Thursday, February 24, 2011

நாசமாய்ப் போற நாம்! (குட்டிக்கவிதை)


நான் என்ன செய்ய?

புரட்சி பேசினேன்
"புதியவன்" என்றார்கள்!
எதிர்ப்பவனை ஏசினேன்
மாவீரன் என்றார்கள்!

ஒருநாள் தெரியாமல்
காலில் மிதித்தேன்,
இடுப்பைக் காட்டினார்கள்;
வயிற்றில் மிதித்தேன்,
நெஞ்சைக் காட்டினார்கள்;
தலையில் மிதித்தேன்
தலைவா என்றார்கள்...!

பூக்களைத் தூவினார்கள்;
உயிரோடிருக்கும்போதே மாலையிட்டார்கள்...!
சிரித்ததைப் படம்பிடித்து
சிலை வைத்தார்கள்;
மன்னா என மண்டியிட்டார்கள்...!
மானங்கெட்டவர்கள்,
மலர்வளையத்தை மட்டும்தான்
விட்டுவைத்தார்கள்!

திரும்பிப்பார்த்தேன்..
என் சொத்து,
சோற்றுக்கு மிஞ்சியும்
தலைமுறைக்கு எஞ்சியும்
இருந்தது!
புரட்சியையும் காணோம்,
புதியவனையும் காணோம்!
சுற்றி புண்ணாக்காய்
நின்றிருந்தார்கள்!

இவர்கள் இப்படித்தான்;
புரட்சியாளனை மேடையில்
ஏற்றுவார்கள்!
அவன் தலையில் பீடையை
ஏற்றுவார்கள்!
பின் புரட்சியை பாடையில்
ஏற்றுவார்கள்!
நான் என்ன செய்ய?
இவர்கள் இப்படித்தான்!

Wednesday, February 23, 2011

கர்த்தாவே

ஜீவா என்னும் நான், உங்ககிட்ட என் கதைய சொல்ல நினைக்கிறது, யாரையும் புண்படுத்துறதுக்காகவோ, கிண்டல் பண்றதுக்காகவோ இல்ல! முழுக்க முழுக்க என் மனசில் இருக்குற பெரும் வேதனையை தீர்த்துக்கத்தான்! நாலு பேருட்ட புலம்புனா நல்லது நடக்காதுனு நல்லாவே தெரியும். ஆனா நாலு பேத்துட்ட பொலம்புனா கெட்டது மறந்துரும்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்.


ஒரு நாலு மாசமிருக்கும், அம்மா கூட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். மீனாட்சி அம்மனுக்கு வேற எந்த சாமிக்குமே இல்லாத ஒரு மகத்தான, அபாரமான சக்தி உண்டு. மத்த கோயில்ல எல்லாம் உள்ளூர் புள்ளைகளா திரியுங்க. ஆனா மீனாட்சியம்மன் கோவில்ல மட்டும் ஃபாரின் புள்ளைகளா நிறைஞ்சு இருக்கும். நான் கோயிலுக்கு போறது கூட மீனாட்சி அம்மனோட இந்த விஷேச சக்திக்காகத்தான். அப்படி அம்மா கூட ஒருநாள் போறப்பதான் அழகான அவளப் பாத்தேன்! பயங்கர அழகு! பார்த்துட்டே இருக்கப்ப, "அய்யய்ய, இது நமக்கு சரிப்படாது"னு நினைச்சுட்டே வேறபக்கம் திரும்புனப்பத் தான் இவளப் பாத்தேன்! சுமாரா இருந்தா. "மச்சி இவதான் என் ஆளு" அப்படினு பசங்ககிட்ட சொன்னா எவனும் சிரிக்கமாட்டாய்ங்க. அந்த அளவுக்கு ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்குறதா எனக்கு தோணுச்சு. டக்குனு மனசுக்குள்ள மூணு உறுதி எடுத்தேன். இனிமே வந்தா மீனாட்சி கோவிலுக்கு மட்டும்தான் வர்றதுன்னும், வர்றப்ப புள்ளைக எவளையும் பாக்குறதில்லேனும், அப்படியே பாத்தாலும் இவள மட்டும்தான் பாக்குறதுன்னு.


ஆனா என் மூணாவது லட்சியத்துக்கு மட்டும் ஒரு பிரச்சினை இருந்துச்சு. அது என்னன்னா, அதுக்கப்புறம் அவ மீனாட்சியம்மன் கோயில் பக்கம் வரவே இல்ல. ஆனா மனசுல மட்டும் வந்துட்டு வந்துட்டு போனா. இப்படியே என் வாழ்க்கை சோகமா போயிட்டிருந்தப்பதான் திடீர்னு நாங்க இருக்குற தெருவுல இருக்க பழனியப்பன் கடைல அவ பால்பாக்கட் வாங்கிட்டிருக்குறத ஒருநாள் பாத்தேன்.


விசாரிச்சு பாத்தப்பதான், நான் இருக்குற தெருல எதிர்த்த வரிசைலயே அவங்க குடும்பத்தோட குடிவந்திருக்க மேட்டர் தெரிஞ்சுச்சு. என் லவ் ஆரம்பிச்சது இப்படித்தான்! அவள் பெயர் சித்ரா. அப்பா பெயர் பாலுச்சாமி. அம்மா பெயர் என்னவோ வரும், அது தெரில. சமீபத்துல செத்துப் போயிட்டாங்களாம்! அண்ணன் பெயர் ரத்தினகோபால். அக்கா பெயர் ராஜலட்சுமி. அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா யாரும் கிடையாது. அந்த குடும்பத்துல கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போயிட்ட அவ அக்காவ கழிச்சா மிச்சம் மூணே பேருதான்!


நான் அவள அப்பப்ப பாப்பேன், பேசுவேன். அவளும் ஏதோ வேண்டா வெறுப்பா, கால்ல சாணி பட்ட மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டு "ஆமா", "இல்ல" "அதுக்கென்ன இப்ப?"னு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவா. ஆனா அந்த வார்த்தைல எல்லாம் ரெண்டு மூணு எழுத்துதான் இருந்துச்சுன்னாலும், நிறைய காதல் இருந்ததா எனக்குப் பட்டுச்சு. அவங்க அப்பாகிட்ட கூட பேச முயற்சி பண்ணுவேன். ஏன்னா, "புள்ளைய கரக்ட் பண்ணனும்னா, அப்பன் ரொம்ப முக்கியம்டா மாப்ள"னு பெருமாளு சொல்லிருந்தான். அதான் அவய்ங்க எப்பவுமே உம்முனு வச்சிருக்க மூஞ்சியப் பாத்து மானம் போனாலும் பரவால்ல, பதில் வரலேனாலும் பரவால்லனு பேசுவேன். ஆனா அவய்ங்க என்ன மதிக்கவே இல்ல! நம்ம நாலு வார்த்தை பேசுனா ஒரு வார்த்தைதான் பேசுவாய்ங்க.


பெருமாளுட்ட இதை சொல்லி நான் வருத்தப்பட்டப்ப அவன் சொன்னான், "விடு மாப்ள! நீ என்ன ரேடியோவா? யாரும் உங்கிட்ட பேசலேனாலும் நீ பாட்டுக்கு அவிய்ங்ககிட்ட பேசிக்கிறுக்கதுக்கு. நீ பேசாட்டு அந்த புள்ளைய கரக்ட் பண்ணு மாப்ள. அசால்ட்டா வந்து அவிய்ங்களே பேசுவாய்ங்க. மனசு வுட்றாத. நம்பிக்கதான் முக்கியம்"னு. பெருமாளை நான் கூடவே நண்பனா வச்சிருக்குறதுக்கு காரணம் இதான். உருப்படியா எதும் சொல்லமாட்டான். அல்லது அவன் சொல்ற ஐடியா எதும் உருப்படாது. ஆனா நம்ம கஷ்டத்துல இருக்கப்ப கரக்டா வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லுவான். மேல சொன்ன மாதிரி.


ஆனா சித்ரா குடும்பத்துல ஒருத்தர் மட்டும் என் மேல ரொம்ப பாசமா இருந்தாரு. அவரு பேரு ராமு. அவர் அவங்க வீட்டு நாய். ராமுவை கரக்ட் பண்றதுக்கு கூட நான் படாதபாடு பட்டேன். எப்போ எங்க வீட்ல கறி செஞ்சாலும், "பெருமாளுக்கு கறி ரொம்ப புடிக்கும். ஒரு டப்பால வச்சுக் கொடும்மா"னு அம்மாகிட்ட பொய் சொல்லி வாங்கிட்டுப் போயி அதை ராமுக்கு கொடுப்பேன். அது ஆசையா சாப்பிடும். அந்த அழகப் பாக்குறப்ப நானும் சித்ராவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ஓட்டல்ல பக்கத்துல பக்கத்துல உக்காந்து பிரியாணி சாப்பிடுற மாதிரி எனக்கொரு திருப்தி! அதுலயும் சிக்கன் லெக் பீசுனா ராமுக்கு உசுரு! நாள் ஆக ஆக ராமு நல்லா குண்டாயிருச்சு!


பெருமாள் ஒருநாள் திடீர்னு சொன்னான், "மாப்ள. இவய்ங்க குடும்பம் சரில்லடா. கோக்குமாக்க திர்றாய்ங்க. நிறைய கம்ப்ளைண்ட் வருது. நீ சூதானாமா இருடி!"னு. நான் சொன்னேன், "அப்படிலாம் சொல்லாதடா. பாக்கத்தான் வேலில வுட்ட ஓணான் மாதிரி எங்கயோ வெறிச்சு பார்த்துடே திரியிறாய்ங்க. ஆனா நிசத்துல ரொம்ப கெத்தானவய்ங்கடா. அவய்ங்க இந்துவா இருந்தாலும் பரவால்லனு, கிறிஸ்டியன் அனாதை இல்லத்துக்கெல்லாம் வாரி வாரி வழங்குறாய்ங்கடா மாப்ள. அவய்ங்க வளக்குற ராமுன்ற நாயி கூட தெரு நாயிங்களுக்கு சாப்பாட்ட பிரிச்சுக் கொடுக்காம சாப்புடாதுன்னா பாரேன்!"னு பெருமையா சொன்னேன்! இதைக் கேட்ட பெருமாளு என்ன ஒருமாதிரி பாத்தான். அந்தப் பார்வைல ஒரு 'கேவலம்' தெரிஞ்சுச்சு! ஆனா இதெல்லாம் பாத்தா லவ் பண்ண முடியுமா?


