Monday, December 13, 2010

முகம் படுத்தும் பாடு..

"இதோட எட்டாவது மாப்ள இது. இதுக்கு மேலயும் நீ தட்டிக்கழிச்சுட்டே போனீனா வெறும் கிழவனுங்க தான் வருவாங்க", காபி ஆத்திக்கொண்டே அத்தை பேசினார்.

"இங்க பாரு. உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க? நம்ம குடும்பத்துக்கு காதல் எல்லாம் ஒத்து வராது. அப்படி ஏதாச்சும் இருந்தா தயவுசெஞ்சு மறந்துட்டு அடுத்த வர்ற மாப்ளைய கண்ண மூடிட்டு ஓகே சொல்லிரு." இந்த வசனத்தை சொல்வதற்காகவே ஊரில் இருந்து வந்திருந்தார் மாமா.

"எல்லாருக்கும் சூர்யா மாதிரி, விஜய் மாதிரி தான் மாப்ள வேணும்னா எங்க போறது? அவனுங்கள புடிச்சு குளோனிங் தான் பண்ணனும். உலகத்துல எந்த அப்பனும் இப்படி பொறுமையா இருக்க மாட்டான்" இது பல்லைக்கடித்துக் கொண்டே அப்பா. 
  
"பொறுமையா பார்ப்போங்க. இப்ப என்ன? அவ நாளைக்கு நம்மள குறை சொல்லிற கூடாதுல" நூறாவது முறையாக அம்மா.

"கடைசியா பார்த்த மாப்ள நல்லாதான் இருந்தாரு. சூப்பர் கேரக்டர் அவரு. அவர வேணாம்னு சொல்லிட்டல... பாரு... நானே உன் கல்யாணத்துக்கு கெஸ்ட் மாதிரி வந்து 100ரூபாய் மொய் எழுதிட்டு சைலென்டா போகப்போறேன்" இது தம்பி.

இப்படி பக்கம் பக்கமாக வசனங்களை உறவினர்கள் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது நம் கதாநாயகி அனுஷாவினுடைய வாழ்க்கை. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இரண்டு வருடத்தில் இதுவரை வந்த எட்டு பேரில் யாருமே இவளைப் பார்த்து பிடிக்கவில்லையென சொல்லவில்லை.

முதல் மாப்பிளை பார்த்தது தரகர் மூலமாக தான். "சார். மாப்பிள்ளை வீடு நல்ல இடம். திருச்சிலயே நிறைய சொத்து இருக்கு அவங்களுக்கு. மாப்ள RTOவா இருக்காரு. சின்ன வயசுலயே எக்சாம் எழுதி போனவரு. புத்திசாலி. பேரு அருண். நம்ம பாப்பா ஜாதகத்தையும், ஃபோட்டோவும் கொடுத்தீங்கன்னா பையன் டீடெய்ல்ஸ் வாங்கி கொடுத்துருவேன்." இப்படிதான் ஆரம்பித்தது முதல் மாப்பிள்ளை 'காதை'. ஒரு மூன்று நாட்களில் புகைப்படம் வந்தது.  எப்போதோ கொடைக்கானலில் எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டில் அனுப்பிருந்தார்கள். மாப்பிள்ளை நன்றாக இருந்தான். தன் பெண் அழகாகத்தான் இருக்கிறாள் என நம்புகிற கோடிக்கணக்கான அப்பாக்களில் அனுஷா அப்பாவும் ஒருத்தர் என்பதால் அனுஷாவின் அழகுக்கு ஏற்ற மாதிரி முதல் மாப்பிள்ளையே அமைந்துவிட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம். அலுவலகத்தில் இருந்து பெண் வந்தவுடன் மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டிவிட்டு எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம் என முடிவு செய்திருந்தார். எப்படியும் பையனுக்கு பெண்ணை பிடித்துவிடும். ஏனெனில் அவர் பெண்ணை பிடிக்கவில்லையென்றால் அந்த மாப்பிள்ளை ஒன்று சின்ன பைத்தியமாக இருக்கவேண்டும், இல்லை பெரிய பைத்தியமாக இருக்கவேண்டும் என்பது அவருடைய நம்பிக்கை. அதனால் மாப்பிள்ளை வீட்டில் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காமலேயே தன் பெண்ணின் சம்மதத்துக்காக காத்திருந்தார் அனுஷாவின் அப்பா சண்முகம். அனுஷா வந்தவுடன் மாப்பிள்ளை அருணை பற்றிய சரக்கையெல்லாம் பெருமையுடன் எடுத்துவிட்டார்.

