Wednesday, December 29, 2010

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்!

தமிழ் உணர்வாளர்களின் கடவுளான சீமானைப் பற்றி ஏதெனும் எழுத ஆரம்பிக்கும்போதே எவ்வளவு ஏச்சுக்கள் வாங்க வேண்டியிருக்குமோ என்ற பதற்றமும் தொற்றி கொள்கிறது. சமீப காலமாக கடவுள் சீமான் மீது விமர்சனங்கள் வைப்பதென்பது கத்தியில் நடப்பது போன்ற பிரம்மையை மாற்று கருத்தாளர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது. இன்னும் சுலபமாகச் சொல்லப்போனால் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ஒரு சினிமாவின் முதல் காட்சியில், முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் ஒருவன், "ரஜினி என்னப்பா நடிக்கிறாரு? கண்றாவி" எனச் சொன்னால் அவனுக்கு எதிராக அந்த திரையரங்கில் ஒரு எதிர்ப்பலை எந்த வேகத்தில் கிளம்புமோ அந்த அளவுக்கு சீமானைப் பற்றி பேசும்போது கிளம்புகிறது.

திராவிடப்பற்று தமிழ்ப்பற்றாக மாறி, இப்போது தமிழ்ப்பற்று சீமான் பற்றாக மாறியுள்ள நிலையில், இந்த சீமான் பற்றானது சீமான் என்ன சொன்னாலும் சரி, ஏது சொன்னாலும் சரியென ஒரு மனநிலையை சீமானின் ஆதரவாளர்கள் மனதில் வளர்த்துவிட்டிருக்கிறது என்ற விஷயமே பயம் தருவதாய் உள்ளது.

தலைவனை எதிர்த்து கேள்வி கேட்க திராணி இல்லாமல் பயந்திருந்தால் அவர்களை அடிமைகளெனச் சொல்லலாம். தலைவன் மீதான பற்றால் கேள்வியையே சிந்திக்க முடியாதவர்களை என்னவென்று சொல்வது?

ஆரம்பகாலங்களில் தனக்கு மேடைகளே இல்லாத காலத்தில் மேடைகள் அமைத்துக் கொடுத்த பெ.தி.கவின் மேடைகளில் "பெரியாரின் பேரன் நான். பிரபாகரனின் மருமகன் நான். மார்க்ஸின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் நான்" என அரங்கதிர முழங்கி கைத்தட்டுக்களை அள்ளிச் சென்ற சீமான், சில மாதங்களுக்குப் பின்பு பெரியார் மீதான சாதிய அடிப்படையிலான சீமானின் குற்றச்சாட்டு ஒரு பேட்டியில் வெளிவந்திருந்தது. "பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது."என மிகத்தெளிவாய் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். 

தாழ்த்தப்பட்வர்களுக்காக ஒன்றுமே செய்யாத ஒரு வக்கற்ற கிழவனின் பேரானக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்ட காரணம் என்ன? ஏனெனில் அப்போது அவர் பேசியது பெ.தி.க மேடை. அதில் இருந்தவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள்.

சில காலம் சென்று, மேடையேறிய பலனாக, தொண்டை புடைக்க கத்திய பலனாக, கட்சியும் ஆரம்பித்தாகிவிட்டது. திருமணம் ஆனவுடன் முதலிரவுதான் முதல்வேலை என்பதைப் போல், தமிழகத்தில் கட்சி ஆரம்பித்தவுடன் எது முதல் வேலை? பசும்பொன் சென்று சரணாகதி ஆவது! அங்கே சரணாகதி ஆகிய அடுத்த நொடி தன் தாத்தா எனச் சொல்லி பெரியாரை புகழடையச் செய்த சீமானுக்கு திடீரென சினிமாவின் இடைவேளைக் காட்சிகளில் வருவது போல் தன் தாத்தா கெட்டவரெனத் தெரிகிறது. உடனே மேற்கண்ட பேட்டியை கொடுக்கிறார். பெரியார் மீதும் அவர் செய்த திராவிட அரசியல் மீதும் கோபம் கொண்டு, திராவிடம் என்பது ஆரியத்தை விடவும் தமிழர்களுக்கு விரோதமானது எனவும் சித்தரிக்கிறார்.

