Thursday, December 30, 2010

தமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு..

நேற்று நான் எழுதிய சீமானின் கட்டுரை சீமானின் மீதான விமர்சனமாக பலரால் பார்க்கப்பட்டாலும், சில அடிமைகள் அதை தாக்குதலாகத்தான் மாற்ற முற்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் அந்த தாக்குதலை நிரூபிக்க எனது அந்த கட்டுரையில் இருந்தே மேற்கோள்கள் காட்டியிருந்தால் கூட சபையில் அது எடுபட்டிருக்கும். ஆனால் நான் திமுக ஆதரவாளன் தான் என்றும், சாதிப்பற்றே காரணம் என்றும் புதிதாய் ஒரு தாக்குதலை அரம்பித்திருக்கிறார்கள் இந்த கருத்தற்ற அடிமையாய் இருப்பதில் கருமமே கண்ணாகக் கொண்ட அடிமைகள். இவைகளை செருப்பில் ஒட்டிய கழிவாக ஊதாசீனப்படுத்திச் செல்லவே எனக்கு விருப்பம் என்றாலும் அடிமைக் கூட்டத்தில் முதுகெலும்புள்ள பிராணி ஒன்றாயினும் இருக்கும் என்ற சின்னஞ்சிறிய நம்பிக்கை இருப்பதால் விளக்கம் கொடுக்க கடமைப் பட்டவனாய் இருக்கிறேன்.

முதலில் திமுகவையும் அவர் குடும்பத்தையும் நான் எந்தப் பதிவிலும் தாங்கிப் பிடிக்கவில்லை. ஈழப்போரில் திமுகவின் துரோகம் தங்களை பாதித்ததாக சில அடிமைகள் எப்படிச் சொல்கின்றனவோ அதற்கு மேல் என்னை பாதித்தது. இது என்னைப் புரிந்தவர்க்குத் தெரியும். இருப்பினும் நான் எழுதியுள்ள கட்டுரைகளின் வரிகளில் இருந்தே சில மேற்கோள்களைக் காட்டுகின்றேன், மேலும் நான் திமுக அனுதாபியா இல்லையா என்பதை இன்னும் கொஞ்சமே கொஞ்சம் முதுகெலும்புள்ளதாய் நான் நம்பும் சிலர் முடிவு செய்துகொள்ளட்டும்.

தமிழ்தேசியத்திற்கு எதிராவன் எழுதும் கட்டுரையா இவைகள்? படித்துப் பார்த்து அறிவுள்ளவன் உறைக்கட்டும். எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்.

அருந்ததி ராயும், தேசிய போதை மருந்தும்
http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_31.html
நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்?
http://ilavarasanr.blogspot.com/2010/12/blog-post_09.html

மேற்கண்ட கட்டுரைகளை நான் எழுதிய போது பல்லிளித்து பாராட்டிய தமிழ் தேசியவாதிகளுக்கு சீமானை விமர்சித்தவுடன் நான் தமிழ் தேசிய விரோதியாம்!

"உண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது."

"'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, "ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்."

மேற்கண்ட வரிகள் நான் "ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்"  என்ற கட்டுரையில் எழுதியவை. இதெல்லாம் இந்த கூனர்களுக்கு உறைக்காமல் போனதெப்படி? இதெல்லாம் திமுகக்காரன் எழுதுவதா? சாதிப்பற்றா? நான் சொல்லவா சீமான் பசும்பொன்னில் மாலையிட்டதால் உங்களுக்கெல்லாம் சாதிப்பற்றி பீறியடித்து சீமானின் காலை நக்குகிறீர்கள் என்று?

சொல்லமாட்டேன்! நீங்கள் எவ்வளவு தரக்குறைவாய் என்னை விமர்சித்தாலும் சொல்லமாட்டேன். என் நெஞ்சில் இன்னும் நீங்கள் உணர்வுக்காகவே சீமானுடன் நிற்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். மக்களின் ஆரவாரங்களைப் பார்த்து வெட்கப்படும், அகமகிழும் ஒரு 'applause addicted' தலைவனை விடுதலை வீரன் என தயவு செய்து சொல்லாதீர்கள். வேறு எவன் சொல்வதை விடவும் ஒரு காலத்தில் எனக்குள் இனப்பற்றை ஊட்டிய சிலர் சொல்வது மிகவும் வலிக்கிறது. ஆனால் உங்கள் மீதான என் நம்பிக்கையை என் மீது நீங்கள் வைக்கும் கருத்தற்ற மோதல்களிலும், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலமும் சிதைக்கிறீர்கள்.