அப்புறமா ஒருநாளு சித்ரா வீட்டுக்காரங்க எங்க ஆளுகதான்னு அம்மா சொன்னாங்க! "எப்படிம்மா கண்டுபுடிச்ச?"னு கேட்டா, "அவங்க வீட்டுலயும் 'அவரு' படம் மாட்டியிருந்துச்சுடா"ன்னாங்க! ஆகா... ஜீவா பட்டயக் கிளப்பு, எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்டா, பொறுமையா லவ்வ சொல்லிக்கலாம்னு இருந்தேன். வழக்கம்போல அவிய்ங்க வீட்ட கவனிச்சுட்டே இருப்பேன். அடிக்கடி பழைய பஜாஜ் ஸ்கூட்டர்ல நகையே போடாம ஒரு அம்மா கைல புத்தகத்தோடவும், அதுகூட ஒரு ஆளும் வந்துட்டு வந்துட்டுப் போனாங்க! அப்பப்போ ரெண்டு மூணு நகை போடாத பொம்பளைகளும் வந்துட்டுப் போயிட்டு இருந்தாங்க!


இப்படி இருக்கப்பதான் ஒருநாள் ஒரு ரகசியத்தை கண்டுபுடிச்சு அதிர்ச்சியாயிட்டேன். செம கோபம் எனக்கு. பெருமாளுகிட்ட சொன்னேன், "ஆனாலும் என் மாமனாருக்கு ரொம்ப இரக்க மனசுடா. காசை நன்கொடையா அள்ளி அள்ளி விடுறாரு மச்சி! நான் அவருக்கு மாப்ள ஆனவுடன இப்படிலாம் இருக்க விட மாட்டேன்டா. யார் வீட்டுக் காச யாரு திங்கிறது!!?"னு. பெருமாளு என்ன ஏற இறங்க பாத்தான். அன்னைக்கு பாத்த அதே பார்வை. அப்புறம், "அதெல்லாம் சரி. உன் ஆளு கழுத்துல போட்டுருந்த செயின ரெண்டு மூணு நாளா காணோமே, அதையும் வித்தா நன்கொடை கொடுத்தாய்ங்க?"னு கேட்டுட்டு போயிட்டான். ஆமா, சித்ரா ஏன் செயினு போடலனு யோசிக்கிறதுலயே ஒரு வாரம் போயிருச்சு!


இப்படியே எத்தன நாளுதான் துப்பறிய வந்த உளவாளி மாதிரி வேடிக்கை பாக்குறது? நமக்கும் கல்யாணம் காட்சினு ஆகனுமா இல்லையானு மனசுக்குள்ள ஒரு கேள்வி! ஒரு வேட்கை! ஒரு வெறி! தைரியத்தை வரவழைச்சுட்டு ஒருநாளு சித்ரா தெருல நடந்துட்டு இருந்தப்ப, "சித்ரா வீட்டுக்கு போறீங்களா? என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க? எங்க வீட்டுல சொல்லி உங்கள பொண்ணு கேக்க சொல்லவா?"னு கேட்டுட்டேன். அட முழுசா கூட நான் சொல்லி முடிக்கல..  அதுக்குள்ள "இயேசப்பா!!!! இயேசப்பா"னு கத்திட்டே ஓடிருச்சு! என்னடா இது, சித்தப்பா, பெரியப்பானு கத்தாம, "இயேசப்பா"னு கத்துறாளேனு யோசிச்சுட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்! சரி தொலையிறா. இன்னொரு நாளு பார்த்துக்குவோம்னு விட்டுட்டேன்!


அடுத்தநாள் காலைல போஸ்ட்மேன் என்கிட்ட ஒரு அட்ரசை கேட்டான்.
"திரு.பால்சாமி(Paul Sami),
நம்பர் 14,"னு.


"நம்பர் 14ல பால் சாமினு யாரும் இல்லையே, பாலுச்சாமினு ஒருத்தருதான் இருக்காரு. எதாவது எழுத்துப்பிழையா இருக்கும். அங்கயே போயி கேளுங்க"னு சொல்லிட்டு போயிட்டேன்!


அன்னைக்கு ராமுக்கு வழக்கம்போல சிக்கன் எடுத்துட்டு போயி "ராமு, மாமாகிட்ட வாடா.."ன்னேன். ஓரப்பல்லு குரூரமா தெரியிற மாதிரி ராமு முறைச்சுச்சு. "லெக் பீசு இருக்கு ராமு, மாமாட்ட வா"னு கூப்டேன் பாருங்க, ஒரே தாவுல விரட்டிட்டு வந்து கைலிய கடிச்சு இழுத்துருச்சு! துண்டக்காணோம் துணியக் காணோம்னு வீட்டுக்கு ஓடி வந்தேன். சாயங்காலம் பெருமாளு வந்தான், "டேய் என் ஆளு சித்ரா வீட்டு நாய் ராமுக்கு வெறி புடிச்சிருக்கு போலடா. அவங்கள பார்த்தா சொல்லுனும்டா"ன்னேன்!! அவன் "என்னடா மாப்ள? சோகமா இருப்பனு பார்த்தா, நாயப் பத்தி பேசிக்கிருக்க? உனக்கு விசயமே தெரியாதா? சித்ரா வீட்டுல மதம் மாறிட்டாய்ங்களாம்டா. இன்னிக்குத்தான் எனக்குத் தெரியும். நான் உனக்குத் தெரியும்னுல்ல நினைச்சேன். அம்மா சொல்லலையா?"ன்னான்.


பயங்கர அதிர்ச்சி எனக்கு. சப்தநாடியும் அடங்கிப் போயி கேட்டேன், "என்னடா மாப்ள சொல்ற?"


"அட ஆமாடா. இனிமே உன் ஆளு வெறும் சித்ரா இல்லடீ. ஜோசப்பைன் சித்ரா. அவங்க அப்பா பேரு பால் சாமியாம், அண்ணன் பேரு ஆரோக்கிய ரத்தினமாம்! ஆனா சும்மா சொல்லக்கூடாதுடா மாப்ள.. உன் மாமனாரு விவரமானவன். பாலுச்சாமிங்கிற இந்துப் பேரை எவ்ளோ நைசா பால்சாமினு மாத்திருக்கான் பாரு!! சரி அதைவிடு. நீ வருத்தப்படாத மாப்ள. நமக்கு தெரிஞ்ச ஃபாதரு ஒருத்தரு இருக்காரு. அவருட்டச் சொல்லி உம்பேர 'ஜான் செல்லச்சாமி'னு மாத்திருவோம். டகால்னு வந்து பொண்ணு தந்துருவாய்ங்க."ன்னு பெரிய உலக சமாதானத்துக்கு ஐடியா தந்த மாதிரி பெருமையா சிரிச்சுட்டே சொன்னான் பெருமாளு.
அவ்ளோ சோகத்தையும் தாங்கிக்கிட்டு நான் பெருமாளை முறைச்சேன்.


சிரிப்ப நிப்பாட்டிட்டு பேச்சை மாத்துனான். "ஆமா நீ ஏன்டா அவிய்ங்க நாய்கிட்ட போன? அதை என்னத்த பண்ண?"


"ஒன்னும் பண்ணலடா. எப்பவும் போல "ராமு"னு தான்டா கூப்டேன் மாப்ள. உடனே விரட்டிட்டு கடிக்க வந்துருச்சுடா!!"


"என்ன மாப்ள.. சின்னப்புள்ளத்தனமா 'ராபர்ட் ராஜதுரை'னு பேரு மாத்துன நாய, நீயி சும்மா 'ராமு'னு கூப்டா உன்ன கடிக்க வராமா என்னடா செய்யும்!!"ன்னான்.


"கர்த்தாவே!!"

Monday, February 21, 2011

நடுநிசி கவுதம்மேனன்: குட்டி விமர்சனம்

நேரா பாயிண்டுக்கு வர்றேன். இது ஒரு கேவலமான படம்! குப்பை! சாக்கடை! இயக்கத்துல இருந்து, காமிரா, கதை, திரைக்கதை, நடிப்பு, நடிகர்கள்னு (சமீரா தவிர்த்து) எல்லாமே கேவலம். நடிப்பு செம மொக்கை. ஹீரோவின் வசன உச்சரிப்பு கேக்க கேக்க ஸ்டமக் அப்சட் ஆகி, தலை வலிச்சு வாந்தி வந்துச்சு. சைக்கோவில் ஆரம்பித்து, ஆளவந்தானில் நுழைந்து, சிவப்பு ரோஜாக்களைப் பிழிந்து, எல்லா இங்கிலீசு, தமிழ் படங்களையும் கலந்து கட்டி, சாக்கடைய ஊத்தி மிக்ஸ் பண்ணி எடுத்தது தான் நடுநிசிநாய்கள்.

ஒரு வன்புணர்வு காட்சி 15நிமிடம் டீடெய்லா காட்டுறாய்ங்க! இது என்ன exploit filmஆ? அதைப் பாக்குற அளவுக்கெல்லாம் நம்ம ஊர் மக்கள் மனநிலை முதிர்ச்சி அடையல! என்னதான் 'A'னு போட்டாலும் நம்ம ஊரு தியேட்டர்கார பசங்க குழந்தைங்க எல்லாத்தையும் உள்ள விட்டுறாங்க! ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நேத்தே எழுதலாம்னு ஆரம்பிச்சேன். கெட்ட வார்த்தையா வந்துச்சு!  நிப்பாட்டிட்டேன்! அப்புறம் வழக்கமா கெட்ட வார்த்தையா எழுதுற ஒரு பிரபல பதிவரோட blog எட்டிப் பாத்தா, அந்தாளு அந்தப் படத்தை புகழ்ந்து தள்ளிருக்காரு! இந்த மாதிரி வக்கிரமான, லாஜிக் இல்லாத, கேவலமா இயக்கப்பட்ட, மிகக் கேவலமா நடிக்கப்பட்ட படங்களை ரசிப்பவர்கள் மனநோயாளிகளாதான் இருக்க முடியும்.எல்லாருக்கும் கேவலமா தெரியிற ஒரு விஷயம் நமக்கு நல்லதா தெரிஞ்சதா சொன்னா நம்மளை எல்லாரும் பெரிய அறிவாளினு நினைச்சுக்குவாங்கனு இந்த அல்பங்களுக்கு ஒரு நப்பாசை.

