Tuesday, December 28, 2010

பால்பூத் பூச்சாண்டி


மிகவும் முக்கியமான ஒருவரை என் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். அவர் இல்லையென்றால் இந்நேரம் நான் எங்காவது கூலி வேலையோ, அல்லது பிச்சை கூட எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். இல்லை என் வாழ்க்கையில் எந்த பாதிப்புமே இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஒரிருமுறை மட்டுமே என்னுடன் பேசியுள்ள அவருடனான எனது உறவை என்னால் விளக்க முடியவில்லை. ஒருவேளை இருபது வருடங்களுக்கு முன்னால் உங்களைக் கூட்டிச் சென்றால் உங்களுக்குப் புரியலாம். நான் அவரின் இருப்பிடம் செல்ல எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். என்னுடன் பயணியுங்கள்.

அம்மா “பால்பூத்” என்று சொன்னாலே இதயம் வேகமாய் அடிக்கும். முகம் வியர்க்கும். எப்படியாவது உயிரைக் கொடுத்தாவது அம்மாவை அங்கு போகாமல் தடுத்துவிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். சில நேரங்களில் எனது மற்றும் அர்ச்சனாவின் அழுகைக்காக அம்மா போகாமல் கூட இருந்திருக்கிறார்கள். மற்ற நேரங்களில் தேவையான அளவு அழுகை வராததால் நாங்கள் தோற்று விடுவோம். அம்மாவும் பால்பூத்துக்கு சென்றுவிடுவார். பின் அவர் வீடு திரும்பும்வரை நானும் தங்கையும் எதேனும் சாமி படம் முன்பு உட்கார்ந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருப்போம்., அம்மா பத்திரமாக வீடு சேர வேண்டுமென. எங்கள் பயத்துக்கான காரணம் அவர். அவர் பால்பூத்தில்தான் இருந்தார். 

அவரது வீடு அந்த நீலக்கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த பால்பூத் தான். காலையிலும் மாலையில் பால் விற்பனை செய்வார். மீதி நேரங்களில் அங்கேயே அமர்ந்து யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். பல நேரங்களில் எதேனும் சிறுவனோ சிறுமியோ தான் அங்கு இருப்பார்கள். பெரும்பாலும் அழுதுகொண்டுதான் இருப்பார்கள்.

அப்போது எனக்கு ஒரு எட்டு வயது இருக்கலாம். அவருக்கு கண்ணிமை தவிர்த்து முகத்தில் இருக்கும் முடிகள் வெள்ளைவெளேரென தும்பைப் பூ போல் இருக்கும். பனைமரம் போன்ற உயரமும் மெலிந்த ஆனால் திடனாப தேகமும் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு நட்பு பாரட்டவல்ல முகம் அவருக்கு நிச்சயமாய் கிடையாது. பேய் படங்களில் வரும் சாருஹாசன் போல ஒரு பயத்தை வரவழைக்கும் தோற்றம் அவருடையது. வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் மட்டும் தான் எப்போதும் அவரது உடையாக இருந்தது. பார்ப்பதற்கு வெள்ளைவேட்டி போல் இருந்தாலும் சகதியில் புரட்டி எடுத்து பின் துவைத்து உடுத்திய வண்ணத்தில் தான் அவர் உடைகள் எப்போதும் தோற்றமளித்தன.

