Tuesday, March 8, 2011

இந்தியா இன்னும் இன்னும் நாசமாய்ப் போகட்டும்!

அருணா தற்போது

அருணா என்று ஒரு பெண்.  இப்பொழுது அறுபது வயது ஆகிறது. ஆனால் தனக்கு அறுபது வயது ஆகிவிட்டதென்று அந்த அம்மாவிற்குத் தெரியாது.

அருணா நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் செவிலியர் (நர்ஸ்)ஆக 1973ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணி செய்து வந்த ஒரு துப்புக்கெட்ட மிருகம், அருணாவை வன்புணர்ச்சி செய்ய முயற்சித்துள்ளான். முயற்சியின் இடையே செவிலியர் அருணாவுக்கு அது மாதவிடாய் நேரம் என்பது அந்த வெறியனுக்குத் தெரியவந்துள்ளது. ஆனாலும் மனதை மாற்றிக்கொள்ள மனமில்லாத அந்த மிருகம், அருணாவை நகரவிடாமல் நாய் சங்கிலியால் அவரின் கழுத்தை இறுகக் கட்டி, பின்புறம் வன்புணர்ச்சி செய்து விட்டு, அருணாவை சங்கிலியுடனே அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான். கழுத்தை சங்கிலி பலமணி நேரம் இறுக்கியதால் மூளைக்கு மூச்சுக்காற்று சரியாக செல்லாமல் மூளை பாதிப்படைந்து கோமா நிலைக்கு சென்றார். இது நடந்து 37 வருடங்கள் ஆகின்றன. அருணா இன்னும் கோமாவில் தான் இருக்கிறார்.

இப்படி வாழ்கிறோமா இல்லையா என்பதே தெரியாமல், வாழ்வதற்கும், வெறும் உயிருடன் மட்டுமே இருப்பதற்குமான வித்தியாசத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து 37 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அருணாவின் உடல் இளைத்து தேய்ந்துவிட்டது. எலும்புகளும் எளிதில் உடையக்கூடிய தன்மையை அடைந்துள்ளன. படுக்கையிலேயே தொடர்ச்சியாக நகராமல் இருப்பதால், உடலின் பின்புறத்தி படுக்கைப்புண் வந்துவிட்டது. குணப்படுத்தவே முடியாத வகையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் அருணாவை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென எழுத்தாளர் விரானி தாக்கல் செய்திருந்த மனுவில் கேட்டிருந்தார். அதற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

அருணாவின் பழைய புகைப்படம்


அனுமதி வழங்காததற்குக் காரணமாக "கருணைக் கொலை (Euthanasia) செய்வது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் அது பற்றி சட்டம் இயற்றும் வரை நீதிமன்றத்தால் சரியான முடிவெடுக்க முடியாது" எனத் தீர்ப்பு கூறியுள்ளது. கருணைக்கொலைக்கு ஆதரவாக அந்தத் தீர்ப்பில் பல வரிகள் இருந்தாலும் தற்போதைக்கு நீதிமன்றத்திடம் பதில் இல்லை.

பிரச்சினை இது அல்ல. 37 வருடத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்ட அருணா உயிருடன் இருக்கட்டும். ஆனால் கருணைக் கொலை விஷயத்தில் இவ்வளவு தெளிவாக இருக்கும் நம் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரை பாதிப்புக்குள்ளாக்கிய குற்றவாளிக்கு தண்டனை வழங்கியபோது எவ்வளவு தெளிவாக நேர்மையாக இருந்தது என்பதே கேள்வி.

அருணாவை வன்புணர்ச்சி செய்து (பின்புறத்தில் செய்ததால் இது வன்புணர்ச்சியில் நீதிமன்றம் சேர்க்கவில்லை. ஆனால் வன்புணர்ச்சியை விட கொடூரமான வலியையும் வேதனையையும் தரவல்ல செயல் இது) இந்த கோமா நிலையில் 37 வருடமாக இருக்க வைத்த அந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை ஆறு வருட கடுங்காவல்! அவன் மேல் வன்புணர்ச்சி சட்டம் கூட பாயவில்லை. வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே சுமத்தி ஆறு வருடத்தில் விடுதலையும் செய்துவிட்டார்கள்! அவன் விடுதலை ஆகி 31 வருடங்கள் ஆகின்றன. அவனைப் பற்றி தகவல்கள் இல்லை. எங்கேனும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது நிம்மதியாய் செத்துக் கூடப் போயிருப்பான்.
பிங்கி விரானி

ஆனால் ஒரு பாதிக்கப்பட்டவர்(victim)  அனுபவிக்கும் வேதனையின் கால அளவில் நான்கில் ஒரு பங்கு கூட பாதிப்பை விளைவித்த குற்றவாளிக்கு தண்டனையாகத் தராத நீதிமன்றம் என்ன நீதிமன்றம்? 37வருடம் (சாகும்வரை) கோமாவில் இருந்த, மேலும் சாகும் வரை கோமாவில் இருக்கப் போகும் ஒரு பெண்ணுக்கு என்ன மாதிரியான நீதியை இந்த நாட்டின் சட்டம் தந்திருக்கிறது? இதுவா சட்டம்? அந்தப் பெண்ணுக்கு அவன் இழைத்த அநீதிக்கு சரிசமமான அநீதியைத்தானே இந்த நாட்டின் நீதியும் இழைத்திருக்கிறது? இது நாடா?