பதிவர் உண்மைத்தமிழன் அருமையா விமர்சனம் எழுதிருந்தாரு. அதுனால இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கனும்னா அவரு blog போங்க. இந்த பதிவு என் புலம்பல் தான்! ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெளிவா தெரியுது, 'நடுநிசி நாய்கள்'ல ஒரு நாய் கவுதம், மத்ததெல்லாம் அதை நல்லாருக்குனு சொல்றவய்ங்க!! அப்புறம் ஒன் மோர் மேட்டர், இது சைக்கோ த்ரில்லர் இல்ல. சைக்கோ எடுத்த த்ரில்லர்!

Sunday, February 20, 2011

பயணம்- உலகின் முதல் ஆக்சன் படம்.


தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்கோ? இருந்துட்டுப் போகுது! எவன் எவனோ எது எதுக்கோ பில்டப் கொடுக்குறான். ஒரு நல்ல படத்துக்கு கொடுத்தா என்ன போகுது?

பயணம் படம் அறிவிச்சப்ப, மசாலானா என்னன்னே தெரியாத ராதாமோகனுக்கும், மசாலா தவிர வேற எதுவுமே தெரியாத நாகர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம்னு தோணுச்சு! இப்போ படம் பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரியுது, இது ராதாமோகன் படமும் இல்ல, கொஞ்சம் கூட நாகார்ஜூனா படமும் இல்லனு. ரெண்டு பேரும் பட்டயைக் கிளப்பி இருக்கும் அருமையான படம் இது. ஒரு உள்நாட்டு விமானத்தை வழக்கமா நம்ம விமானத்தையெல்லாம் கடத்துற காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திர்றாங்க. உள்ள நூறு பிரயாணிகள் இருக்காங்க. அப்புறம் என்ன ஆகுதுன்னுதான் கதை!

வழக்கமா காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்துனா நம்ம படங்கள்ல என்ன நடக்கும்? ஒரு தலைவன் இருப்பான். பெரும்பாலும் அவன் பேரு வாசிம்கான் தான். பழைய படங்கள்ல வர்ற சேட்டு மாதிரி "இன்னா செய்யிது? நம்மள்கிட்டே நிம்மல் கடன் வாங்குறான். ரொண்டு மாசமா வட்டி தர்லே. சேட் வீட்டை ஜப்தி பண்றான்" ரேஞ்சுல பேசி வில்லத்தனம் பண்ணுவான். காரணமே இல்லாம வர்றவன் போறவனையெல்லாம் கொல்லுவான். நம்ம கேப்டன் என்ன பண்ணுவாரு? ஒரு கும்பலை கூட்டிட்டு போவாரு. போற வழில பெட்டிக்கடைக்காரன்ல இருந்து பிரதமர் வரைக்கும் 'தமில்'ல பேசுவாரு. அப்புறம் பெரிய சண்டை நடக்கும், கடைசில வில்லன் சைடுலயும், கேப்10 சைடுலயும் எல்லாரும் செத்தவுடன வில்லனும் விஜயகாந்த்தும் ரொம்ப நேரம் பேசுவாங்க. பக்கத்து வீட்டுல பால்பாக்கட் காணமல் போனதுக்குக் கூட பாகிஸ்தான் தான் காரணம்னு நம்ம கேப்10 பேசப் பேச நமக்கு அப்படியே புல்லரிக்கும். அதுக்கப்புறம் வில்லன் ரெண்டு பேரும் பயங்கரமா மோதிக்குவாங்க, ஏன்னா கடைசில துப்பாக்கில குண்டு தீர்ந்துரும்ல. அப்புறம் கேப்10 ஜெயிப்பாரு! பயணம் படம் இந்த வழக்கமான கதையில் இருந்து இருபதாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கதை.

ஆக்சன்னா என்ன? நம்ம வாழ்க்கைல எல்லாத்துலயுமே ஆக்ஷன் இருக்கு. உதாரணமா ரோட்ல போறப்ப நம்ம தங்கச்சிய ஒரு பொறுக்கி கிண்டல் பண்ணிட்டா நம்ம என்ன செய்வோம்? அவனை திட்டிட்டு, தங்கச்சிய அரவணைச்சு கூட்டிட்டுப் போயிருவோம். சினிமா ஹீரோக்கள் என்ன செய்வாங்க? தங்கச்சியை ஓரமா உக்கர வச்சுட்டு கீலோமீட்டர் கணக்கா ஓடவிட்டு துரத்தி துரத்தி அடிப்பாங்க! பயணம் படம் இதில் முதல் ரகம். நிஜ வாழ்க்கையில் இருக்கும் அளவான, மனித சக்திக்கு உட்பட்ட ஆக்ஷனை காமிக்கிற படம். படத்தின் ஹீரோ நாகார்ஜூனா தன்னால் என்ன முடியுமோ அதைச் செய்கிறார். எந்த சர்க்கசும் செய்யாம நிஜ கமாண்டோ போல இருக்காரு. அவரு உயர் அதிகாரிகள் கிட்ட "ஆமா சார். கமாண்டோ ஆபரேஷன் நடத்துனா சில உயிர் போக வாய்ப்பு இருக்கு. ஆனா வேற வழி இல்ல" என சொல்லும் அளவுக்கு இயல்பான பாத்திரப்படைப்பு அது! இதுமாதிரிதான் படத்துல எல்லாமே!

எனக்குத் தெரிஞ்சு உலக அளவுல சக்கப்போடு போட்ட டை ஹார்டு(Die hard), ஏர் ஃபோர்ஸ் ஒன்(Airforce one), ஸ்பீட்(Speed) எல்லா படமுமே பயணம் படத்தின் கதைதான். ஆனால் அந்தப் படங்களுக்கும் பயணத்திற்கும் இருக்கும் வித்தியாசத்த நினைக்கிறப்ப ஆச்சரியமா இருக்கு! என்னனு சொல்றேன்! அதுனாலதான் 'உலகின் முதல் ஆக்ஷன் படம்'னு சொல்றேன்.

அந்தப் படங்களை எல்லாம் விறுவிறுப்பா வேகமா கொண்டு போக வைக்க Larger than life ஹீரோக்கள் இருந்தாங்க. பயங்கரமான சண்டைக்காட்சிகள் இருந்துச்சு! ஆனா பயணம் படத்துல இப்படி எதுவுமே இல்ல. ஆனா படம் விறுவிறுப்பா போகுது! இங்கதான் ராதாமோகன் படுபயங்கரமா ஜெயித்திருக்கிறார். மொழி, அபியும் நானும் எடுத்த ஆளுக்கு எப்படி இப்படி ஒரு ஐடியா வந்துச்சு? வந்தது மட்டுமில்லாம அதை நினைச்ச மாதிரி காட்டியும் இருக்குறதுதான் சூப்பர். 

எல்லாப் படத்துலயும் தீவிரவாதிய பேசவே விடமாட்டாய்ங்க. மீறிப்போனா "காஷ்மீர் காஷ்மீர்"னு கத்துவாய்ங்க. பயணம்ல ஒரு தீவிரவாதி சொல்றான், "ஆமாடா. இது புனிதப் போர் தான். அதான் மூணு நாள் எங்க கட்டுப்பாட்டுல இருந்தாலும் உங்க பொம்பளைங்க எல்லாம் பத்திரமா இருக்காங்க. உன் ராணுவத்துகிட்டயும், போலீசுகிட்டயும் மூணு நாள் ஒரு பொம்பளை பத்திரமா இருக்க முடியுமா?"னு! செருப்பால அடிக்கிற கேள்வி இது? இந்தக் கேள்வியைக் நம்மகிட்டயே கேட்டுப்பாருங்க? நம்மள்ள எத்தனை பேருக்கு நம்ம வீட்டுப் பொம்பளைங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியா அனுப்ப தைரியம் இருக்கு? இதுவரைக்கும் எங்கயாச்சும் தீவிரவாதி கற்பழிச்சான்னு செய்தி வந்திருக்கா? ராணுவத்தை நினைச்சுப் பாருங்க! நினைச்சாலே நாறுது! உலகில் எய்ட்ஸ் அதிகமா இருக்க ஒரு ராணுவம் இந்திய ராணுவம்!

படத்தை கண்டிப்பா பாருங்க. இந்தப் படத்தையெல்லாம் பாக்காம விட்டா நமக்கு சினிமாக்காரனை குறை சொல்ற தகுதியே கிடையாது! படத்தில் ஒரே ஒரு குறை தான். தீவிரவாதி ஒருத்தன் ஓவரா டென்ஷனா கத்துறான், வழக்கமான தீவிரவாதி மாதிரி. அவனை நம்ம ரகுவரன் ஸ்டைல்ல கூலா காமிச்சிருந்தா இது 100க்கு 110 மார்க் வாங்குற படம். இப்போ 100க்கு 109 மார்க் வாங்கிருக்கு!


Saturday, February 19, 2011

யுத்தம் செய்- மூணு வரி விமர்சனம்Hostel, SAWனு பல படங்களை காப்பி அடிச்சு 'யுத்தம் செய்' எடுத்திருக்கும் மிஷ்கினுக்கு தமிழ் திரையுலகத்தையே வேற திசை நோக்கி கூட்டிப்போறேன்னு சொல்ற தைரியம் எப்படி வருது? படத்தின் ரெண்டே பலம் சேரன் மற்றும் ஜெயபிரகாஷ். ரெண்டு பேரும் பின்னிருக்காங்க! படம் cliche! செம cliche!   

பின்குறிப்பு: Cliche என்றால் "அரைச்ச மாவை அரைப்போமா.. துவைச்ச துணிய துவைப்போமா"னு அர்த்தம்!

மொக்கைக்கு உதாரணம்: ஒரு வெட்டப்பட்ட கையை படம் பிடிக்க "ஹேய்ய்ய்ய்ய்ய்ய்"னு ஸ்கூல் லீவு விட்ட குழந்தைங்க மாதிரி நிருபர்கள் கும்பலா ஓடி வர்ற காட்சி! கண்றாவி!

நண்பன் சிவாவின் விரிவான விமர்சனத்தைப் படிக்க இங்க க்ளிக்குங்க யுத்தம் செய்- புதிய யுத்தமல்ல


Friday, February 18, 2011

'ரகடா'(தெலுங்கு) கதையும், நாகர்ஜுனா ரசிகன் ஆன கதையும்!


அதெப்படி தெலுங்குல மட்டும் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே கதையை, ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே திரைக்கதைய வச்சே இத்தன படத்தை ஓட்டுறாய்ங்கனு தெரில! ரவிதேஜா, நாகார்ஜூனா, ஜூனியர் NTR மாதிரி ஆட்கள், வேற கதைக்கு போகவே மாட்றாங்க!
(நாகர்ஜுனாவின் 'ககனம் (பயணம்)' படத்துக்கு முந்தைய நிலவரம் இது!)

