Thursday, March 31, 2011

சகாயம்-அழகிரி பிரச்சினை! தேர்தல் ஆணையத்தின் பழிவாங்கல்!

எத்தனையோ தேர்தல்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் எப்போதும் தேர்தல் சமயத்தில் கட்சிகள் மீது குறைபட்டுக் கொள்ளும் மக்கள் இந்த முறை தேர்தலிலே நிற்காத ஒரு கட்சி மீது மிக அதிகமான எரிச்சலிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தான் அது!

"மக்கள் தங்களின் அவசரத் தேவைக்குக் கூட பணமெடுக்க முடியாதபடி தொந்தரவு செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் லட்சணமா? மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பிள்ளைக்கு கல்லூரிப் பணம் கட்டும் பெற்றோர்கள் எல்லாம் கழுத்தில் Notice தொங்கவிட்டுக்கொண்டு அலைவார்களா? Receipt இல்லாத பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் என்ன வருவாய்த் துறையா?" என்றெல்லாம் ஏற்கனவே நீதிமன்றத்தால் தேர்தல் ஆணையம் கண்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது சகாயம் மீது அழகிரி தொடுத்த வழக்கிலும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தால் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.  

நேர்மைக்கு பெயர் போன மதுரை ஆட்சியர் சகாயம், பல இடங்களில் நடந்த கூட்டங்களில் பொதுமக்கள் முன்பு "ஆட்சிமாற்றம் வேண்டும்" எனப் பேசியதாக  செய்திகள் வந்திருந்தது. மத்திய அமைச்சர் அழகிரி இதனால் கோபமுற்று, சட்டத்திற்கு புறம்பான இச்செயலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் "தேர்தல் ஆணையம் ஏன் சகாயம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" எனக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இக்கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் எழுப்பியபோது, "சகாயம் அப்படி பேசவில்லை என்றும். அச்செய்தி பொய் என்றும் பதில் அளித்தது. உடனே நீதிமன்றம், "ஏன் அந்த நாளேட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேட்டு நாளேட்டுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!
இந்நிலையில் 'அசிங்கப்பட்ட' தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சர் அழகிரிக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை அழகிரி வெளியூர் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது தீடீரென வாபஸ் பெற்றுவிட்டது! இது வெளிப்படையான பழி வாங்கும் நடவடிக்கை என தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன! நேர்மைக்கு பேர் போன சகாயம் இப்ப சைலண்ட் ஆனது ஏன்னு தெரில! நான் கூட நேத்து அழகிரிய திட்டியும், இவரைப் புகழ்ந்தும் எழுதிருந்தேன்! இன்னைக்கு தேர்தல் ஆணையமும், சகாயத்தின் மவுனமும்  எல்லாத்தையும் கேள்விக்குறி ஆக்கிருக்கு! இருந்தாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சகாயத்தின் மீது அவசரமாக எந்த முடிவுக்கும் இந்நிலையில் வர இயலாது! தேர்தல் ஆணையமே பாதுகாப்பு வாபஸ் செயலுக்கு பொறுப்பு!

மேலே உள்ளவை கருத்துக்கள்(opinions) அல்ல, செய்திகள்(facts)! எனக்கு என்ன சந்தேகம்னா, பொது இடத்துல அநாகரீகமா வேட்பாளரை அடிச்ச விஜயகாந்தை கேள்வியே கேக்கல இந்த தேர்தல் ஆணையம்! இன்னைக்கு எங்கயோ ஒரு கூட்டத்துல தண்ணியப் போட்டு "அழகு நிலையம் நடத்தும் பெண்கள் எல்லாம் தரங்கெட்டவர்கள்"னு பேசிருக்கு அந்த டாஸ்மாக் கதாநாயகன்! அதை அந்தப் பெண்களின் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளார்கள்! என்ன செஞ்சு கிழிக்குதுனு பாப்போம்!

Wednesday, March 30, 2011

இந்தியா ஜெயிக்கனும். இல்லேனா பாகிஸ்தான் தோக்கனும்!

"ஏம்பா.. மேட்ச் போற போக்கைப் பாத்தா பாகிஸ்தான் ஜெயிச்சிரும் போலயேப்பா!"னு ஒருத்தன்கிட்ட கேட்டேன். "நீயெல்லாம் இந்தியனா? இப்படிச் சொல்ல வெக்கமா இல்ல?"னு சொல்லிட்டு என்னை தேசவிரோதி மாதிரி பாத்தான் ஒருத்தன். சரி இதுக்கு மேல பேசுனா பொடா கிடானு எதாச்சும் சட்டத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருவானோனு பயந்துட்டு பேசாம இருந்துட்டேன்! 

"சச்சின் 100 அடிச்சா வெடி போடனும்னு வெடியெல்லாம் வாங்குனியே, அவுட் ஆயிட்டானே!! ஊருக்கு வர்றப்ப கொண்டு வா. நம்ம போடுவோம்"னு சொன்னேன் என் நண்பன் கிட்ட. அவன், "இப்படி ஆகும்னு தெரியும் மச்சி அதான் அவன் 50 அடிக்கிறப்பவே எல்லா வெடியையும் போட்டேன்."ன்னான்!!

"அடக் கிரகம் புடிச்ச தமிழர்களா!!! BCCI என்பது TCS, WIPRO மாதிரி ஒரு தனியார் நிறுவனம்! அது ஜெயிச்சா என்ன? தோத்தா என்னய்யா? தேசப்பற்றோட வேடிக்கை பாக்க இது என்ன இந்தோ-பாகிஸ்தான் போரா?"னு முகநூல்ல ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டேன்யா! ஒருத்தன் வந்து ஒன்னு சொன்னான் பாருங்க, "தாய் நாடு தாய்க்கு சமம், அதை தெய்வமாக்குவதும், தேவடியாளாக்குவதும் அவனவன் இஸ்டம்..."னு! வாழ்க்கையே வெறுத்துட்டேன்! மொக்கப்பய புள்ள! என்னம்மா டயலாக் வுடுது பாரு! பேசாம நம்ம விசயகாந்து படத்துக்கு வசனம் எழுதப் போங்கடா! இப்பல்லாம் அவரு பட வசனம் ரொம்ப மொக்கையா இருக்கு!

பாகிஸ்தான்னா அவ்ளோ வெறி வருது! வெறி நாய் மாதிரி! இத்தாலிக்காரியா இருந்து இப்போ இந்தியாக்காரியா convert ஆகிருக்க (நாடு மாறத மதம் மாற்றம் மாதிரி ஈசி ஆக்கிட்டீங்களேடா!!) ஒருத்தி இலங்கைல செஞ்ச உள்குத்து வேலைனால சீனாக்காரன் நம்ம தலைலயே குண்டு போடப் போறான்! அப்ப பாகிஸ்தான் காரனும், வடநாட்டுக்காரனும் சேர்ந்து சிரிப்பான்டி! அப்ப இருக்கு ஆப்பு!

