Tuesday, September 6, 2011

சமூகம் அவர்களை தற்கொலை செய்கிறது!

இல்லை! தற்கொலைக்கு எதிராக, வாழ்க்கையென்றால் சாதிக்க வேண்டும். வாழ்ந்து காட்டவேண்டும். என்னதான் நடக்கிறது என பார்த்துவிட வேண்டும். அப்படி இப்படியென இந்தக் கட்டுரையில் எதையும் சொல்லப் போவதில்லை.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வது மிகவும் எளிதான விஷயம். கழுத்தில் சுருக்கு போட்டு வெகு சுலபமாக தொங்கியும் விடலாம். ஆனால் அதற்குப் பிறகு கழுத்து இறுக்கப்படும்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாழவேண்டும் என்ற ஆசை சில நொடிகள் வந்து போகும். ஆனால் முடியாது. ஏறி நின்ற மேசையையோ, நாற்காலியையோ எட்டி உதைத்திருப்போம். வாழ்ந்த வாழ்க்கை கண்முன் நிழலாடிப் போகும்! எவ்வளவு துடித்தாலும் தொங்குபவர்க்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி முடிவிலாமல் விரிந்து போகும்!

தூக்கில் தொங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மரணம் வாய்க்கிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து மூளை நரம்புகள் வெடித்து மரணம் வரலாம். கழுத்து எலும்பு உடைந்து அது முதுகெலும்பை தாக்கியும் மரணம் வரலாம். அல்லது இதயத்தில் அழுத்தம் அதிகரித்து நரம்புகள் வெடித்து இதயம் நின்று போகலாம். இது தூக்கில் தொங்குபவர்களின் உடல் எடையையும், உடல் ஆரோக்கியத்தையும் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். தொண்டை இறுக்கப்பட்டு மரணம் நிகழ்வதால் பலருக்கு கண்கள் பிதுங்கி வெளியே எட்டிப்பார்ப்பதும், நாக்கு வாய்க்கு வெளியே முழுவதும் வந்து தொங்குவதும் நடக்கும்.  என் நண்பன் ஒருவன் தூக்கில் தொங்கி இறந்த போது அவன் தாய் என்னிடம் சொன்னார், "அவன் தூக்குல தொங்கிட்டான்னு தெரிஞ்சவுடன அல்லாவிடம் நான் வேண்டியதெல்லாம் இதான்பா. என் புள்ளையோட முகம் யாரும் பார்த்து பயந்துர்ற மாதிரி வச்சுறாத அல்லா" என்று!

என்னை நேரடியாக பாதித்த, தினம் தினம் பாதித்துக் கொண்டிருக்கிற ஒரு தற்கொலை சம்பவம் உண்டு. என் உயிர் நண்பனின் தற்கொலை. பள்ளியில் இருந்து நெருங்கிய நண்பர்கள். 12வது படிக்கும் போது கூட அவன் அம்மாதான் அவனுக்கு எண்ணெய் தேய்த்து தலை சீவி விடுவார்கள். அவ்வளவு பாசமான அம்மா அவனுக்கு. அவன் சென்னையில் அசைபட தொழில்நுட்பம் (Animation) படித்துக்கொண்டிருந்தான். ஆறுமாத காலத்தில் அதே நிறுவனத்தில் அவனை வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தார்கள்.  முதல் மாத சம்பளத்தில் அம்மாவிற்கு என்ன வண்ணத்தில் புடவை வாங்கித் தருவது என்பது வரை என்னிடம் பேசிக்கொண்டிருப்பான். சில வருடங்களில் Animation திரைப்படமாக எடுப்பதற்கு அருமையான கதையை கூட தயார் செய்து வைத்திருந்தான். அந்த கதையில் அவன் புகுத்தியிருந்த ஒரு புதுமையான விஷயத்தை நினைத்து பலநாள் அவனிடம் பெருமைப்பட்டிருக்கிறேன். எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் மதியம் தூக்கில் தொங்கிவிட்டான். வெறும் மூன்று மாதங்கள் தான் இருந்தன அவன் வேலையில் சேர! சம்பாதிக்க! அவன் மரணத்திற்கு முந்தைய நாள் அவன் உறவினர்கள் அவனது வேலையில்லா நிலையை அவனுக்கு எடுத்துக்கூறி அவன் திருமணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணை அவனுக்கு ஏன் திருமணம் செய்துகொடுக்க முடியாது என மிக விளக்கமாக ஒரு கும்பலாக சேர்ந்து அவனிடம் கூறியிருக்கிறார்கள். தாளமுடியாத அவமானத்தில் தூக்கை தேர்ந்தெடுத்திருக்கிறான். இனி எப்போதும் திருத்தவே முடியாத தவறு.  அவன் திடீரென மறைந்ததை என்னால் ஏற்கவே முடியவில்லை. இன்னும் மதுரைக்கு போகும்போதெல்லாம் அவனை அழைக்க என் கைகள் தானாய் அவன் பெயரை செல்பேசியில் தேடும். பின் சுதாரித்துக் கொள்வேன். எனக்கே இப்படி இருக்கிறதென்றால் அந்த தாய்க்கு எப்படி இருக்கும்?