பால் பூத் பக்கம் அம்மாவுடன் கைப்பிடித்து நடக்கும் போதெல்லாம் தன் கண்களை வெகுவாய் சுருக்கி என்னையும், தங்கை அர்ச்சனாவையும் பார்ப்பார். தானாக என் கை அம்மாவின் கைகளை இருகப்பற்றும். தங்கை பயத்தில் குதிக்க ஆரம்பித்துவிடுவாள். அந்தப்பக்கம் போகும் போதெல்லாம் எனக்கு கையும், அர்ச்சனாவுக்கு முகமும் வியர்க்கத் துவங்கி விடும். எங்கள் தொல்லை தாங்காமல் பலமுறை வாங்க வேண்டியதை வாங்காமல் பலமுறை வேகமாக வீடு திரும்பியிருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் கல்லாகி விடுவோம் என சில சிறுவர் கதைகளில் வருமே, அதைப் போலத்தான் இருக்கும் எங்கள் நடை. அம்மாவை இழுத்துக்கொண்டு திரும்பியே பார்க்காமல் வேகமாக நடப்போம். வெகுதூரம் சென்றதும் ஒரு வளைவு வரும், அந்த வளைவின் போது மட்டும் கொஞ்சமாக திரும்பி பால்பூத்தைப் பார்ப்போம். “மறுபடியும் வராமயா போயிருவ? அப்ப பாத்துக்கறேன்” எனச் சொல்வதைப் போல அதே இடத்தில் நின்று அவர் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இப்படியாகப்பட்ட அவருக்கும் எங்களுக்குமான உறவு எங்கள் வீட்டில் ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்பட்டு வந்தது. அர்ச்சனா சாப்பிட அடம் பிடிக்கும் சமயங்களில் எல்லாம் அம்மாவின் பிரம்மாஸ்திரம் பால்பூத் பூச்சாண்டிதான். யார் முதலில் ‘பால்பூத் பூச்சாண்டி’ வார்த்தையை கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை. அநேகமாக அம்மா அதை ஒருமுறை அர்ச்சனாவிடம் சொல்லி பின் அர்ச்சனா அந்த வார்த்தையை பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். என்னென்ன வகை பூச்சாண்டிகளையோ அம்மா சொல்லிப் பார்ப்பார். கடைசியாக வேறு வழியே இல்லையென்றால் தான் ’பால்பூத் பூச்சாண்டி’யை துணைக்கு அழைப்பார். அவர் பேரை சொல்லும் போதெல்லாம் அர்ச்சனா வேகமாக சாப்பிட்டுவிடுவாள் என்றாலும் அன்று முழுதும் ஒருவித பயத்தினோடே இருப்பாள். சாப்பிட்டு முடித்தும் கூட பால்பூத் பூச்சாண்டி அவள் மனதில் நின்று பயமுறுத்திக் கொண்டிருப்பார் என அம்மாவுக்குத் தெரியும். அதனால் அம்மாவும் அதை பரவலாக உபயோகிப்பதில்லை. எப்போதாவது அர்ச்சனாவின் பிடிவாதம் கைமீறி போகும் போதுதான்.

பால்பூத் பக்கம் நாங்கள் போகும் போதெல்லாம் அவர் கண்களை சுருக்கி எங்களைப் பார்ப்பது எங்களின் பயத்திற்கு உரம் போட்டிருந்தது. இது போல பால்பூத் பூச்சாண்டி எங்களை சகல விஷயங்களிலும் ஆட்கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு வழக்கமான வேலை நாளில் கவர்னர் இறந்து போய் விட்டார். அவர் மரணம் அவர் குடும்பத்தை பாதித்ததை விடவும் என்னையும் அர்ச்சனாவையும் நேரடியாக பாதித்தது. அது உண்மையோ என்னவோ, அன்று நாங்கள் அனுபவித்த பயத்தை நினைத்தால் இன்றுகூட எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

அந்த பிரச்சினைக்குரிய பால் பூத்துக்கு அருகில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நிறுத்தம் இருந்தது. எங்கள் வீட்டில இருந்து ஒரு கீமீ இருக்கலாம். தினமும் காலையில் அம்மா தான் எங்களை வீட்டில் இருந்து அந்த நிறுத்தத்துக்கு கூட்டி வருவார். பின் பேருந்தில் ஏறி சென்றுவிடுவோம். மாலையில் பேருந்து சரியாக 4 மணிக்கு எங்களை இறக்கி விடுவதற்காக அந்த நிறுத்தத்துக்கு வரும். அம்மாவும் சரியாக அங்கே வந்து காத்திருந்து எங்களை அழைத்துச் செல்வார். 

அன்று காலைகூட அப்படித்தான் நடந்தது. வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி நானும் அர்ச்சனாவும் பள்ளி பேருந்தில் ஏறி சென்று விட்டோம். அரை மணி நேரத்துக்கு முன் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்த, ஆளுனர் மரண செய்தியால் பள்ளிக்கு விடுமுறை விட்டிருந்தார்கள். பேருந்தை மாணவர்களை ஏற்றிவர அனுப்பிய பின்னே பள்ளிக்கு இந்தச் செய்தி கிடைத்திருந்ததால் தான் இந்த நிலை. அதனால் பள்ளி நிர்வாகம் மீண்டும் எங்களை வந்த பேருந்திலேயே ஏற்றி அவரவர் நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு நடத்துனரை பணித்து எங்களை அனுப்பிவிட்டது.