இதுவரை என் கட்டுரைக்கு ஒரு கருத்துடன் கூடிய பதிலை உங்களால் தர முடிந்ததா? நான் திமுக காரன் என்ற இழிவிமர்சனத்தைத் தவிர உங்களால் என்ன சொல்ல முடிந்தது?
சீமான் மீது நான் விமர்சனம் வைத்தால் நான் திமுக காரன். அவன் வைத்தால் அவன் கம்யூனிஸ்ட். இவன் வைத்தால் இவன் தமுஎச. அவர் வைத்தால் அவர் காங்கிரஸ். இவர் வைத்தால் இவர் பிஜேபி. செவ்வாய் கிரத்தில் இருந்து வரச்சொல்லவா? அடச்சீ! இவ்வளவுதானா 'நாம் தமிழர் இயக்கம்'? "நாம் தமிழர் நாம் தமிழர்" என மேடைக்கு மேடை தொண்டை புடைக்க முழங்கும் வீரர்கள் மத்தியில் கருத்துடன் பேச ஒரு தமிழன் கூடவா மிச்சமில்லை?

உங்களைப் போன்றவர்களால் வீழ்ந்த எம் தமிழினத்துக்கு  விடிவு என்று கனவிலும் நினையாதீர்கள். அது அந்த மாவீரர்களின் சமாதியில் எச்சில் துப்புவதற்கு சமம். மூன்றாம் தர அரசியலை உங்கள் தலைவன் கையிலெடுத்து, கைத்தட்டுக்காகவும், வாழ்க கோஷத்துக்காகவும் பேச ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. ராகுலை சந்தித்தி கால் நக்கிய விஜய்யை மானமுள்ள தமிழன் என உங்கள் தலைவன் சொல்லும்போது மூடிட்டு கேக்க நான் என்ன முதுகெலும்பில்லாதவனா?

எனக்கு அடிமைப் புத்தி கிடையாது. கருணாநிதி என்றாலும், ஜெயலலிதா என்றாலும், சீமான் என்றாலும் நான் விமர்சனம் செய்யத்தான் செய்வேன். தப்பெனத் தெரிந்தால் மன்னிப்புக் கேட்கும் மனப்பக்குவமும் எனக்குண்டு. உங்களில் ஒரு தமிழன், ஒரே ஒரு தமிழன் மிச்சமிருந்தால் என்னுடன் கருத்து ரீதியான மோதலுக்கு வாருங்கள். இல்லை மூடிக்கொண்டு விசிலடிக்கப் போங்கள். இங்கு வரத் தகுதியில்லை. என் கட்டுரை சேருவோரைப் போய்ச் சேரும்.

(இது ஒரு தரம் தாழ்ந்த கட்டுரை என்றே படுகிறதெனக்கு. "பேயுடன் மோதும் போது நீ பேயாக மாறக்கூடும்" என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு.  இந்தப் பேய்களுடன் இதுதான் கடைசி மோதல். இனி இப்படிப்பட்ட கோபத்துடனான தரம் தாழ்ந்த கட்டுரைகளை நான் எழுதப்போவதில்லை. நன்றி)

Wednesday, December 29, 2010

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்!

தமிழ் உணர்வாளர்களின் கடவுளான சீமானைப் பற்றி ஏதெனும் எழுத ஆரம்பிக்கும்போதே எவ்வளவு ஏச்சுக்கள் வாங்க வேண்டியிருக்குமோ என்ற பதற்றமும் தொற்றி கொள்கிறது. சமீப காலமாக கடவுள் சீமான் மீது விமர்சனங்கள் வைப்பதென்பது கத்தியில் நடப்பது போன்ற பிரம்மையை மாற்று கருத்தாளர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது. இன்னும் சுலபமாகச் சொல்லப்போனால் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ஒரு சினிமாவின் முதல் காட்சியில், முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் ஒருவன், "ரஜினி என்னப்பா நடிக்கிறாரு? கண்றாவி" எனச் சொன்னால் அவனுக்கு எதிராக அந்த திரையரங்கில் ஒரு எதிர்ப்பலை எந்த வேகத்தில் கிளம்புமோ அந்த அளவுக்கு சீமானைப் பற்றி பேசும்போது கிளம்புகிறது.

திராவிடப்பற்று தமிழ்ப்பற்றாக மாறி, இப்போது தமிழ்ப்பற்று சீமான் பற்றாக மாறியுள்ள நிலையில், இந்த சீமான் பற்றானது சீமான் என்ன சொன்னாலும் சரி, ஏது சொன்னாலும் சரியென ஒரு மனநிலையை சீமானின் ஆதரவாளர்கள் மனதில் வளர்த்துவிட்டிருக்கிறது என்ற விஷயமே பயம் தருவதாய் உள்ளது.

தலைவனை எதிர்த்து கேள்வி கேட்க திராணி இல்லாமல் பயந்திருந்தால் அவர்களை அடிமைகளெனச் சொல்லலாம். தலைவன் மீதான பற்றால் கேள்வியையே சிந்திக்க முடியாதவர்களை என்னவென்று சொல்வது?

