Monday, August 29, 2011

சட்டசபையில் ஜெ கக்கிய விஷமும், 'ஐந்து' கேள்விகளும்!

மூன்று மரணதண்டனைக் கைதிகளின் தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என ஜெ இன்று சட்டசபையில் விதி 110ன் கீழ கூறியிருக்கிறார். அவர் பேசியது உண்மையா இல்லையா எனப் பார்ப்பதற்கு முன், விதி110ஐப் பற்றிப் பார்க்கவேண்டும். இந்த விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால் அது விவாதத்துக்கு வராது. அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்பதுதான் விதி110.

கேள்வி1: எதற்காக விவாதிக்க முடியாதபடி விதி110ஐ பயன்படுத்தி இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும்?

முதல்வர் 'ஜெ' சொல்லியிருப்பதைப் போல யாரும் அவரை ரத்து செய்யச் சொல்லவில்லை. தூக்கை நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் படி பரிந்துரைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கூட செய்யவில்லை அவர். ஜெயலலிதாவின் கூற்று பச்சைப் பொய் என்றும், ஒரு மாநில முதல்வர் விதி161ன் கீழ் தன் அமைச்சரவையில் நிறைவேற்றும் தீர்மானத்தில் தலையிட பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கூட உரிமையில்லை என்றும், தன் கையாளாகாத்தனத்தை ஒரு பொய்யால் மறைக்கப் பார்க்கிறார் ஜெ என்றும் பிரபல வழக்குரைஞர் துரைசாமி இன்று பேட்டியளித்துள்ளார். இந்த விதி எண்161 என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணமும் உண்டு. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது.

கேள்வி2: கேரளா இந்திய மாநிலம் என்ற நிலையில், கேரள முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எப்படி தமிழக முதல்வருக்கு இல்லாமல் போனது?

கேள்வி3: ஒருவேளை உண்மையிலேயே முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் உட்பட அனைவரும் தூக்கு தண்டனைக்கு எதிராக ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் ஒரு சாதாரண குடிமகள் என்ற இடத்தில் இருந்து கூட எந்த ஒரு கோரிக்கையும் முதல்வர் ஜெ வைக்காததன் மர்மம் என்ன? எதிர்த்து குரல் கொடுக்க கூட அதிகாரம் வேண்டுமா என்ன?


தான் தீர்மானம் நிறைவேற்றாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் கருணாநிதி மேலும் பழி போட்டுள்ளார் முதல்வர். அதாவது ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்னையை அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது .இதில் நளினி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருப்பதால் இவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம், ஏனைய 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றி கடிதம் ஒன்றை கவர்னருக்கு எழுதியது என்றும் கூறியுள்ளார். அதே 2000ஆண்டில் கலைஞரின் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிராக பக்கம் பக்கமாக நமது எம்.ஜி.ஆரில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளார் ஜெ. அவற்றில் ஒரு பகுதி இப்படி போகிறது,
"ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

 சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” இவ்வாறு செல்கிறது அறிக்கை. இதில் இருந்து மரணமடைந்தவரின் குடும்பமான சோனியாவும், ப்ரியங்காவும் குற்றவாளிகளை மன்னிப்பதைக் கூட ஜெயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரிடம் எப்படி தூக்கு தண்டனை ரத்து தீர்மானத்தை எதிர்பார்க்க முடியும்.

கேள்வி3:முதல்வர் தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் தூக்குக்கு எதிராக தீர்மானம் போட மறுக்கிறாரா அல்லது மரண தண்டனையை எதிர்ப்பது தன் கொள்கைக்கு எதிரானது என்பதால் தீர்மானம் போட மறுக்கிறாரா?  
கேள்வி5: கருணாநிதியால் தீர்மானம் நிறைவேற்றி நளியைக் காப்பாற்ற முடியுமானால் 'ஜெ'யாவால் தீர்மானம் நிறைவேற்றி ஏன் பேரறிவாளனைக் காப்பாற்ற முடியாது? (தன் வாயாலேயே தனக்கு அதிகாரம் உண்டு ஆனால் தான் செய்யவில்லை எனவும், நளினியைக் காப்பாற்றியது கலைஞர்தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார் ஜெயா)

இந்திய அரசாங்கம் சட்டப்படி இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த கச்சத்தீவை, "மீட்போம்" என இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசு போர் முரசு கொட்டி தீர்மானம் போட முடியுமாம்! ஆனால் "தூக்கை கருணை அடிப்படையில் நிறுத்துங்கள்" என தீர்மானம் போட முடியாதாம்! இதான் 'சட்டத்துக்கு உட்பட்டு' நடக்கும் லட்சணம் போல! இதையும் நம்புவதற்கு நான்கு பேர் இருப்பதுதான் கொடுமை!

