Monday, January 3, 2011

கடுகு பொறுக்கிகள்


சுப்பு மாமா செத்துப்போச்சுதுன்னு எனக்கு தாக்கல் வந்தப்ப நான் சென்னைல இருந்தேன். சென்னைக்குன்னு அருமையான குணம் ஒன்னு உண்டு. எந்தக் குடும்பம் சேர்ந்து இருந்தாலும் அதுக்கு புடிக்காது. அப்பன்-மவன், ஆத்தா-மவன், அண்ணன்-தம்பி, இதுக்கெல்லாம் மேல புருசன் பொண்டாட்டி சேர்ந்து இருந்தா இந்த சென்னை சனியனுக்கு புடிக்கவே புடிக்காது. நான் வாங்குற 8000 ரூவா சம்பளத்துல என்னால மட்டும் தான் சென்னைல இருக்க முடியிது. என் பொண்டாட்டி கண்மணியும் என் புள்ள சுப்பிரமணியும் மதுரேலதான் இருக்குதுங்க. நான் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து பார்த்துட்டு போவேன்.

சிலநேரம் வேலை செய்யிறப்ப பகீர்னு ஒன்னு தோணும். நம்ம தெரிஞ்சவன் புரிஞ்சவனுக்கு எதுன்னா ஒன்னு ஆச்சுனா உடனே போக முடியாதே. கடைசி மூச்சு விடுறப்ப மடில வச்சுக்க முடியாது. பத்து மணி நேரம் பஸ்ல போகனும். மனசுல மரணத்தை வச்சுட்டு பஸ்ல பத்து மணி நேரம் அழுகைய அடக்கனும், டிக்கெட் வாங்கனும், சத்தமா சிரிப்புப் படம் ஓடும். அப்புறமா பாதிப்பொணமா நாம சாவுக்கு போயிச்சேந்தா பொணத்தை எடுக்க டைமாச்சு அதான் எடுத்துட்டோம்னு சொன்னாலும் சொல்லிருவாங்க. இதெல்லாம் ரொம்ப அதீத கற்பனை தான். ஆனா இந்த மாதிரி கற்பனை வர்றப்பல்லாம் ரொம்ப பயமா இருக்கும். இப்போ இதெல்லாம் நிசத்துல நடந்துட்டிருக்கு. பத்து மணி நேரம் சுப்பு மாமா சாவை சுமந்துட்டு பஸ்ல உக்காந்துருக்கனும்.  

 போனவாட்டி நான் மதுரை வந்தப்ப மாமா நல்லாத்தான் இருந்துச்சு. "டேய் சட.. பொண்டாட்டி புள்ளைய விட்டுப்போட்டு ஏண்டா அந்த சுடுகாட்டுல இருந்து அல்லாடுற? நீ திரும்பிப்பாக்குறக்குள்ள உடம்புல தெம்பு போயிரும்டா. ஒம்மவனுக்கு உம்மேல ஒட்டுதல் இல்லாம போச்சுனு வச்சுக்க ஒவ்வொரு நாளும் நரகந்தேன். பொட்டியத் தூக்கிட்டு இங்க வந்துருய்யா.. இங்கன எதாச்சும் சோலி பாரு"னு சொன்னுச்சு.

மாமா எப்பயுமே சென்னைய சுடுகாடுனு தான் சொல்லும். எப்பயோ ஒருவாட்டி வியாபார விசயமா சென்னை போயிட்டு வந்த என் சித்தப்புகிட்ட, "மெட்ராசு, மெட்ராசுன்றீகளேடா..  அப்படி என்னதான்டா அங்க கண்டுபுட்டீக?"னு கேட்ருக்கு. அதுக்கு அவரு "என்ன இப்படிக்கேக்குற சுப்பு?  பீச்சோரத்துல அண்ணா சமாதி, எம்.ஜி.ஆரு சமாதி எல்லாம் இருக்குல்ல. இதுக்குதான் ஊருக்குள்ளயே கடக்காமா வெளிய வா, நாலு ஊரப் பாருங்குறது"னு சொல்லிருக்காரு! அடேய் ஊரே ஒரே சமாதியா இருக்கும் போலுக்கு. அதும் சுடுகாட்டுல எரிக்காம கடல்ல எரிச்சிருக்காய்ங்க? மனுசப்பயலுக தானா அவய்ங்கள்லாம்?னு சொல்லிருக்கு மாமா. அதுலேர்ந்து அதுக்கு சென்னைனா சுடுகாடு தான்.