ஆரம்பகாலங்களில் தனக்கு மேடைகளே இல்லாத காலத்தில் மேடைகள் அமைத்துக் கொடுத்த பெ.தி.கவின் மேடைகளில் "பெரியாரின் பேரன் நான். பிரபாகரனின் மருமகன் நான். மார்க்ஸின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் நான்" என அரங்கதிர முழங்கி கைத்தட்டுக்களை அள்ளிச் சென்ற சீமான், சில மாதங்களுக்குப் பின்பு பெரியார் மீதான சாதிய அடிப்படையிலான சீமானின் குற்றச்சாட்டு ஒரு பேட்டியில் வெளிவந்திருந்தது. "பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது."என மிகத்தெளிவாய் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். 

தாழ்த்தப்பட்வர்களுக்காக ஒன்றுமே செய்யாத ஒரு வக்கற்ற கிழவனின் பேரானக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்ட காரணம் என்ன? ஏனெனில் அப்போது அவர் பேசியது பெ.தி.க மேடை. அதில் இருந்தவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள்.

சில காலம் சென்று, மேடையேறிய பலனாக, தொண்டை புடைக்க கத்திய பலனாக, கட்சியும் ஆரம்பித்தாகிவிட்டது. திருமணம் ஆனவுடன் முதலிரவுதான் முதல்வேலை என்பதைப் போல், தமிழகத்தில் கட்சி ஆரம்பித்தவுடன் எது முதல் வேலை? பசும்பொன் சென்று சரணாகதி ஆவது! அங்கே சரணாகதி ஆகிய அடுத்த நொடி தன் தாத்தா எனச் சொல்லி பெரியாரை புகழடையச் செய்த சீமானுக்கு திடீரென சினிமாவின் இடைவேளைக் காட்சிகளில் வருவது போல் தன் தாத்தா கெட்டவரெனத் தெரிகிறது. உடனே மேற்கண்ட பேட்டியை கொடுக்கிறார். பெரியார் மீதும் அவர் செய்த திராவிட அரசியல் மீதும் கோபம் கொண்டு, திராவிடம் என்பது ஆரியத்தை விடவும் தமிழர்களுக்கு விரோதமானது எனவும் சித்தரிக்கிறார்.

 'நாம் தமிழர்' கொள்கையில் 'நாம்' என்பதில் தமிழ் நாட்டில் உள்ள, தமிழை தாய்மொழியாய் கொண்டுள்ள பிராமணர்களும் அடங்குவார்களா? அவர்கள் திராவிடர்கள் அல்லாததால் அவர்கள் தமிழர்களும் கிடையாதே, அதனால் அவர்கள் அடங்கமாட்டார்களா? ஒருவேளை அவர்கள் அடங்கவில்லை என்றால் சீமான் செய்வதும் திராவிட அரசியல் தானே! பெரியார் செய்த அதே அரசியல் தானே? நாம் தமிழரில் 'தமிழர்' என்ற வார்த்தைக்கான வரையறையும் விளக்கமும் சீமானின் பேட்டிகளை விட குழப்பமாகவே உள்ளன.

ஈழத்தாய், இலையால் ஈழத்தை மலர வைக்கத் தகுதியுடைய ஒரே தெய்வத்தாய், தமிழச்சி ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி மேடைகளில் இருந்தபடியே கும்பிட்ட கடவுள் சீமான், தேர்தல் முடிந்த பின், தன் பேச்சுக்கள் செல்லுபடியாகாதது தெரிந்த பின், கீற்று பேட்டியில் சொல்கிறார், "தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்."என்று. இதெல்லாம் மேடையில் 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொன்னபோது செலக்டீவ் அம்னீஷியாவால் மறந்து போனார் போல! அடேயப்பா. ராமதாசிடம் ஆரம்ப காலத்தில் அரசியல் கல்வி கற்றதனாலோ என்னவோ குருவை மிஞ்சும் சீடனாக சீமான் வளர்ந்திருப்பதையே இது உணர்த்துகிறது!

தமிழகத்தில் சிறைக்கு சென்றோர் யாவருமே புரட்சியாளர்கள் தானே! வெளியில் வந்தவுடன் ஏற்கனவே பெரியாரையும், திராவிடத்தையும் சீமான் விமர்சித்ததை பல கருப்புச்சட்டைகள் பலமாக எதிர்த்து வருவதால் அதை சமாளிக்க உடனே ஒரு 'பெரியார்-எம்.ஜி.ஆர் வீர வணக்கக் கூட்டம்' போட்டுவிட்டார்! அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதை கவனித்தவர்களுக்குத் தெரியும், பெரியாரைப் பற்றி ஒருநிமிடம் பேசிவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி மீதிநேரம் முழுதும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். விஜயகாந்ததை கருப்பு எம்.ஜி.ஆர் எனச் சொல்லி எம்ஜிஆர் பெயரால் அரசியல் செய்வதைப் போல! ஒன்று மட்டும் நிதர்சனம். தமிழகத்தில் அரசியலில் வளர பெரியாரையும் எம்ஜிஆரையும் பிடித்துத் தொங்கியே ஆக வேண்டும்! சீமான் அழகாக அதையும் செய்கிறார்!