மலைப்பாம்பு நன்றாக உண்டுவிட்டால் மூன்று மாதங்கள் இரைதேடாது. பின் அந்த உணவு செரித்த பின் இரைவிழுங்க கிளம்பி விடும். தேர்தலில் நன்றாக உண்டுவிட்ட மலைப்பாம்பு ஒன்று மூன்று உயிரகளைக் காவு வாங்க கிளம்பியுள்ளது! ராம்ஜெத்மலானி தான் இப்போதைக்கு ஒரே வழி! கடைசியாக விஜயகாந்தும் இன்று மரண தண்டனைக்கு எதிராக தன் கருத்தைப் பதிந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்....

Saturday, August 27, 2011

பிச்சையெடுத்தேனும் காப்பாற்றுவோம்........

எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் இதை எப்படியேனும் தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் ஓரத்தில் நின்று, ஆற்றொன்னா கண்ணீருடனும் இதை எழுதுகிறேன். நாம் சாதாரணமாக விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்டால் கூட நம் தாய்களின் உள்ளம் எப்படி பதறுகிறது? நான் ஒவ்வொரு முறையும் பைக்கில் வெளியே செல்லும் போதும் "சைட் ஸ்டேண்ட் எடுத்துவுடு" என மறக்காமல் என் அம்மா வாசலில் இருந்து சொல்லுவார். ஒருநாள் திடீரென நான் செய்யாத குற்றத்திற்காக எனக்கு தூக்கு தண்டனை என அறிவித்தால் என் தாய் எப்படி களங்குவார் என யோசிக்கிறேன்.. வார்த்தைகள் வரவில்லை...

மரணத்தை விட கொடியது என்ன தெரியுமா? மரணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருப்பது... என்ன நடக்குமோ, என்ன நடக்குமோ என அனுதினம் வெந்து சாவது...  இதுதான் 21 வருடங்களாக அண்ணன் பேரறிவாளனுக்கும், முருகனுக்கும், சாந்தனுக்கு அவர்தம் உறவினர்களுக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

முக்கியமாக  அண்ணன் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.. நெஞ்சில் அளப்பரியா சோகத்தை சுமந்து கொண்டு அந்த தாய் அங்கு இங்கு என இல்லாமல் அனைத்து இடங்களிலும் தன் மகனுக்கு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார். நம் நாட்டின் சட்டமோ நிரபராதிகளை விடுவிப்பதில்லை, திறமையான வக்கீல்களை வைத்திருப்பவர்களையே விடுவிக்கிறது. அப்படிப்பட்ட ஊரில் எங்கிருந்து கிடைக்கும் ஏழைக்கு நியாயம்? ஒருமுறை இந்த காணொளியைப் பாருங்கள். அந்த அன்னையின் நியாயத்தைக் கேளுங்கள்...


