Thursday, December 9, 2010

நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

ஐஸ்வர்யா ராயும் அருந்ததிராயும் என்ற மிகவும் அருமையான, எழுத்தாளுமை மிக்க, மூளையை முழுதாய் சலவை செய்யவல்ல, இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவல்ல ஒரு மகத்தான விஷம் தடவிய கட்டுரையை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நாம் மிகவும் ரசிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் சில நேரங்களில் யார்மீதோ தங்களுக்கிருக்கும் தனிப்பட்ட விருப்பத்தையும், வெறுப்பையும், கருத்தையும், நமக்குப் பிடித்த அதே எழுத்தின் துணையோடு ஒரு சமூக புரட்சி போல நம்மிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் போது பலர் ஏமாந்துதான் போகிறோம். ஆனால் அப்படிப்பட்ட எழுத்துக்களில் அடிக்கும் கழிவு வாசனையை முகர்ந்து, சீண்டாமல் நகர்ந்து செல்லும் கடமையும் நமக்கிருக்கிறது. தனிப்பட்ட துவேசமும், வஞ்சமும், ஆண்மையற்ற தன்மையும்,ஒருசேரக் கொண்டிருக்கும் கட்டுரையாகவே ஜெயமோகனின் '' கட்டுரை பட்டது எனக்கு.

அருந்ததிராயின் நாவலின் தன்மையையும், காஷ்மீர் பிரச்சினையின் சாரத்தையும் எப்படி ஜெயமோகனால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது? இதற்கு முன் அருந்ததி ராயின் நாவலை ஏன் உலகமே கொண்டாடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய நாவல்கள் இந்தியாவை வழக்கமான கலாசார துதி போர்வைக்குள் அடைப்பவையாகவே இருக்கின்ரன. கலாச்சாராம், மதம் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நடந்துகொண்டிருக்கும் பெண்ணடிமை அவலங்களையோ, சாதிய பிரச்சினைகளையோ அவைகள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் வெள்ளைக்காரன் முன் மானம் போய்விடுமோ என்ற பயமோ, அல்லது நமது ஊடகங்களினால் எதிர்க்கப்படுவோமோ என்ற பயமோ, அல்லது நம் வீட்டு பிரச்சினைகளை எதற்காக பக்கத்துவீட்டுக்காரனிடம் சொல்ல வேண்டும் என்ற தயக்கத்துடன் கூடிய பயமாகவோ மட்டுமே இருக்க முடியும். ஆனால் அருந்ததிராயின் நாவல் இலக்கியத்தரமில்லாமல் இருக்கலாம். ஆனால் பச்சையான நாவல் அது. மலத்தை கழிவு எனச் சொல்லாமல் 'பீ' எனச் சொன்ன நாவல் அது. இந்தியாவின் வேறு பரிமாணத்தை உலகுக்கு காட்டிய நாவல் அது. அதனால் தாங்கள் இதுவரை மிகவும் கண்ணியமானதாகவும், மிகுந்த கலாச்சார பலம் பொருந்தியதாகவும் நினைத்துக்கொண்டிருந்த இந்தியாவின் மறுபக்கம் தங்களுக்கு ஒரு இந்திய எழுத்தாளராலேயே காட்டப்பட்டவுடன் மேலை நாடுகள் அந்நாவலைக் கொண்டாடின. பரிசுகளாக தந்து குவித்தன. அருந்ததிராய் out of the box எழுத்தாளராக ஆக்கப்பட்டார், ஆனார். ஸ்லம்டாக் மில்லியனைர் படம் கூட இதே வகையறா தான். இந்தியாவின் சினிமா மோகத்தையும், வறுமையையும் உலகுக்கு காட்டிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை உலகத்துடன் சேர்ந்து இந்தியாவே கொண்டாடியதே, சினிமா உலகின் மிகப்பெறும் விருதான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதே, அதை கொண்டாடினோமே, அதனால் ஜெயமோகனின் பார்வையில் நாம் எல்லாருமே அருந்ததிராய்களா?

