Wednesday, January 5, 2011

தேநீர் போல் இருக்கிறாய் நீ!மழையடிக்கும் அதிகாலையில், விழித்தெழுந்தவுடன் முன்னிறுத்தப்படும் ஒரு கோப்பைத் தேநீர் போல் இருக்கிறாய் நீ. தேநீரின் சூடு உணவுக்குழாய் வழியே உடலெங்கும் பரவுவது போல் தான் உன் காதலும். என் தலையின் முதல் முடியில் இருந்து உள்ளங்காலின் கடைசி நரம்பு வரை பரவி, இங்கும் அங்குமாய் என்றில்லாமல் எங்கும் வியாபித்திருக்கிறாய். என் உடலில் உன் காதலும், என் உயிரும் பரவியல் அடிப்படையில் பார்த்தால் ஒன்றுதான். காதலின் விகிதம் தான் கொஞ்சம் அதிகம்!

எப்படி நீ நீயாய் இருக்கிறாய்? நான் திட்டுகிறேன். நீ நீயாய் இருக்கிறாய். கெஞ்சுகிறேன். நீ நீயாய் இருக்கிறாய், கொஞ்சுகிறேன், ஆர்ப்பரிக்கிறேன், அடங்குகிறேன், முத்தமிடுகிறேன், ஆனாலும் எப்போதும் போல் நீ நீயாய் இருக்கிறாய். ஏனெனக் கேட்டால் "இதெல்லாம் நீ செய்யும் போது, நீ நானாய் மாறித் தொலைக்கிறாயே" எனச் சொல்கிறாய். அதெப்படி எப்போதுமே நீயும் நானும் நீயாய் மட்டுமே இருக்கிறோம்? நீயும் நானும், நானாய் மாறினால் என்ன? வேண்டாம். சராசரிக் காதலாய் மாறித் தொலைத்தாலும் தொலையும்!

உனக்கும் எனக்குமான இடைவெளி காதலுக்கும் காமத்துக்கும் போன்றதாய் இருக்கிறது. எவ்வளவுதான் பார்த்தாலும் முழுதாய் தெரிய மறுக்கிறாய், கண்களுக்கு கருவிழி தெரியாததைப் போல. நமக்கான இடைவெளி இருந்த வரைக்கும் நம்மை இயக்கிய வாழ்க்கை, இல்லையென்றான பின் நம்மை நடத்துவதை விட்டுவிட்டு நம் பின்னால் நடக்க ஆரம்பித்துவிட்டது.

உன் காதலால் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. உலகின் முதல் ஆணில் இருந்து கடைசி ஆண் வரை எனக்கு எதிரியாகிப் போனார்கள். ஒரு மாற்றத்திற்காக பிற பெண்களை ரசிக்கலாம் என்றாலும் கூட உலக அழகி முதல் ஊர்க்கடைசி அழகி வரை எல்லா பெண்களுமே ஆண்களைப் போல் தெரிகிறார்கள். எடை காட்டும் இயந்திரம் என் எடை வெறும் 20 கிராம் எனக் காட்டுகிறது. "காதலைக் கழட்டி வைத்துவிட்டு ஏறி நில்லுங்கள்" எனத் துண்டுச் சீட்டில் அறிவுரை வேறு சொல்கிறது.

பூங்காவில் கூடியிருக்கும் காதலர்கள் நம் பக்தர்கள் போல் தெரிகிறார்கள். ஆசி வழங்கச் சென்று அடி வாங்கி வந்தேன். நிலா, கவிஞர்களுக்கு தூரமாகவும், எனக்கு அருகிலும் வந்து தொலைத்த காரணத்தால் கவிஞர்கள் கலங்குகிறார்கள். கவிதை என்ற பெயரில் என் மேல் கல்லெறிகிறார்கள். நிலா இன்றி தங்கள் கவிதைகள் நீர்த்துப் போகும் எனக் கெஞ்சுகிறார்கள். கடைசியில் வேறுவழியில்லாமல் உலகுக்கான அத்தனைக் காதல் கவிதைகளையும் என்னையே இயற்றச் சொல்லிவிட்டு புரட்சிக்குப் போய்விட்டார்கள்.

