Wednesday, July 27, 2011

தினமலர் என்னும் தரம்கெட்ட உலகமகாபொய்யர்கள்

ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்..

பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.மேலே இருக்கும் படத்தில் உள்ள பெண்களைப் பாருங்கள். கல்லூரி மாணவிகளின் உடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தினமலர் வெளியிட்ட படம் இது. அரை பக்கத்திற்கு இந்த ஆறு மாணவிகளை candid (தங்களை யாரோ படம் பிடிப்பது, படம் பிடிக்கப்படுபவருக்கு தெரியாது) ஆக படம்பிடித்து வெளியிட்டிருந்தது.  எவ்வளவு பெரிய பொறுக்கித்தனம் இது? இதே விஷயத்தை செல்ஃபோன் வைத்து செய்பவனை தானே 'ஈவ் டீசிங்' எனப் பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்? இப்படி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஆறு அப்பாவி மாணவிகளின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து, அவர்களின் படத்திற்கு கீழே "ஆபாசமாக உடையணியும் மாணவிகளை மக்கள் எதிர்க்கவேண்டும்" என்று குறிப்பு வேறு வெளியிட்டிருந்த தினமலரை என்ன செய்வது? அதன் ஆசிரியரை அல்லவா முதலில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டும்? இப்படியொரு தப்பான செய்திக்காக தங்கள் பெண்பிள்ளைகளின் படம் செய்தித்தாளில், அதுவும் முதல் பக்கத்தில் வந்திருப்பதைப் பார்த்த அந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதுதான் தினமலர் தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சமூக அக்கறையா?

இது போன்ற ஏராளமான கேவலம் பிடித்த செயல்களை தினமலர் செய்து கொண்டே தான் இருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்பில் ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து அந்தப் படத்தின் கீழ் தன் பாணியில் நக்கலாக செய்தியும் போட்டிருந்தது தினமலர். 
தூங்கும் போது ஒருவரை படம் எடுக்கலாமா? நம் தனிப்பட்ட நண்பர்களிடம் கூட நாம் செய்யக் கூசும் செயல் அது. அந்தப் படத்தைப் பார்த்த லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எந்த விதமான தாக்கத்தை அது உண்டு பண்ணியிருக்கும்? துணைவேந்தர்களின் குடும்பங்கள் எவ்வளவு வெட்கியிருப்பார்கள்? நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் லட்சக்கணக்கான மாணவர்களையும் வழிநடத்தும் துணைவேந்தர்களை தூங்கும் poseஇல் படமெடுத்து நக்கலடித்து பொறுக்கித்தனம் செய்த தினமலருக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறது?

இது மிகவும் முக்கியமான உதாரணம். என்னை மிகவும் பாதித்த மனம், கொதிக்கச் செய்த இன்னொரு செய்தி இது. அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டு ஒரு இந்தியப் பேராசிரியர் இறந்த செய்தியை கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறது தினமலர். "அமெரிக்காவில் இந்தியப் பேராசிரியருக்கு சதக் சதக். துடிதுடித்து இறந்தார்" என்று. எவ்வளவு இரக்கமின்மை! எவ்வளவு வக்கிரம்! ஒரு உயிரிழப்பின் வலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லட்சணம் இதுதானா!? மரணத்தில் கூட எவ்வளவு நக்கல்?!! அந்தப் பேராசியர் குடும்பம் எவ்வளவு வருந்தியிருக்கும்? இதுதான் மனிததன்மையை காப்பாற்றுவதாக சூளுரைக்கும் பத்திரிக்கையா?

அரசியல்வாதிகளையும், No parkingயில் வண்டியை நிறுத்தும் பொதுமக்களையும் கண்டிக்கவும், படமெடுத்து போடவும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது இந்த தினமலருக்கு? 


புவனேஷ்வரி என்ற துணைநடிகை சில நடிகைகளின் பெயரை சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நடிகைகளின் படத்தையெல்லாம் பெரிதாகப் போட்டு, அந்த நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படும் முன்னரே அச்செய்தியை 'Fact'ஆக சித்தரித்து படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர், அதன் முதலாளிகளில் ஒருத்தனான 'அந்துமணி ரமேஷ்' மீது நிருபர் உமா பாலியல் புகார் தெரிவித்தபோது அந்த செய்தியையும் 'Fact' ஆகவெ கருதி வெளியிட வேண்டியதானே? ஆனால் தினமலர் எபப்டி react செய்தது என கீழே பாருங்கள்.

