Tuesday, April 24, 2012

திராவிட மாயை(!?)


ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.
periyar_329 

தமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்: ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)


திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)

1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச் சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.


அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா? 


திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்!


திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்!


மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில் அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.


இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்! இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?


திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.


அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்! இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)


தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல "கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!


சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதி திராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள் 'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா? 

இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள். பெரியாரைத் திட்டுகிறார்கள். அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள். வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து "நீ யார்?" என்கிறார்கள்!
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச்சமுதாயம் படைப்போம்.


திராவிடர் என்பது இனம்! திராவிடம் என்பது அடக்குமுறைக்கெதிரான கொள்கை! திராவிட மொழி என்பது தமிழ்! திராவிடன் என்போன் தமிழன்!

Thursday, April 19, 2012

கர்ண பார்வை!

1964இல் வெளிவந்த ஒரு புராணப் படத்தை தொலைக்காட்சியில் நம்மால் பொறுமையாக முழுதாக பார்க்க முடியுமா? அடிக்கொருமுறை பாடல்கள், வளவள வசனங்கள், மிகைநடிப்பு இதெல்லாம் இந்த தலைமுறைக்கு அலுப்புத்தட்டும். ஆனால் 1964ல் வெளிவந்த கர்ணனை திரையரங்கில் பார்த்தபோது அலுப்புத்தட்டவில்லை, "அய்யோ படம் முடியப் போகுதே" என்ற வருத்தமே தட்டியது!

மகாபாரதத்துக்குள் அதிகமாக செல்லாமல் கர்ணன் என்ற கதாப்பாத்திரத்தைச் சுற்றி மட்டும் கதையை அமைத்துள்ளார் இயக்குனர். படத்தில் மிக முக்கிய அம்சம் நடிப்பு. அதை எப்படி வர்ணித்தாலும் பத்தாது என்பதால் இப்படி வர்ணிக்கலாம், சிவாஜியாக கர்ணன், அசோகனாக துரியோதனன், என்.டி.ராமாராவ் ஆக கண்ணனும் நடித்துள்ளார்கள். மகாபாரத்தப்போர் இறுதிக்காட்சியில் தான் வருகிறது என்றாலும் கண்ணனுக்கும்(என்.டி.ராமாராவ்) கர்ணனுக்குமான(சிவாஜி) நடிப்புப் போர் படம் முழுவதும் நடைபெறுகிறது. கர்ணன் கம்பீரமும், வீரமும்! கண்ணன் விஷமும், விஷமமும்!

மகாபாரதம் எத்தகைய வர்ணாசிரமம் சார்ந்த, பிறப்பால் கட்டமைக்கப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதற்கு கர்ணனின் கதையே மிகப்பெரிய உதாரணம். பிறப்பால் தாழ்ந்தவன் என்பதால் பார் போற்றும் வீரம் இருந்தும், கொடைப்பண்பு இருந்தும் அவனுக்கு சேரவேண்டிய உரிமைகளையும், உயர்ந்த கவுரவங்களையும் கர்ணனுக்கு மறுக்கிறார்கள் உயர்சாதி குருமார்கள். "அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறதே, அப்படி இருந்தும் அவன் பிறப்பை வைத்து அவனை மதிப்பிடுவது நியாயமா? இதுதான் உங்கள் தர்மமா" என கர்ணனுக்காக துரியோதனன் நியாயம் கேட்கும்போது "சட்டங்களையும், தர்மங்களையும் எழுதுவது நாங்கள். அதைக் கேள்வி கேட்க உனக்கு உரிமையில்லை" என்கிறார்கள் குருமார்கள்! இதனால் தேரோட்டியான கர்ணனை அரசனாக்குகிறான் துரியோதனன். அரசன் ஆன பின்னும் பிறப்பை வைத்து கர்ணனை மரியாதைக் குறைவாகவே நடத்துகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பு மிக அழகாக காட்டப்படுகிறது. மகாபாரதம் என்பதற்காக துரியோதனனை கெட்டவனாக காட்டாமல் உள்ளது உள்ளபடியே காட்டியது அருமை. ஒருநாள் கர்ணன் துரியோதனனின் மனைவியின் முத்துமாலையை தாயம் விளையாடும்போது அவள் பாதியில் எழுவதால் "எங்கு ஓடுகிறாய்" என கேட்டபடியே இழுத்துவிடுகிறான். முத்துக்கள் அறுந்து சிதறி ஓடுகின்றன. அங்கு வரும் துரியோதனன் "நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள். நான் சிதறிய முத்துக்களை எடுக்கவா, எடுத்து மாலையில் கோர்க்கவா?" என சிரித்தபடியே கேட்கிறான். நமக்கு புல்லரித்து கண்ணீர் வருகிறது.