 'நாம் தமிழர்' கொள்கையில் 'நாம்' என்பதில் தமிழ் நாட்டில் உள்ள, தமிழை தாய்மொழியாய் கொண்டுள்ள பிராமணர்களும் அடங்குவார்களா? அவர்கள் திராவிடர்கள் அல்லாததால் அவர்கள் தமிழர்களும் கிடையாதே, அதனால் அவர்கள் அடங்கமாட்டார்களா? ஒருவேளை அவர்கள் அடங்கவில்லை என்றால் சீமான் செய்வதும் திராவிட அரசியல் தானே! பெரியார் செய்த அதே அரசியல் தானே? நாம் தமிழரில் 'தமிழர்' என்ற வார்த்தைக்கான வரையறையும் விளக்கமும் சீமானின் பேட்டிகளை விட குழப்பமாகவே உள்ளன.

ஈழத்தாய், இலையால் ஈழத்தை மலர வைக்கத் தகுதியுடைய ஒரே தெய்வத்தாய், தமிழச்சி ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி மேடைகளில் இருந்தபடியே கும்பிட்ட கடவுள் சீமான், தேர்தல் முடிந்த பின், தன் பேச்சுக்கள் செல்லுபடியாகாதது தெரிந்த பின், கீற்று பேட்டியில் சொல்கிறார், "தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்."என்று. இதெல்லாம் மேடையில் 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொன்னபோது செலக்டீவ் அம்னீஷியாவால் மறந்து போனார் போல! அடேயப்பா. ராமதாசிடம் ஆரம்ப காலத்தில் அரசியல் கல்வி கற்றதனாலோ என்னவோ குருவை மிஞ்சும் சீடனாக சீமான் வளர்ந்திருப்பதையே இது உணர்த்துகிறது!

தமிழகத்தில் சிறைக்கு சென்றோர் யாவருமே புரட்சியாளர்கள் தானே! வெளியில் வந்தவுடன் ஏற்கனவே பெரியாரையும், திராவிடத்தையும் சீமான் விமர்சித்ததை பல கருப்புச்சட்டைகள் பலமாக எதிர்த்து வருவதால் அதை சமாளிக்க உடனே ஒரு 'பெரியார்-எம்.ஜி.ஆர் வீர வணக்கக் கூட்டம்' போட்டுவிட்டார்! அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதை கவனித்தவர்களுக்குத் தெரியும், பெரியாரைப் பற்றி ஒருநிமிடம் பேசிவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி மீதிநேரம் முழுதும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். விஜயகாந்ததை கருப்பு எம்.ஜி.ஆர் எனச் சொல்லி எம்ஜிஆர் பெயரால் அரசியல் செய்வதைப் போல! ஒன்று மட்டும் நிதர்சனம். தமிழகத்தில் அரசியலில் வளர பெரியாரையும் எம்ஜிஆரையும் பிடித்துத் தொங்கியே ஆக வேண்டும்! சீமான் அழகாக அதையும் செய்கிறார்!

மேலும் பெரியார், எம்.ஜி.யார் வீரவணக்கக் கூட்டத்தில் சீமானின் அதிரடி வசனங்கள் ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த் வசனங்களை விட நல்ல கைத்தட்டல்களும், விசில்களும் பெற்றன. போஸ்டர்கள் கூட கையை முறுக்கி, வானைக் காட்டி, முகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விஜயகாந்த் போல கர்ஜனைகள் காட்டி ஒரு அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவுக்கான அனைத்து 'பில்டப்'களையும் உள்ளடக்கியதாகவே இருந்தன.

மேடையில் நின்றவுடன் விசில் சத்தம் காதைப் பிளந்தது. வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. மேடையில் பூ எறிகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க கூட்டங்களில் கூட மேடையில் பூ எறியப்பட்டு நான் பார்த்ததில்லை. திரையரங்குகளில் மட்டுமே நடக்கும் கூத்து இது! இதையெல்லாம் கவனிக்கும்போது சீமானும் அவரைப் பின்தொடர்பவர்களும் லட்சியமாகக் கொண்டுள்ள தமிழ் தேசியம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளை உருவாக்கி, அதில் அமைக்கப்பெருவதாய் இருந்தால் அது தமிழனுக்கு இந்திய தேசியம் விளைவித்துக் கொண்டிருக்கும் தீமையை விட மோசமானதாகவே இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தர அவர் தயாராகி விட்டார் என்றே அந்தக் கூட்டம் தெள்ளத் தெளிவாய் காட்டியது. தமிழகத்தில் கூட்டணி மாற்றத்துக்கான எல்லா வில்லங்க வேலைகளையும் ஏற்கனவே காங்கிரசு செய்யத்துவங்கி விட்ட நிலையில் நாளை தீடிரென ஜெயலலிதாவும் காங்கிரசும் கூட்டணி போட்டால் என்ன செய்வார் என்பது அவருக்கே வெளிச்சம்!

