Wednesday, February 2, 2011

தேசம் என்பது மக்களா, மண்ணா?

பரந்துபட்ட இவ்வுலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த நாட்டினுடைய குடிமக்களின் தேசப்பற்றின் அர்த்தத்தை விளக்குவதாயினும் வெகு சுலபமாக, அக்குடிமக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்துள்ள பற்று எனக் கூறிவிடலாம். தேசத்தின் மீதான பற்றை அறுவை செய்து உள்நோக்கினால், அந்தப் பற்றானது, ஒரு குடிமகன் தன் நாட்டின் சககுடிமகன் மீது கொண்ட பற்றாகவும், தானும் தன் சககுடிமகனும் பேசும் தங்கள் தாய்மொழியின் மீதான பற்றாகவும், தானும் தன் சககுடிமகனும் சார்ந்த இனத்தின் மீதான பற்றாகவும் மிகவும் பிரம்மாண்டாய் விரியும். இப்போது இந்தியாவின், பாரதத்தின், ஹிந்துஸ்தானின் மீதான நமது தேசப்பற்றை கொஞ்சம் அறுத்துப் பார்த்தோமானால் தேசப்பற்று என்ற வார்த்தையைத் தாண்டி வெற்று கூடாகவே இருக்கிறது.

இந்தியா என்ற சமீபத்தில் உருவான ஒரு ஒன்றுபட்ட தேசியத்தில், நாம் சகோதரர்களாய் ஏற்றுகொள்வதாய் உறுதிமொழி எடுத்த வேறு மொழி பேசும் சககுடிமகன் மீதான பற்றென்பது நமக்கு இருப்பதாக கற்பனை செய்தோமானால் அதைவிட கேலிக்குரிய விஷயம் ஏதும் இல்லை. மும்பையில் ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் மாட்டிக்கொண்ட மக்கள் கண்டிப்பாய் காப்பாற்றப்பட வேண்டும், பயங்கரவாதிகள் மரணிக்க வேண்டுமென மிகுந்த வேதனையுடனும், கோபத்துடனும், நாட்டுப்பற்றுடனும் செய்தி வெளியிடும் வட இந்திய ஊடகங்கள், ராமேஸ்வரத்தில் தினமும் செத்து மடியும் மீனவர்களுக்காகவோ, காஷ்மீரில் குடும்பப்பெண்களைக் கூட போராளிகளாய் மாற வைத்த வரலாறு காணாத ராணுவ அடக்குமுறை பற்றியோ, கிழக்கிந்திய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் உருவான பின்புலம் பற்றியோ, அல்லது அந்த மாநில பெண்கள் தங்கள் சொந்த நாட்டின் ராணுவத்தாலேயே வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படுவது குறித்தோ, ஒரு நொடி கூட தங்கள் செய்திகளில் நேரம் ஒதுக்க மறுப்பது மர்மமான விஷயமாகவே இருக்கிறது! 

இந்த மர்மம் ஒன்றும் உங்களுக்கும் எனக்கும் தெரியாததோ அல்லது யூகிக்கவல்லாத ரகசியம் அல்ல. மிகச் சாதரணமானது. இத்தனை  இனங்களும், மொழிகளும், மதங்களும் உள்ள ஒரு நாட்டில், பெரும்பான்மை இனத்தினரோ, அல்லது பெரும்பான்மை மொழியினரோ, சிறுபான்மை மக்கள் தங்களையும் தங்கள் இனத்தையும் முக்கிய குடிமக்கள் (superior citizens) ஆக ஏற்றுக்கொள்ளாத போது, அல்லது ஏற்றுக் கொள்ளவைக்கும் பொருட்டு சிறுபான்மை இன மக்கள் மீது இத்தகைய அடக்குமுறைகளும், இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படும் அவலமும் நடக்கிறது. ஈராக் மீது அமெரிக்கா எண்ணைக்காக போர் தொடுத்தபோது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை ஏகத்துக்கும் எதிர்த்த சிகப்பு சட்டை காம்ரேடுகள் இந்தியா என்ற நாடு தன் நாட்டின் குடிமக்கள் மீதான தனது ஏகாதிபத்தியத்தை ராணுவத்தின் வாயிலாக கட்டவிழ்க்கும் போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் ரகசியமும் இதுதான். 