இரக்கமற்ற சாடிஸ்டுகளைப் போல், கொலைகார மனநோயாளிகள் டெட் பண்டி, டாமரைப் போல் கொடூர சாடிசத்தோடு குற்றம் சுமத்தப்பட்டவர்களை நடத்தியுள்ளது இந்த அரசு! சற்று நினைத்துப்பாருங்கள். பருவம் ஆரம்பிக்கும் 19வயதில் கைது செய்யப்பட்டு, விவரிக்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, இளமையை தொலைத்து, காதல் வாழ்க்கையைத் தொலைத்து, ஆசைகளே இல்லாமல் 21 வருடங்களாக மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி இருக்கும் அந்த அண்ணனைப் பற்றி ஒருநிமிடம் யோசியுங்கள்.
ஒரே மகனை, சமூகநீதியைக் காக்க கொள்கையை ஊட்டி வளர்த்த மகனை, ஒழுக்கத்தையன்றி வேறெதையும் போதிக்காமல் வளர்க்கப்பட்ட மகனை குற்றமே செய்யாத தன் மகனை ஒரு கொலைகாரியின் பழிவெறிக்கு பழிகொடுக்கப்போவதை எண்ணி பதறும் அந்த அன்னையின் நெஞ்சம் என்ன பாடுபடும்?  அண்ணன் பேரறிவாளனின் அன்னையும், தந்தை குயில்தாசனும் தங்கள் மகன் தூக்கிலிடப்பட்டால் சிறை வாசலில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள். எவ்வளவு கொடுமை இது? அண்டை நாட்டில் குடும்பம் குடும்பமாக கொத்துக்கொத்தாக மடிந்த போது சும்மா தான் இருந்தோம். லட்சம் தமிழரைக் கொன்றவன் தமிழகம் வந்தபோது சும்மாதான் இருந்தோம். தமிழரே கதியென, தமிழகமே நாதியென நம்மையே, நம்மைமட்டுமே எதிர்நோக்கி இருக்கும் ஒரு குடும்பமே பழியாகப்போகும் போதும் சும்மாதான் இருக்கப் போகிறோமா?  இந்த தமிழ்பூமி இன்னும் எவ்வளவு பாவத்தை தான் சுமக்கும்? நாம் அதை அனுமதித்தால் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் ஆக மாட்டோமா? ஒரு தமிழ் குடும்பம் சக-தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இதயத்தை துடிக்க வைத்து இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.  அளக்க இயலா பாசத்துடன், தன் மகன் கடைசி நொடியிலாவது காப்பாற்றப்பட மாட்டானா என்ற ஏக்கத்துடன் அந்த அன்னையின் மனம் துடித்துக்கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்?

ஏராளமான தோழர்கள் களத்தில் அந்த மூவருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அன்னைக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நாம் அனைவரும் பங்குபெறுவோம். இணையத்தின் ஒவ்வொரு சந்திலும் நம் போராட்டம் பரவட்டும். அது இது என இல்லை... நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்வோம். மூவரைக் கொலை செய்ய செப்டம்பர் 9 என தேதி குறித்துள்ளது அரசின் கொலை இயந்திரம். அதற்குள் நம் போராட்டம் உச்சத்தை எட்ட வேண்டும்.

தோழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த நிலையிலும் தமிழக அரசின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். நம் ஒரே நம்பிக்கை தமிழக அரசும் அதை தற்போது தலைமையேற்று நடத்தி வரும் ஜெயலலிதாவும் தான். அரசுக்கெதிரான போராட்டங்களை அவர் அரசு என்றுமே நல்ல நோக்கோடு பார்த்ததில்லை. இந்நிலையில் அவருக்கு எந்த நிலையில் கோபம் ஏற்படாதவாறு நம் கோரிக்கையை அவரிடம் எடுத்து வைப்பது நம் கடமை. கெஞ்சிக்கேட்டேனும்... இரைஞ்சிக்கேட்டேனும்.. பிச்சையெடுத்தேனும்......... நம் அண்ணன்களைக் காப்பாற்றுவோம்...

ஒருவேளைத் தவறினால்...... நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும், தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் என்பதையும் அந்த அன்னை அற்புதம் அம்மாளின் முகம் நமக்கு  கற்றுத்தரும்...

Sunday, August 21, 2011

அன்னா ஹஜாரே என்ற 80வயது பயங்கரவாதி!

ஏற்கனவே அன்னா ஹஜாரே நடத்திய சீசன்1 உண்ணாவிரதத்தைப் பற்றி அன்னா ஹஜாரே என்ற ஊறுகாய்!ங்குற கட்டுரையில் எழுதியுள்ளேன். இப்போ சீசன்2 உண்ணாவிரதத்தைப் பற்றி புதிய கருத்துக்கள் ஒன்றுமில்லாத பட்சத்தில் சில புதிய கேள்விகளும் பயங்களும் ஆட்கொள்ளுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை ஒரு கிழவர் ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு பட்டினி ஆயுதத்தால் மிரட்டுகிறார். ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம், இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தாததால் தான் என்பதை மறந்து, அல்லது தெரிந்தும் மறைத்து இந்த 'லோக்பல் பில்'லை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே தீர்ந்துவிடும் என்பதைப் போல் மக்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார். லோக்பல் பில் ஊழலுக்கென்றே இருக்கும் பிரத்யேக சுப்ரீம் கோர்ட் என சுருக்கமாக சொல்லலாம். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் எல்லா ஊழலும் லோக்பல் பில்லிலும் நடக்க வாய்ப்பு உண்டு என்ற உண்மையை மக்களிடம் மறைக்கிறார். லோக்பல் பில் உறுப்பினர்கள் அல்லது லோக்பல்பில் பெஞ்ச் மகாபலம் பொருந்தியதாக இருக்கும் பட்சத்தில் அதில் உள்ளவர்கள் நாட்டிலேயே அதிகமாக ஊழல் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.