பேசாம ரெண்டு நாட்டு ராணுவ வீரர்களையும், காஷ்மீர் போராளிகளையும் கூப்பிட்டு, பேட் பால் கொடுத்து மேட்ச் விளையாட வச்சு, யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு காஷ்மீர்னு சொல்லீட்டோம்னா பல உயிர் மிச்சமாகும்ல!
 
மேட்ச் இந்த நொடில போற போக்கைப் பாத்தா இந்தியா ஜெயிச்சிரும் போல! சரி விட்டுத் தொலைங்கடா! "நல்லெண்ன, வேப்பேண்ண, கடலெண்ண பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?"னு நானும் நல்ல இந்தியனா உங்க கூட சேந்து, "இந்தியா ஜெயிக்கனும். இல்லேனா பாகிஸ்தான் தோக்கனும்!"னு சொல்லி இந்த மொக்கைப் பதிவை முடிச்சுக்குறேன்!

யாரு ஹீரோ? யாரு காமடியன்? வடிவேலு-விஜயகாந்த்!

நேற்று தொலைக்காட்சியில் இரண்டு பொதுக்கூட்ட பிரச்சார செய்தியைப் பார்க்க நேரிட்டது.
ஒரு கூட்டத்தில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார். கலைஞரின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் மக்களிடம் விளக்கிக் கொண்டே வந்த அவர், "கலைஞர் அய்யா ஊனமுற்றவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காரு" எனப் பேசிவிட்டு, பின் அடுத்த நொடி, "அப்படி சொல்லக் கூடாது. தப்பு. மாற்றுதிறனாளிகள்னு சொல்லனும், என்னை மன்னிச்சுருங்க." என மன்னிப்புக் கேட்டுவிட்டு, "கலைஞர் மாற்றுதிறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் அறிவிச்சிருக்காரு"னு சொல்லிட்டு பேச்சைத் தொடர்ந்தார். 

தர்மபுரியில் இன்னொரு பொதுக்கூட்டம். அதில் பேசியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கூட்டத்தின் போது விஜய் ரசிகர்கள், விஜய் நற்பணி மன்ற கொடியையும், அதிமுக காரர்கள் அதிமுக கொடியையும் பிடித்தபடி கேப்டனின் பேச்சை(??)க் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை திடீரென கவனித்த கேப்டன் "கொடியை இறக்குப்பா. கொடியை இறக்குப்பா " எனக் கத்திவிட்டு, தன் பேச்சைத் தொடர்ந்தார். அப்போது பாஸ்கர் என்ற வேட்பாளர் பெயரை குடிபோதையில் பாண்டியன் என்று உளறிய விஜயகாந்தை திருத்த முற்பட்ட வேட்பாளரை அதே திறந்த வேனில் பொதுமக்கள் முன்னிலையில் அடி அடியென்று அடித்தார்! பார்க்கவே பரிதாபமாக இருந்தது அக்காட்சி. ஒருவேளை மக்கள் அவ்வேட்பாளர் மீது இரக்கப்பட்டு வாக்களிப்பார்கள் என கேப்டன் நினைத்துவிட்டாரோ என்னவோ!  

கடந்த தேர்தலின் போது அதிமுக கூட்டத்தில் மதிமுக கட்சிக்காரர்கள் கொடியோடு அமர்ந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஜெயலலிதா "வைகோ கட்சிக் காரங்களாம் அவரு பேசுற கூட்டத்துக்கு போங்க. இங்க ஏன் வர்றீங்க?" என மேடையில் இருந்தபடியே கத்தியது நினைவிருக்கலாம்! இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது!விறகுக்கடையில் தன் வாழ்க்கையைத் துவக்கிய வடிவேலு 'மாற்றுத்திறனாளிகள்' எனப் பேசும் அளவிற்கு updatedஆக நாகரீகமாக இருக்கிறார், பிரச்சாரம் செய்கிறார்.   பல தீவிரவாதிகளை அடித்து உதைத்து, ஊருக்கெல்லாம் படத்தில் உபதேசம் செய்யும் கேப்டன் படுகீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்! இதுல யாரு ஹீரோ? யாரு காமடியன்?

Tuesday, March 29, 2011

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)


 நம் ஊர் புரளிகளுக்கு புகழ்பெற்ற ஊர். முனி அடித்த கதைகளில் ஆரம்பித்து கடைசி வீட்டு பெண் ஓடிப்போன கதை வரைக்கும் சகலமும் இங்கே அதிகம்! இதே போல் பல புரளிகளை உள்ளடக்கி உலவிக் கொண்டிருப்பதுதான் 49-O என்ற, இணையத்தை தற்போது கலக்கிவரும் விதிமுறை! 

இந்தக் கட்டுரை, "நம்ம ஊர் கட்சிகளுக்கெல்லாம் மாற்றாக 49-O இருக்கும் அதுனால 49-Oவைப் போடுங்க" என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் அப்பாவிகளுக்காக! முக்கியமாக இணையத்தில் இந்த 49-O பற்றி தவறான கருத்துக்களை தெரியாமலே பரப்புபவர்களுக்காக!

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O!


ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது. 1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் reachஆல் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய பல புரளிகளுக்கு முற்றுப்புள்ளி தான் இந்தக் கட்டுரை.

நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட பூத் ஆஃபீசரை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும்முன்  நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு (identification verifications) வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு ஃபார்ம்(form) அளிப்பார். அந்த ஃபார்ம் (form)  17A. அதில் அந்த ஆஃபீசரின் மேற்பார்வையில் 49-O பதிவதற்கான காரணத்தை (remarks) நம்முடைய காரணத்தை எழுதிவிட்டு அதில் நம் கட்டைவிரல் ரேகையையும் பதிவ செய்யவேண்டும். இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது!

ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும்.

இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது. அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ருஷ்யாவில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய form முறையே பயன்பாட்டில் இருக்கும்!

இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.  எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார்.

இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி 'life time ban' செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது!

வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் அது செல்லாத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே!  

மேலும் எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதைக் கூட வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிக்க மாட்டார்கள். அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். தயவு செய்து இனி 49-O பற்றிய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள். நன்றி.

கொசுறு: தற்போது மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்லி விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் அவ்விளம்பரத்தில் "உங்கள் விருப்ப கட்சிக்கு வாக்களியுங்கள்" என விளம்பரம் செய்கிறது. "உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். சுயேட்சைகளையெல்லாம் தேர்தல் ஆணையம் புறக்கணிக்க சொல்கிறதா? :-(

Wednesday, March 23, 2011

தினமலர் பத்திரிக்கையின் இன்செப்ஷன்(Inception) யுக்தி!

ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்..

பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.மேலே இருக்கும் படத்தில் உள்ள பெண்களைப் பாருங்கள். கல்லூரி மாணவிகளின் உடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தினமலர் வெளியிட்ட படம் இது. அரை பக்கத்திற்கு இந்த ஆறு மாணவிகளை candid (தங்களை யாரோ படம் பிடிப்பது, படம் பிடிக்கப்படுபவருக்கு தெரியாது) ஆக படம்பிடித்து வெளியிட்டிருந்தது.  எவ்வளவு பெரிய பொறுக்கித்தனம் இது? இதே விஷயத்தை செல்ஃபோன் வைத்து செய்பவனை தானே 'ஈவ் டீசிங்' எனப் பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்? இப்படி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஆறு அப்பாவி மாணவிகளின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து, அவர்களின் படத்திற்கு கீழே "ஆபாசமாக உடையணியும் மாணவிகளை மக்கள் எதிர்க்கவேண்டும்" என்று குறிப்பு வேறு வெளியிட்டிருந்த தினமலரை என்ன செய்வது? அதன் ஆசிரியரை அல்லவா முதலில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டும்? இப்படியொரு தப்பான செய்திக்காக தங்கள் பெண்பிள்ளைகளின் படம் செய்தித்தாளில், அதுவும் முதல் பக்கத்தில் வந்திருப்பதைப் பார்த்த அந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதுதான் தினமலர் தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சமூக அக்கறையா?

இது போன்ற ஏராளமான கேவலம் பிடித்த செயல்களை தினமலர் செய்து கொண்டே தான் இருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்பில் ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து அந்தப் படத்தின் கீழ் தன் பாணியில் நக்கலாக செய்தியும் போட்டிருந்தது தினமலர். 
தூங்கும் போது ஒருவரை படம் எடுக்கலாமா? நம் தனிப்பட்ட நண்பர்களிடம் கூட நாம் செய்யக் கூசும் செயல் அது. அந்தப் படத்தைப் பார்த்த லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எந்த விதமான தாக்கத்தை அது உண்டு பண்ணியிருக்கும்? துணைவேந்தர்களின் குடும்பங்கள் எவ்வளவு வெட்கியிருப்பார்கள்? நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் லட்சக்கணக்கான மாணவர்களையும் வழிநடத்தும் துணைவேந்தர்களை தூங்கும் poseஇல் படமெடுத்து நக்கலடித்து பொறுக்கித்தனம் செய்த தினமலருக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறது?

இது மிகவும் முக்கியமான உதாரணம். என்னை மிகவும் பாதித்த மனம், கொதிக்கச் செய்த இன்னொரு செய்தி இது. அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டு ஒரு இந்தியப் பேராசிரியர் இறந்த செய்தியை கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறது தினமலர். "அமெரிக்காவில் இந்தியப் பேராசிரியருக்கு சதக் சதக். துடிதுடித்து இறந்தார்" என்று. எவ்வளவு இரக்கமின்மை! எவ்வளவு வக்கிரம்! ஒரு உயிரிழப்பின் வலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லட்சணம் இதுதானா!? மரணத்தில் கூட எவ்வளவு நக்கல்?!! அந்தப் பேராசியர் குடும்பம் எவ்வளவு வருந்தியிருக்கும்? இதுதான் மனிததன்மையை காப்பாற்றுவதாக சூளுரைக்கும் பத்திரிக்கையா?

அரசியல்வாதிகளையும், No parkingயில் வண்டியை நிறுத்தும் பொதுமக்களையும் கண்டிக்கவும், படமெடுத்து போடவும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது இந்த தினமலருக்கு? 


புவனேஷ்வரி என்ற துணைநடிகை சில நடிகைகளின் பெயரை சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நடிகைகளின் படத்தையெல்லாம் பெரிதாகப் போட்டு, அந்த நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படும் முன்னரே அச்செய்தியை 'Fact'ஆக சித்தரித்து படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர், அதன் முதலாளிகளில் ஒருத்தனான 'அந்துமணி ரமேஷ்' மீது நிருபர் உமா பாலியல் புகார் தெரிவித்தபோது அந்த செய்தியையும் 'Fact' ஆகவெ கருதி வெளியிட வேண்டியதானே? ஆனால் தினமலர் எபப்டி react செய்தது என கீழே பாருங்கள்.

புவனேஷ்வரி சொன்னால் உடனே எல்லா நடிகைகளும் விபச்சாரிகளாம். ஆனால் உமா என்ற நிருபர், அதுவும் தினமலர் நிருபர், அந்துமணி ரமேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னபின் அவனை மக்கள் முன் நிரபராதி ஆக்க சாம-தான-பேத-தண்ட வழிகளையெல்லாம் உபயோகித்தது தினமலர். பல தொலைக்காட்சிகளில் மிகத் தெளிவாக, நடந்த அசிங்கங்களை புட்டுப்புட்டு வைத்த   அந்தப் பெண் நிருபரை, நாக்கூசாமல் மனநோயாளி என்றெல்லாம் செய்தி வெளியிட்டது தினமலர். உமா என்ற நிருபர் ஏழு வருடம் வேலை பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவில்லையாம். புகார் அளித்தவுடன் தான் தெரிகிறதாம். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தினமலருக்கே பைத்தியம் பிடித்துவிட நிலையில் அது வெளியிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் கீழே பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் நிருபர் உமா தெளிவாக 'தனக்கு சேர வேண்டிய settlementகளை கொடுங்கள்' எனக் கேட்டு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். யாராவது தான் பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியிருக்கும் போது, அதைக் கேட்டு அளிக்கும் ராஜினாமா கடிதத்திலேயே புகாரும் கொடுப்பார்களா? அதுவும் அந்த அலுவலகத்தின் முதலாளியே பொறுக்கித்தனம் செய்யும் போது எப்படி அவரிடமே புகாரும் கொடுக்க முடியும்? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்ற அபார நம்பிக்கையை தினமலர் தனக்குள் வளர்த்துக் கொண்டுவிட்டது. இதற்கு மக்களும் மூல காரணம். இந்த லட்சணத்தில் பா.கே.ப என்று வாரமலரில் பெரிய plucker போல கட்டுரை எழுதுவதும் அல்லாமல் அந்துமணி பதில்கள் என்ற தலைப்பில் ஊருக்கு உபதேசம் செய்யும் நித்யானந்தா வகையறா தான் இந்த அந்துமணி. ஒவ்வொரு வாரமும் இந்த ஆள் எழுதும் கட்டுரையில் உ.பா (உற்சாக பானமாம்.) குடித்ததைப் பற்றியும், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென்றும் மறக்காமல் எழுதுவான் இந்த அந்துமணி ரமேஷ் என்ற பாலியல் குற்றவாளி.  