  
இன்னும் சற்று ஆழமாய் இந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால் அது "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடருக்கு வெகுநேர்மாறாகவே இருக்கிறது. தமிழக விவசாயிகளை மரணத்தின் வாயிலில் சரியாய் கொண்டு சேர்க்கும் காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ராமேசுவர மீனவர் கொலை பிரச்சினை, காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கிழக்கிந்திய மாநில மக்கள் மீதான இந்திய ராணுவத்தின் அடக்குமுறை, ஆகிய எதையுமே அதனால் பாதிக்கப்படாத வேறு பகுதிகளில் வசிக்கும் இந்திய மக்கள் எதிர்க்காமல், கேள்விகேட்காமல் இருக்க இந்திய தேசப் பற்று என்ற இந்திய மண்ணின் மீதான பாசத்தை இந்திய அரசும், வட இந்திய ஊடகங்களும்  மக்கள் மீது பயன்படுத்துகிறது!

இந்த நாட்டுப்பற்று என்னும் மக்களின் உணர்ச்சிகளை மழுங்கடிக்கும் மறதி மருந்தை தொடர்ந்து உற்பத்தி செய்யவேண்டுமானால் பாகிஸ்தானும், சீனாவும் குறைந்தபட்சம் விளையாட்டுப் போட்டிகளிலாவது (கிரிக்கெட்டிலாவது) இந்தியாவிற்கு எதிரிகளாக இருக்கவேண்டும்.

அயோத்திப் பிரச்சினையில் ஆரம்பித்து காவிரிப் பிரச்சினைவரை, நம்மை மறக்கச் செய்வதும் மழுங்கச் செய்வதும் தேசப்பற்று என்னும் மறதி மருந்தே. மேலும் இந்திய அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும், ஒருதலை பட்ச நிர்வாகத்தையும் மறைத்து வருவது பாகிஸ்தான் மீதான, சீனா மீதான ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஊடகங்களால் திணிக்கப்பட்ட கோபமும், இந்நாடுகளை எதிரியாய் நினைக்கும் மனப்பான்மையும் தான். சொந்த வீட்டில் (நாட்டில்) நம் மீது ஏவப்படும் அடக்குமுறைகளையும், நம் உரிமைகள் பறிக்கப்படும் நிலைமையையும் எதிர்க்க துப்பில்லாத தன்மையை, அடுத்த வீட்டின் (நாட்டின்) மீதான நம் கோபம் நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை எதோ உலகயுத்தம் போல் சித்தரிக்கும் ஊடகங்களின் குறிக்கோள், நம் கோபம் பக்கத்து மாநிலத்தில் இருந்து நமக்கு தண்ணீர் பெற்றுத் தரக்கூட முடியாத இந்திய அரசின் மீது பாயாமல், நமக்கு சம்பந்தமே இல்லாத பாகிஸ்தான் மீது இருக்க வேண்டுமென்பதே.  இப்படியான திசைதிருப்பப்பட்ட நமது கோபமே இன்றளவும் இந்தியாவின் எகாதிபத்தியத்திற்கு மறைமுக உதவியாய் இருந்துள்ளது. அதாவது நம் உரிமைகள் பறிபோவதற்கும், கேள்வி கேட்பாரற்று நம் மீனவ சகோதரர்கள் செத்து மடிவதற்கும், காஷ்மீரிகளும், கிழக்கிந்திய மக்களும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைக்-கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதற்கான காரணிகளில் ஒன்றாக நாமும் இருக்க காரணம் நம்மை கையாலாகாமல் செய்த நம் தேசப்பற்றுமே ஆகும்.

எதிர்கட்சிகளான, எலியும்-பூனையுமான பா.ஜ.கவும் காங்கிரசும் காஷ்மீர் பிரச்சினையில் ஒற்றுமையாக, பெரிய தேசியவாதிகளாக நடந்து கொள்வதன் நோக்கம் இதுதான். இந்துத்துவ நாடாக இந்தியாவை முழுமையாக ஆக்கத்துடிக்கும் காவிக்காரர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருக்கும் காஷ்மீரை விட்டுக்கொடுக்க மறுப்பது ஏன்? பொது வாக்கெடுப்பிற்கு சம்மதிக்காதது ஏன்? அனைவருக்குமே அரசியல் செய்ய காஷ்மீர் தேவை. காஷ்மீர் இல்லையெனில் பிற உள்நாட்டுப் பிரச்சினைகள் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாய் அமையும்.