எல்லாவற்றுக்கும் மேல் ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த போது ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பதவி கேட்டு இரந்து கெஞ்சிய நடிகர் விஜய்யை "விஜய் ஒரு மானமுள்ள தமிழன்" என சீமான் இப்போது விளித்திருப்பதுதான் ஹைலைட்! இவருடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தால் அவர் எவராயினும் மானமுள்ள தமிழன் ஆகிவிடலாம் என்ற அளப்பெரிய கருத்தை உணர்த்தியுள்ளார்!

இப்படி அடுத்தடுத்த பேச்சுக்களாலும், பேட்டிகளாலும் சீமான் சந்தர்ப்ப அரசியலை மிக குறுகிய கற்று தெளிந்துவிட்டார் என்பது தெளிவாகவே நமக்குத் தெரிய வருகிறது.

சிலகாலம் முன்பு சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு கருப்புச்சட்டை அண்ணனுடன் மதுரையில் பேசிக்கொண்டிருந்த போது சீமான் மீதான தன் அதிருப்தியை இப்படிச் சொன்னார், "அவனிடம் பலமுறை சொல்லிவிட்டேன். ஒன்று அரசியல்வாதியாய் இரு இல்லை சினிமாக்காரனாய் இரு. இரண்டையும் கலந்தால் நீயும், கொள்கைகளும் காணாமல் போய்விடும்" என்று. அந்த அண்ணனை இப்போது சீமான் கூட்டங்களில் பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல்தான் நடக்கிறது இப்போது.

சீமானின் ஆதரவாளர்கள் எனது இந்தப் பதிவுக்கு கூட கருத்து ரீதியான மோதலுக்கு வரமாட்டார்கள். என்னை முகநூலில் திட்டியதைப் போல "நீ சினிமா தானே எழுதுவாய்? உனக்கேன் இந்த அக்கறை?" என்றெல்லாம் கேட்பார்கள். எனது ஓரிரு சினிமா கட்டுரைகளை மட்டும் மனதில் வைத்து, நான் எழுதியிருக்கும் ஏராளமான அரசியல் கட்டுரைகளை முன்னர் பாராட்டியதையெல்லாம் தலைவன் வழியில் சுலபமாய் மறந்து போவார்கள். ஆனால் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அவர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான், தான் இயக்கிய திரைப்படத்தில் உதட்டு முத்தம் காட்சி வைத்து படம்பிடிக்கும் அளவுக்கு சினிமாவில் ஊறிப்போன ஒரு சினிமாக்காரனுக்கு திடீரென தந்தை பெரியார் மீதும், பிரபாகரன் மீதும், தமிழ் மீதும் பற்று வரும் போது.... எந்த வகையில் நான் கேள்வி கேட்கும் தகுதியை இழக்கிறேன் என்பதுதான்!

இந்திய போலி தேசியத்துக்கெதிரான போரை அருந்ததிராய் போன்ற கருத்தியலாளர்கள் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் போரின் தமிழகப் பிரதிநிதியாக யாரை நாம் முன்னிறுத்தியிருக்கிறோம் என்பதைச் சற்று நிதானத்துடன் யோசிக்க வேண்டும்.

மிகவும் கவனமாய் சீமானை அணுக வேண்டிய காலம் இது.  சீமானை ஒரு விடிவெள்ளியாகச் சித்தரிப்பதும், அவசரகதியில் இளைஞர்களிடம் அவரைச் சேர்ப்பதும் தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானதாகவே படுகிறது. அவர் பின் இப்போது நிற்கும் இளைஞர்கள் முன் அவர் ஒரு ஹீரோவாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே விசிலடித்து விசிலடித்தே சிந்திக்கும் திறனை இழந்த இளைஞர்களை மேலும் மேலும் சீரழிக்கும் யுக்தியே அன்றி இதில் வேறு கொள்கை இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை!  நிதானித்து இன்னும் கவனிப்போம்! தேர்தலுக்கும் முகமூடிகள் எப்படியும் கிழிந்துவிடும்! .


40 comments:

கும்மி said...

நீங்கள் கருத்து கூறியிருக்கும் விதம் நன்றாக உள்ளது.