அனுஷா கேட்டாள் "எந்த ஊருப்பா?"
"திருச்சி மா. RTOவா இருக்காரு" பதில் சொன்னார் சண்முகம்
"வாட்ட்ட்ட்ட்ட்ட்? என்னப்பா சொல்றீங்க? பையன் சாஃப்ட்வேர் இல்லையா? திருச்சில எப்படிப்பா இருக்க முடியும் என்னால? கடைசில கிராமத்துல என்ன கல்யாணம் பண்ணி அனுப்பப் பாக்குறீங்களேப்பா? ஏன்பா?"என்று பயங்கர கோபத்துடனும், ஏமாற்றத்துடனும் பேசினாள் அனுஷா. சண்முகம் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பேச்சுக்காக கூட மாப்பிள்ளை புகைப்படத்தை அனுஷா பார்க்கவே இல்லை. இந்த சம்பவத்துக்குப் பின் தரகர் திருச்சி, மதுரை என்று வாயைத் திறந்தாலே சண்முகம் கடுப்பாக ஆரம்பித்தார். அப்புறம் வந்து சிக்கியவன் தான் ஜானகிராமன். பெங்களூருவைச் சேர்ந்த டிபிகல் (typical) 21ஆம் நூற்றாண்டு சாஃப்ட்வேர் மாப்பிள்ளை.  

 ஜானகிராமன் புகைப்படத்தை சண்முகத்துக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லல. திருமணத்துக்காகவே ஸ்டூடியோ போய், இயற்கை காட்சிகள் அமைந்த சுவர்சித்திரங்கள் முன் ஃபுல் ஃபார்மல்ஸில்(formals) எடுக்கப்பட்ட ஃபோட்டோ அது. ஜானகிராமன் காமிராவைப் பார்க்காமல் ஒரு 60 டிகிரி அந்தப் பக்கமாக திரும்பி இருந்தான். அதாவது அவன் முகத்தில் எவையெல்லாம் நன்றாக இருக்கிறதென அவன் நினைத்திருந்தானோ அவை மட்டும் காமிராவில் தெரிகிற மாதிரி போஸ் கொடுத்திருந்தான். ஸ்டைலாக கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுத்திருந்த மாப்பிள்ளையை சண்முகத்தை தவிர எல்லாருக்குமே புடித்திருந்தது. ஃபோட்டோவில் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். தொலைபேசியில் பேசி, சண்முகத்தின் வீட்டுற்கு வந்து பார்த்துவிட்டு மற்றதை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினார்கள் இரு வீட்டாரும். ஒரு 12 பேரை அழைத்துக்கொண்டு அனுஷா வீட்டிற்கு வந்தார்கள் ஜானகிராமனின் குடும்பத்தார். அனுஷா இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. எல்லாரும் ஐந்து நிமிடம் காத்திருந்த பின் அனுஷா வந்துவிட்டாள். பெண்ணைப் பார்த்தவுடன் மாப்பிள்ளை கீழே குனிஞ்சவன் தான், வெக்கப்பட்டே செத்துப்போயிவிடுவானோ என்று பயந்து அவனது அம்மாதான் அவனுக்கு தைரியம் கொடுத்தார்கள். கடைசியில் ஒருவழியாய் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான். அனுஷா மட்டுமல்லாமல் அந்த மொத்த குடும்பமும் அவனை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது. மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டார்கள். அப்புறம் ஜானகிராமன் அம்மா, "வேற ஒன்னும் பேசுறதுக்கு இல்ல. பொண்ணை ரொம்ப புடிச்சிருச்சு. நீங்களே தேதி பார்த்து ஃபோன் பண்ணுங்க" என்று சொன்னவுடன், சண்முகம் "சந்தோஷம். நான் பொண்ணுட்ட பேசிட்டு இன்னைக்கோ நாளைக்கோ ஃபோன் பண்றேன்" என்று பதிலளித்தார். எல்லாரும் கிளம்பி போனபின் அனுஷா சண்முகத்தை முறைத்துப் பார்த்தாள்.
"என்னமா.. பேசி முடிச்சிரலாமா??"
"ஏம்ம்ம்ம்ம்பா இப்படி பண்ணுறீங்க? அவன் காதை பார்த்தீங்களாப்பா? கூலிங்கிளாஸ் போட்டா கூட  நிக்காது போல. அவ்ளோ சின்னதா அசிங்கமா இருக்கு. மூஞ்சி பாக்க சகிக்கல."
இது சண்முகம் தவிர அவரது மீதமுள்ள குடும்பத்தார் எதிர்பார்த்தது தான். எல்லோரும் சிறிது நேரத்துக்கு முன் மாப்பிள்ளையை வெறித்து பார்த்தார்களே அது அந்த காதைத்தான். ஆனால் உண்மையிலேயே ஜானகிராமனின் காது அப்படிதான் இருந்தது. சின்ன வயதில் காதை திருகிய வாத்தியார் யாரோ அதிகமாக திருகிவிட்டதைப் போல. அரை காதுக்கு மேல் வளரவில்லை! இப்படிதான் ஜானகிராமன் சம்பந்தம் சண்முகம் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாமல் போன சம்பவம் நடந்தது.
 