அந்துமணி ரமேஷின் இரு முகங்கள்
நடப்பு விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ இமயம் தொலைக்காட்சியில் தினமலர் தன்னைக் கேவலப் படுத்தியதைப் பற்றி வருத்தப்பட்டிருந்தார். அதாவது பொடாவில், தினமலரின் மாறாப்பாசத்தை தன்னகத்தே கொண்டே ஜெயலலிதா தன்னை சிறையில் தள்ளிய போது தன்னைப் பற்றிய பயோடேட்டாவை வெளியிட்ட தினமலர், கூடவே, "வைகோவுக்கு மிகவும் பிடித்த உணவு ஆட்டுக்கறி. ஆனால் சிறையில் அது போடப்படுவதால் வைகோவுக்கு மகிழ்ச்சிதான்" என தன் திமிர்த்தனத்தைக் காட்டியிருந்ததாகவும், அதனால் தான் மிகவும் வேதனை உற்றதாகவும் பேசியிருந்தார் வைகோ. 

தொலைக்காட்சியில் தன் மானம் போனதை உணர்ந்த தினமலர் உடனே அடுத்தநாள் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடுகிறது, "வைகோ என்ற நல்லவர் தேர்தலை புறக்கணித்ததால் மக்களுக்கு தான் நஷ்டம்" என்று நல்லவிதமாக நடிக்கிறது. எப்படிப்பட்ட கேவலமான பத்திரிக்கை பாருங்கள்.

வைகோ நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல தினமலர் யார்? மக்கள் தினமலரிடம் கருத்தா கேட்டார்கள்? வைகோவின் செயல்களையும், பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் மட்டும் அப்படியே வெளியிடுவதுதானே உன் வேலை? அதையெல்லாம் படித்து வைகோ மீதான கருத்தை மக்கள் உண்டாக்கிக்கொள்வார்கள். ஆனால் பெரிய Inception படத்தின் கதாநாயகன் போல மக்கள் மூளையில் கருத்துக்களைப் பதியச் செய்கிறது இந்த தினமலர்.

வாசகர் கடிதம் என்ற பெயரில் தானே எழுதி ஒவ்வொரு பெயரில் வெளியிடும் கீழ்த்தரமான செயலையும் தினமலர் பல ஆண்டுகளாக செய்தே வருகிறது! அதற்கு ஆதாரம் கீழே! தினமலரிலும், காலைக்கதிர் என்ற தினமலர் குழுமத்தின் மற்றொரு பத்திரிக்கையிலும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ஒரே கடிதம்!


பத்திரிக்கை என்றால் செய்தியைச் சொல்வதா? கருத்தைச் சொல்வதா? செய்தித்தாள் எனச் சொல்கிறோமா? கருத்துத்தாள் எனச் சொல்கிறோமா? தினமலர் காலம்காலமாக செய்வது இதைத்தான், அதாவது செய்திகளை தனக்கு வேண்டிய பாணியில் அல்லது தொனியில் போட்டுவிட்டு அதனுடன் சேர்த்து நஞ்சு தடவிய தன் கருத்தையும் மக்கள் மனதில் திணித்துவிடுகிறது. தினமலருக்கு கைவந்த கலை இது.

இது போன்ற சமூகப்பொறுப்புணர்வே இல்லாத பத்திரிக்கைகளை மக்கள் கண்டிப்பாய் இனங்காண வேண்டும். ஒரு பத்திரிக்கையின் பணி என்பது உண்மையான செய்தியை மக்களிடம் அளித்துவிட்டு, அச்செய்தி பற்றிய கருத்தை மக்களே சிந்தித்து உண்டாக்கிகொள்ள வழிவகுப்பதேயன்றி விஷக்கருத்துக்களையும், நஞ்சுப் பரப்புரைகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதல்ல. தினமலரை கண்டிப்பாகப் புறக்கணிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஊடகப் புல்லுருவிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நாடு சுத்தப்படும்.


சன் குழுமம் என்ற மற்றொரு கீழ்த்தரமான ஊடகத்தைப் பற்றிய என் பதிவு இங்கே சன் நெட்வொர்க்கும் கொடூர மாறன்களும்Monday, March 21, 2011

வைகோ என்ற அப்பாட்டக்கர்!!

ஆட்சியில் இல்லாத ஜெயாவுடன், "கூட்டணியில் இருக்கிறோம்"னு அப்பாவியாய் நம்பி பல வருசம் கூடவே இருந்து, இன்று அடிபட்டு, மிதிபட்டு வெளியே துரத்தப்பட்டிருக்காரு வைகோ. காரணம் கேட்டா, "உங்களையெல்லாம் எப்ப பாஸ் நாங்க கூட்டணில வச்சிருந்தோம்? நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்கன்னா நாங்களா பொறுப்பு?"னு சொல்லிட்டாங்களாம் அந்தம்மா! அப்புறம் 'வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே'னு background music ஓட நம்மாளு போயஸ் தோட்டத்துல இருந்து ரிட்டர்ன் ஆயிருக்காரு பாவம்! ஆனா அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை.
 
ஆணவத்துனாலயும், தான்தோன்றித்தனத்துனாலயும், மத்தவய்ங்களை என்னிக்குமே மதிக்காத பார் போற்றும் குணத்தாலயும் நடந்த இந்த கேவலமான கூட்டணிக் குழப்பத்த மக்கள் முன்னாடி சிக்கல் இல்லாமல் சமாளிக்கிறதுக்காக சில மொக்கைத்தனமான காரணங்கள் சொல்றாய்ங்க இப்ப. மேலோட்டமா பாத்தா கூட காறித் துப்புற மாதிரி இருக்கு.

ஜெயலலிதாவுக்கு தொகுதி பிரிச்சதைப் பத்தி ஒன்னுமே தெரியாதாம். எல்லாமே சசிகலாவின் வேலையாம்.
இதை எப்படி வெக்கமே இல்லாம அதிமுககாரங்களும், ஜெயலலிதாவுக்கு காவடி எடுக்கும் தினமலரும் சொல்றாய்ங்களோ தெரில. நாளைக்கு ஜெயலலிதா முதல்வர் ஆகி, தமிழ்நாட்டுல திடீர்னு ஒரு உத்தரவு போடுறாரு, "திமுக ஆட்சி கஜானாவை காலியாக்கிவிட்டது அதுனால மக்கள் எல்லாரும் தலைக்கு ரெண்டாயிரம் ரூபாய் மாசாமாசம் அரசுக்கு செலுத்தனும்"னு. இதை நம்ம, "என்ன முட்டாள்தனமா இருக்கே?"னு கேட்டு தப்பித்தவறி போராட்டமும் பண்ணிட்டோம்னு வைங்க, (அந்தம்மா எஸ்மா, நக்மானு ஆயிரம் சட்டம் போட்டு உள்ள தள்ளும். அது வேற விஷயம்) உடனே "எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. சசிகலாவின் முடிவு"னு சொல்லி தப்பிச்சுக்கலாமா? யாரு முதல்வர்? ஜெயாவா? சசிகலாவா? மன்மோகன்சிங் என்ற வாய்பேசா மொக்கைச்சாமிக்கும் ஜெயாவுக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்? திமுகல இதேமாதிரி "கலைஞர் எந்த முடிவும் எடுக்கல, ராஜாத்தி அம்மாள் தான் எடுத்தார்"னு ஒரு செய்தி பரவியிருந்தா, அதை இந்த தினமலர் மாதிரி பத்திரிக்கைகள் எவ்ளோ கேவலமா சித்தரிச்சிருப்பாங்கனு ஊருக்கே தெரியும். ஆனா ஜெயா விஷயத்தில ஜெயாவின் ஆணவம் தப்பிக்க "சசிகலா மேல பழியைப் போடு"னு இந்த பத்திரிக்கைகளே ஐடியா கொடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? 