1960களில் ஆர்ம்ஸ்ட்ராங் அநேகமாய் உன் தாயைப் பார்த்திருக்கலாம். "ஆனால் அவள் இவ்வளவு அழகில்லையே, தெரிந்திருந்தால் இப்போது போயிருப்பேனே" எனப் பிதற்றிக் கொண்டிருக்கிறார். 
விஞ்ஞானிகள் வானுக்கு அனுப்பும் செயற்கைக்கோள்கள் பூமி நோக்கி பறக்கின்றன. நாம் காதலிக்கும் போது நம்மைச் சுற்றி சுற்றி வந்து உலகக் காதலர்களுக்கு உவமைப் பாடம் ஒளிபரப்புச் செய்கின்றன. அதன் பலனாய் பூமிக்கு வந்த குழந்தைகள் நம்மை கடவுளாக வணங்கவும் தொடங்கி விட்டன.

சாலையில் பயணிக்கும் நேரங்களில் எவ்வளவு விரட்டினாலும் மலைகளும், மரங்களும், செடிகளும்,
பூக்களும் பின்னே செல்வதற்கு பதிலாக நம் கூடவே பயணிக்கின்றன. நமக்கு வேண்டுமென்றால் நம் மீதும், வேண்டாமென்றால் நம்மைச் சுற்றியும் பெய்யும் புதுப்பழக்கத்தை மழை கற்றுகொண்டுவிட்டது.  

நீ என்னுடன் பேசியபடி சாலையில் நடப்பதை பார்த்த மக்கள், கண்ணன் சொன்னதையும், நபிகள் சொன்னதையும், இயேசு சொன்னதையும் கடாசிவிட்டு, தங்கள் காதலியின் காதல் கடிதங்களை வணங்கத் தொடங்கிவிட்டார்கள். காதலியின் பேச்சை மட்டுமே கேட்கத் ஆரம்பித்துவிட்டார்கள். சட்டென மிகவும் நல்லவர்களாக மாறித்தொலைத்து விட்டார்கள்.

கடவுள் பதவியை மிக சமீபத்தில் இழந்த முன்னாள் கடவுள்கள், தங்களுக்குள் இருக்கும் மத வேறுபாட்டை மறந்து கூட்டமாய் வந்து என்னை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். எனக்கு போக ஏது நேரம்? நீதான் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறாயே. பேச்சுவார்த்தையை விட்டுவிட்டு பேசாமல் நீ பேசுவதைக் கேட்கச் சொன்னேன். அடக் கொடுமையே! பத்து நிமிடத்தில் உன் பக்தர்கள் ஆகி விட்டார்கள்.

தேநீர் கோப்பையில் அடியில் தங்கும் சர்க்கரை  நாவில் பட்டு இனிப்பதைப் போல், உலகின் மொத்த காதலையும் சேர்த்து வைத்து என் இதயத்தில் பட்டுத் இனித்தவள் நீ.
"என் காதலியாக நீ ஆக என் செய்தேன் நான்?" எனக் கேட்டால். "எல்லாருமே என்னைப் பார்த்து என்னென்னவோ ஆனார்கள். ஆனால் நீ மட்டும்தான் என்னை என்னென்னவோ ஆக்கி, நீ நீயாகவே இருக்கிறாய்" எனச் சொல்கிறாய்! கடவுள்கள் உனக்கு பக்தர்கள் ஆகிப்போனதில் வியப்பென்ன இருக்கமுடியும்?

4 comments:

முத்துசிவா said...

//"என் காதலியாக நீ ஆக என் செய்தேன் நான்?" எனக் கேட்டால். "எல்லாருமே என்னைப் பார்த்து என்னென்னவோ ஆனார்கள். ஆனால் நீ மட்டும்தான் என்னை என்னென்னவோ ஆக்கி, நீ நீயாகவே இருக்கிறாய்" எனச் சொல்கிறாய்! கடவுள்கள் உனக்கு பக்தர்கள் ஆகிப்போனதில் வியப்பென்ன இருக்கமுடியும்//

பின்றான்யா... பின்றான்யா.... நோட் பண்ணுங்கப்பா.....

Nagasubramanian said...

A1
extra ordinary

Azar said...

//நீ என்னுடன் பேசியபடி சாலையில் நடப்பதை பார்த்த மக்கள், கண்ணன் சொன்னதையும், நபிகள் சொன்னதையும், இயேசு சொன்னதையும் கடாசிவிட்டு, தங்கள் காதலியின் காதல் கடிதங்களை வணங்கத் தொடங்கிவிட்டார்கள்.//
Dont insert your self likes and dislikes in such a wonderful work.

இரா.இளவரசன் said...

Dont insert your self likes and dislikes in such a wonderful work. //

Wonderful works must be blended with self likes and dislikes and hatred! Thats what differs writers! If every writer wants to please every other reader, then uniqueness will vanish in the global uniformity! So a writer can always blend his likes and dislikes and must NOT try to insert or inflict it!! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...