பேருந்தில் இருந்த எங்களுக்கு பயங்கர மகிழ்ச்சி. நடத்துனர் என்னைக் கேட்டார்,
“தம்பி பத்திரமா தங்கச்சிய கூட்டிகிட்டு வீட்டுக்குப் போயிருவேல?”
“அதெல்லாம் போயிருவேண்ணே”எனச் சொன்னேன். என் மீது சுமத்தப்பட்ட முதல் பொறுப்பு அது. நடத்துனரின் வார்த்தை முழுதாய் கேட்கும் முன்னரே மிகுந்த மகிழ்ச்சியுடன் பத்திரமாக தங்கையை வீட்டில் சேர்க்கத் தயாரானேன். பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் என்னையும் அர்ச்சனாவையும் நடத்துனர் இறக்கிவிட்டுவிட்டு,
 “வழில யாரு கூடயும் பேசாதீங்க. நேரா வீட்டுக்குதான் போகனும். நாளைக்கு ஸ்கூல் இருக்குனு அம்மாகிட்ட சொல்லிரு”எனச் சொல்லி முடித்தவுடன் பேருந்து கிளம்புவதற்காக விசில் அடித்தார்.

நானும் அர்ச்சனாவும் முதல் முறையாக தனியாக சாலையில் நின்றிருந்தோம். அர்ச்சனா என் கையை இறுகப் பிடித்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் கொஞ்சம் கூட பயமோ கலவரமோ இல்லை. முழுதாக என்னை நம்பியிருந்தாள். அதுவே எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால் பத்திரமாக வீடு சென்று சேருவதில் ஒரு சின்ன பிரச்சினை இருப்பதை அந்த நொடியில் தான் உணர்ந்தேன்.

தனியாக நடக்கவும், எவரையும் எதிர்கொள்ளவும் தங்கையின் நம்பிக்கை தைரியம் கொடுத்திருந்தாலும் வீட்டிற்கு செல்ல வழி தெரிய வேண்டுமே!! எப்போதும் அம்மாவுடனேயே வந்திருந்ததால் எது சரியான வழி என குழப்பியது எனக்கு. அர்ச்சனாவிடம் விஷயத்தைச் சொன்னேன், “அப்ப்ப்படியே நேரா போலாம்ணா.. நீ போ நான் வழி சொல்றேன்”எனச் சொல்லி சரியாக வீட்டிற்கு செல்லும் வழிக்கு எதிர்திசையில் இருந்த வழியைக் காட்டினாள். என்ன செய்வதென்று தெரியாமல் எதிரில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தைப் பார்த்தேன். தெரிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் யாருமே இல்லை. நிமிர்ந்து பார்த்த போது பால்பூத் பூச்சாண்டி எங்களுக்கு மிக அருகில் நின்று எங்களை உற்றுபார்த்துக்கொண்டிருந்தார்.

அர்ச்சனா அழுகவில்லை. உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தாள். கைகளை அவள் பிடித்தபிடி இன்றும் வலிக்கிறது எனக்கு.
அவர் பேசினார், “என்ன?”
“ஸூகூல் லீவு. வீட்டுக்கு போத் தெரில”
“பின்னால வா” எனச் சொல்லிவிட்டு முன்னே வேகமாக நடக்க ஆரம்பித்தார். வேறு வழியே இல்லாததால் அவரைப் பின் தொடர முடிவு செய்தேன். அர்ச்சனா அழுதுகொண்டே “அண்ணா வேணாணா.. அம்மா வர்ற வரைக்கும் இங்கயே நிக்கலாம்ணா” என்றாள்.
“அண்ணே இருக்கேன்ல. அம்மா வர்றதுக்கு சாயங்காலம் ஆகும்டா. அண்ணே கைய இறுக்கமா புடிச்சுக்க. நான் பார்த்துக்குறேன். சரியா?” என்றேன் “ம்ம்ம்”எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்துக் கொண்டாள். இருவரும் அவரை தொடர ஆரம்பித்தோம்.