வைகோ என்ற நல்ல மனுசன, அப்பாவிய, "ஃபாசிச அரசு"னு ஏர்போர்ட்ல கூவிட்டே வந்த சில வாரங்கள்லயே ஜெயாவை கும்பிட்ட அந்த மனிதருள் மாணிக்கத்தை மிகவும் நல்ல முறையில் உபயோகித்துவிட்டு இப்போது செருப்பால் அடித்து விரட்டிவிட்டிருக்கிறார் ஜெயா. எதிர்பார்த்ததுதான். ஆனால் நம்ம சில முக்கியமான விஷயங்களை கவனிக்கனும்.

அஞ்சு வருசமா அதிமுகவோட எதிர்கட்சி அரசியல்ங்குறது கொடநாட்டில் ஓய்வெடுப்பது மட்டுந்தான்னு இருந்தப்பயும், மக்கள் எதிர்கட்சினு ஒன்னு இருக்கு, அது அரசின் தப்புக்களை தட்டிக் கேட்டுட்டு தான் இருக்குனு உணர வச்சது ம.தி.மு.கவின் போராட்டங்களும், எதிர்ப்புகளும் மட்டுமேங்குறத நம்ம மறக்க கூடாது. ஆனா அந்தம்மா மறந்துட்டாங்க! அதிமுக கூட்டணியோட தலைமைக் கட்சியான அதிமுக கொடநாட்டில் குறட்டை விட்டுட்டு இருந்தப்பக்கூட அந்த கூட்டணினு ஒன்னு இருக்குன்ற மாயையை உருவாக்கி காப்பாத்திட்டிருந்தவர் வைகோ என்ற பழுத்த அரசியல்வாதி. அவருக்குதான் ஜெயலலிதாவின் ஆணவமும், அகங்காரமும் இன்று இப்படி பதில் சொல்லியிருக்கிறது.

ஆனா கடைசி வரைக்கும் கூட வைகோ வழக்கம்போல காலில் விழுந்துருவாருனு நினைச்சேன். ஆனா முதல்முறையா மானஸ்தன் அதிசயமா கோபத்தை தக்கவச்சுட்டு ஊருப்பக்கம் போயிட்டாரு. ஆனா அவருக்கு தப்பித்தவறி வந்த ரோஷத்துக்கு கூட 'திமுக கிட்ட வாங்குன காசுதான் காரணம்னு தினமலர் மாதிரி ஜெயலலிதா மீது 'பாசப்பிணைப்புள்ள' பத்திரிக்கைகள் சொல்லுறதுதான் உச்சகட்ட காமடி!

ஏன்பா கலைஞரை என்னப்பா நினைச்சீங்க? 'ஓரமா போ'னு சொல்லிட்டா 40கோடி கொடுப்பாரு? 40கோடி கொடுத்திருந்தா "ஓரமா நில்லு"னுல சொல்லிருப்பாரு!!! மதிமுக தனியா நின்னுருந்தா அது திமுகவுக்கு பலம்னு சின்னப் புள்ளைக்கு கூடத் தெரியும். ஆனா இந்த காவடி தூக்குற பத்திரிக்கைக்காரய்ங்க  என்னத்தையாவது பொய் சொல்லி ஜெயலலிதாவை நல்ல பண்பான தலைவரா காட்டனும்! அதுக்காக என்னத்த வேணாலும் சொல்லுவாய்ங்க போல! ஆனா என்னதான் குளத்தை துணி மூடி மறைச்சாலும் ஈரம் வெளிய தெரிஞ்சிரும்!

சரி. மானம் போச்சு! ஆனா வைகோ இப்ப தேர்தல் புறக்கணிப்பு பண்ணிருக்குறது அவர் கட்சிக்கு அவரே வச்சிக்கிட்ட கொள்ளி. ஒரு முதல்வர் சரியா நடந்துக்கனும்னா சரியான எதிர்க்கட்சி வேணும். அந்த எதிர்க்கட்சி அதிமுக கிடையாது. அதுவும் அந்த தகுதி அந்த அம்மாக்கு சுத்தமா கிடையாது! ஆனா வைகோவுக்கு இருக்கு, அல்லது ஒரு காலத்துல இருந்துச்சு! ஆனா எல்லா வாய்ப்புகளையும் அல்பத்தனமான காரணங்களுக்காக விட்டுட்டுப் போனவரு வைகோ! இப்ப பாத்தா கொஞ்சம் கூட தகுதியே இல்லாத பாமக எல்லாம் வளந்து நிக்குது! இவரு ஊருப்பக்கம் போயிட்டாரு!

ஆனா தேர்தலை புறக்கணிச்சது பெரிய தப்பு. ஒரு கட்சி இடைத்தேர்தல்களைக் கூட எதாச்சும் காரணம் சொல்லி புறக்கணிக்கலாம். ஆனா பொதுத்தேர்தலை புறக்கணிச்சா அது மக்களைப் புறக்கணிக்கிற மாதிரி! அதுவும் சீட்டு கிடைக்கலேன்றதுக்காக கூட்டணியை புறக்கணிக்கலாம், தக்காளி தேர்தலையே புறக்கணிக்கலாமா? அதை விட ஒரு கேவலம் இருக்கா?
என்னமோ போங்கப்பா. வைகோவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது, தப்பான இடத்துல விசுவாசமா இருந்தா என்ன ஆகும்ன்றதுக்கு சரியான உதாரணம்.


கொசுறு:
இதையெல்லாம் எழுதுறப்ப இன்னொரு கேள்வி தோன்றத தவிர்க்க முடியல. கூட்டணியில் அஞ்சு வருசம் இருந்த வைகோவையே அந்தம்மா "அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா நீ?"னு சொல்லி விரட்டிவுட்ருச்சே, வைகோ கூட்டிட்டுப் போன சீமான் இன்னும் அங்க இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்? சொம்ம்மா கயிவி கவியி ஊத்திருக்கும் அந்த அம்மா! நல்லவேளை சீமான் காங்கிரஸ் எதிர்ப்புனு மட்டும் சொல்லி எஸ்கேப் ஆயிட்டாரு! Friday, March 11, 2011

ஜப்பான் பேரழிவு; இரங்கற்பா.