அருந்ததிராயின் நாவல் ஒன்றுக்கும் உதவாத காகித குப்பையாகவே இருக்கட்டும். Over rated நாவலாகவே இருக்கட்டும். ஆனால் அதற்கும், அருந்ததிராயின் சமீபத்திய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஜெயமோகன் எதிர்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இல்லாத இந்திய இறையாண்மையை அருந்ததிராய் சீர்குலைப்பதாய் அவர் நினைத்தால், காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு சரிதான் என்பதை தன் கருத்துளோடு முன்வைக்கும் கட்டுரையை எழுதியிருக்க வேண்டுமே தவிர, "உன் நாவல் சரியில்லை. அதனால் நீ இந்தியாவை குறை சொல்லும் தகுதியை இழக்கிறாய்" எனச் சொல்வது மகாகேவலமான, கருத்தே இல்லாதவனுடைய வாதமாகத்தான் இருக்கமுடியும்.
 சீனாவும், மேலைநாடுகளும் இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க அருந்ததிராயை ஏவிவிடுகிறார்கள் எனச் சொல்கிறார் ஜெயமோகன். ஏற்கனவே இந்தியாவின் தலையில் பெட்ரோல் எரிந்து கொண்டிருக்கும் போது அதில் மண்ணெண்ணய் ஊற்றும் அவசியம் சீனாவுக்கோ, வேறு யாருக்கோ கிடையாது. மேலும் இந்திய ஊடகங்கள், இந்திய இறையாண்மையை தங்கள் அரசியல் லாபத்துக்காக எப்போதுமே தூக்கிப் பிடிக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் தானே ஒழிய மேலைநாடுகளின் கூலிகள் அல்ல. எப்போதுமே அரசியல்வாதிகளின் அத்தியாவசிய தேவையான இந்திய இறையாண்மையை காக்க போராடும் ஊடகங்கள், பாகிஸ்தான் பிரச்சினையை பிரதானமாகவும், உள்நாட்டு பிரச்சினைகளான மாவோயிஸ்ட், மீனவர்கள் சாவு, காஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல் ஆகிய செய்திகளை மறைத்தோ மறந்தோ அல்லது தேன் தடயியோ தான் தந்திருக்கின்றன. உண்மை நிலைமையை சொன்னதாய் ஆதாராமே இல்லை. ஆனால் அதையும் மீறி ஊடகங்கள் அருந்ததிராயின் இந்திய இறையாண்மையை துகிலுரிக்கும் பேச்சையும், எழுத்துக்களையும் வெளியிடுகின்றன என்றால், அவர் ஏற்கனவே மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஊடகங்களால் தவிர்க்க முடியாத சக்தியாய் அவர் ஆனதாலேயே ஊடகங்கள் அவரை மேலேற்றி வைத்திருக்கின்றன.

                                         
இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி கவலைப்படும் ஜெயமோகன், காஷ்மீர மக்கள் தெருக்களில் நின்று தங்கள் மகனையோ, தந்தையோ, கணவனையோ, மகளையோ, மனைவியையோ கொன்று இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைத்த ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்களே அதைப் பற்றி ஏன் கவலைப் பட மறுக்கிறார்? வடகிழக்கு மாநில பெண்கள் தங்களை துச்சமென எண்ணி, தங்கள் உடல்களை கசக்கி, தாங்கள் இந்தியர்கள்தான் நம்மை காப்பாற்றதான் இந்திய ராணுவம் உள்ளது என்ற நம்பிக்கையை உடைத்து. அந்த மக்களின் மனதில் இருந்த இந்திய ஒருமைப்பாட்டை வன்புணர்வு செய்த ராணுவத்துக்கெதிராக நிர்வாணமாக போராடினார்களே அதைப் பற்றி ஏன் கவலைப் பட மறுக்கிறார்? மீனவர்கள் சாவதை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது எனச் சொன்ன மத்திய அரசு ஒருமைப்பாட்டை சீர்குலைத்த போது தமிழகத்தையும், இந்தியாவையும் இரண்டாகப் பிரித்துப் பார்த்து இந்திய ஒருமைப்பாட்டை சீகுலைத்ததே அதற்கு என்ன குரல் கொடுத்தார்?