ஐவருக்கும் ஒரே மனைவியான பாஞ்சாலியை பணயமாக வைத்து சூதாடி நாட்டை இழந்து, கண்ணனின் தந்திரத்தால் சூழ்ச்சியால் போரில் ஜெயிக்கும் பாண்டவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு எரிச்சல் தான் வருகிறது. ஒரு இடத்தில் கண்ணனே வெறுத்துப்போய் "உங்கள் ஐவரின் முட்டாள்த்தனத்துக்கும் ஈடுகொடுக்க நான் ஒருவன் இருப்பதால் பிழைக்கிறீர்கள்" என்கிறார். துரியோதனனும் கர்ணணும் எபப்டியேனும் போரில் வென்றுவிட மாட்டார்களா என்றே உள்ளம் பதைபதைக்கிறது.

கர்ணன் இதிகாச கதாப்பாத்திரம் என்பதால் சிவாஜியின் மிகைநடிப்பு எந்த இடத்திலும் உறுத்தவில்லை. மாறாக கர்ணனின் மேல் நமக்கு மிகுந்த அன்பையும், இரக்கத்தையும், மரியாதையையுமே ஏற்படுத்துகிறது. தன் பிறப்பை இழிவு செய்து தன்னை விரட்டும் மாமனாரைப் பார்த்து ஒரு காட்சியில் கர்ஜிக்கிறார் சிவாஜி. சிம்மக்குரலோன் என சும்மாவா சொல்கிறார்கள்! கடைசிக்காட்சியில் நல்லவர்கள் என சொல்லப்படுபவர்களின் அடுத்தடுத்த சூழ்ச்சிக்கு இரையாகி அம்பு துளைத்து சாகக்கிடக்கும் கர்ணனைப் பார்க்கும் போது நமக்கு கண்ணீர் முட்டுகிறது. தர்மதேவதை "என் ஒரே பிள்ளையை இழந்துவிட்டேனே!" என அழுது துடிக்கும்போது நமக்கு என்னென்னவோ செய்கிறது. கர்ணன் கதையின் மிக அழுத்தமான பதிவு இந்தப் படம்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையும், பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம தர்மத்தையும் நீரைத் தேக்கி வைத்திருக்கும் அணை போல இறுக்கமாக அடக்கிவைத்திருக்கக் கூடிய கடவுள் புராணம் அது. ஆனால் மகாபாரதத்தையும் சரி, அது உள்ளடக்கியிருக்கும் ஏராளமான பாத்திரங்களின் கிளைக்கதையையும் சரி கடவுள் புராணமாக பார்க்காமல், டொல்கியன் எழுதிய 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' போன்ற (Fictional Fantasy) கற்பனைப் புனைவாகவே பார்க்கிறேன் நான்.

மகாபாரதம் மிகப்பெரிய மந்திர-தந்திர கற்பனைப் புனைவு. அதன் கதாப்பாத்திர தன்மைகளும், அவற்றின் ஆழங்களும் அனுபவித்து ரசிக்க வல்லவை. அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய புனைவை, வரலாறு, கடவுள் புராணம், எனக் கொள்வது ஒரு கதை ரசிகன் என்ற முறையில் வேதனையாக இருக்கிறது. அதைக் கடவுள் புராணமாக பார்க்கும் போது அந்த இதிகாசத்துக்கு இருக்கும் எல்லை அளவுகள் அதை ஒரு கற்பனைக் கதையாக பார்க்கும் போது பிரம்மாண்டமாக விரிவடைகிறது. உதாரணத்திற்கு கண்ணன் என்பவரை கடவுளாக பார்த்தால் எல்லாம்வல்ல அவர் போரில் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க மிகவும் பயங்கரமாக மெனெக்கெடுவது மிகப்பெரிய லாஜிக் சறுக்கல். ஆனால் கண்ணனை மிகப்பெரிய புத்திசாலியான மந்திரவாதி எனக் கருதிக்கொண்டால் கதை இன்னும் அழகாகப் பொருந்தும், எல்லைகள் அதரிக்கும். பீட்டர் ஜாக்சன் போன்ற ஹாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர்களுக்கு கர்ணன் போன்ற கதை கிடைத்தால் எப்பேர்ப்பட்ட படைப்பு வரும் என நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு சினிமா ரசிகனாக என் ஆசையை பீட்டர் ஜாக்சனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்! அவர் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் கர்ணனை கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நன்றி

சமஸ்கிருத புத்தாண்டு வாழ்த்துகள்!

மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்! ஒரு பத்தாண்டுக்கு முன்னாடி மக்களிடையே இருந்த கொஞ்சநஞ்ச அமைதி கூட இப்ப கிடையாது. எங்கடா நிம்மதி கிடைக்கும், எப்படா லீவு கிடைக்கும், எதைடா கொண்டாடலாம்னு அலையிறாங்க! புதுசு புதுசா அட்சய த்ரிதியை மாதிரி பண்டிகைகளை வேற நம்ம தொழிலதிபர்கள் invent பண்ணி மக்கள் பர்சுகளை காலி பண்ணுறாங்க. ஆனா மக்களும் "எப்படியோ நமக்கு ஒரு விழா கிடைச்சா சரி"னு எல்லாத்தையும் கொண்டாடிறாய்ங்க பாவம்! நிலமை இப்படி இருக்கப்ப இத்தன வருசமா கொண்டாடிட்டு வந்த ஒரு பண்டிகைய "அன்னைக்கு பண்டிகையே இல்லடா கொண்டாடாத"னு சொன்ன்னா என்ன ஆகும்? லீவு நாள்ல ஸ்கூல் வச்சா ஸ்கூல் பசங்க எப்டி வருத்தப்படுவாங்களோ நம்ம மக்கள் அப்படி வருத்தப்பட ஆரம்பிச்சுட்டாங்க. சொல்றவனை பேட் வர்ட்ஸ்ல திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! இப்ப நம்ம என்ன செய்யிறது?

இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி எப்படியோ அப்படிதான் இந்துக்களுக்கு சமஸ்கிருதம். இப்ப இந்த ஏப்ரல்13ல பிறக்குற வருடங்களான பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ஆகிய வருடங்கள் சுழற்சி முறையில மீண்டும் மீண்டும் வரும். இப்படி மொத்தம் அறுபது வருடங்கள் இருக்கு. இதுல ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழ் இல்ல. எல்லாமே சம்ஸ்கிருதம்.

சமஸ்கிருதமும், தமிழும் முற்றிலும் வெவ்வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவை. கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத இரு மொழிகள். இப்படியிருக்க, தமிழ் வருடங்கள் எப்படி சமஸ்கிருதத்தில் இருக்க முடியும்? அதாவது இனக்கலப்பே இல்லாத ஒரு கொட்டாம்பட்டி தமிழனோட பாட்டி எப்படி பமீலா ஆண்டர்சன் மாதிரி இருக்க முடியும்? யோசிங்க மக்களே! கலைஞர், பாரதிதாசன் சொன்னதையெல்லாம் விட்ருங்க. நமக்கு மூளை இருக்கு. கையில லாஜிக் இருக்கு. நீங்களே யோசிங்க!

அதனாலதான் சொல்றேன்... இது இந்துக்களின் பண்டிகை. சமஸ்கிருத பண்டிகை. சமஸ்கிருதத்தை தங்கள் தெய்வங்களின் தேவ பாஷையாக (ரஜினி படையப்பால சொல்வாரே, "இது சம்ஸ்க்ருதம். தேவபாஷை. தப்பா உச்சரிச்சா தீட்டு"னு அது மாதிரி) கருதும் இந்துக்களின் புத்தாண்டு. இந்துக்களுக்கு மட்டுமான புத்தாண்டு. சமஸ்கிருத புத்தாண்டு.
அதனால் நாளை இந்துப் புத்தாண்டை கொண்டாட இருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம்நிறைந்த இந்துப்புத்தாண்டு அல்லது சமஸ்கிருத புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தகமும் நானும்!

ஒருவனின் மூளையில் உதித்த கற்பனைகளை எழுதுகிறான், ஒரு உலகம் உருவாகி விடுகிறது. அந்த உலகத்தில் சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், சாகிறார்கள் நம்மைப் போலவே! கடவுள் என்கிற மனிதனின் புனைவு நாவலாசிரியர்களை ஒத்துதானே இருக்கிறது!!