பொங்கிய கடலே....
போதுமெனச் சொல்ல
யாரை விட்டு வைத்தாய்?


போர்த்தியப்
போர்வையைப் பிடுங்கி
சாவு காட்டினாய்;
பொங்கிய
உன் வியர்வையைத் துடைக்கக்
காவு வாங்கினாய்;


கோடிகளைக் கொன்றாய்'
கோடியில் இருந்தவனையும்
கொன்றாய்;
கொலைகாரக் கம்யூனிஸ்ட்டாய்
சர்வாதிகாரம் செய்தாய்;


அடுக்குமாடி வீடுகளை
உடல்கள் மீது அடுக்கினாய்;
அழுகிப்போன உடல்களை
எதன்மீது அடுக்குவாய்?


படகுகளை தெருவிலும்
கார்களை கடலிலும்
வீசினாய்;
யார்மீதான கோபத்தை 
எங்கள் மேல்
கொப்புளித்துத் துப்புகிறாய்...?


பிணங்களை நீரில்
புதையச் செய்தாய்;
நிலங்களைக் கடலில்
புதையச் செய்தாய்;
உறவுகளை எங்கு
புதையச் செய்வாய்?


பசிதாங்கா
என் நாய்க்குட்டி
இப்போதிங்கே?
அதனை விரட்டச்சொன்ன
அண்டை வீட்டு
அக்காள் எங்கே?


காலை முறைத்துச் சென்ற
என் கணவன் எங்கே?
மாலை வருமென நினைத்த
எங்கள் காதல் எங்கே?


என் பால்காம்பைக் கவ்வியிருந்த
என் குழந்தை எங்கே?
அதை நீ
முட்டிச் சாகவைத்த
முள்வேலி எங்கே?


பொங்கிய கடலே
எங்களைப் புதைக்க
சிலரையேனும் விட்டுவை;


தப்பிய சிலரை
அடுத்த முறைக்கேனும்
விட்டுவை;

Thursday, March 10, 2011

இதைப் படிங்கடா வெள்ளை மோகம் புடிச்சவய்ங்களா! (Fair&lovely விமர்சனம்)


ஒரு விளம்பரம். அதுல நேர்முகத்தேர்வு நடக்குது. ஒரு எல்லாந்தெரிஞ்ச விளக்கெண்ணய் இன்னொருத்தன் கிட்ட கேள்வியா கேக்குறான். கடைசிலதான் தெரியுது கேள்வி கேட்டவன் தான் இன்ட்டெர்வ்யூக்கு வந்தவனாம், பதில் சொன்னவன் interview எடுக்குறவனாம்! என்னடான்னு பாத்தா ஒரு (fairness cream) சிகப்பழகு க்ரீம் போட்டதுனால இவரு 'பாஸ்'(pass) ஆயிட்டாராம் interviewல!

அட நாய்களா.. இது தெரிஞ்சா நான் காலேஜுக்கே போயிருக்க மாட்டேனேடா. வீட்லயே உக்காந்து முகரைல cream பூசிட்டு interviewக்கு போயிருப்பேனே! அப்படி எந்த கம்பனிலடா வெள்ளையா இருக்குறவனா பாத்து வேலைக்கு எடுக்குறான்? சரி வெள்ளையா இருந்தா வேலை கொடுப்பான்னா, வெண்குஷ்டம் வந்தா தான் அந்த கம்பனில ப்ரொமோஷன் கொடுப்பாய்ங்களா? கிரகம் என்ன விளம்பரம்டா இது? உங்க கற்பனைத் திறனுக்கு அளவே இல்லையாடா?

இன்னொரு விளம்பரம். நடிகர் சூர்யா என்ற அமெரிக்கர் ஒரு shopping mallல ஸ்டைலா நடப்பாரு. உடனே பொம்பளைப் புள்ளைங்கள்லாம் அவரையே பாக்கும். இதைப் பார்த்துட்டு ஒரு கேனையன் "இந்த குள்ளனையெல்லாம் ஃபிகர் பாக்குதே. நம்மளப் பாக்கலையே. கலர்தான் காரணமோ?"னு நினைச்சுக்கிட்டு ஏதேதோ fairness cream வாங்கிப் போட்டுப் பாப்பான். உடனே சூர்யா என்ற மூணறையடி அமெரிக்கர், "இதைப் போடுப்பா. நான் இதைப் போட்டுத்தான் ஃபிகர் கரக்ட் பண்றேனு" சொல்லி ஒரு சொரி மருந்தைக் கொடுப்பாரு. அவன் அதை முகரைல தடவுனவுடன எல்லா புள்ளைங்களும் அவனைப் பாக்கும்! அடங்கொக்கா மவனே... அந்தப் புள்ளைங்க சூர்யாவைப் பார்த்ததே "யாருடா இவன்? மூணு அடில குள்ள மனிதன் போறானே"னு நினைச்சு ஆச்சரியமா பாத்ருக்குங்க. இவய்ங்க நம்மகிட்ட சிகப்பழகு அது இதுனு புருடா வுட்றாய்ங்க!

ஒரு நடிகனுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்புணர்ச்சி வேணாமா? பெப்சி குடிக்க சொன்ன. குடிச்சோம்! சிமெண்ட் வாங்க சொன்ன. வாங்குனோம்! கிரகம்.. சரவணா ஸ்டோர்க்கு போக சொன்ன. போனோம்! அடப் பாவி இப்ப கண்டதை மூஞ்சில தடவ சொல்லி, "தடவுனாதான் ஃபிகர் பாக்கும்"னு ஒரு புரளிய கிளப்புறியே, இது நியாயமா? ஐந்தரை அடிக்கு மேல் உயரமாக இருக்கும் ஆண்கள் தான் அழகு, அதற்கு கீழ் இருக்கும் ஆண்கள் எல்லாம் அசிங்கமானவர்கள்னு ஒரு விளம்பரம் போட்டா இந்தாளுக்கு நல்லாருக்குமா? 


பேசாம வில் ஸ்மித், ஒபாமா, பிரய்ன் லாரானு ஆளுக்கு ஒரு fairness cream கொடுத்து வெள்ளையாக சொல்லிட்டோம்னா எல்லாரும் வெள்ளைக்காரன் ஆயிருவோம். அப்புறம் இனப் பிரச்சினையே இருக்காதுல்ல! இந்த ஐடியா நெல்சன் மண்டேலா, லூதர் கிங், மால்கம்X க்கு எல்லாம் தெரியாமப் போச்சு. தெரிஞ்சுருந்தா எல்லாரும் போராட்டமெல்லாம் பண்ணாம ஆளுக்கு ஒரு fairness cream வாங்கி தடவிட்டுப் போயிருப்பாய்ங்க!