அவனை என்னால் குறை சொல்ல முடியவில்லை. அவன் அவ்வளவு மிருதுவானவன் தான். விருப்பப்பட்ட பெண்ணை மணம் முடிக்க எத்தனை வரையறைகளை இந்த சமூகம் ஒருவன் மேல் திணிக்கிறது? அவர்கள் விருப்பப்படும் வேலையை அவன் பார்க்க வேண்டும், அவர்கள் விருப்பப்படும் இலக்கத்தில் சம்பளம் வாங்கவேண்டும், அதுவும் எல்லாம் உடனே நடக்க வேண்டும்! மூன்று மாதத்தில் நல்ல வேலையில் சேரப்போகும் ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான் என்றால், மூன்று மாதம் கூட ஒரு குடும்பத்தால் பொறுக்கமுடியவில்லை என்றால் என்னமாதிரியான நிலையில் நம் சமூகம் இருக்கிறது? எந்த அளவிற்கு அவன் உறவினர்கள் அவனை அவமானப்படுத்தியிருப்பார்கள்? அவமானப்படுத்த மட்டும் ஆளுக்கு முன்னால் நிற்கும் சமூகம், அவமானங்களைக் கண்டு அஞ்சாமல் வாழக் கற்றுக்கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு ஊட்டச்சத்து பானம் விளம்பரத்தை பார்த்தால் கூட எதோ குதிரையை ஓட்டப்பந்தயத்திற்கு தயார் செய்வதைப் போல விளம்பரப்படுத்துகிறார்கள். நம் ஊர் அம்மாக்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நாய் கண்காட்சிக்காக நாய்க்கு பயிற்சியளிப்பது போல குழந்தைகளை பயிற்றுவிக்கிறார்கள். "அவனை விட ரேங்க் வாங்கு, இவனை முந்து, அவன்லாம் படிக்கிறான் பாரு உனக்கென்ன?" இப்படி! இப்படியாக அடுத்த மனிதனை முந்தவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வளர்க்கப்பட்ட மனிதர்கள் உலவும் சமூகத்தில் சக மனிதனிடத்தில் அன்புக்கும், மனிதாபிமானத்துக்கும் எங்கிருந்து இடம் இருக்கும்? சமூகத்தின் இப்படியான போட்டி வரையறைப்படி வாழமுடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