ரெண்டு குரூப் வில்லன் இருப்பாங்க. நம்ம ஹீரோ ரெண்டு பேருக்கும் லைன் அடிச்சு வுட்டு, அதாவது சண்டை மூட்டி விட்டு அவரு ஜெயிப்பாரு! காரணம் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும்! அப்புறம் கண்டிப்பா ரெண்டு ஹீரோயின் இருந்தே ஆகனும். அதே மாதிரி ரெண்டு ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஆடுற டூயட் இருந்தே ஆகனும்! நம்ம அர்ஜூன் படம் மாதிரி!

'ரகடா'னா சண்டைனு அர்த்தம். கரக்டா சொல்லனும்னா 'ரகளை'! இந்தப் படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு. ஏன்னா கடைசியா நாகர்ஜூனா நடிச்ச 'கேடி' படம் பயங்கர ஃப்ளாப்! இன்னொரு மேட்டர்! நானும் என் தம்பியும் சின்ன வயசுல இருந்தே செம நாகார்ஜூனா ரசிகர்கள். அதுக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு! சின்ன வயசுல ஒரு டப்பிங் படம் பார்த்தோம். அதுல நாகார்ஜூனாவை ஒரு பத்து பேரு அடிச்சுருவாங்க. வீட்டுக்கு வந்து ஒரு சாக்ஸ் (Socks) எடுப்பாரு. கை நிறைய கோலிகுண்டு அள்ளி, அந்த சாக்ஸ்ல அதையெல்லாம் போட்டுட்டு அந்த பத்து பேரையும் பிச்சு எடுப்பாரு பாருங்க!! செம ஆக்ஷன்!! அப்போ நான் நாலாவது, என் தம்பி ஒண்ணாவது! அதைப் பார்த்ததுல இருந்து நாகார்ஜூனாவின் அதிதீவிர ரசிகர்கள் ஆயிட்டோம்! ரட்சகன் படத்தை தமிழ்நாட்டுல எனக்குத் தெரிஞ்சு பத்து தடவைக்கு மேல ரசிச்சு ரசிச்சு பார்த்த ரெண்டே பேரு நானும் என் தம்பியும் தான்! அதுனால நான் மட்டமான ப்ரிண்டா இருந்தாலும் பரவால்லனு 'ரகடா' டவுண்லோட் பண்ணி பார்த்ததுல ஆச்சரியம் இல்ல.

'ரகடா' கதை, மேல நான் சொன்ன வழக்கமான தெலுங்கு கதைதான்! அதை விடுங்க! படத்துல நம்ம தெலுங்கு தலைவர் 'பிரம்மானந்தம்' இருக்காரு! அவரும் நாகார்ஜூனாவும் வர்ற இடத்துல எல்லாம் செம காமடி!


ஒரு உதாரணம்:
பிரம்மானந்தம்: என்னையும் சிரிஷா (அனுஷ்கா) டார்லிங்கையும் பார்த்தா அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யாராய் மாதிரி இருக்கும்.
நாகார்ஜுனா: அது சரி! இதுல யாரு ஐஸ்வர்யா ராய், யாரு அபிஷேக் பச்சன்?

படம் ஃபுல்லா இது மாதிரி தான்! அதுக்காக மட்டுமாவது படம் பாக்கலாம்! அடுத்து ராதாமோகன் இயக்கத்துல 'ககனம்', தமிழ்ல 'பயணம்' நடிச்சுருக்காரு! அதுக்கு ஒரு விமர்சனம் எழுதவேண்டியது நம்ம கடமை! ஏன்னா தமிழ்ல எனக்கு மிகவும் புடிச்ச டைரக்டரும், அகில உலகத்துல எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் சேர்ந்திருக்கும் படம்! நாகார்ஜூனா ஃபேன்ஸ் இங்க கமண்ட்ல 'உள்ளேன் ஐயா' சொல்லிட்டுப் போங்க!

Tuesday, February 8, 2011

இணையத்துல எழுதுறவன்லாம் என்ன மயிரா?அதான் தலைப்புலயே 'மயிரு'னு சொல்லியாச்சு! அப்புறம் என்ன எழுத்துத் தமிழ்ல அழகுபடுத்துதல் வேண்டியதிருக்கு? அதான் பேச்சுத் தமிழ். சரி விஷயத்துக்கு வர்றேன்.

முன்னாடிலாம் ஒரு கட்டுரையோ, கவிதையோ, கதையோ, விமர்சனமோ.. அவ்வளவு ஏன் ஒரு வாசகர் கடிதம் எழுதனும்னா கூட, எந்தப் பத்திரிக்கைக்கு அனுப்புறமோ அந்தப் பத்திரிக்கையின் அரசியலை எல்லாம் மீறி அது வெளியிடப்பட்டால் தான் உண்டு! ("நீ எழுதிருக்குறது நல்லாருந்தாதான போடுவான்?"னு கேக்குறீங்க! அது வேற டிப்பார்ட்மென்ட்!) அப்படி கஷ்டப்பட்டு எழுதி அதை நாலு பேரை படிக்க வைக்கனும்னா என்ன பாடு படனும்??? ஆனா இப்ப நம்ம என்ன கருமத்த எழுதுனாலும் அதை என்னனு பாக்கவாவது நாலு பேரு இருக்காங்கன்ற நிலைமைய கொடுத்திருக்கிறது இணையம் தான். 

எதுக்கு இதை ஆரம்பிச்சேன்னா... நான் அரசியல் கட்டுரை எழுதுறப்பலாம் சில பேரு கிளம்புறாங்க.. "உக்காந்து என்ன வேணாலும் எழுதலாம். களத்துல வந்து பாரு.. களத்துல வந்து பாரு"னு! நீங்க களத்துல கிழிக்கிற லட்சணத்தைத்தான நாங்க எழுதுறோம். அப்புறம் "களத்துக்கு வா. களத்துக்கு வா"ன்னா என்ன அர்த்தம். நாங்க எழுதுறதெல்லாம் என்ன குப்பைலயா போகுது? ஒவ்வொரு மனதின் மாற்றமும் அவன் கேட்கும் பேச்சிலோ, படிக்கும் எழுத்திலோ தான் ஆரம்பிக்கும். நான் எழுதுறேன். படிக்கிறவன் படிக்கட்டும். புடிக்கலேனா என்கிட்ட கருத்தியல் ரீதியா மோதட்டும். அதைவிட்டுட்டு இப்படினா அப்படிங்குறது.. அபப்டின்னா இப்படிங்குறது!

அப்படியே எழுதுறதை விட்டுட்டு இவங்க பின்னாடி வந்துட்டா மட்டும் ஒழுங்கா போராடி கிழிச்சுருவாங்களா? இதுவரைக்கும் தமிழ்நாட்டுல விமர்சனம் பண்ண இடம் வைக்காத, அல்லது குறைந்தபட்ச விமர்சனத்துக்கு உட்பட்ட அரசியல்வாதி அல்லது 'போராளி' எவனையாச்சும் காமிங்க பாப்போம். இந்த மாதிரி நம்மளை களத்துக்கு கூப்பிடுறவங்களாம் எங்க இருக்காங்கனு பார்த்தா அதுல முக்காவாசிப் பேரு, அமெரிக்கா, லண்டன், பெங்களூர் மாதிரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள்ல உக்க்காந்துகிட்டு நம்ம தமிழ்நாட்டு ஊராட்சி, பஞ்சாயத்து அரசியல் வரைக்கும் இணையத்துல பேசுறாங்க! "ஏன்பா.. என்னைக்காச்சும் ஓட்டுப் போட ஊருக்கு வந்திருக்கியாப்பா?"னு கேளுங்க.. "இன் 1947 இந்தியால...."அப்படினு ஆரம்பிச்சு எதாச்சும் ஒளறுவாங்க! (நிறைய விதிவிலக்குகள் உண்டு. ஆனா அவங்கள்லாம் உண்மையான அரசியல் அக்கறையோட சரியான கருத்தியலோட அரசியல் விவாதங்களை ஏற்கும் மனநிலை படைத்தவர்களாகத்தான் இருக்காங்க. நான் சொல்றது மிதமிஞ்சி வெளியில் தெரியும் அரைகுறைகளை)
நம்ம என்னைக்காச்சும் இவங்ககிட்ட இப்படிக் கேட்ருக்கோமா? ஆனா நம்ம எழுதுனோம்னா படிச்சுப் பார்ப்பாங்க. அவங்க சார்ந்து இருக்குற இயக்கத்தையோ கட்சியையோ நம்ம ஒன்னும் எழுதிறக் கூடாது. அதை 'touch' பண்ணிட்டா , அவங்க விஷயத்த விமர்சனம் பண்ணிட்டோம்னா பொத்துட்டு வரும் பாருங்க கோவமும் ஆத்திரமும்! அப்பதான் மொத்தமா "இணையத்துல எழுதுறவன்லாம் மயிரு"ன்ற ரேஞ்சுல கத்துவாங்க!
சமீபத்துல 'நாம் தமிழர்' பத்தி விமர்சனம் பண்ணப்பதான் இதோட உச்சகட்ட கொடுமை நடந்துச்சு! "இணையத்துல உக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துக்கு வா"னு ஒரு ஆளு அமெரிக்கால உக்காந்துட்டு கூப்பிடுறாரு முகநூல்ல! இந்தாளோட களத்துக்கு விசா, டிக்கெட் எல்லாம் எடுத்து நான் போகவாம்!!! அன்னைக்கு காலைலயே சீமான் ஒரு அறிக்கை கொடுக்குறாரு "தமிழ்நாடு மீனவர்களுக்காக இணையத்தில் குரல் கொடுங்க"னு! சீமான் என்ன முட்டாளா? இணையத்துல குரல் கொடுத்தா கேக்குதுனு தெரிஞ்சுதான அவரு அறிக்கை கொடுக்குறாரு இப்படி! என்கிட்ட சொன்னதை அவருகிட்டயும் சொல்ல வேண்டியதானே! "அண்ணே அண்ணே இணையம் எல்லாம் வேஸ்ட்டுண்ணே. நம்ம டைரக்ட்டா களத்துக்கு போவோம்"னு!  

இன்னொருத்தரு பெங்களூருல இருந்துகிட்டு "சீமானை விமர்சிப்பவர்கள் களத்துக்கு வாங்க"னு அவரு வலைல பதிவு போடுறாரு! செம காமடி! ஏன் எங்களை எதிர்த்து களத்துல போராட வேண்டியதானே? எதுக்கு பதிவு போடனும்?

