Sunday, December 19, 2010

ஈசன் திரைப்படம் சறுக்கியது எங்கே?

ஈசன் படத்தை பலர் ஏற்கனவே விமர்சித்துவிட்டார்கள். ஏகபோகமாக சுப்ரமணியபுரம் பெற்ற வரவேற்புக்கு நேரெதிரான வரவேற்பை பெற்றுள்ளது. பல தோல்விப் படங்களைப் போல் அல்லாது ஈசனில் தோல்விக்கான காரணங்கள் மிகவும் தெளிவாக உள்ளதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். 
கதை:  ஒரு அப்பாவிப் பெண் நகர வாழ்க்கைக்குள் நுழைகிறார். தீய நண்பர்களின் பழக்கம் கிடைக்கிறது. வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. பின் தற்கொலை. அதன் பிறகு அந்தப் பெண்ணின் தம்பி, தன் அக்காவை சீரழித்தவர்களை பழி வாங்குகிறார். நாவரசு கொலைவழக்கு நடந்ததில் இருந்து பல காலமாக பலர் தோளில் தூக்கி சுமக்கும் கதையை முதலில் தேர்ந்தெடுத்ததே சசிகுமார் தரத்துக்கு தேவையில்லாதது. கதைக்கா பஞ்சம்? உலகில் உள்ள ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொருத்தர் பார்க்கவும் ஒவ்வொரு மாதிரி சினிமா எடுக்கலாம். கதையை சசிகுமார் தேடக் கூட இல்லை. சென்னையின் நகர வாழ்க்கையை மையமாய் வைத்து கதை எடுக்க முடிவு செய்து, பின் ஒவ்வொன்றாக பிண்ணி கதை செய்திருக்கிறார்.
திரைக்கதை: கதை இல்லாம படம் எடுக்கலாம் ரொம்ப சுலபம். ஆனால் திரைக்கதை இல்லாமல் எடுக்கவே முடியாது. திரைக்கதை தான் எந்த ஒரு படத்தின் முதுகெலும்பு. ஈசனில் முதுகெலும்பு மிகவும் வளைந்துள்ளது. ஈசனின் கதை வழக்கமானதாக உள்ளது என்பதால் திரைக்கதையிலும், பாத்திரப்படைப்பிலும் சில வித்தியாசங்கள் செய்துள்ளார் சசிகுமார். வழக்கமாக அப்பாவிப் பெண்கள் தான் நம் படங்களில் ஏமாற்ற படுவார்கள், கொல்லப்படுவார்கள். ஆனால் ஈசனில் ஆண்களை கட்டித் தழுவி ஆடிய பெண் முதல் காட்சியில் ஈவ் டீசிங்கால் கொல்லப்படுகிறார். அதே போல் அபிநயா கதாபாத்திரமும், தன் நண்பர்கள் நடத்தி வரும் நகர வாழ்க்கையான  பப், குடி, கூத்து போன்றவற்றை விரும்பி ஏற்கிறார், பழகிக் கொள்கிறார். ஒரு பாத்திரம் வில்லன்களால் கொல்லப்படும்போது அந்த பாத்திரத்தின் மேல் நமக்கு இரக்கம் ஏற்பட்டால் தான் நம்மால் வில்லன்களை கெட்டவர்களாக பார்க்க முடியும். வில்லன்களை கெட்டவர்களாக பார்க்கமுடிந்தால் தான் கதையுடன் ஒன்ற முடியும். ஆனால் ஈசனின் திரைக்கதை அதைச் செய்ய மறுக்கிறது. படத்தில் நடக்கும் இரண்டு கொலைகளுமே நம் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திரைக்கதையின் மிகப்பெரிய சறுக்கல் இது.

முதல் பாதியில் ஒரு காட்சி விட்டு ஒரு காட்சி 'பப்'பில் எடுக்கப்பட்டுள்ளது எரிச்சலாக இருந்தது. படப்பிடிப்புக்கு செல்லும் முன் ஸ்டோரிபோர்டில் முழு திரைக்கதையையும் செய்துவிட்டு போனால் கிட்டத்தட்ட 90% வேலை முடிந்துவிடும். பப் காட்சிகள் போன்ற திரும்ப திரும்ப வரும் காட்சிகளை ஸ்டோரிபோர்டிலேயே மாற்றி விடலாம். நேரடியாக படப்பிடிப்பிற்கு செல்வதால் இந்த குறைகளை இயக்குனர்களால் கண்டுபிடிக்கமுடிவதில்லை.