இப்படி அடுத்தடுத்த வாரத்தில் இன்னும் இரண்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். ஒருத்தன் சம்பத். வயது 29. அனுஷாவைவிட ஐந்து வயது அதிகம். சம்பளம் 5000ரூபாய் குறைவு. ஃபோட்டோ மற்ற மாப்பிள்ளைகள் போலவே வழக்கம் போல பயங்கரமாக போஸ் கொடுத்து அனுப்பியிருந்தான். ஸ்டூடியோவில் எடுத்ததுதான். சென்னையில் வேலை. சண்முகத்துக்கு சம்பத்தை ஓரளவுக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் வீட்டுக்கு அவர்களை நேரில் வர சொல்வதற்க்கு முன் எதற்கும் தரகரிடம் ஒருதடவைக்கு இரண்டு தடவைகள் பையன் முகலட்சணத்தை பற்றி கேட்டுக்கொள்ளலாம் என்று தரகரை தொலைபேசியில் அழைத்தார்,

"ஏம்பா.. பையன நேர்ல நீயே பாத்திருக்கியா? முகத்துல எதாச்சும் சராசரிக்கு சின்னதாவோ, சராசரிக்கு பெருசாவோ இருக்காதுல்லப்பா? போன தடவ மாதிரி ஆயிறக்கூடாது"
"என்ன சார் நீங்க? போன தடவ தெரியாம தப்பு நடந்து போச்சு சார். நம்ம பாப்பா அழகுக்கு ஏத்த மாதிரி மாப்ள கொண்டு வராதது தப்புதான் சார். இந்த தடவ அப்படி இல்ல சார். பையன் ரொம்ப அழகு. பார்க்க ஆக்டர் பிருத்விராஜ் மாதிரி இருப்பாரு. வந்தோன நீங்களே சொல்லுவீங்க பாருங்க."
"அப்ப சரிய்யா. அவங்கட்ட சொல்லி அடுத்த ஞாயிறு வரச் சொல்லு."
கொஞ்சம் யோசித்துவிட்டு அவரே தொடர்ந்தார்
"வீட்ல வேணாம். வடபழனி முருகன் கோவில்ல பார்ப்போம்னு சொல்லுய்யா."
"சரி சார். அப்படியே பண்ணிருவோம்"