புவனேஷ்வரி சொன்னால் உடனே எல்லா நடிகைகளும் விபச்சாரிகளாம். ஆனால் உமா என்ற நிருபர், அதுவும் தினமலர் நிருபர், அந்துமணி ரமேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னபின் அவனை மக்கள் முன் நிரபராதி ஆக்க சாம-தான-பேத-தண்ட வழிகளையெல்லாம் உபயோகித்தது தினமலர். பல தொலைக்காட்சிகளில் மிகத் தெளிவாக, நடந்த அசிங்கங்களை புட்டுப்புட்டு வைத்த   அந்தப் பெண் நிருபரை, நாக்கூசாமல் மனநோயாளி என்றெல்லாம் செய்தி வெளியிட்டது தினமலர். உமா என்ற நிருபர் ஏழு வருடம் வேலை பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவில்லையாம். புகார் அளித்தவுடன் தான் தெரிகிறதாம். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தினமலருக்கே பைத்தியம் பிடித்துவிட நிலையில் அது வெளியிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் கீழே பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் நிருபர் உமா தெளிவாக 'தனக்கு சேர வேண்டிய settlementகளை கொடுங்கள்' எனக் கேட்டு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். யாராவது தான் பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியிருக்கும் போது, அதைக் கேட்டு அளிக்கும் ராஜினாமா கடிதத்திலேயே புகாரும் கொடுப்பார்களா? அதுவும் அந்த அலுவலகத்தின் முதலாளியே பொறுக்கித்தனம் செய்யும் போது எப்படி அவரிடமே புகாரும் கொடுக்க முடியும்? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்ற அபார நம்பிக்கையை தினமலர் தனக்குள் வளர்த்துக் கொண்டுவிட்டது. இதற்கு மக்களும் மூல காரணம். இந்த லட்சணத்தில் பா.கே.ப என்று வாரமலரில் பெரிய plucker போல கட்டுரை எழுதுவதும் அல்லாமல் அந்துமணி பதில்கள் என்ற தலைப்பில் ஊருக்கு உபதேசம் செய்யும் நித்யானந்தா வகையறா தான் இந்த அந்துமணி. ஒவ்வொரு வாரமும் இந்த ஆள் எழுதும் கட்டுரையில் உ.பா (உற்சாக பானமாம்.) குடித்ததைப் பற்றியும், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென்றும் மறக்காமல் எழுதுவான் இந்த அந்துமணி ரமேஷ் என்ற பாலியல் குற்றவாளி.  

அந்துமணி ரமேஷின் இரு முகங்கள்
நடப்பு விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ இமயம் தொலைக்காட்சியில் தினமலர் தன்னைக் கேவலப் படுத்தியதைப் பற்றி வருத்தப்பட்டிருந்தார். அதாவது பொடாவில், தினமலரின் மாறாப்பாசத்தை தன்னகத்தே கொண்டே ஜெயலலிதா தன்னை சிறையில் தள்ளிய போது தன்னைப் பற்றிய பயோடேட்டாவை வெளியிட்ட தினமலர், கூடவே, "வைகோவுக்கு மிகவும் பிடித்த உணவு ஆட்டுக்கறி. ஆனால் சிறையில் அது போடப்படுவதால் வைகோவுக்கு மகிழ்ச்சிதான்" என தன் திமிர்த்தனத்தைக் காட்டியிருந்ததாகவும், அதனால் தான் மிகவும் வேதனை உற்றதாகவும் பேசியிருந்தார் வைகோ. 

தொலைக்காட்சியில் தன் மானம் போனதை உணர்ந்த தினமலர் உடனே அடுத்தநாள் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடுகிறது, "வைகோ என்ற நல்லவர் தேர்தலை புறக்கணித்ததால் மக்களுக்கு தான் நஷ்டம்" என்று நல்லவிதமாக நடிக்கிறது. எப்படிப்பட்ட கேவலமான பத்திரிக்கை பாருங்கள்.

வைகோ நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல தினமலர் யார்? மக்கள் தினமலரிடம் கருத்தா கேட்டார்கள்? வைகோவின் செயல்களையும், பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் மட்டும் அப்படியே வெளியிடுவதுதானே உன் வேலை? அதையெல்லாம் படித்து வைகோ மீதான கருத்தை மக்கள் உண்டாக்கிக்கொள்வார்கள். ஆனால் பெரிய Inception படத்தின் கதாநாயகன் போல மக்கள் மூளையில் கருத்துக்களைப் பதியச் செய்கிறது இந்த தினமலர்.

வாசகர் கடிதம் என்ற பெயரில் தானே எழுதி ஒவ்வொரு பெயரில் வெளியிடும் கீழ்த்தரமான செயலையும் தினமலர் பல ஆண்டுகளாக செய்தே வருகிறது! அதற்கு ஆதாரம் கீழே! தினமலரிலும், காலைக்கதிர் என்ற தினமலர் குழுமத்தின் மற்றொரு பத்திரிக்கையிலும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ஒரே கடிதம்!


