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...