--
(உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறம், வாசிப்பிற்கு இடையூறாக உள்ளது. விருப்பமிருப்பின் மாற்றுங்களேன்.)

Suresh Kumar said...

நல்ல அலசல் அருமையான பதிவு

கிணற்றுத் தவளை said...

தலைப்பு பார்த்து கோபம் வந்தது. பின்னர் உள்ளே விஷயம் பார்த்து கதை வேறு என்று தெரிந்ததும் கருத்து எழுதுகிறேன்.. நம் தமிழர் எப்போதுதான் திருந்துவார்களோ. எனது மலேஷிய நண்பர் ஒருவர் கேட்டார் உங்கள் தமிழ் நாட்டில் மக்களுக்கு ஏதும் வேலையே கிடையாதா? எப்படி யார் மீடிங்க் போட்டாலும் லக்ஷம் லக்ஷமாக போகிறார்கள் என்று. அவன் அவனுக்கு ஒரு உருப்படியான வேலை இருந்தால் இப்படி முட்டாள் சினிமாக்காரன் எல்லாம் ஆட்டம் போட முடியும?

☀நான் ஆதவன்☀ said...

செம சூடு :)

இரா.இளவரசன் said...

@கும்மி

மாற்றியிருக்கிறேன். இப்போது நன்றாக படிக்க முடிகிறதா எனச் சொல்லுங்களேன்.

இரா.இளவரசன் said...

@சுரேஷ்
மிக்க நன்றி தோழர்

PRINCENRSAMA said...

//மிகவும் கவனமாய் சீமானை அணுக வேண்டிய காலம் இது. சீமானை ஒரு விடிவெள்ளியாகச் சித்தரிப்பதும், அவசரகதியில் இளைஞர்களிடம் அவரைச் சேர்ப்பதும் தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானதாகவே படுகிறது. அவர் பின் இப்போது நிற்கும் இளைஞர்கள் முன் அவர் ஒரு ஹீரோவாக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.// highlight-க்கு நீங்கள் பயன்படுத்தும் நிறம் வெள்ளையா? சிகப்பா?

இதற்கு மட்டும் வேறு நிறம் கொடுங்கள்.. தனித்துத் தெரியட்டும்!

எஸ்.கருணா said...

சரியான நேரத்தில் வந்திருக்கும் பதிவு. வாழ்த்துக்கள்

இரா.இளவரசன் said...

@கருணா
நன்றி

இரா.இளவரசன் said...

@கிணற்று தவளை
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

இரா.இளவரசன் said...

@ஆதவன்
சூடான மேட்டர் தல! சூடாதன பதில் சொல்ல முடியும்! :-)

இரா.இளவரசன் said...

@ப்ரின்ஸ்
மாத்திர்றேன் இப்போ.

செந்திலான் said...

இந்த பதிவ நெனச்சா தானும் படுக்கமாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

போட்டோக்களில் கொடுக்கப்படும் பில்ட் அப வசனங்களிலும் இருக்கிறது. சீமான் தனது பேட்டியில் சொன்னது நம்பக் கூடியதாக இல்லை. இது போராளிகளை கேவலப் படுத்துவதாகவே அமைந்துள்ளது.
**************
'பேச்சும் ஒரு இராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

raja said...

மீண்டும் ஒரு மிகப்பிரமாதமான கட்டுரையை எழுதியுள்ளீர்கள்....(ராகுல் கான் அடுத்து) இந்த சீமானின் நோக்கம் என் தனிப்பட்ட அளவில் முன்பே அறிந்த ஒன்று. எந்த தர்க்கமும் இல்லாமல் ஈழப்பிரச்சினையை வைத்து பிழைப்பை நடத்துகிறார். அவர்களும் இவரை நம்புகிறார்கள்.(ஆனால் நிச்சியம் அவர் இவரை நம்பமாட்டார் ) ஆனால் வலைப்பூ நண்பர் ஒருவர்... தொ..தொ. எனும் பெயரில் மிக கொடுரமாக இந்தியாவின் சார்பெடுத்து அந்த படுகொலைகளை நியாயபடுத்தி பேசுகிறார்.. நீங்கள் அதை கண்டித்திருக்கவேண்டும் என்பது என் கருத்து.சீமான்,விஜயகாந்த்,இராமதாஸ்,திருமா,வைக்கோ,சரத்குமார். இவர்கள் அனைவரும் மக்கள் கூட்டத்தை சேர்த்து இரண்டு கட்சிகளிடம் நல்ல விலைக்கு விற்க அரசியல் வணிக உத்தியை கையாளுகிறார்கள். என்பது எனது திடமான நம்பிக்கை.