இணையத்துல அரசியல் எழுதுறது சாதாரண விஷயம் இல்லை! சமீபகாலமா உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருப்பது இணையம். அமெரிக்கா, பெங்களூருனு வசதியா உக்காந்துகிட்டு என்ன வேணா, எவனை வேணா பேசலாம். "களம் களம்"ன்றாங்களே, இதுவரைக்கும் என்ன கிழிச்சாங்க? முத்துக்குமாரை அரசியல் ஆக்குனாங்க. ஓட்டுக் கட்சிகளுக்கு காவடி தூக்குறாங்க? இதுவரைக்கும் சரியான அரசியல் மாற்று மக்களுக்கு கொடுக்க முடில. களத்துல என்ன பண்ணி கிழிச்சாங்க இவங்க? நீங்க முதல்ல உள்ளூருக்கு வாங்க! அப்புறம் இணையத்துல எழுதுறவனை களத்துக்கு கூப்பிடலாம்! எழுத்தால் ஏற்படாத அரசியல் மாற்றம் போர்களால் கூட ஏற்படாது! நன்றி!
Monday, February 7, 2011

இதர பிணங்கள்

நான் அழுகவில்லை. பின் எப்படி அவ்வளவு கண்ணீர்? கண்களில் தூசி விழுந்ததைப் போல் இல்லை. அந்த உணர்வும், எரிச்சலும் கண்ணின் கருவிழியில் யாரோ மண்ணைத் தேய்த்துவிட்டுப் போனதைப் போல இருந்தது எனக்கு. கண் இருக்கும் கண்கூட்டுக்குள் ஏதோ  எரிந்து கொண்டிருக்கிறது. அல்லது என் கன்னங்களில் இவ்வளவு நீர் வழிந்தோட வாய்ப்பில்லை.

என் அருகில் கிடக்கும் தட்டில் இருக்கும் இட்லியைப் பார்த்தால், நான் இங்கு அமர்ந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கலாம். இல்லை அதற்கு மேலும் இருக்கலாம். கடைசியாய் ஒரு குழந்தை இந்தத் தட்டையும், அதன்மேல் இட்லியையும் எனக்காக என் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனது மட்டுமே நினைவில் இருக்கிறது. அந்த தட்டின் மீதிருந்த காய்ந்த இட்லியையும், மிகவும் காய்ந்திருந்த சில்லறைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கைகளை உள்ளே விட்டு, என் கோட்டுக்குள்ளிருந்த பணப்பையை தடவிப்பார்த்தேன். உள்ளேயிருந்த பெரிய ரூபாய் நோட்டுக்களும், கடன் அட்டைகளும் அப்படியே இருந்தன. இந்தப் பக்கப் பையில் மெல்லிய புத்தகம்போல் ஒன்று இருந்தது. அநேகமாய் அது விமானச் சீட்டாய் தான் இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கோ லண்டனுக்கோ எடுத்தது என நினைக்கிறேன். பயணம் என்றைக்கு என நினைவில்லை. ஆனால் அந்த இரண்டு ஊர்களில் ஏதோ ஒன்றுக்கு போக எத்தனித்து சீட்டு எடுத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. எழுந்து போய் எதையாவது வாயில் போட வேண்டுமென தோன்றினாலும், ஏதோ பெரிய சோகமும், சோம்பலும், விரக்தியும் தடுத்தன. ஆனால் என்னவெனத் தெரியவில்லை. பல நாட்களாய் திறக்காத இரும்புக்கதவு துருப்பிடித்து இறுகிவதைப் போல இறுகியிருந்தன என் உதடுகள்.

உடலின் ஒவ்வொரு முனையிலும் பல கிலோ பாரத்தை உணர்ந்தேன். நகரவில்லை நான். நகரமுடியவில்லை. வாயைக் கஷ்டப்பட்டுத் திறந்து அந்த இட்லியை பிய்த்து உள்ளே போட்டேன். காய்ந்த சருகைப் போல் இருந்தது அது. வாயில் இருந்த பல நாள் எச்சில், சாக்கடையைப் போல அந்த இட்லியுடன் குழைந்து தொண்டையில் இறங்கியது. கருவேலமர சருகுகளை வைத்து உட்தொண்டையில் சிறுவர்கள் விளையாடுவது போல நரகவேதனையத் தந்தது அந்த ஒருவாய் இட்லி.

அடுத்த வாய் சாப்பிட தெம்பும் இல்லை, தைரியமும் இல்லை. என்னைச் சுற்றி எல்லாமே நகர்ந்துகொண்டிருந்தன. சில பொருட்கள் சுழன்று கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த ஓரடி நிலத்தைத் தவிர்த்து மீதி நிலம் என்னைச் சுற்றி சீரான வேகத்துடன் சுழன்றுகொண்டே இருந்தது. நான் நகரவில்லை. சுழல்பவைகளையும், நகருபவைகளையும் பார்க்கத் தொடங்கினேன். குடும்பங்கள் என்னைச் சுற்றி அவசரத்துடன் கூடிய குதூகலத்துடன் திரிந்தார்கள். கையில் இறுக்கமாய் பையைப் பிடித்தபடியும், மிகவும் இறுக்கமாய் அழகிய குழந்தைகளைப் பிடித்தபடியும் வேகமாய் ரயில்களைப் பிடிக்க நடந்துகொண்டிருந்தார்கள். நான் நகரவே இல்லை. நகருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

   திடீரென பயங்கர சத்தம். படு வேகமாய் ஒரு சில்லறை என்னருகில் இருந்த தட்டில் மேலிருந்து மோதியது. நிமிர்ந்து பார்த்தேன். என்னைப் போல் எவனோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். கோட் அணிந்திருந்தான். அங்கிருந்த மக்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமிரான பார்வையை கொண்டிருந்தான், அதனினும் மேலாக அலட்சியம் அவன் பார்வையிலும், உதட்டோரத்திலும் அநாயாசமாய் நடனமாடிக் கொண்டிருந்தது.

"ஏய். எழுந்திரு. விமானத்திற்கு ஒரு மணி நேரம் தான் உள்ளது. பிச்சையெடுத்தது போதும். எழுந்து வா."

"பிச்சையா?" எனச் சொல்லிவிட்டு கோட்டினுள் கைவிட்டு சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து வெளியே போட்டேன். பின், "நான் பிச்சையெடுக்கவில்லை. ஓய்வெடுத்தபடியே கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் என் குழந்தையும் வரப் போகிறார்கள். அதோ அங்கே பறந்தோடி வாழும் மனிதர்களைப் போல ஆனந்தமான ரயில் பயணம் எங்களுக்குக் காத்திருக்கிறது. நீ போ. சில்லறையை எடுத்துப் போ. எனக்கு சில்லறை வேண்டாம்."
எனத் திக்கித் திணறிச் சொன்னேன்

இமைக்காமல் என்னைப் பார்த்தான். பின், "இல்லை இல்லை. உனக்குத் தேவைப்படும். எடுத்துக் கொள். மனைவியால் நிராகரிக்கப்பட்ட நீ, பிச்சைக்காரனினும் கேவலமானவன்." எனக்கூறி பலமாக சிரித்தான். அந்தச் சத்தம் என் குடலைப் புரட்டியது.
இரயில் சத்தம் எல்லாம் காணாமல் போனது. அவன் சத்தம் இடி போல் மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது. என் மூளை வேர்விட்டிருக்கும் எனது மண்டை ஓட்டின் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்த சத்தம் நீண்டு ஒலித்தது.

"உனக்கென்ன தெரியும்? அவள் என்னை நிராகரிக்கவில்லை. வெறும் மனக்கசப்புதான். எல்லாம் சிலமணி நேரத்தில் சரியாகிவிடும். அவர்கள் வரப் போகிறார்கள். நீ போ. எனக்குத் தோன்றினால் நாங்கள் விமான நிலையம் செல்கிறோம். நீ போ"

"விவாகரத்திற்கும், மனக்கசப்புக்கும் அகராதி தெரியாதா உனக்கு? நினைவில்லையா? அல்லது இல்லாதது போல் நடிக்கிறாயா?"

"விவாகரத்தா?...... இருக்கிறது. அதனால் என்ன? எப்படியும் அவள் என்னிடம் வந்துவிடுவாள். என் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு என் நியாபகம் வரும். கண்டிப்பாய் வந்துவிடுவாள். நான் இல்லாமல் அவள் இருக்க மாட்டாள்." சொல்லிவிட்டு குனிந்து கொண்டேன்.

சில நொடிகள் சென்று நிமிர்ந்து பார்த்தேன். அவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். கண் எட்டும் தொலைவில் அவன் இல்லை. திடீரென அவளைப் பார்க்கத் தோன்றியது எனக்கு. உடலின் மூலைகளில் அங்கிங்கே ஒட்டிக் கொண்டிருந்த அனைத்து சக்தியையும் திரட்டி எழுந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வேகமாய் நடக்கத் தொடங்கினேன்.

பல நாட்கள் கண் மூடிக் கிடந்ததால் வீதியின் விளக்கு வெளிச்சம் என் விழிகளைக் கொத்தித் தின்றன. என் மனமெங்கும் ஒரே எண்ணம் தான். அவளையும் என் குழந்தையையும் பார்க்க வேண்டும். இமைகளை பாதி மூடியபடியே நடந்தேன். எங்கள் வீடு இருக்கும் வீதி வந்துவிட்டது.  

பகலில் கூட மர நிழல் நிறைந்திருக்கும், எப்போதும் இருள் நிறைந்த வீதி அது. எத்தனையோ முறை இந்த வீதியில் வசிக்க பயமாய் இருப்பதாகவும், வீட்டை மாற்றுமாறும் என்னிடம் கூறியிருக்கிறாள்.  இந்த வீதியில் இருக்கும் தனிமை எனக்குப் பிடித்தமாய் இருந்தது. எங்கள் காதலை அது முழுமையாய் ஆதரிப்பதைப் போல் தோன்றியது. வெளியுலகின் அசுத்தங்களில் இருந்து எங்கள் காதலை அம்மரங்கள் சுத்திகரிப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தேன் நான். அதனால் வீட்டை மாற்றும் முடிவை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். எனைப் பிரிந்த இந்த ஒரு மாதமாக அவள் மட்டும் எப்படி தனியே இருக்கிறாள் எனத் தெரியவில்லை.