 "மாமா மாமா"ன்னு சொல்லும்போது எனக்கு அப்பானு கூப்பிட முடிலயேனுதான் தோணும். அப்பனை இப்போ என்னன்னவோ கூப்பிடுறாய்ங்க, டாடி, டாட் னு எல்லாம். அதுமாதிரி நான் அப்பாக்கு இன்னொரு வார்த்தைதான் மாமானு நினைச்சுக்கிருவேன். அப்பா என்னலாம் ஒரு புள்ளைக்குச் செய்வானோ அதையெல்லாம் எனக்கு மாமா செஞ்சுச்சு. இப்போ வாங்குற எட்டாயிரம் சம்பளம் கூட மாமா சிநேகிதரு ஒருத்தரு தேடிக்கொடுத்த வேலைதான். மாமாக்கு யாரு கொள்ளி போடுவானு தெரில. ஒருவேளை சாகுறப்ப யாருட்டயாச்சும் சொல்லிருந்தா அது என் பேரத்தான் சொல்லிருக்கும். ஆனா சொல்ற அளவுக்கு தெம்பா இருந்து செத்துச்சானு தெரில.

நல்லாதான் இருந்துச்சு. ஒருநாள் கைய புடிச்சுட்டு திண்ணைல உக்காந்துச்சு. ஆஸ்பத்திரில  இதய செயலிழப்புனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் அவகாசம் கொடுத்திருந்தாங்க. ஆனா மாமா திடீர்னு செத்துப்போகும்னு என்னால நம்பவே முடில. தெரிஞ்சிருந்தா மதுரைல ஒரு பொட்டிக்கடை வச்சாவது மாமா கூட இருந்திருப்பேன். என் மவன் சுப்ரமணிக்கு, மாமான்னா அவ்ளோ புடிக்கும். அவனுக்கு தாத்தானா அவருதான். ஒரு பென்சிலு கூட அவனுக்கு மாமாதான் வாங்கித்தரும். செத்த வீட்டுல அவன தேத்துறதே பெரிய விஷயமா இருக்கும் கண்மணிக்கு. போயி பாத்தாதான் தெரியும்.

கூட்டம் ரொம்ப அதிகம். ரோசா வாசம் குடலைப் பொறட்டுது. என்னதான் ரோசாவ காதல் சின்னம்னு சொன்னாலும் எனக்கு அந்த வாசம் பட்டாலே சாவு வீடுதான் ஞாபகத்துக்கு வரும். பிஞ்சு பிஞ்சு வாசல் பூராவும் கிடக்குற ரோஜானாலே எனக்கு ஒப்பாது. எத்தனையோ தடவ நானும் மாமாவும் கேதத்துக்கு ரோசா மாலை வாங்கிட்டுப் போயிருக்கோம். பொணத்த தூக்கிட்டுப் போறப்ப வழில ரோஜாவை பிச்சுபோட்டே போவாங்க. "எதுக்கு மாமா போடுறாங்க?"னு கேட்டதுக்கு "அது கடேசி மருவாதைடா. இனி இவன் எங்க வரப்போறான் மாலை போடுறதுக்கு? அதுக்குத்தேன்"னு சொன்னுச்சு மாமா. இன்னிக்கு கண்மணி என்னைய வர்றப்ப ரோசா மாலை வாங்கிட்டு வரச்சொன்னுச்சு. என்னனு தெரில முடியாதுனுட்டேன். "சடகோபன புள்ளை மாதிரி பார்த்துகிட்டானே, இந்த பய மாமாக்கு ஒரு மாலை வாங்கியாந்தானா பார்த்தியா?"னு ஊருக்குள்ள பேசுவாய்ங்க. அட போங்கடா நீங்க எதத்தான் பேசல? மாமாக்கு புரியும்.

