Sunday, October 30, 2011

ஏழாம் அறிவும், போதிதர்மரும், ஐந்தறிவு தமிழர்களும்!

நேரடியா விஷயத்துக்கு வர்றேன். ஜென் புத்தகங்களையும், கதைகளையும் படித்தபோது போதிதர்மரைப் பற்றி தெரியும் என்றாலும் அவர் தமிழர் என்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாது. சில மாதங்களுக்கு முன்னால் தோழர் பிரதீப்புடன் Chatயில் பேசிக்கொண்டிருந்தபோது "போதிதர்மர் காஞ்சிபரத்துக்காரர். தமிழர்." எனக் கூறினார். எனக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை 'ஜென்' மீது நான் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய சிந்தனை முறையை (சிந்தனையற்ற முறை என்றும் சொல்லலாம்) வாழ்வில் கொண்டிருந்த சீனர்கள் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. போதிதர்மர் என்ற டாமோ, தமிழர் என்ற விஷயம் தெரிந்தவுடன் என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை! புல்லரித்தது! அதன் பின் தான் போதிதர்மரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். ஏழாம் அறிவு படமும் போதிதர்மரின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்று புனைவு தான். முதல் நாளே அந்தப் படத்தைப் பார்த்ததற்கான காரணமும் அதுதான்.

Inception படத்தின் காப்பி என்ற வதந்தியை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு முற்றிலும் வேறு களத்தில் பயணித்திருக்கிறார் முருகதாஸ். 600ஆம் நூற்றாண்டில் போதிதர்மர் சீனர்களுக்கு கற்று கொடுத்த கலையைக் கொண்டே இந்தியாவுக்கெதிரான மறைமுக யுத்தத்தை நடத்த நினைக்கிறது சீனா. அதை ஒரு இளம் விஞ்ஞானியுடன் சேர்ந்து முறியடிக்கிறார் போதிதர்மரின் வழித்தோன்றலான சர்க்கஸ் சாகசக்காரர்.

சீனாவுக்கு பயணிக்கும் போதிதர்மரில் இருந்து ஆரம்பிக்கிறது படம். படம் பார்க்கும் முன் போதிதர்மர் புத்தருக்கு சமமானவர் ஆயிற்றே, அந்த அமைதியை எப்படி சூர்யா நடிப்பில் கொண்டு வரப்போகிறார் என்ற அச்சம் இருந்தது. கண்களில் ஒளியும், முகத்தில் அமைதியும் தவழ அழகாக நடித்திருக்கிறார் சூர்யா.

படத்தில் சூர்யாவின் சில காட்சிகளைப் பார்க்கும் போது 'இந்தாளு என்ன வேணா பண்ணுவானா?' எனத் தோன்றியது. "சிங்கத்த டிவில பாத்ருப்ப, சர்க்கஸ்ல பாத்ருப்ப"னு பஞ்ச் டயலாக் பேசுவதில் இருந்து குங்க்ஃபூ வரைக்கும் எப்படி செஞ்சுத்தொலைக்கிறார் என்று தெரியவில்லை! நம் தொழிலில் நாம் சூர்யா போன்ற உழைப்பைப் போட்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்தேன் பிரமிப்பாக இருந்தது.

இசை வழக்கமான ஹாரிஸ் ஜெயராஜிசம்! நிறைய காப்பி! நிறைய ரிப்பீட்! பல்லவ அரசைக் காட்டும் இடங்களில் அருமையாக இருந்தது. சீனப்பாடலை அப்பட்டமாக "பாபா ப்ளாக்சீப்" என்ற ஆங்கில சிறார் பாடலின் ராகத்தில் அப்படியே அமைத்திருந்தது கேலிக்கூத்தாக இருந்தது!


"வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. ஒருத்தனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்றது பேரு வீரம் இல்ல"
"எத்தனை நாள் தான் அடிவாங்குறது? திருப்பி அடிக்கனும்!"
"யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சு நம்ம ஆவணப் பொக்கிஷங்களை எல்லாம் அழிச்சுட்டாங்க" இதெல்லாம் சூர்யா பேசும் வசனங்கள். தியேட்டரில் ஆராவாரமாய் இருந்தது.

ஒரு Mainstream சினிமாவில் தைரியமாக ஒரு படக்குழு ஈழம் சம்பந்தப்பட்ட வசனங்களை வைக்கிறதென்றால், இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை 'துரோகம்' என விமர்சிக்க வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? முருகதாஸுக்கும், உதயநிதிக்கும், சூர்யாவுக்கும் அந்த தைரியம் எக்கச்சக்கம்!

படத்தில் சில சறுக்கல்களும் உண்டு. சீன வில்லனை வழக்கமான தமிழ் டாட்டா சுமோ வில்லன்கள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நடிக்கவைத்தது, தமிழர்களின் பண்டையகால சாதனைகளை அடுக்கும்போது வட இந்தியரான ஆரியபட்டாவை உள்ளே நுழைத்தது, பார்வை வசியத்தை வில்லன் மிக அதிகமாக உபயோகப்படுத்தியது, சர்க்கஸ் சூர்யா உடலில் போதிதர்மரின் திறமை குடிபுகுவதற்கு பதிலாக ஆவி புகுந்ததைப் போல அவரை நடிக்க வைத்தது போன்ற குறைகளும் உண்டு. நடுவில் காதல் காட்சிகள் வேகத்தை வெகுவாக குறைக்கின்றன.

உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்!

Saturday, October 29, 2011

வேலாயுதம்! விண்ணைக் கிழிக்கும் வெற்றி!

வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!

நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.

எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.

வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!

"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.

பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!

ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் ரஜினிப் படத்திலும், விஜய் படத்திலும் ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?

என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!

உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!
அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!

மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது.  விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!
Related Posts Plugin for WordPress, Blogger...