வேகமாக நடந்துகொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைத் திரும்பிப் பார்த்தார். அவரது கைகளை பின்னால் கட்டியிருந்தார். முதுகில் இருந்து கொஞ்சம் முன்னே தள்ளி அவர் முகம் சாலையை எட்டிப் பார்த்தபடி இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான தூரம் அதிகமாவதாய் நினைத்தால் அவரின் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். அவர் அவ்வப்போது திரும்பிப் பார்ப்பது அதற்காகத்தான் என இப்போது எனக்கு புரிகிறது என்றாலும், அப்போது நானும் அர்ச்சனாவும் அந்த இடைவெளியை வேண்டுமென்றேதான் அதிகமாக்கினோம். இப்படியே ஒரு கீமீ தூரம் நடந்து எங்கள் வீடு இருக்கும் மூன்றடுக்கு மாடி கட்டிட வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

எங்களை உற்று பார்த்தபடி,
“இதான?” என்றார்.
“ஆமாம்”
“நல்லாத் தெரியுமா?”
“தெரியும். அம்மா சேலை காயிதுள்ள அந்த பால்கனி தான்.”
“சரி. போங்க. போயிட்டு பால்கனில இருந்து எட்டிப் பாருங்க” என்றார்.

நானும் அர்ச்சனாவும் வேகமாக படியில் ஓடினோம். அம்மா ஆச்சரியத்துடன் பார்த்தார். “டேய் யாரு கொண்டு வந்து விட்டாடா உங்கள?”என்றார். நானும் அர்ச்சனாவும் கண்டுகொள்ளவே இல்லை. ஸ்கூல் பேக்கை கீழே போட்டுவிட்டு வேகமாக பால்கனிக்கு ஓடினோம். கிரில் ஓட்டைகளின் நடுவே அவர் எங்கள் பால்கனியை பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அர்ச்சனா அவரைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்தாள். எங்களுக்கு பின்னால் அம்மாவும் நின்றிருந்தார். எங்களையும் அம்மாவையும் பார்த்துவிட்டு, வந்த வழியில் படு வேகமாக நடக்க ஆரம்பித்தார் அவர்.

இதற்கு பின் அம்மாவின் “பால்பூத் பூச்சாண்டி” ஆயுதம் அர்ச்சனாவிடம் செயலிழந்து போனது. ஒருமுறை அம்மா அதை உபயோகித்த போது “பூச்சாண்டி இல்லம்மா.. தாத்தா” என்றாள் அர்ச்சனா. அம்மாவும் நானும் சிரித்தோம். பால்பூத் பூச்சாண்டி பயம் மட்டுமல்லாது அடுத்தது எல்லா பூச்சாண்டிகள் மீதான பயமும் அர்ச்சனாவுக்கு போய்விட்டது!

பின்னாட்களில் பால்பூத் எங்களுக்குப் மிகவும் பழகிப் போனது. எனது பிஎஸ்சி சேம்ப் சைக்கிள் செயின் அறுந்து போனபோது அவர்தான் மாட்டிக் கொடுத்தார். அவர் அருகில் இருந்து பார்த்த போது காலை மாலை விற்பனை நேரம் தவிர பிற நேரங்களில் சும்மாவேதான் இருந்தார். அந்த வழியில் போகவரும் பிள்ளைகளுக்கு சைக்கிள் ரிப்பேர் செய்வது போன்ற வேலைகளை செய்வதே அவர் பிரதான கடமையாய் இருந்தது.
சில வருடம் கழித்து நாங்கள் வேறு இடத்திற்கு வீடு மாற்றி விட்டோம். அங்கே புதிய பால்பூத் ஒன்று இருந்தது. ஆனால் பூச்சாண்டியோ, தாத்தாவோ அங்கே யாரும் இல்லை. எல்லாரிடமும் எரிந்து விழும் ஒருவன் தான் இருந்தான். பால்பூத்துக்கு ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையில் இருந்த முக்கியத்துவத்தை மறக்க ஆரம்பித்து, காலப்போக்கில் அவரையும் மறக்க ஆரம்பித்துவிட்டோம். இருபது வருடங்கள் ஓடி விட்டது.  


இதோ பால்பூத் வந்துவிட்டது. இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறது. அவரை கடைசியாய் ஒரு பண்ணிரண்டு பதிமூணு வருடங்களுக்கு முன்னால் பார்த்திருப்பேன். என்னை அடையாளம் தெரியுமா எனத் தெரியவில்லை. அதோ. அவரைப் பார்த்துவிட்டேன். எங்கோ வேகமாக நடக்கிறாரே.. ஆனால் முன்பிருந்த வேகம் இப்போதில்லை. உடல் சற்று தளர்வாய் தெரிகிறது. ஆனால் கைகளை அதே போல் பின்னால் இறுக்கமாய் தீர்க்கமாய் கட்டியிருக்கிறார். அதே வெள்ளை உடைதான் உடுத்தியிருக்கிறார். அதே உடையாய் இருக்காது. அதே நிறத்தில் வேறு உடை. கார் கண்ணாடியை இறக்கிவிட்டுவிட்டு காரில் இருந்தபடியே கவனிக்கிறேன்.