சுப்பிரமணி ஒன்னும் அழுத மாதிரி தெரியல. என்ன நடக்குதுனு புரிஞ்சும் புரியாமலும் உக்காந்திருந்தான். கண்மணி தான் ரொம்ப அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயி இருந்துச்சு. சும்மா அங்கங்க உக்காந்திருந்த பொம்பளைங்கள்லாம் என்னப் பார்த்தவுடன "உன் மாமாவ பாத்தியா? மவராசன் எப்படிக் கிடக்கான பாருய்யா"னு கத்தி ஒப்பாரிக் கூச்சல் போட்டுச்சுங்க. அதுல பாதி பேத்த யாருன்னே தெரில எனக்கு. ஒப்பாரி வைக்க காசு கொடுத்து சம்முகம் கூட்டியாந்திருப்பான் போல.

மாமா முகத்த வெள்ளைத் துணியால கட்டி முக்காவாசிய மூடிட்டாங்க. அதோட பெரிய மூக்கு மட்டுந்தான் வெளிய தெரிஞ்சுச்சு. அதுலயும் பஞ்சு. பக்கத்துல நிக்க முடியல. ஒரே மண்ணெண்ணய் வாசன. கெட்டு போக்கூடதுனு வாயில மண்ணெண்ணய் ஊத்திருக்காங்க போல. ரொம்ப நேரம் என்னால மாமாவ பாக்கவே முடில. இது வேற யாரோட சாவா இருக்க கூடாதானு தோணுச்சு. மாமாவோட இந்த முகம் என் மனசுல பதிய நான் விரும்பல. வெளிய பந்தலுக்கு வந்துட்டேன்.

பந்தலுக்கு கீழ நானும், என் மடியில சுப்பிரமணியும் உக்காந்தோம். அப்ப, "நேரமாச்சப்பா. உடம்பு சுகமில்லாத பொணம்.. வச்சுருக்கக்கூடாது.. சின்ன புள்ளைக, புள்ளத்தாச்சி பொம்பளையெல்லாம் இருக்காயில்லையா. சட்டுபுட்டுனு தூக்கிருவோம்?"னு ஒருத்தன் கத்துனான். அவன இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. சில சொந்தக்காரங்க ஏன் சாவுக்கு மட்டும் வர்றாங்க? சாவுல மட்டும் அவங்க காட்டுற அக்கறை எனக்கு புரியல. இதுவரைக்கும் இவன நான் மாமா கூட பார்த்ததே இல்ல. ஆனா இங்க எல்லா வேலையும் இவன் தான் செய்யிறான். கண்டிப்பா இதுக்கப்புறம் காணாம போயிட்டு அடுத்த சாவுக்குதான் வருவான். ஆனா அவன் சொன்னவுடன எல்லாரும் எடுத்துருவோம்னு முடிவு பண்ணி சடங்கெல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க.

"டேய் சம்முகம், அவிட்டத்துல செத்துருக்கான்டா உன் சித்தப்பன். சடங்கெல்லாம் சரியாப் பண்ணனும். எதுனாலும் என்கிட்ட கேட்டுப் பண்ணுங்கடா, அப்புறம் லோல்படாதீக. வாசவழியா தூக்கக்கூடாது, சன்னல்ல செவுத்துல ஓட்டப்போட்டுத்தான்டா தூக்கனும்" னு ஒரு கிழவி கூச்சல்போட்டுச்சு. "அதுக்குத்தான ஏற்பாடு பண்ணிக்கிருக்கோம் அப்பத்தா.. கத்தாத.."னு சம்முகம் சொன்னான். வாசக்கதவுக்கு பக்கமா இருக்க சுவத்துல, வழக்கமா வீட்டுல கொசுறு வேல பாக்குற முருகேசன் வந்து கடப்பாரைய வச்சு ஓட்டப் போட்டான்.

"ஓலப்பாயி கொண்டாந்தியா? அதுலச் சுத்திட்டு அப்புறம் ஒரு சாவலை அடிச்சு ரத்த பலி கொடுக்கனும்யா.  ஓட்ட வழியா ஓலப்பாய வெளிய கொண்டாந்து, உடனே ஓட்டைய அடைச்சுப் புடனும். பொறவு பாடேல ஏத்துற வரை யாரும் பாக்கக் கூடாது. முதல்ல இதச் செய்யிங்கடா மத்தத பிறவுச் சொல்லுறேன். டேய் முருகேசா போயி ஒரு கிலோ கடுகு வாங்கியாடா"னு கையில வச்சிருந்த டம்ளர்ல காபியக் குடிச்சுக்கிட்டே சொல்லிட்டு உள்ளப் போயிருச்சு கிழவி. எனக்கு ஒன்னும் புரியல.