நம்மாளுங்களை செருப்பால அடிக்கனும். "வெள்ளையா ஆகனும்னா தினமும் காலை, மாலை உணவுக்குப் பின் அரை லிட்டர் ஃபினாயிலைக் குடி"னு சொன்னாக் கூட நம்ம ஊர் புள்ளைங்க குடிக்குங்க. அந்த அளவுக்கு அடிமைப் புத்தி, inferiority complex.
அதுங்களை சொல்லி குற்றமில்ல. ஒரு வெள்ளையான பொண்ணும், மாநிறமான பொண்ணும் சேர்ந்து டிவி பாக்குதுங்கனு வைங்க. அதுல என்ன காட்றாய்ங்க? வெள்ளையா இருக்க பொண்ணு, கருப்பா இருக்க பொண்ணுகிட்ட "கவலைப் படாத. இதைப் போட்டீனா நீயும் என்ன மாதிரி வெள்ளைய, அழகா ஆயிருவ. வேலை கிடைக்கும். நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அது இது"னு சொன்னா அந்த கருப்பான புள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை வருமா வராதா? நந்திதா தாஸ் பாத்ருக்கீங்களா? அவங்களை விட என்ன அழகு வேணும்? கீழ இருக்க வீடியோ பாருங்க. கருப்பா இருக்க புள்ளைய வேணும்னே அசிங்கமா காட்டனும்னு எட்டு முழ சேலைய கிழவி மாதிரி சுத்திவிட்டுட்டு, அப்புறம் cream போட்டதுனால வாய்ப்பு கிடைச்ச மாதிரி காட்டிருப்பாய்ங்க! இதெல்லாம் ஒரு விளம்பர யுக்தியா? அசிங்கமா இல்ல! வெள்ளையா இருக்குறது ஒரு வியாதி. அதுனாலதான் வெள்ளைக்காரன் நேரம் கிடைக்கிறப்பல்லாம் வெயில்ல அம்மணமா உக்காந்து Sun bathங்குற பேருல அந்த குறைபாட்டை சரி பண்ணிக்கிறான். இல்லேனா அவன் தோல் சுருங்கி சுண்ணாம்பு மாதிரி ஆயிரும். இந்த பிரச்சினை நமக்கு இயற்கையாவே நம்ம நிறத்தால இல்லாம இருக்கு. அது இந்த அரைகுறைகளுக்குத் தெரியாம வெள்ளையாக அலையுதுங்க! வெள்ளைக்காரனோட skin texture பாருங்க. பக்கத்துல பாத்தா அறுவெறுப்பா இருக்கும்.

அதுமட்டும் இல்ல. எந்த கருமத்த எவ்வளவு பூசினாலும், நம்ம கலரை மாத்த முடியாது. அது விஞ்ஞான ரீதியா நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம்ம தோல் நிறம், நம்ம கருவா உருவாகுறப்பவே தீர்மானிக்கப்படுது, DNAல பதிவும் செய்யப்பட்டுறது. குங்குமப்பூ, அரளிப்பூனு எதைத் தின்னாலும் வயித்துல இருக்க குழந்தையோட நிறம் மாறாது. வெட்டிச் செலவும், வீண் side effectsசும் தான் மிச்சம். 


அது என்னாங்கடா எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டா, நல்ல கலரா சிகப்பா வேணும்னு கேக்குறீங்க? ஒரு பொண்ணு வேணாம் தம்பி, ரெண்டா கட்டிக்கனு ரெண்டு வெள்ளைப் பன்னியைக் கொண்டு வந்தா கட்டிக்கிவீங்களாடா?

நம்ம போயி வெள்ளைக்காரன் கிட்ட, "உன் தோல் ஏன்பா வெள்ளையா இருக்கு? இதைத் தடவு மாநிறமா அழகா ஆயிருவ"னு சொன்னா, செருப்பை சாணில முக்கி அடிப்பான். ஆனா அவன் வந்து நம்மகிட்ட, "என்னப்பா இது? உன் தோல் கருப்பா இருக்கு? இதைத்தடவு வெள்ளையா ஆயிருவ"னு சொன்னா பல்லைக் காட்டிக்கிட்டு வாங்கித் தடவுறோம். ஒரு படத்துல தல கவுண்டரு சொரி மருந்த திம்பாரே, அது மாதிரி. இதுக்கு பேருதான் அடிமைப் புத்திங்குறது. நம்மகிட்டயே காசை வாங்கி நம்ம இனத்தையே அசிங்கப்படுத்துறான், நமக்கும் அது கொஞ்சம் கூட உறைக்காம சொந்தக் காசுல சூன்யம் வச்சுகிட்டே இருக்கோம்!

நல்லா சொல்றேன் கேட்டுக்கங்க. Fair and lovely, fair and handsome, fairever னு எந்தக் கருமத்த பூசுனாலும் தோல் வெள்ளையா ஆகவே ஆகாது. சொரி புடிச்சு தான் அலையனும். ஆனா வெள்ளையாக மாற வேற சில சுலபமான வழிகள் இருக்கு,

1)தொடர்ந்து 72 மணி நேரம் தண்னீரில் மூச்சுவிடாமல் மூழ்கியிருக்க வேண்டும். தோல் நல்ல வெள்ளை நிறத்தில் மாறும். உடம்பு உப்பி பொலிவு பெறும். ஆனா என்ன? உன் ஆத்தானால கூட உன்னை அடையாளம் கண்டு புடிக்க முடியாது.

2) கொதிக்குற சுண்ணாம்பில் தினமும் முகம் கழுவி வரவும். முதல் நாளிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும்.

3) பிளேட் ஒன்றை எடுத்துக்கொண்டு தோலை சுரண்ட வேண்டும். அடித்தோலுக்கு முன்னேற முன்னேற தோலின் நிறம் மாறிக்கொண்டே வரும். ரத்தம் வந்தால் கம்பனி பொறுப்பல்ல..

அதனால மக்களே... வெள்ளையாத்தான் ஆவேன். அதான் எனக்கு பெருமைன்னு இன்னும் நினைச்சீங்கன்னா, மேற்கண்ட வழிகளைத் தவிர வேறு வழி கிடையாது. மத்த மானமுள்ளவர்களுக்கு நான் என்ன சொல்றேன்னா, கருப்பாவோ மாநிறமாவோ இருப்பதற்காக எந்த வகையிலும் தாழ்வுமனப்பான்மை அடைய தேவையில்லை. ஏன்னா வெள்ளையா இருக்குற காரணத்துனால வெள்ளைப் பன்றி உயர்ந்ததும் இல்ல. கருப்பா இருக்குறதுனால யானை தாழ்ந்ததும் இல்ல.

