Saturday, December 4, 2010

ரத்த சரித்திரம்- விமர்சனம்

 (To read this review in english click here http://readthemovies.blogspot.com/2010/12/rathacharithram-tamil.html)
தெலுங்கிலும், இந்தியிலும் இரண்டு பாகங்களாக வந்திருக்கும் 'ரத்தச்சரித்திரம்', தமிழில் ஒரே பாகமாக வெளிவந்துள்ளது. தெலுங்கிலும், இந்தியிலும் வந்த இரண்டாம் பாகம் தான் இது. முதல் பாகத்தில் பிரதாப் ரவி (விவேக் ஓபராய்) கதாநாயகன், இரண்டாம் பாகத்தில் சூர்யா (சூர்யா) கதாநாயகன். அதனால் தமிழ் ரத்தச்சரித்திரத்தில் விவேக் ஓபராயின் முதல் பாகத்தை நாடகங்களில் வரும் 'இதுவரை' பகுதி போல முதல் 30நிமிடங்களில் காட்டுகின்றனர். இது மட்டுமே படத்தில் கொஞ்சம் நெருடல். ஒரு டாக்குமென்டரி படம் பார்த்தது போல் இருக்கிறது. கவுதம் மேனனுக்கு பதில் வேறு யாரையாவது பின்ணணி (Narration) பேச வைத்திருக்கலாம். அவர் படங்களில் வரும் வில்லன் பாத்திரங்கள் பாணியில் தான் பேசுகிறார். முதல் 30நிமிடங்களில் சராசரியான ஆளாய் இருந்து பழி உணர்ச்சியில் வன்முறை வெறியாட்டம் ஆடி, அரசியல்வாதி ஆகும் விவேக் ஓபராய் நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார்.

 'இதுவரை' பகுதி முடிந்தபின் ரவியை பழி வாங்க ஒருத்தன் வந்துவிட்டான் என சொல்லி சூர்யாவை காட்டுவதில் இருந்து படம் துவங்குகிறது. சூர்யா எதற்காக பழி வாங்குகிறார்? கடைசியில் ரவியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் ரத்தச்சரித்திரம். 
  
சூர்யா தாடியுடனும், முரட்டு உடம்புடனும் படம் முழுவதும் பழி வாங்கும் உணர்ச்சியும், வேதனையும், வெறியும் கண்களில் கசிய நடித்திருக்கிறார். எனக்கு எப்போதுமே தெலுங்கில் உள்ள அளவுக்கு தமிழில் இளம் நடிகர்கள் இல்லையோ என்ற வருத்தம் உண்டு. ஆனால் சூர்யாவைப் பார்க்கும் போது மட்டும் சூர்யாவைப் போல இந்திய மொழிகளில் வேறு நடிகர் இல்லை என்றே தோன்றுகிறது. பொதுவாக இந்திய நடிகர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். உடற்பயிற்சி மட்டுமே செய்து நடிப்பதற்கு அது மட்டுமே போதும் என நினைத்து திரையில் எப்போதும் ஜட்டியுடன் நிற்கும் ஜான் ஆபிரகாம் போன்ற நடிகர்கள். சல்மான் கான் கூட இப்போது வரும் பல படங்களில் அப்படித்தான் நினைத்து நடிக்கிறார். இன்னொரு வகை நடிப்பதற்கு முதலில் 'நடிப்பு' முக்கியம் என நினைத்து நடிக்கும் அமீர்கான், அபிசேக் பச்சன், மாதவன் போன்ற நடிகர்கள். ஆனால் சூர்யாவிடம் மட்டுமெ இந்த இரண்டும் உண்டு. ஆலிவுட் கதாநாயகர்களுக்கு நிகராக உடலமைப்பும், உலகதரத்தில் நடிப்பும் ஒருசேர வாய்க்கப்பட்டிருக்கிறது அவருக்கு. ரத்தச்சரித்திரத்தில் சீறி, அழுது, வெறியில் உறுமி நடிப்பில் வெளுக்கிறார். வாழ்த்துக்கள்.

ராம்கோபால் வர்மா போன்றதொரு 'காட்ஃபாதர்' ரசிகரை இந்த உலகம் சத்தியமாய் கண்டிராது. சர்க்கார், சர்க்கார் ராஜ், ரத்தச்சரித்திரம் என தனது படங்கள் எல்லாமே காட்ஃபாதரின் வண்ணத்தை அழகாக தங்களுக்குள் அடக்கியிருக்கும் படங்கள். படத்தின் வில்லன் கதாப்பாத்திரங்களில் கூட நம்மை முழுதாய் மூழ்க செய்கிறார். காமிரா ஆங்கில்களில் இருந்து, சூர்யாவுக்கு உதவும் அரசியல் வாதியின் செகரட்டரி பெண்ணின் மெலிதான சிரிப்பு வரை அத்தனையிலும் ராம்கோபால் வர்மாவின் கையெழுத்து தெரிகிறது.

திரையரங்கு காலியாக கிடந்தது. பலபேர் இதை முழு டப்பிங் படம் என நினைத்து பார்க்கவரவில்லை. ஆனால் படம் வெகுசில இடங்களில் மட்டுமே மொழிமாற்று படம் போல் உள்ளது. அரசியல்வாதிகளில் ஆடைகள் முதலியன மற்றுமே வேற்றுமொழித்தன்மையை காட்டிக்கொடுக்கின்றனவே தவிர பல இடங்களில் தமிழ்ப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள். அதனால் ராஜசேகர் பட டைப்பில் 'டேஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்' போன்ற வசனங்கள் கிடையாது. தைரியமாய் பார்க்கலாம். வன்முறை சற்று அதிகம் தான். ஆனால் ரத்தவெறியில் திளைக்கும் ரவுடிகளின் சரித்திரம் என்பதால் இந்தளவு வன்முறை தவறில்லை. சூர்யா சில நாட்களுக்கு முன் "குழந்தைகளுடன் பார்க்காதீர்கள்" என சொல்லியிருந்தார்.
உண்மைதான். குழந்தைகளுடன் பார்க்க ஏதுவான படமில்லை. ஆனால் நாம் கண்டிப்பாய் பார்க்கலாம்.

இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான, உண்மையில் வாழ்ந்த இரண்டு பேரைப் பற்றிய அருமையான வாழ்க்கை சரிதை படம் இது. கண்டிப்பாய் பாருங்கள்.

 (To read this review in english click here http://readthemovies.blogspot.com/2010/12/rathacharithram-tamil.html)

2 comments:

TechTamil Karthik said...

Vivek looked really like a DON. Hats off to Vivek & Surya.

vIns said...

I really luved this movie...good to c nice review

Related Posts Plugin for WordPress, Blogger...