ஒரு ஆறு வயது பையன் கையில் பம்பரத்துடன் கயிற்றை சுற்ற தெரியாமல் தப்புத்தப்பாய் சுற்றிவிட்டு நிற்கிறான். அவர் வேகமாக நடந்து வந்தது அவனை நோக்கிதான். அவன் கையில் இருந்த பம்பரத்தை வாங்கி நிதானமாய் சுற்றுகிறார். கையில் இருந்து பம்பரம் இப்போது தெருவில் இறங்கி சுற்றுகிறது. பம்பரத்தை கவனிக்காமல், சந்தோஷமாய் சிரிக்கும் அந்த பையனின் முகத்தை, தன் கண்களைச் சுருக்கி உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பால்பூத் பூச்சாண்டி’. அந்தப் பையன் சுற்றிமுடித்த பம்பரத்தை எடுத்து அவர் கையில் திணிக்கிறான்.

காரில் அமர்ந்து நான் இவை அனைத்தையும் கவனிப்பதை பார்த்துவிட்டார். அவரது கண்கள் வெகுவாகச் சுருங்கி என் முகத்தை உற்று நோக்குகின்றன. அவருக்கு என்னை அடையாளம் தெரிந்துவிட்டது. என்னைப் பார்த்து லேசாக சிரிக்கிறார். முதல்முறையாக அவர் முகத்தில் சிரிப்பை இப்போதுதான் பார்க்கிறேன். புன்முறுவலுக்கும் சும்மா இருத்தலுக்கும் இடைப்பட்ட சிரிப்பு அது. நானும் லேசாக சிரிக்கிறேன். இப்போது அவர் மீண்டும் பம்பரத்தில் மூழ்கி விட்டார்.

அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அதிமுக்கியமான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் பால் பூத் பூச்சாண்டி. எனக்கு மனம் நிறைய சந்தோஷமாய் இருக்கிறது. அவரை தொல்லை செய்ய விரும்பவில்லை. சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பிவிடுவேன். இந்த தெருவில் இருக்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். கடவுளை விடவும் நல்ல மனம் படைத்த பூச்சாண்டி அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.  

6 comments:

Nagasubramanian said...

// கடவுளை விடவும் நல்ல மனம் படைத்த பூச்சாண்டி அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்//
so touching it was!

Anonymous said...

Hi Friend,

This is Manivannan.P, am an S/W engineer and emerging short film maker...
Am passion about films and i like to make your story "pal booth poochandi" as short film..

I need your permision.

Please reply back to my mail id.
maniabap@gmail.com.

Am in your face book list too.

Regards,
Mani

hey itz me kuruvu said...

பால்பூத் பூச்சாண்டி ..தலைப்பில் பூச்சாண்டி தனம் காண்பித்து கதையில் பூச்செண்டு வைத்து, புன்முறுவலுக்கும் சும்மா இருத்தலுக்கும் இடைப்பட்ட சிரிப்பொன்றை கொடுத்து,படிப்பவர்கள் உணர்வுடன் கதை கலந்த விதம் அருமை ...எழுத்துகளில் பன்முகம் காட்டி , ரசிக்க வைக்கும் படைப்புக்களை மென் மேலும் எங்களுக்கு தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும் இந்த கதையின் மூலம் ஓவருவரையும் அவர்கள் பால்ய காலத்து நினைவுகளுக்கு ஒரு முறையேனும் மீட்டு சென்ற உங்கள் சிந்தனைக்கும் எனது வாழ்த்துக்கள் பல...

Ilanchezhian said...

poochandi thatha aanathum pin KADAVULUKKU MEYLaga aanathum super.. ANBE SIVAM...
// இதான?” என்றார்.
“ஆமாம்”
“நல்லாத் தெரியுமா?”
“தெரியும். அம்மா சேலை காயிதுள்ள அந்த பால்கனி தான்.”
“சரி. போங்க. போயிட்டு பால்கனில இருந்து எட்டிப் பாருங்க//
SEMA nae....

Shakthiprabha said...

நல்ல கதை. அருமையான நடை. எனக்குப் பிடித்த இப்பதிவை
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

HARI PRASAD said...

Itha oru nimisham short film ah kooda edukalam.. avlo nalla solli irukeenga.. super ah iruku :)

Related Posts Plugin for WordPress, Blogger...