மேலும் பெரியார், எம்.ஜி.யார் வீரவணக்கக் கூட்டத்தில் சீமானின் அதிரடி வசனங்கள் ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த் வசனங்களை விட நல்ல கைத்தட்டல்களும், விசில்களும் பெற்றன. போஸ்டர்கள் கூட கையை முறுக்கி, வானைக் காட்டி, முகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விஜயகாந்த் போல கர்ஜனைகள் காட்டி ஒரு அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவுக்கான அனைத்து 'பில்டப்'களையும் உள்ளடக்கியதாகவே இருந்தன.

மேடையில் நின்றவுடன் விசில் சத்தம் காதைப் பிளந்தது. வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. மேடையில் பூ எறிகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க கூட்டங்களில் கூட மேடையில் பூ எறியப்பட்டு நான் பார்த்ததில்லை. திரையரங்குகளில் மட்டுமே நடக்கும் கூத்து இது! இதையெல்லாம் கவனிக்கும்போது சீமானும் அவரைப் பின்தொடர்பவர்களும் லட்சியமாகக் கொண்டுள்ள தமிழ் தேசியம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளை உருவாக்கி, அதில் அமைக்கப்பெருவதாய் இருந்தால் அது தமிழனுக்கு இந்திய தேசியம் விளைவித்துக் கொண்டிருக்கும் தீமையை விட மோசமானதாகவே இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தர அவர் தயாராகி விட்டார் என்றே அந்தக் கூட்டம் தெள்ளத் தெளிவாய் காட்டியது. தமிழகத்தில் கூட்டணி மாற்றத்துக்கான எல்லா வில்லங்க வேலைகளையும் ஏற்கனவே காங்கிரசு செய்யத்துவங்கி விட்ட நிலையில் நாளை தீடிரென ஜெயலலிதாவும் காங்கிரசும் கூட்டணி போட்டால் என்ன செய்வார் என்பது அவருக்கே வெளிச்சம்!

எல்லாவற்றுக்கும் மேல் ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த போது ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பதவி கேட்டு இரந்து கெஞ்சிய நடிகர் விஜய்யை "விஜய் ஒரு மானமுள்ள தமிழன்" என சீமான் இப்போது விளித்திருப்பதுதான் ஹைலைட்! இவருடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தால் அவர் எவராயினும் மானமுள்ள தமிழன் ஆகிவிடலாம் என்ற அளப்பெரிய கருத்தை உணர்த்தியுள்ளார்!

இப்படி அடுத்தடுத்த பேச்சுக்களாலும், பேட்டிகளாலும் சீமான் சந்தர்ப்ப அரசியலை மிக குறுகிய கற்று தெளிந்துவிட்டார் என்பது தெளிவாகவே நமக்குத் தெரிய வருகிறது.

சிலகாலம் முன்பு சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு கருப்புச்சட்டை அண்ணனுடன் மதுரையில் பேசிக்கொண்டிருந்த போது சீமான் மீதான தன் அதிருப்தியை இப்படிச் சொன்னார், "அவனிடம் பலமுறை சொல்லிவிட்டேன். ஒன்று அரசியல்வாதியாய் இரு இல்லை சினிமாக்காரனாய் இரு. இரண்டையும் கலந்தால் நீயும், கொள்கைகளும் காணாமல் போய்விடும்" என்று. அந்த அண்ணனை இப்போது சீமான் கூட்டங்களில் பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல்தான் நடக்கிறது இப்போது.

சீமானின் ஆதரவாளர்கள் எனது இந்தப் பதிவுக்கு கூட கருத்து ரீதியான மோதலுக்கு வரமாட்டார்கள். என்னை முகநூலில் திட்டியதைப் போல "நீ சினிமா தானே எழுதுவாய்? உனக்கேன் இந்த அக்கறை?" என்றெல்லாம் கேட்பார்கள். எனது ஓரிரு சினிமா கட்டுரைகளை மட்டும் மனதில் வைத்து, நான் எழுதியிருக்கும் ஏராளமான அரசியல் கட்டுரைகளை முன்னர் பாராட்டியதையெல்லாம் தலைவன் வழியில் சுலபமாய் மறந்து போவார்கள். ஆனால் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அவர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான், தான் இயக்கிய திரைப்படத்தில் உதட்டு முத்தம் காட்சி வைத்து படம்பிடிக்கும் அளவுக்கு சினிமாவில் ஊறிப்போன ஒரு சினிமாக்காரனுக்கு திடீரென தந்தை பெரியார் மீதும், பிரபாகரன் மீதும், தமிழ் மீதும் பற்று வரும் போது.... எந்த வகையில் நான் கேள்வி கேட்கும் தகுதியை இழக்கிறேன் என்பதுதான்!