இதோ.. எங்கள் வீடு வந்துவிட்டது. முன்வாசல் வழியே செல்ல பயமாய் இருந்தது. பயம் எனச் சொல்வது எனக்கு இப்போது வெட்கத்தைத் தந்தாலும் வேறெந்த உணர்வின் பெயரையும் எனைத் தடுக்கும் அந்த உணர்வுக்குச் சூட்ட முடியவில்லை.  வீட்டின் பக்கவாட்டில் நின்றபடி வரவேற்பறையின் சன்னலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கண்ணாடி சன்னல் மூடியபடி இருந்தது. உள்ளே மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அவள் உருவம் நகருவது நிழலாடியது. நிழலாய் தெரிந்தாள் அவள்.

அநேகமாய் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாள் என நினைக்கிறேன்.  கைப்பையை கழட்டி மேஜையில் வைத்தாள். அவள் அசைவுகள் வெறும் நிழலாய்த் தெரிந்தாலும் அதை என்னை முற்றிலும் மறந்து முழுதாய் ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது. அவன் மீண்டும் வந்துவிட்டான்.

"இங்கே வருவாயென தெரியும். என்ன செய்கிறாள் உன் முன்னாள் மனைவி?"

"அலுவலகத்தில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறாள். தூங்கப்போவாள். வேறென்ன செய்வாள்? களைப்பாய் இருக்கிறாள்"

ஒருநொடி அமைதியாய் என்னைப் பார்த்தான். பின்,
"தூங்கத்தான் போகிறாள் என உறுதியாய்த் தெரியுமா?" என மிகவும் மெலிதான குரலில் சலனமேயில்லாமல் கேட்டான் அவன்.

நிமிர்ந்து சன்னலைப் பார்த்தேன். என் மனைவி நகர்ந்து கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடையில் தடித்த இரு கைகள் இறுகிப் பற்றியபடி இருந்தன. அவள் இடையை முழுதாய் அணைத்தபடி, அவளின் கழுத்தை ஒட்டி முகம் புதைத்து, ஒரு பெரிய நிழல் அவளை மேஜையில் சாய்த்தது. அந்நிழல் செய்வதற்கெல்லாம், இவள் ஒரு காமத்தில் நெளியும் பாம்பு போல இசைந்து கொண்டிருந்தாள். இருவரும் மிக மெதுவாய் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்நிழல் அவள் மீது முழுதாய்ப் பரவி இருட்டைப் பரப்பிக் கொண்டிருந்தது. எனக்கு மூச்சு நொடிக்கு இருநூறு முறை வெளியேறியது.

என் அருகில் இருப்பவனைப் பார்க்கத் திராணியற்று இருந்தேன். அவனோ சலனமே இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். என் கைகள் நடுங்கத் தொடங்கின. வீட்டின் முன்வாசலுக்குச் சென்றேன். படியேறினென். கதவும் அவர்களின் உடைகளும் திறதிருந்தபடியே என்னை வரவேற்றன.

அவர்கள் என்னைப் பார்த்தார்கள். மங்களான வெளிச்சத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்த உறுப்புக்களை மறைக்க அவசரமாய் எத்தனித்தார்கள். பாவமாய் இருந்தது. அவன் மறைத்தான் சரி. இவள் ஏன் எனைக் கண்டதும் மறைக்கிறாள்? அவன் பார்க்கும் போதுதானே மறைத்திருக்க வேண்டும்? யோசிக்க நேரமில்லை. அந்த நேரத்தில் அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. அவனுக்கு முழுதாய் கட்டுப்பட்டிருந்த என் மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. என் கோபம் முற்றிலும் நீங்கியிருந்தது. அவள், அவனுக்கு அடிமைப்பட்டிருந்த அவளது உடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு விடுதலை கொடுப்பது என் கடமையென உணர்ந்தேன்.

வீட்டின் உட்புகுந்த சில நொடிகளில், மேஜையில் இருந்த ஒரு பெரிய கத்தியை, கனிந்த பழத்துக்குள் இறக்குவதைப் போல மிருதுவாக அவன் உடலில் மூன்று முறை இறக்கினேன். சிறிய சத்தத்துடன் இறந்தே கிழே விழுந்தான். கத்தி அவனுள் சொருகி இறுகியிருந்தது. சில நிமிடங்களுக்கு முன் என் மனைவியின் உடலில் பரவியிருந்தவன், ஊற்றிய திரவம் போல தரையில் பரவியிருந்தான். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள், கத்திக் கொண்டிருந்தாள். உயிர் போவதைப் பார்த்தால் யார்தான் கத்த மாட்டார்கள்? அவள் கத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருப்பினும் அவளைக் கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்தி அவள் பயத்தைப் போக்க முயற்சித்தேன். அவள் மூச்சுக்காற்று சில நொடிகளில் ஓரளவிற்கு சீரானது.

பின் கடமையை உணர்ந்தவனாய், மெதுவாக அவளது கழுத்தைச் சுற்றி பற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த ரத்தம் நிரம்பிய நரம்புகளை கைகளால் அழுத்தமாகப் பிடுங்கி வெளியே இழுத்தேன். அவள் உடலின் மொத்த ரத்தமும் சில நொடிகளில் வெளியேறின. தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூனை மேலிருந்து கீழே போட்டதைப் போல கீழே விழுந்து காலியாக உடைந்தாள்.  

சில நொடிகள் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்தேன். உள்ளே சென்ற போது இருந்த வெட்கமும், அவமானமும் மறைந்திருந்தது. அவனைப் பார்ப்பதற்காக சுற்றும் முற்றும் தேடினேன். அவனிடம் என் மனைவி விடுதலையான கதையைச் சொல்ல வேண்டுமென துடித்தேன். ஆனால் அவன் எனக்காக காத்திருக்கவில்லை. சற்று தொலைவில் என் குழந்தையை மார்போடு அணைத்து சுமந்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அநேகமாய் அவன் ரயில் நிலையமோ, விமானநிலையமோ சென்றுகொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். அவனை அழைக்கத் தோன்றவில்லை. அவன் நடந்துகொண்டே இருந்தான். அவன் தொலைவில் மறைய மறைய, நான் காணாமல் போய்க் கொண்டிருந்தேன்......Thursday, February 3, 2011

ராகுல் 'பாய்'யும் இரண்டு 'நாய்'யும்!

ராகுல் காந்திக்கு பதிலா ராகுல் டிராவிட்டை காங்கிரசு தலைவர் ஆக்குனா கூட அந்தக் கட்சி கொஞ்சமாச்சும் உருப்படும்! இந்த 41 வயது சின்னப் பையன் அந்தக் கட்சியை முன்னேறவே விட மாட்டான் போல!

எங்கயாச்சும் தேர்தல் வந்துட்டாப் போதும் உடனே அங்க போயி காங்கிரசு தானா ஜெயிக்கிற நாலு தொகுதியையும், 'தேர்தல் வியூகம் போடுறேன் பேர்வழினு 'டக் அவுட்' ஆக்காம வுட்றதில்லனு கங்கனம் கட்டி வேலை பாக்குறான்யா இந்தாளு! பீகார்ல காங்கிரஸ் தலைவர்களை தேர்தலுக்கு அப்புறம் டிவில பாக்குறப்ப ரொம்ப பாவமா இருந்துச்சு. அப்படித் தேம்பித் தேம்பி அழுதாய்ங்க. "ஏன்டா உன்ன நாங்க கூப்டோமாடா? நீயா வான்டட்டா வேன்ல வந்து எங்க மூஞ்சில பூரான் வுட்டுட்டுப் போயிட்டியேடா"னு புலம்பிருக்காங்க. அப்புறம் 'Z' பாதுகாப்பு கொடுத்துதான் பீகாரை விட்டு ராகுலை வெளிய கொண்டு வந்தாங்களாம்! நடக்குறதெல்லாம் பார்த்தா தமிழ்நாட்டுலயும் அப்படி ஆயிரும் போல!

இவரு தேர்தல் வியூகம் போட்டு தமிழ்நாட்டுல எல்லா கட்சியையும் ஊறுகாய் ஆக்கிட்டு, இவரு மெயின் டிஷ் ஆகப் போறாராம்!
                                                        
 எல்லாக் கட்சியும் ஆட்சி அமைக்க தான் கூட்டணி போடுவாய்ங்க! ஆனா கட்சி நடத்தவே கூட்டணி போட்ருக்க ஒரே கட்சினா அது காங்கிரசு கட்சிதான்.  காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளான இளங்கோவன் காங்கிரஸ், தங்கபாலு காங்கிரஸ், வாசன் காங்கிரஸ், சிதம்பரம் காங்கிரஸ், யுவராஜ் காங்கிரஸ் போன்ற ஐந்து காங்கிரஸ் கட்சிகளும் தான் இந்த தடவ ராகுல் காந்தியின் ஊத்துக்கு (தேர்தல் வியூகத்துக்கு) ஊறுகாய் ஆகப் போற கட்சிங்கனு நினைக்கிறேன்!

போன தடவை திமுக கூட கூட்டணி வச்சப்பையே தங்கபாலு, இளங்கோவன், சிதம்பரத்துக்கு ஆப்பு வச்சாய்ங்க! இந்த தடவ தேமுதிக, பாமக கூட கூட்டணி வைக்க வியூகம் வச்சிருக்காராம் ராகுலு! அட மொக்கப் பயலே! அவய்ங்க கூட கூட்டணி வைக்கிறதுக்கு எதுக்குடா வியூகம்? விஜயகாந்துக்கு ஒரு கட்டிங் ஊத்திவுட்டாப் போதும். ராமதாசுக்கு ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி கொடுத்தா போதும்! மேட்டரு ஓவர்! ஆனா அந்த எம்.பிய கொடுக்க முதல்ல ஜெயிக்கனும்ல!!
                                                     
ஏற்கனவே ராகுல்காந்தி தமிழ்நாட்ல வந்து 'காங்கிரசு'னு பேசுனாலே அவரு மூஞ்சிய பார்த்துட்டு எல்லாரும் வீட்டுல போயி தனியா 'கெக்கே பெக்கே'னு சிரிக்கிறாய்ங்க. இதுல இந்த கூட்டணி வேற அமைஞ்சுருச்சுனு வைங்க ஆதித்யா, சிரிப்பொலி எல்லாம் இழுத்து மூடிருவாய்ங்க! 
ராமதாஸ் சொல்றாரு, மக்களுக்கு அறிவே இல்லையாம். பாமக ஆட்சி அமைச்சாதான் நல்லதாம், அது மக்களுக்கு புரியவே மாட்டேங்குதாம். சார் சார்... ஆட்சி அமைக்கிறத ஏதோ பொண்ணு சமைஞ்சதுக்கு பந்தல் அமைக்கிற மாதிரி சொல்றீங்களே சார்?? மந்திரிக்கு எங்க போவீங்க? சரி அதை விடுங்க. 234 MLA வேட்பாளர்களுக்கு எங்க போவீங்க? 234 தொகுதில, ஒரு பாமக உறுப்பினருக்கு ஒரு தொகுதினு கொடுத்தா கூட 232 தொகுதி மிஞ்சுதே சார்!! 

