Friday, April 22, 2011

(சாய்)பாபா கிச்சு கிச்சு தா!

தலைப்பை பாத்தீங்களா? நான் எவ்ளோ அநாகரீகமானவன்? சாகப்போற மனுஷன பத்தி மனிதாபிமானமே இல்லாம பேசுற என்னை அந்த பகவான் மன்னிக்கவே மாட்டாரு.... இப்படிலாம் நீங்க நினைப்பீங்க. ஆனா இப்ப மட்டும் அந்த பகவான் என்னை கண்டுக்க மாட்டாரு. ஏன்னா அவரே வாயில, மூக்குல, காதுல பைப் சொருகி ICUல தான இருக்காரு! :-( So sad!

எத்தனையோ சாய்பாபா மேஜிக் வீடியோ youtubeல இருக்கு. அதையெல்லாம் பாத்தும் பல மனிதர்கள் திருந்தாம இருக்குறதுதான் வருத்தமாவும், கேவலமாவும், காமடியாவும் இருக்கு. சாய்பாபாவுக்கும் மற்ற சாமியார்களுக்கும் வித்யாசம் இருக்கு. மத்த சனியன் எல்லாம் கடவுள் அருள் பெற்றது. ஆனா சாய்பாபா மட்டும் தான் கடவுளாகவே வாழ்பவர்! அதுனால அவரு 'ஐசியூ'வில் படுக்கையை நாறடிப்பது கடவுள் சித்தாந்தத்தையே நாறடிக்கிற மாதிரி!

மேட்டருக்கு வர்றேன். நான் அஞ்சாவது படிக்கிறப்ப சாய்பாபா ஃபோட்டோவைப் பாத்து என் நண்பன் கிட்ட "என்னடா இந்தாளு மண்டை விசிறியை விரிச்சா மாதிரி இருக்கு.. கருமம்"னு சொன்னேன். அதுக்கு அவன், "அப்படி சொல்லாதடா. பாபா தலைல இருக்க ஒவ்வொன்னும் பாம்பு"னு சொன்னான். அதுக்கு நான் "புழு மாதிரி இருக்கு. பாம்புனு சொல்றியேடா"னு கேட்டுத் தொலைச்சிட்டேன்! அப்புறம் அவன் அந்த பாபா அருளால என்கிட்ட பேசவே இல்ல! :-( எனக்கு இப்ப என்ன டவுட்டுன்னா, பாபா இப்ப மண்டையப் போட்டாருன்னா அந்தாளு தலைல இருக்க பாம்பு எல்லாம் செத்துருமா அல்லது அவரு தலைல இருந்து பிச்சுகிட்டு ஓடிருமானு தான்! யாராச்சும் பாபா செத்தோனே போயி பார்த்தீங்கன்னா எனக்கு சொல்லுங்க ப்ளீஸ். 

சாய்பாபாவின் மந்திர தந்திர லீலைகளைக் காண சொடுக்குங்கள் Saibaba exposed(youtube)


Wednesday, April 13, 2011

தமிழ்புத்தாண்டு பற்றிய முழு வரலாறு!


தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.


தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.

தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.Monday, April 11, 2011

மாப்பிள்ளை(2011) -இரண்டு வரி விமர்சனம்!


 1)பழைய மாப்பிள்ளை படத்தின் போஸ்டருடன் கூட இந்தப் படத்தை ஒப்பிடமுடியாது!  ஒரு அருமையான பொழுதுபோக்கு படத்தை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம் என ஒவ்வொரு காட்சியும் தோன்றியது!

2)விவேக் காமடி சூப்பரா இருக்குனு முழுப்படத்தைப் பார்க்கத் தேவையில்லை, சிரிப்பொலியிலோ ஆதித்யாவிலோ பார்த்துக்கொள்ளுங்கள்!அன்னா ஹஜாரே என்ற ஊறுகாய்!

CNN ibnல அன்னா ஹஜாரேயிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது, "உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுகொள்வீர்களா?" என்று! பிரதமர் ஆவதற்கு இந்த எளிய வழி இருப்பது தெரிந்திருந்தால் நானும் மீனவர்களுக்காக நாலு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பேன். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் நானோ, நீங்களோ இந்தியாவில் பெயர் போன அகிம்சை வழியில் போராடினால் கூட செத்து, அழுகி, காய்ந்து, காக்கையால் தூக்கிச் செல்லப்படுவோமேயொழிய, இந்த ஊடகங்களால் கண்டுகொள்ளப்பட மாட்டோம்! ஏன்னா எதை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றும், எதை மக்களிடம் இருந்து முழுதாய் மறைக்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெளிவாய் முடிவு செய்கின்றன, மேலிட உத்தரவின் பேரில்.

