Wednesday, November 16, 2011

ஏழைகளுக்கான மரணதண்டனையும், நீதிக்கொலை ஒழிப்பும்!


கேரளாவில் கோவிந்தசாமி என்பவர் ஒரு பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி, அந்த பெண்ணின் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை வன்புணர்வு செய்து, உடைமைகளை திருடியும் போயுள்ளார். அந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது! இந்த நிலையில் 'மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்தை' முன்னெடுத்திருக்கும் அல்லது ஆதரிக்கும் தோழர்கள் கோவிந்தசாமியையும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற சொல்வார்களா, சொல்கிறார்களா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டுள்ளது! என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது?

முதலில் ஒன்றை மரணதண்டனைக்கு எதிராக வாதிடுபவர்களும், மரணதண்டனைக்கு ஆதரவாக வாதிடுபவர்களும் புரிந்துகொள்ளல் வேண்டும். மரணதண்டனை ஒழிப்புப் போராட்டம் என்பது கோவிந்தசாமிகளுக்கு ஒரு மாதிரியும், பேரறிவாளனுக்கு ஒரு மாதிரியும் விதவிதமாக வடிவமைத்து முன்னெடுக்கப்படும் போராட்டமல்ல. எவருக்கும், செய்த குற்றம் எதுவாயினும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது, மரண தண்டனை எதற்குமே தீர்வாகாது என்பதே அதன் நோக்கம்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொலையான மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற போராட்டம் பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் இருந்து ஆரம்பித்ததல்ல. பல காலமாகவே மனித உரிமை ஆர்வலர்கள் போராடியே வந்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அது பரவலான வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அவ்வளவே! மேலும் மூவர் தூக்கு ரத்துக்காக போராடுவதற்கும், ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை ஒழிக்க போராடுவதற்கும் சம்பந்தம் இருந்தாலுமே கூட இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. ஏன்?

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு பெற்றுள்ள மூவருக்கும் நேர்மையான முறையில் விசாரணை வழங்கப்படவில்லை, அவர்கள் நிரபராதிகள் என்ற வாதத்தையெல்லாம் ஒரு விவாதத்துக்காக நாம் எடுத்துக்கொண்டாலும் கூட, அவை நியாயம் தான் எனினும் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூவரின் தூக்கை மேற்சொன்ன காரணங்களுக்காக நிறுத்துவதென்பது சாத்தியமே இல்லை. ஆனால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டும் கூட உடனே தூக்கை நிறைவேற்றாமல், கருணை மனுவை நிராகரிக்கவும் செய்யாமல் ஏற்கவும் செய்யாமல் 12 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் போட்டு கைதிகளையும் அவர்கள் உறவினர்களையும் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற ரீதியில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, நித்தம் நித்தம் மரணத்தை எதிர்நோக்கவைத்து, ஒரு கொடூர சாடிச மனப்பான்மையுடன் அவர்களை சித்ரவதைக்குள்ளாக்கி, அவர்கள் உறவினர்களையும் ஆறா துயரத்தில் ஆழ்த்தி, ஆயுள் தண்டனை அளவுக்கு தனிச்சிறையில் வைத்தபின் தூக்கிலிடுவது எந்த வகையில் நியாயம் என்பதே. ஆனால் இந்த காரணங்களை பொதுவான மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தில் நாம் கருத்தில் கொள்ள முடியாது. அதனால் இரண்டையும் ஒரே தட்டில் வைக்கக் கூடாது. வைக்கவும் முடியாது!

மரணதண்டனை எதிர்ப்பு என்பது மரணத்திற்கு மாற்றான உண்மையான தண்டனையை ஆதரிப்பதுதானேயொழிய, குற்றவாளியை மன்னிக்கச் சொல்வதல்ல. மரணம் என்ற முற்றுப்புள்ளி
எப்படி தண்டனையாகும் என்பதே மரணதண்டனை ஒழிக்க போராடுபவர்கள் எழுப்பும் கேள்வி. ஆனால் சில ஊடகங்கள் மரண தண்டனை ஒழிப்பு என்பதே 'மன்னிப்பு' என்பதைப் போல ஒரு போலிபிம்பத்தை உருவாக்கத் துடிக்கின்றன.  அதனால்தான் 20 ஆண்டுகளுக்கும் மேல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட மூவரையும் மற்றுமொரு தண்டனைக்கு ஆளாக்காமல், ஒரே குற்றத்திற்கு இரு தண்டனைகள் என்பதே சட்டத்துக்கு புறம்பானது என்பதை எடுத்துக்காட்டி, ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்திருப்பவர்களை தூக்கிலும் தொங்கவிடவேண்டுமா என்ற கேள்விகேட்டு விடுவிக்கச் சொல்லி போராடுவதையும், நேற்று தண்டனைப் பெற்ற கோவிந்தசாமியை ஒப்பிட்டு விஷமத்தனமாய் சிலர் கட்டுரை எழுதுகிறார்கள். அதாவது பொதுவான மரணதண்டனை ஒழிப்பு போராட்டத்தையும், மூவர் விடுதலைக்கான போராட்டத்தையும் ஒரே தட்டில் வைத்து கோவிந்தசாமியுடன் ஒப்பிட்டு மக்களை குழப்ப முயற்சித்திருக்கிறார்கள்.