அப்பத்தான் சோமு மாமா  பக்கத்துல வந்து உக்காந்தாரு. துக்க விசாரிப்புக்குப் பிறவு பொதுவா பேசிக்கிருக்கப்ப கேட்டேன், "மாமா எதுக்கு ஓலப்பாயி, செவுத்துல ஓட்டைனு என்னென்னெமோ செய்றாக. பாவம் மாமா. அவரு வீட்டுலயே இப்படில்லாம் பண்ணலமா?" "அட என்னப்பா நீயி? ரொம்ப பாசக்காரய்ங்கதான் அவிட்டத்துல சாவாய்ங்க. உன் மாமனப் பத்திக் கேட்கவே வேணாம். ஊருல எவனுக்கு என்னனாலும் மொத ஆளாப் போயி நிப்பான். நான் புள்ளையில்லாத சொக்கம்மா கிழவிக்கு அவன் கொள்ளி வச்சப்பயே சொன்னேன், "அடேய் வேணாமடா.. புள்ளையில்லாதவகளுக்கு கொள்ளி வச்சா உனக்கு கொள்ளி வைக்க புள்ளையில்லாம போவும்டா"னு. இப்பப் பாரு. புதைக்கத்தான் போறாய்ங்களாம். சாத்திர சம்பிரதாயத்தெல்லாம் மதிக்கனுமப்பா. உன் மாமன் மாதிரி பேசாத. அவிட்டத்துல செத்தவுக ஆவி வீட்ட விட்டு அவ்ளோ சுளுவா போவாதுப்பா. அதுக்குத்தான் இதெல்லாம். ஓலப்பாயில சுத்தி செவுத்து வழியா தூக்குனா ஆவி குழம்பிரும். அதுக்கு எது வாசல்னு தெரியாது. அதான் இவ்வளவு மெனக்கெட்டு இதெல்லாம் பண்றாக"ன்னாரு. பதில் ஒன்னுமே தோணல. பேசாம உக்காந்திருந்தேன். சுப்பிரமணியும் கவனிச்சிட்டிருந்தான்.

ஓலப்பாயில சுத்தி எடுத்துட்டு வந்து பாடேல ஏத்திட்டாங்க. திடீர்னு கடுகு பாக்கெட்ட எடுத்துட்டு ஓடியாந்துச்சு கிழவி, "முருகேசு.. இதக் கையில வச்சுக்க. சுடுகாடு வர ரோட்டுல போட்டுக்கிட்டே போனும்டா. போறவர தீராம பார்த்துக்க."னு சொல்லிட்டு அவன் கைல கொடுத்துச்சு. திடீர்னு பாடைய பார்த்து ஒப்பாரி வச்சு அழுவ ஆரம்பிச்சுருச்சு.

மாமா படுத்திருந்த பாடைய தூக்கிட்டு சுடுகாடு பக்கமா நடக்க ஆரம்பிச்சாங்க. சுப்பிரமணி என் கைய புடிச்சிருந்தான். அதுனால நான் பாடைய தூக்கல. வழிநெடுக முருகேசன் கடுகு போட்டுட்டே போனான். அதுக்கு சோமு மாமாட்ட விளக்கம் கேக்கனும்னு தோணுச்சு. ஆனா கேக்கப் புடிக்கல. பேசாம நடந்தேன்.

திடீர்னு சோமு மாமா "என்ன யோசிக்கிற சட? என்னத்துக்கு கடுகு போடுறாகன்னா? அவிட்டச் சாவு நடந்தா, செத்தவுக ஆவி ராவுல கிளம்பி வீட்டுக்கு வரப்பாக்கும் டா. கடுகப் போட்டுகிட்டே போனோம்னா அதப் பொறுக்கிகிட்டே அது வீடு வந்து சேர்றதுக்குள்ள விடிஞ்சி போவும். அதால ஆவி திரும்பிப் போயிரும்"னு சொல்லிட்டு முன்னால நடக்க ஆரம்பிச்சாரு.