எல்லாம் பேசியபடி ஏற்பாடாகி வடபழனி முருகன் கோவிலில் சந்தித்தார்கள்.  மாப்பிள்ளை வீடு சொன்ன நேரத்தை விட ஒரு 15நிமிடம் தாமதமாக வந்தார்கள். அதற்காக சம்பத் நிறைய முறை சண்முகத்திடம் மன்னிப்பு கேட்டான். சம்பத் பார்க்க ரொம்ப நல்லவனாகத் தெரிந்தான். ஆனால் சண்முகம், சம்பத் முகத்தை பலமாக ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவருக்கு ரொம்ப திருப்தி. புகைப்படத்தில் பார்த்தது போலவே அப்படியே இருக்கிறான் என்று நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டே சம்பத்தின் அப்பாவுடன் பேசிக்கொண்டே கோவிலை சுற்றி நடக்க ஆரம்பித்தார். பின்னால் அனுஷா, சம்பத், அனுஷாவின் தம்பியும் பேசியபடியே நடந்து வந்தார்கள். அனுஷா சிரிக்கும் சத்தம் அவ்வப்போது சண்முகத்துக்கு கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு இருபது நிமிடங்களுக்குப் பின் எல்லோரும் கோயிலை விட்டு வெளியே வரும்போது அனுஷா செருப்பு மாட்ட சிறிது நேரமானது. அவள் சரியாய் செருப்பை மாட்டிமுடிக்கும் வரையிலும் அவளுக்கு துணைக்கு நின்றான் சம்பத். பின் இருவரும் வெளியே வந்த பின் இருகுடும்பங்களும் விடைபெற்றார்கள்.

 வீட்டுக்கு வந்து தன் பெண்ணிடம் கண்டிப்பாக சரியென்ற பதிலை எதிர்பார்த்து வழக்கமான கேள்வியை கேட்டார் சண்முகம், "ஏம்மா. சம்பத் வீட்டுல சரினு சொல்லிறவாம்மா? அவங்க வீட்டுல உன்ன பிடிச்சிருக்குனு அன்னைக்கே சொல்லிட்டாங்க. எதுக்கும் உன்கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு நான் தான் பதில் எதும் சொல்லாம வந்துட்டேன்." அனுஷா சில நொடி அமைதிக்குப் பின் சொன்னாள் "அப்பா...... அவனுக்கு பயங்கர ஆய்லி ஃபேஸ் பா. எண்ணை வழியுது. எனக்கு அப்படியிருந்தா சுத்தமா புடிக்காதுப்பா. அதுவும் போக என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்கப்பா.."
இதைக்கேட்ட சண்முகத்துக்கு முதல் முறையாக மகள் மீது கோபம் வந்தது. ஆனால் தந்தையின் கோபத்தை விளையாட்டுக்கு கூட அறிந்திராத மகள் அனுஷா. தான் சொல்லிய மறுப்புக்கு தந்தையின் பதிலை எதிர்பாராமல் அலுவலகம் கிளம்பினாள் அனுஷா.