இந்த மகாபலம் பொருந்திய லோக்பல் பில் பெஞ்சை வைத்து தங்களுக்கு படியாத அரசியல்வாதிகளை மிரட்டி பணிய வைக்கவும், தங்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கவும், அழிக்கவும், மாற்றவும் முடியும். பணியாதவர்களை தண்டிக்கவும் முடியும். RSS பின்ணணி கொண்ட ஹஜாரேவும் அவரது அடிப்பொடிகளும் நாளை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்களை இயற்றவைக்க  மாட்டார்கள் என்பதற்கும், இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட சட்டங்களை நீக்க வைக்க மாட்டார்கள் என்பதற்கும் என்ன நிச்சயம்? இப்போதே ஹஜாரேக்கு ஆதரவு தருபவர்களை கவனித்தால் பனியாக்களும் பிற உயர்சாதியினரும் இணைந்த இந்துத்துவ வாடை பயங்கரமாக வீசுவது நன்றாக தெரியும். நாட்டில் ஊழல் பெருகியதற்கு இடஒதுக்கீட்டில் வந்த அரசு அதிகாரிகளே காரணம் என அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக சிந்தனை கொண்ட பல சமூகசேவகர்கள் அன்னாவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதற்கும் அதுதான் காரணம். இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது.

ஒரே இடத்தில் அதிகாரம் அனைத்தும் குவிவது சர்வாதிகாரம் ஆகாதா? அதிகாரத்தை பரவலாக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றுவது தானே ஜனநாயகம்? அந்த பிரதிநிதிகளை ஆட்டிவைக்கும் அதிகாரத்தை ஒரு 'குழு'விடம் கொடுப்பது உச்சக்கட்ட சர்வாதிகாரம் ஆகாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச அதிகாரம் உள்ள பிரதமரையே லோக்பல் வரம்புக்குள் கொண்டு வருவது எவ்வளவு ஆபத்தான செயல்? அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கும் போதே ஒரு நாட்டில் இவ்வளவு ஊழல் நடக்கிறதென்றால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் எவ்வளவு ஊழல் நடக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். லோக்பல் பில் பெஞ்சில் உள்ளவர்கள் நல்லவர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? வானத்தில் இருந்து வரும் தேவதூதர்களா அவர்கள்? அவர்களும் இந்தியர்கள் தானே?  அன்னாவின் மீதே ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருக்கும் பட்சத்தில், நாளை வருபவர்கள் எம்மாத்திரம்?

நாலு நாள் சாப்பிடாமல் இருந்தால் இந்த அரசு என்ன சொன்னாலும் கேட்குமா? எந்த தகுதி, என்ன அருகதை அன்னாவுக்கு இருக்கிறதென்று அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது(நடத்துகிறது)? உண்ணாவிரதம் இருந்தால் எவனுக்கும் எதையும் கொடுத்துவிட வேண்டுமா? காந்தகார் விமானத்தை கடத்தி தீவிரவாதிகளை விடுவிக்கசொல்லி அரசை மிரட்டிய பயங்கரவாதிகளுக்கும், தன் உயிரைக் காட்டி மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பி லோக்பல் பில்லின் pros and consகளை விளக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசை மிரட்டும் இந்த அன்னாவுக்கும் என்ன வித்தியாசம்? நாளை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனச் சொல்வதைப் போல அங்கங்கு அவன் அவன் உண்ணாவிரதம் இருந்து அரசை மிரட்ட ஆரம்பித்தால் என்ன செய்வது?

கொஞ்சம் கூட சிந்திக்காமல் அன்னா அன்னா என கூச்சல் போடுவதும், அவர் புகைப்படத்தை ஏந்தித் திரிவதும், அரசை மிரட்டும், ஜனநாயகத்தையே அசைத்துப்பார்க்கத் துடிக்கும் ஒரு போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப்போர் எனச் சொல்லுவதும் சுதந்திரத்துக்காக போராடியவர்களை எல்லாம் ஒரே மூச்சில் இகழ்வது போலாகும்.