எல்லாரும் அரசியலுக்கு வந்துதான் குடும்பத்த உள்ள கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வருவாய்ங்க! ஆனா குடும்பத்தோட ஜாலியா 'தீம் பார்க்' போற மாதிரி மொத்தமா குடும்பத்தை கூட்டிகிட்டு அரசியலுக்கு வந்த ஒரே ஆள் கேப்டன் விஜயகாந்த்து தான்! சேலத்துல அவர் 'ஆத்துனாரு' பாருங்க ஒரு சொற்பொ(க)ழிவு... கொடூர காமடி... கீழ இருக்குறதெல்லாம் கற்பனை மாதிரி தெரியும் ஆனா சத்தியமா இல்லை! நிஜத்தில் அவர் பேசியவை! ஒரு நாலு பாயிண்ட் மட்டும் தர்றேன்....

1)"ஏன் தயாரிப்பு நிறுவனம் பேரை 'Red giant'னு ஆங்கிலத்துல வச்சிருக்காங்க? சிகப்பு பூதம்னு தமிழ்ல வைக்கலாம்ல?" (ஆமா கேப்10 உங்கள வச்சு படம் எடுத்திருந்தா 'கருப்பு பூதம்'னே வச்சிருக்கலாம்! அவய்ங்க தப்பு பண்ணிட்டாங்க!)

2) "CM, Stalin ஹோட்டலுக்கு போனா விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க. நான் போனா எவனும் கண்டுக்க மாட்றான்!" (ஆமா. நல்லா தின்னுபுட்டு "மக்களோட கூட்டணி அவங்ககிட்டயே வாங்கிக்க"னு சொல்லிட்டு பில்லு கட்டாம போயிருப்பீங்க! எவன் மதிப்பான்!!??)

3) "CM, ஸ்டாலின் எல்லாம் கார்ல போனா எல்லாரும் வழி விடுறாங்க. ஆனா நான் போறப்ப விடவே மாட்றாங்க" (ஆமா இவரு பெரிய 108 ஆம்புலன்ஸ்.. இவருக்கு வழிவிட்டா 100 உயிரு பொழைச்சுக்கும்!)

4) "அதிமுக கூட கூட்டணி வைக்க நினைக்கிறவங்க கை தூக்குங்க.. (சிலர் தூக்குறாங்க) சரி, கீழ போடுங்க. திமுக கூட கூட்டணி வைக்கனும்னு சொல்றவங்க கைதூக்குங்க. (சிலர் தூக்குகிறார்கள்). ஹ்ம்ம். சரி. கீழ போடுங்க. கூட்டணி பத்தி நானே முடிவு பண்ணிக்கிறேன்!" (அப்புறம் என்னத்துக்கு கேப்10 கைதூக்கி தூக்கி எறக்க சொன்னீங்க? இது என்ன யோகா கிளாஸ்சா கேப்டன்?)

5) "நான் ஏன் வேகமா பேச மாட்டேங்குறேன் தெரியுமா? வேகமா பேசுனா உளறிருவேன்!" (ஆமா இல்லேனா மட்டும் நீங்க ரொம்ப கரக்டா பேசிருவீங்களாக்கும்! முதல்ல ஒரு இடத்துல நின்னு பேசுங்க கேப்டன். பி.டி.உஷா மாதிரி மேடைல ஓடிகிட்டே இருக்கீங்க!??)

இது மாதிரி ரெண்டு சூப்பர் கூட்டணித் தலைவர்கள்! இவங்களோட ராகுல் காந்தியும் கூட்டு சேர்ந்தா நாடு விளங்கிரும்! நாடு விளங்குதோ இல்லையோ காங்கிரசு விளங்கிரும்! ஆனா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க! ராகுல்காந்தி இருக்க வரைக்கும் 'நாம் தமிழர் கட்சி'னால எல்லாம் காங்கிரசை ஒழிக்கவே முடியாது! ஏன்னா அவரே அதை அழிச்சுருவாரு!  அதுக்கு வியூகம் வகுத்துட்டாரு!

Wednesday, February 2, 2011

தேசம் என்பது மக்களா, மண்ணா?

பரந்துபட்ட இவ்வுலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த நாட்டினுடைய குடிமக்களின் தேசப்பற்றின் அர்த்தத்தை விளக்குவதாயினும் வெகு சுலபமாக, அக்குடிமக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்துள்ள பற்று எனக் கூறிவிடலாம். தேசத்தின் மீதான பற்றை அறுவை செய்து உள்நோக்கினால், அந்தப் பற்றானது, ஒரு குடிமகன் தன் நாட்டின் சககுடிமகன் மீது கொண்ட பற்றாகவும், தானும் தன் சககுடிமகனும் பேசும் தங்கள் தாய்மொழியின் மீதான பற்றாகவும், தானும் தன் சககுடிமகனும் சார்ந்த இனத்தின் மீதான பற்றாகவும் மிகவும் பிரம்மாண்டாய் விரியும். இப்போது இந்தியாவின், பாரதத்தின், ஹிந்துஸ்தானின் மீதான நமது தேசப்பற்றை கொஞ்சம் அறுத்துப் பார்த்தோமானால் தேசப்பற்று என்ற வார்த்தையைத் தாண்டி வெற்று கூடாகவே இருக்கிறது.

இந்தியா என்ற சமீபத்தில் உருவான ஒரு ஒன்றுபட்ட தேசியத்தில், நாம் சகோதரர்களாய் ஏற்றுகொள்வதாய் உறுதிமொழி எடுத்த வேறு மொழி பேசும் சககுடிமகன் மீதான பற்றென்பது நமக்கு இருப்பதாக கற்பனை செய்தோமானால் அதைவிட கேலிக்குரிய விஷயம் ஏதும் இல்லை. மும்பையில் ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் மாட்டிக்கொண்ட மக்கள் கண்டிப்பாய் காப்பாற்றப்பட வேண்டும், பயங்கரவாதிகள் மரணிக்க வேண்டுமென மிகுந்த வேதனையுடனும், கோபத்துடனும், நாட்டுப்பற்றுடனும் செய்தி வெளியிடும் வட இந்திய ஊடகங்கள், ராமேஸ்வரத்தில் தினமும் செத்து மடியும் மீனவர்களுக்காகவோ, காஷ்மீரில் குடும்பப்பெண்களைக் கூட போராளிகளாய் மாற வைத்த வரலாறு காணாத ராணுவ அடக்குமுறை பற்றியோ, கிழக்கிந்திய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் உருவான பின்புலம் பற்றியோ, அல்லது அந்த மாநில பெண்கள் தங்கள் சொந்த நாட்டின் ராணுவத்தாலேயே வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படுவது குறித்தோ, ஒரு நொடி கூட தங்கள் செய்திகளில் நேரம் ஒதுக்க மறுப்பது மர்மமான விஷயமாகவே இருக்கிறது! 

இந்த மர்மம் ஒன்றும் உங்களுக்கும் எனக்கும் தெரியாததோ அல்லது யூகிக்கவல்லாத ரகசியம் அல்ல. மிகச் சாதரணமானது. இத்தனை  இனங்களும், மொழிகளும், மதங்களும் உள்ள ஒரு நாட்டில், பெரும்பான்மை இனத்தினரோ, அல்லது பெரும்பான்மை மொழியினரோ, சிறுபான்மை மக்கள் தங்களையும் தங்கள் இனத்தையும் முக்கிய குடிமக்கள் (superior citizens) ஆக ஏற்றுக்கொள்ளாத போது, அல்லது ஏற்றுக் கொள்ளவைக்கும் பொருட்டு சிறுபான்மை இன மக்கள் மீது இத்தகைய அடக்குமுறைகளும், இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படும் அவலமும் நடக்கிறது. ஈராக் மீது அமெரிக்கா எண்ணைக்காக போர் தொடுத்தபோது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை ஏகத்துக்கும் எதிர்த்த சிகப்பு சட்டை காம்ரேடுகள் இந்தியா என்ற நாடு தன் நாட்டின் குடிமக்கள் மீதான தனது ஏகாதிபத்தியத்தை ராணுவத்தின் வாயிலாக கட்டவிழ்க்கும் போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் ரகசியமும் இதுதான். 

  
இன்னும் சற்று ஆழமாய் இந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால் அது "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடருக்கு வெகுநேர்மாறாகவே இருக்கிறது. தமிழக விவசாயிகளை மரணத்தின் வாயிலில் சரியாய் கொண்டு சேர்க்கும் காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ராமேசுவர மீனவர் கொலை பிரச்சினை, காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கிழக்கிந்திய மாநில மக்கள் மீதான இந்திய ராணுவத்தின் அடக்குமுறை, ஆகிய எதையுமே அதனால் பாதிக்கப்படாத வேறு பகுதிகளில் வசிக்கும் இந்திய மக்கள் எதிர்க்காமல், கேள்விகேட்காமல் இருக்க இந்திய தேசப் பற்று என்ற இந்திய மண்ணின் மீதான பாசத்தை இந்திய அரசும், வட இந்திய ஊடகங்களும்  மக்கள் மீது பயன்படுத்துகிறது!

இந்த நாட்டுப்பற்று என்னும் மக்களின் உணர்ச்சிகளை மழுங்கடிக்கும் மறதி மருந்தை தொடர்ந்து உற்பத்தி செய்யவேண்டுமானால் பாகிஸ்தானும், சீனாவும் குறைந்தபட்சம் விளையாட்டுப் போட்டிகளிலாவது (கிரிக்கெட்டிலாவது) இந்தியாவிற்கு எதிரிகளாக இருக்கவேண்டும்.