இரவு வானம் said...

நிதர்சனம்

karunanidhi said...

தக்க நேரத்தில் வந்த, யோசிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் அசோக்.

asha said...

pala MGR aargal varisaiyil
SEEMAN - SIRIPU MGR aagividuvvar pola .

இரா.இளவரசன் said...

@karunanidhi
நன்றி.

இரா.இளவரசன் said...

ஆனால் வலைப்பூ நண்பர் ஒருவர்... தொ..தொ. எனும் பெயரில் மிக கொடுரமாக ///
idhu enakku puthiya vishayam nanbaa.. link kodungalen pls

damildumil said...

Very sensible post

malaviga sethurajah said...

தமிழ் ஈழப் போரட்டத்தில் குளிர் காய்ந்த இந்திய அரசியல்வாதிகள் எத்தனை பேர்..சீமான் மட்டும் விதிவிலக்கா...?.மக்களின் நிலையைவிட இவர்களின் நிலை மிகவும் பரிதாபம் ..எத்தனை முறைதான் மாற்றிப் பேசுவது...நாங்கள் இவர்களை நம்பி ஏமாந்த காலம் போய்விட்டது. ஏங்கி கிடந்தது ஏமாந்து சாவதைவிட சிங்களவனிடம் அடிவாங்கி சாவது கெளரவம். கடைசிவரை நம்பினோம்..சுற்றி இருந்தவர் எல்லாம் சிதறிச் சாகும்போதும் அங்கிருந்து யாரவது வருவார்கள் எதாவது நடக்கும் என்று தவித்து கிடந்தோம்.. எவரும் வரவில்லை .எதுவும் உண்மையில்லை .
நான் ஒரு ஈழ இல்லை இல்லை....சிங்கள தேசத்து நங்கை.உங்கள் பதிவுகளை சில காலமாக தொடர்கிறேன் ..சிறப்பான ஆக்கங்கள்.

ஜோதிஜி said...

உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறம், வாசிப்பிற்கு இடையூறாக உள்ளது

raja said...

http://thoppithoppi.blogspot.com/2010/12/blog-post_2806.html..............நீங்கள் கேட்ட லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன்.

நாஞ்சில் பிரதாப் said...

சீமான் என்னை பொறுத்தவரைக்கும் அடுத்த திருமாவளவன் அவ்ளோதான்.

//நாளை தீடிரென ஜெயலலிதாவும் காங்கிரசும் கூட்டணி போட்டால் என்ன செய்வார் என்பது அவருக்கே வெளிச்சம்//

ரொம்ப சிம்பிள். இதேகேள்வியை திருமாகிட்ட கேட்டபோது அவர் சொன்ன பதிலை மறந்துட்டீங்களா.?
நாங்கள் திமுக வுடன் தான் கூட்டணி வைத்திருக்றோம் காங்கிரசுடன் அல்ல. அப்படின்னு சொன்னாரு
இது எப்படி இருக்கு....:))) இந்த பொழப்புக்கு..........

நாஞ்சில் பிரதாப் said...

கமண்ட் மாடரேஷன் போட்ருகிங்க....தமிழுணர்வாளர்கள் மேல் அவ்ளோ பயமா...? :))

Balamurugan,S said...

நல்ல தீர்க்கமான கருத்துக்கள். இன்னும் எத்தனை காலம் தான் “தமிழ் இரத்தமே” என்று கூறி தமிழ்ர்களை உணர்ச்சிவச பட வைத்து அரசியல் செய்ய ஆள் வருவர்கள் என்று தெரியவில்லை. இந்த அரசியல்வாதிகளை நம்புவதை நம் இன மக்களுக்குகாக கண்ணீர் சிந்தி அழுது இருப்பதே மேல். :(

Jawahar said...

இன உணர்வு என்பது தமிழ்நாட்டு மார்க்கெட்டில் எளிதில் விற்பனை ஆகும் சரக்கு. அதை விற்க பெரிய கூட்டமே இருக்கிறது. இந்த காம்பெட்டிடிவ் அட்மாஸ்பியரில் கொஞ்சம் கவர்ச்சியாக விற்க வேண்டாமா?

அது மட்டுமில்லை இந்த ரீதியில் பேசுகிறவர்களுக்கு மாவீரன் பட்டம் தர நம் ஜனங்கள் தயாராக இருக்கிறார்கள்.

http://kgjawarlal.wordpress.com

karthi said...