பத்திரிக்கை என்றால் செய்தியைச் சொல்வதா? கருத்தைச் சொல்வதா? செய்தித்தாள் எனச் சொல்கிறோமா? கருத்துத்தாள் எனச் சொல்கிறோமா? தினமலர் காலம்காலமாக செய்வது இதைத்தான், அதாவது செய்திகளை தனக்கு வேண்டிய பாணியில் அல்லது தொனியில் போட்டுவிட்டு அதனுடன் சேர்த்து நஞ்சு தடவிய தன் கருத்தையும் மக்கள் மனதில் திணித்துவிடுகிறது. தினமலருக்கு கைவந்த கலை இது.

இது போன்ற சமூகப்பொறுப்புணர்வே இல்லாத பத்திரிக்கைகளை மக்கள் கண்டிப்பாய் இனங்காண வேண்டும். ஒரு பத்திரிக்கையின் பணி என்பது உண்மையான செய்தியை மக்களிடம் அளித்துவிட்டு, அச்செய்தி பற்றிய கருத்தை மக்களே சிந்தித்து உண்டாக்கிகொள்ள வழிவகுப்பதேயன்றி விஷக்கருத்துக்களையும், நஞ்சுப் பரப்புரைகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதல்ல. தினமலரை கண்டிப்பாகப் புறக்கணிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஊடகப் புல்லுருவிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நாடு சுத்தப்படும்.

(இது ஒரு மீள்பதிவு)

சன் குழுமம் என்ற மற்றொரு கீழ்த்தரமான ஊடகத்தைப் பற்றிய என் பதிவு இங்கே சன் நெட்வொர்க்கும் கொடூர மாறன்களும்

Monday, July 25, 2011

தமிழ்சினிமாவை சிதைக்கும் நல்ல படங்கள்.எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல!  நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.

நல்ல படம் அது சார்ந்த திரையுலகை உலக பார்வையாளர்கள் முன் பெருமையாக திரையிடப்பட வேண்டுமே தவிர, உலக பார்வையாளர்கள் முன் திரையிடப்படுவதற்கே அச்சம் தருவதாய் இருக்கக் கூடாது. சில ஆண்டுகள் முன்பு ப்ளாக் என்ற இந்திப்படம் வந்தது. அருமையான திரைப்படம். ராணி முகர்ஜீயும், அமிதாப்பு நடிப்பில் பின்னியிருப்பார்கள். இந்திய விமர்சகர்கள், ரசிகர்கள் எல்லோருமே அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால் அந்தப்படத்தை சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப முடியவில்லை. ஏனெனில் அது ஒரு வேற்றுநாட்டுப்படத்தின் தழுவல். அந்தப்படத்தை அனுப்ப பயந்து அதே ஆண்டு வெளிவந்த 'பெஹலி(Pehli)' என்ற படத்தை அனுப்பினார்கள். அது ராஜஸ்தானிய நாடோடிக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. இது போன்றதொரு பயத்தைத் தருவதுதான் தெய்வத்திருமகள் படமும். இது நல்லபடம் தான் எனினும், சர்வதேச விருதுகளுக்கு அனுப்பப்பட்டால், திரைப்படங்கள் அது சார்ந்த சமூகத்தினை உலகிற்கு காட்டும் கண்ணாட்டியாக இருக்கும் சூழலில், தெய்வத்திருமகன் படத்தால் நம் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அவமானம் தான் சேருமேயொழிய பாராட்டுக்களோ, புகழோ அல்ல.