இந்த சம்பவத்துக்குப் பின் அனுஷாவுக்காக மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தில் அவருக்கிருந்த ஆர்வமே குறைந்து போனது. சம்பத்தை அனுஷாவின் தம்பிக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்த்த அந்த ஒரே நாளில் மிகவும் ஒட்டிவிட்டான். ஆனால் அக்கா சம்பத்தை நிராகரித்துவிட்டாள் எனத் தெரிந்த போது அவனுக்கே எரிச்சலாகத்தான் வந்தது. அனுஷாவின் இந்த நிராகரிப்புகளில் எல்லாமே அவளுக்கு உற்ற துணையாய் செயல்பட்டது அவளின் அம்மா தான். சிவப்பு போல அழகில்லை என்பதும் சிவப்பாய் இருப்பது மட்டுமே அழகு என்றும் நம்பும் தமிழகத்தின் 8கோடி பேரில் அனுஷாவின் அம்மாவும் ஒருவர். இந்த நம்பிக்கையை இதுவரை அனுஷாவை பெண் பார்த்து போன எல்லா மாப்பிள்ளை வீட்டாருமே மேலும் உறுதி செய்வதாகவே பேசினார்கள். அனுஷாவின் சிகப்பழகை புகழ்ந்து தள்ளினார்கள். மிகவும் சிவப்பாக இருக்கும் தன் மகளுக்கு நிகராக-அழகாக இருக்கும் மாப்பிள்ளையை எப்படியேனும் தேடிப்பிடிப்பது சண்முகத்தின் கடமை என மிகவும் தீவிரமாக நம்பினார் அனுஷாவின் அம்மா. சம்பத் வரனை மிகுந்த தர்மசங்கடத்துடன் நிராகரித்த பின் தான் ஊரில் இருந்து அனுஷாவின் மாமாவும், அத்தையும் வந்திருந்தார்கள். அவர்களின் மூலம் வந்த மாப்பிள்ளைதான் நவீன். மும்பையில் பிரபல தனியார் கம்பனியில் மேலாளர் பதவியில் இருக்கும் மென்பொருள் வல்லுனன். மாதத்துக்கு ஒருமுறை கம்பெனி செலவில் நாடு நாடாக பறப்பவன். அவனை பேசிமுடிக்கலாம் என்று மாமாவும் அத்தையும் சொன்னார்கள். சண்முகம், "என்னமோ செய்யிங்க" என சொல்லிவிட்டார்.

பின் நவீன் வீட்டில் பேசி நவீனின் புகைப்படத்தை அவனை விட்டே அனுஷாவின் மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொல்வது என முடிவாகியது. நவீன் புகைப்படத்தை நவீன்-அனுஷாவுக்கும், அனுஷா புகைப்படத்தை அனுஷா-நவீனுக்கும் ஒரே நாளில் அனுப்பிக் கொண்டர்கள். பார்க்க சுமாராக இருந்தான் நவீன். கண்டிப்பாக சிவப்பு கிடையாது. நெற்றியில் முடி கொஞ்சம் ஏறி இருந்தது. அவனுக்கு வழுக்கை விழாமலேயே இருக்கும் சாத்தியங்கள், இந்தியா வல்லரசாகும் சாத்தியத்துடன் ஒத்திருந்தன. நவீன் புகைப்படத்துடன் அவனது விரிவான பணி வர்ணணையையும், இமாலய சம்பள விவரங்களையும் அனுப்பியிருந்தான். அனுஷா நவீனின் புகைப்படத்தை அலுவலகத்தில் பார்த்ததால் அவளது தோழிகளும் சேர்ந்தே பார்த்தார்கள். நவீனின் பணி வர்ணனையை பார்த்து வாயடைத்துப் போனார்கள். அனுஷாவை கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒத்துக்கொள்ள சொன்னார்கள். இதுபோல் மாப்பிள்ளை கிடைக்கவே கிடைக்காது என்றும், பல நாடுகளுக்கு நினைத்தவுடன் செல்லலாம் என்றும் புகழ்ந்தார்கள் நவீனை. அனுஷாவுக்கு நவீனின் கலரும், நெற்றியும் மற்ந்து போனது. நவீனை கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது என முடிவு செய்துவிட்டாள். இப்போதும் நவீன் அவளை ஒத்துக்கொள்ள வேண்டுமே என அவள் எண்ணவில்லை. தீடிரென ஜீ-டாக் (gtalk) அறிவிப்பொலி கேட்டது. நவீன் chat அழைப்பு அனுப்பியிருந்தான். உடனே ஏற்றுகொண்டாள் அனுஷா!