நல்ல பதிவு அருமையான நடையில்.வாழ்த்துக்கள்.

"ரஜினி என்னப்பா நடிக்கிறாரு? கண்றாவி" எனச் சொன்னால் அவனுக்கு எதிராக அந்த திரையரங்கில் ஒரு எதிர்ப்பலை எந்த வேகத்தில் கிளம்புமோ அந்த அளவுக்கு சீமானைப் பற்றி பேசும்போது-- // இணையதள பின்னூட்டங்கலில் மட்டும் \\ --கிளம்புகிறது.

என்னை பொறுத்தவரை நித்யானந்தாவும் சீமானும் ஒன்றே, முன்னவர் ஆண்மீக வியாபாரி பின்னவர் அரசியல் வியாபாரி.

veera said...

பிரபாகரன் என்ற பெயரை சொல்வதே குற்றம் என்று சொல்லும் நிலை கடந்து எமது தலைவர் பிரபாகரன் எமது அண்ணன் பிரபாகரன் என்று பல நிலைகளில் சொல்லும் அளவுக்கு தமிழ் பேசும் மக்களிடம் விழிப்புணர்வு வந்தமைக்கு மிக முக்கிய காரணம் சீமான் என்பதை இவ்வுலகறியும் நன்றாக... சீமானை தாக்குவதாய் நினைத்து நீங்கள் உங்களையே தாக்கிகொள்கிறீர்கள் என்பதை காலம் உணர்த்தும்...

veera said...

வணக்கத்திற்குரிய அண்ணன் டான் அசோக் அவர்களுக்கு வீரமணி எழுதுவது ...

நலமறிய ஆவல்... அண்ணன் சீமான் அவர்கள் குறித்து தாங்கள் எழுதியதை படித்தேன். பிரபாகரன் என்ற பெயரை சொல்வதே குற்றம் என்று சொல்லும் நிலை கடந்து எமது தலைவர் பிரபாகரன் எமது அண்ணன் பிரபாகரன் என்று பல நிலைகளில் சொல்லும் அளவுக்கு தமிழ் பேசும் மக்களிடம் விழிப்புணர்வு வந்தமைக்கு மிக முக்கிய காரணம் சீமான் என்பதை இவ்வுலகறியும் நன்றாக... சீமானை தாக்குவதாய் நினைத்து நீங்கள் உங்களையே தாக்கிகொள்கிறீர்கள் என்பதை காலம் உணர்த்தும். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சிகளா இல்லை வீரியமிக்க விதையா என்பதை நீங்கள் விரைவில் காண்பது உறுதி...
எனது அண்ணன் சீமானை நானுள்ளிட்ட எனது அண்ணன்மார்களும் தம்பிகளும் வழிநடத்துகிறோம், எங்களை அவர் வழிநடத்துகிறார் என்பதை நீங்கள் உணரவேண்டும். எமது அண்ணனின் பேச்சுக்கள் அனைத்தும் எங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பு என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அன்னை தமிழையும் தமிழீழ விடுதலையையும் எமது அண்ணன் சீமானோடு கைகோர்த்து உங்கள் வழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு கைகோர்த்து ஒரு கையுயர்த்தி நடப்போம்... நீங்கள் காலத்தால் கட்டுண்டு எங்களோடு விரைவில் இணைவீராக...

ஒன்றிணைவோம் நாம் தமிழராய்...

அன்புடன்
வீரமணி...

இரா.இளவரசன் said...

நண்பர் வீரமணிக்கு. என் மீதிலான சாதிய தாக்குதல்கள் நாம் தமிழரில் பெரும்பான்மை கருத்தற்ற விசிலடிச்சான் குஞ்சுகள் என்பதையே நிரூபித்தன. இப்போது நீங்கள் இட்டுள்ள பின்னூட்டம் போன்ற நிதானமான பதிலை உங்கள்கட்சியினர் எனக்கு தர முடிந்திருக்குமேயானால் எனக்கு அந்த எண்ணமே மாறியிருக்கும். ஆனால் இன்னமும் தினமும் சபை நாகரீகமற்ற முறையில் கெட்ட வார்த்தைகளில் என்னை திட்டி வரும் பல பின்னூட்டங்களை நீக்கியபடியே இருக்கிறேன். அவர்கள் மத்தியில் உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். வளர்க. நன்றி.

veera said...

