Friday, December 21, 2012

டாஸ்மாக்! டாஸ்மாக்!


டாஸ்மாக்குகளின் வருகைக்கு முன்பு, அதாவது மக்களுக்கு சாராயம் ஊற்றிக்கொடுக்கும் அதிமுக்கிய பொறுப்பு தனியாரிடம் இருந்தவரை 'ஒயின் ஷாப்' என்பது பொதுமக்களால் ஒதுக்கப்பட்ட 'பலான' இடம். ஒயின் ஷாப்புக்கு அருகில் ஒதுங்கி நிற்கவோ, ஒயின்ஷாப் அருகில் இருக்கிறது என முகவரிக்கு வழி சொல்லவோ வெகுஜனமக்களுக்கு கூசும், மிகவும் தயங்குவார்கள். பொதுமக்களுக்குள்ளேயே, 'குடிப்பவர்கள்' என்ற தனிச்சமுதாயமே அப்போது இருந்தது. அதாவது முன்பெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவனை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஏனெனில் பத்தில் ஒருவனுக்கு குடிப்பழக்கம் இருக்கும். ஒயின்ஷாப் கூட எங்காவது ஒதுக்குப்புறமாகவே அமைந்திருக்கும், 'சரக்கு' வாங்குபவர்கள் கூட யாரும் தங்களைப் பார்த்துவிடக் கூடாதே எனத் தயங்கித் தயங்கியே வாங்கச் செல்வார்கள். இதெல்லாம் எப்போதோ கி.மு.வில் நிலவிய கலாச்சாரம் அல்ல, ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்த நிலை!

பின் ஜெயலலிதாவால் கண்டுபிடிக்கப்பட்டு, திமுகவால் தமிழகத்தின் இண்டு இடுக்கெல்லாம் பரப்பப்பட்ட டாஸ்மாக், குடிப்பழக்கத்தை வடை, பஜ்ஜி சாப்பிடும் பழக்கம் போல மாற்றி வைத்திருக்கிறது. எல்லா வீட்டிற்குமே முகவரி சொல்வதற்கான குறியீடு பெரும்பாலும் வீட்டருகில் இருக்கும் டாஸ்மாக்குகள் தான்! குடிக்காதவன் என எவனையாவது கண்டால் செவ்வாய் கிரக உயிரினத்தைப் போல ஆச்சரியமாகப் பார்க்கிறோம்! உயிருக்குத் தேவையான மருந்து வாங்க மூன்று தெரு தள்ளிப்போக வேண்டியிருக்கும் இடங்களில் கூட கையெட்டும் தொலைவில் டாஸ்மாக் இருக்கிறது. அரசு இயந்திரம் படு வேகமாக செயல்படும் ஒரு இலாகா, 'டாஸ்மாக் திறப்பு இலாகா'!!
கொஞ்சம் நிதானித்து கவனித்தோமானால் தமிழகத்தில் சில வருடங்களாக தனிமனித ஒழுக்கம் என்பது கெட்டுச் சீரழிந்திருப்பதை காணலாம்! தொழிலில் பொய் சொல்வது, வாங்கிய கடனை தராமல் இழுத்தடிப்பது, ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என சமூகவிரோதச் செயல்கள் எல்லாமே பன்மடங்கு பெருகியிருக்கிறது. மாணவர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை மாலை ஆனால் டாஸ்மாக் செல்ல என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். குடிக்கு அடிமையானபின் எப்படியேனும் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்யத் துடிக்கிறார்கள், எதையும் செய்கிறார்கள். ஆறு மணிக்கு மேல் எல்லா ஊரிலும் எல்லோருமே குடித்துக் கொண்டிருக்கிறார்கள்! பொய் சொல்லியோ, ஏமாற்றியோ, கொலை செய்தோ கூட குடித்தே ஆக வேண்டிய நிலைக்கு பல கோடிப் பேரை கெடுத்து வைத்திருக்கிறது குடிப்பழக்கம்! முன்பெல்லாம் எப்போதாவது கேள்விப்பட்ட 'லிவர் செரோசிஸ்' என்ற ஈரலில் ஏற்படும் நோய் இப்போது பரவலாக பலருக்கு இருக்கிறது. அதீத குடிப்பழக்கத்தால் பல உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது லிவர் சிரோசிஸ். (அதீத குடிப்பழக்கம் மட்டுமல்லாது தரமற்ற சாராயம் குடிப்பதாலும், போலி சாராயம் குடிப்பதாலும் இந்நோய் தாக்கும். தமிழக டாஸ்மாக்குகளில் விற்கப்படுவதில் 90%க்கும் மேல் போலி என்றே விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.)

சரி! இதற்கு விடிவு முழுமையான மதுவிலக்குதான் என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் அது இன்னும் பேராபத்தில் தான் முடியும். குடிமக்களை குடி குடி என ஊக்குவித்து குடிவெறியர்களாக்கிய பின் திடீரென ஊற்றிக்கொடுப்பதை நிறுத்தினால் என்ன ஆகும்? தமிழகத்தின் ஜனத்தொகை ஒரே வாரத்தில் பலமடங்கு குறையும்!
படிப்படியாக குடிப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான பரப்புரைகளைச் செய்து, ஆலோசனைகளையும், மருந்து உதவிகளையும் வழங்கி, அதே சமயம் திக்கெங்கும் இருக்கும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் மூடி ஒரு இருபது வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டுவரவேண்டும்! இப்படிச் செய்வது மட்டுமே குடிப்பழக்கத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்குமேயொழிய மற்றதெல்லாமே பேராபத்தில் தான் முடியும்.

ஆனால் தமிழக அரசு எனும் கப்பல் வெற்றிகரமாகப் பயணிப்பது டாஸ்மாக் வருமானம் எனும் கடலின் மீதுதான் எனும்போது அதைக் கெடுக்க அரசு முன்வருமா என்றால் வரவே வராது என்பதுதான் வேதனையான உண்மை!

இன்று பெற்ற குழந்தைக்கு சாராயத்தை ஊற்றிக்கொடுத்து வன்புணர்வு செய்த தகப்பனைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தி வந்திருக்கிறது! அனைவருமே பொங்கி கோவம் கொள்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஒரு அரசை குறிப்பிடவேண்டுமானால் 'மக்கள் நல அரசு'(people welfare government) என்றே குறிப்பிடுவார்கள். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, பெற்றோரைப் போல செயல்படவேண்டிய அரசு என்றே அதற்கு அர்த்தம்! ஆனால் மக்களுக்கு வீதிக்கு வீதி கடை திறந்து ஊற்றிக்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் போக்கை நாம் என்ன  செய்யப் போகிறோம்?

Tuesday, November 20, 2012

நாயும் நாமும்!

நாய்கள் மிகவும் கேவலமான ஜென்மங்கள்! அவைகளுக்கு வெட்கம்-மானமே கிடையாது. முதலாளி மூன்றுவேளை சோற்றை இரண்டுவேளை ஆக்கினாலும், இரண்டுவேளை சோற்றை ஒருவேளை ஆக்கினாலும்... அட இரண்டு நாட்களுக்குப் பட்டினியே போட்டாலும் கூட அவைகளுக்கு கோபம் வருவதில்லை! முதலாளியை எதிர்த்துக் குரைப்பதெல்லாம் சுயமரியாதையற்ற அவைகளுக்கு எட்டாக்கனி! எப்போதும் வாலாட்டியபடியே முதலாளி பணிக்கும் எந்தவிதமான கேவலமான வாழ்க்கைக்கும் தங்களைப் பழக்கிக் கொள்ளும் சுயமரியாதையற்ற உயிரினங்கள் அவை! பிறந்தால் நாயாக மட்டும் பிறக்கவே கூடாது! என்ன கேவலமான பிறவிகள் அவை!! ஆனால் மனிதன் அப்படியல்ல. மிகவும் சுயமரியாதையுள்ள உயிரினம் அவன். மானமுள்ளவன்!! ரோசக்காரன்!! உலக உயிரினங்களிலேயே மிகவும் புத்திசாலியாக, உயர்வாக அவனைத்தான் சொல்கிறார்கள். ஆனால் என்ன, தன்னை மாறி மாறி ஆளும் அரசுகளிடம் மட்டும் முதலாளிகளிடம் வளர்ப்புநாய்கள் நடந்துகொள்வதைப்போல நடந்துகொள்வான்! மற்றபடி மனிதன் சுயமரியாதைக்காரன் தான்! பிறந்தால் மனிதனாய்த்தான் பிறக்கவேண்டும். நாயாய் மட்டும் பிறக்கவே கூடாது!

-டான் அசோக்

Tuesday, October 16, 2012

மாற்றான் - எ தாறுமாறு மூவி!

வெளிநாடு போய் சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் காசை செல்வழித்து வெளிநாடு போவது. திரும்பி வரும் போது பர்ஸ் காலியாகி, தாவு தீர்ந்து போக வைக்கும் கொடூரமான வழி இது. மற்றொன்று இயக்குனராகி தயாரிப்பாளர் காசிலேயே சுற்றிப் பார்த்துவிட்டு நோகாமல் நோம்பு கும்பிடுவது! இதில் இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கே.வி.ஆனந்த். சமீபத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இங்கிலாந்து நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததையும் அவர் அங்கு ஊர் சுற்றிய போது எடுத்த காட்சிகளையும் 'தாண்டவம்' என்ற பெயரில் நாமெல்லாம் திரைப்படமாக பார்த்தோம். அந்த புதிய முயற்சியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு க்ரோஷியா, செர்பியா, ரஷ்யா, அல்பேனியா, மாசிடோனியா, அமெரிக்கா, மடகாஸ்கர் போன்ற நாடுகளை எல்லாம் ஒரு ரவுண்டு அடித்து மாற்றான் என்ற திரைப்படமாக நமக்கு வழங்கியிருக்கிறார். 

சூர்யாக்களின் அப்பா ஒரு ஜெனிடிக் இன்ஜினியர் மற்றும் எனர்ஜியான் என்ற மிகப்பெரிய பால் பவுடர் கம்பனியின் முதலாளி. அதில் நடக்கும் ஒரு கலப்படம் இந்தியாவின் அடுத்த தலைமுறையையே அழிக்க வல்லது. அதை கண்டுபிடிக்கும் விமலனை அப்பாவே போட்டுத்தள்ள, பின் விமலனின் பணியை முடித்து, ஏழாம் அறிவில் தைரியத்திற்காக பெற்ற அதே மெடலை பெறுகிறார் அகிலன் சூர்யா.

ஏழாம் அறிவு படத்தையும் அதற்கடுத்து ரஷ்யாவில் எடுக்கப்பட்ட எதாவதொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நல்ல மதியவேளையின் போதுதான் கே.வி.ஆனந்திற்கு இந்த படத்திற்கான ஒன்லைன் தோன்றியிருக்க வேண்டும். அந்த ஒன்லைனை நாற்பது வருடமாக முடியாமல் இருக்கும் தினத்தந்தி கன்னித்தீவு படக்கதையின் திரைக்கதையில் பொறுத்தி படமாக எடுத்திருக்கிறார்!

அகிலன் ஜாலியான சூர்யா, விமலன் வழக்கமான வளவள என பாடம் எடுக்கும் சூர்யா. ஜாலியான சூர்யா எல்லா காட்சிகளிலும் வாயை திறந்து வைத்துக்கொண்டு, விட்டத்தின் நான்கு மூலைகளையும் மாறி மாறி பார்த்து சிரித்தபடியே மொக்கை ஜோக் அடிக்கிறார். காஜல் அகர்வால் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த ஜோக்குகளுக்கு, எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆண்ட்டி கூட சிரிக்கவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை. பத்தாக்குறைக்கு அவ்வப்போது தன் நெஞ்சில் குத்திக்கொண்டோ, தடவிக்கொண்டோ தான் ஜாலியாக இருப்பதை நமக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் அந்தப் பக்கத்தில் இருக்கும் விமலன் வழக்கமான 'பாடம் எடுக்கும்' சூர்யா. தன் வசனங்களை சாப்பாட்டு நேரத்துக்கு பின்பு பாடம் எடுக்கும் பேராசியரைப் போல 'அழகாக' பேசி, தான் ஒரு சீரியஸ் ஆசாமி என்பதை நிரூபிக்கிறார். க்ளப் பாடல்களுக்கு அடிமையான இயக்குனர் கே.வி.ஆனந்த் இதிலும் அதை விட்டுவைக்கவில்லை. வழக்கம்போல குச்சியை மேடையில் சொருகி, அதை சுற்றி சுற்றி ஆடும் கலர் கலர் விளக்கெரியும் க்ளப் பாடல் இதிலும் உண்டு! ஹாரீஸ் ஜெயராஜ், "நீ மட்டும் தான் வச்ச சீனையே வப்பியா, நானும் போட்ட பாட்டையே போடுறேன் பாரு" என்று இயக்குனருடன் போட்டி போட்டு தன் திறமையை காட்டியிருக்கிறார். நாலே நாலு ட்யூனை வைத்துக்கொண்டு இசையமைப்பாளராக வலம்வருவது ஒரு தனித் திறமைதான்!


இதுபோன்ற பல சங்கடங்களுக்கும் சர்வரோக நிவாரணியாக வருகிறார் காஜல் அகர்வால்.
இரண்டு சூர்யாக்களில் யாரைக் காதலிப்பது என்பதில் அடிக்கடி குழம்பி, மாற்றி மாற்றி அவர்களின் கையைப் பிடிக்கும் காஜலைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இவரது பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே ஒரு சூர்யாவை இடைவேளையில் போட்டுத்தள்ள இயக்குனர் முடிவெடுத்திருக்க வேண்டும்!

ஏற்கனவே 'சாருலதா' பார்த்து ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் 'துள்ளியமாக' அறிந்து வைத்திருந்த எனக்கு மாற்றான் பார்க்கும் போது குழப்பவில்லை. ஆனால் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், "ஏம்பா ரெண்டு சூர்யாவும் ஒட்டினே நடக்குறானுக? இன்னாபா படம் எடுத்துகிறான்?!" என இடைவேளை வரை கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தார். இடைவேளைக்குப் பின் ஒரு சூர்யாவை காணவில்லை என்பதிலும் அவருக்கு ஏக வருத்தம்!

ஆரம்பத்தில் அயன், கோ, படங்களின் அதே தடத்தில் பயணித்துவிட்டு பின் இரண்டாம் பாதியில் தறிகெட்டு நிற்கிறது! இடைவேளைக்குப் பின்பான ஒவ்வொரு காட்சியும் ஒரே இடத்தில் பலமணி நேரம் நிற்கும் இந்தப் படத்தில், காட்சி ஓடுகிறது என சொல்வதே பெரிய பாவம்!  ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸில் இருந்து ஒரு காட்சியை உருவி ஒருவழியாக இரண்டாம் பாதியில் சொருகியிருக்கிறார்கள்.  அகிலன் சூர்யா, படத்தின் இரண்டாம் பாதியில் யார் செத்தாலும் பல்லைக் காட்டி சிரித்தபடியே இருப்பது அவருக்கும் எனர்ஜியான் கொடுத்து வளர்த்திருப்பார்களோ என்ற சந்தேகத்தையே வரவழைக்கிறது!! சூர்யா தேடிவரும் நாற்பது வயதுமிக்க ஒரு தடகள வீராங்கனைக்கும் ஒரு க்ளப் பாடல் இருக்கிறது. ஆகமொத்தம் படத்தில் மூன்று லட்சத்தி நாற்பதாயிரம் க்ளப் பாடல்கள் வருகின்றன.

தனது அனைத்து படங்களிலும் குறைந்தபட்சம் மூன்று பாடல்களிலாவது சட்டையைக் கழட்டிவிட்டு கடல் கண்ணி போல கடலில் ஆடும் 'கடல் கண்ணன்' சூர்யாவை, இந்த படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் அப்படி ஆட வைத்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. நீருக்குள் இருந்தபடியே சட்டையைக் கழட்டி, ஆக்ஸ் டியோஸ்பிரே விளம்பரத்தைப் போல் அக்குளை உயர்த்திக் காட்டி போஸ் கொடுப்பதில் டிஸ்கோ சாந்திக்குப் பிறகு சூர்யாதான் என்றாலும் அவரைப் போல இந்த ஃபீல்டில் சூர்யாவால் ஜொலிக்க முடியாது என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

இடைவேளையை ஒட்டி வரும் சண்டைக் காட்சியில் இயக்குனர் மற்றும் சூர்யாவின் உழைப்பு வியக்க வைக்கிறது! அதுவும் நீண்டுகொண்டே போவதால் சலித்துவிடுகிறது. மற்றபடி முதல்பாதியையாவது ஒரு அளவு கண்ணை மூடிக்கொண்டு கடந்துவிடலாம். ஆனால் உக்ரேனியாவில் நீண்டு கொண்டே இருக்கும் இரண்டாம் பாதியைப் பார்ப்பதற்கு சூர்யாக்களின் அப்பா தயாரிக்கும் எனர்ஜியானையே குடித்துவிடலாம்! 