இந்திய போலி தேசியத்துக்கெதிரான போரை அருந்ததிராய் போன்ற கருத்தியலாளர்கள் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் போரின் தமிழகப் பிரதிநிதியாக யாரை நாம் முன்னிறுத்தியிருக்கிறோம் என்பதைச் சற்று நிதானத்துடன் யோசிக்க வேண்டும்.

மிகவும் கவனமாய் சீமானை அணுக வேண்டிய காலம் இது.  சீமானை ஒரு விடிவெள்ளியாகச் சித்தரிப்பதும், அவசரகதியில் இளைஞர்களிடம் அவரைச் சேர்ப்பதும் தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானதாகவே படுகிறது. அவர் பின் இப்போது நிற்கும் இளைஞர்கள் முன் அவர் ஒரு ஹீரோவாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே விசிலடித்து விசிலடித்தே சிந்திக்கும் திறனை இழந்த இளைஞர்களை மேலும் மேலும் சீரழிக்கும் யுக்தியே அன்றி இதில் வேறு கொள்கை இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை!  நிதானித்து இன்னும் கவனிப்போம்! தேர்தலுக்கும் முகமூடிகள் எப்படியும் கிழிந்துவிடும்! .


Tuesday, December 28, 2010

பால்பூத் பூச்சாண்டி


மிகவும் முக்கியமான ஒருவரை என் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். அவர் இல்லையென்றால் இந்நேரம் நான் எங்காவது கூலி வேலையோ, அல்லது பிச்சை கூட எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். இல்லை என் வாழ்க்கையில் எந்த பாதிப்புமே இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஒரிருமுறை மட்டுமே என்னுடன் பேசியுள்ள அவருடனான எனது உறவை என்னால் விளக்க முடியவில்லை. ஒருவேளை இருபது வருடங்களுக்கு முன்னால் உங்களைக் கூட்டிச் சென்றால் உங்களுக்குப் புரியலாம். நான் அவரின் இருப்பிடம் செல்ல எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். என்னுடன் பயணியுங்கள்.

அம்மா “பால்பூத்” என்று சொன்னாலே இதயம் வேகமாய் அடிக்கும். முகம் வியர்க்கும். எப்படியாவது உயிரைக் கொடுத்தாவது அம்மாவை அங்கு போகாமல் தடுத்துவிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். சில நேரங்களில் எனது மற்றும் அர்ச்சனாவின் அழுகைக்காக அம்மா போகாமல் கூட இருந்திருக்கிறார்கள். மற்ற நேரங்களில் தேவையான அளவு அழுகை வராததால் நாங்கள் தோற்று விடுவோம். அம்மாவும் பால்பூத்துக்கு சென்றுவிடுவார். பின் அவர் வீடு திரும்பும்வரை நானும் தங்கையும் எதேனும் சாமி படம் முன்பு உட்கார்ந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருப்போம்., அம்மா பத்திரமாக வீடு சேர வேண்டுமென. எங்கள் பயத்துக்கான காரணம் அவர். அவர் பால்பூத்தில்தான் இருந்தார். 

அவரது வீடு அந்த நீலக்கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த பால்பூத் தான். காலையிலும் மாலையில் பால் விற்பனை செய்வார். மீதி நேரங்களில் அங்கேயே அமர்ந்து யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். பல நேரங்களில் எதேனும் சிறுவனோ சிறுமியோ தான் அங்கு இருப்பார்கள். பெரும்பாலும் அழுதுகொண்டுதான் இருப்பார்கள்.

அப்போது எனக்கு ஒரு எட்டு வயது இருக்கலாம். அவருக்கு கண்ணிமை தவிர்த்து முகத்தில் இருக்கும் முடிகள் வெள்ளைவெளேரென தும்பைப் பூ போல் இருக்கும். பனைமரம் போன்ற உயரமும் மெலிந்த ஆனால் திடனாப தேகமும் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு நட்பு பாரட்டவல்ல முகம் அவருக்கு நிச்சயமாய் கிடையாது. பேய் படங்களில் வரும் சாருஹாசன் போல ஒரு பயத்தை வரவழைக்கும் தோற்றம் அவருடையது. வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் மட்டும் தான் எப்போதும் அவரது உடையாக இருந்தது. பார்ப்பதற்கு வெள்ளைவேட்டி போல் இருந்தாலும் சகதியில் புரட்டி எடுத்து பின் துவைத்து உடுத்திய வண்ணத்தில் தான் அவர் உடைகள் எப்போதும் தோற்றமளித்தன.