வணக்கத்திற்குரிய அண்ணன் டான் அசோக் அவர்களுக்கு...

நீங்கள் கருணாநிதியை பற்றி ஜெயலலிதாவை பற்றி சீமானை பற்றி எழுதலாம் இன்னும் நிறைய, ஆனால் நீங்கள் தமிழ் தேசிய களத்தில் இறங்கி அல்லது பொது அரசியல் களத்தில் இறங்கி களமாடி இதை சொன்னால் நான் ஏற்றுகொள்வேன்... நான்கு அறைக்குள் இணையத்தில் இருந்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத முடியாது, அது கருத்துரிமையாகாது. என்னை போன்ற பலர் அரசியல் என்ற வார்த்தையை கேட்டாலே அலறி ஓடிய காலம் உண்டு, அது இன்றலவும் உள்ளது என்பதை அறிவீர்கள். அந்த நிலை மாறி என் இன அழிவுகண்டு எந்த அரசியலால் நாங்கள் அழிகப்பட்டோமோ எந்த அரசியலால் எம் மக்கள் கொன்று குவிக்கப்படார்களோ எந்த அரசியலால் எம் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களோ அந்த அரசியலை, ஆம் அதே அரசியல் என்கிற அறிவாயுதத்தை கையில் எடுத்து களமாட வந்து இருக்கும் என்போன்ற தம்பிகளையும் இனிவரப்போகும் தம்பிகளையும் விசிலடிச்சான் குஞ்சிகள் என்று நீங்கள் தீர்மானிக்கமுடியாது. காற்று எங்கள் பக்கம் வீசப்போவது இல்லை, ஏனென்றால் அந்த காற்றாக ஆம் அந்த காற்றாக சூறாவளியாக நாங்கள் சுழலும்போது எம் எதிரிகளும், துரோகிகளும் சுழலில் சிக்கி சாவது உறுதி உறுதி உறுதி... கலைஞர் குற்றவாளி ஜெயலலிதா குற்றவாளி சீமான் குற்றவாளி சொல்லுங்கள் யார்தான் நல்லவர் ? நீங்கள் யாரை நல்லவர் என்று குறிபிடுவீர்கள்? அந்த நல்லவர் வல்லவர் யார்? அவரை நாங்கள் தலைவராக ஏற்றுகொள்கிறோம்.
சீமான் வருவதற்கு முன்பு விடுதலை புலிகளின் நிலை என்ன, அவர்கள் ஒரு தீவிரவாதி, அவன் நாட்டில் இருந்துகொண்டு பிரபாகரன் நாடு கேட்பதா ? இன்னும் எத்தனையோ நிறைய வசனங்களை நீங்கள் கேட்டது இல்லையா? கருணாநிதியின் தம்பிகள் போலும், ஜெயலலிதாவின் பிள்ளைகள் போலும் நாங்கள் என்ன சீமான் அடிமைகளா? அடிமை என்று அடிப்பவனோ அல்லது அடிபடுவபனோ, அடிமையோ அல்லது அடிமைப்படுத்துவபவனோ சொல்லவேண்டுமே தவிர நீங்கள் அடிமை என்று எப்படி சொல்லமுடியும். சீமான் வருவதற்கு முன்பு எத்தனையோ புலி ஆதரவாளர்கள் வந்தார்களே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது ? மூன்றாண்டுகளுக்கு முன் நீங்கள் பிரபாகரன் என் அண்ணன் என்றோ தலைவர் என்றோ சொல்லமுடியுமா? பிரபாகரன் படம் ஏந்த முடியுமா உங்களால்? போய் இருப்பீர்கள் நீங்களும் பொடாவில்... சீமான் எதற்காக எல்லாம் கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாதா? அதை எல்லாம் நீங்கள் தட்டிகேட்டதுஉண்டா? இப்போது என்ன பிரச்சினை சீமான் வளர்கிறான் அதுதான், அதுமட்டும் தான்...

அண்ணன் அவர்களே உங்களை போன்ற கருத்து எழுதும் ஆசாமிகள் ஏன் களமாட அஞ்சுகிறீர்கள், களமாடி சொல்லுங்கள் நாங்கள் கலங்கம் என்று... அதுவரை களமாடும் எங்களை கலங்கப்படுத்தவேண்டாமே...

நல்லவர் யாவரும் ஒதுங்கிக்கொண்டால் நரிகளின் நாட்டமை தொடங்கிவிடும்...

அதற்குமுன் ஒன்றிணைவோம் நாம் தமிழராய்...