மேலும், ஒரு சிறந்த படத்தில் இருந்து எந்த காட்சியை நீக்கினாலும் அந்தப் படம் அர்த்தமற்றதாய் ஆகிப்போகும். உதாரணமாக காட்ஃபாதர் படத்தை சொல்லலாம். அந்தப் படத்தில் எந்தக் காட்சியை நீக்கினாலும் படம் நகராது. ஆனால் ஈசனில் தேவையில்லாத காட்சிகள் ஏராளமாய் இருப்பதால், பல பாத்திரங்கள் வலுவிழந்து விட்டன.


இயக்கம்: ஈசன் சசிகுமார் இயக்கிய படம் போல் இல்லை. எதோ amateur இயக்குனர் இயக்கியது போல் இருந்தது. உதாரணமாக அமைச்சரும், கமிஷனரும் பேசும் காட்சியில் காமிரா அமைச்சர் முகத்தில் ஒரு நொடி நிற்கிறது, பின் மெதுவாக கமிஷனர் முகத்துக்கு தாவி ஒரு நொடி சென்ற பின் அதுவரை அமைதியாய் இருந்த கமிஷனர் சட்டென்று செயற்கையாக பேச ஆரம்பிக்கிறார். இயக்கத்தில் மிகப்பெரிய ஓட்டை இது. நல்ல இயக்குனருக்கு இது அழகல்ல. முதல் பாதியில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுமே மிகவும் மட்டமானவை. சசிகுமார் படப்பிடிப்பின் போது விடுமுறையில் சென்றது போல் தான் இருந்தது எல்லா காட்சியும்.

நடிகர்கள்: புது நடிகர்களாக இருப்பது படத்துக்கு மிகப்பெரும் ஆபத்து என்பதற்கு ஈசன் ஒரு உதாரணம். வைபவ், வைபவின் காதலி அபர்ணா, வைபவின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அழகப்பன், அபர்ணாவின் அப்பா கதாபாத்திரம் ஆகியோர் நடிக்க முயற்சிக்க கூட இல்லை. ஸ்டில் காமிராவுக்கு போஸ் கொடுப்பது போல் நிற்கிறார்கள். பல காட்சிகளில் சிறப்பாய் நடித்திருந்த சமுத்திரக்கனி கூட ஒருசில காட்சிகளில் வெறுமனே நிற்கிறார்.  இயக்குனரின் தவறு என்றே தோன்றுகிறது.

படத்தில் நல்ல விஷயங்கள்:
பப் வாழ்க்கையை சரியாக படம் பிடித்தது, முதல் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி போன்ற சில இடங்களில் சசிகுமார் தெரிகிறார். படத்தின் மாபெரும் பலம் அபிநயாவின் தம்பியாக நடித்துள்ள பிள்ஸ்ஸி. பட்டையக் கிளப்பியுள்ளார். இரண்டாவது பாதியை முழுதாய் சுமப்பது அவரும் சமுத்திரக்கனியும் தான்.

சறுக்கல்:
சுப்பிரமணியபுரம், நாடோடிகள் தந்த வழக்கத்துக்கு மாறான திடீர் புகழும், ரசிகர் ஆதரவும் சசிகுமாரை ஏனோதானோ என ஒரு படம் எடுக்கவைத்து விட்டதோ என்ற ஐயம் தான் மிஞ்சுகிறது. நம் இயக்குனர்கள் அனைவருமே ஒரு படம் சம்பந்தப்பட்ட எழுத்துவேலைகள் அனைத்தையுமே தங்கள் தோள்மேல் போட்டு சுமப்பதால் தான் எந்த துறையிலுமே முத்திரை பதிக்க முடியாமல் போகிறது. ஆலிவுட் போல திரைக்கதைக்கென தனி கலைஞர்கள் எப்போது தமிழகத்தில் உருவாகிறார்களோ அப்போதுதான் சினிமா தரமும், இயக்குனரின் திறமையும் உச்சாணிக்கு போகும். அதுவரை திண்டாட்டமே. அடுத்த படத்திலாவது திறமையான இயக்குனர் சசிகுமார் நல்ல படத்தை தருவார் என நம்புவோம். 
Related Posts Plugin for WordPress, Blogger...