போக்கிரி என்ற தெலுங்குப்படம் தமிழில் மீள் உருவாக்கம் (ரீமேக்) செய்யப்பட்டபோது, தெலுங்கு பதிப்பில் நடித்த மகேஷ்பாபுவின் மூக்கை உரியும்  சேட்டைகளைக் கூட விஜய் அப்படியே தமிழ் போக்கிரியில் செய்திருப்பார். அப்போது ஊரே அவரைக் கிண்டல் செய்தது. காப்பி அடிக்கிறான் அது இது என குறை சொல்லியது. இப்போது தெய்வத்திருமகனில் விக்ரம், Sean Pennயின் நடிப்பை மிகச்சாதாரணமாக காப்பியடித்து நடித்திருக்கிறார். மகேஷ்பாபுவின் குரங்கு சேட்டையை களவாடியதற்கே விஜய்யை குறை சொன்ன நாம், Sean Pennயின் பல மாத உழைப்பை, ஆராய்ச்சியை ஒரே ஒரு DVDயைப் பார்த்து காப்பி அடித்து மிமிக்ரி செய்திருக்கும் விக்ரமை எவ்வளவு கேலி செய்ய வேண்டும்? கண்டிக்க வேண்டும்? ஆனால் விக்ரமின் நடிப்பைப் புகழ்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். மகேஷ்பாபுவை தன் ஆக்ஷன் இமேஜை தக்கவைப்பதற்காக விஜய் காப்பி அடித்தார் என்றால், Sean Pennஐய் தன் சிறந்த நடிகர் இமேஜை தக்கவைப்பதற்காக விக்ரம் காப்பி அடித்துள்ளார். ரெண்டு பேருமே காப்பி. இதில் என்ன வித்தியாசம் கண்டுவிட்டீர்கள். (விக்ரமை விஜய்யுடன் ஒப்பிடுவதற்காக மன்னிக்கவும். அவரின் பல படங்களின் ரசிகனாய், அவர் நடிப்பிற்கு விசிறியாய் இருந்தும் அவரின் இந்த செயலை என்னால் ஏற்கவே முடியவில்லை)

 தெய்வத்திருமகன் இயக்குனரிடம்  சில கேள்விகள். அதெப்படி இணையத்தின் மூலம் உலகம் கையளவு சுருங்கியிருப்பது தெரிந்தும் தைரியமாக ஒரு படத்தை, அதுவும் ஆங்கிலப்படத்தைக் காப்பி அடிக்க முடிகிறது? ஆங்கிலப்படத்தை பார்க்கவேண்டுமென்றால் விஜய் டிவியிலும், சன் டிவிலயும் டப்பிங் செய்து ஒளிபரப்பும் போது பார்த்துக்கொள்வோமே? இதற்கு எதுக்கு நீங்கள் கஷ்டப்பட்டு இன்னொரு நடிகரை வைத்து எடுக்குறீர்கள்? மதராசப்பட்டணம் படத்திலேயே பல காட்சிகள் டைட்டானிக், லகான் படக்காட்சிகள் தான். இருந்தும் அந்தப் படத்தின் டெக்னிகல் விஷயங்களும், உங்கள் சொந்த காட்சிகள் சிலவும் உங்களை காப்பாற்றிவிட்டது. ஆனால் விக்ரமின் சிகையலங்காரத்தில் இருந்து கையை ஆட்டி ஆட்டி பேசும் மேனரிசம் வரை அச்சுஅசல் காப்பியடித்திருக்கிறீகள், இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அதுவும் Iam Samக்கு ஒரு நன்றி கார்டு கூட போடாமல்? நீங்கள் Inspiration எனச் சொன்னால் கூட ஏற்றுகொள்ளலாம் ஆனால் நீங்கள் Iam Samஐ காட்சிக்கு காட்சி தமிழில் மீள் உருவாக்கம் செய்திருக்கிறீர்கள். உலக சினிமாவை காப்பி அடித்தால் வரும் சினிமாவும் உலகசினிமாவாகத்தான் இருக்கும். இதில் என்ன பெருமை? வந்துவிடப்போகிறது? இந்தப் படத்தால் நீங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்திற்கு நல்ல பெயராவது கிடைக்குமென நினைக்கிறீர்களா? ஏற்கனவே இந்தி திரையுலகை காப்பியடிப்பதில் மன்னர்கள் என உலகம் விளிக்கும் வேலையில் தமிழ்சினிமா மானத்தையும் வாங்க வேண்டுமா? Iam Samஐ பணம் கொடுத்து உரிமைபெற்றிருக்க வேண்டாம், குறைந்தபட்சம் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் போட்டது போல மூலப்படத்திற்கு ஒரு நன்றி கூடவா உங்களால் போட முடியாது? உங்கள் மதராசப்பட்டணம் படத்தை வடநாட்டில் ஒரு இயக்குனர் அப்படியே காப்பி அடித்து உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையென்றால் என்ன குதி குதிப்பீர்கள்?

படம் நல்ல பொழுதுபோக்குப்படம் தான். கேவலமான தமிழ் சினிமா சூழலில் இது போன்ற படம் நல்ல ரசனை உள்ள ரசிகர்களுக்கு நல்ல தீனிதான். ஆனால் இந்தப் படத்தை கொண்டாடினால், புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு மிகப்பெரிய தவறான உதாரணாம் ஆகிவிடும். சரியான முறையில் சரியான படங்களை காப்பி அடித்தாலே தமிழ்நாட்டில் புகழ் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி புதிதாய் சிந்திக்கும் திறனையே காலப்போக்கில் மழுங்கடித்துவிடும். அது தமிழ்சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தடையாகிவிடும்.