அனுஷா அழகை ஆகா ஓகோவென புகழ்ந்தான் நவீன். வீட்டில் எல்லோரிடமும் நவீனை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்லிவிட்டாள். பெண் பார்க்கும் சடங்கெல்லாம் தேவையில்லை, நேராக நிச்சயதார்த்தமே செய்துவிடலாம் என்றும் கூறினாள். சண்முகத்துக்கு பயங்கர ஆச்சரியம். இதுவரை பார்த்த மாப்பிள்ளைகளிலேயே மட்டம் நவீன் தான். ஆனால் தன் மகள் இவனைப் பிடித்திருப்பதாய் சொல்லும் ரகசியம் சண்முகத்துக்கு பிடிபடவேயில்லை. சரி, எப்படியோ மணமானால் சரி என விட்டுவிட்டார். சண்முகத்தின் வீட்டில் சதா நவீன் பேச்சாகவே இருந்தது. அம்மாவும்-பொண்ணும், அத்தையும்-மாமாவும் நவீன் புராணம் பாடியபடியே அனுஷா நவீனுடன் தொலைபேசியில் பேசும் காட்சியை ரசித்தார்கள். நவீன் அனுஷா அம்மாவுடனும் அவ்வப்பொழுது பேசினான். அனுஷாவை தான் மிகவும் விரும்புவதாகவும் மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளப்போவதாகவும் நொடிக்கொருமுறை தெரிவித்தான். மேலும் தான் இரண்டு மாதத்தில் ஸ்விட்சர்லாந்து போகப் போவதைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டான். சண்முகத்தையும், அனுஷாவின் தம்பியையும் தவிர எல்லாருமே குடும்பத்தில் புலங்காங்கிதம் அடைந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் ஒருநாள் நவீன் தான் சென்னை வரப்போவதாகக் குறிப்பிட்டான். குடும்பம் மிகப்பெரும் வரவேற்புக்கு தயாராகியது.

நவீன் வருவதற்கு முந்தைய நாள் அனுஷாவின் அம்மா அனுஷாவை அழைத்து,  "இங்கப் பாரு.  நாளைக்குதான் அவனை நேருல பாக்க போற. அவன் எப்படி இருந்தாலும், அவன புடிக்கலேன்லாம் சொல்லிறாத.. அந்த பையன் உன் மேல உயிரையே வச்சிருக்கான். நீ இல்லனா எதாவது பண்ணிக்குவான் போல. அவ்ளோ ஆசையா இருக்கான். புரியுதா?"
"அம்மா. அப்படில்லாம் பண்ண மாட்டேன்மா. நாங்க நிறைய பேசிட்டோம். நவீன தவிர வேற யாரையும் என்னாலயும் கல்யாணம் பண்ண முடியாதும்மா.",அனுஷா சொன்னாள்.

அடுத்த நாள் காலையில் நவீன் வந்தான். புகைப்படத்தைவிட நேரில் படு சுமாராக இருந்தான். வழுக்கை ஏற்கனவே விழ ஆரம்பித்திருந்தது. அவன் அனுப்பியிருந்த புகைப்படம் அநேகமாய் ஐந்து ஆறு வருடத்திற்கு முந்தைய புகைப்படமாக இருந்திருக்க வேண்டுமென அத்தை, மாமா என எல்லாருக்குமே பட்டது.  அனைவருமே நவீனைப் பார்த்து கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். இன்னும் அறையிலிருக்கும் அனுஷா நவீனைப் பார்த்தவுடன் என்ன சொல்வாளோ என அனைவருமே வயிற்றில் புளி கரைத்தபடியே அமர்ந்திருந்தார்கள். அனுஷாவின் தம்பி, தன் அக்கா இவனை பிடிக்கவில்லையென கண்டிப்பாய் சொல்லிவிடுவாள் என்பதில் நவீனைப் பார்த்த மறுநொடியில் இருந்து பலமான நம்பிக்கை கொண்டவனாக மாறி இருந்தான். ஒரு பத்து நிமிடத்தில் அனுஷா அறையில் இருந்து வெளியில் வந்தாள். நவீனைப் பார்த்ததும் அவள் கொஞ்சம் கூட சங்கடப்பட்டதாய் தெரியவில்லை. மிகவும் ஆர்வமாக நவீனுடன் எப்போதும் தொலைபேசியில் பேசும் தொனியில் சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள். அனுஷாவின் தம்பிக்கு தன் நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கியதை கண்டவுடன் வேகமாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான். மிகுந்த வருத்தம்அனுஷா வரும்வரை எல்லாரிடமும் நன்றாக பேசிய நவீன், அனுஷா வந்ததில் இருந்து வழக்கமாய் பேசுவதைப் போல பேசவில்லை, மென்று முழுங்கினான். வெக்கமாய் இருக்கலாம். பின்னர் அனுஷாவும் நவீனும் அடையார் ஆனந்தபவனுக்கு கிளம்பினார்கள். உடன் அனுஷாவின் தம்பி வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டான்.