நாம் அத்தனை பேரும் சமூகத்தின் கட்டுப்பாட்டால், சமூகம் குடும்பங்களுக்கு விதிக்கும் போலி கவுரவ கோட்பாடுகளால் நாம் விரும்பிய எதோ ஒன்றை செய்யாமல் போயிருக்கிறோம். பிடித்த படிப்பையோ, விரும்பிய துணையையோ அடையாமல் போயிருக்கிறோம். பி.ஏ ஆங்கிலம் படிக்காததற்காகவும், எனக்கு சுட்டுப் போட்டாலும் வராத தொழில்நுட்ப படிப்பு படித்தததற்காகவும் இன்றளவும் வருந்திக் கொண்டிருக்கிறேன்! அதே நேரத்தில் பி.ஏ ஆங்கிலம் சேர்ந்து படித்த என் நண்பனை எத்தனை பேர் கேலி பேசினார்கள் என்பதையும் நான் கவனித்திருக்கிறேன். அவன் இப்போது பேராசிரியராக இருக்கிறான். அவனுக்கு உறுதியான மனம் இருந்தது, கேலிகளை தாண்டி, நினைத்ததை முடித்துவிட்டான். ஆனால் எத்தனை பேர் கேலிகளையும், அவமானங்களையும் தாண்டி வர முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்? டாக்டர் என்றால் என்ன, இஞ்ஜினியர் என்றால் என்ன என்றே தெரியாத சிறு குழந்தையிடம் நீ டாக்டராக வரவேண்டும், இன்ஜினியராக வரவேண்டும் என குறிக்கோள் விதைக்க நாம் யார்? அவன் அவனாகவே வளர்ந்தால் அவன் என்னவாக ஆகவேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருப்பான். ஆனால் அவனை குழப்பி குழப்பி அவனை அவனாக வளரவிடாமல், பெற்றோர்கள் அவர்கள் என்ன ஆக நினைத்தார்களோ அதுவாக குழந்தைகளை வளர்த்துவிட்டு விடுகிறார்கள். அப்படி வளரமுடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்!

எவ்வளவு சுமையை இந்த சமூகம் நம் மீது சுமத்துகிறது? நீங்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றதும் உங்களைப் பார்த்து ஓடிவரும் நண்பரின் குழந்தையிடம் "என்ன ரேங்க் இது? ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க வேணாமா?" என நீங்கள் சொல்லியதில் இருந்து அடுத்த தடவை நீங்கள் நண்பரின் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அந்த குழந்தை வேகமாக படுக்கையறைக்குள் ஒளிந்துகொள்கிறதா இல்லையா? ஒரு குழந்தை பள்ளிக்கு செல்லும் அடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது சுமையும், அச்சுறுத்தலும், பயமும்!

என் தோழியின் அக்காவின் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள். அவளை தினமும் பள்ளி முடிந்தபின் யோகா வகுப்புக்கும், இந்தி வகுப்புக்கும் அனுப்புகிறார்கள். காலை 9மணிக்கு பள்ளிக்குச் சென்று 9மணிக்கு வீட்டுக்கு வருகிறது குழந்தை. கேட்டால் உலகத்துக்கு ஏற்ப தயார் படுத்துகிறார்களாம்! ஒரு நாளைக்கு 12மணி நேரம், வளர்ந்த நம்மால் கூட உழைக்க முடியவில்லையே, குழந்தை தாங்குமா? 

"சீக்கிரம் வேலைக்குப் போக வேணாமா? என்னப்பா இது? எத்தனை நாள் இப்படியே வெட்டியா இருக்கப் போற? உன்னைவிட சின்னபசங்க எல்லாம் வேலைக்கு போயிட்டாங்க." என்று, படித்துவிட்டு சில நாட்கள் வேலையின்றி தத்தளிக்கும் எத்தனை இளைஞர்களை நீங்கள் அவர்கள் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நோகடித்திருக்கிறீர்கள்? அவனுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை? என்ன பிரச்சினை? நம்மால் உதவமுடியுமா என்றெல்லாம் சிந்தித்திருக்கிறீர்களா? சும்மா நீங்கள் போகிறபோக்கில் பொழுதுபோகாமல் உதிர்த்துவிட்டுப் போன எதோ ஒரு சுடுசொல் ஒருவனை கொல்லும் அளவிற்கு வீரியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

