Thursday, April 19, 2012

கர்ண பார்வை!

1964இல் வெளிவந்த ஒரு புராணப் படத்தை தொலைக்காட்சியில் நம்மால் பொறுமையாக முழுதாக பார்க்க முடியுமா? அடிக்கொருமுறை பாடல்கள், வளவள வசனங்கள், மிகைநடிப்பு இதெல்லாம் இந்த தலைமுறைக்கு அலுப்புத்தட்டும். ஆனால் 1964ல் வெளிவந்த கர்ணனை திரையரங்கில் பார்த்தபோது அலுப்புத்தட்டவில்லை, "அய்யோ படம் முடியப் போகுதே" என்ற வருத்தமே தட்டியது!

மகாபாரதத்துக்குள் அதிகமாக செல்லாமல் கர்ணன் என்ற கதாப்பாத்திரத்தைச் சுற்றி மட்டும் கதையை அமைத்துள்ளார் இயக்குனர். படத்தில் மிக முக்கிய அம்சம் நடிப்பு. அதை எப்படி வர்ணித்தாலும் பத்தாது என்பதால் இப்படி வர்ணிக்கலாம், சிவாஜியாக கர்ணன், அசோகனாக துரியோதனன், என்.டி.ராமாராவ் ஆக கண்ணனும் நடித்துள்ளார்கள். மகாபாரத்தப்போர் இறுதிக்காட்சியில் தான் வருகிறது என்றாலும் கண்ணனுக்கும்(என்.டி.ராமாராவ்) கர்ணனுக்குமான(சிவாஜி) நடிப்புப் போர் படம் முழுவதும் நடைபெறுகிறது. கர்ணன் கம்பீரமும், வீரமும்! கண்ணன் விஷமும், விஷமமும்!

மகாபாரதம் எத்தகைய வர்ணாசிரமம் சார்ந்த, பிறப்பால் கட்டமைக்கப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதற்கு கர்ணனின் கதையே மிகப்பெரிய உதாரணம். பிறப்பால் தாழ்ந்தவன் என்பதால் பார் போற்றும் வீரம் இருந்தும், கொடைப்பண்பு இருந்தும் அவனுக்கு சேரவேண்டிய உரிமைகளையும், உயர்ந்த கவுரவங்களையும் கர்ணனுக்கு மறுக்கிறார்கள் உயர்சாதி குருமார்கள். "அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறதே, அப்படி இருந்தும் அவன் பிறப்பை வைத்து அவனை மதிப்பிடுவது நியாயமா? இதுதான் உங்கள் தர்மமா" என கர்ணனுக்காக துரியோதனன் நியாயம் கேட்கும்போது "சட்டங்களையும், தர்மங்களையும் எழுதுவது நாங்கள். அதைக் கேள்வி கேட்க உனக்கு உரிமையில்லை" என்கிறார்கள் குருமார்கள்! இதனால் தேரோட்டியான கர்ணனை அரசனாக்குகிறான் துரியோதனன். அரசன் ஆன பின்னும் பிறப்பை வைத்து கர்ணனை மரியாதைக் குறைவாகவே நடத்துகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பு மிக அழகாக காட்டப்படுகிறது. மகாபாரதம் என்பதற்காக துரியோதனனை கெட்டவனாக காட்டாமல் உள்ளது உள்ளபடியே காட்டியது அருமை. ஒருநாள் கர்ணன் துரியோதனனின் மனைவியின் முத்துமாலையை தாயம் விளையாடும்போது அவள் பாதியில் எழுவதால் "எங்கு ஓடுகிறாய்" என கேட்டபடியே இழுத்துவிடுகிறான். முத்துக்கள் அறுந்து சிதறி ஓடுகின்றன. அங்கு வரும் துரியோதனன் "நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள். நான் சிதறிய முத்துக்களை எடுக்கவா, எடுத்து மாலையில் கோர்க்கவா?" என சிரித்தபடியே கேட்கிறான். நமக்கு புல்லரித்து கண்ணீர் வருகிறது.