நானும் சுப்பிரமணியும் ரொம்ப மெதுவா பின்னால நடந்தோம். எனக்கு பேசாம வீட்டுக்கு போயிரலாம்னு கூட தோணுச்சு. நானும், சுப்பிரமணியும் மண்ணள்ளி போட்டாம்னா மாமா சந்தோசப்படும். கீழ சரசரனு சத்தம். சுப்பிரமணிய பாத்தேன். அவன் காலால ரோட்ல கொட்டியிருந்த கடுகையெல்லாம் மிதிச்சு சிதறடிச்சுட்டே நடந்தான். இன்னைக்கு ராத்திரி அவன் சுப்பு தாத்தாக்காக முழிச்சுட்டே காத்திருப்பான். நானும் தான். ஒருதடவையாச்சும் துணி கட்டாத, பஞ்சு வைக்காத மாமா மூஞ்சிய பாக்கனும். நாங்க ரெண்டு பேருமே கடுக களைச்சு சிதறடிச்சுட்டே சுடுகாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சோம்.  

8 comments:

Lakshmi said...

manathai ulukkiya pataippu.

Thekkikattan|தெகா said...

அருமையா கொடுத்திருக்கீங்க!

//சாவுல மட்டும் அவங்க காட்டுற அக்கறை எனக்கு புரியல. இதுவரைக்கும் இவன நான் மாமா கூட பார்த்ததே இல்ல. ஆனா இங்க எல்லா வேலையும் இவன் தான் செய்யிறான். கண்டிப்பா இதுக்கப்புறம் காணாம போயிட்டு அடுத்த சாவுக்குதான் வருவான். //

அதுதான் உண்மையான பாசமும் நட்புமாமுல்ல அப்படியா?

YOKESH said...

நண்பரே..வார்த்தைகளில் சொல்லி விட முடியாத உணர்வை தந்துள்ளீர்கள்...(நான் உங்களின் நீண்ட கால வாசகன்..!) உங்க எழுத்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

deesuresh said...

அருமை அசோக்..!! சொல்ல வார்த்தைகள் இல்லை..!!

hey itz me kuruvu said...

சமுகத்தில் இருக்கும் மூட பழக்கங்களை எளிமைய சொன்னவிதம் மனதை தொட்டது.. ..கதை படிக்கும் பொழுது கதையோடு படிப்பர்வகளின் நினைவுகளையும் சின்ன சின்ன வரிகளின் மூலம் பெரிய அளவு பயணிக்க வெய்த உங்கள் சிந்தனை மற்றும் எழுத்து திறமைக்கு ஒரு வந்தனம்..உங்கள் வெற்றியும் அதுவே.. சிறுகதை போட்டிக்கு ஏதேனும் பத்திர்க்கைக்கு அனுப்புங்க கண்டிப்பா உங்கள் திறமை கெளரவிக்கப்படும்..

Ilanchezhian said...

//ரோசாவ காதல் சின்னம்னு சொன்னாலும் எனக்கு அந்த வாசம் பட்டாலே சாவு வீடுதான் ஞாபகத்துக்கு வரும்.//
super nae..
//ஆனா இங்க எல்லா வேலையும் இவன் தான் செய்யிறான். கண்டிப்பா இதுக்கப்புறம் காணாம போயிட்டு அடுத்த சாவுக்குதான் வருவான்//
intha mathiri aalungala niraya paathirukkom.. super

ezhil said...

மனத சலனப் படுத்தும் கதை...

Kanmani Rajan said...

எப்போதும் என் பெயரில் வரும் பாத்திரங்களை எல்லாம் நான் தான் என்று நினைத்து வாசிக்கும், ரசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. கண்மணி அழுது இருந்தாள் என்று சொன்ன இடத்தில் நான் என்னைத் தான் நினைத்துக் கொண்டேன். சிலர் ஆவியாக வருவார்கள் என்று சொன்னாலும், பயமாக இருக்காது, அவர்கள் மனதிற்கு நெருங்கியவர்களாய் இருந்தால்! அருமை!

Related Posts Plugin for WordPress, Blogger...