Saturday, October 29, 2011

வேலாயுதம்! விண்ணைக் கிழிக்கும் வெற்றி!

வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!

நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.

எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.

வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!

"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.

பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!

ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் ரஜினிப் படத்திலும், விஜய் படத்திலும் ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?

என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!

உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!
அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!

மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது.  விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!

19 comments:

வவ்வால் said...

என்ன ஒரு துணிச்சல் 2016 ஆம் ஆண்டின் முதல்வர் நடித்த படத்தை இப்படிலாம் சொல்ல.இன்னுமா டொக்டர் விசயின் நற்பணி மன்றம் உங்களை விட்டு வச்சுருக்கு.எதுக்கும் பாடி காட்டுற முனிஸ்வரனுக்கு கடா வெட்டுறதா வேண்டிக்கோங்க!

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு விசய்க்கு 3 மாசம் ஒருக்கா பழச மறக்கிற 3 மந்த்ஸ் மெமரி லாஸ் வியாதி இருக்குமோனு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சான்சே இல்ல பாஸ்........ சூப்பர்ப் விமர்சனம்..... கலாயோ கலாய்......!

Madhavan Srinivasagopalan said...

வேலாயுதம் கதை செம சூப்பரு.. புதுசா இருக்கு..
-- இப்படிக்கு முதல் முறையாக தமிழ்ப் படம் பார்க்கும் புத்தம் புதிய ரசிகன்..

TERROR-PANDIYAN(VAS) said...

எந்த கமெண்ட் போட்டாலும் டெம்ப்ளேட் கமெண்டாகிடும். அதனால எஸ்கேப்... :)). ஒரு பச்சை புள்ளைய இப்படி கலாய்கிறிங்க... :)

நாகராஜசோழன் MA said...

சிரிச்சு மாளலை! சூப்பர் விமர்சனம் பாஸ்!

lovely said...

sucks

பெசொவி said...

ROFL!

HA....HA...HA!

:)))))))))))

shrek said...

yeppa, mudiyala....unmaiyagave rolling on the floor laughing :D
super sir....semma nakkal...idhayellam vijay partha....paavam

manjoorraja said...

//எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.//

டீ குடிச்சிட்டே இதெ படிச்சி சிரிச்சி, புரையேறி.... அய்யய்யோ!

manjoorraja said...

//முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.//


இதான் சிக்ஸ் பேக்காம்.....

சூர்யாவும் ஏழாம் அறிவில் இதே மாதிரி காண்பிக்கிறார்..


இவங்க பண்ற அக்குரும்பு தாங்கலெடோய் சாமியோவ்.

K.MURALI said...

சூப்பர்ப் விமர்சனம்....

முனிசாமி. மு said...

super review.....

jaisankar jaganathan said...

காமடியான விமர்சனம். சூப்பர்

lingam said...

poiya vennai..poi palaya soru sapittu thungu..ha ha ha ha ha....

R.Gopi said...

//'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!//

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

இராஜராஜேஸ்வரி said...

பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?

Bizzarree said...

உங்களுக்கெல்லாம் விஜய் மேல அப்பிடி என்ன கொலை வெறி !!!??? இப்பிடி ஒரு மனிதனை ஒரேயடியாக மட்டம் தட்டும் பொது அவனுக்கு சப்போர்ட் பண்ணவே தோன்றுகிறது!! மட்டமான திரைக்கதையுடன் ,போலி தமிழ் பக்தி சொல்லி அறுத்தெடுத்த ஏழாம் அறிவை விட வேலாயுதம் நல்ல காமடியுடன் கூடிய பொழுதுபோக்கு படம் !! நீங்க என்ன தான் குட்டினாலும் படம் ஹிட்டு !!!

முத்துசிவா said...

ஹாஹாஹாஹா... மச்சி... செம...

Dilz Rxx said...

ஹிஹிஹி நீ என்ன தான் அழுது புலம்பினாலும் படம் ஹிட் சில விசயங்கள் தமிழ் இல்ல சினிமா வரலாற்றில் உள்ளவை உனக்கு பிடிச்ச படம எடுகனும் எண்ட நீ தான் இயக்கி நீ நடிச்சு நீயே தயாரிக்கனும்.... கற்பனை செய்து பார் அதை நீயே பாக்கலாம என்று.......

Related Posts Plugin for WordPress, Blogger...