ஆமாம்... அவர் 80 வயதில் பட்டினி தான் கிடக்கிறார். அதற்காக, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஜனநாயகத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு பிரதிநிதிகளையும் ஒரு கிழவர் கேலிக்குள்ளாக்கிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 80வயது என்பது போராட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க ஒரு தகுதி அல்ல! நாட்டைத் தூக்கிக் கொடுப்பதற்கு பதிலாக பரிதாபப்படுவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது!

வெரி வெரி ஹேப்பி பர்த்டே டூ கிருஷ்ணா தி சைன்டிஸ்ட்!


ஒரு 20 வருஷம் இருக்கும். நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டிருந்தேன். அப்ப ஒருநாள் எங்கூட படிச்ச ஒரு பொண்ணை நான் "போடி"னு சொன்னதுக்கு எங்கப்பா பிச்சுட்டாரு என்னை! ஆனா கிருஷ்ணனோட அப்பா அப்படி இல்ல. அவரு சூப்பர் மேன்! வெரி ஜோவியல் ஃபெல்லோ! அவரோட புள்ளை, பொம்பளைங்க குளிக்கிறப்ப அவங்க ட்ரெஸ்ஸை எடுத்து ஒளிச்சு வைச்சு விளையாண்டப்ப கூட கோவமே படாம "இவனுக்குள்ள எதோ இருந்திருக்கு பாரேன்!"னு சொல்லி ரசிச்ச ஜென்டில்மேன். ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்! இந்த மாதிரி ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சதுனால தான் கிருஷ்ணனால அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிஞ்சுச்சு. இன்னும் சொல்லப்போனா அவரை உலக-விஞ்ஞானிகளின் தந்தைனு கூட சொல்லலால். அவரோட கண்டுபிடிப்பு 'ஈவ் டீசிங்'! உலகத்துல முதல் முதல்லா ஈவ் டீசிங் என்கிற நல்ல விளையாட்டை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி அவருதான்.

நம்ம ஊருல சுடிதார் மேல இருக்க ஷாலை(shawl) புடிச்சு இழுத்தாலே நம்மூரு புள்ளைங்க கொண்டே போட்ருங்க. ஆனா கோபியர்கள் ரொம்ப நல்லவங்க. ஒன்னும் போடாம குளிக்கிறப்ப கிருஷ்ணன் அவங்க ட்ரெஸ் எடுத்து ஒளிச்சப்ப கூட ரொம்ப நிதானமா கெஞ்சி கேப்பாங்களாம். ஆனா இப்ப ஏன் உலகம் இப்படி ஈவ் டீசிங்க்கு தண்டனை அது இதுனு கொரூரமா மாறிருச்சுனு தெரில. இதைத்தான் கிருஷ்ணன் கலிகாலம் வரும்னு கீதைல சொல்லிருக்காரு போல.

"கிருஷ்ணர் கடவுள்டா. அவரு என்ன வேணா பண்ணலாம். என்ன பண்ணாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்?"னு சொல்றீங்களா... அடப்பாவிகளா.. சேலைய தூக்கிட்டு ஓடுறதுல என்னடா அர்த்தம் இருக்கப்போகுது?

நாங்க சின்ன வயசுல பக்கத்து ஏரியாக்கு சைட் அடிக்கப்போவோம். அப்ப அந்த ஏரியா பசங்க "என்னடா ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கிறீங்களா?"னு கேட்டுட்டே அடிக்க வருவாய்ங்க. அப்ப நாங்க சைலண்டா வந்துருவோம். ஏன்னா ஏரியா வாரியா பிரிச்சிருக்கப்ப அதை மதிக்காம அவிய்ங்க ஏரியாக்கு போனது எங்க தப்புதான்.. அதுனால பேசாம வந்துருவோம். அவிய்ங்க எங்க ஏரியாக்கு வந்தாலும் அதே ட்ரீட்மென்ட் தான். அதாவது ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிச்சாலே அது தப்பு. அதான் நம்ம கலாச்சாரம், பண்பாடு! இப்படி இருக்கப்ப.. கிருஷ்ணன் வந்து கடவுள். வேற ஸ்பீஸீஸ்(Species), வேற ப்ரீட்(Breed). அதாவது species விட்டு species வந்து சைட் மட்டும் அடிக்கல, ஈவ்  டீசிங் வேற பண்ணிட்டு போயிருக்காரு. நம்மல்லாம் பொங்கனுமா வேணாமா?