ஒரு போராட்டத்தின் சாரமும், அந்தப் போராட்டத்தின் மூலம் போராளிகள் பெற விரும்பும் கவனமும், எழுச்சியும் அந்த போராட்டத்தை மக்களிடையே எடுத்துச்செல்லும் ஊடகங்கள் அதை எந்த தொனியில் கொண்டு செல்கின்றன என்பதிலேயே அடங்கியிருக்கிறது! அன்னா ஹஜாரேயின் போராட்டத்தை பொறுத்தவரை, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அடுத்து ஊடகங்களால் 'புதிய சுதந்திரப் போராட்டமாகவே' அது சித்தரிக்கப்பட்டது! தினமலரின் முதற்பக்க செய்தி, "நாடு முழுதும் எழுச்சி" என்று.

ஒன்றை நாம் நிதானமாக கவனித்தால், ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் சட்டென ஆரம்பித்து, வெகு சுலபத்தில் ஊடகங்களின் ஆதரவைப் பெற்று, அதன் மூலம் நாட்டு மக்களின் அமோக ஆதரவையும் பெற்று, வெகுசீக்கிரம் வெற்றியும் பெற்ற போராட்டம். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போராட்டம் 'அரங்கேற்ற'ப் பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. மிக முக்கியமான சந்தேகம், ஒரு நாட்டின் அரசை நிர்ப்பந்தம் செய்யும் ஒரு போராட்டத்தை நடத்த அவ்வளவு சுலபமாக டெல்லி கேட்டின் வாசலில் இடம் கொடுக்கப்பட்டது எப்படி? எந்த போராட்டமானாலும் அங்கே இடம் கொடுக்காத டெல்லிவாசிகள் எப்படி ஹஜாரேயை மட்டும் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்கள்? இரண்டாவது, அந்தப் போராட்டத்திற்கு சோனியாவே ஆதரவு கொடுத்தது. மூன்றாவது, வெகு சீக்கிரத்தில் கோரிக்கையை அரசு ஏற்றுகொண்டது. நான்காவது மிதமிஞ்சிய ஊடகவெளிச்சத்தில் 'லோக்பல் பில்' என்பது ஊழல்களையெல்லாம் ஒழிக்க வந்த அவதாரம் போலவே மக்களிடம் சித்தரிக்கப்பட்ட தொனி. இந்த சந்தேகங்களையெல்லாம் சற்று ஒத்தி வைப்போம். ஏனெனில் நம் மக்கள் இதை மட்டும் படித்துவிட்டு "எதைச் செய்தாலும் குற்றம் சொன்னா என்ன அர்த்தம்?" எனக் கேட்பார்கள். லோக்பல் பில் பற்றி சில வரிகளில் சொல்கிறேன்.

லோக்பல் பில் என்பது சுதந்திரமாய் செயல்படும் ஒரு அமைப்பு. எந்த அரசியல்வாதியும் பங்கு பெறாமல் ஊழலை தண்டிக்கும், ஊழல் பணத்தை திரும்பப் பெரும் ஒரு அமைப்பு. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மொத்த அதிகாரத்தையும் குத்தகைக்கு எடுத்த ஒரு அமைப்பு. ஆங்கிலத்தில் 'Independent body'. இதுதான் இந்தியாவின் முதல் independent body என்றால் நாம் இதை ஆதரிப்பதில் அர்த்தம் உண்டு. ஏற்கனவே தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், CBI போன்ற so called independent bodies of India எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என நமக்குத் தெரியும். இவை அனைத்துமே இதுவரை ஆளும் நடுவண் அரசின் கைக்கூலியாக, பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளையும், எதிர்க்கட்சியையும், கூட்டணிக் கட்சிகளையும் அடக்க, ஒடுக்க, பயமுறுத்த மட்டுமே பயன்பட்டுவரும் பயங்கர dependent bodies. இது போன்ற ஒன்றுதான் இந்த 'Lokpal bill'ம். லோக்பல் பில்லில் மட்டுமென்ன வானத்தில் இருந்து குதித்த நடுநிலையாளர்களா இருக்கப் போகிறார்கள்? அதே கட்சிக்காரன் தான். அதே அரசியல் தான். அதே காசு தான். அதே ஊழல் தான்! இப்படியாகப்பட்ட, மற்றுமொரு கையாலாகாத, ஊழலின் மற்றொரு பிறப்பிடமாக இருக்கப்போகிற 'லோக்பல் பில்'லை, இந்திய மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளைத் தீர்க்க வந்த அவதாரபுருஷனாக ஊடகங்கள் சித்தரிப்பது காங்கிரஸ் அரசின் மற்றும் அதன் வியாபார பங்குதாரர்களான தொழில் முதலைகளின் ஆணையால் மட்டும் தானேயொழிய, தானாக அல்ல. ஊழலை அடக்க புது சட்டங்கள் எல்லாம் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களே மிகக் கடுமையானவை. அதை செயல்படுத்துவதில் தான் மிகப்பெரும் ஏமாற்றுவேலை நடக்கிறது. புதிது புதிதாக சட்டங்கள் ஏற்பட்டாலும் இதே ஏமாற்றுவேலை தான் நடக்கும். 
                                       