2004ல் 'சிட்னி அமைதி' பரிசு, மாவோயிஸ்ட்டுகளையும், காஷ்மீர போராட்டத்தையும் ஆதரிக்கும் அருந்ததிராய்க்கு வழங்கப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அமைதியான ஒரு நாட்டில் போராட்டம் வெடிக்காது. வெடிக்கும் போராட்டங்கள் எல்லாமே அமைதியை தங்கள் முடிவாகவோ நோக்கமாகவோ கொண்டவைதான். இங்கே உண்ணாவிரதம் இருப்போரை சாகவிடும் நாட்டில், வாழ்நாள் முழுதும் உண்ணாவிரதம் இருப்போரை மதிக்காத நாட்டில் எப்படி அமைதியை, அமைதியான போராட்டத்தால் வெல்ல முடியும்? அமைதிக்காக போராடும், அமைதியைத் தவிர வேறெதையுமே நாடாத போராளிகளை ஆதரிப்பவருக்கு அமைதிக்கான பரிசு கொடுக்காமல், மலைவாழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு நிலவிய அமைதியை சீர்குலைத்து, பெண்களின் உடலை பொருளென எண்ணி சூறையாடி, அப்பாவி உயிர்களை குண்டுகள் அனுப்பிப் பறிக்கும் இந்திய ராணுவத்தை ஆதரிக்கும் ஜெயமோகனுக்கா கொடுப்பார்கள்??

மேதா பட்கர் நடத்தும் போராட்டங்களைப் போல் அல்லாது அருந்ததிராய் ஊடகப் போராட்டம் நடத்துகிறாரா? ஆமாம். ஊடகங்கள் இன்றியோ, அல்லது ஊடகங்களைத் தவிர்த்தோ ஒரு போராட்டம் வெற்றி பெற முடியுமா? புலிகளின் போராட்டம் தற்காலிகமாக படுதோல்வியை சந்தித்ததில் ஊடகங்களின் பங்களிப்பை மறந்துவிட்டாரா ஜெயமோகன்? ஒரு இன மக்களோ அல்லது ஒரு ஊரைச் சேர்ந்த மக்களோ தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற அந்த போராட்டத்தை பார்க்கும், அல்லது கேள்விப்படும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாக வேண்டும். அந்த போராட்டத்தின் சரியான பரிமாணத்தை பிரச்சினைல்லு சம்பந்தமில்லாத மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகங்களின் பங்களிப்பு தேவை. அந்த பங்களிப்பை, அருந்ததிராய் தன்னை போராட்டங்களில் இணைத்துக் கொள்வதன் மூலமும், புக்கர் பரிசு பெற்ற தன் முகத்தின் பிரபலத்தை வைத்தும் ஊடகங்களை செய்ய வைக்கிறார்? இது என்ன குற்றம்? இதை குற்றம் என சொல்வது பச்சை பொறாமையேயொழிய வேறெந்த நல்லெண்ணமாகவோ, ஈரவெங்காயமாகவோ எனக்குப் படவில்லை. இப்போது ஜெயமோகன் அருந்ததிராயை- ஐசுவர்யா ராயை ஒப்பிட்டு விளம்பரம் தேடுவது போல் தேடிய விளம்பரம் அல்ல அருந்ததிராயின் விளம்பரம். அவரது முதல் நாவல் புக்கர் பரிசு பெற்ற போதே உச்சகட்ட விளம்பரத்தையும், புகழையும் அடைந்துவிட்டார். இப்போது அவர் செய்வதெல்லாம் அந்த விளம்பரத்தின் பலனை மக்களின் பலனுக்காக திருப்பி விடும் வேலையைதானேயொழிய ஜெயமோகனுக்கு பழக்கப்பட்ட சுய-விளம்பரம் போன்றது அல்ல.
                                         
  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் தங்களுக்கும் தங்கள் கொள்கைக்கும் தீங்கு விளைவிக்கும் இந்திய போலி இறையாண்மையின் மீதான தாக்குதலை உள்நோக்கம் கொண்டே எதிர்ப்பதாக தோன்றுகிறது. அவரது கட்டுரையில் 'ராய்' என பெயர்கள் முடியும் ஒரே காரணத்திற்காக உலக அழகி ஐசுவர்யாராயையும்-அருந்ததிராயையும் ஒப்பிடும் இழிவேலையை செய்துள்ளார் ஜெயமோகன். இதைப் படிக்கும் போது, ஒரு எழுத்தாளர், ஒரே நாவலில் புகழின் உச்சிக்குப் போன தன் சக எழுத்தாளருக்கு போராட்டங்களின் மூலமும், பேச்சுக்களின் மூலமும், எழுத்துக்களின் வாயிலாகவும் கிடைக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு வரும் பொறாமையும் வயிற்றெரிச்சலுமேயன்றி வேறில்லை என்றே நாம் முடிவுக்கு வர நேரிடுகிறது. நல்லவேளை ராய் ராய் என பெயர் முடிவதற்காக நம்மூர் நடிகை லட்சுமிராயையாவது விட்டு வைத்தாரே ஜெயமோகன்!