பல ஆண்டுகாலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை இந்திய அரசு தன் சுயலாபத்திற்காகவும், பாகிஸ்தானை தன் எதிரியாயும் தன் குடிமக்களின் எதிரியாயும் உலகநாடுகளுக்கும், தன் சொந்த மக்களுக்கும் காண்பித்து வந்திருக்கிறதேயொழிய பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளையோ, மக்களை சுதந்திர குடிகளாய் குடியமர்த்துவதற்காக யோசித்ததாகவோ, தினம் தினம் செத்து மடியும் மக்களின் உரிமையை மீட்க முயற்சித்ததாகவோ தெரியவில்லை. இந்தியா என்ற சிறுபான்மை இந்தியர்களின் (தமிழர்கள், கிழக்கு இந்தியர்கள்) எதிரி, பாகிஸ்தான் என்ற இந்தியாவின் எதிரியால் மறைக்கபடுவதற்கு காஷ்மீர் பிரச்சினை இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவிற்கு துணை புரிந்து வந்துள்ளது. ஒன்றை கவனித்திருந்தோமானால் எந்தக்காலத்திலும் இந்தியாவின் அக்கறை காஷ்மீர் மண் மீதானதாக தான் இருந்து வந்துள்ளதேயொழிய,  காஷ்மீர் மண்ணின் மக்கள் மீதானதாக இருந்ததேயில்லை.

இந்திய அரசு தன் மக்களையும், அவர்கள் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்கும் ஒரு இணக்கமான நாடாக இருந்திருக்குமேயானால் காஷ்மீர் பெண்களும் குழந்தைகளும் இன்று தெருவுக்கு வந்து ராணுவ ஊர்திகள் மேல கல்லெறியும் நிலை வந்திருக்காது. இத்தனை ஆண்டுகளாக பொறுமையாய் இருந்த பூனைகள் காஷ்மீரில் புலிகளாக மாறியுள்ள செய்தி இந்திய அரசும் அதன் அடக்குமுறை ராணுவமும் அம்மக்களை எவ்வளவு சிதைத்துள்ளன என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் உள்ளது.

 ராமேசுவர மீனவர்கள் விஷயத்துக்கும் இதற்கும் ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது. உள்நாட்டு அமைச்சர் வெகு சாதாரணமாக "கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை அரசு காப்பாற்ற முடியாது" என சொல்லியிருக்கிறார். படிப்பறிவில்லாத மீனவர்கள் கடலில் எல்லையை கண்டுபிடித்து மீன்பிடிப்பதென்பது முடியவே முடியாத காரியம். மேலும் எல்லை தாண்டும் மீனவர்களை அண்டைநாட்டு கடற்படை சுட்டுக்கொல்லலாம் என்று எந்த சர்வதேச சட்டம் சொல்கிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் நமக்கு தோன்றுவதற்குள் காமன் வெல்த் விளையாட்டுக்கள் நம் கண்களை மீண்டும் கட்டிப்போட்டு திசை திருப்பி விட்டன. நம் சகதமிழன் அண்டை அரசால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தட்டிக்கேட்க்க முடியாத நாம் தேர்ந்தெடுத்த உள்துறை அமைச்சரை நாம் எதிரியாய் நினைத்து சுதாரிப்பதற்குள், காமன் வெல்த்தில் எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றது என நம்மை எண்ண வைக்கின்றன ஊடகங்கள்.

பொருளாதாரத்தில் மிக கீழ்நிலையில், குடிமக்களில் பாதிபேருக்கும் மேல் வறுமைகோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியாவில், இந்திய ரூபாய்க்கு முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக செய்தி வந்தவுடன் இனி உலகின் முன் நாம் தலை நிமிர்ந்து நடக்கலாம் என்ற மாயையை ஊடகங்கள் உட்புகுத்தியவுடன் அனைத்தையும் மறந்து, பெருமை பீற்றி, பிரச்சினைகளை மறந்துபோகிறோம்.