Tuesday, March 8, 2011

இந்தியா இன்னும் இன்னும் நாசமாய்ப் போகட்டும்!

அருணா தற்போது

அருணா என்று ஒரு பெண்.  இப்பொழுது அறுபது வயது ஆகிறது. ஆனால் தனக்கு அறுபது வயது ஆகிவிட்டதென்று அந்த அம்மாவிற்குத் தெரியாது.

அருணா நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் செவிலியர் (நர்ஸ்)ஆக 1973ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணி செய்து வந்த ஒரு துப்புக்கெட்ட மிருகம், அருணாவை வன்புணர்ச்சி செய்ய முயற்சித்துள்ளான். முயற்சியின் இடையே செவிலியர் அருணாவுக்கு அது மாதவிடாய் நேரம் என்பது அந்த வெறியனுக்குத் தெரியவந்துள்ளது. ஆனாலும் மனதை மாற்றிக்கொள்ள மனமில்லாத அந்த மிருகம், அருணாவை நகரவிடாமல் நாய் சங்கிலியால் அவரின் கழுத்தை இறுகக் கட்டி, பின்புறம் வன்புணர்ச்சி செய்து விட்டு, அருணாவை சங்கிலியுடனே அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான். கழுத்தை சங்கிலி பலமணி நேரம் இறுக்கியதால் மூளைக்கு மூச்சுக்காற்று சரியாக செல்லாமல் மூளை பாதிப்படைந்து கோமா நிலைக்கு சென்றார். இது நடந்து 37 வருடங்கள் ஆகின்றன. அருணா இன்னும் கோமாவில் தான் இருக்கிறார்.

இப்படி வாழ்கிறோமா இல்லையா என்பதே தெரியாமல், வாழ்வதற்கும், வெறும் உயிருடன் மட்டுமே இருப்பதற்குமான வித்தியாசத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து 37 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அருணாவின் உடல் இளைத்து தேய்ந்துவிட்டது. எலும்புகளும் எளிதில் உடையக்கூடிய தன்மையை அடைந்துள்ளன. படுக்கையிலேயே தொடர்ச்சியாக நகராமல் இருப்பதால், உடலின் பின்புறத்தி படுக்கைப்புண் வந்துவிட்டது. குணப்படுத்தவே முடியாத வகையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் அருணாவை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென எழுத்தாளர் விரானி தாக்கல் செய்திருந்த மனுவில் கேட்டிருந்தார். அதற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

அருணாவின் பழைய புகைப்படம்


அனுமதி வழங்காததற்குக் காரணமாக "கருணைக் கொலை (Euthanasia) செய்வது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் அது பற்றி சட்டம் இயற்றும் வரை நீதிமன்றத்தால் சரியான முடிவெடுக்க முடியாது" எனத் தீர்ப்பு கூறியுள்ளது. கருணைக்கொலைக்கு ஆதரவாக அந்தத் தீர்ப்பில் பல வரிகள் இருந்தாலும் தற்போதைக்கு நீதிமன்றத்திடம் பதில் இல்லை.

பிரச்சினை இது அல்ல. 37 வருடத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்ட அருணா உயிருடன் இருக்கட்டும். ஆனால் கருணைக் கொலை விஷயத்தில் இவ்வளவு தெளிவாக இருக்கும் நம் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரை பாதிப்புக்குள்ளாக்கிய குற்றவாளிக்கு தண்டனை வழங்கியபோது எவ்வளவு தெளிவாக நேர்மையாக இருந்தது என்பதே கேள்வி.

அருணாவை வன்புணர்ச்சி செய்து (பின்புறத்தில் செய்ததால் இது வன்புணர்ச்சியில் நீதிமன்றம் சேர்க்கவில்லை. ஆனால் வன்புணர்ச்சியை விட கொடூரமான வலியையும் வேதனையையும் தரவல்ல செயல் இது) இந்த கோமா நிலையில் 37 வருடமாக இருக்க வைத்த அந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை ஆறு வருட கடுங்காவல்! அவன் மேல் வன்புணர்ச்சி சட்டம் கூட பாயவில்லை. வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே சுமத்தி ஆறு வருடத்தில் விடுதலையும் செய்துவிட்டார்கள்! அவன் விடுதலை ஆகி 31 வருடங்கள் ஆகின்றன. அவனைப் பற்றி தகவல்கள் இல்லை. எங்கேனும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது நிம்மதியாய் செத்துக் கூடப் போயிருப்பான்.
பிங்கி விரானி

ஆனால் ஒரு பாதிக்கப்பட்டவர்(victim)  அனுபவிக்கும் வேதனையின் கால அளவில் நான்கில் ஒரு பங்கு கூட பாதிப்பை விளைவித்த குற்றவாளிக்கு தண்டனையாகத் தராத நீதிமன்றம் என்ன நீதிமன்றம்? 37வருடம் (சாகும்வரை) கோமாவில் இருந்த, மேலும் சாகும் வரை கோமாவில் இருக்கப் போகும் ஒரு பெண்ணுக்கு என்ன மாதிரியான நீதியை இந்த நாட்டின் சட்டம் தந்திருக்கிறது? இதுவா சட்டம்? அந்தப் பெண்ணுக்கு அவன் இழைத்த அநீதிக்கு சரிசமமான அநீதியைத்தானே இந்த நாட்டின் நீதியும் இழைத்திருக்கிறது? இது நாடா?

போபாலில் லட்சம் பேர் மாண்டு, பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டபோதே நீதி தராத இந்த நாட்டின் சட்டம், அருணா என்ற தனிநபருக்கா நீதி தரப் போகிறது? ஒருவேளை அருணாவை இந்த நிலைக்கு உள்ளாக்கியவனை சரியாக தண்டித்திருந்தால் இந்த நாட்டிற்கு, இந்த நாட்டின் நீதிமன்றத்திற்கு அருணா உயிர் மேல் உரிமை இருக்கிறது? இப்போது உயிரின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்ட நாட்டைப் போல, நீதிமன்றத்தைப் போல கருணைக்கொலையை மறுக்க இந்த நாட்டின் நீதிமன்றத்திற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

ஒவ்வொரு தனிமனித உயிரையும், தனிமனித வாழ்வையும் பாதுகாக்க வேண்டாம், குறைந்தபட்சம் அவற்றை மதிக்கும் சட்டமும், நீதிமன்றமும் இருந்தால்தான் அந்த நாடு உருப்படும். இல்லையேல் இப்போது இருப்பதைப் போல எப்போதுமே உருப்படாமல் நாசமாய்த்தான் போகும். இப்படிப் பட்ட நாடு இன்னும் இன்னும் மோசமாய் நாசமாய்ப் போகட்டும்.


Related Posts Plugin for WordPress, Blogger...