இந்தியாவைப் பற்றி இவ்வளவு வருத்தப்படும் ஜெயமோகன் இதுவரை எந்த சமூகப் பிரச்சினைக்காக போராடியிருக்கிறார்? அவரால் போராடவே முடியாது. ஏனெனில் அவர் ஆதரிக்கும் 'இசங்களும்' 'கொள்கைகளும்' போராட்டத்தை உற்பத்தி செய்பவைகளாக உள்ளனவே தவிர மக்களின் இடத்தில் இருந்து மக்களை ஆதரிப்பவைகளாக இல்லை.


மேலும் சொல்வதானால், ஜெயமோகன் என்ற 'சுயநல இந்திய ஒருமைப்பாடு காவலாளி'களை விட்டுவிடுவோம். உண்மையாகவே மக்களின் போராட்டங்களாலும், அருந்ததிராயின் போராட்ட குணம் கொண்ட பேச்சுக்களாலும் இந்திய ஒருமைப்பாடு கெடுகிறது என நினைக்கும் மக்களுக்கு சொல்கிறேன், கண்டிப்பாக கெடவில்லை. ஏனெனில் இந்திய ஒருமைப்பாடு என்பது அனைத்து மாநிலங்களும் இந்திய வரைபடத்தில் ஒன்றோடு ஒன்று ஓட்டி இருப்பதல்ல, ஒருமைப்பாடு என்பது ஒவ்வொரு மாநில மக்களும், ஒவ்வொரு மலைவாசி மக்களும், ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்குள் ஒருமைப்பாடாக இருப்பதே ஆகும். அப்படிப்பட்ட மனிதம் சார்ந்த, அடக்குமுறை இல்லாத, ஒருமைப்பாடான இந்தியாவைக் காண அருந்ததிராய்கள் தேவை. இந்தியாவை வரைபடமாகவே தேசியவாதிகள் இன்னும் பார்க்கிறார்கள். இந்திய வரைபடம் கிழிந்தால் அவர்களுக்கு வரும் கோபம், ஏனோ இந்திய ராணுவம் தன் அடக்குமுறையால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் கன்னித்திரையை கிழிக்கும் போது வருவதில்லை. இந்திய நாட்டை வெறும் நிலமாகவே பார்க்கிறார்கள். ஆனால் அருந்ததிராய் போன்றோர் மக்களாக பார்க்கிறார்கள். இந்தியா வெறும் நிலப்பரப்பு அல்ல, இந்திய மக்களால் ஆனது. இந்தியா என்பது இந்திய மக்களேயன்றி மாநில எல்லைகள் அல்ல.  மக்களை ஒற்றுமையாயும், சமாதானமாயும், சுயமரியாதையுடனும் நடத்தவல்லாத ஒரு தேசமானது, ஒரு அரசானது, வரைபடத்தில் ஒருமைப்பாடாய் இருந்தென்ன லாபம்? அழிந்துதான் போகட்டுமே! 

12 comments:

மகேந்திரன் எட்டப்பராசன் said...

சத்தியமான சொற்கள் .நன்றி.

Thekkikattan|தெகா said...

அந்தக் கட்டுரைக்கான புகைப்படங்கள் கூட மிக்க கவனத்துடனே தெரிவு செய்யப்பட்டுள்ளது எனப்படுகிறது எனக்கு. அருந்ததி ராயை மலினப்படுத்தும் வாக்கிலேயே அந்தப் படமும் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பேன். மனதின் கோரம் கணினித் திரையை கிழித்துக் கொண்டு எட்டிப் பார்க்கிறது.

God of Small Things எந்த அடிப்படையில் அதன் இலக்கியத் தன்மையை இழக்கிறது? என்னய பொருத்த மட்டில் இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் நிகழ்வுகளை பதிவு செய்வதே என்பேன். அந்த வகையில் அந்த புத்தகம் ஒரு சிறந்த இலக்கியமேதான்... உண்மை கசக்கத்தான் செய்யும் என்ன செய்வது.

நல்ல கட்டுரை!

DJ said...