முதல் ரேங்க் வாங்கும் உங்கள் குழந்தையைப் பற்றி பெருமை பீற்றிக்கொள்ள எத்தனை நண்பர்களின் குழந்தையை ஒப்பிட்டு  வேதனைப் படுத்தியிருக்கிறீர்கள்? என் அப்பாவின் நண்பர் ஒருவர் இருக்கிறார்! நான் 10ஆம் வகுப்பு படித்த போது அவரும் அவரின் மகனும் எனக்கு அறிமுகம். அந்த காலத்தில் இருந்து அவர் மகனின் வீரதீர படிப்பு சாதனைகளை, ரேங்க் சாதனைகளை என் அப்பாவிடமும், என்னிடமும் சொல்லி படிப்பில் எப்போதுமே படுசுமாரான என்னை  ஒரு மட்டமான பார்வை பார்ப்பார்! என் அப்பா ஒருமுறை அவரை நேருக்கு நேராக திட்டியும் அந்த ஆள் திருந்தியபாடில்லை!  இன்னும் அந்த ஆளைப் பார்த்தால் எனக்கு அருவெறுப்பாக இருக்கும். இதுபோல் எத்தனையோ பேர், எத்தனையோ குழந்தைகள் நம்மைக் கண்டு பயந்துகொண்டோ, தாழ்வுமனப்பான்மையால் வெதும்பிக்கொண்டோ, அல்லது மொத்தமாக வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டோ இருக்கலாம்!

பரீட்சையில் இரண்டாவது ரேங்க் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவனைக் கூட நான் பார்த்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு காலாண்டு தேர்வில் இரண்டாம் ரேங்க் வாங்கிவிட்டானாம், மின்விசிறியில் தொங்கிவிட்டான். அவன் மூளையில் படிப்பிற்கும், ரேங்க்கிற்கும் எப்படிப்பட்ட முக்கியத்துவத்தை அவன் பெற்றோர் திணித்திருந்தால் போயும் போயும் ஒரு காலாண்டுதேர்வு முடிவு அவனை இப்படி பாதித்திருக்கும்?

என் தோழி ஒருத்தி  +2 பரீட்சையில் 1175/1200. அவள் அண்ணனோ 1177! அவள் அண்ணனைவிட என் தோழி இரண்டு மதிப்பெண் குறைத்து வாங்கினாள் என்பதற்காக அவளிடம் இரண்டு மாதங்கள் பேசவில்லை அவள் பெற்றோர். வீட்டில் கிடந்த கண்ட கண்ட மாத்திரைகளையும் அள்ளி தின்று, விஷமாகி, மனநலம் பாதிக்கப்பட்டு பின் பல மாதங்கள் கழித்து தேறினாள் அவள்! ஒருவேளை அவள் மூன்று மதிப்பெண் அதிகமாக பெற்றிருந்தால் அவள் அண்ணனுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்கலாம்!

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த சமூகம் மாற்றிவைத்திருக்கிறது. நம் முக்கியத்துவங்களின் வரிசை பிசகியுள்ளது! இதுதான் பிரச்சினை. பிள்ளைகளுக்கானது படிப்பு என்பது மாறி படிப்பதற்காகத்தான் பிள்ளைகள் என்றாகியுள்ளது. நல்ல வாழ்க்கைக்காகத்தான் வேலை என்பது மாறி வேலைக்காகத்தான் வாழ்க்கையே என்றாகியிருக்கிறது!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வசிக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை கார்ப்பரேட் கம்பனிகளின் பணியாள் ஆக்குவதற்காக தயார் செய்கிறார்கள். மக்கள் தொகை அதிகம், போட்டி பயங்கர அதிகம்! அதனால் தான் இந்த குதிரைப் பந்தய வழிமுறை. மேலை நாடுகளில் எதோ ஒரு வேலை எப்போதும் யாருக்கும் இருக்கும். கவுரம் பார்க்காமல் எதையும் யாரும் செய்கிறார்கள். எதையும் கேவலமாக எண்ணுவதில்லை. ஆனால் இங்கே அடுத்தவனுக்கு பணியாளாக இருப்பதில் கூட ஆயிரம் ஏற்ற தாழ்வுகள் பார்க்கிறார்கள். இதை மொத்தமாக ஒரு கூட்டு வழிமுறையாக பார்த்தோமானால் எதை எங்கே சரி செய்வது என யோசிக்கும்போது தலைசுற்றிப் போகும். ஆனால் ஒவ்வொரு பிள்ளையிடமிருந்தும் இதை சரி செய்ய வேண்டும். அது சுலபம். பெற்றோர்களின் மனநிலை மாறினாலே போதும்! இந்த மிகத்தவறான கூட்டுவழிமுறை சரியாகிவிடும்!