அழகர்சாமியின் குதிரை படத்தை ஏன் நாம் இவ்வளவு கொண்டாடவில்லை? மண்ணையும், மக்களையும் சுமந்து திரியும் நெகிழ்ச்சியான கதைகள் நம் ஊரில் ஏராளமாக உண்டு. சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் புதைந்து கிடக்கின்றன. Iam Sam படத்தை உங்களால் பணம் கொடுத்து உரிமை பெற்று மீள் உருவாக்கம் செய்ய முடியாது.  ஆனால் நம் ஊர் கதைகளை மிகச்சுலபமாக உரிமை பெறலாமே? அழகர்சாமியின் குதிரையை உலக அரங்கில் திரையிட்டால் உலகம் நம் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும், நம் மதிப்பு உயரும், ஆனால் தெய்வத்திருமகனை ஒரு அமெரிக்காக்காரன் பார்த்தால் காறித்துப்புவான்!
 

Saturday, July 9, 2011

ஹரியின் வேங்கை. அதே டெய்லர் அதே வாடகை!

"சிங்கம் வந்து சக்கப்போடு போட்டு சில மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படிடா இந்தாளு கதை எழுதி, திரைக்கதை எழுதி, படம்புடிச்சு அடுத்தப் படத்தையும் வெளியிட்ருக்காரு?" இது நான்.

"அதே கதை. அதே திரைக்கதை. சீன் மட்டும் மாத்தி போட்ருக்காரு. இத செய்ய ஒரு மாசம் பத்தாதா?" இது என் தம்பி!

வேங்கை படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்த பேச்சு இது! ஹரி படத்துல என்னென்ன இருக்கும்? வேகமா வசனம் பேசுற ஹீரோ, தாவணி கட்டிய ஹீரோயின், கெத்தான அப்பா கேரக்டர் ஒன்னு, பாசத்தை பொழியிற அம்மா அல்லது பாட்டி, ரொம்ப கெட்டவன் இல்லாத வில்லன் ஒருத்தன் அப்புறம் எல்லாத்துக்கும் மேல அரிவாள். இது எல்லாம் மீண்டும் ஒருமுறை சரியான விகிதத்துல கலந்து இருக்கும் படம் தான் வேங்கை.

தனுஷ் நல்லா வசனம் பேசுறாரு. உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சூப்பரா நடிக்கிறாரு. ஆனா அவரை விட பத்து மடங்கு கனமாக இருக்கும் பெரிய பெரிய குண்டர்களையும், ரவுடிகளையும் சண்டைக்காட்சிகள்ல தூக்கி வீசுறப்ப நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு!
வழக்கமா ஹரி பட கதாநாயகிகள் பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற மொக்கையா இருக்க மாட்டாங்க. தமன்னாக்கும் இந்தப் படத்துல முக்கியமான காட்சிகள் இருக்கு. அவரும் நடிக்கிறாரு. ஆனா படத்தோட நேட்டிவிட்டி (Nativity) அவரால் பாதிக்கப்படுது. கருப்புத் தோலில் தெரியும் வெள்ளை தேமல் மாதிரி ஒட்டாமல் இருக்கிறார்.

ராஜ்கிரண் வழக்கம் போல சூப்பர்! சண்டைக்கோழில நடித்த அதே கதாப்பாத்திரம். கைவந்த கலையா நடிக்கிறாரு. தனுஷை காப்பாற்ற போராடும் இடங்கள் அருமை. "நான் பாண்டிச்சேரில இருக்கேன்"னு பொன்னம்பலம் பொய் சொல்றப்ப, "டேய் லேண்ட்லைன்ல இருந்து எனக்கு இப்ப ஃபோன் பண்ணு"னு ராஜ்கிரண் சொல்ற இடம் செம!

இசையைப் பத்தி சொல்ல ஒன்னும் இல்ல. நம்ம தல DSP கொஞ்சம் மொக்க போட்ருக்காரு. ரெண்டு பாடல் பரவால்ல. படத்தோட போஸ்டர்ல பிரகாஷ்ராஜை பாக்குறப்ப எரிச்சலா இருந்துச்சு! இந்தாளு எத்தனத் தடவதான் இதே மாதிரி நடிப்பாருன்னு! ஆனா படம் பாக்குறப்ப இப்படி ஒரு வில்லனை பிரகாஷ்ராஜ் தவிர வேற யாருனாலயும் திரைல கொண்டு வர முடியாது! பிரகாஷ்ராஜ் சூப்பர்! சிங்கம், ஐயா படங்களைவிட இதுல பிரகாஷ்ராஜ் தாறுமாறு!

