Friday, January 27, 2012

சங்கரின் நண்பன் கதையும், விமர்சனமும்!

தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் திடீர் திடீர் என காணாமல் போகிறார்கள். கடத்தப்படும் பேராசிரியர்கள் வாயில் வயர்கள் சொருகிய நிலையில் அந்தந்த கல்லூரிகளின் வாசலிலேயே பிணங்களாக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களின் அருகில் "நண்பன்" என ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. பேராசியர்கள் அனைவரும் பீதி ஆகி கல்லூரிக்கே வர மறுக்கிறார்கள். கல்வித்துறையே ஸ்தம்பிக்கிறது. கல்வித்துறை ஸ்தம்பிப்பதை அழகாக கிராஃபிக்ஸில் காட்டியுள்ளார் சங்கர். இந்திய அரசாங்கத்துக்கும், காவல்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக இந்த கடத்தல்களும், கொலைகளும் இருக்கின்றன. இதை துப்பறிய சிறப்பு அதிகாரி பிரகாஷ்ராஜ் தலைமையிலான ஒரு படையை அமைக்கிறது அரசு. பின்  'நண்பன்' என்ற பெயரில் கொடூர கொலைகளையெல்லாம் செய்யும் கொலையாளி முன்னாள் பொறியியல் மாணவர் 'பாரி வேந்தன்' (விஜய்) தான் என கண்டுபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

நீதிமன்றத்தின் முன் தான் ஆஜர்படுத்தப்படும்போது தனது வாக்குமூலம் ஸ்டார் மூவீஸ் சானலில் விளம்பரம் இன்றி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டால் தான் பேசுவேன் என அடம்பிடிக்கிறார், 'நண்பன்'.  பின்பு அவர் கல்லூரியில் படித்தபோது அவரும் அவரது நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மகிழ்ச்சியாக "லாலிலாலோ லாலிலாலோ" என துள்ளி திரிந்ததை சொல்கிறார். ஆனால் தலைமை ஆசிரியர் விருமாண்டி சந்தனம் (சத்யராஜ்) கொடுத்த படிப்பு pressureஆல் தன் நண்பர்கள் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் அநியாயமாக தற்கொலை செய்துகொண்டதை அழுபடியே நீதிமன்றத்தில் கூறுகிறார். பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் மீது பேராசிரியர்கள் திணிக்கும் 'pressure' தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதையும், அந்த பேராசிரியர்கள் மரண தண்டனைக்குறியவர்கள் எனவும் நீதிமன்றத்தில் வாதிடுகிறார். அவர் கடத்தியிருக்கும் மற்ற பேராசிரியர்களை விடுவிக்கும்படி நீதிபதி கேட்கும் போது, "இந்திய பொறியியல் பாடத்திட்டத்தையே மாற்றினால் தான், தான் கடத்தியுள்ள மீதி பேராசிரியர்களை விடுவிப்பேன்" என்று ஒரு குண்டைப் போடுகிறார் 'நண்பன்'. இதை எல்லாம் நேரடி ஒளிபரப்பாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "நண்பன் வச்சான்ல ஆப்பு", "இனிமே இந்த லெக்சரர்கள் எல்லாம் ஆட முடியாது", "இஞ்சின்யரிங் கண்ணுக்குள்ளையே விரலவுட்டு ஆட்டிட்டானே இந்த நண்பன்", என மக்கள் பேருந்து, ஆட்டோ நிலையம் மற்றும் சலூன்களில் பேசிக்கொள்கிறார்கள். பின் நீதிமன்ற வாசலில் மக்கள் பேருந்துகள், ஹெலிகாப்டரில் எல்லாம் ஸ்டாண்டிங்கில் வந்து 'நண்பன்'னுக்கு ஆதரவாக புரட்சி செய்கிறார்கள். நீதிமன்றம் நண்பனின் கோரிக்கைகளை ஏற்றுகொண்டு, அவருக்கு ரெண்டு மாதம் தண்டனை மட்டும் கொடுத்து விடுவிக்கிறது. படத்தின் நடுவில் ஆறு டூயட்டில் வரும் இலியானா இறுதியாக நண்பனை மணக்கிறார்.

3இடியட்ஸ் படத்தை சங்கர் அப்படியே எடுத்துட்டாரு என அங்கலாய்க்கும் (என்னையும் சேர்த்து) தோழர்களே. நேற்று நண்பன் படத்தை சங்கர் அவர் பாணியில் எடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சு பாத்தேன். அதன் விளைவுதான் மேலுள்ள கதை! நல்லவேளை சொந்தமா யோசிச்சு எடுக்கல என தேற்றிக்கொண்டேன்.