உலகத்தில் நடக்கும் சராசரி தற்கொலை சதவிகிதத்தை விட இந்தியாவில் அதிகம். அதிலும் தென்மாநிலங்களில் மிக அதிகம். அடுத்தமுறை யாருக்கேனும் அறிவுரை செய்யும் போது அவர்களுக்கு உங்களால் உதவியும் செய்யமுடிகிறதா எனப் பாருங்கள். உதவியுடன் சேராமல் தனித்து வரும் அறிவுரைகள் கேலிக்கும், கிண்டலுக்கும் சமம். எல்லாவற்றிற்கும் மேல் குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுங்கள், குதிரைகள் ஆக்காதீர்கள்! தற்கொலை யாரும் விரும்பி செய்துகொள்வதில்லை, சமூகம் தன் மரபுகளால், கிறுக்கதனமான சில வரையறைகளால் அவர்களை தற்'கொலை' செய்கிறது! 

13 comments:

Hope said...

It's true.

ahamed5zal said...

just u wrote my feelings..what currently i had..really nice

மதியின் வலையில் said...

பெற்றோரின் தவறுகளை அழகாக கூறியுள்ளீர்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//தற்கொலை யாரும் விரும்பி செய்துகொள்வதில்லை, சமூகம் அவர்களை தற்கொலை செய்கிறது!
//
உண்மையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சமுக அக்கறையுள்ள பதிவு

சதீஷ் பழமலை said...

நீங்கள் தூக்கி பிடிக்கும் திராவிடத்தை தவிர, உங்களின் அனைத்து எழுத்துகளுக்கும் நான் ரசிகன்... ஒரு வகையில் உங்களை காதலிக்கிறேன்... ( நான் அந்த மாதிரி ஆள் இல்லிங்கோ) உங்களுடன் ஒத்து போவதை விட அனேக விசயங்களில் உங்கள் மேல் கோபம் தான் வரும்... உங்களின் வாசிப்பு, வார்த்தை வெளிபடுத்தும் திறன் "உங்களுக்கோ ஏதோ நல்ல வாத்தி சொல்லி கொடுத்துருக்கார் போலன்னு நிறைய தடவை பொறாமை பட வைக்கிறது"

Sasithar said...

Super nae!!! Chancey illa!!! Every statement were great eye openers!!!

vIns said...

nice article

சீனுவாசன்.கு said...

அப்பிடியே கொஞ்சம் சீனுவசன் பக்கங்களையும் வந்து பாருங்க!நல்லா இருக்கா சொல்லுங்க!வாங்க பழகலாம்!

arul said...

excellent writing about present situation of a child

ezhil said...

மன அழுத்தம் ஏற்படும் வகையிலான நம் சமூக அமைப்பு அருமையான அலசல்... ஒப்பு நோக்குதல் முதலில் பெற்றோரிடம் மாறினால்தான் பிள்ளைகளுக்கு அதைக் கொடுக்க முடியும்... நல்ல கட்டுரை...

Kanmani Rajan said...

இந்தப் பதிவை வாசிக்கும் யாரும் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள் என்று படுகிறது எனக்கு. இங்கு எல்லோருமே ”ஊர் என்ன சொல்லும்?” என்று வாழ்வது தான் பிரச்சனையே!

அருமையான பதிவு! வலைச்சரத்தில் இருந்து வந்தேன், நன்றி!

Kanmani Rajan said...

இந்தப் பதிவை வாசிக்கும் யாரும் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள் என்று படுகிறது எனக்கு. இங்கு எல்லோருமே ”ஊர் என்ன சொல்லும்?” என்று வாழ்வது தான் பிரச்சனையே!

அருமையான பதிவு! வலைச்சரத்தில் இருந்து வந்தேன், நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...