பால் பூத் பக்கம் அம்மாவுடன் கைப்பிடித்து நடக்கும் போதெல்லாம் தன் கண்களை வெகுவாய் சுருக்கி என்னையும், தங்கை அர்ச்சனாவையும் பார்ப்பார். தானாக என் கை அம்மாவின் கைகளை இருகப்பற்றும். தங்கை பயத்தில் குதிக்க ஆரம்பித்துவிடுவாள். அந்தப்பக்கம் போகும் போதெல்லாம் எனக்கு கையும், அர்ச்சனாவுக்கு முகமும் வியர்க்கத் துவங்கி விடும். எங்கள் தொல்லை தாங்காமல் பலமுறை வாங்க வேண்டியதை வாங்காமல் பலமுறை வேகமாக வீடு திரும்பியிருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் கல்லாகி விடுவோம் என சில சிறுவர் கதைகளில் வருமே, அதைப் போலத்தான் இருக்கும் எங்கள் நடை. அம்மாவை இழுத்துக்கொண்டு திரும்பியே பார்க்காமல் வேகமாக நடப்போம். வெகுதூரம் சென்றதும் ஒரு வளைவு வரும், அந்த வளைவின் போது மட்டும் கொஞ்சமாக திரும்பி பால்பூத்தைப் பார்ப்போம். “மறுபடியும் வராமயா போயிருவ? அப்ப பாத்துக்கறேன்” எனச் சொல்வதைப் போல அதே இடத்தில் நின்று அவர் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இப்படியாகப்பட்ட அவருக்கும் எங்களுக்குமான உறவு எங்கள் வீட்டில் ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்பட்டு வந்தது. அர்ச்சனா சாப்பிட அடம் பிடிக்கும் சமயங்களில் எல்லாம் அம்மாவின் பிரம்மாஸ்திரம் பால்பூத் பூச்சாண்டிதான். யார் முதலில் ‘பால்பூத் பூச்சாண்டி’ வார்த்தையை கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை. அநேகமாக அம்மா அதை ஒருமுறை அர்ச்சனாவிடம் சொல்லி பின் அர்ச்சனா அந்த வார்த்தையை பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். என்னென்ன வகை பூச்சாண்டிகளையோ அம்மா சொல்லிப் பார்ப்பார். கடைசியாக வேறு வழியே இல்லையென்றால் தான் ’பால்பூத் பூச்சாண்டி’யை துணைக்கு அழைப்பார். அவர் பேரை சொல்லும் போதெல்லாம் அர்ச்சனா வேகமாக சாப்பிட்டுவிடுவாள் என்றாலும் அன்று முழுதும் ஒருவித பயத்தினோடே இருப்பாள். சாப்பிட்டு முடித்தும் கூட பால்பூத் பூச்சாண்டி அவள் மனதில் நின்று பயமுறுத்திக் கொண்டிருப்பார் என அம்மாவுக்குத் தெரியும். அதனால் அம்மாவும் அதை பரவலாக உபயோகிப்பதில்லை. எப்போதாவது அர்ச்சனாவின் பிடிவாதம் கைமீறி போகும் போதுதான்.

பால்பூத் பக்கம் நாங்கள் போகும் போதெல்லாம் அவர் கண்களை சுருக்கி எங்களைப் பார்ப்பது எங்களின் பயத்திற்கு உரம் போட்டிருந்தது. இது போல பால்பூத் பூச்சாண்டி எங்களை சகல விஷயங்களிலும் ஆட்கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு வழக்கமான வேலை நாளில் கவர்னர் இறந்து போய் விட்டார். அவர் மரணம் அவர் குடும்பத்தை பாதித்ததை விடவும் என்னையும் அர்ச்சனாவையும் நேரடியாக பாதித்தது. அது உண்மையோ என்னவோ, அன்று நாங்கள் அனுபவித்த பயத்தை நினைத்தால் இன்றுகூட எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

அந்த பிரச்சினைக்குரிய பால் பூத்துக்கு அருகில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நிறுத்தம் இருந்தது. எங்கள் வீட்டில இருந்து ஒரு கீமீ இருக்கலாம். தினமும் காலையில் அம்மா தான் எங்களை வீட்டில் இருந்து அந்த நிறுத்தத்துக்கு கூட்டி வருவார். பின் பேருந்தில் ஏறி சென்றுவிடுவோம். மாலையில் பேருந்து சரியாக 4 மணிக்கு எங்களை இறக்கி விடுவதற்காக அந்த நிறுத்தத்துக்கு வரும். அம்மாவும் சரியாக அங்கே வந்து காத்திருந்து எங்களை அழைத்துச் செல்வார். 