ஐவருக்கும் ஒரே மனைவியான பாஞ்சாலியை பணயமாக வைத்து சூதாடி நாட்டை இழந்து, கண்ணனின் தந்திரத்தால் சூழ்ச்சியால் போரில் ஜெயிக்கும் பாண்டவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு எரிச்சல் தான் வருகிறது. ஒரு இடத்தில் கண்ணனே வெறுத்துப்போய் "உங்கள் ஐவரின் முட்டாள்த்தனத்துக்கும் ஈடுகொடுக்க நான் ஒருவன் இருப்பதால் பிழைக்கிறீர்கள்" என்கிறார். துரியோதனனும் கர்ணணும் எபப்டியேனும் போரில் வென்றுவிட மாட்டார்களா என்றே உள்ளம் பதைபதைக்கிறது.

கர்ணன் இதிகாச கதாப்பாத்திரம் என்பதால் சிவாஜியின் மிகைநடிப்பு எந்த இடத்திலும் உறுத்தவில்லை. மாறாக கர்ணனின் மேல் நமக்கு மிகுந்த அன்பையும், இரக்கத்தையும், மரியாதையையுமே ஏற்படுத்துகிறது. தன் பிறப்பை இழிவு செய்து தன்னை விரட்டும் மாமனாரைப் பார்த்து ஒரு காட்சியில் கர்ஜிக்கிறார் சிவாஜி. சிம்மக்குரலோன் என சும்மாவா சொல்கிறார்கள்! கடைசிக்காட்சியில் நல்லவர்கள் என சொல்லப்படுபவர்களின் அடுத்தடுத்த சூழ்ச்சிக்கு இரையாகி அம்பு துளைத்து சாகக்கிடக்கும் கர்ணனைப் பார்க்கும் போது நமக்கு கண்ணீர் முட்டுகிறது. தர்மதேவதை "என் ஒரே பிள்ளையை இழந்துவிட்டேனே!" என அழுது துடிக்கும்போது நமக்கு என்னென்னவோ செய்கிறது. கர்ணன் கதையின் மிக அழுத்தமான பதிவு இந்தப் படம்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையும், பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம தர்மத்தையும் நீரைத் தேக்கி வைத்திருக்கும் அணை போல இறுக்கமாக அடக்கிவைத்திருக்கக் கூடிய கடவுள் புராணம் அது. ஆனால் மகாபாரதத்தையும் சரி, அது உள்ளடக்கியிருக்கும் ஏராளமான பாத்திரங்களின் கிளைக்கதையையும் சரி கடவுள் புராணமாக பார்க்காமல், டொல்கியன் எழுதிய 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' போன்ற (Fictional Fantasy) கற்பனைப் புனைவாகவே பார்க்கிறேன் நான்.

மகாபாரதம் மிகப்பெரிய மந்திர-தந்திர கற்பனைப் புனைவு. அதன் கதாப்பாத்திர தன்மைகளும், அவற்றின் ஆழங்களும் அனுபவித்து ரசிக்க வல்லவை. அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய புனைவை, வரலாறு, கடவுள் புராணம், எனக் கொள்வது ஒரு கதை ரசிகன் என்ற முறையில் வேதனையாக இருக்கிறது. அதைக் கடவுள் புராணமாக பார்க்கும் போது அந்த இதிகாசத்துக்கு இருக்கும் எல்லை அளவுகள் அதை ஒரு கற்பனைக் கதையாக பார்க்கும் போது பிரம்மாண்டமாக விரிவடைகிறது. உதாரணத்திற்கு கண்ணன் என்பவரை கடவுளாக பார்த்தால் எல்லாம்வல்ல அவர் போரில் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க மிகவும் பயங்கரமாக மெனெக்கெடுவது மிகப்பெரிய லாஜிக் சறுக்கல். ஆனால் கண்ணனை மிகப்பெரிய புத்திசாலியான மந்திரவாதி எனக் கருதிக்கொண்டால் கதை இன்னும் அழகாகப் பொருந்தும், எல்லைகள் அதரிக்கும். பீட்டர் ஜாக்சன் போன்ற ஹாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர்களுக்கு கர்ணன் போன்ற கதை கிடைத்தால் எப்பேர்ப்பட்ட படைப்பு வரும் என நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு சினிமா ரசிகனாக என் ஆசையை பீட்டர் ஜாக்சனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்! அவர் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் கர்ணனை கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நன்றி

1 comment:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சொல்லிடிங்களா கண்டிப்பா பாத்துடுவோம்

Related Posts Plugin for WordPress, Blogger...