சரி விடுங்க.. இப்ப ரொம்ப லேட்! வெரி வெரி ஹேப்பி பர்த்டே டூ கிருஷ்ணா தி சைன்டிஸ்ட்!   

Saturday, August 6, 2011

மாட்டுப்பையன்களும் வேற்றுகிரகவாசிகளும். (cowboys and aliens-விமர்சனம்)

நம்ம ஊர்ல பரவால்லப்பா. மொக்க நடிகர்களை வச்சு மொக்கை படம் எடுப்பாங்க. உதாரணம் விஜய். ஆனா ஹாலிவுட்ல ஏன்தான் நல்ல நடிகர்களை வச்சு மொக்க படம் எடுக்குறாய்ங்கனே தெரில! ஹாரிசன் ஃபோர்ட்(Harrison Ford), டேனியல் க்ரெய்க்(Daniel Creig)! இரண்டு இமாலய நடிகர்கள்! எவ்வளவு ஸ்டார் வேல்யூ!? கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இந்தப் படத்தோட ட்ரெயிலர் பார்த்து படம் எப்படா வரும்னு காத்து இருந்தேன்!

மதுரைல ஆங்கிலப் படம் பாக்குறது கிணத்துல அனகோண்டாவை பாக்குற மாதிரி. அமெரிக்கால ஆங்கிலத்துல ரிலீஸ் ஆகும் அதே நாள் அதே நேரத்துல நம்மாளுங்க இங்க டப்பிங் பண்ணிறாய்ங்க! படத்துக்கு போறப்ப நண்பன் பாலாகிட்ட, "மாப்ள. தமிழ்ல ஓடுதுடா. தமிழ்ல பாத்தா எனக்கு கதை புரியாதேடா?"னு சொன்னேன். அதுக்கு அவன் "டேய் இங்கிலீஷ்ல பாத்தா உனக்கு என்ன படம்னே புரியாதேடா"ன்னான். அதுக்கு மேல என்ன சொல்றது, படத்துக்கு போயிட்டோம்!

Harrison Ford அப்படி சும்மா வந்து நின்னாலே புல்லரிக்கும். அப்படி ஒரு charisma! ஆனா அதுக்காக உண்மைலயே இந்த படத்துல சும்மா நிக்கவுடுவாய்ங்கனு நினைக்கவே இல்ல! பாவம் மனுசன்.

முதல்ல படத்தோட ஐடியாவே தப்பு! எதோ காமிக்ஸ் ஐடியா இது!  புத்தகத்தோட நிப்பாட்டிருக்கனும். கவ்பாய்சையும்(cowboys), ஏலியன்சையும்(Aliens)ஐயும் ஒரே படத்துல கொண்டு வர்றது ஜிலேபி செஞ்சு சாம்பார்ல போடுற மாதிரி! இன்னும் சுலபமா சொல்லனும்னா எம்.ஜி.ஆர் கவுதம் மேனன் படத்துல நடிக்கிற மாதிரி! அதைத்தான் இதுல செஞ்சிருக்காய்ங்க! தங்கம் எடுக்க பூமிக்கு வர்ற வேற்றுகிரக வாசிகளுக்கும், உள்ளூர் cowboysக்கும் சண்டை. டேனியல் க்ரெயிக்கும், ஃபோர்டும் சேர்ந்து ஏலியன்சை விரட்டுறாங்க! இன்னொரு மூன்றாவது கிரகத்துல இருந்து வர்ற பெண் டேனியலை காதலிக்கிறாங்க. உதவியும் பண்றாங்க. ஏன்னா அவங்க கிரகத்தையும் இப்ப வந்திருக்கும் அதே கெட்ட வேற்றுகிரகவாசிகள் தான் அழிச்சாங்களாம். நடூல பயங்கர கோமாளித்தனமான காட்சிகள்லாம் இருக்கு. கிராஃபிக்ஸ் சில காட்சிகள்ல நம்ம ஊர் படம் மாதிரி இருக்கு.

வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. படம் செம மொக்க! பாக்கவே கூடாது! நானும் பார்த்ததை மறந்துட்டேன். ஆனா நீங்க இதை படிச்சதை மறந்துட்டு படத்தைப் பார்த்துத் தொலைச்சிராதீங்க!
Related Posts Plugin for WordPress, Blogger...