நாம் இன்னொரு விஷயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். ராஜீவ் காந்தியின் மரணத்திற்காக கொந்தளித்த மக்கள், ஆர்ப்பாட்டம் செய்த மக்கள், அதற்கடுத்த தேர்தலில் ஒரு புரட்சியையே செய்த மக்கள் இன்று ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றிருப்பவர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்றால், அதை பல பத்திரிக்கைகள் ஆதரிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தண்டனை பெற்றவர்கள் ஏற்கனவே ஒரு ஆயுள்தண்டனை காலத்தை சிறையில் கழித்துவிட்டார்கள் என்ற காரணமும், கருணை மனு பரிசீலிப்பில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட காலதாமதம் எனும் அநீதியும் மக்கள் மனதில் மிகப்பரவலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியுமா? அந்த மாற்றத்தை ஏற்படுத்திய காரணங்களை முன்னிறுத்திதான் அந்த மூவருக்கான விடுதலைபோராட்டம் மக்களால் இணையத்திலும், வீதியிலும், வழக்கறிஞர்களால் நீதிமன்றத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் அந்த தண்டனையின் மூலம் சமூகத்தில் தவறு செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்று வாதிடுவது வழக்கம். அக்கருத்து மிகத்தவறானது என்று மரணதண்டனை நடைமுறையில் இருக்கும் நாடுகளிலும், மரணதண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளிலும் எடுக்கப்பட்ட குற்றங்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. மரணதண்டனை நடைமுறையில் இருக்கும் நாடுகளைவிட மரணதண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பதே அந்த புள்ளிவிவரங்கள் நமக்க தெரிவிக்கும் உண்மை!  உண்மை இப்படியிருக்க மரண தண்டனை என்பது அங்கீகரிக்கப்பட்ட பழிதீர்ப்பே தவிர, அங்கீகரிக்கப்பட்ட கொலையே தவிர வேறென்ன? அதனால் சமுதாயத்துக்கு கிடைக்கும் லாபம்தான் என்ன?

இதே கோவிந்தசாமிக்கு ஆதரவாக பிரபல வழக்குரைஞர்களான கபில் சிபலோ, ராம்ஜத்மலானியோ ஆஜாராகியிருந்தால் தூக்குதண்டனை, ஆயுள் தண்டனையாகி இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? தெரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை போதையில் கார் ஏற்றி கொன்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? பல ஆயிரம் பேரைக் கொன்ற வெடிகுண்டுகளை பதுக்கிவைத்திருந்த நடிகர் எப்படி வெளியில் வந்தார்? எந்த பணக்கார குற்றவாளியாவது இதுவரை தூக்கில் தொங்கியிருக்கிறாரா? கூலிப்படைகளை ஏவிவிட்டு கொலை செய்யும் அரசியல்வாதிகளும், பணமுதலைகளும், தொழிலதிபர்களும் தூக்குதண்டனை ஏன், குறைந்தபட்ச தண்டனையேனும் பெற்றிருக்கிறார்களா? இவர்களுக்கெல்லாம் அரசு நியமிக்கும் வழக்குரைஞர்கள் வாதாடியிருந்தால் இதேபோல் விடுதலை கிடைத்திருக்கும் என நிச்சயமாக சொல்லமுடியுமா? பணத்தைக் கொட்டி திறமையான வக்கீல்களை வைக்க முடிந்தவர்களுக்கே சட்டம் சாதகம் என்ற நிலை இருக்கும்போது, எந்த நம்பிக்கையில் இந்த சட்டத்திடம் ஒரு உயிரை பறிக்கும் உச்சக்கட்ட அதிகாரத்தை கொடுக்கிறோம் நாம்? சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நடைமுறைப்படுத்திவிட்டு பின் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை கொடுத்தாலாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வக்கில்லாதவர்கள், ஏழைகளுக்கு மட்டும் மரணதண்டனை மற்றவர்க்கெல்லாம் விடுதலை அல்லது குறைந்தபட்ச தண்டனை என்றால் என்ன நியாயம்!? என்ன நீதி?