அன்று காலைகூட அப்படித்தான் நடந்தது. வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி நானும் அர்ச்சனாவும் பள்ளி பேருந்தில் ஏறி சென்று விட்டோம். அரை மணி நேரத்துக்கு முன் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்த, ஆளுனர் மரண செய்தியால் பள்ளிக்கு விடுமுறை விட்டிருந்தார்கள். பேருந்தை மாணவர்களை ஏற்றிவர அனுப்பிய பின்னே பள்ளிக்கு இந்தச் செய்தி கிடைத்திருந்ததால் தான் இந்த நிலை. அதனால் பள்ளி நிர்வாகம் மீண்டும் எங்களை வந்த பேருந்திலேயே ஏற்றி அவரவர் நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு நடத்துனரை பணித்து எங்களை அனுப்பிவிட்டது.

பேருந்தில் இருந்த எங்களுக்கு பயங்கர மகிழ்ச்சி. நடத்துனர் என்னைக் கேட்டார்,
“தம்பி பத்திரமா தங்கச்சிய கூட்டிகிட்டு வீட்டுக்குப் போயிருவேல?”
“அதெல்லாம் போயிருவேண்ணே”எனச் சொன்னேன். என் மீது சுமத்தப்பட்ட முதல் பொறுப்பு அது. நடத்துனரின் வார்த்தை முழுதாய் கேட்கும் முன்னரே மிகுந்த மகிழ்ச்சியுடன் பத்திரமாக தங்கையை வீட்டில் சேர்க்கத் தயாரானேன். பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் என்னையும் அர்ச்சனாவையும் நடத்துனர் இறக்கிவிட்டுவிட்டு,
 “வழில யாரு கூடயும் பேசாதீங்க. நேரா வீட்டுக்குதான் போகனும். நாளைக்கு ஸ்கூல் இருக்குனு அம்மாகிட்ட சொல்லிரு”எனச் சொல்லி முடித்தவுடன் பேருந்து கிளம்புவதற்காக விசில் அடித்தார்.

நானும் அர்ச்சனாவும் முதல் முறையாக தனியாக சாலையில் நின்றிருந்தோம். அர்ச்சனா என் கையை இறுகப் பிடித்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் கொஞ்சம் கூட பயமோ கலவரமோ இல்லை. முழுதாக என்னை நம்பியிருந்தாள். அதுவே எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால் பத்திரமாக வீடு சென்று சேருவதில் ஒரு சின்ன பிரச்சினை இருப்பதை அந்த நொடியில் தான் உணர்ந்தேன்.

தனியாக நடக்கவும், எவரையும் எதிர்கொள்ளவும் தங்கையின் நம்பிக்கை தைரியம் கொடுத்திருந்தாலும் வீட்டிற்கு செல்ல வழி தெரிய வேண்டுமே!! எப்போதும் அம்மாவுடனேயே வந்திருந்ததால் எது சரியான வழி என குழப்பியது எனக்கு. அர்ச்சனாவிடம் விஷயத்தைச் சொன்னேன், “அப்ப்ப்படியே நேரா போலாம்ணா.. நீ போ நான் வழி சொல்றேன்”எனச் சொல்லி சரியாக வீட்டிற்கு செல்லும் வழிக்கு எதிர்திசையில் இருந்த வழியைக் காட்டினாள். என்ன செய்வதென்று தெரியாமல் எதிரில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தைப் பார்த்தேன். தெரிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் யாருமே இல்லை. நிமிர்ந்து பார்த்த போது பால்பூத் பூச்சாண்டி எங்களுக்கு மிக அருகில் நின்று எங்களை உற்றுபார்த்துக்கொண்டிருந்தார்.

அர்ச்சனா அழுகவில்லை. உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தாள். கைகளை அவள் பிடித்தபிடி இன்றும் வலிக்கிறது எனக்கு.
அவர் பேசினார், “என்ன?”
“ஸூகூல் லீவு. வீட்டுக்கு போத் தெரில”
“பின்னால வா” எனச் சொல்லிவிட்டு முன்னே வேகமாக நடக்க ஆரம்பித்தார். வேறு வழியே இல்லாததால் அவரைப் பின் தொடர முடிவு செய்தேன். அர்ச்சனா அழுதுகொண்டே “அண்ணா வேணாணா.. அம்மா வர்ற வரைக்கும் இங்கயே நிக்கலாம்ணா” என்றாள்.
“அண்ணே இருக்கேன்ல. அம்மா வர்றதுக்கு சாயங்காலம் ஆகும்டா. அண்ணே கைய இறுக்கமா புடிச்சுக்க. நான் பார்த்துக்குறேன். சரியா?” என்றேன் “ம்ம்ம்”எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்துக் கொண்டாள். இருவரும் அவரை தொடர ஆரம்பித்தோம்.