பெண்களின் உடைகளைப் பற்றி சமூகப்பொறுப்புணர்வுடன் நல்ல கேள்விகளை தமிழ், ஆறு, வேல், இப்போ வேங்கைனு எல்லாப் படத்துலயும் ஒரு காட்சியிலாவது கேள்வி கேட்கிறார் ஹரி. ஆனா எதுக்கு பாடல்கள்ல தன் கதாநாயகிகளை உரிச்சகோழி மாதிரி ஆடவிடுறார்னு தெரில! சிங்கத்துல அனுஷ்கா, இதுல தமன்னா. பாடல் உடைகள் சகிக்கல! ஹரிக்குதான் வெளிச்சம்!

'ஐயா' திரைப்படம் மாதிரியே 'வேல்' திரைப்படம் இருந்துச்சு! 'வேல்' மாதிரியே 'ஆறு' இருந்துச்சு!  சாமி மாதிரியே சிங்கம் இருந்துச்சு! அதுனால என்ன? எல்லாம் நல்லாத்தான இருந்துச்சு! அதே மாதிரி தான் இப்ப வேங்கையும்! ஹரியின் முந்தைய எல்லா படங்களையும் போலவே இருக்கு! பார்த்திபன் வடிவேலுகிட்ட சொல்ற மாதிரி "அதே டெய்லர் அதே வாடகை!" ஆனா எந்த இடத்திலும் சலிப்பு தட்டாம திரைக்கதையை வேகமா நகர்த்தும் இந்த ஃபார்முலாவை அந்தாளு எங்கதான் கத்துக்கிட்டாரோ! படம் செம ஸ்பீடு! ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், தனுஷ், ஹரிக்காக கண்டிப்பா பாக்கலாம்!


Thursday, July 7, 2011

180 - எ கி.மு180 ஸ்டோரி.

அதெப்படிப்பா? அதே பழைய மோரை திருப்பி திருப்பி வேற வேற டம்ளர்ல ஊத்தி கொடுத்துட்டே இருக்கீங்க, மக்களும் குடிச்சுட்டே இருக்கோம்? வாழ்வே மாயம்ல இருந்து சாருக்கானின் கல்ஹோனாஹோ வரை அரைச்சு அரைச்சு தண்ணியா போன மாவை எடுத்து சித்தார்த்தைப் போட்டு திரும்ப அரைச்சிருக்காரு இயக்குனர் ஜெயேந்திரா. 180 திரைப்படத்தின் கதை, கிமு180 ஆம் ஆண்டில் எகிப்திய மன்னர்களின் அரண்மனையில் நடத்தப்பட்ட நாடகங்களுக்காக உருவாக்கப்பட்ட பழைய கதை! (இன்னொரு முக்கியமான விஷயம். இந்த படத்தை சில பேரு Fantasy genre அது இதுனு சொல்லிட்டு அலையிறாங்க. எமன் வேஷத்துல ஒருத்தன் ஒரு சீன்ல வந்தா அந்த படம் Fantasy ஆயிருமா? என்ன கொடுமை சார் இது!)

சில இயக்குனர்களுக்கு கதை எப்படி இருந்தாலும் பரவால்ல அழகழகா லோகேஷன் காமிச்சு, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒவ்வொரு காட்சியும் புகைப்படம் மாதிரி கொடுத்தா மக்கள் கதையில், காட்சியில் இருக்கும் கேவலங்களை சகிச்சுக்குவாங்கனு தைரியம். இந்த பட இயக்குனர் ஜெயேந்திராவுக்கும் அதே தைரியம் தான். படம் திரைப்படம் மாதிரி இல்ல. ஒரு பிரபல புகைப்படக்கலைஞரின் புகைப்பட ஆல்பத்தை பார்த்த மாதிரி இருக்கு.

பாடல்கள்? பாடல்கள் எனக்கு நியாபகம் இல்ல. ஆனா "நீ கூறினால்"னு ஒரு பாடல் ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிச்சுச்சு. ஆனா இடைல எங்கயோ போயி, எங்கயோ வளைஞ்சு காணாம போயிருச்சு. எல்லா பாட்டுமே இசையமைக்கும் போது இசைஅமைப்பாளர் பாதில எந்திருச்சுப் போயிட்டு திரும்பி வந்து இசையமைச்ச மாதிரி விட்டகுறை தொட்டகுறையா இருக்கு.