 

Saturday, October 13, 2012

போபால் -ஃபூகிஷிமா- கூடங்குளம்(ஈழமுரசு கட்டுரை)

எப்போதாவது ஒருநாளில் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்திருக்கிறீர்களா? தமிழகத்தில் இப்போது அதுதான் அன்றாட நிலை! எப்போது போகும் எப்போது வரும் என யாருக்குமே தெரியாது! சிறுவியாபாரிகளும், பெருவியாபாரிகளும், வீட்டில் தேங்காய் அரைக்க முடியாமல் அல்லாடும் அம்மணிகளும் மின்சாரம் இன்றி பெரிதும் தவிக்கும் இவ்வேளையில் அவர்கள் காதுகளில் வெகு சாமர்த்தியமாய், "கூடங்குளம் அணு உலை திறந்துட்டா மின்சார பிரச்சினையே இருக்காது! எல்லாம் சரி ஆயிரும்!" என கொளுத்திப்போட்டுக் கொண்டிருக்கிறது அரசு! இணையத்தில் அணு உலைக்கு எதிரான கருத்துடையவர்கள் அதிகமாக தென்பட்டாலும் தமிழக பெரும்பான்மை மக்களுக்கு இப்போது மிகப்பெரிய வில்லன், கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை கிட்டத்தட்ட மூவாயிரம் மெகாவாட். கூடங்குளம் உலைகளின் உற்பத்தித்திறன் இரண்டாயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணு உலைகள் அனைத்திலுமே கணக்கிடப்பட்டுள்ளதில் 40% மட்டுமே உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளம் உலைகளின் மூலம் 50 சதவிகித மின்சாரம் தயாரிக்க முடியும் என கணக்கிட்டால் கூட 1000 மெகாவாட்தான் வரும். இதில் 13சதவிகிதம் கூடங்குளம் அணு உலையை நிர்வகிக்கவே செலவாகிவிடும். மிச்சமுள்ள எண்ணூத்தி சொச்சம் மெகாவாட்டில் கேரளாவுக்கும் மத்திய தொகுப்புக்கும் போக தமிழகத்தின் பங்கு ஐம்பது சதவிகிதம் தான். இதில் மின்கடத்துவதில் ஏற்படும் சேதாரம் போக கிட்டத்தட்ட 400 மெகாவாட் தமிழகத்துக்கு கிடைக்கும். ஆக கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி துவங்கிவிட்டால் தமிழக மின்பற்றாக்குறை பெருமளவில் சரியாகிவிடும் என்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

மாறாக தமிழக சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும்
இருக்கும் குண்டு பல்புகளை மாற்றி (CFL) குழல் பல்புகளாக்கினாலே ஏறத்தாழ 500
மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இந்தியாவின் மின்கடத்தி சேதம் (Transmission Loss) கிட்டத்தட்ட 40 சதவிகிதம். உலகின் சராசரியோ 7 சதவிகிதம் தான். இதை சரி செய்தாலே பல ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால் இதுபோன்ற மாற்றுவழிகளைப் பற்றி சிந்திக்கவே விஞ்ஞானிகளோ, அரசோ தயாராக இல்லை. மாறாக பல ஆயிரம் கோடிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொட்டுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்லாது, தமிழகம் சூரிய ஒளி சக்தி மிதமிஞ்சி இருக்கும் மாநிலம். வெயிலுக்கு குறைவே இல்லாத தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி அரசு அக்கறை காட்டவில்லை. சூரிய ஒளியை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே தமிழகம் உபரிமின்சக்தியுடைய மாநிலம் ஆகிவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என்பது இன்று தொடங்கியதல்ல. நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டது. பிறகு ரஷ்யா உடைந்தபோது கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் 2002ல் வேலைகள் துவங்கி இப்போது செயல்படும் நிலைக்கு வந்திருக்கிறது. வழக்கம்போல் தமிழர்களின் எதிர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசின் துணை அரசாங்கமான மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை!  கூடங்குள போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக தினமலர் போன்ற ஊடகங்கள் சித்தரிப்பதும், தமிழக அரசும் அம்மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தையும், ஜப்பானின் பூகோஷிமா அணு உலை விபத்தையும் உலகம் கண்டிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையிலும், கூடங்குளம் உலையிலும் விபத்துகள்
ஏற்பட்டால் .தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரமும்
கேரளமும் கூட பாதிப்புக்குள்ளாகும். இதுமட்டுமல்லாது கல்பாக்கத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அணு உலையை அமைத்த அணுசக்தி துறையினரிடம் இதுபற்றி எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை. அந்த எரிமலை உயிரோடிருப்பதாகவும் 17ஆம் நூற்றாண்டில் பொங்கியதாகவும் ஆய்வாளர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் எல்லாம் கூடங்குளம் மக்களின் நியாயமான பயத்தின் காரணிகளாக உள்ளன. ஏனெனில் கதிர்வீச்சால் அவர்களின் மரபணுக்களே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாது புற்றுநோயை தொடர்ந்து உண்டாக்கவல்ல அணு உலை தங்கள் வீட்டருகே அமைவதற்காக அவர்கள் பயப்படுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அணுஉலை குறித்த தொழில்நுட்ப பிரச்சினைகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இந்தியாவிலும், ஜப்பானிலும் வெவ்வேறு நேரங்களில் நடந்த இரண்டு பெரிய விபத்து சம்பவங்களையும் அதற்கு அந்நாடுகளின் எதிர்வினையையும் பார்ப்போம்.

சம்பவம் ஒன்று: 1984ல் இந்தியாவின் மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மிதைல் ஐசோ சயனைட் எனும் விஷவாயு கசிந்தது. குளிர்கால இரவான அந்நேரத்தில், காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையோடு தூங்கிக்கொண்டிருந்த சுமார் 15 ஆயிரத்து 274 பேர் இந்த விபத்தினால் தூக்கத்திலேயே மாண்டார்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களோ ஏறத்தாழ 5 லட்சத்து 74 ஆயிரம் பேர். இவர்களின் வம்சாவளியின் குழந்தைகள் இன்றளவும் சிதைந்த முகம், கை, கால்களுடனும், ஊனமுற்றும் பிறக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் 25000ரூபாய் கூட அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி, வழக்கில் இழுத்தடிப்பு, விபத்தின் காரணகர்த்தாக்களை தப்பவிடுதல் என வழக்கமான 'இந்தியத்தனங்களால்' பாதிக்கப்பட்ட அம்மக்கள், கால் நூற்றாண்டு காலமாக, தங்கள் மரபணுக்களை ஊனப்படுத்திய விபத்துக்கு எதிராக போராடித் துடித்து, மடிந்து கொண்டிருக்கிறார்கள். 

சம்பவம் இரண்டு: 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிக்கப்பட்டு, இரும்புக்கோட்டையென விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்பட்ட ஃபூகுஷிமா அணு உலை ஆட்டம் கண்டது. டோக்கியோவில் இருந்து 140கிமீ தொலைவில் இருந்தாலும், விபத்துக்குப் பிறகு டோக்கியோவில் நிலவி வந்த கதிரியக்கம் 20% அதிகரித்திருக்கிறது. எங்கோ மூலையில் இருக்கும் விவசாயிகளின் மூத்திரத்தில் கூட கதிரியக்கம் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் அபாயத்தில் நாடே அதிர, உடனே அணு உலைகள் அத்துணையையும் மூட துரிதமாக முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது ஜப்பான்!

 இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரு நாடுகளிலும் ஏற்பட்ட பெருவிபத்தின்பால், இரண்டு நாடுகளும் கொண்ட அணுகுமுறைகளைத்தான். இந்தியாவில் நிகழ்ந்த விபத்துக்கு மனிதர்களின் அலட்சியமே முழு காரணம் என்றாலும் இந்திய அரசு மனிதர்களையும் தண்டிக்காமல், மக்களுக்கு நிவாரணமும் வழங்காமல் முழு அலட்சியமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது! ஜப்பான் விபத்து இயற்கை அழிவால் ஏற்பட்டது எனினும், அவ்வரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு துரிதமாக செயல்படுகிறது. இந்தியாவில் நிகழ்ந்தது விஷவாயு விபத்து, ஜப்பானிலோ அணு உலை விபத்து. ஆனால் இரண்டுமே பெரும் விபத்துக்களாததால் இந்த ஒப்பீடு அவசியம். ஆக இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அணு உலையை எதிர்ப்பதற்கு பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அரசு தன் மக்களின் உயிருக்கு எந்த அளவிற்கு மதிப்பளிக்கும், எந்த அளவிற்கு நிவாரணம் வழங்கும், எவ்வளவு அக்கறை காட்டும் என்பதும் அன்றாடம் இந்திய ஊழல்கள், இந்திய லஞ்ச-லாவண்யம், இந்திய அலட்சியம், என அனைத்து வகையான இந்தியத்தனங்களுடன் உழலும் ஆறறிவுள்ள ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் தெரியும். உலக அளவில், "என்னிடமும் அணு உலை உள்ளது! நானும் ரவுடிதான்!!" என பீற்றிக்கொள்வதற்காக மட்டுமே இந்திய அரசு அணு உலை அமைக்குமானால், அது இந்திய மக்களின் எதிர்கால வாழ்க்கையை பெரும் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்பதை தேசிய உணர்வுக்காக, தேசிய பெருமிதத்துக்காக அணு உலையை ஆதரிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அணு உலையை மூடுவதால் பல அயிரம் கோடி நட்டமாகும், மேலும் மூடுவதற்கு இன்னும் பல ஆயிரம் கோடி செலவாகும் என்ற கூக்குரல்கள் எழாமல் இல்லை. அவர்களிடம் ஒரு சாதாரண குடிமகனாக நான் கேட்பதெல்லாம் இதுதான், "இந்திய அரசு இதுவரை இந்திய மக்களின் பணத்தை வீணடித்ததே இல்லையா? மக்களின் பணம் மக்களைப் பாதுகாப்பதற்காக வீணாய்ப்போனால் அது மக்களுக்கு பயன்பட்டதாகத்தானே அர்த்தம்!!!!???" 

கர்நாடகாவும் தமிழ்ச்சங்கமும்! இந்தியாவும் தமிழகக் கட்சிகளும்!

மிகவும் முக்கியமான செய்தி அது! வருத்தம் தந்தது! அதிர்ச்சி அளித்தது! ஆனாலும் படித்தவுடன் கொஞ்சமாய் எட்டிப் பார்த்த சிரிப்பையும் அடக்கமுடியவில்லை! "தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது", என்ற கர்நாடக அமைப்புகளின் நிலைப்பாட்டுக்கு, அங்கிருக்கும் தமிழ்ச் சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கும் செய்திதான் அது! ஆதரவு மட்டுமல்லாது கூட்டமும் நடத்தி கோசமும் போட்டிருக்கிறார்கள் என்ற செய்தியே அது!

நிற்க! மேலோட்டமாக பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கர்நாடக வாழ் தமிழர்களின் அச்சம் மட்டுமே தெரியும். ஆனால் கர்நாடகாவுடன், தமிழக விவசாயிகளுக்காக 'திராவிட'க்கட்சி ஒன்று மல்லுக்கு நிற்கும்போது, கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது 'தமிழ்'ச் சங்கங்கள்!!! ஆக தமிழ் என்ற வார்த்தையால் உணர்வு வந்துவிடும், மொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாம் தமிழின் பெருமையை உணர்த்தும் 'திராவிடம்' என்ற வார்த்தையை உபயோகித்தால் உணர்வு மங்கிவிடும் என 'புருடா' விடும் புது உணர்வு 'புரட்டு'க் கூட்டத்தின் தலையில் தட்டவே இந்த செய்தி வந்திருக்கிறது!

இதை எதற்கு சொல்கிறேனென்றால், நாம் இந்தியா என்ற அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கிறோம். இங்கு வாக்குகள் தேவைப்படாத 'இயக்கமாய்' இருந்தால் தான் வெளிப்படையாக கொள்கைகளுக்காக போராட முடியும், கோஷமிட முடியும்! ஆனால் வாக்குகள் சார்ந்த ஆட்சி அதிகாரத்தை நோக்கமாய் கொண்டுவிட்டால் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்குள் மட்டுமல்லாது, இந்திய ஒருமைப்பாடு என்ற மற்றொரு கட்டமைப்புக்குள்ளும் எந்த கட்சியுமே சிக்கிக்கொள்ளும்! இந்திய தேசியத்துக்கு கொள்கையளவில் எதிரான திராவிடக் கட்சிகள் கூட இந்த கட்டமைப்புக்குள் சிக்கித்தான் அவ்வப்போது தடுமாறுகிறார்கள்.

ஏனெனில் ஆட்சிக்கு வந்துவிட்டால் எந்த கட்சி ஆனாலும் அது இந்திய அரசுக்கு உட்பட்ட 'தமிழக அரசு' என்ற நிலைப்பாட்டில் தான் செயல்பட முடியுமேயொழிய தனியொரு அதிகாரம் படைத்த அரசாக அல்ல (அதாவது கர்நாடக அமைப்புகளுக்கு கட்டுப்பட்ட தமிழ்ச்சங்கங்களைப் போல)! என்ன ஒரு சின்ன வித்தியாசமென்றால் இந்திய அரசுக்கு பங்கம் வராத வகையில் ஆட்சியில் உள்ள கட்சி தன் கொள்கைகளை சட்டமாக்க அனுமதிக்கப்படும்! திமுக சுயமரியாதை திருமணம், பெண் சொத்துரிமை சட்டம் போன்ற திராவிட கொள்கைகளை சட்டமாக்கியதைப் போல! அதேவேளையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, இந்திய அளவில் எதிர்ப்பை சம்பாதித்த, திமுக அரசு இயற்றிய சட்டம் என்ன ஆனது, எங்கு போனது என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

தமிழ்தேசியம், தனித்தமிழ்நாடு என நீட்டி முழக்கும் தமிழ்தேசியக் கட்சிகள் நாளை ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான்! ஏனெனில் இன்று திராவிடக் கட்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் இதே கட்டமைப்புதான், இதே சட்டதிட்டங்களோடு தமிழ்தேசிய கட்சிகளையும் வைத்திருக்கப் போகிறது!

ஆக தமிழ்தேசியம் பேசித்திரியும் எந்த தமிழ்தேசியக் கட்சியுமே முழுமையானதொரு ஏமாற்றுவேலையே அன்றி மாற்றுப்புரட்சியோ, மண்ணாங்கட்டியோ அல்ல! அதிகாரம் கைக்கு வந்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழ்சங்கங்கள் போல இந்திய அரசிடம் 'பம்மு'வார்களேயொழிய புரட்சி எல்லாம் பரணில் ஏறிவிடும்! புரட்சியோ, மாற்றமோ பேசும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலேனும் குறைந்தபட்ச அர்த்தமிருக்கிறது, ஆனால் ஓட்டு கட்சிகளுக்கும், புரட்சிக்கும் தூரம் அதிகம்!! அது எந்தக் கட்சியாயென்றாலும் சரி!

Monday, October 1, 2012

மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!


மின்சார நிறுத்தம் என்பது காலம்காலமாக நம் 'கலாச்சாரத்திலேயே' ஊறிய ஒரு விஷயம். "அமெரிக்கால கரண்ட் கட்டே இருக்காதாம் மாப்ள" என எவனோ ஒரு நண்பன் ஒருமுறை என்னிடம் சொன்னபோது, "ஏன் நம்மூர்ல அப்படி இல்ல?" என யோசித்தபடியே முதல்முறையாக நிமிர்ந்து தெருவோரம் இருந்த மின்கம்பத்தைப் பார்த்தேன். பெண்கள் சீப்பில் சிக்கியிருக்கும் முடிக்கற்றைகள் போல வயர்கள் கம்பத்தைச் சுற்றி தொங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மின்கம்பங்களின் நிலையும் இதுதான். இப்படியாகப்பட்ட இந்தியாவில், கரண்ட் என்ற 'சமாச்சாரம்' இருப்பதே நாம் செய்த தவம்தானே என்று நினைத்துக்கொண்டேன்! (ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மின்சாரம் எப்போதாவது தான் போகும். அதுக்கே என் நண்பன் அமெரிக்காவோடு ஒப்பீடு செய்து நொந்துகொண்டான். இப்போது அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பார்த்தால் இந்தக் காலத்திய கரண்ட் பற்றிய அவன் கருத்தை கண்டிப்பாக கேட்க வேண்டும்.) என் நண்பனுக்கு அவதியாக தெரிந்த மின்சார நிறுத்தத்தை நானும் என்னைப் போன்ற சிலரும் ரசித்த காலமும் உண்டு. அதைப்பற்றிதான் இது!

பள்ளி சமயங்களில், வாத்தியார் வெகு தீவிரமாக வகுப்பெடுக்கும் நேரம் திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் "ஓ"வென கத்துவோம்! பின் திருப்பி வரும்போதும் மீண்டும் ஒரு "ஓ" சத்தம் ஏகபோகமாக எழும். அநேகமாக எல்லோருமே இதை செய்திருப்போம்.  எங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மழலையர் பள்ளி மழலைகள், 'அ'னா, 'ஆ'வன்னாவை சரியாக உச்சரிக்கிறார்களோ இல்லையோ, மின்வெட்டின் போது 'ஓ'வை மிக ஆனந்தமாக, சரியாக உச்சரிப்பார்கள். ஆனால் மின்சாரம் போய்-வந்தால், எதனால் இந்த சத்தம் எழுப்புகிறோம் என்பது எங்களுக்கோ, வாத்தியாருக்கோ, யாருக்குமே தெரியாது. அதைப் பற்றி வாத்தியார்களும் கண்டுகொள்வதில்லை. பலநேரம் "எதுக்கு கத்துறோம்?" என யோசித்திருக்கிறேன். கத்துவதைப் பற்றிய சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்தாலும் கத்துவதை மட்டும் ஒருநாளும் நிறுத்தியதில்லை. 12ஆம் வகுப்பு வரையிலும் இது தொடர்ந்தது.

தேர்வுக்காலங்களில் மதியநேரம் வீட்டுக்கு கடும் பசியோடு வரும்போது, 'கோகிலா எங்கே போகிறாள்' தொடரின் தலைப்புப்பாடல் அனைத்து வீடுகளிலும் அலறிக்கொண்டிருக்கும். அம்மாக்கள் அதைப் பார்த்து முடிக்கும்வரை கொடூரப் பசியில் எங்களைக் காக்க வைத்து, அது முடிந்தபின்தான் உணவிடுவார்கள். இதிலிருந்து எப்போதாவது எங்களைக் காத்து, பசிக்கு உடனே உணவு கிடைக்க வைப்பது மின்வெட்டு தான்! அதுமட்டுமல்லாது குழந்தைகளும் மின்வெட்டு நேரத்தில்தான் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடுவார்கள்! இந்த வீட்டில் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும், இந்த வீட்டில் தான் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும் எங்களுக்கு மின்வெட்டுதான் காட்டிக்கொடுக்கும்.

மழை பெய்யும் நேரத்தில், மேகத்தில் இருக்கும் மழை மண்ணில் முட்டும் முன்பே, அதற்காகவே காத்திருந்ததைப் போல மழையை மோப்பம் பிடித்து மின்சாரத்தை நிறுத்திவிடும் மின்வாரியம். மீறி என்றாவது ஒரு நாள் மழையடிக்கும் போது மின்சாரம் இருந்தால் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் கேட்கும், அல்லது குறைந்தபட்சம் எங்காவது ஒரு வயராவது அந்து விழுந்து எவனாவது 'ஷாக்' வாங்கியிருப்பான்! மழையைப் பார்த்தவுடனேயே வீட்டில் "அய்யயோ கரண்ட் ஆஃப் பண்ணிருவானே!" என சலித்துக்கொள்வார்கள். எனக்கோ அதுதான் மகிழ்ச்சியே! அப்போதும் இப்போதும், எப்போதுமே எல்லா வீட்டிலும் முன்னிரவு நேரம் என்பது தொலைக்காட்சிக்காக நேந்துவிடப்பட்ட நேரம். வெளியில் மழை பெய்யும் போது திரைப்படமோ, தொடரோ ஓடிக்கொண்டிருந்தால், மழை அதுபாட்டுக்கு கவனிக்க யாருமே இல்லாத ஆதவற்றக் குழந்தையைப் போல வெளியே அழுதுகொண்டிருக்கும். எனக்கு மழையை அப்படி புறக்கணிப்பதென்பது மிகப்பெரிய பாவச்செயலாகவே படும்(இப்போதும் அப்படித்தான்). ஆக தொலைக்காட்சிக்கு நேந்துவிடப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும், மழையை தத்தெடுக்கச் செய்வது மின்வெட்டுதான். மின்சாரம் இல்லாத நிசப்தமான அந்த சூழ்நிலையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மண்வாசனையை உள்வாங்கியபடி, மழையின் சத்தத்தைக் கேட்பதென்பது வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையின் குரலை கேட்பதைப் போன்ற ஆனந்தத்தைத் தரும்.