ஏன் இவ்வளவு சுலபமாக மறக்க முடிகிறது? ஏனென்றால் உங்களையும் என்னையும் இந்த பிரச்சினைகள் நேரடியாக பாதிக்கவில்லை. எவனோ மீனவன் எங்கோ சாகிறான். ஆனால் இப்பிரச்சினை நேரடியாக நம்மை பாதிக்கப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான முதற்புள்ளியை ஏற்கனவே இந்திய அரசு சிங்கள அரசுடன் சேர்ந்து 'விடுதலைப் புலிகள் அழிப்பு' என்ற பெயரில் போட்டு விட்டது.

இதுவரை போர் மேகங்களே இல்லாத, ராணுவத்தினை கண்ணாலும் கண்டிராத தென்னிந்திய மக்கள் கூடிய விரைவில் சிறீலங்காவில் முகாம்களையும் தடவாளங்கையும் அமைக்கும் சீனத்தின் வாயிலாக போர்மேகங்களைப் பார்க்கப் போகிறார்கள். இதைக் காரணம் வைத்து இந்திய அரசின் ராணுவம் காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அத்துமீறலையும், அடக்குமுறையையும் நம் மீதும் நிகழ்த்தும் பேரபாயம் இருக்கிறது.

இது சீன அரசு நம்மீது போர் தொடுப்பதின் விளைவுகளைவிட பயங்கரமானதாகவே இருக்கும். உரிமைகள் பறிக்கப்படும். உடைமைகள் இல்லாது போகும். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அதே நிலைமை தென்னிந்திய மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு, சிறிலங்க-சீன அரசுகள் வாயிலாக இந்திய அரசால் ஏற்படும் காலம் நாளை இல்லையெனினும், ஒருநாள் இருக்கப்போவதாகே இப்போதைய அரசியல் சூழ்நிலைகள் நமக்கு தெரிவிக்கின்றன.  

  இப்போது காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் தேசியவாதி உமர் அப்துல்லாவையே இந்தியாவை எதிர்த்துப் பேசும் அளவிற்கு தூண்டிவிட்டுள்ள நிலைமையில் இந்த விடுதலை வேட்கை அணையாமல் வைத்திருக்கும் பொறுப்பையும், வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பை அருந்ததி ராய் போன்றவர்கள் ஏற்றிருக்கிறார்கள். "தன் மக்களை சமூக விரோதிகளிடமும், பன்னாட்டு நிறுவன கொள்ளையர்களிடம் இருந்தும், கொலைகார்களிடம் இருந்தும் காக்க முடியாத கையாலாக ஒரு அரசு, நினைத்ததைப் பேசும் எழுத்தாளர்களையும், சமூகசேவகர்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்த நினைப்பதை எண்ணி அந்நாட்டின் மீது பரிதாபப்படுகிறேன்" எனக் கூறியுள்ள அருந்ததிராயின் தைரியத்தை வார்த்தைகளாலும் வாக்கியங்களாலும் பாராட்டினாலும் பத்தாது.

இனியும் தேசப்பற்று போர்வையில் வலம் வரும் ஏமாற்றுகாரர்களின், பேச்சைக் கேட்டு தேசப்பற்று மாயையில் மூழ்கி, பாகிஸ்தானைப் பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டோமேயானால் நாட்டுப்பற்று என்னும் மறதி மருந்து நம் மூளையையும், உணர்ச்சியையும், உணர்வுகளையும் செயலிழக்க செய்து அடிமைகளாய் வாழும் வாழ்க்கைக்கு நம்மை தள்ளுமேயன்றி, மனிதர்களாய் உரிமைகளுடன் உயிருடன் வாழ வழிவிடா! 

தேசப்பற்று என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாட்டின் சக குடிமக்கள் மீதானதாக இருக்கவேண்டுமேயொழிய, அந்நாட்டின் மண்ணின் மீதும், அரசின் மீதும் இருக்க கூடாது. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளின் ரத்தமும், அசாமிய ரத்தமும், ராமேஸ்வர மீனவனின் ரத்தமும் நம்மைச் சுற்றி ஓடும் இந்திய ஆறுகளிலும், கடல்களிலும் கலந்து இருப்பதை நாம் உணர்ந்தால் போதும் ஏகாதிபத்தியங்கள் முடங்கிக் கொண்டே இருக்கும். மனிதமும், மகிழ்ச்சியும் தானே நிகழும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...