சரி படத்துக்கு வருவோம். படம், 3இடியட்ஸின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி. வசனம், காமிரா ஆங்கிள் என அச்சு அசல் அப்படியே! துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அம்மாவின் மரணத்திற்காக கழிவறையில் அமர்ந்து கதறி அழுதுவிட்டு, பின் பக்கத்தில் இருக்கும் வாளித்தண்ணீரை முகத்தில் அறைந்து, சோகத்தை மறைத்தபடி வெளியில் வருவார் விஜய். அந்த மாதிரியான விஜய்யை இந்த படம் ஒன்றிரண்டு இடங்களில் எட்டிப்பார்க்கச் செய்கிறது. மற்றபடி படம் முழுவதும் அமீர்கானின் நடிப்பையும், உடல்மொழியையும் மிமிக்ரி செய்திருக்கிறார் விஜய். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் விஜய்க்கு தன் நடிப்புத்திறமை மீதான தன் சுய-மதிப்பை குறைத்திருக்கவேண்டும். இந்த 'மிமிக்ரி' வேலை அதன் பாதிப்பாக கூட இருக்கலாம். ஆனால் உண்மையில் விஜய் இன்னும் ஒரு ரெண்டு 'நண்பன்' வகையறா படங்களில் நடித்தால் போதும், தன் பழைய நடிப்பை மீட்டெடுத்து விடுவார். .

ஹாரிஸ் ஜெயராஜ் இசை காதுகளை சாக்கடையில் முக்கிய ரம்பத்தால் அறுக்கிறது. அதே பழைய ரம்பம், அதே பழைய சாக்கடையை உபயோகிப்பதுதான் இன்னும் கொடுமை. இந்தியில் படுவெற்றி பெற்ற 'ஆல் இஸ் வெல்' பாடலை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது.

சத்யராஜ் உதட்டைப்பிதுக்கி பேசுவது முதல், பார்ப்பது வரை 98%
பொம்மன் இரானியை 'மிமிக்' செய்துள்ளார். ஆனால் உறுத்தவில்லை. எல்லாவற்றையும் மீறி பிரகாசிப்பவர் சத்யன் தான். மிக அருமையான குணச்சித்திர நடிகராக வெளிப்பட்டிருக்கிறார். முதல் வரிசையில் அமர்ந்து வாத்தியாருக்கு ஜால்ரா தட்டுவதில் இருந்து, மாணவர்கள் வசை வாங்கும் போது பல்லைக் காட்டுவது வரை செம்மையாக நடித்திருக்கிறார். ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பும் அருமை. இலியானாவுக்கு குரல் கொடுத்த பெண்ணையும், அவரின் அந்த 'accent'ஐ ஏற்றுக்கொண்ட சங்கரையும் நாலு கேள்வி கேவலமாக கேட்கலாம்.

Virus என்று அழைக்கப்படவேண்டும் என்பதற்காக மிகவும் யோசித்து 'விருமாண்டி சந்தனம்' என சத்யராஜுக்கு பெயர் வைத்துள்ளது சுத்த amateurதனம். பஞ்சவன் பாரிவேந்தன் பெயரை ஆளாளுக்கு கிண்டல் அடிக்கிறார்கள். பின் விஜய்யின் இயற்பெயர் "கொசக்கி பசப்புகழ்" என சொல்லப்படுகிறது. வழக்கமான சங்கர் தனங்கள்! திருந்தவே திருந்தாது!

விஜய்யை விஞ்ஞானியாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என சிலர் இணையத்தில் கூறியிருந்ததைப் பார்த்தேன். ஏற்றுக் கொள்ளமுடியவில்லையென்றால் பிரச்சினை விஜய்யிடம் அல்ல, நம்மிடம் தான். ஒரு கதாப்பாத்திரத்தின் தன்மையை அதை ஏற்று நடித்திருக்கும் நடிகரின் நடிப்போடுதான் பொறுத்திப்பார்க்க வேண்டுமேயொழிய, "யார் நடித்திருக்கிறார்? இதற்கு முன் அவர் ஏற்ற கதாப்பாத்திரங்கள் என்ன?" என்றெல்லாம் சிந்தித்து பொறுத்திப்பார்க்க கூடாது. அப்படி தவறாக பொறுத்திப் பார்ப்பதன் இன்னொரு முகம் தான் கதாநாயக வழிபாடும், விசிலடிச்சான் குஞ்சுகளின் உருவாக்கமும்.

இயக்கம் சங்கர் என்று போட்டுக்கொண்டதற்காக ஒரு டூயட்டை இரண்டு டூயட்டாக மாற்றி தன் முத்திரையை பதித்துள்ளார் சங்கர்.
சிவாஜி, அந்நியன் என அதே செட். அதே போன்ற பாடல்கள். ரயிலுக்கு பெயிண்ட் என அரைத்தமாவை அரைத்திருக்கிறார். பாவமாக இருக்கிறது!

நண்பன் படம் கண்டிப்பார்க்க அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று!
அடடா.. இந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக விஜய்யை கலாய்க்காமல் ஒரு விமர்சனம் எழுத வேண்டிவந்துவிட்டதே என்ற சோகம் உங்களைப் போல் எனக்கும் உள்ளது! ஆனால் அதற்கான வேலைகளை ஏ.ஆர்.முருகதாஸ் தன் துப்பாக்கி படத்தில் செய்துகொண்டிருப்பார் என நாம் திடமாக நம்பலாம்!
Related Posts Plugin for WordPress, Blogger...