Tuesday, May 24, 2011

அழகர்சாமியின் குதிரை எழுத்தாளர்களின் பெருமிதம்!அழகர்சாமியின் குதிரை! ஒருவழியா நண்பர்கள் எல்லாரிடமும் கெஞ்சி, ஒருத்தரும் உடன் வராததால் தனியாகவே பார்த்துவிட்டேன். ஏற்கனவே படத்தைப் பற்றி மிதமிஞ்சிய பாராட்டுக்கள் உலவும் வேலையில், அடியேன் அந்தப் படத்தைப் பற்றி எழுதுவது படக்குழுவினரை பாராட்ட அல்ல. படம் பார்த்ததற்காக என்னை நானே பாராட்டிக்கொள்வதற்கு!

இளையராஜாவின் "குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி" பாடல் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. இளையராஜா குரல் மாற்றி பாடியது தேவையில்லாத வேலையோ என்று! படத்துடன் சேர்த்து பாடலைப் பார்க்கும் (கேட்கும்) போது, "குதிரைமேல பைத்தியமா இருக்கும் குழந்தை மனசு படைச்சவன் பாடுனா இப்படி இல்லாம வேற எப்படிடா இருக்கும்?"னு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்! இளையராஜாவை வழக்கம் போல் மனம் மெச்சியது!

இயக்குனர் சுசீந்திரன் எனக்குப் பிடித்தமான இயக்குனர் இல்லை. அவரது 'வெ.கபடிக்குழு'வும் சரி 'நான் மகான் அல்ல' வும் சரி, எனக்கு  பிடித்தமில்லாத படங்கள். ஆனாலும் 'நான் மகான் அல்ல' படத்தின் முதல் பாதியில் வரும் டென்ஷன் பில்ட் அப்பிற்கு (tension buildup) நான் ரசிகன். நான் மகான் அல்ல இயக்கி அதில் வெற்றியை ருசியும் கண்டுவிட்ட ஒரு இயக்குனருக்கு அழகர்சாமியின் குதிரையைப் படமாக்க ஒரு அதிபயங்கர துணிச்சல் வேண்டும். அதுவும் அப்புக்குட்டியை கதாநாயகனாக ஆக்கி, அவருக்கு சரண்யா மோகன் என்னும் flawless beautyயை ஜோடியாக ஆக்குவதற்கு மகாதுணிச்சல் வேண்டும். படத்தின் போஸ்டர்களைப் பார்த்த போது வழக்கமான மதுரைய மையமாக வைத்து எடுக்கப்படும் காதல்-வன்முறை வாந்தியோ என எரிச்சலாக இருந்தது. ஆனால் படம் பார்க்கும் போது கதையும், சுசீந்திரனும் அப்புக்குட்டியின் நல்ல தன்மையான பாத்திரப் படைப்பின் மூலம் அவரை மிக அழகான ஆணாக ஆக்கியிருந்தார்கள். சரண்யாவை பொண்ணு பார்க்கும் காட்சியில் கொஞ்சம் கூட உறுத்தவில்லை. இவ்வளவு நல்லவனுக்கு இதைவிட அழகான பெண் கிடைத்திருந்தாலும் பார்ப்பவருக்கு உறுத்தாது!

அப்பாவித்தனத்தையும், நல்ல மனசையும் அந்த குண்டு உடம்பும், குள்ளமும், கருப்பு நிறமும் பிரம்மாண்டமாக எடுத்து வைக்கின்றன. இனி வடிவேலு பாணியில் "குண்டா, குள்ளமா, கருப்பா இருக்கறவன் நல்லவனாதான்டா இருப்பான்" எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்புக்குட்டி அசத்தியிருக்கிறார்! சூப்பர்!  

படம் பல இடங்களில் லேசான நாடகத்தன்மையோடு இருப்பதை மறுப்பதற்கில்லை. புது நடிகர்கள் என்பதால் இருக்கலாமோ என்னவோ. திருப்பூருக்கு குழந்தைகளை அனுப்ப முடிவு செய்யும் காட்சியில் இரு பெண்கள் பேசிக்கொள்ளும் காட்சி நடக்கும் இடத்தை மாற்றியிருக்கலாம். இப்படி ஒருசில காட்சிகள் உண்டு. படத்தில் வரும் பகுத்தறிவாள இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கும் காட்சிகளை வைத்திருக்கலாம். கடைசி காட்சியில் குதிரை அப்புக்குட்டியை காப்பாற்றும் காட்சி அருமை என்றாலும், வில்லன்களை விரட்டி சென்று, வழியில் மாந்திரீகவாதியை தீயில் தள்ளுவதும், மைனரை 'அந்த' இடத்தில் மிதிப்பதும்  கொஞ்சம் சினிமாத்தனம் என்பதை மறுப்பதற்கில்லை.

கதை மிக அழகான கதை. தமிழ் சிறுகதைகளையும், நாவல்களையும் படமாக்க எல்லா இயக்குனர்களும் முன்வர வேண்டும். அரைத்த மாவையே அரைக்காமல், தன் படத்திற்கு தான் தான் கதை எழுதுவேன் என்ற பிடிவாதத்தை தள்ளி வைத்துவிட்டு, நல்ல தமிழ் எழுத்தாளர்களிடம் தஞ்சம் புகுந்தால் அழகர் சாமியின் குதிரை பல குட்டி போட்டு தமிழ் சினிமாவை உண்மையாகவே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்தப் படத்தால் எழுத்தாளர்கள் பெருமிதப்படலாம். திரைப்படங்கள் அவர்களை நோக்கி இனி நகரும். அழகர்சாமியின் குதிரை கோவேறுகழுதை தான் எனினும் மிக அழகான,கம்பீரமான குதிரை. அதைவிட அழகர்சாமி அழகானவர்.

(பாஸ்கர் சக்தியின் சிறுகதையைப் படிக்கத் தோன்றுகிறது. யாரேனும் லின்க் இருந்தால் கொடுங்கள். நன்றி)
Related Posts Plugin for WordPress, Blogger...