சில படைப்புகளை படிக்கும்போது அந்த கதை மாந்தராகவே மாறிவிட மாட்டோமா எனத் தோன்றும். பலமுறை சில நாவல்கள் படிக்கும்போது மிகவும் மூழ்கிவிடும் சமயங்களில் நான் இந்த நாவலைப் படிக்கிறேனா அல்லது யாரேனும் படிக்கும் நாவலில் நான் ஒரு கதாப்பாத்திரமா என்ற ஐயம் வருவதும் உண்டு. உலகின் அதிபயங்கர வில்லனான ட்ராகுலா நாவல் படிக்கும் போது நாவலை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தால் உள்ளே ட்ராகுலா இருக்குமோ என்ற பயத்தில் கீழே வைக்காமலே படித்துக்கொண்டே இருந்த இரவுகள் எல்லாம் உண்டு. என் முதல் காதலி செம்மையாக 'ஆப்படித்த' போது என்னைக் காப்பாற்றியது இங்கிலாந்து நகைச்சுவை நாவல் எழுத்தாளர் P.G.Wodehouse. அவரது ஊஸ்டர் (wooster) மற்றும் ஜீவ்ஸ் (Jeeves) கதாப்பாத்திரங்கள் மிகவும் பிரபலம். அதில் ஊஸ்டர் சந்திக்காத சிக்கல்களே கிடையாது. அதுவும் காதல் ஊஸ்டருக்கு எட்டாக்கனி! ஜீவ்ஸின் தந்திரத்தால் ஒவ்வொரு முறையும் ஊஸ்டர் பிழைப்பார். இருபது வயதில் காதல் வயப்பட்ட ஒரு ஆணுக்கு காதலி தான் எல்லாமும்! ஆனால் அவள் பிரிந்துசென்ற போது சில இரவுகள் அழுதாலும், பல இரவுகள் சிரித்திருக்கிறேன். அவள் பிரிவை அவள் தொலைபேசியில் எனக்கு அறிவித்துக் கொண்டிருந்தபோது ஊஸ்டரும், ஜீவ்ஸும் என் மூளையில் எட்டிப் பார்த்து 'ஆல் இஸ் வெல்' என்பார்கள்! இப்படி படித்து, சிரித்து தான் முதல் காதல் தோல்வியில் இருந்து தப்பித்தேன்.

வரலாற்று புத்தகங்கள் இதற்கு ஒருபடி மேல். பரிட்சைக்கு முந்தைய இரவுகளில் கதவை மூடிக்கொண்டு விடிய விடிய 'வந்தார்கள் வென்றார்கள்' படித்திருக்கிறேன். கால இயந்திரம் எதுவும் இருக்காதா, பின்னோக்கி செல்ல மாட்டோமா என பலநாள் நினைத்து அவற்றை பற்றி ஆராய்ந்திருக்கிறேன். புத்திசாலித்தனத்துக்கும் முதல் ரேங்க் எடுப்பதற்கும் சம்பந்தமேயில்லை என எனக்கு சொல்லித்தந்தவை புத்தகங்கள். பாடப்புத்தகங்கள் அன்றி மற்ற புத்தகங்களைப் படிக்கவில்லையென்றால் என் வாழ்க்கையின் பல சிக்கல்களில் இருந்து நான் மீண்டிருக்க முடியாது.

புத்தகம் நல்ல நண்பர்கள் என சொல்வார்கள். இப்போது கொஞ்சம் நிதானித்து நின்று திரும்பிப்பார்த்தால் என் மிக நெருங்கிய நண்பர்களை விடவும் புத்தகங்கள் ஒரு அடி எனக்கு நெருங்கி நிற்கின்றன. என்னை பயமுறுத்தியுள்ளன, சிரிக்கவைத்துள்ளன, மறக்கவைத்துள்ளன! எல்லாவற்றுக்கும் மேல் என்னை எழுதவைத்துள்ளன! சிந்திக்கவைத்துள்ளன! பாடபுத்தகங்களைத் தாண்டிய புத்தகங்கள் மிகவும் அவசியம்! உங்களுக்கு வாய்க்கவில்லையென்றால் உங்கள் பிள்ளைகளுக்கு அந்த நண்பர்களை அறிமுகப்படுத்திவிடுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...