நவீன் வந்து சென்றதில் இருந்தே வீட்டில் ஒருவித சோகத்துடன் கூடிய உற்சாகம் தொற்றிற்று. நவீனின் உருவம் பற்றிய கவலை இருந்தாலும் இப்போதாவது அனுஷா திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாளே என்ற சந்தோஷம் கவலையை மறைக்க தன்னால் முயன்ற அளவுக்கு உதவியது. கடைசியாக குடும்பத்தாரின் நச்சரிப்புக்கு இணங்க சண்முகம் நவீனின் பெற்றோரை அழைத்து நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்வது குறித்தும், அதற்கு முன் சம்பிரதாயமாக வீட்டுக்கு வந்து செல்லுமாறும் அழைத்தார்.
நவீனின் அப்பா பேசினார், "இல்ல சார். தம்பி அங்க வந்துட்டு போனானாம்ல போன வாரம். வந்ததில இருந்து பொண்ணு பிடித்தமில்லனு சொல்றான். அவன் பேச்சை எதிர்த்து நாங்க ஒன்னும் செய்யிறதில்ல. நானே உங்கள கூப்பிடலாம்னு இருந்தேன்...அதுகுள்ள...."செல்பேசியின் ஸ்பீக்கரில் நடந்த இந்த உரையாடலை சண்முகம் குடும்பத்தார் எல்லாருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனுஷாவையும் சேர்த்து. 


13 comments:

மதுரை பாண்டி said...

good one!! Keep it up!! Expecting the next one//

முத்துசிவா said...

சூப்பர் மச்சி... ஓவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...

பாதி படிக்கும் போதே க்ளைமாஸ் என்னவா இருக்கும்னு கணிச்சிட முடியுது....

Chitra said...

interesting story. நல்லா இருக்குதுங்க.

இரா.இளவரசன் said...

@மதுரை பாண்டி
நன்றி. கூடிய விரைவில் அடுத்தது வரும்!

இரா.இளவரசன் said...

@Chitra

நன்றி நன்றி நன்றி!:-)

இரா.இளவரசன் said...

@முத்துசிவா
ஆமா மச்சி ஆமா!!! இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்!!! :-)

Azar said...

சம்மட்டியை அடிக்கிற விதத்தில் அடித்தால் தான் இரும்பு கூட வளைகிறது, இரு சம்மந்தி வீட்டாரும் பேசுகிற விதத்தில் பேசினால் தான் சம்மந்தம் கூட முடிகிறது.

முத்துசிவா said...

@Azar:

//சம்மட்டியை அடிக்கிற விதத்தில் அடித்தால் தான் இரும்பு கூட வளைகிறது, இரு சம்மந்தி வீட்டாரும் பேசுகிற விதத்தில் பேசினால் தான் சம்மந்தம் கூட முடிகிறது.//

நண்பரேசொல்பவர் சொன்னால் தான் எந்த செய்தியும் மக்களை சென்றடைகிறது

டி .ஆர் சொன்னதால் தான் இந்த வசனமும் உங்களை வந்தடைந்திருக்கிறது

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அய்யய்யோ,,, நேக்கு ஆயிலி பேஸ்!

ம.தி.சுதா said...

வாசித்துக் களைத்து விட்டேன் ஒரு காப்பி கிடைக்குமா....

அருமைங்கோ...

இரா.இளவரசன் said...

@suthaa
hehe!! எங்கயாச்சும் பொண்ணு பாக்க போங்க கிடைக்கும்! போறப்போ காதை செக் பண்ணிக்கங்க!!! ஹிஹி

டக்கால்டி said...

எனக்கும் முன்வழுக்கை விழ ஆரம்பிச்சு இருக்கு...அவ்வ்வ்வ்..

சமுத்ரா said...

interesting story. நல்லா இருக்குதுங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...