அதுமட்டுமல்லாது குடும்பத்தில் எல்லோரது முகமும் சூரியனை நோக்கும் சூரியகாந்திகளைப் போல டிவி திரையை நோக்கியே இருப்பதை மாற்றி, ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கச் செய்வதும் மின்வெட்டுதான்! பாட்டுக்கு பாட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிசினஸ், செஸ் போன்ற போர்ட் விளையாட்டுக்கள், கடந்தகால மகிழ்ச்சியான சம்பவம் எதாவதொன்றை மீள்பகிர்வு செய்வது என மின்சார நிறுத்தத்தால் வரும் இருட்டு, சகல வெளிச்சத்தையும்  வீட்டிற்குள் கொண்டு வரும்.  போதாக்குறைக்கு மழையும், தவளைச்சத்தமும் கூடுதல் ஆனந்தம்!  கடும்மழை பெய்துவிட்டால் இரவு முழுதும் கூட சிலநேரம் மின்சாரம் இருக்காது. வீட்டில் உள்ளவர்கள், "எப்படா கரண்ட் வரும்" என கடுப்புடன் காத்துக்கொண்டிருக்கும் போது, நானோ, "அய்யயோ கரண்ட் வந்துரக்கூடாதே" என மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து, எப்போதோ ஒருமுறை 'வெட்டுப்பட்டுக்' கொண்டிருந்த மின்சாரம், அன்றாடம் 'வெட்டுப்பட' ஆரம்பித்தபின் தான் மின்வெட்டு என்பது எனக்கு எதிர்மறை நிகழ்ச்சியாகத் தெரியத் துவங்கியது! பின் சிலகாலம் கழித்து அன்றாட இரண்டு அல்லது மூன்று மணி நேர மின்வெட்டு நிகழ்வை பழகிக்கொண்டபின் அவ்வளவாக அது பாதிக்கவில்லை. மின்சாரம் தேவைப்படாத செயல்களை அந்த நேரத்தில் ஒதுக்கிக்கொண்டு செயல்பட்டதாலும், குடும்பத்துடன் ஒன்றவும், விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அந்நேரம் பயன்பட்டதாலும் மின்வெட்டு என்பது முற்றிலும் எதிரியாய் மாறாமலே இருந்தது.

ஆனால் அறிவிக்கப்பட்ட மூன்று என்பது அறிவிக்கப்படாத நான்கு, ஆறு, எட்டு, பண்ணிரண்டு என்று வளர்ந்து இன்று பதினான்கில் நிற்கிறது! ஒருகாலத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக எப்போதாவது வந்துபோன மின்வெட்டு, இன்று இன்று கூடவே இருந்துகொண்டு எதிரியாக மாறி நிற்கிறது!

மனது, மின்வெட்டே இல்லாத அமெரிக்கா போல நம் நாடும் ஆகாதா என என் நண்பனைப் போலவே அவ்வப்போது புலம்பினாலும், என் பள்ளிக்காலத்தில் மின்வெட்டே இல்லாதிருந்தால் குடும்பத்துடன் கொஞ்சம் அந்நியப்பட்டிருப்பேனோ, இவ்வளவு புரிந்துணர்வு இருந்திருக்காதோ என்ற பயமும் சேர்ந்தே வருகிறது! ஒருவேளை அமெரிக்காபோல எப்போதுமே மின்சாரம் இருந்திருந்தால், எத்தனை அருமையான தருணங்களை தவறவிட்டிருப்பேன்! இன்வர்ட்டர் புண்ணியத்தால், இந்த தலைமுறை குழந்தைகளுக்கு மெழுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் கதைக்கும் மகிழ்ச்சி வாய்க்கவில்லையென்றாலும், டிவியிடம் இருந்து அந்த நேரத்தில் மட்டும்தான் பிரிந்து குடும்பத்துடன் ஒட்டுகிறார்கள். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் என நாம் பலமணி நேரம் செலவிடும் 'நேரந்திண்ணி'களிடம் இருந்து நம்மைப் பிடிங்கி, நாம் வாழும் வீட்டிற்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கும் வெகு அருகில் கொண்டு நிறுத்துவது மின்வெட்டு சமயங்கள் தான். ஆனால் 12மணி நேரன், 14மணி நேரம் என ஓரேடியாக மின்சாரத்தை நிறுத்தி மின்சாரவெட்டின் மேல் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும் இந்தக் காலம் போய், சீக்கிரமே நம்மை குடும்பத்துடனும், இயற்கையுடன் சிறிது நேரமாவது உறவாட வைக்கும் நட்பான மின்சாரவெட்டின் வருகைக்காக காத்திருப்போம்! அமெரிக்கா போல எப்போதுமே மின்வெட்டு ஏற்படாத நாடாக மாறவேண்டாம், எப்போதாவது மின்வெட்டு ஏற்படும் நாடாக முன்புபோல மாறினாலே போதும்! :-)

Monday, September 10, 2012

'வக்கிரமி'ஸ்ட்டுகளின் கார்ட்டூன்கள்!


வன்முறை வெறியாட்டங்களும், ஆபாசங்களும் தெறிக்கும் வீடியோகேம்கள் குழந்தைகளை வன்முறையாளர்களாக மெள்ள மாற்றுவதால் அவற்றை தடை செய்யவேண்டுமென ஒரு போராட்டம் நடந்தபோது, வீடியோகேம்களுக்கும் வயது வரம்புகளை அறிமுகப்படுத்தினார்கள். மிக்கி மவுஸ்களும், டொனால்டு டக்குகளும் வியாபித்திருந்த வீடியோகேமில் வன்முறையும், ஆபாசமும் புகுந்ததைப் போல, ஒருகாலத்தில் விமர்சிக்கப்படுவோரையும் கூட புன்னகை புரிய வைத்த, நையாண்டி இழையோடிய அரசியல் கார்ட்டூன்களில் இன்று ரத்தமும், சதையும், வக்கிரமும், ஆபாசமும் புகத்துவங்கியுள்ளது!

இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிமா என்ற பத்திரிக்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கையும் மிகக் கேவலமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இணையத்தில் இருக்கும் ஈழ மற்றும் இந்திய உணர்வாளர்களின் கோபத்தையும் கிளப்பி விட்டிருக்கும், 'ஹஸந்தா விஜநாயகே' என்பவர் வரைந்த இந்த கார்ட்டூனுக்கான கண்டனத்தை நாம் தெரிவிக்கும் அதே நேரம், நம் ஊரைச் சேர்ந்த 'ஹஸந்தா விஜயநாயகே'களையும் நாம் சற்று நோக்க வேண்டும்.

இணையத்தில் கார்ட்டூன் வரையும் 'போராளிகள்' ஒருசிலரை நாம் கவனித்து வருகிறோம். ஊடகத்துறையில் பணிபுரியும் அவர்கள், ரத்தத்தைத் தொட்டு கார்ட்டூன் வரைவதில் வல்லவர்கள்! நாயை வரையச் சொன்னால் கூட வாயில் ரத்தம் சொட்டும் ஓநாய் வரையத்தான் வரும் அவர்களுக்கு. பாடம் எடுக்கும் ஆசிரியர்களைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களை ஆபாசமாக கழிவறையில் வரைந்து, கெட்ட வார்த்தைகளில் திட்டி, இன்பம் கண்டு, காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வார்கள் சில மாணவர்கள். அந்த மாணவர்களுக்கு கழிவறை சுவர் எப்படியோ, இந்த கார்டூனிஸ்ட்டுகளுக்கு தங்கள் முகநூல் சுவரும், பத்திரிக்கைத் தாளும் அப்படியே! பிடிக்காத தலைவரை அரை நிர்வாணமாக வரைவது, சாக்கடையில் கிடப்பது போல் வரைவது, கோவணத்துடன் வரைவது, காலை நக்குவதைப் போல வரைவது என சகல வக்கிரங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்த நம்மூர் 'ஹஸந்தா விஜயநாயகே'க்கள் இணையத்தில் ஈழப்போராளிகளாகவும், தமிழுணர்வாளர்களாகவும் வலம் வருவது வேடிக்கையிலும் வேடிக்கை!

2G ஏல முறைகேடு வழக்கு நடந்துகொண்டிருந்த சமயம் அது. இணையமெங்கும்  கனிமொழி MPயையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவையும் தரக்குறைவாக இணைத்து கார்ட்டூன்கள் முழுமூச்சாக பரப்பப்பட்டன. கனிமொழி என்ற பெண்ணைப் பற்றியோ, கருணாநிதி என்னும் கனிமொழியின் தந்தையின் உணர்வுகளைப் பற்றியோ, ராசா என்ற தனிமனிதரின் குடும்பத்துக்குள் இது உருவாக்கவல்ல வேதனைகள் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. மன்மோகனையும், சோனியாவையும் கேவலமாக உருவகப்படுத்தினார்கள். இப்படியாக தங்களுக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளை ஆபாசமாக இணைத்துப் பேசி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொய்யாக முடிந்து, ஆருடம் சொல்லி முழுவீச்சில் வக்கிரங்களை அள்ளித்தெளித்துவிட்டு நிம்மதியாக அவர்களால் உறங்க முடிந்தது! இன்று இலங்கை கார்டூனிஸ்ட் ஹஸ்ந்தா விஜயநாயகேவின் கார்ட்டூனைப் பார்த்து கொதிக்கும் யாருடைய மனமும் அன்று லேசாக சூடேறியதாகக் கூட தெரியவில்லை!

ஒரு புத்தகம் உணர்த்தாததை, ஒரு கார்ட்டூன் உணர்த்திவிட வல்லது. அப்படிப்பட்ட அழகியலும், நையாண்டியும், நக்கலும், மெல்லிய ஊசிபோல் குத்தும் பொறுப்பும் நிறைந்த ஒரு கலை, இன்று ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் உலாவரும் 'வக்கிரவியலாளர்கள்' கையில் சிதைந்து கொண்டிருக்கிறது. ஹஸந்தாவுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முகநூலில் பதிவிட்டபோது தோன்றிய ஒரு மிகை- எண்ணத்தை என்னால் இங்கு எழுதாமல் தவிர்க்கமுடியவில்லை. ஹஸந்தா முகநூலில் இயங்கும் ஒரு ஊடகவியலாளர்(??!!). கண்டிப்பாக தமிழக அரசியல்வாதிகளை வக்கிரமாக வரையும் நம்மூர் 'ஹஸந்தா'க்களின் கார்ட்டூன்கள் அவர் கண்ணில் பட்டிருக்கும்! "இவர்கள் தேர்ந்தெடுத்த பிரதமரை, இவர்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை, இவர்களின் அரசியல்வாதிகளை இவர்களே இப்படி வக்கிரமாக, அசிங்கமாக வரையும் போது மன்மோகனும், ஜெயலலிதாவும் நமக்கென்ன மாமனா, மச்சானா!!? நாமும் தான் வரைவோமே! இந்த தமிழர்கள் என்ன கோபமா படப்போகிறார்கள்!!!!" என்று ஹஸந்தா நினைத்திருக்கலாம்!!! இது மிகை எண்ணமென்றாலும் இழையோடும் உண்மையை நினைத்துப் பாருங்கள்!

உலக அளவில் தமிழர்களின் முகவரான தமிழக முதல்வரையும், இந்தியர்களின் முகவரான பிரதமரையும் ஆபாசமாக வரைந்திருக்கும் ஹஸந்தாவுக்கு என் கண்டனங்களை இப்பதிவின் மூலம் பதிவுசெய்துகொள்கிறேன்.  (படத்தில் நீங்கள் காண்பது முகநூலில் இயங்கும் கார்ட்டூனிஸ்ட் தம்பி வினைவிழைவான் (எ) துரை வரைந்தது. கார்ட்டூன் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்தப் படம் எவ்வித உணர்வுகளை அளிக்கிறது பாருங்கள்.)

Wednesday, September 5, 2012

நகங்களில் இருந்து விரல்கள் முளைக்கும்! -ஆசிரியர் தின கவிதை


*நகங்களை வெட்டி
வகுப்பறையில் போட்டாலும்,அழகாய் எழுதும் விரல்களை
அவற்றிலிருந்து
எப்படியும் முளைக்க வைத்துவிடுகிறார்கள்!

*அடி பின்னும் பிரம்பில்
அறிவு பின்னும் வித்தை,
அவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது!

*கரும்பலகையையும், சுண்ணாம்பையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும்,
மாணவர்களின் வருங்காலத்தையும்
ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள் அவர்கள்;

* "ஒன்னுக்கு வருது மிஸ்",
என சொல்பவர்களில்,
எவனுக்கு உண்மையிலேயே
ஒன்னுக்கு வருகிறது
என அவர்களுக்கு மட்டுமே தெரியும்!

*30க்கும்  34க்கும் இடையே
முக்கி, முனகி, முட்டியவனையெல்லாம்,
அவர்கள் இரக்கப்பட்டு
35ஐ முட்ட வைத்ததால்,
விண்ணை முட்டும்
பெரும்பணியில் இருக்கிறான்!

*லேட்டாய் போனவனை
வெளியே நிற்க வைத்து,
இன்னும் லேட்டாய்
உள்ளே அனுப்பி,
லேட்டாய் போவதன்
சங்கடத்தை உணர்த்தும்
புரியாத புதிர்கள் அவர்கள்!

*கேள்விகேட்கக் கற்றுக்கொடுத்த
சாக்ரடீசில் இருந்து,
பதில்களைக் கற்றுக் கொடுத்த
நியூட்டன் வரை
ஆசிரியர்களாய் இருந்ததாலேயே,
அறிவியல் உலகமும்,
அறிவு உலகமும்
நிற்காது சுற்றிக்கொண்டிருக்கிறது!
இன்னும் சுற்றும்!


(ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் தின விழாவுக்காக எழுதிய கவிதையில் சில பகுதிகள்)

ஈழ அரசியலுக்காக பலியான அப்பாவி ஆடு!

இலங்கை நாட்டின் அதிகாரபூர்வ கிரிக்கெட் வீரர்கள், அவர்கள் நாட்டில் இருப்பதைவிடவும் இந்தியாவில் அதிக காலம் கழிக்கிறார்கள். அவர்கள் பெருவாரியாக பங்குபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளை சென்னை சிதம்பரம் அரங்கில் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் டிக்கெட்டுக்கு முண்டியடித்து, முட்டிமோதுகிறார்கள். இதெல்லாம் அதிகாரபூர்வ அரசுகள் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அணிகளின் அதிகாரபூர்வ போட்டிகள்! நிற்க! இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு 'துக்கடா' கால்பந்து க்ளப் அணி, சென்னையில் உள்ள ஒரு 'துக்கடா' க்ளப் அணியுடன் நேரு உள்ளரங்கு விளையாட்டு கூடத்தில் விளையாட வந்திருக்கிறது. (இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இலங்கையில் இருந்து வந்த அணி அதிகாரபூர்வ இலங்கை அணி அல்ல!) இதைப் பொறுக்காத தமிழுணர்வு ததும்பி வழியும் தமிழக அரசு, அந்த அணியை இங்கு விளையாட அனுமதியாமல் திருப்பி அனுப்பியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், அதுவரையில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏதோ ஒரு இலங்கை க்ளப் அணி இங்கு விளையாடாததால் நமக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் தன் ஈழ ஆதரவு அரசியல் காரணங்களுக்காக, நேரு விளையாட்டு அரங்கு அதிகாரி ஒருவரை இடைப்-பணி நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு!

சென்னையில் இலங்கை தூதரகம் இருக்கிறது, ஒருநாளில் பலமுறை இலங்கைக்கு சென்னையில் இருந்து விமானசேவை இருக்கிறது. இதெல்லாம் இருக்கலாம், இதெல்லாம் நடக்கலாம். ஆனால் ஒரு அதிகாரி ஒரு துக்கடா க்ளப் அணியை விளையாட அனுமதித்தது பெருங்குற்றம்! ஒரு அரசு அதிகாரி தன் பணிக்காலத்தில் இடைநீக்கம் செய்யப்படுவதென்பது மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படும். இந்நிலையில் நேரடியாக முதல்வரே இடைநீக்கம் செய்திருப்பது எத்தகைய பிரச்சினைகளை அவருக்கு விளைவிக்கும் என்பதை நாம் மனிதாபிமான அடிப்படையில் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழகத்துக்கு இலங்கை எதிரிநாடு, அனைத்து இலங்கை பொருட்களுக்கும் தமிழகத்தில் தடை, தமிழகத்தில் இருந்து எந்த விமானமும் இலங்கை செல்லாது, சென்னையில் இருக்கும் இலங்கை தூதரக அதிகாரியை இலங்கை திரும்பிப் பெற வேண்டும், என்றெல்லாம் தமிழக அரசு உத்தரவிட்டபின்னும் அந்த 'அதிகாரி' இலங்கை க்ளப் அணியை விளையாட அனுமதித்திருந்தால் அவர் மேல் நடவடிக்கை எடுத்தது சரி! ஆனால் அரசியல் காரணங்களுக்காக, ரோட்டில் போன கிடாவை கடவுளுக்கு வெட்டுவதைப் போல, அரசியலுக்காக அப்பாவியை பலிகடா ஆக்குவதையும், அதை 'தமிழுணர்வாளர்கள்' வரவேற்பதும் வருத்தமளிக்கும் கேலிக்கூத்துக்கள்!

தமிழக அரசின் 'ஈழ ஜிம்மிக்' ஒருபுறமிருக்க, இலங்கையில் இருந்து தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளை தாக்கியிருக்கிறது ஒரு 'வீரர்' கூட்டம்! எனக்கு என்ன சந்தேகமென்றால் இலங்கை நாட்டின் பொதுமக்களைக் கண்டாலே இவ்வளவு தமிழுணர்வு கொப்பளிக்கும் வீரர்கள், சென்னையில் இருந்து தினமும் இலங்கைக்கு இருக்கும் விமான சேவையை பயன்படுத்தி கொழும்பு சென்று நேரடியாக இலங்கை ராணுவத்தையே தாக்கலாமே!!!!!! நோ மோர் கமண்ட்ஸ்!  

Tuesday, September 4, 2012

குடிவெறியர் குங்ஃபூ வெறியர் ஆன கதை! முகமூடி சோடாமூடி!

"முகமூடி ஜீவாவை எங்கயோ கொண்டு போகும்."
"முகமூடி இதோட முடியாது. ஐந்து ஆறு பாகங்கள் எடுப்பேன்"
"ஹாலிவுட் இயக்குனர்கள் தமிழ் படங்களின் டிவிடி பார்த்து படம் எடுக்கும் காலம் வரும்"

                                        
இதெல்லாம் முகமூடி இயக்குனரின் பொன்மொழிகள். சரி இப்ப மேட்டருக்கு வருவோம். முகமூடி தொடங்கி கொஞ்ச நேரத்துல என் பின்சீட்டுல இருந்த ஒரு ஆண்ட்டி, "என்னங்க இது? ஜீவா கக்கூஸ் கழுவுற பூதம் மாதிரி இருக்கான்"னு அவங்க கணவர்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. யோசிச்சு பார்த்தபின் தான் அந்தம்மா, "மிஸ்டர். Muscle" கிருமி நாசினி விளம்பரத்த சொல்றாங்கனு தெரிஞ்சுச்சு. Mr.Muscle கூட ஊடுருவி சென்று கிருமிகளை தாக்குச்சு. ஆனா முகமூடி, ஹீரோயினுக்கு காட்டக்கூடாதத காட்டிக்கிட்டே ரோட்ல சுச்சா போனதோட சரி. வேற எந்த ஊடுருவலும் இல்ல.

கதை ரொம்ப வித்தியாசமானது. ஊர் சுத்திட்டே குங்ஃபூ போடுற ஹீரோ ஒரு பொண்ண டாவடிக்கிறாரு. அந்த பொண்ணு அதோட ஸ்கூட்டில செங்கல், செருப்பு, ஆசிட்னு சகல ஆயுதங்களையும் வச்சுக்கிட்டே சுத்துற ஒரு சமூக போராளி! ரோட்ல சண்டை போடுற ஹீரோ மூஞ்சில ஒருநாள் ஆசிட் ஊத்திருது! அதுல இம்ப்ரெஸ் ஆகுற நம்ம ஹீரோ, அந்த பொண்ண பாக்குறதுக்காக பேண்ட் மேல ஜட்டி இருக்க மாதிரி ஒரு ட்ரெஸ் போட்டுட்டு டெய்லி அது வீட்டுக்கு நைட்ல போறாரு. அவரு பேரு முகமூடினும் சொல்லிக்கிறாரு. அப்படி ஒருநாள் போறப்ப முகமூடிக்கு 'சூச்சு' வந்துருது. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் ஹீரோ 'சூச்சு' போற மாதிரி சீன் வச்ச இடத்துலதான் மிஷ்கினின் திறமை தெரியிது. அதுமட்டுமில்லாம சூப்பர் ஹீரோவோட 'இதை' ஹீரோயின் பார்த்துருது. நல்லவேளை ரோட்ல ஒன்பாத்ரூம் போனதால சூப்பர் ஹீரோவோட 'அதுல' ஆசிட் ஊத்திருமோனு நான் பயந்துட்டேன். ஆனா பாருங்க, ஹீரோவோட முகத்த பாத்து எரிச்சல் பட்ட ஹீரோயினுக்கு, 'அதை' பார்த்தவுடன லவ் ஸ்டார்ட் ஆயிருது! மிஷ்கின் இஸ் டபுள் கிரேட்!