போபாலில் லட்சம் பேர் மாண்டு, பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டபோதே நீதி தராத இந்த நாட்டின் சட்டம், அருணா என்ற தனிநபருக்கா நீதி தரப் போகிறது? ஒருவேளை அருணாவை இந்த நிலைக்கு உள்ளாக்கியவனை சரியாக தண்டித்திருந்தால் இந்த நாட்டிற்கு, இந்த நாட்டின் நீதிமன்றத்திற்கு அருணா உயிர் மேல் உரிமை இருக்கிறது? இப்போது உயிரின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்ட நாட்டைப் போல, நீதிமன்றத்தைப் போல கருணைக்கொலையை மறுக்க இந்த நாட்டின் நீதிமன்றத்திற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

ஒவ்வொரு தனிமனித உயிரையும், தனிமனித வாழ்வையும் பாதுகாக்க வேண்டாம், குறைந்தபட்சம் அவற்றை மதிக்கும் சட்டமும், நீதிமன்றமும் இருந்தால்தான் அந்த நாடு உருப்படும். இல்லையேல் இப்போது இருப்பதைப் போல எப்போதுமே உருப்படாமல் நாசமாய்த்தான் போகும். இப்படிப் பட்ட நாடு இன்னும் இன்னும் மோசமாய் நாசமாய்ப் போகட்டும்.


7 comments:

கே. ஆர்.விஜயன் said...

உங்கள் கோபம் நியாயமானது ஆனால் நீதி செத்து விட்டது என்று சொல்லமுடியாது. சில தவறுகள் நடப்பது மறுப்பதிற்க்கில்லை. நீதி மன்றம் தவறுதான் செய்கிறது என்பதை ஏற்க முடியாது.அதற்க்கு கொடுக்கப்பட்ட வரையரையில் தான் அது இயங்க முடியும்.

ரமேஷ் ரத்தினசாமி said...

உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் கோபத்தால் மட்டுமே நிலைமை மாறும். வாழ்த்துகள். தொடருங்கள்.

Chitra said...

இந்த செய்தி வாசித்ததில் இருந்து மிகவும் வேதனையாக இருக்கிறது.

Gowri said...

Dear Sir,

Aruna's story is a pathetic one. No denying that.

Having said that, I think you have NOT gone through the court ruling clearly. Court has recommended 'Mercy' killing under certain circumstances (first such ruling in India). However, Mercy killing of Aruna was denied, because, the petition was filed by one of her friends who has visited Aruna at hospital very few times. She does NOT take care of Aruna. When she does not take care of Aruna, how can she seek her killing ? If my fried is bed ridden and when I am taking care of him, can you go and file a petition for his killing??

All the Nurses in that hospital who has been taking care of Aruna for the past 37 years did NOT want Aruna to die. They are willing and eager to take care of her. What locus standi does this friend of Aruna has for seeking her killing ? Nurses in that hospital rejoiced on the court's verdict. They distributed sweets and celebrated. Not sure, if you saw those photos.

Court is ready to allow mercy killing of Aruna only if the Nurses of hospital file a petition for the same. The Nurses of that hospital are NOT ready for that. We still have so many good souls in this world who selflessly serve others.

Nagasubramanian said...

//
இந்தியா இன்னும் இன்னும் நாசமாய்ப் போகட்டும்!//
தலைப்பைப் பார்த்து ஏதோ என எண்ணி படிக்க ஆரம்பித்தேன். ஆனால், நீங்கள் சொன்ன கருத்தில் நானும் உடன் படுகிறேன்.
நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது பெண்ணின் மீதான கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள்.
விகடன் பிரசுரத்தின், அஞ்சனா தேவ் எழுதிய "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள்" புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

kishore said...

இது ஒரு தனி மனிதனின் கோபம் அல்ல. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருடிய வலி. நம்மை போன்ற இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்க்கு ஒரு பிள்ளையார் சுழி தான் உங்களுடைய கோபம்.

raja said...

I HATE THIS COUNTRY... BCOZ ITS KILL MY PEOPLE.. EEZHAM, RAMESHWARAM. NORTH EAST STATES .. AND ALSO VERY POOR INDIAN PEOPLE. SHAME FULL COUNTRY

Related Posts Plugin for WordPress, Blogger...