சித்தார்த்! கதாப்பாத்திரத்துக்கு அருமையான தேர்வு. அந்தாளு படத்தோட முதல் பாதில அளவுக்கதிகமான சந்தோசத்தோட லூசுத்தனமா அலையும் போதே, ரெண்டாவது பாதில ஆள் காலி ஆகப் போறாருனு தெளிவா தெரியுது. எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள். கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் யாருமே நம்ம தினசரி சந்திக்கும் நபர்கள் போல இல்ல. சினிமாத்தனம் மிதமிஞ்சி நிக்குது! இரண்டு கதாநாயகிகளில் நல்லா நடிச்சிருக்குறது நித்யா மேனன். பிரியா ஆனந்தின் கதாப்பாத்திரம் ஸ்டீரியோ டைப் லூசு கதாநாயகி. கொஞ்சி கொஞ்சி பேசிட்டே மொக்க போட்றாங்க. எரிச்சலா வருது!

ஒளிப்பதிவு. இந்த ஒன்னுக்காகவே படம் பாக்கலாம். மிக அருமை. அதும் முதல் பாடலில் ஒவ்வொரு காட்சியும் அழகு. (ஆனா பாட்டு செம்ம்ம்ம்ம்ம மொக்க). இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படத்தில் ரெட் காமிரா (Red Digital Camera) பயன்படுத்தியிருக்காங்க. ஏற்கனவே இந்த காமிரா அச்சமுண்டு அச்சமுண்டு படத்துல உபயோகிச்சிருந்தாங்க. ஆனா இவ்வளவு அழகா இந்த காமிரா படம் புடிக்கும்னு இந்த படத்துலதான் தெரியுது. Red Camera எல்லாருக்கும் கிடைச்சா குறைந்த பட்ஜெட்ல நல்ல தரமான படங்களை எடுக்கலாம். 

படத்தைப் பத்தி அவ்வளவுதான். மேல சொன்னதையெல்லாம் கூட்டி கழிச்சு பாருங்க. கூட்டல் தொகை '+'ல வந்தா படம் பாருங்க. இல்லேனா நெட்ல எதாச்சும் இயற்கை காட்சிகள் ஆல்பம் இருந்தா புரட்டி பாருங்க!


Friday, July 1, 2011

பண்டிட் சாலமன் பாப்பையா!

“இந்தி தெரியாததால் தமிழர்கள் வடநாட்டில் மரியாதை இழக்கிறார்கள்” -பண்டிட் சாலமன் பாப்பையா.


தமிழ்மக்கள் மொழிப் போராட்டம் நடத்தினோமேயொழிய உலகின் மிகப்பெரும் அடிமைச் சமூகங்களுக்குள், 'யார் மிகச்சிறந்த அடிமைகள்?' என்று போட்டி வைத்தால் நாம் தான் மிகப்பெரும் பெரும்பான்மையில் ஜெயிப்போம். உதாரணமாக, நாம் இந்தி பாட்டு பாடும்போதோ அல்லது இந்தி படம் பார்த்துகொண்டு இருக்கும்போதோ, இந்தியின் மீது பிடித்தமே இல்லாதவன் கூட என்ன சொல்கிறான்?, "பெரிய இவரு... இந்தி பாட்டுதான் கேப்பாரு" என்கிறான். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணமாகத் தெரியலாம். ஆனால் எவ்வளவு பெரிய அடிமைப் புத்தி இது? இந்தி பாடலோ, இந்தி படமோ பார்த்தால் 'அவரு பெரிய இவரு' என்று இந்தியே தெரியாத அல்லது இந்தியே பிடிக்காத ஒரு சராசரி தமிழன் மனதில் கூட பதியவைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு உதாரணம். இதுபோல் அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இரண்டு வருடம் டெல்லியில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தால் போதும், தமிழ்நாடு வந்தபின்னும் கூட இந்தியிலேயே அவர்களுக்குள் கதைப்பதும், சுற்றி இருப்பவர்களுக்கு இந்தி தெரியுமா என்ற நினைப்பே இல்லாமல் தங்கள் குடும்பத்திற்குள் இந்தியில் பேசிக்கொள்வதும் கூட இந்தி பேசுவதை எதோ பெருமையெனச் நினைத்துச் செய்யும் இழிசெயல்கள் தான். என்றாவது தமிழகத்தில் வாழும் வடநாட்டவர்கள் தமிழ் நன்றாக பேசத்தெரிந்தால் கூட தங்கள் குடும்பத்திற்குள் தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா தமிழர்களே?

இந்தி என்பது சராசரியான ஒரு மொழி. ஆனால் மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் அதை ஒரு ஏழாம் அறிவாக நினைத்துச் செயல்படுவதுதான் தவறு. தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டங்கள், 'இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்' அல்ல. அவை 'இந்தி திணிப்பு எதிர்ப்பு' போராட்டங்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இந்தி படிப்பதை தமிழகத்தில் யாரும், எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. அப்படிப்பட்ட உரிமைக்கான, வேண்டிய மொழியை சுயமாய் சிந்தித்துப் படிப்பதற்கான சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை, சிலர் 'இந்தி மொழிக்கு எதிரான போராட்டமாக' சித்தரிப்பது, திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்படும் படுபயங்கர விஷப்பிரச்சாரம்.     

சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள் முக்கியமாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் இந்தி உண்டு. தமிழ் எழுதப் படிக்கவே தெரியாமல் இந்தி மட்டுமே கற்றுவைத்துள்ள ஏராளமான 'மானமுள்ள' தமிழர்களும் தமிழகத்தில் உண்டு. அங்கவை சங்கவையை கிண்டல் செய்தால் கூட கைதட்டிச் சிரிக்கும் தாராள மனப்பான்மையுள்ள தமிழர்களும் உண்டு. நிலைமை இப்படி தாராளமாக இருக்கையில், பேராசிரியர் சாலமன் பாப்பையா இந்தி படித்து பண்டிட் பாப்பையா ஆகவேண்டாம் என இங்கே யார் அவரைத் தடுத்தது? தாராளமாய் இந்தி படித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் "இந்தி படிக்காததால் தமிழருக்கு வடநாட்டில் மரியாதையே இல்லை" என சிந்தனையே இல்லாமல் பேச பாப்பையாவால் எப்படி முடிகிறது? ஒருவேளை அந்தக் கூற்று உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இருமொழிக்கொள்கை உடைய இந்தியாவில், "அப்படி நடப்பது நியாயமா?" என்றல்லவா சாலமன் பாப்பையா கேள்வி கேட்டிருக்க வேண்டும்? சிந்தையின்றி அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அறிஞர் எனப்படுபவருக்கு அழகா? இன்று இந்தி படித்தால் மரியாதை என்று சொல்லுவான். நாளை நிர்வாணமாக நடந்தால் மரியாதை எனச் சொன்னால் அதையும் செய்வாரா பாப்பையா?

தமிழகத்தில் இந்தி படிக்க தடையேதும் இல்லை. படிக்கத் தோன்றினால் படியுங்கள். ஆனால் "இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, இந்தி படித்தால் தான் இந்தியாவில் எங்கும் வேலை, எங்கும் மரியாதை" என்றெல்லாம் அடிமைத்தனமான, பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம். வடநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதத்தில் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தி சரளமாக வந்துவிடும். இந்தியை ஏட்டில் படிப்பவர்களை விட பழக்கத்தில் படிப்பவர்கள் தான் தொடர்ச்சியாக நன்றாக இந்தி பேசுகிறார்கள். வடநாட்டில் இருக்கும் தமிழர்களைக் கேட்டாலே இது தெரியும். மேலும் தமிழர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசுபவர்கள் என்று வடநாட்டில் மரியாதை அதிகம். ஏனெனில் வடநாட்டான் ஆனால் தென்நாட்டான் ஆனாலும் ஆங்கிலம் தான் பலருக்கு சோறு போடுகிறது.

ஆனால் ஏற்கனவே, தமிழால் சோறு தின்று, தமிழால் புகழ்பெற்று, பாரியின் மகள்களான அங்கவை சங்கவையைக் கேவலப்படுத்திய பாப்பையா போன்ற தமிழ் விரோதிகளின் முட்டாள்த்தனமான, அடிமைத்தனமான பேச்சுக்களை கடுமையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தே ஆகவேண்டும். சாலமன் பாப்பையா போன்ற ஊடக வெளிச்சத்தில் உள்ளவர்கள் தவறான கருத்துக்களைப் பரப்பும்போது அதைக் கேட்பவர்களின் மனதில் எவ்வளவு அதிகமான உளவியல் ரீதியான மாற்றங்களை அது நிகழ்த்தும்? ஏற்கனவே எவ்வளவு பழமை என்றே ஆராய இயலாத அளவிற்கு உலகின் மிகத்தொன்மையான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்களில் பலர் தங்கள் மொழியின் அருமை தெரியாமல் அடிமைப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான பேச்சுக்களை அனுமதிக்கலாமா? இதையெல்லாம் விடக் கொடுமை பல தமிழர்கள் சாலமன் பாப்பையாவிற்கு கைத்தட்டிக்கொண்டும், அவரை எப்படி நாசூக்காக விமர்சிக்கலாம் என நமக்கு வகுப்பெடுத்துக்கொண்டும் இருப்பதுதான்! சூடாக கண்டித்தால் தான் சாலமன் பாப்பையா போன்ற தமிழால் சோறு உண்டு தமிழை இகழும் துரோகிகள் திருந்துவார்கள் அல்லது குறைந்தபட்சம் நாக்கை சுருட்டிக்கொள்வார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...