நரேன் ஒரு குங்ஃபூ மாஸ்டர். குங்ஃபூ சொல்லிக் கொடுத்துட்டே தனியா இருக்க கிழவன் கிழவியை எல்லாம் கொன்னு கொள்ளை அடிக்கிறாங்க. கிழடுகளை கொல்ல எதுக்கு குங்ஃபூனு நீங்க யோசிக்கலாம். ஆனா சூப்பர் ஹீரோ முகமூடிக்கு குங்க்ஃபூ தெரிஞ்சதால வில்லன்களையும் குங்ஃபூ வீரர்களா காமிச்சிருக்காரு மிஷ்கின். நம்ம கிராம நாயகன் செல்வாதான் ஜீவாவோட குங்ஃபூ மாஸ்டர். மிஷ்கினின் குங்ஃபூவை எளிய முறையில், மூன்றே மணி நேரத்துல நம்மளும் கத்துக்கலாம். உள்ளங்கையை சப்பட்டையா வச்சுக்கிட்டு காத்துல மெதுவா தடவனும். அப்புறம் செவுத்துல பூரிக்கட்டைய சொருகி வச்சு நடூல மாத்தி மாத்தி மெடுவா வெட்டுனா அதான் குங்ஃபூ! (நல்லவேளை ப்ரூஸ்லி உயிரோட இல்லை) ஜீவாவுக்கு கடைசியா ஒரு அதிமுக்கியமான  'குங்ஃபூ ஃபார்ம்'மை எங்கயோ உச்சில வச்சு, ஒற்றைக்காலில் நின்னபடியே செல்வா சொல்லிக்கொடுப்பாரு பாருங்க, அதான் படத்துல ட்விஸ்ட்! 'ஈமு ஃபார்மை' விட கொடூரமாக இருக்கும் அந்த  குங்ஃபூ ஃபார்ம்! அதை வச்சுதான் நரேனை ஜீவா கடைசி சீன்ல தோக்கடிப்பாரு!

ஜீவாவோட தாத்தா கிரிஷ் கர்னாட் ஒரு சைண்டிஸ்ட். பாத்திரத்துக்கு ஈயம் பூசுறவன் மாதிரி  தகரத்த நெருப்புல வச்சுட்டே இருக்க ஒரு சைண்டிஸ்ட். அதை நம்ம நம்பனும்னு அவருக்கு டவுசர் போட்டு சுத்தவுட்ருக்காரு மிஷ்கின். அவரோட நண்பர் ஒரு டெய்லர் தாத்தா. சீன தூதரகத்துல இருந்து இவருகிட்ட ட்ராகன் தைக்க ஆர்டர் எல்லாம் கொடுக்குறாங்க. ஆனா ப்ளாட்ஃபார்ம் டெய்லர்கிட்ட ஆர்டர் கொடுக்குற அளவுக்கு சைனாவை பிச்சக்கார நாடா ஆக்குனதுல மிஷ்கினோட நாட்டுப்பற்று தெரியுது. படத்துல எல்லாருமே லூசு மாதிரி எங்கயோ வெறிச்சு பாக்குறாங்க, கத்துறாங்க. பாத்ரூம் போறப்ப பாதில தண்ணி நின்ன மாதிரி காலை அகட்டி வச்சு நடக்குறாங்க. ஓடுறா சீன், நடக்குற சீனையெல்லாம் கட் பண்ணா படமே பத்து நிமிஷம் தான்!

இப்படியான இந்த வித்யாசமான படத்தில் பேட்மேனாக ஜீவா, கமிஷனர் கோர்டானாக நாசர், ஜோக்கராக நரேன், ஹார்வி டெண்டாக மலையாள கமிஷ்னர், Mr.Foxஆக கிரிஷ் கர்ணாட், ஆல்ஃப்ரட் ஆக காஸ்ட்யூம் தாத்தாவும் நடிச்சிருக்காங்க. எல்லாமே எதேச்சையான Inspiration அல்லது மிஷ்கின் பாஷைல சொல்லனும்னா ட்ரிப்யூட்!

ஸ்பைடர்மேன்ல ஸ்கூல் பஸ்ஸை கடத்தி அந்தரத்துல தொங்கவிடுற சீன் இதுலயும் இருக்கு. இதுவும் ட்ரிப்யூட் தான்! இதுமாதிரி ஏகப்பட்ட ட்ரிப்யூட் இருக்கு. எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி கடைசில முகமூடிய பாக்குறப்ப, நரேன் "பாட்மியான், ஸ்பைடர்மியான், அயன்மியான்.. இப்ப முகமூடி"னு அழகா சொல்லுவாரு பாருங்க. அப்படியே புல்லரிச்சிரும்!

கடைசியா, "ஒன்னுக்கு போயி ஃபிகரை கரக்ட் பண்றவன்லாம் நம்மளை அடிக்கிறானே"ங்குற விரக்தில நரேன் அவராவே தண்ணிக்குள்ள விழுந்து செத்ருவாரு. குங்ஃபூ மாஸ்டருக்கு நீச்சல் தெரியாதது ரொம்ப பாவமா இருந்துச்சு!

ஆனா ஒன்னு. தமிழ்நாட்ல இன்னும் ஒரு இருபது வருசத்துக்கு எவனும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க மாட்டான். ப்ரூஸ்லீக்கு இந்த படத்த டெடிகேட் பண்ணி தேவையில்லாம அந்தாளு ஆவியையும் கடுப்பேத்திருக்காரு மிஷ்கின்! குடிவெறியை ஊக்குவிக்கும் விதமான பாடல் இதுலயும் உண்டு.  குடிவெறியர் ஒருவர் குங்ஃபூ வெறியர் ஆனால் என்ன ஆகும் என்பதே முகமூடி படத்தின் கதை!


Monday, August 20, 2012

'டோனி ஸ்காட்' என்ற மலை நதியில் விழுந்தது!!


படு அயர்ச்சியாக, நான் களைத்து ஓய்ந்திருந்த ஒரு பின்னிரவு நேரம் அது. 'Crimson tide' என்ற ஆங்கிலப்படத்தை அப்போதுதான் என் மடிக்கணிணி தரவிறக்கம் செய்து முடித்திருந்தது. ஒலி-ஒளி தரம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு தூங்கலாம் என பார்க்க ஆரம்பித்து, நேரம் போனதே தெரியாமல் மொத்த படத்தையும் பார்த்துவிட்டுப் படுக்கும் போது மணி அதிகாலை ஐந்து! அந்தப் படத்தில் நடித்திருந்தவர் சினிமா ரசிகர்கள் பலரின் விருப்ப நாயகன் டென்சல் வாஷிங்டன்! அந்த படத்தை இயக்கிய டோனி ஸ்காட்(Tony Scott)யின் விருப்ப நாயகனும் அவரே!  Crimson tide படம் நீர்மூழ்கி போர் கப்பல்களையும், அதில் பணிபுரியும் அதிகாரிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியையும் பற்றியது. இதை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலுமே கூட, நீர்மூழ்கிக்கப்பல்களையும் அதன் செயல்பாடுகளையும், அதிலுள்ள அதிகார அடுக்குகளையும் இவ்வளவு அப்பட்டமாக, பரபரப்பாக படம்பிடித்துக் காட்டிய திரைப்படம் ஏதுமில்லை! ஒரு நீர்மூழ்கிக்கப்பல் கேப்டனே அந்தப் படத்தை இயக்கியதைப் போல அவ்வளவு 'தகவல்கள்' அந்தப் படத்தில் விரவிக் கிடந்தது! அன்றுதான் 'டோனி ஸ்காட்' என்கிற அந்த இயக்குனர் யார் என்ற ஆர்வமும், ஆச்சரியமும் என்னுள் மேலோங்கி அப்போதே அவரைப் பற்றி விக்கிபீடியாவில் தெரிந்தும் கொண்டேன்! (இன்னொரு கூடுதல் தகவல், இவர் க்ளாடியேட்டர் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் இளைய சகோதரர்!)

பின் அடுத்தடுத்து அவரது வெற்றிப்படங்களான Spygame, Topgun, Dejavu, Man on fire, The Taking of pelham, Unstoppable ஆகியவற்றையும் பார்த்தபின், இந்த அளவுக்கு ஒரு மனிதனால் ஒரு படம் எடுக்க, தன் தொழிலில் சிறந்து விளங்க மெனக்கெட முடியுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது! ஒவ்வொரு படத்துக்காகவும் அவர் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் ஏராளம். "பிடித்த இயக்குனர் யார்?" என எப்போது என்னிடம் கேட்கப்பட்டாலும் என் மூளை வாய்க்கு அனுப்பும் முதல் பெயர் டோனி ஸ்காட்! அதுமட்டுமல்லாது எனக்கு ஒரு Inspiration அவர் ஆகவே மாறிப்போனார்!!

இப்படியாகப்பட்ட டோனி ஸ்காட் 19/8/2012, ஞாயிற்றுக்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பாலத்தின் மீதிருந்து நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்! நதியில் விழுந்து இறந்த அவரை பலமணி நேரத்துக்குப் பின் ஒரு மீனைப் போல வெளியில் எடுத்திருக்கிறார்கள். புகழின் உச்சியில், சினிமா கலையின் உச்சியில், என்னைப் போன்ற பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் டோனி ஸ்காட்டுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. அவர் தன் அலுவலகத்தில் எழுதி வைத்திருந்த தற்கொலை வாக்குமூலத்தை காவல் துறை இன்னும் வெளியிடாத நிலையில், அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி காலையில் இருந்து என்னை குடைந்து கொண்டே இருக்கிறது.

நாம் அனைவருமே புகழை நோக்கியும், உச்சியை நோக்கியும், சாதனையை நோக்கியும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். நம் வாழ்வின் பிரதான நோக்கமாக, லட்சியமாக அவற்றைதான் வைத்திருக்கிறோம். ஆனால் எல்லாவற்றிலுமே உச்சத்தில் இருந்த டோனி ஸ்காட்டுக்கே தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஒரு காரணம் இருந்ததென்றால், வளர்ச்சியும்-புகழும்-சாதனையும் மட்டுமே வாழ்க்கையின் பிரதான விஷயம் இல்லை என்பது தெளிவாகிறது! அதையெல்லாம் தாண்டியும் மனிதனுக்காக தேவைகள் என்னென்னவோ இருக்கத்தான் செய்கிறது! "அவை என்னென்ன?" என்ற கேள்விதான் என்னை குடைந்து கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது!!

டோனி ஸ்காட்டின் படங்கள் அவரை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே, அவரை இவ்வுலகில் வாழவைத்துக்கொண்டே இருக்கும். இந்தப் பதிவை அந்த மாபெரும் கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்!      

Saturday, August 11, 2012

வரலாறு 'படைக்கும்' சீமான்! பார்ட் 2 !

"

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள்."


-இது சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியது! அதாவது எம்.ஜி.ஆர் 1977ல் பதவியேற்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்வே இறந்துவிட்ட பெரியார் எம்.ஜி.ஆரின் பதவியேற்பில் கலந்துகொண்டதாக 'கண்டுபிடித்து' சொன்னார் சீமான்! இந்த கோமாளித்தனம் எழுப்பிய சிரிப்பலைகளே இன்னும் அடங்காத நிலையில் அடுத்த காமடியை செய்துள்ளார் அண்ணன் சீமான்!

ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர் அளித்த NDTV-hindu பேட்டியில், விடுதலைப்புலி போராளிகளுள் மிகவும் முக்கியமானவரான மாவீரன் பால்ராஜ் பற்றிய தவறான தகவல் தான் அது! மலையகத்தமிழர்கள் குறித்த பேட்டிகண்டவரின் கேள்விக்கு, "அண்ணன் பால்ராஜ் கூட மலையகத்தமிழர் தான்" என போட்டாரே ஒரு போடு!

விடுதலைப்புலிகளைப் பற்றி ஒரளவேணும் அறிந்த அனைவருக்குமே மாவீரன் பால்ராஜை தெரியும். பல போர்களில் தன் வீரத்தை நிரூபித்து சிங்கள ராணுவத்துக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர்! தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் பிறந்த ஈழத்தமிழரான அவரை 'மலையகத் தமிழர்' என வாய்கூசாமல் கூறியிருக்கிறார் சீமான்! இலங்கையின் அரசியல் சூழ்நிலை அறிந்தவர்களுக்கு மலையகத்தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான பூர்வீக வித்தியாசம் தெரியும். (மலையகத் தமிழர் என்போர் இந்தியாவில் இருந்து தேநீர் தோட்ட வேலைக்காக இலங்கை சென்றவர்கள். ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள்.)

இதை சாதாரண பிழையாக நாம் கருத முடியாது! விடுதலைப்புலிகளின் ஆஸ்தான தமிழகப்பிரிவு போராளியாக தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் சீமானுக்கு, புலிக்கொடியையே தன்கட்சிக்கொடியாகவும் அறிவித்துள்ள சீமானுக்கு, புலிகள் புலிகள் புலிகள் என எங்கு செல்லினும் கர்ஜிக்கும் சீமானுக்கு மாவீரன் பால்ராஜ் பற்றி கூட தெரியாதது படு அபத்தம், ஆச்சரியம்!! வரலாற்று அறிவு என்பதே இல்லாமல் சூழ்நிலைக்கோ, கேள்விக்கோ ஏற்றவாறு புதிய வரலாறுகளை உருவாக்கும் அவரது தொடர்-செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது. எம்.ஜி,ஆர் குறித்த பொதுக்கூட்டம் என்றால் அதில் எம்ஜிஆரை புகழ்வதற்காக சில வரலாற்று பொய்களை உருவாக்குகிறார், மலையகத்தமிழர் பற்றிய கேள்வி என்றால் அதற்காக சில பொய்களை உருவாக்குகிறார்! இப்படி வரலாறுகளை உருவாக்கும் பொய்-மூட்டையாகவும் வரலாறே தெரியாமல் புரட்சிக்கு கிளம்பிய காமடியனாகவுமே காட்சியளிக்கும் சீமானை என்னவென்று சொல்ல? விடுதலைப்புலிகளின் பெயரையும் அரசியலையும் இவரைப் போல் அரசியலுக்காக exploit செய்து கெடுக்கும் நபர் வேறு யாருமிலர்! பற்றாக்குறைக்கு "அண்ணன் பிரபாகரன் அதைச் சொன்னார், இதைச் சொன்னார், விஜய் பிடித்த நடிகர் என்றார்", என சந்தர்ப்பவாத அறிக்கைகள் வேறு! விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாதது சிங்களர்களுக்கு நன்மையோ இல்லையோ, இவரைப் போன்ற ஈழவியாபாரிகள் கல்லா கட்ட நன்றாகவே பயன்படுகிறது! இவரது அடுக்கடுக்கான பொய்களை நிறுத்தவேணும் விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும்!

(இதுகுறித்து முகநூலில் எனக்கும் நாம் தமிழர் அதிகாரபூர்வ இணைய ஒருங்கிணைப்பாளர் ஒருவருக்குமான வாக்குவாதத்தில் அவரும் பால்ராஜை மலையகத்தமிழர் என்றார். பின் ஆதாரங்கள் கொடுத்தபின் ஆள் எஸ்கேப்! தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி!!)

Thursday, August 2, 2012

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

“கீழ்சாதினா இப்படிதான் வாழனும்னு நம்ம சாஸ்திரங்களே சொல்லிருக்கு. அப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குறாங்கன்னு” என்று, தான் ஒரு தலித் என்பதால் சிறுவயதில் இருந்து சந்தித்த கொடுமைகளுக்கான காரணத்தைத் தேடி அலைந்து கண்டுகொண்ட ஒரு வட-இந்திய பெண் ‘சத்யமேவஜெயதே’ நிகழ்ச்சியில் சொல்கிறார்.
அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பனியத்தின் மீதும் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்கசாதி வெறியின் மீதும் அமிலம் வீசுகிறது!
தன் சமூகத்தின் மீது பார்ப்பனர்கள் கட்டவிழ்த்த அனைத்து ஏதேச்சிகாரங்களையும் தாண்டி, போராடி, படித்து, பிஎச்டி முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியையாய் இருக்கும் அந்த பெண் இன்னமும் தான் சந்தித்து வரும் அடக்குமுறைகளை கூறும் போது அதை கேட்கும், திராவிட இயக்கங்களால் சாதியை பெருமளவு பின்னுக்குத்தள்ளியிருக்கும் நம் மாநில இளைஞர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்!


அவர் அமர்ந்த பெஞ்சை கழுவிவிட்டு பின் அமர்ந்த சக மாணவர்களை பார்த்த அந்த பெண், தான் பேராசிரியையாய் ஆன பிறகும் தன் தாயின் கையில் துடைப்பத்தைக் கொடுத்து அவர் வீட்டை சுத்தப்படுத்த சொன்ன வீட்டு உரிமயாளரையும் பார்த்திருக்கிறார். ஆக, தலித் என்ற முத்திரை அவர் சாகும் வரையில் அவருடனே தொடரும் எனவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். முழுக்க முழுக்க வட இந்திய சாதிய சூழ்நிலைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் சூழலோடு ஒப்பிட்டு, திராவிட இயக்கங்களின் சாதி ஒழிப்பு பங்களிப்பை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


1960களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பல்வந்த்சிங் ஐ.ஏ.எஸ் சொல்கிறார், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு பார்ப்பனர் இவர் குடித்த க்ளாசை எடுக்க மாட்டாராம்! மேலும் தனக்கு வரவேண்டிய பதவியுயர்வு பலவற்றை பார்ப்பன மேலதிகாரிகள் தடுத்ததையும், இறுதியில் வெறுத்துப்போய் தன் ஐ.ஏ.எஸ் வேலையையே உதறிவிட்டதாகவும் சொல்கிறார்.


பின் பலதரப்பட்ட மக்களிடம் தற்கால சாதிய நடைமுறை பற்றி நிகழ்ச்சியில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சொல்லிவைத்தாற்போல மேல்தட்டு மக்களின் ‘ஃபேஷன் ஸ்டேட்மென்ட்’டான “இப்போதெல்லாம் யார் சார் சாதி பாக்குறா?” என்ற பதிலே ஒட்டுமொத்த பதிலாக வருகிறது. இதற்கு பின்பாக இந்தியாவெங்கும் 2012யிலும் விரவிக்கிடக்கும் தீண்டாமையையும், சாதியத்தையும் ஆராய்ச்சியாளர் இயக்குனர் ஸ்டாலின் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்கிறது நிகழ்ச்சி.