காங்கிரஸ் அரசுக்கு என்ன லாபம்? எந்த ஒரு கட்சியுமே பெரும்பாலும் ஆட்சியை இழந்தபின் தான் ஊழல் புகார்களையும், பெரும் மோசடிப் புகார்களையும் சந்திக்கும். ஆனால் தற்போதைய காங்கிரசு அரசு ஆட்சியில் இருக்கும்போதே படுபயங்கர ஊழல் புகார்களுக்கு உள்ளாகி அவப்பெயரை மிக அதிகமாக வாங்கிவைத்துள்ளது. இந்த நிலையில் ஊழலுக்கு எதிராக தான் இயற்றும் சட்டம் அதற்கு மிக நல்ல பெயரை மக்களிடையே வாங்கித் தரும். அதாவது என் வீட்டில் யாரும் புகைப்பிடிக்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரிடமும் நான் கடைபிடிக்கச் சொன்னால், தானாகவே என் சுற்றத்தாரும், என் வீட்டினரும், என்னை புகைப்பிடிக்காதவனாகத் தான் எண்ணிக்கொள்வார்கள். அதே logic தான் இங்கும். மொத்தமாக ஊழல் புகார்களை கூட்டணிக்கட்சிகளிடம் தள்ளிவிட்டு தான் நேர்மையானவனாகக் காட்டிக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் போராடுபவர்கள் உரிமைப் போராளிகள் என்று மக்களுக்கு அருந்ததிராய் போன்றவர்களால் புரியத் தொடங்கியுள்ள இந்நேரத்தில், ஹஜாரேயின் அகிம்சை போராட்டத்தை ஆதரித்தால் மற்ற போராளிகள் மக்கள் முன் கெட்டவர்களாகவும், அரசு மக்களிடையே நல்ல அரசாகவும் தெரிவார்கள். "இந்த அரசு சரியான காரணங்களோடு போராட்டம் செய்பவர்களைத் தான் ஆதரிக்கிறதே. அப்படியானால் மற்ற போராளிகள் எல்லாம் சரியான காரணத்திற்காகப் போராடவில்லை போல" என மக்களை நம்பவைக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் அந்த போராட்டங்களைப் பற்றி கேள்வி எழும்போது ஹஜாரேயின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட செயலை காரணம் காட்டியே தப்பிக்கலாம்.
                                        
பொதுவாகவே பெரும்பான்மையாக NGO எனப்படும் Non governmental Organisationகள்(பெயரைக் கேட்கும் போதே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" கதைதான் நினைவுக்கு வரும்.) செயல்படுவதே இந்த வேலையைச் செய்யத்தான். உண்மையான மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடிய சமயங்களில் போலியாய் ஒரு போராட்டத்தை நடத்துவார்கள். பின் அந்த போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். உடனே மக்களுக்கு எல்லா உரிமையும் கிடைத்துவிட்டதாக மற்ற பகுதிகளில் உள்ள மக்களை நம்பவைத்துவிட்டு பிரச்சினையில் சிக்கும் மக்களை அம்போ என விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் பெரும்பான்மை Non governmental Organisationகளுடைய பிரதான வேலை. இவர்களால் ஏமாற்றப்பட்டோ, அல்லது இவர்களுடன் சேர்ந்தோ அன்னா ஹஜாரே போன்றவர்கள் அவ்வப்போது உதிப்பார்கள். இந்தமுறை காங்கிரசு, தான் இழந்த மானத்தை மீட்க, அன்னா ஹஜாரேவை ஊறுகாய் ஆக்கியுள்ளது! இவர்கள் வாங்கிய கூலிக்கும் அதிகமாக வேலையைப் பார்த்துவிடுவதால் 11 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரொம் ஷர்மீளா போன்ற உண்மையான போராளிகள் மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.

மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவம் நடத்தும் ஏதேச்சிகார ஆட்சி அந்த மக்களை பல ஆண்டுகளாக சிதைத்து, துன்புறுத்தி வருவதை எதிர்த்து ஷர்மீளா 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் வாயின் வழியே ட்யூப் சொருகி தொண்டை வழியாக வயிற்றில் திரவ உணவுகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் ஊழலுக்கு எதிராக, ஹஜாரேக்கு ஆதரவாக தெருவுக்கு வந்த நம்மில் 99% பேருக்கு தெரியவே தெரியாது. எது பிரதான பிரச்சினை? ஊழலா, மனித உரிமையா? நம் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்படும்போதும், வன்புணர்வு செய்யப்படும்போதும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருந்தால், அதன்மூலம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மறைக்கப்பட்டால் நாம் எவ்வளவு கொடியவர்கள்? அப்படிப்பட்ட ஒரு வேலையை தான் ஹஜாரேயின் உண்ணாவிரதத்தால் நம் அரசு நம்மை செய்யவைத்திருக்கிறது. நாமும் செய்தோம்! இப்போது நல்லபிள்ளை போல் அரசு மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டுள்ளது. ஹஜாரேயும் தியாகி ஆக்கப்பட்டுள்ளார். ஷர்மீளாக்கள் செத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். அரசியல்வாதிகள் சம்பாதித்துக் கொண்டேயிருப்பார்கள்.

முதல் வரியில் CNN IBNல் அன்னா ஹஜாரேயிடம் கேட்கப்பட்ட கேள்வியை கவனியுங்கள். அப்துல் கலாம் எப்படி பாஜகவிற்கு பயன்பட்டாரோ, அதேபோல் காங்கிரசுக்கு ஒரு அன்னா ஹஜாரே. என் நண்பர் ஒருவர் முகநூலில் சொன்னதைப் போல முகநூலில் உலவும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள் "Make Anna hazarre PM" என்று ஒரு page ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

Friday, April 1, 2011

மேதை படத்தில் SPBயின் அசர வைக்கும் குரல்!


 ஒரு 20 வருஷத்துக்கு முன்னால ராமராஜன் பட பாட்டுன்னா இந்நேரம் வித்து தீந்திருக்கும். ஆனா இப்ப அந்தாளு 'மேதை'னு நடிக்கிற படம் நக்கலுக்கு மட்டும்தான் பயன்படுது! 

இந்த படத்துல ரெண்டு பாட்டை நண்பன் முத்துசிவா அறிமுகப் படுத்துனான். ஆரம்பத்துல ரொம்ப சாதாரணமா வழக்கமான opening songஆ தெரிஞ்சுச்சு. அப்புறம் கேக்க கேக்க SPB குரலே ஒரு இசைகருவி மாதிரி ஒலிக்க ஆரம்பிச்சுருச்சு. அதுலயும் 'எப்போதும் எல்லோர்க்கும்'னு வர்ற பாட்டுல SPB, "அவன் தான் மேதை"னு சொல்ற இடத்தை கவனிங்க. என்ன குரல்!!! அசந்துட்டேன்!

'எப்போதும் எல்லோர்க்கும்' பாடலைக் கேக்க(டக்குனு லோட் ஆயிரும்),

பாட்டை தரவிறக்கம் செய்ய 'எப்போதும் எல்லோர்க்கும்'


இன்னொரு பாட்டு இருக்கு 'தும்பிக்கை தொப்பை கண்பதி'னு. இளையராஜாவின் மாங்குயிலே பூங்குயிலே opening இசையோட ஆரம்பித்து அப்படியே மாறும். அதுல வழக்கம் போல SPB பட்டயக் கிளப்பிருப்பாரு. இருந்தாலும் அந்தப் பாட்டுல எனக்குப் புடிச்சது 'தனக்குனன்னா தனக்குனன்னானே'னு ஒரு humming தான். கேளுங்க.

'தும்பிக்கை' பாட்டைக் கேக்க,
Thumbikai Thopai Ganpathi by donashok

பாட்டை தரவிறக்கம் செய்ய 'தும்பிக்கை தொப்பை'

(என்னதான் SPBயை பத்தி மட்டும் பதிவு போட்டாலும் தலை கால் மேல கால் போட்டு HINDU பேப்பர் படிக்கிற அழகே அழகு! ஆனா ஏன் காமிராவை பாத்து படிக்கிறாருன்னு தெரில!)


 
Related Posts Plugin for WordPress, Blogger...