அன்புடன்
வீரமணி...

Anonymous said...

Sariana pathil veeramani...

veera said...

மிக்க நன்றி..

Anonymous said...

neengal mudalil enna muyarchi etutheerkal seemani kurai solluvatharkku. bloggil yaar yaar methenum ethuvakilum ezhuthalaam. veeramani sonnathu pol mudhalil kalamaadivittu appuram ezhuthungal

"Veeramani Neengal kooriyathu 1000% sari.not 100%"

Anonymous said...

அரசியலில் இருந்தால் தான் அரசியல்வாதிகளை பற்றி பேச முடியுமா என்ன? ஒட்டு போடுகிற அனைவருக்கும் அந்த உரிமை இருக்கிறது.
நான்கு சுவற்றுக்குள் இருந்து எழுதினாலும் தவறு தவறுதான். எந்த அரசியலால் மக்கள் கொன்று குவிக்க பட்டனரோ அந்த அரசியலை வைத்து யாராலும் எதையும் மாற்ற முடியாது. அரசியல் சுறாவளி என்று சொல்லி மறுபடியும் அதே அரசியல் சாக்கடையில் தான் விழுகிறார் சீமான்.

சீமான் இயக்கம் ஆரம்பிபதற்கு முன்னும் சரி பின்னும் சரி, விடுதலை புலிகளுக்கு தமிழகத்தில் அதே நிலைமை தான். சீமான் இயக்கம் ஆரம்பித்து அம்மையாரோடு கூட்டணி வைத்து என்ன மாற்றம் கொண்டு வர முடியும்? அம்மையார் என்றுமே விடுதலை புலிகளை ஆதரித்தது இல்லை. ஈழ தமிழர்
களுக்கு இங்கே இருந்து எதுவுமே செய்ய முடியாது. இந்திய அரசியல் நிலைமை அப்படி.

அரசியல் சென்றுதான் இந்த கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை, நெருப்பு சுடும் என்று கை வைத்து பார்க்க தேவை இல்லை.

veera said...

அரசியலால் முடியாது என்றால் வேறு எதனால் முடியும் ? ஆயிதம் ஏந்துவதும் தவறு, அரசியல் ஏந்துவதும் தவறு, வேறு எப்படி போராடுவது ? அரசியலால்
முடியாது என்றால் ஏன் அரசியல் வாதிகளை சாடுகிறீர்கள்? அவர்களால் தான் எதுவும் முடியாதே? அண்ணன் வோட்டு போடுறீங்களா? இல்லையா? அரசியலில் இருந்து சொல்லவேண்டாம் ? வேறு எங்கிருந்து சொல்வது? அண்ணன் எந்த பக்கம் இருந்து சொல்றீங்க ? சொல்லுங்க அண்ணன் வழி சரின்னா நாங்களும் வருகிறோம். அண்ணன் எப்படி கேட்டாலும் வழி சொல்ல தயக்கப்படுறாரு? இல்லை அண்ணன் அவர்களுக்கு தெரியலையா? ஈழத்தமிழர்களுக்கு இங்கு இருந்து எதுவும் செய்யமுடியாதுன்னா எங்கு இருந்து செய்யலாம்? போராட்டம் என்பதை எங்கிருந்தும், எப்போதும் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள போராட்ட வரலாறுகளை புரட்டுங்கள் அண்ணன் அவர்களே, சில துரோகிகளின் வாடை உங்கள் மீது பட்டுவிட்டதால் என்னவோ அறியாமையில் அகப்பட்டுள்ளீரோ என தோனுகிறது. இந்திய அரசியல் நிலைமை அப்படித்தான் என்றால் அந்த அரசியல் நிலைமையை நிர்ணயிப்பது யார் என்பது உங்களுக்கு தெரியாதா? அந்த அரசியல அப்படியே விட்டுட்டு அண்ணன் ஏன் வோடுறீங்க? ஓ நீங்க அந்த குரூப்பா?

Anonymous said...

good article

RAJA said...

இந்திய போலி தேசியத்துக்கெதிரான போரை அருந்ததிராய் போன்ற கருத்தியலாளர்கள் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் போரின் தமிழகப் பிரதிநிதியாக யாரை நாம் முன்னிறுத்தியிருக்கிறோம் என்பதைச் சற்று நிதானத்துடன் யோசிக்க வேண்டும்.
most impressive and thought provoking lines..

Related Posts Plugin for WordPress, Blogger...