காசியில் அர்ச்சகராக இருக்கும் ஒரு பார்ப்பனரிடம் இது குறித்து கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்கிறார், “நான் ஆச்சாரமான ப்ராமணன். கடவுளின் தலையில் இருந்து வந்தவன். நாளைக்கு நம் கால் நம்மிடம் வந்து நான் தான் உன் உடம்பை தாங்குகிறேன் அதனால் நான் உயர்ந்தவர் எனச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? அனைவரும் சமம் என சொல்லும் நம் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பாவச்செயலாக பார்க்கிறோம்” என்கிறார்.
இந்த இடத்தில்தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கடும் முயற்சியால் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கும் நம் ஊர் தீட்சிதர்கள் என் நினைவுக்கு வந்தார்கள். இப்படியாகப்பட்ட ஒரு வழக்கு போடப்படும் சூழ்நிலையில், அதை உடனே நீதிமன்றம் தள்ளுபடி செய்யாத சூழ்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய முதியவரை தடித்தீட்சிதர்கள் அடிக்கும் சூழ்நிலையில்தான் நம்மூரில் “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்ற பொருந்தா-கோஷமும் கேட்கிறது.


இயக்குனர் ஸ்டாலின் சாதியம் பற்றிய தன் பலவருட ஆராய்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது இஸ்லாம் மதத்தில், கிறித்தவ மதத்தில் இருக்கும் சாதியத்தைப் பற்றியும் கூறுகிறார். இஸ்லாத்தில் சாதி இல்லை, ஆனால் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றும், இஸ்லாம் மதம் எந்த வகையிலும் சாதியத்தை ஆதரிக்காததால், அல்லாவுக்கு பயந்து மசூதிக்குள் தலித் இஸ்லாமியர்களை அனுமதித்துவிட்டு வெளியில் அவர்களை மதிப்பதில்லை எனவும் ஒரு தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் சொல்கிறார்.
அதேபோல் புலையர்கள் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட கிறுத்தவ சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், “எங்கள சர்ச்சுக்குள்ள விட மாட்டாங்க. ஏன்னா எங்க ரத்தம் சிவப்பு அவங்க ரத்தம் நீலம்” என நக்கலாக செவிட்டில் அறைந்ததைப் போல சொல்கிறார். இவர்கள் மதம் மாறினாலும் தலித் முத்திரை என்பது இவர்களை விட்டு அகல மறுக்கிறது என்பதே உண்மை.
இந்த 2012யிலும் வட இந்திய பள்ளிகளில் சத்துணவு நேரத்தில் தலித்துகளை தனியே உட்கார வைக்கிறார்கள். அதனால் பல தலித் மாணவர்கள் சுயமரியாதைக்காக சாப்பிடாமலே கூட இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் தலித்துகளுக்கு கழிவறை கழுவும் வேலை, பள்ளி மைதானம் சுத்தப்படுத்தும் வேலை அந்தந்த பள்ளி ஆசிரியர்களாலேயே கொடுக்கப்படுகிறது. ‘பட்டேல்’ போன்ற உயர்சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற வேலையைக் கொடுக்கமாட்டார்கள். “நாங்க எங்க புள்ளைங்க எந்த தொழில செய்யகூடாதுனு பள்ளிகூடத்துக்கு அனுப்புனோமோ அங்கேயும் அதையே பண்ண சொல்றாங்க” என அழுதபடியே தெரிவிக்கிறார் ஒரு தலித் தாய்.
நம் குழந்தைகளுக்கு நம்மூர் பள்ளிகளில் இது நடந்தால் நாம் கொதிப்போமா இல்லையா? வடநாட்டில் பெயர்களோடு தலைமுறை தலைமுறையாக ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப்பெயர்கள் இவன் இன்ன சாதி என சுலபமாக இனங்காண வைத்துவிடுகிறது.


நிகழ்ச்சியின் இந்த குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கையில் தான் நாமெல்லாம் திராவிட இயக்கத்திற்கும், தந்தை பெரியாருக்கும் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை முழுதாக உணரமுடிந்தது. நம்மூர் திருமணப் பத்திரிக்கைகளில், “பழனிச்சாமிக் கவுண்டரின் பேரனும், பாலுவின் மகனுமான வேலுவுக்கும்…..” என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பழனிச்சாமி என்ற பெயருடன் இருக்கும் ‘கவுண்டர்’, ஏன் பாலு என்ற பெயரிலும், பாலுவின் மகனான வேலுவின் பெயரிலும் இல்லை? ஏனெனில் பழனிச்சாமிக் கவுண்டர் தலைமுறைக்கும், பாலு தலைமுறைக்கும் இடையில் திராவிட இயக்கம் தன் வேலையைக் காட்டியதுதான்!
தமிழகத்தில் அவ்வளவு சுலபமாக நாம் யாரின் சாதியையும் கண்டுபிடிக்க முடியாது. “உங்கள் சாதி என்ன?” என்று தமிழகத்தில் யாரேனும் கேட்டால் நாம் எவ்வளவு கேவலமாக அவர்களைப் பார்க்கிறோம்! சாதிப் பெயரை பொது இடத்தில் சொல்லும்போது குரலை தாழ்த்திச் சொல்கிறோமா இல்லையா? அதன் காரணம் பெரியாரேயன்றி, திராவிட இயக்கமேயன்றி வேறென்ன?


இன்னும் தொடரும் மகா கொடுமை!

                             
1993லேயே மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் இந்திய அளவில் 13லட்சம் பேர் மலம் அள்ளும் தொழிலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மை இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் என்பதுதான் பெருங்கொடுமை!


“நகரங்களிலுமா சாதி பார்க்கிறார்கள்?” என்ற அமீரின் கேள்விக்கு “சாதிப்பெயர் சொல்லி வரன் தேடுவதே சாதி பார்க்கும் பழக்கம் தானே!” என பொட்டில் அடித்ததுபோல் பதில் சொல்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டாலின். மேலும் சாதிகளை ஒழிக்க ஒரே வழி சாதிமறுப்புத் திருமணம் மட்டுமே என்றும் சொல்கிறார். நாங்கள் “அடக்கமான குடும்பம், கலாச்சாரமான குடும்பம், பாரம்பரியமான குடும்பம்” என்றெல்லாம் பெருமை பீற்றுபவர்கள் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதைதான் அப்படி சொல்கிறார்கள், அந்த பழக்கம் முற்றிலும் ஒழியவேண்டும்.
சாதி இல்லை, அது இப்போது புழக்கத்தில் இல்லை என மறைத்து மறைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளவே எல்லாரும் ஆசைப்படுகிறார்களேயொழிய உண்மையான நிலையை ஒப்புக்கொள்ள யாரும் தயார் இல்லை. உடலில் இருக்கும் நோயை மறைத்து வைத்தால் பின் மருத்துவம் எப்படிப் பார்ப்பது?


ஒட்டுமொத்தமாக தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படிந்திருக்கும் சாதியப் படிமத்தை இந்த நிகழ்ச்சி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்திய அளவில் சாதியம் என்பது ஒரு ‘கெட்ட விசயம்’ என்ற புரிதலே வட இந்தியர்களுக்கு சமீபகாலத்தில்தான் வந்திருக்கிறது. பெரியார் 1940களில் செய்த புரட்சிகளை, கலப்பு மணங்களை, கோயில் நுழைவுகளை இப்போதுதான் இவர்கள் ‘புரட்சி’ என்றே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


தமிழகத்தில் ஒழிந்துவிட்டதா சாதி?

சரி, சாதிகளை மறுத்த திராவிட இயக்கம் வேரூன்றியிருக்கும் தமிழகத்தில் சாதியம் முற்றிலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மையாக இருக்கிறது. இன்னமும் திண்ணியம் மலம் திணிப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு சமூகத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சாதி ஒழிப்பில் தமிழகம் ஒரு அரை நூற்றாண்டு முன்னால் நிற்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.


                              


இது ஒருபுறம் என்றால், சாதியம் நம்மைச் சுற்றி விஷச்செடியாய் வளர்ந்து இருக்கையில் இடஒதுக்கீட்டின் மூலம் மேல்தட்டுக்கு திடீரென ‘ட்ரான்ஸ்ஃபர்’ ஆகியிருக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் சிலர் இடஒதுக்கீட்டை எதிர்க்கத் துவங்கிருக்கும் அவலமும் இங்கே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது, “நான் ஏறிவந்துட்டேன் அடுத்தவன் ஏறுனா என்ன ஏறலேனா எனக்கென்ன!” என்ற சுயநல எண்ணமே இதற்கு காரணம்.

அதுமட்டுமல்லாது இட ஒதுக்கீடு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் உயர்பதவிகளிலும், அரசை ஆட்டுவிக்கும் இடத்திலும், கல்வியை உரிமை கொண்டாடியவர்களுக்கும் இன்று பிரச்சினையாய் இருக்கிறது. இதுவரை நமக்குக் கீழே குப்பை பொறுக்கியவர்கள் இன்று நமக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்களே என்ற வயித்தெரிச்சலில் புகைகிறார்கள். அதாவது இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை, ஆனால் வெகு சாமர்த்தியமாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கே பிரச்சினை என்பதைப் போல பொய் பரப்பி பிற்படுத்தப்பட்டவர்களையே இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசவைக்கிறார்கள்.


பல ஆயிரம் வருடங்களாக மக்களின் மரபணுவிலேயே ஊறிப்போன சாதியை வெறும் பேச்சால் ஒழித்தல் என்பது சாத்தியமில்லாதது. சாதி ஒழிப்பு என்பது இன்றளவில் ஒரு பிரச்சாரமாக, “எடுத்தா எடுத்துக்க” என்ற நிலையிலேதான் இருக்கிறது. கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு நிறைவேற்றப்படும்வரை பெரியார் தோன்றிய தமிழகத்திலேயே கூட சாதி ஒழிப்பில் தேக்கநிலை இருக்கவே செய்யும்.


மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சாதி சங்கங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து வெளிப்படையாகவே சாதி வெறியர்கள் பேட்டி தர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக இல்லாது இருந்த சாதிப்பெயர் சூட்டல் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். புதிதாய் தமிழ் தேசியத்தை கையிலெடுத்திருக்கும் சிலர் தங்களை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சாதிப் பெயர்களை பெயருடன் சுமக்கத் துவங்கியுள்ளனர். அண்ணா, பெரியார் படங்களைக் கூட சாதிச் சங்க போஸ்டர்களில் பயன்படுத்தும் முட்டாள்கள் நிறைந்த சமூகமாக தமிழகம் மெள்ள மாறிவருகிறது. இவற்றையெல்லாம் இப்போதே உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் வடமாநிலங்கள் போல மீண்டும் சாதியம் ஆலமரமாக இங்கே வளர்ந்து நிற்கக்கூடிய வாய்ப்புகள் மேலோங்கும்.
தமிழ்மேட்ரிமோனி, பாரத்மேட்ரிமோனி என இருந்த காலம் போய் இன்று தமிழ் தொலைக்காட்சிகளிலே ஐயர்கல்யாணம்.காம், நாடார்கல்யாணம்.காம் என விளம்பரம் செய்கிறார்கள். கூடியவிரையில் மனிதக்கல்யாணம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கவேண்டும் என சீரியசாகவே தோன்றுகிறது!


காதல் திருமணங்கள் செய்வோர்க்கு சாதி மறுப்பு இயல்பாகவே அமைந்துவிட்டாலும், சாதி மறுப்பு திருமணம் செய்யவிரும்பும் காதலில் விழாதோருக்கு என பிரத்யேகமாக சாதி மறுப்புத் திருமண இணையதளங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேல் பட்டேல், பானர்ஜி, சாட்டர்ஜி, குப்தா, தேவர், கவுண்டர், பறையர், வன்னியர், முதலியார் என எந்த பெயர்கள் எல்லாம் சாதியைக் குறிக்கிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சட்டப்படி தடை செய்தால் என்ன நட்டம் மொழிகளுக்கு வந்துவிடப் போகிறது? அமெரிக்கா போன்ற நாடுகளில் Nigger, Negro போன்ற சொல்லாடல்களை தடை செய்துள்ளதைப் போல! சாதிச் சான்றிதழ்களிலும் சாதிப்பெயரைக் குறிக்காமல் இடஒதுக்கீட்டுக்காக வகுப்பை மட்டும் குறிப்பிட்டால் காலப்போக்கில் சாதிப்பெயர்களே காணாமல் போகக் கூட வாய்ப்புண்டு. இதெல்லாம் என் அனுமானங்கள். ஆனால் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நிபுணர்களுக்கே வெளிச்சம்.


மீண்டும் சொல்கிறேன், கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு என்பது நிறைவேற்றப்பட்டாலேயொழிய சாதி என்னும் நோய் தாக்கப்பட்ட சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கும்.


அடுத்தமுறை, ‘இப்பலாம் யாரு சாதி பாக்குறா?’ எனச் சொல்லும் முன் உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் பெண்/மாப்பிள்ளை தேடும் முறையையும், கடவுள்சிலை அருகில் பிற்படுத்தப்பட்டோர் போக முடியாத நிலையையும், அதை தடுத்து உயர்சாதியினர் தொடுத்திருக்கும் வழக்கையும், அழுதபடியே புலம்பிய டெல்லி பேராசிரியை அனுபவித்த அடக்குமுறையையும், தனியாக உணவிடப்படும் தலித்துகளையும், வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சாதிச்சங்க போஸ்டர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி நடத்தி ஆயிரம் ஆயிரம் சாதி சார்ந்த விஷயங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
சாதியும், சாதிய அடக்குமுறைகள் ஒழியவில்லை. ஒழிக்கவேண்டும் என்ற பெருங்கடமை நம் முன் உயிருடன் இருக்கிறது!

நன்றி என்வழி இணையதளம்.

Wednesday, August 1, 2012

மூக்குடைபட்ட ஜெயலலிதாவும், முடிசூட்டிய முகர்ஜீயும்!இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக என்பது போல இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக குடியரசுத்தலைவர் தேர்தலை குழாயடி சண்டை போல நடத்தி முடிக்க உதவியிருக்கிறார்கள் அத்வானியும், ஜெயலலிதாவும். குடியரசுத்தலைவர் என்பவர் இந்திய அரசின் மிக உயர்ந்த பதவி என்றாலுமே கூட இங்கிலாந்து அரச குடும்பத்தைப் போல ரப்பர் ஸ்டாம்ப், பொம்மை என்றெல்லாம் ஊடகங்களால் விமர்சிக்கப்படும் ஒரு பதவி. ஆனால் குடியரசுத்தலைவரை முன்மொழிவதும், தான் முன்மொழிந்த வேட்பாளர் குடியரசுத்தலைவர் ஆவதும் தன் சக்தியையும், செல்வாக்கையும் பறைசாற்றும் விஷயமாகவே இந்திய அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.

"யார் ஜனாதிபதி வேட்பாளர்?" என்ற கேள்வியே எப்போதும் எழும் இந்திய ஜனாதிபதி தேர்தல்களில், "யார் யாரெல்லாம் ஜனாதிபதி வேட்பாளர்கள்?" என்ற கேள்வி எழுந்தது இந்த முறைதான்! ஆரம்பத்தில் இருந்தே பலரின் பெயர் அடிபட்டாலும் காங்கிரஸ் தரப்பில் முன்னணியில் இருந்தது பிரணாப் முகர்ஜிதான். துக்ளக் சோ போன்ற ராஜகுருக்கள் காட்டிய ஆசையால் பிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திய அளவில் தன் செல்வாக்கை வெளிக்காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த நினைத்து, நவீன்பட்நாயக்கின் பரிந்துரையின் பேரில் சங்மாவை வெகு அவசரமாக முன்மொழிந்தார்.  பழங்குடி இனத்தவர் என்ற ஒரே தகுதி அவருக்கு போதும் என்ற கணக்கு இந்திய அளவில் வேலை செய்யும் என்ற எண்ணமே காரணம். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் சங்மாவின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கூட அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்பதுதான்! ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் ஓராண்டு முடிந்த கட்டத்தில் அனைத்து இந்திய பத்திரிக்கைகளிலும் பலகோடிகள் செலவில் (கொல்கட்டா-வடகிழக்கு மாநிலங்கள் என எதையும் விடவில்லை) பக்கம் பக்கமாக சாதனைவிளக்க விளம்பரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இது எல்லாமே அகில இந்திய அளவில் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. அதாவது தன் நண்பர் மோடி பாணியை தானும் கையிலெடுத்திருந்தார்.  ஆனால் ஜெ சங்மாவுக்காக அறைகூவல் விடுத்த பின்பும் பி.ஜே.பி தரப்பில் மவுனம் காக்கவே செய்தார்கள். 

மேலே சொன்னதைப் போல மாநில அரசியல்வாதிகளின் இந்திய அளவிலான செல்வாக்கை நிர்ணயிக்கும் குடியரசுத் தேர்தலில் மம்தா பானர்ஜி ஜெயலலிதாவின் வேட்பாளரை ஏற்க தயாராக இல்லை. அதனால் தன் பங்குக்கு அப்துல் கலாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்க, எழுந்தது குழப்பம்! , (நல்லவேளை மாயாவதி உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் இல்லை. இல்லையென்றால் தன் பங்குக்கு ஒரு வேட்பாளரை அறிவித்திருப்பார்.)  பி.ஜே.பி மம்தாவின் இந்த அறிவிப்பு வந்தவுடன் கலாமின் பதிலுக்காக காத்திருந்தது. அப்துல் கலாமும் தன் விருப்பத்தை முதலில் தெரிவித்துவிட்டு, பின் தான் வெற்றிபெற சாத்தியமில்லாததை உணர்ந்து விலகவும், வேறுவழியில்லாமல் ஜெயலலிதா முன்மொழிந்த வேட்பாளரான சங்மாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பி.ஜே.பி. தொடர்ந்து மம்தாவின் ஆதரவை பிரணாப் வேண்டிக்கொண்டிருக்க, இறுதியில் பிரணாப்பை ஆதரிப்பதாக அறிவித்து ஜெயிக்கும் அணியில் தன் பெயரை இடம்பெறச் செய்தார் மம்தா.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே, அதாவது காங்கிரஸ் அதிகாரபூர்வமாக தன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் முன்பே, பிரணாப் முகர்ஜி வேட்பாளர் என்றால்  ஆதரிப்போம் என சொல்லிவந்த கலைஞர், அதிகாரபூர்வ வேட்பாளராக பிரணாப் அறிவிக்கப்பட்டவுடன் தன் ஏகபோக ஆதரவை உடனே தெரிவித்தார். பிரதீபா பாட்டிலின் மிகவும் அதிருப்திகரமான செயல்பாட்டிற்கு பிறகு அரசியலும் தெரிந்த, உலக நடப்புகளில் தெளிந்த ஒருவரை ஜனாதிபதியாக ஆக்குவதற்கான தேவைகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த வேளையில் பல வருடம் தீவிர அரசியலில் இருக்கும் பிரணாப் முகர்ஜீ சரியான தேர்வாகவே மதிப்பிடப்பட்டார்.

இறுதியாக வேட்புமனு தாக்கம் முடிந்தபின் தன் பங்குக்கு சங்மா, பிரணாப் மீது பல குற்றச்சாட்டுகளை கொழுத்திப்போட்டுக்கொண்டே இருக்க, ஒவ்வொன்றாக பொய் குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இப்படியாகப்பட்ட குழப்படிகள் எல்லாம் இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்த தேர்தலிலும் நடைபெறவில்லை. ஒருவழியாக இந்தியாவின் பதிமூன்றாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜீ.