சென்ற மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் (readers digest) இதழில் ஒருவரைப் பற்றிய செய்தி படித்து அதிர்ந்தேன். இரு வெள்ளைக்கார சிறுவர்களை காயப்படுத்தி, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய  குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 60ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் விடாமுயற்சியுடன் 25ஆண்டுகள் சிறையில் இருந்தபடியே போராடி அறிவியல் தொழிநுட்பங்களின் வளர்ச்சியால் சமீபத்திய DNA சோதனைகளின் மூலம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்துவிட்டு, சிறையிலேயே தன் இளமைக்காலங்களை தொலைத்துவிட்டு இப்போது வெளியே வந்திருக்கிறார். இது எப்போதாவது நடக்கும் அரிய விஷயம் என நினைக்காதீர்கள். அமெரிக்க மாகாணங்களில் இல்லினாயில் (Illinois) மட்டும் இதுவரை பண்ணிரெண்டு பேர் பல ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபித்து விடுதலை ஆகியிருக்கிறார்கள். அரிசோனா மாகாணத்தில் 1973ல் இருந்து இதுவரை நூறு பேர் தங்களை நிரூபித்து விடுதலை ஆகியிருக்கிறார்கள். இன்னும் உலக அளவில் எத்தனை பேர் என்பதை எண்ணிப்பாருங்கள். ஒருவேளை அவர்களுக்கு எல்லாம் மரணதண்டனையை நிறைவேற்றியிருந்தால் எத்தனை நிரபராதிகள் அநியாயமாக இறந்திருப்பார்கள்? அமெரிக்கா போன்ற மனித உரிமையை பெரிதாக பின்பற்றும் நாடுகளிலேயே இப்படியென்றால், கரடியை கைது செய்து நாய் என ஒப்புக்கொள்ளவைக்கும் நம்மூரைப் பற்றி என்ன சொல்ல? 

எந்த உணர்ச்சியால் மக்களிடம் குற்றங்கள் பெருகுகிறதோ, எந்த உணர்ச்சியால் உயிர்கள் கொலையுறுகின்றனவோ அதே உணர்ச்சியை சட்டம், நீதி என்ற பெயரில் அங்கீகரிப்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் நன்மை பயக்கும்? ஒரு கண்ணுக்கு மறுகண் என உலகம் இயங்கினால் உலகமே குருடாய்ப் போகும் என்று சொன்ன மகாத்மா காந்தியை தேசத்தந்தை எனக் கூறும் நாட்டில்தான் மரணதண்டனைக்கு ஆதரவாக குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

இன்னும் ஏராளமாக மரணதண்டனையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் மரணதண்டனையை ஆதரிக்க ஒரே காரணம் தான். அது மக்களிடம் மலிந்து போயுள்ள பழிவெறி மட்டும்தான். அதை அரசே ஊக்குவித்து மக்களுக்கு மிகத்தவறான உதாரணமாகவும் திகழ்வதுதான் வேதனை. மரணதண்டனையை உலக அளவில் 95நாடுகள் முற்றிலுமாக தடை செய்துவிட்டன. வெறும் 58 நாடுகளே மரணதண்டனையை பழக்கத்தில் வைத்திருக்கின்றன. மீதியுள்ள நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மரணத்தை தண்டனையாக தரவில்லை.  தண்டனை வழங்கவேண்டாம் என யாரும் சொல்லவில்லை. வாழ்ந்துகொண்டிருக்கும் போது தண்டனை கொடுங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும்வரைதான் அவன் குற்றமற்றவன் என நிரூபிக்கும் வாய்ப்பும் இருக்கும், ஆனால் அதை பறிப்பது எவ்வளவு கொடூரமான மனித உரிமை மீறல்? தற்கொலை முயற்சியே தண்டனைக்கு உட்பட்ட குற்றம் எனும்போது அரசு செய்யும் கொலைகளை நியாயப்படுத்துதல் எவ்வகையில் நியாயம்?

 உள்ளூர் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் நிரபராதி ஆகிறார்! உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் நிரபராதி ஆகிறார். உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் அதற்கு மேல் ஒரு நீதிமன்றம் இருந்தால் நிரபராதி ஆக வாய்ப்புண்டு தானே? எதை நம்பி  நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் நீதியை மாற்றி வழங்கும் இந்த சட்டத்திடம் ஒரு உயிரைப் பறிக்கும் உச்சக்கட்ட உரிமையை அளிக்கவேண்டும்?


2 comments:

♔ம.தி.சுதா♔ said...

சகோ எந்தவொரு மனிதனும் பிறக்கும் போது காட்டு மிராண்டியாகப் பிறப்பதில்லை.
அவன் ஏன் அப்படி மாறுகிறான் என்பதை ஆராய்வதறகாக அரசாங்கம் பணம் செலவளிப்பதே சிறந்தது.
கோவிந்தன் ஒரு மனநோயாளி என வைத்துக் கொண்டால் அவனை கொன்ற பின் இன்னுமொரு மனநோயாளி இப்படி செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்...
சட்டம் கூட பழிவாங்கலால் தம தாகம் தீர்க்கவே துடிக்கிறது

அன்பு said...

:) அடிப்படையே தவறாக்கிட்டீங்களே தோழர்... போராடுபவர்கள் பலர் இது காட்டுமிராண்டித்தனம் என்று கூறியே போராட்டாத்தை முன்னெடுக்கின்றனரே தவிர குறைந்த பட்ச தண்டனை என்று அல்ல

Related Posts Plugin for WordPress, Blogger...