அயோத்திப் பிரச்சினையில் ஆரம்பித்து காவிரிப் பிரச்சினைவரை, நம்மை மறக்கச் செய்வதும் மழுங்கச் செய்வதும் தேசப்பற்று என்னும் மறதி மருந்தே. மேலும் இந்திய அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும், ஒருதலை பட்ச நிர்வாகத்தையும் மறைத்து வருவது பாகிஸ்தான் மீதான, சீனா மீதான ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஊடகங்களால் திணிக்கப்பட்ட கோபமும், இந்நாடுகளை எதிரியாய் நினைக்கும் மனப்பான்மையும் தான். சொந்த வீட்டில் (நாட்டில்) நம் மீது ஏவப்படும் அடக்குமுறைகளையும், நம் உரிமைகள் பறிக்கப்படும் நிலைமையையும் எதிர்க்க துப்பில்லாத தன்மையை, அடுத்த வீட்டின் (நாட்டின்) மீதான நம் கோபம் நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை எதோ உலகயுத்தம் போல் சித்தரிக்கும் ஊடகங்களின் குறிக்கோள், நம் கோபம் பக்கத்து மாநிலத்தில் இருந்து நமக்கு தண்ணீர் பெற்றுத் தரக்கூட முடியாத இந்திய அரசின் மீது பாயாமல், நமக்கு சம்பந்தமே இல்லாத பாகிஸ்தான் மீது இருக்க வேண்டுமென்பதே.  இப்படியான திசைதிருப்பப்பட்ட நமது கோபமே இன்றளவும் இந்தியாவின் எகாதிபத்தியத்திற்கு மறைமுக உதவியாய் இருந்துள்ளது. அதாவது நம் உரிமைகள் பறிபோவதற்கும், கேள்வி கேட்பாரற்று நம் மீனவ சகோதரர்கள் செத்து மடிவதற்கும், காஷ்மீரிகளும், கிழக்கிந்திய மக்களும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைக்-கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதற்கான காரணிகளில் ஒன்றாக நாமும் இருக்க காரணம் நம்மை கையாலாகாமல் செய்த நம் தேசப்பற்றுமே ஆகும்.

எதிர்கட்சிகளான, எலியும்-பூனையுமான பா.ஜ.கவும் காங்கிரசும் காஷ்மீர் பிரச்சினையில் ஒற்றுமையாக, பெரிய தேசியவாதிகளாக நடந்து கொள்வதன் நோக்கம் இதுதான். இந்துத்துவ நாடாக இந்தியாவை முழுமையாக ஆக்கத்துடிக்கும் காவிக்காரர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருக்கும் காஷ்மீரை விட்டுக்கொடுக்க மறுப்பது ஏன்? பொது வாக்கெடுப்பிற்கு சம்மதிக்காதது ஏன்? அனைவருக்குமே அரசியல் செய்ய காஷ்மீர் தேவை. காஷ்மீர் இல்லையெனில் பிற உள்நாட்டுப் பிரச்சினைகள் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாய் அமையும்.

பல ஆண்டுகாலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை இந்திய அரசு தன் சுயலாபத்திற்காகவும், பாகிஸ்தானை தன் எதிரியாயும் தன் குடிமக்களின் எதிரியாயும் உலகநாடுகளுக்கும், தன் சொந்த மக்களுக்கும் காண்பித்து வந்திருக்கிறதேயொழிய பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளையோ, மக்களை சுதந்திர குடிகளாய் குடியமர்த்துவதற்காக யோசித்ததாகவோ, தினம் தினம் செத்து மடியும் மக்களின் உரிமையை மீட்க முயற்சித்ததாகவோ தெரியவில்லை. இந்தியா என்ற சிறுபான்மை இந்தியர்களின் (தமிழர்கள், கிழக்கு இந்தியர்கள்) எதிரி, பாகிஸ்தான் என்ற இந்தியாவின் எதிரியால் மறைக்கபடுவதற்கு காஷ்மீர் பிரச்சினை இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவிற்கு துணை புரிந்து வந்துள்ளது. ஒன்றை கவனித்திருந்தோமானால் எந்தக்காலத்திலும் இந்தியாவின் அக்கறை காஷ்மீர் மண் மீதானதாக தான் இருந்து வந்துள்ளதேயொழிய,  காஷ்மீர் மண்ணின் மக்கள் மீதானதாக இருந்ததேயில்லை.

இந்திய அரசு தன் மக்களையும், அவர்கள் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்கும் ஒரு இணக்கமான நாடாக இருந்திருக்குமேயானால் காஷ்மீர் பெண்களும் குழந்தைகளும் இன்று தெருவுக்கு வந்து ராணுவ ஊர்திகள் மேல கல்லெறியும் நிலை வந்திருக்காது. இத்தனை ஆண்டுகளாக பொறுமையாய் இருந்த பூனைகள் காஷ்மீரில் புலிகளாக மாறியுள்ள செய்தி இந்திய அரசும் அதன் அடக்குமுறை ராணுவமும் அம்மக்களை எவ்வளவு சிதைத்துள்ளன என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் உள்ளது.

 ராமேசுவர மீனவர்கள் விஷயத்துக்கும் இதற்கும் ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது. உள்நாட்டு அமைச்சர் வெகு சாதாரணமாக "கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை அரசு காப்பாற்ற முடியாது" என சொல்லியிருக்கிறார். படிப்பறிவில்லாத மீனவர்கள் கடலில் எல்லையை கண்டுபிடித்து மீன்பிடிப்பதென்பது முடியவே முடியாத காரியம். மேலும் எல்லை தாண்டும் மீனவர்களை அண்டைநாட்டு கடற்படை சுட்டுக்கொல்லலாம் என்று எந்த சர்வதேச சட்டம் சொல்கிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் நமக்கு தோன்றுவதற்குள் காமன் வெல்த் விளையாட்டுக்கள் நம் கண்களை மீண்டும் கட்டிப்போட்டு திசை திருப்பி விட்டன. நம் சகதமிழன் அண்டை அரசால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தட்டிக்கேட்க்க முடியாத நாம் தேர்ந்தெடுத்த உள்துறை அமைச்சரை நாம் எதிரியாய் நினைத்து சுதாரிப்பதற்குள், காமன் வெல்த்தில் எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றது என நம்மை எண்ண வைக்கின்றன ஊடகங்கள்.

பொருளாதாரத்தில் மிக கீழ்நிலையில், குடிமக்களில் பாதிபேருக்கும் மேல் வறுமைகோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியாவில், இந்திய ரூபாய்க்கு முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக செய்தி வந்தவுடன் இனி உலகின் முன் நாம் தலை நிமிர்ந்து நடக்கலாம் என்ற மாயையை ஊடகங்கள் உட்புகுத்தியவுடன் அனைத்தையும் மறந்து, பெருமை பீற்றி, பிரச்சினைகளை மறந்துபோகிறோம்.

ஏன் இவ்வளவு சுலபமாக மறக்க முடிகிறது? ஏனென்றால் உங்களையும் என்னையும் இந்த பிரச்சினைகள் நேரடியாக பாதிக்கவில்லை. எவனோ மீனவன் எங்கோ சாகிறான். ஆனால் இப்பிரச்சினை நேரடியாக நம்மை பாதிக்கப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான முதற்புள்ளியை ஏற்கனவே இந்திய அரசு சிங்கள அரசுடன் சேர்ந்து 'விடுதலைப் புலிகள் அழிப்பு' என்ற பெயரில் போட்டு விட்டது.

இதுவரை போர் மேகங்களே இல்லாத, ராணுவத்தினை கண்ணாலும் கண்டிராத தென்னிந்திய மக்கள் கூடிய விரைவில் சிறீலங்காவில் முகாம்களையும் தடவாளங்கையும் அமைக்கும் சீனத்தின் வாயிலாக போர்மேகங்களைப் பார்க்கப் போகிறார்கள். இதைக் காரணம் வைத்து இந்திய அரசின் ராணுவம் காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அத்துமீறலையும், அடக்குமுறையையும் நம் மீதும் நிகழ்த்தும் பேரபாயம் இருக்கிறது.

இது சீன அரசு நம்மீது போர் தொடுப்பதின் விளைவுகளைவிட பயங்கரமானதாகவே இருக்கும். உரிமைகள் பறிக்கப்படும். உடைமைகள் இல்லாது போகும். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அதே நிலைமை தென்னிந்திய மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு, சிறிலங்க-சீன அரசுகள் வாயிலாக இந்திய அரசால் ஏற்படும் காலம் நாளை இல்லையெனினும், ஒருநாள் இருக்கப்போவதாகே இப்போதைய அரசியல் சூழ்நிலைகள் நமக்கு தெரிவிக்கின்றன.  

  இப்போது காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் தேசியவாதி உமர் அப்துல்லாவையே இந்தியாவை எதிர்த்துப் பேசும் அளவிற்கு தூண்டிவிட்டுள்ள நிலைமையில் இந்த விடுதலை வேட்கை அணையாமல் வைத்திருக்கும் பொறுப்பையும், வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பை அருந்ததி ராய் போன்றவர்கள் ஏற்றிருக்கிறார்கள். "தன் மக்களை சமூக விரோதிகளிடமும், பன்னாட்டு நிறுவன கொள்ளையர்களிடம் இருந்தும், கொலைகார்களிடம் இருந்தும் காக்க முடியாத கையாலாக ஒரு அரசு, நினைத்ததைப் பேசும் எழுத்தாளர்களையும், சமூகசேவகர்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்த நினைப்பதை எண்ணி அந்நாட்டின் மீது பரிதாபப்படுகிறேன்" எனக் கூறியுள்ள அருந்ததிராயின் தைரியத்தை வார்த்தைகளாலும் வாக்கியங்களாலும் பாராட்டினாலும் பத்தாது.

இனியும் தேசப்பற்று போர்வையில் வலம் வரும் ஏமாற்றுகாரர்களின், பேச்சைக் கேட்டு தேசப்பற்று மாயையில் மூழ்கி, பாகிஸ்தானைப் பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டோமேயானால் நாட்டுப்பற்று என்னும் மறதி மருந்து நம் மூளையையும், உணர்ச்சியையும், உணர்வுகளையும் செயலிழக்க செய்து அடிமைகளாய் வாழும் வாழ்க்கைக்கு நம்மை தள்ளுமேயன்றி, மனிதர்களாய் உரிமைகளுடன் உயிருடன் வாழ வழிவிடா! 

தேசப்பற்று என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாட்டின் சக குடிமக்கள் மீதானதாக இருக்கவேண்டுமேயொழிய, அந்நாட்டின் மண்ணின் மீதும், அரசின் மீதும் இருக்க கூடாது. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளின் ரத்தமும், அசாமிய ரத்தமும், ராமேஸ்வர மீனவனின் ரத்தமும் நம்மைச் சுற்றி ஓடும் இந்திய ஆறுகளிலும், கடல்களிலும் கலந்து இருப்பதை நாம் உணர்ந்தால் போதும் ஏகாதிபத்தியங்கள் முடங்கிக் கொண்டே இருக்கும். மனிதமும், மகிழ்ச்சியும் தானே நிகழும்.

Related Posts Plugin for WordPress, Blogger...