அருந்த‌தி ரோயை ம‌ட்டந்த‌ட்டுவ‌த‌ற்காய் ஜெய‌மோக‌ன் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் கீழிற‌ங்கிப்போவார் என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. மிக‌ச் சாதார‌ண‌மான‌ ஒரு நாவ‌லை எழுதி புலிட்ச‌ர் ப‌ரிசு பெற்ற‌ அர‌விந்த் அடிகா போல‌ அருந்த‌தியும் போலி இந்திய‌ இறையாண்மை ப‌ற்றி எந்த‌க் க‌ருத்தும் கூறாது விட்டிருந்தால், ஜெமோவிற்கு இப்ப‌டி எழுதியிருக்க‌மாட்டார். ஏன் இப்போதுகூட‌ அருந்த‌தி, சிறுபான்மையின‌ரைத் தொட‌ர்ந்து ஒடுங்கிக்கொண்டிருக்கும் இந்திய‌த் தேசிய‌த்தைப் புக‌ழ்ந்து எழுத‌த் தொட‌ங்கினால் ஜெமோ அவ‌ரைத் த‌லையின் மேல் வைத்துப் பாராட்ட‌வும் த‌ய‌ங்க‌மாட்டார் என்ப‌தை நாம் அறியாத‌தும் அல்ல‌. இந்த‌ விட‌ய‌ம் குறித்து விம‌லாதித்த‌ மாம‌ல்ல‌னும் எழுதியிருப்ப‌தும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டிய‌து.

Muthu said...

உண்மை தகதகவென்று ஜொலிக்கும் பதிவு.

படிப்போர் கண்களை கூசவைக்கும் ஒளி தெறிக்கும் பதிவு.

அடேயப்பாஆஆஆஆ !!!

பிரியமுடன் ரமேஷ் said...

தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்... இங்கிருக்கும் ஊடகங்களும் இவர் போன்ற எழுத்தாளர்கள் பலரும்.. இந்தியாவின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அதைத் திருத்த முனைவதில்லை...இருக்கும் குப்பைகளை மூடி மூடி மறைத்து.. கலாச்சாரக் காவலர் வேடம் பூண்டு... நாங்கள் சுத்தமாய்தான் இருக்கிறோம் என்று நடித்துப் பெயர்பெறவே விரும்புகின்றனர். இங்கு வாலுல்ல நரி... குற்றவாளிதான்...

இரா.இளவரசன் said...

நன்றி..

Siva said...

இந்திய இறையாண்மை பற்றி எழுப்பியுள்ள கேள்விகள் இன்னும் நிறைய பேரிடம் சென்றடைய வேண்டும்.அதற்கு உதவுங்கள் பதிவர்களே.

இரா.இளவரசன் said...

@ Siva

ஒரு பதிவை பிரபலப்படுத்த இண்ட்லி போன்ற இணையங்களில் பிரபலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் இசையமைப்பாளரின் காப்பி பற்றி எழுதினால் 25 likes போடுகிறார்கள். தேசியத்தையும், அரசியலையும், மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சமூக அவலங்களையும் எழுதினால் 5 like தாண்ட மறுக்கிறது! மக்களின் தரம் அப்படி. அப்படிப்பட்ட தரத்தில் தான் அரசியலும் இருக்கிறது. சில வேளைகளில் நம் மக்களை நினைத்தால் "They deserve what they get" என்று தோன்றுகிறது.

Augustin said...

Inthiya iraiyaanmai engira maayaiyai vaiththu vibachchaaram pannum arasiyal vibachchaarigalukku seruppadi!

TechTamil Karthik said...

We Love Cricket!
We Love Movie stars!

We wont fight back if someone fuck us.

Because., We made this impotent government. We have impotentcy to do protests. Thats fucking DNA of Gandhi & his followers.

It would be real great, If you let me know more about that protest of rape victims of indian army.

Tahmizhachi said...

very detail and neatly written article. i read J.M's article too, after reading that i was bit confused. now reading your article cleared the clouds. Thanks for sharing your views to make people like me know more about fake " Indian Iraiyaanmai"

Anonymous said...

அருமையான கருத்து. சுயத்தை ஆராய்ந்து பார்த்துத் தவறுகளைத் திருத்தாது எல்லாவற்றையும் மூடி மறைத்து வேடம்போடும் கூட்டம் இங்கு நிறைந்துள்ளது.
சுண்டைக்காய் சிறீலங்காவிடமிருந்து தனது நாட்டு மீனவர்களின் காக்க முடியாத இந்தியா 2020 இல் வல்லரசாகும் என்று கூறிக்கொள்வதில் இந்தத் தேசியம் பேசும் "மேதாவிகளுக்கு" ஒரு அற்ப சந்தோசம்.

Related Posts Plugin for WordPress, Blogger...