ஒரு வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிஜேபி ஆதரவின்றி வெற்றி பெற்ற பிரணாப் ஜனாதிபதியாக இருப்பார். ஆட்சிமாற்றம் ஏற்படின் இது பிஜேபி கூட்டணி அரசுக்கு எந்தவிதமான சிக்கல்களை உண்டு செய்யும் என்பதையும் நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். கடந்தகாலங்களில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை சரியாகப் பயன்படுத்தியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன். அவருக்குப் பிறகு வந்த அப்துல் கலாமும், பிரதீபா பாட்டிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாத பொம்மைகளாகவே இருந்த நிலையில் அரசியலில் நல்ல அனுபவம் உள்ள பிரணாப் கண்டிப்பாக ஒரு சவாலாகவே இருப்பார்.

இதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் மத்திய அரசியல் கனவு இந்தியா முழுவதும் பலகோடிக்கு விளம்பரங்கள் செய்தும், அவசர அவசரமாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக சங்மாவை அறிவித்தும் கூட சுக்குநூறாக உடைந்திருகிறது. பிரதமர் கனவில் இருக்கும் முலாயம் சிங், மம்தா, மாயாவதி ஆகியோர் ஜெயலலிதாவைப் போல் திடீரென அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. கடைசி மட்ட தொண்டனில் இருந்து பல போராட்டங்களுக்குப் பின் படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்திருப்பவர்கள். எக்காலத்திலும் ஜெயலலிதா போன்ற ஒரு அரசியல் தெரியாதவரை தங்களை முந்த அனுமதிக்க மாட்டார்கள். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாவது அணி அமைக்கலாம் என முலாயம், அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்றவர்களை சென்னைக்கு வரவழைத்து கைகோர்த்தபடி பேட்டி கொடுத்துவிட்டு, பின் இரண்டே நாட்களில் மூன்றாம் அணிக்கு வாய்ப்பே இல்லை என பேட்டியளித்து அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா! இதை வட இந்திய அரசியல்வாதிகள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்துத்துவ கட்சிகளும், இயக்கங்களும் வேண்டுமானால் ஜெயலலிதாவின் உயர்சாதி பின்புலத்தையும், இந்துத்துவ கொள்கைப் பற்றையும் கருத்தில் கொண்டு அவரை ஆதரிக்க வாய்ப்புண்டேயொழிய மற்றவர்களின் ஆதரவு எக்காலத்தில் ஜெவுக்கு கிடைக்கவாய்ப்பில்லை. இந்துத்துவ கட்சிகளே கூட மோடி இருக்கும்போது ஜெவுக்கு எந்த அளவில் கைகொடுப்பார்கள் என்பதும் சந்தேகமே!

                                      


மாநில அரசியலில் மட்டுமே ஐம்பதாண்டு காலத்து மேல் இருந்தாலும் கலைஞருக்கு மத்தியில் எப்போதும் செல்வாக்கு உண்டு. மிசா அவசரநிலை காலத்தில் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து எம்.ஜி.ஆர் அண்ணா திமுகவை, அகில இந்திய அண்ணா திமுக என மாற்றியபோதும் கிஞ்சித்தும் பயப்படாமல் திமுகவை மாநில கட்சியாக மட்டுமே தொடர்ந்தவர் கலைஞர். மேலும் மத்தியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் திமுகவின் பங்கு பெருமளவில் இதுவரை இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது நம்பத்தன்மையான கூட்டணிக் கட்சியாக இதுவரை நடந்திருக்கிறது திமுக. ஆனால் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் அதிமுவின் கதையோ இதற்கு நேர்மாறு. ஆதரவை வாபஸ் பெறுவதும், ஆட்சியைக் கவிழ்ப்பதும் தொடர்கதை. ஆனாலும் பிஜேபி அதிமுக கூட்டணியை விரும்புவது கொள்கையளவில் இருக்கும் ஒற்றுமைக்காகத்தானேயொழிய நம்பகத்தன்மை சார்ந்து அல்ல!       

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் திமுக மத்திய அரசியலில் தன் நிலையை காப்பாற்றிக்கொள்ள நிறைய சமரசம் செய்துகொள்கிறதோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நம்பகமான கூட்டணிக் கட்சியாக இருந்தும்கூட காங்கிரஸின் பிடி திமுகவின் மேல் சற்று இறுகியே இருக்கிறது. மேலும் ஈழம் குறித்த திமுகவின் நிலைப்பாடுகள் அனைத்திற்கும் காங்கிரஸ் முற்றிலும் எதிர்நிலையில் இருப்பதும், அதனால் திமுகவின் செயல்பாடுகளில் பலநேரம் பின்னடைவு ஏற்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. திமுக காங்கிரசுக்காக செய்துகொள்ளும் சமரசங்கள் அகில இந்திய அளவில் திமுகவின் மேல் இருந்த நன்மதிப்பை சரித்துக்கொண்டிருக்கிறது. நான் முந்தைய கட்டுரையில் சொன்னதைப் போல இந்திய அரசு எக்காலத்திலும் தனி ஈழத்திற்கு துணையாக இருக்காது. அதேநேரம் தனி ஈழ கோரிக்கைக்கு எதிர்ப்பு காட்டாத அரசை ஆதரிப்பது அவசியம். இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும்வரை திமுகவின் தனி ஈழம் குறித்த நிலைப்பாடு நேரடி பயன்தராது என உறுதியாக கூறமுடியும்.


நடக்க இருக்கும் டெசோ (தனி ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு) மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகிய இந்திய அளவிளான முக்கியத்தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தனி ஈழம் குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட்ட பின்பும் தனி ஈழ ஆதரவாளர் அமைப்பு என்ற பெயரில் நடக்கும் இந்த மாநாடு நிச்சயம் அலைகளை உண்டு செய்யும் என்பதில் மாற்றமில்லை. அதுமட்டுமல்லாது டெசோ அமைப்பினர் ஐநா உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், அவர்களை மாநாட்டுக்கு வரவழைப்பதில் முனைப்பு காட்டுவதும் கூட நன்மையே.  இருப்பினும் தனி ஈழ தீர்மானம் முதல் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்படுமா என அதில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களிடம் கலந்துபேசியபின் ஜனநாயகரீதியில் முடிவெடுக்கப்படும் என கலைஞர் அறிவித்திருப்பது பின்னடைவே!

ஆக திமுக ஆதரவில் மத்தியில் ஆட்சி, திமுக ஆதரவில் ஜனாதிபதி என சகலத்தையும் சாதித்துக்கொள்ளும் காங்கிரஸ் திமுகவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறதா என்பதை திமுக தான் சிந்தித்து முடிவுசெய்யவேண்டும். டெசோ மாநாட்டுக்குப் பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Tuesday, July 17, 2012

இலங்கை, 1983 ஜூலை27! நினைவும் ஒப்பீடும்! ஈழமுரசு கட்டுரை!

பொதுவாகவே ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை தமிழக மக்கள் திரிபுகளுக்கு பெயர் போன தமிழக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொள்வதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்யிருக்கும்! ஈழம் குறித்து தமிழக மக்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கருத்துக்களை வைத்திருக்கிறார்கள், அதில் கற்பனைக் கதைகளும் ஏராளம். அதுபற்றி எழுதவேண்டுமானால் தனிப்புத்தகமே எழுதலாம்! ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் உலகத்தமிழர்களால் மறக்கமுடியாத 1983ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை சமயத்தில் நிலவிய தமிழக அரசியல் சூழ்நிலையையும், மக்களின் மனநிலையையும், தமிழகத்தில் நிகழ்ந்த எதிரொலி நிகழ்ச்சிகளையும், அரசியல் மாற்றங்களையும் நினைவுகூர்வதும், அதன் வாயிலாக ஒப்பீட்டு அடிப்படையில் சமகால தமிழக-ஈழஅரசியலை நோக்குவதும் ஆகும்.

2009 முள்ளிவாய்க்கல் படுகொலைகளின் போது க்ரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு பொழுதுபோக்காக அவ்வப்போது வருந்திய தமிழகத் தமிழர்கள் 1983ல் ஒப்பீட்டளவில் கொஞ்சம் தமிழுணர்வுடனே இருந்தார்கள் எனலாம். 1983ஆம் ஆண்டில் தமிழகத்தில் தமிழர் விரோதிகளான சோ, சுப்பிரமணியசுவாமி, இந்துராம் ஆகியோரும், தமிழர்களுக்கு எதிராக தமிழர்களையே மாற்றும் தினமலர், துக்ளக் போன்ற ஊடகங்களும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை. திராவிட இயக்கங்கள் வீரியத்துடன் செயல்பட்ட அக்காலத்தில் தமிழ்மக்கள் தமிழர்களுக்கே உரிய குணங்களோடு, இனப்பற்றோடு, மொழிப்பற்றோடு, யாருடைய மூளைச்சலவைக்கும் ஆட்படாமல் 'தமிழர்களாய்' வாழ்ந்த ஆண்டுகள் அவை. தமிழருக்கு எதிரான எந்த நிகழ்வும், அது இந்திய அளவிலானாலும், உலக அளவிலானாலும் தமிழ்மக்களை கொதிப்படையச் செய்த அந்த காலகட்டத்தில் தான்,  சிங்களக்கைதிகளும் இலங்கை ராணுவத்தினரும் இணைந்து 37க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க்கைதிகளை கொழும்பு சிறைச்சாலையில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்த செய்தி தமிழகத்தை வந்தடைந்தது.

செய்தி பரவிய சிலமணி நேரத்திலேயே தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் ஆங்காங்கே கடையடைப்பு, தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபடத் துவங்கியிருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையத் தொடங்கினாலே, அதுவும் மத்தியில் கூட்டணியில் அல்லாத வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த குறிப்பிட்ட மாநில அரசுக்கு எந்நேரமும் ஆபத்துதான்! அதுவும் இந்திராகாந்தி போன்ற தடாலடி பிரதமர் இருக்கும்போது மாநில அரசின் தர்மசங்கடத்தை கேட்கவும் வேண்டுமா? தமிழகத்தில் நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த ஈழ ஆதரவாளரும் அப்போதைய தமிழக முதல்வருமான அமரர் எம்.ஜி.ஆர், பிரதமர் இந்திராகாந்திக்கு இலங்கை நிலவரத்தை விளக்கியும், உடனடி நவடிக்கை எடுக்கக்கோரியும் அவசரமாக ஒரு தந்தி அனுப்பினார். அதில், "இலங்கையில் சிங்களவெறியர்களும், சிங்கள ராணுவமும் இலங்கைத் தமிழர்களை இரக்கமற்றமுறையில் கொல்வது, கலவரம் விளைவிப்பது போன்ற செய்திகள் இலங்கையிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. அவை பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கின்றன. இலங்கை ராணுவத்தின் இதுபோன்ற செயல்கள் இங்குள்ள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் கடுமையான கொதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இலங்கைத் தமிழர்களை சிங்களவெறியர்களிடமிருந்து காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை உலகநாடுகள் அறியும் வண்ணம் இந்த பிரச்சினையை ஐ.நாவில் எழுப்பி நீங்கள் நடவடிக்கை எடுத்தால் நான் அதற்காக மிகுந்த நன்றியுடையவன் ஆவேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து முதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2ஆம் தேதி முழு பந்த் அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், கடைகள் என சகலமும் மூடப்பட்டன. பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த 'பந்த்'தில் ஆச்சரியமான, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய ஒரு விஷயம் நடந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மாநில அரசின் 'பந்த்'தில் மத்திய அரசும் பங்குகொண்டது! இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1980ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் இந்திராகாந்தி பிரதமர் ஆனார். மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்திராகாந்தி அதிரடியாக கலைத்த ஒன்பது மாநில அரசுகளில் எம்.ஜி.ஆரின் அதிமுக அரசும் ஒன்று. ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே தொடர்ந்தாலும் அதில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு மாறாக அதிமுக பெரும் வெற்றி பெற்றது. இலங்கைப் படுகொலை தொடர்பான 'பந்த்' விஷயத்தில் மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு முழு ஆதரவு கொடுத்ததை வருங்காலத்தில் காங்கிரஸ் அதிமுகவுடன் இணக்கமான ஒரு கூட்டணி அமைக்க முயன்றதன் எதிரொலியாகவே நாம் கருதவேண்டியிருக்கிறது. வெகு சமீபத்தில் தன் ஆட்சியைக் கலைத்திருந்தாலுமே கூட காங்கிரஸ் அரசுடன் எம்ஜிஆர் இணக்கமாகவே இருந்தார்.  

வெற்றிகரமாக முடிந்த 'பந்த்'தைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்திராகாந்தி விடுத்த எச்சரிக்கையில், "இலங்கை சம்வங்களைப் பார்த்துக்கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது. அங்கு நடப்பது இலங்கை உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும் அதில் இந்திய சுற்றுலா பயணிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இலங்கை ஆதரவுப் போக்கு அப்போதே தொடங்கிவிட்டதை தான் இந்த அறிக்கை நமக்குக் காட்டுகிறது. இனப்படுகொலையை கண்டித்திருக்க வேண்டிய கண்டன அறிக்கை சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதற்கான கண்டனமாக வெளிப்பட்டது.   

ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த தமிழ் மக்களுக்கும், திமுக போன்ற ஈழ ஆதரவு கட்சிகளுக்கும் இந்த கண்துடைப்பு கண்டனம் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தாலுமே கூட மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து ஆகஸ்டு 5ஆம் தேதி ரயில் நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். எம்.ஜி.ஆர் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டியும் கலைஞர் அதை ஏற்க மறுக்க, பின் எம்ஜிஆர் மத்திய அரசை வேண்டி அன்று ஒருநாள் மட்டும் ரயில்களை நிறுத்தச் சொன்னார். அவர் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 5ஆம் தேதி காலை 6மணிமுதல் இரவு 8மணிவரை தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அனைத்தும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இவ்விஷயத்தின் போது கிட்டத்தட்ட அதிமுகவும் காங்கிரசும் தான் கூட்டணிக் கட்சிகள் என்பது போன்ற தோற்றமே பொதுமக்களிடையே ஏற்பட்டது. (1984ல் ஜெயலலிதா எம்.பியாக்கப்பட்ட போது அவர் இந்திராவை சந்தித்து ஆசி பெற்றதை இவ்விடத்தில் நினைவு கூர்தல் அவசியம்.) ஒருவழியாக திமுகவின் போராட்டத்தை நடைபெறவிடாமல் எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக மத்திய அரசின் உதவியுடன் தடுத்தார். தமிழக ஆட்சியாளர்கள் என்னதான் ஈழ ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்ட ஆட்சியாளர்களாக, போராட்டங்களுக்கு எதிரானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு உதாரணம். தியாகி முத்துக்குமார் மரணத்தின் போது போராட்டங்களைத் தடுக்க அப்போதைய திமுக அரசு கடைபிடித்ததும் இதே போக்கைதான். எந்தக் கட்சியாய் ஆனாலும் எதிர்க்கட்சியாய் இருக்கும்போதுதான் போராட்டகுணம் துளிர்க்கும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது வாடிவிடும்! காலம்காலமாக நடைமுறை இதுதான். என்ன செய்வது, இந்திய மத்திய அரசின் அதிகாரம் அப்படி! நினைத்தால் அடுத்த நொடி கலைப்புதான்.

மாநில, மத்திய அரசுகளின் இந்த கூட்டுச்செயலுக்குப்பின் திமுக பொதுக்குழு என்ன செய்வது என கலந்தாலோசித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பிக்களான வைகோவும், எல்.கணேசனும் (அப்போது வைகோ திமுக சார்பாக டெல்லியில் சுழன்ற போர்வாள்) மேற்கொண்டிருந்த உண்ணாநோன்பை மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை. மேலும் எத்தனையோ நாடுகளின் பிரச்சினைகளை ஐநாவில் எழுப்பிய இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை ஐநாவில் எழுப்பவேண்டும் என எழுந்த எண்ணற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்து மெளனம் சாதித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை சென்றபோது அங்கிருக்கும் தமிழர் தலைவர்களை அவர் சந்திக்க இயலாத சூழ்நிலையும், அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரர் இங்கு வந்து நிலைமைகளை விளக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருந்ததேயொழிய அங்கிருக்கும் தமிழர் தலைவர்களிடம் கருத்துக் கேட்க மத்திய அரசோ மாநில அரசோ தயாராக இல்லை. இதையெல்லாம் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டு குற்றம் சாட்டிய திமுக தலைவர் கலைஞரும், பொதுச்செயலாளர் அன்பழகனும் தத்தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஆகஸ்டு 10ஆம் தேதி அதிரடியாக ராஜினாமா செய்தனர். தமிழ் இனப்படுகொலை குறித்து மத்திய அரசு குறைந்தபட்ச கண்டனம் கூட தெரிவிக்கவில்லையென்றும் (மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்திய சுற்றுலாப்பயணிகள் குறித்த கவலைதான் இருந்ததேயொழிய ஈழத்தமிழர்கள் பற்றிய அக்கறை இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எரிகிற தீயில் எண்ணை ஊற்றும் விதமாக, இலங்கைப் படுகொலைகளை கண்டித்து நெடுமாறன் ஏற்பாடு செய்திருந்த தியாகப்பயணத்தில் பங்கேற்போரை இந்திய அரசு பாதியிலேயே தடுத்துவிடும் என்று ஏளனமாக அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். (இதுகுறித்தும் கலைஞர்-அன்பழகன் கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது) 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றும் இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு என்றும் ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள அரசியல்வாதிகள் அறிக்கைமேல் அறிக்கையாக விடுத்ததை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்! ஆரம்பகாலம்தொட்டே இந்திய அரசு இலங்கையின் சொல்படி நடந்துவந்திருக்கிறதேயொழிய சுயமாகவோ, மக்கள் நலனில் அக்கறை கொண்டோ முடிவெடுத்ததாகத் தெரியவில்லை. வட இந்தியர்களுக்கும் சிங்களர்களுக்கும் இன ரீதியாக இருக்கும் வரலாற்றுத் தொடர்பும் இதற்குக் காரணம் எனலாம். வட இந்தியர்கள் வரலாற்று ரீதியாக தமிழினத்தைவிட சிங்கள இனத்திற்கு நெருக்கமானவர்கள்! நிலைமை இப்படியிருக்க இந்திய அரசிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?

கலைஞரின் ராஜினாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பாக அதாவது ஆகஸ்டு 7ஆம் தேதி நெடுமாறன் ஏற்கனவே அறிவித்தபடி திமுகவின் முழு ஆதரவுடன் தியாகப்பயணமாக இலங்கைக்கு செல்ல மதுரையில் இருந்து புறப்பட்டார். அவருடன் குன்றக்குடி அடிகளாரும், குமரி அனந்தனும் இருந்தனர். நெடுமாறன் குழுவினர் படகில் ஏறும்வரை காத்திருந்த தமிழக போலீசார் படகில் ஏறி பத்து மீட்டர் பயணப்பட்டவுடன் மோட்டர் படகில் சென்று அவர்களை கரைக்கு அழைத்துவந்தனர். நெடுமாறனின் படகின் பின்னே நீந்திச்செல்ல முயன்ற 200 தமிழர்களும் கைது செய்யப்பட்டு கரையில் விடுவிக்கப்பட்டனர். அதாவது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சொன்னதைப் போலவே தான் நடந்தது!! இந்த சம்பவத்தைப் பற்றி அறிந்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமே ஏற்ப்பட்டது. எவ்வளவு துணிச்சலான, உயிரைப் பற்றி கவலைப்படாத எதிர்வினை! 2009ல் சட்டக்கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை விட்டதால் எங்களால் போராட முடியவில்லை எனச் சொன்ன 'தமிழக நவயுக போராளிகள்' எங்கே, நீந்திச்சென்ற இவர்கள் எங்கே!!! கரைக்கு நெடுமாறனை அழைத்துவந்த காவல்துறை இலங்கையில் இருந்து தமிழ்த்தலைவர் அமிர்தலிங்கம் அனுப்பியிருந்த கடிதத்தை நெடுமாறனிடம் கொடுத்தனர். அதில் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் கூட்டம் கலைந்து சென்றது.

ஒருவழியாக தமிழகத்தில் பதற்றம் தணிந்தபின் இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகம் வந்துசேர்ந்த குட்டிமணியின் மனைவி ராஜரூபராணிக்கு எம்.ஜி.ஆர் அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. அவர்கள் வசிக்க வீடு ஒதுக்கப்பட்டு, மாதம் 1000ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அவர்களின் குழந்தைகள் இலவசமாக பள்ளியில் படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது அவர்கள் கோரிக்கையை ஏற்று அதன்படி படிப்புக்காக அதுவரை அவர்கள் செலவழித்திருந்த 7500ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழக ஆட்சியாளர்கள் என்றுமே மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதற்கு 1983 ஜூலை அரசியல்நிகழ்வுகள் ஒரு உதாரணம். மத்திய அரசின் மூலம் எம்.ஜி.ஆரின் கைகள் கட்டப்பட்டிருந்ததேயொழிய அவர் மறைமுகமாக புலிகளுக்கு உதவியதை நாம் மறுக்கமுடியாது. இப்படிப்பட்ட, ஈழத்தின்பால் பெரும் அக்கறைகொண்ட தலைவருக்குப் பின் அதிமுக தலைவராக ஆன ஜெயலலிதா தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடைவர முக்கிய காரணமாக இருந்தவர் என்பதும், அதை எதிர்த்து எம்.ஜி.ஆரின் விசுவாசமான தொண்டர்கள் யாருமே இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை என்பதும் காலம் நிகழ்த்திய ஆச்சரியமான கொடுமை!

Monday, July 16, 2012

பில்லா2 மொக்கையா? இல்லையா?

இந்தியால வெளிவந்திருக்க முதல் prequel படம் பில்லா2! "நாம் வாழனும்னா யார வேணாலும், எத்தனபேர வேணாலும் கொல்லலாம்"ங்குற டயலாக் தான் பில்லா2வோட கரு-கதை-திரைக்கதை-வசனம் எல்லாமே! முதல்ல மைனஸ் எல்லாம் வரிசையா சொல்லிறேன். ஒன்னுமே இல்லாம அகதியா வர்ற பில்லா கொடூர-கோடீஸ்வர டான் ஆகுறதுதான் ஒன்லைன்! கதைனு ஒன்னுமே இல்ல. திரைக்கதை இருக்கு, ஆனா பயங்கர மட்டம், அதாவது எந்த ஏற்ற இறக்கமும் இல்லாத ஃப்ளாட் (மட்டம்) திரைக்கதை! எந்த காட்சியும் மனசுல பதியிற மாதிரி இல்ல, சீட் நுனிக்கு வரவைக்கிற மாதிரி இடைவேளை காட்சி கூட கிடையாது! ரெண்டு மெயின் வில்லன்கள், 100க்கும் மேற்ப்பட்ட சைடு வில்லன்கள், பல துப்பாக்கிகள், ரெண்டு ஹீரோயின்கள், 200கொலைகள்.. இதையெல்லாம் கலந்து கட்டி 'Plot' அமைச்சு ஒருமாதிரியா ஒரு படத்த ரெடி பண்ணிருக்காங்க. படம் எங்கயுமே ஏத்த இறக்கமில்லாம ஒரே சீரா போறது செம கடுப்பு. ட்விஸ்ட், டர்ன் ஒரு சீன்ல கூட இல்ல. ஆரம்பத்துல பஞ்ச் வசனங்கள் நல்லா இருந்தாலும் அஜித் பேசுற எல்லாமே பஞ்ச் வசனமா இருக்குறது ஓவரு! ஒரு மனுசன் எப்ப பாத்தாலும் பஞ்சாவேவா பேசுவான்!?

இயக்குனர் சக்ரி டொலெட்டி தேறுவதற்கான வாய்ப்பு சுத்தமா இல்ல. புது டெக்னாலஜி தெரிஞ்சு அதை உபயோகிக்க தெரிஞ்சா மட்டுமே நல்ல இயக்குனர்னு அர்த்தமில்ல. திரைக்கதையை படிக்கிறப்பயே ஏற்ற-இறக்கம், முடிச்சுக்கள் இல்லாம இவ்ளோ flatஆ இருக்கேனு தோணிருக்கவேணாமா? பில்லாங்குற புத்திசாலியான கேரக்டரை மூளையவே உபயோகிக்கவே விடாம, வெறும் சீரியல் கில்லர் மாதிரி காமிச்சிருக்கிறது படு அபத்தம். ஒரு ஹீரோயின் ப்ரூனா அப்துல்லா ஃப்ராடுனு
பில்லா கண்டுபுடிக்காமயே இருக்குறதெல்லாம் படுமொக்கை! எவ்ளவோ நல்ல ட்விஸ்ட் காட்சிகளை வச்சிருக்கலாம்! ஆனா அப்படி ஒன்னுமே இல்ல. பயங்கர ரேஞ்ச்ல ஆக்சன் படம்னு முடிவு பண்ணிட்டு அதுல போயி அக்கா பொண்ணு, மாமா மேல ஒரு தலை காதல்னு மொக்கைய போடுறதுக்கெல்லாம் எப்படி இயக்குனருக்கு மனசு வந்துச்சுன்னே தெரில! பேசாம பார்வதி ஓமனக்குட்டன் கேரக்டரை அஜீத் தங்கச்சியா காட்டிருக்கலாம். இந்தியால இருக்க அஜித், க்ளைமாக்ஸ்ல திடீர்னு பொரேவியா நாட்ல இருக்க வில்லன் ஃபேக்டரில துப்பாக்கியோட ஓடுறதெல்லாம் இயக்குனரோட உச்சக்கட்ட சரக்கின்மை! சுத்தமா கற்பனைங்குற சரக்கு இல்ல! சக்ரி டொலெட்டி கமலுக்கு ஒப்புக்குச்சப்பாணி இயக்குனரா இருக்கத்தான் லாயக்குனு படுது! ஆனா ஒரு ஆக்சன் படத்த குத்துப்பாட்டு, காமடினு கண்டத சொருகாம முழு ஆக்சன் படமா மட்டும் எடுக்க முயற்சி பண்ணதுக்காக மட்டும் இயக்குனர பாராட்டலாம்.
இப்படி எக்கச்சக்க ஓட்டைங்க படத்துல இருக்கு. ஆனா ஒரே ஒரு பெரிய துணியை வச்சு எல்லா ஓட்டையையும் அடைச்சிட்டாங்க! அந்த துணி பேரு அஜீத்!

பொதுவா கமல் நடிக்கிற படத்துல ஒவ்வொரு ஃப்ரேம்லயும் கமல் ஆக்கிரமிச்சிருப்பார். எங்க பாத்தாலும் கமல் கமல் கமல்னு இருக்கும். அது சில நேரம் நல்லாருக்கும், சில நேரம் பயங்கர எரிச்சலா இருக்கும். அந்த பாணி இப்ப தெரிஞ்சோ தெரியாமயோ அஜீத்கிட்ட வந்திருக்கு. ஆனா கொஞ்சம் கூட எரிச்சலா இல்லாம மங்காத்தா, பில்லா2னு அடுத்தடுத்து அந்த ஃபார்முலா செமயா வொர்க்கவுட் ஆகுது! அதுக்கு முழு காரணம் அஜீத்தோட அலட்டல் இல்லாத 'subtle' நடிப்பு! சின்னதா ஒரு பார்வை, லேசான கழுத்தசைப்பு அவ்ளோதான்.  ஸ்டைலா நடிக்கிறேன்னு இடுப்புல கைய வச்சுக்கிட்டு, வில்லனுக்கு உம்மா கொடுக்குற மாதிரி நெருக்கமா போயி "மந்திரினு பாக்கமாட்டேன், முந்திரினு நக்க மாட்டேன்"னு உளறி கழுத்தறுக்காம, இயல்பாவே தனக்கு ஸ்டைல் இருக்குனு சின்ன சின்ன அசைவுகள்லயே அலட்டல் இல்லாம சொல்லிறாரு அஜித்.

அஜித்துங்குற ஆளு ஒரு நடிகன்ங்குறத தாண்டி ஒரு தமிழ்சினிமாவுக்கு புது phenomenon. அரசியல்வாதி வில்லன், "எனக்காக லட்சம் பேரு வருவாங்க"னு ஹீரோகிட்ட சொல்றப்ப வழக்கமா நம்ம மாஸ் ஹீரோக்கள் என்ன பண்ணுவாங்க? கேமிராவ பாத்து, "எனக்காக கோடி பேரு வருவாங்கடா"னு தான சொல்வாங்க. ஆனா அஜித் கூலா "அவங்கள்ளாம் ஓட்டுதான் போடுவாங்க. உயிரக் கொடுக்க மாட்டாங்க"னு சொல்றாரு! தமிழ்சினிமாக்கு மக்களை ஏமாத்தாத, ரசிகர்மன்றம் இல்லாத, பேருக்கு முன்னாடி பட்டம் போட்டுக்காத இந்த மாதிரி நேர்மையான ஆக்சன் ஹீரோக்கள் தான் தேவை. இதத்தான் புது phenomenonனு சொல்றேன். வசன உச்சரிப்புல ஒரு காலத்துல அஜீத்துக்கு இருந்த பிரச்சினை இப்ப சுத்தமா இல்ல. "ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும்"னு பேசுறப்ப அதிருது! ஆனா பில்லா2, பில்லா1க்கு முன்னாடி நடக்குற கதை. இந்த படத்துக்கு கொஞ்சம் ஒல்லியாகியிருக்கலாம். ஆனா அது ஒன்னும் பெருசா உறுத்தல. திரையுலகத்துல ஒரு உச்சக்கட்ட இடத்துக்கு போனதுக்கு அப்புறமும், உடம்பு பூரம் அத்தன காயம் பட்டதுக்கு அப்புறமும் ஹெலிகாப்டர்லலாம் தொங்கி சண்டை போடனும்னு என்ன தேவை இவருக்கு? தரைல நின்னபடி மிதிச்சாலே வில்லன் எண்பதடி பறக்குற ஆக்சன் ஹீரோக்கள் மத்தில இவர என்ன சொல்றதுனு தெரில! 'ஆக்சன் ஹீரோ' அப்படிங்குற இடத்தை மத்தவங்க மாதிரி டூப் போட்டு ஜிம்மிக் பண்ணி வாங்கல, கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருக்காரு! அசாதாரண உழைப்பு, ஈடுபாடு.

படத்துல இன்னொரு ஹீரோ யுவன். தேவையில்லாம பாட்டு வைக்கனுமேனு வலுக்கட்டாயமா வைக்கிறதுக்கு பதிலா OSTயாவே சிடி ரிலீஸ் பண்ணலாம். பின்ணணி இசை அட்டகாசம். காமிராவும் அருமை. காமிக்ஸ் மாதிரி வர்ற ''மிருகம்'' பாட்டுல ஒளிப்பதிவு சூப்பர். படத்த தாராளமா பாக்கலாம். போர் அடிக்காது ஆனா அதே நேரம் விறுவிறுப்பும் இருக்காது. சண்டை காட்சியெல்லாம் ரொம்ப அருமை. எல்லாத்துக்கும் மேல அஜீத் மீண்டும் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு! அதுக்காகவே பாக்கலாம்!  அப்புறம் இன்னொரு விசயம், தயவுசெஞ்சு அஜீத்தை இனிமே விஜய் கூட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்க! பண்றதுக்கு முன்னாடி விஜய் அதுக்கு தகுதியானு பத்து தடவ யோசிச்சுக்கங்க!  :-)

Thursday, June 7, 2012

பெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள்- தொடர் 1கோவையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியை அனுஷாவுக்கு டாக்டர்களை விட தவளைகளை மிகவும் பிடிக்கும். ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஆவதையே தன் முழுமுதல் லட்சியமாகக் கொண்டு அதை நோக்கி முன்னேறிய அந்த குட்டிப்பெண்ணுக்கு டாக்டர்களையும், அவர்கள் தொழிலையும் பிடிக்காமல் போனதற்கு காரணம் இறந்து இரண்டு ஆண்டுகளான ஒரு உறைந்துபோன தவளையும், இரண்டு உயிர்த்தோழிகளும் தான்!

எட்டு வருடங்களுக்கு முன்னால் வந்துபோன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. பத்தாம் வகுப்பில் முதல் முதலாக அனுஷா கலந்துகொள்ளப்போகும் உயிரியல் லேப் (zoology lab) அது. எத்தனையோ உயிரியல் லேபுகள் அதற்கு முன் அவளை கடந்திருந்தாலும் முதல் முதலாக தவளை என்ற உயிரியல் பொருளை வெட்டப்போகிறாள். ஏற்கனவே அனுஷாவின் அப்பா அவளிடம் "இது மத்தவங்களுக்கெல்லாம் சாதாரண லேபா இருக்கலாம் கண்ணு. ஆனா டாக்டராக போற உனக்கு இதான் மொதல் படி. நீ வெட்டப்போறது தவளை இல்ல, மனுசன்னு நினைச்சுக்க. அதுதான் உன் முதல் பேஷண்ட்" என உசுப்பேற்றிவிட்டிருந்தார்.

அனுஷா இது தொடர்பாக பலரிடம் விசாரித்தபோது ஒவ்வொருவரும் பலவிதமாகச் சொன்னார்கள். அனுஷாவின் தம்பி அன்பு, "பர்த்டே கேக் வெட்டுற மாதிரிதான்க்கா. ரொம்ப ஈசியா இருக்கும். சாஃப்டாக்கி தான் வச்சிருப்பாங்களாம். நீ டக்குனு வெட்டிரலாம். ஆனா வெட்டுறப்ப கொஞ்சம் தள்ளி நின்னுக்க. என் ஃபிரண்டோட அண்ணன் வெட்டுனப்ப தவளை ரத்தம் தெறிச்சுச்சாம். சோ அது மட்டும் தான். மத்தபடி நோ ப்ராப்ளம்." எனச் சொல்லியிருந்தான். இதுபோல் அந்த லேபிற்கு முந்தைய சனியும், ஞாயிறும் லேப் குறித்த ஆராய்ச்சியிலேயே முடிந்தது. டாக்டர் அத்தையிடம் இதற்காகவே சென்று லாவகமாக அறுவைக்கத்தியை பிடிப்பது எப்படி என்பதற்கும் பயிற்சி பெற்றிருந்தாள் அனு. மொத்தத்தில் தான் தவளை வெட்டும் நாளை ஒரு போர்வீரனின் துணிவோடும், பயிற்சியோடும் சந்திக்கத்தயாராக இருந்தாள்!

அனுவின் குடும்பத்தில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்தது. அனைத்து மாணவர்களுக்கும் அறுவைக்கத்தி உள்ளிட்ட லேப் சாதனங்கள் கொடுக்கப்பட்டது. எந்தப் பக்கம் எதை பிடிப்பது என எல்லாருமே குழம்பியிருந்த நிலையில், அனு மிகவும் அழகாக அவளது அறுவைக்கத்தியைப் பிடித்ததைப் பார்த்த அவளது லேப் இன்ஸ்ட்ரக்டர் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவளை சொல்லித்தரச் சொன்னது அவளை அனைவரது பொறாமைக்கும் உள்ளாக்கியது. அவளது நெருங்கிய தோழிகளான லதாவும், நித்தியும் கூட அவளின் இந்த அதீத ஆர்வத்தை கடுப்போடுதான் பார்த்தார்கள். ஆனால் அனு இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக ஓட்டலில் உணவுக்காக காத்திருக்கும் பசித்த விருந்தாளியைப் போல தன் தவளைக்காக காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அனு எதிர்பார்க்காத அந்த அநியாயம் நிகழ்ந்தது. ஆளுக்கொரு தவளை என அளிக்காமல் மூன்று பேர் கொண்ட குழுவுக்கு ஒரு தவளை என அளித்திருந்தார்கள். தனித்தனியாக ஃபீஸ் மட்டும் வாங்கிக்கொள்ளும் பள்ளியின் இந்த அநீதியை அனுவால் ஜீரணிக்க முடியவில்லை! இருப்பினும் அவள் குழுவில் லதாவும், நித்தியும் இருந்தது அவளுக்கு லேசான ஆறுதலைத் தந்தது. தனக்குள் இருந்த டாக்டரை தன் நெருங்கிய தோழிகளின் முன் அரங்கேற்றப்போவதை நினைத்து அவளுக்கு மகிழ்ச்சிதான்.

அதீத பச்சை நிறத்தில் இருந்த தவளையின் நாக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. கல் போல் கடினமாக இருந்த அதன் கால்களும், கைகளும் அகலமாக விரிந்து இருபுறமும் நீட்டியபடி இருந்தன. அடர்ந்த காபி கலரில் குச்சி போல் வெளித்தள்ளியிருந்த தவளையின் நாக்கு அனுவுக்கு தவளை புதியதுதானா அல்லது ஏற்கனவே தன் சீனியர்களால் உபயோகப்படுத்தப்பட்ட பழைய தவளையா என்ற அச்சத்தைத் தந்தது. அவர்கள் இந்த தவளையை வெட்டும்போது நாக்கை தொலைத்துவிட்டு எதோ குச்சியை சொருகி வைத்துவிட்டார்களோ என்ற ஐயமும் அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் தவளையின் உடம்பில் எங்குமே தையல் இருப்பதற்கான அடையாளம் இல்லாததால் அது உபயோகிக்கப்படாத தவளையாக தான் இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.

இப்படி தீவிரமாக அனுவுக்குள் ஆயிரம் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, "அதோட கையப் பாரேன். ஐ லவ் யூ சொல்றப்ப அதை அப்படியே வெட்டிட்டாங்க போல பாவம். ஆனாலும் ஆராய்ச்சிங்கிற பேருல இப்படி தவளையெல்லாம் புடிக்கிறது ரொம்ப கொடுமை நித்தி. அது லவ் பண்ண கேர்ள் தவளையையாச்சும் உயிரோட விட்டாங்களோ என்னவோ பாவம்" என்று உச்சுக்கொட்டியபடியே வருத்தமாக சொன்னாள் லலிதா.

நித்தி, "என்னடி உளர்ற?. தவளைக்கு எப்பிர்றீ கேர்ள் ஃபிரண்டு இருக்கும்?"

"நமக்கெல்லாம் க்ரீட்டிங் கார்ட்ஸ் மாதிரி தவளைக்கெல்லாம் வோக்கல் கார்ட்ஸ்னு ஒன்னு இருக்கு. அது வழியாதான் ப்ரொபோஸ் பண்ணுமா. போன லெசன்ல வந்துச்சேடி." என்றாள் லலிதா.

"ஹ்ம்ம்.. இருக்கும் இருக்கும்.. அத விடு. இப்ப யாரு இதை வெட்டப்போறா? நான் கண்டிப்பா வெட்ட மாட்டேன்பா. இதப் பாத்தா எனக்கு சிக்கன் நியாபகம் வருது. ரத்தம், ஈரல், நெஞ்சுனு ஒவ்வொன்னா வெளிய வரும். எனக்கு பாத்தாலே ஒமட்டும். அதும் சில சமயம் நம்ம அதெல்லாம் பண்றப்ப சிக்கன் உயிரோட இருக்குமா, என் தம்பி சொல்லுவான். பாவம் அதுங்க" என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு எதோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டவள் போல சொன்னாள் நித்தி.

"திங்கிறப்ப மட்டும் நல்லாருக்கா! அதுனாலதான் எப்பவுமே க்ளீன் பண்ணி ஃப்ரிட்ஜ்ல வச்ச சிக்கன் வாங்கிரனும். ஆனா எனக்கு இந்த ஃப்ரிட்ஜ்ல வச்ச தவளைய பாத்ததுல இருந்து இனிமே அதக்கூட சாப்புடுவனாங்குறது டவுட்டுதான்." இது லலிதா.

"அப்படி சொல்ல முடியாதுடி. இந்த வாரம் ரீடர்ஸ் டைஜஸ்ட்ல ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அமெரிக்கால ஒரு ஆண்ட்டி ஃப்ரோஜன் சிக்கன் வாங்கி வெட்டிருக்காங்க. கரக்ட்டா அவங்க வெட்டுறப்ப அந்த சிக்கன் ஒரு தடவை துடிச்சுட்டு அப்புறமா செத்துருச்சாம்."

"என்னது ஃப்ரோஜன் சிக்கன் துடிச்சுச்சா?!!! ரத்தம் வந்துச்சாமா அதுல?" அதிர்ச்சியுடன் கேட்டாள் லலிதா

"அதப்பத்திலாம் ஒன்னும் போடல. ஆனா அது துடிக்கிறப்ப அவங்க கிச்சன் ஃபுல்லா ஒரு லைட் வந்துட்டு போயிருக்கு."

"இப்ப அந்த ஆண்ட்டி என்ன ஆனாங்க?"

"ஒரு வாரம் கழிச்சு அதே டேபிள்ல கையில அதே கத்தினால வெட்டி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்"

"அய்யயோ.. என்னடி சொல்ற? அந்த சிக்கன் மாதிரி அரைகுறையா செத்தாங்களா? இல்ல முழுசா உண்மையாவே செத்துட்டாங்களா?"

"அது அவங்கள யாராச்சும் டிசக்ட் பண்ணி பாத்தா தான் தெரியும்!" சிரிக்காமல் சீரியசாக சொன்னாள் நித்தி. இப்படி இருவரும் சீரியசாக பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் தவளையை வெட்டும் ஆவலோடு நின்றுகொண்டிருந்த அனுஷா கேட்டுக்கொண்டே இருந்தாள். திடீரென லேப் அதிரும் வண்ணம் ஒரு சத்தம் கேட்டது. அனு மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தாள்.

அவள் பங்குபெற்ற கடைசி உயிரியல் லேப் அதுதான். அதன்பின் யார் யாரோ எவ்வளவோ கெஞ்சியும் காய்கறி வெட்ட கூட அவளை யாராலும் கத்தி எடுக்க வைக்கமுடியவில்லை. பின் தட்டுத்தடுமாறி பத்தாவது முடித்து, பின் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இன்று பேராசிரியையாக இருக்கிறாள். அந்த புகழ்பெற்ற சம்பவத்துக்கு காரணமான அவளது நெருங்கிய தோழிகள் லலிதாவும், நித்தியும் டாக்டர்களாக இருக்கிறார்கள். அந்த தவளையைப் பற்றிய தகவல்கள் ஏதும் பின் காணக்கிடைக்கவில்லை. லலிதா-நித்தியின் புண்ணியத்தில் ஏதேனும் அமிலம் நிறைந்த குடுவையில் நீந்திக்கொண்டிருக்கலாம்.  தவளையை டிசக்ட் செய்து டாக்டர் ஆக துடித்த அவள் கனவை, எந்த அறுவை ஆயுதமும் இல்லாமலேயே லலிதாவும்-நித்தியும் டிசக்ட் செய்திருந்தார்கள். அனுவுக்கு டாக்டர்கள் மேல் வெறுப்பும், தவளைகள் மேல் இரக்கமும் இப்படிதான் வந்தது.

அடுத்து நாம் பார்க்கப்போவது பார்த்திபனைப் பற்றி! மேற்கண்ட 'உயிரியல் லேப்' சம்பவம் நடந்துகொண்டிருந்த அதே நாளில் அதே நேரத்தில் அங்கிருந்து 260கிமீ தொலைவில் மதுரையில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு இரண்டு மாணவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து ஒரு ஐந்து மீட்டர் தள்ளி அவர்களது பைகள் ஒன்றின்மேல் ஒன்றாக கிடந்தன. இருவரில் மாநிறமாய் ஒருவன் நடுவில் அமர்ந்திருக்கிறானே அவன் தான் பார்த்தீபன். ஒரு நீளமான நூலின் ஒரு முனை அவன் கையிலும் மற்றொரு முனை ஒரு ஓணானின் கழுத்திலும் கட்டப்பட்டிருந்தது. அவன் குண்டாய் இருந்த மற்றொருவனிடம் உரக்கக் கத்திக்கொண்டிருந்தான்,

"மாப்ள. இன்னும் மூக்குப்பொடி போட்டுவுடுடா அப்பதான் நல்லா ஆடும். யோசிக்காம போடு மாப்ள!"

"டேய் பார்த்தி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா? செத்து கித்துர போதுடா!" என்றான் கையில் மூக்குப்பொடி மட்டையுடன் இருந்த சரவணன்.

"ஒங்கொப்பத்தா மூக்குலயா போடுற? ஓணாண்டி மூக்குதான! போட்றா பேசாம.. பெரிய காந்தி இவரு.."

உத்தரவு நிறைவேற்றப்பட்டபின் பாவப்பட்ட அந்த ஓணான் ஒன்பது லிட்டர் மது அருந்தியதைப் போல தள்ளாடியது! இப்படி உத்தரவிட்ட பார்த்தியின் ஆறாவது காதலியாக ஆகப் போகிறவள் தான் சற்றுமுன் லேபில் மயங்கி விழுந்த அனுஷா! ஓணான் ஆடி, மயங்கி, அடங்கியது!!!

-தொடரும்.

Wednesday, June 6, 2012

இனி ஈழம் குறித்த இந்திய ஆதரவுக்கு தமிழகத்தின் உதவி என்ன? ஈழமுரசு கட்டுரை.


இந்திய குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட காலந்தொட்டே இந்திய அரசியல்வாதிகள் என்றுமே ஒரு விஷயத்தில் ஒற்றுமையான கருத்து கொண்டிருந்தது கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து ஏதுமில்லாமல் இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அது தனி ஈழம் அமையக்கூடாது, தனி ஈழம் தேவையில்லை என்பதில் தான்!

இந்திய-இலங்கை உறவு வரலாற்றில் முன் எப்போதையும் விட நெருக்கம் மிதமிஞ்சி நிற்பது தற்போதைய மன்மோகன்(சோனியா)-ராஜபக்சே ஆட்சியில்! ஒரு தனிமனிதர் கொலையுண்டதற்கு ஒட்டுமொத்த இனத்தையே பழிவாங்கத் திரிந்த கூட்டமும், இனவெறியில் தமிழர்களை அழிக்க அலைந்த கூட்டமும் சரியாக இணைந்த புள்ளியில் அசைக்கமுடியாத நட்பு முளைத்து, அதில் வெற்றியும் பெற்றபின் இன்று விருட்சமாகியிருக்கிறது. இந்தியாவில் ஆட்சி மாறினால் கூட்டுசதியில் தளர்ச்சி வரலாம், தனி ஈழத்திற்கு இந்தியாவில் சாதகமான சூழ்நிலை உருவாகலாம் என காத்திருந்தவர்களுக்கு சமீபத்திய தன் மாநாட்டுப் பேச்சில் பேரிடியை பரிசாக அளித்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் என்ற பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தனி ஈழத்தை பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் விரும்பவில்லை, தமிழக அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக தனி ஈழ கோரிக்கையை கையிலெடுக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.

இந்திய அளவில் காங்கிரசின் வாக்குவங்கியும், அக்கட்சியின் மீதான நம்பிக்கையும் பல்வேறு உள்நாட்டு பிரச்சினைகளால் பலத்த அடி வாங்கியிருக்கும் சூழ்நிலையில் ஆட்சிமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகியிருக்கிறது.  ஈழப்போர் உக்கிரமாய் நடைபெற்று ஏராளமான உயிர்கள் பறிபோய் கொண்டிருந்த சமயத்தில், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன், "ஈழத்தமிழர் பிரச்சினையை இந்துக்கள்-பவுத்தர்கள் இடையேயான மதப்பிரச்சினையாக ஆரம்பத்தில் இருந்தே பறைசாற்றியிருந்தால் இன்று பாஜகவின் முழு ஆதரவும் ஈழத்தமிழர்களுக்கு இருந்திருக்கும்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு அக்கட்சியின் தலைமையின் சுயநலத்தால் கட்சி முழுவதும் பரவிய ஒன்று. ஆனால் பாஜக இயல்பிலேயே ஒரு ஃபாசிச, நாஜிக்கட்சி. குஜராத்தில் இஸ்லாமியர்களை ஒழிக்க அது என்னவெல்லாம் செய்தது என நமக்குத் தெரியும். இல.கணேசனின் அந்த பேட்டியில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்பாவி உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கும் போது கூட, விழுந்த பிணங்களின் மேல் மதச்சாயம் இருந்தால்தான் ஆதரவு கொடுப்போம் என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிதான் நாளை இந்திய ஆட்சீபீடத்தில் அமரப்போகிறது. போதாக்குறைக்கு சுஷ்மாவின் ஈழ-எதிர்ப்பு நிலைப்பாடும் இப்போது சேர்ந்திருக்கிறது! இச்சூழ்நிலையில் அடுத்து வரவிருக்கும் ஆட்சியில் தனி ஈழத்திற்கான ஆதரவு இந்திய அளவில் எப்படி இருக்கும் என கணக்கிட்டால், எந்த மாதிரியான சாதகமான சூழ்நிலையும் இருக்காது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

ஆட்சிக்கு வர பலமான வாய்ப்புள்ள பா.ஜ.க தான் இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்றால் இந்திய ஊடகங்களின் ஈழ-நிலைப்பாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்! அமெரிக்கா இலங்கை மீது கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தபோது மிகப்பெரிய புயல் இந்திய ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் வீசியது. அப்படி ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது "அரசியல் ரீதி'யாக சரியா?" என்ற கேள்வி அந்த குறிப்பிட்ட டைம்ஸ் நவ் விவாதத்தில் எழுப்பப்பட்டது. அந்த கேள்வியே இந்திய ஊடகங்களின் அரசியல், தர்ம-நியாயத்தின் முகத்திரையை கிழித்துக் காட்டுவது போல் இருந்தது. எப்படியெனில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மனித உரிமை மீறல் சார்ந்தது. இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததா இல்லையா என்ற பிரதான கேள்வி, பல ஆதாரங்களுடன் எழுப்பப்பட்டு, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் உலக நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஊடகங்கள் வெளிப்படையாக இந்த வாக்கெடுப்பில் உள்ள மனித உரிமை பிரச்சினையை புறந்தள்ளிவிட்டு அதை அரசியல் ரீதியாக அணுகுவதைதான் மேலே இருக்கும் கேள்வி காட்டுகிறது. கேள்வி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? "இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததா இல்லையா?" என்பதாக இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சியை நடத்திய அர்னப் கோஸ்வாமி, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொண்டார், ஆனால் இந்தியா அதை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை விவாதப்பொருள் ஆக்கினார். அதாவது இலங்கை இந்தியாவின் அண்டை நாடு என்பதால் அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் கூட அதற்கு எதிராக வாக்களிக்க கூடாதாம், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து இருக்க வேண்டும் என்ற ரீதியில் அந்த விவாதம் சென்றது.

மேலும் அந்த விவாதத்தில் பங்கேற்ற ஓரிருவரைத் தவிர அனைவருமே இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை கண்டித்தே பேசினார்கள். கடைசியாக பேசிய குஷ்பு "இங்கு எல்லோரும் இந்தியாவின் இந்த முடிவால் அண்டை நாடுகளிடம் உறவு கெடும் என பயப்படுகிறார்கள். ஆனால் பயத்தை விடவும் மானமும், மரியாதையும் பெரிது. இந்தியா தன் மானத்தையும், மரியாதையையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்து உலக நாடுகள் மத்தியில் காப்பாற்றிக் கொண்டுள்ளது", என்றார்.

அந்த விவாதத்தில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் மாபெரும் அறிவாளியும், எல்லாம் தெர்ந்த ஏகாம்பரம், சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான். அவர், "இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதால் அதனுடனான உறவு கெடுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் காஷ்மீர், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்களை உலக நாடுகள் தோண்ட வாய்ப்பிருக்கிறது. அது நமக்கு ஆபத்து."என்றும் பேசினார்.

சுப்பிரமணியன்சுவாமி இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எப்படி ஒப்புக்கொள்கிறார் பாருங்கள். இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரிந்துவிடும் என்பதால் இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமாம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் திரையில் கீழே ஓடிய வாசகர் கருத்துக்கள் 100% தமிழர்களுக்கு எதிராகவும், சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவாகவும் இருந்ததுதான். இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனையும் இது போன்ற விவாதங்கள் மூலம் சுப்பிரமணியன் சுவாமியாக மாற்றி வருகின்றன இந்திய ஊடகங்கள்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில்
ஐநா வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுத்ததை அடுத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "Chennai forces india to split from Asia, censure srilanka" (சென்னையின் நிர்ப்பந்தத்தின் பேரில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த காரணத்தால் ஆசியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா) என தலையங்கம் எழுதியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் சூழ்ச்சியால் அப்பாவி இலங்கை பாதிக்கப்பட்டுவிட்டதாகவும்(victimized) எழுதியிருந்தது.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கட்சிகளின் நிலைப்பாடுகள், ஊடகங்களின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் மனதில் கொண்டு கணக்குப்போட்டால் அது நமக்கு ஒருவிஷயத்தை தெளிவாக தெரிவிக்கும். இந்தியா ஒருகாலத்திலும் தனி ஈழத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை! சரி, ஈழம் அமைவதற்கு இந்தியாவின் ஆதரவு எதற்கு என இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய நாடான இந்தியாவை புறந்தள்ளவும் முடியாது. இலங்கை குறித்த எந்த முக்கியமான முடிவு எடுப்பதாயினும் இந்தியாவின் கருத்துக்கு உலக அளவின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது! அது இந்தியா பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை பிரித்துக்கொடுத்ததைப் போல் ஏன் இலங்கையில் இருந்து ஈழத்தை பிரிக்கமுடியாது? இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் அது நடந்திருக்கும் என்ற பரவலான பேச்சு ஒன்று உண்டு. அது முற்றிலும் தவறு. வங்கதேசம் முழுக்க முழுக்க இஸ்லாமியநாடு. அங்கிருந்த தலித்துகள் கூட பல ஆண்டுகளுக்கு முன்வே இஸ்லாமியர்களாக மாறியவர்கள். அந்நாட்டை பாகிஸ்தானில் இருந்து பிரித்தால் அதை ஒட்டி அமைந்திருக்கும் இந்திய மாநிலத்தில் எவ்விதமான பிரிவினை கோஷமும் எழாது என்பதை உறுதி செய்தபின்னே பிரிவினைக்கு இந்தியா துணை போனது! ஆனால் ஈழம் அப்படிப்பட்ட விஷயமல்ல. ஒருவேளை நாளை ஈழம் அமைந்துவிட்டால் இந்தியத்தமிழர்கள் மொழிரீதியாக, கலாச்சாரரீதியாக, இந்தியாவை விட ஈழநாட்டினுடன் தான் நெருக்கத்தை உணர்வார்கள். அது எக்காலத்திலும் இந்தியப் பிரிவினை கோஷத்திற்க்கு வழிவகுக்கவல்லது. அத்தகைய பெரிய 'ரிஸ்க்'கை இந்தியா எப்போதும் எடுக்காது!

ஆனால் இப்படி இலங்கைக்கு ஏகபோகமாக ஆதரவான இந்தியாவை எதிர்த்து இந்தியத்தமிழர்கள் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அது மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் தங்கள் எகோபித்த குரலை இலங்கைக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் பதிவு செய்ததன் எதிரொளியே அது! திருச்சி சிவா எம்.பி  இந்திய அரசு வாக்கெடுப்பைக் குறித்து எம்பிக்களுக்கு அளித்த நகலை இப்படி விமர்சித்தார், "ஒவ்வொரு முறையும் இந்திய அரசு இலங்கை அரசு அளிக்கும் அறிக்கையை நகலெடுத்து எங்களுக்கு அளிக்கிறதோ எனத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு இலங்கை என்ன செய்தாலும் எங்கள் ஆதரவு அதற்கு உண்டு என இந்தியா தன் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது" என்றார். ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியத் தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகவே எப்போதும் கருதிப் பேசும் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பதிலளித்துப் பேசிய கனிமொழி, "இது தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த மனிதர்களின் பிரச்சினை. இதை இந்தியா மனித உரிமை அடிப்படையில் அணுகவேண்டுமேயொழிய தமிழர்களின் பிரச்சினையாக மட்டும் குறுகிய நோக்கோடு அணுக கூடாது" என்றார்.  அதே நேரம் அதிமுக எம்பிக்களான தம்பிதுரை உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை நகலை பாராளுமன்றத்திலேயே கிழித்தெறிந்து தங்கள் அதிரடியான எதிர்ப்பைக் காட்டினார்கள். இருமுனைத்தாக்குதல் சரியாக வேலை செய்தது! இந்தியா பல ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு எதிராக தன் நிலைப்பாட்டை எடுத்தது! (வாக்களித்ததற்கு பின் மன்மோகன் ராஜபக்சேவிற்கு கெஞ்சும் தொனியில் கடிதம் அனுப்பியது வேறு விஷயம்!)

பொதுவாகவே ஜனநாயக நாடுகளில் மனித உரிமை, நீதி-நியாயம் போன்றவற்றுக்கு இல்லாத முக்கியத்துவம் ஓட்டுகளுக்கும், சீட்டுகளுக்கும் உண்டு! அதுவும் இந்தியா போன்ற உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயகநாட்டில் கேட்கவா வேண்டும்? வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியது மாண்டுபோன லட்சக்கணக்கான ஈழத்தமிழர் பக்கம் இருந்த நியாயம் அல்ல, பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு இருந்த நாற்பது எம்.பி சீட்டுக்கள்! அடுத்து எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாற்பது எம்பி சீட்டுக்களையும் எப்போதும் ஈழத்திற்கு ஆதரவாக கடுமையாக குரல் கொடுத்துக்கொண்டிருக்க வைப்பதே இந்தியாவில் தனி ஈழத்திற்கு இருக்கும் பலத்த எதிர்ப்பை சமாளிக்கும். நியாயம் எல்லாம் ஒருபுறமிருக்க எந்த முக்கிய முடிவை எடுக்கவைக்கவும் அரசியல் நிர்ப்பந்தம் அவசியம். இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் தங்களுக்கு இருக்கும் இந்த மிகப்பெரும் பொறுப்பை புரிந்து மத்திய அரசை வருங்காலங்களில் நிர்பந்திப்பார்களேயானால் ஈழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் நிச்சயம் இருக்கும்!

Related Posts Plugin for WordPress, Blogger...