வேகமாக நடந்துகொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைத் திரும்பிப் பார்த்தார். அவரது கைகளை பின்னால் கட்டியிருந்தார். முதுகில் இருந்து கொஞ்சம் முன்னே தள்ளி அவர் முகம் சாலையை எட்டிப் பார்த்தபடி இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான தூரம் அதிகமாவதாய் நினைத்தால் அவரின் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். அவர் அவ்வப்போது திரும்பிப் பார்ப்பது அதற்காகத்தான் என இப்போது எனக்கு புரிகிறது என்றாலும், அப்போது நானும் அர்ச்சனாவும் அந்த இடைவெளியை வேண்டுமென்றேதான் அதிகமாக்கினோம். இப்படியே ஒரு கீமீ தூரம் நடந்து எங்கள் வீடு இருக்கும் மூன்றடுக்கு மாடி கட்டிட வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

எங்களை உற்று பார்த்தபடி,
“இதான?” என்றார்.
“ஆமாம்”
“நல்லாத் தெரியுமா?”
“தெரியும். அம்மா சேலை காயிதுள்ள அந்த பால்கனி தான்.”
“சரி. போங்க. போயிட்டு பால்கனில இருந்து எட்டிப் பாருங்க” என்றார்.

நானும் அர்ச்சனாவும் வேகமாக படியில் ஓடினோம். அம்மா ஆச்சரியத்துடன் பார்த்தார். “டேய் யாரு கொண்டு வந்து விட்டாடா உங்கள?”என்றார். நானும் அர்ச்சனாவும் கண்டுகொள்ளவே இல்லை. ஸ்கூல் பேக்கை கீழே போட்டுவிட்டு வேகமாக பால்கனிக்கு ஓடினோம். கிரில் ஓட்டைகளின் நடுவே அவர் எங்கள் பால்கனியை பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அர்ச்சனா அவரைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்தாள். எங்களுக்கு பின்னால் அம்மாவும் நின்றிருந்தார். எங்களையும் அம்மாவையும் பார்த்துவிட்டு, வந்த வழியில் படு வேகமாக நடக்க ஆரம்பித்தார் அவர்.

இதற்கு பின் அம்மாவின் “பால்பூத் பூச்சாண்டி” ஆயுதம் அர்ச்சனாவிடம் செயலிழந்து போனது. ஒருமுறை அம்மா அதை உபயோகித்த போது “பூச்சாண்டி இல்லம்மா.. தாத்தா” என்றாள் அர்ச்சனா. அம்மாவும் நானும் சிரித்தோம். பால்பூத் பூச்சாண்டி பயம் மட்டுமல்லாது அடுத்தது எல்லா பூச்சாண்டிகள் மீதான பயமும் அர்ச்சனாவுக்கு போய்விட்டது!

பின்னாட்களில் பால்பூத் எங்களுக்குப் மிகவும் பழகிப் போனது. எனது பிஎஸ்சி சேம்ப் சைக்கிள் செயின் அறுந்து போனபோது அவர்தான் மாட்டிக் கொடுத்தார். அவர் அருகில் இருந்து பார்த்த போது காலை மாலை விற்பனை நேரம் தவிர பிற நேரங்களில் சும்மாவேதான் இருந்தார். அந்த வழியில் போகவரும் பிள்ளைகளுக்கு சைக்கிள் ரிப்பேர் செய்வது போன்ற வேலைகளை செய்வதே அவர் பிரதான கடமையாய் இருந்தது.
சில வருடம் கழித்து நாங்கள் வேறு இடத்திற்கு வீடு மாற்றி விட்டோம். அங்கே புதிய பால்பூத் ஒன்று இருந்தது. ஆனால் பூச்சாண்டியோ, தாத்தாவோ அங்கே யாரும் இல்லை. எல்லாரிடமும் எரிந்து விழும் ஒருவன் தான் இருந்தான். பால்பூத்துக்கு ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையில் இருந்த முக்கியத்துவத்தை மறக்க ஆரம்பித்து, காலப்போக்கில் அவரையும் மறக்க ஆரம்பித்துவிட்டோம். இருபது வருடங்கள் ஓடி விட்டது.  


இதோ பால்பூத் வந்துவிட்டது. இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறது. அவரை கடைசியாய் ஒரு பண்ணிரண்டு பதிமூணு வருடங்களுக்கு முன்னால் பார்த்திருப்பேன். என்னை அடையாளம் தெரியுமா எனத் தெரியவில்லை. அதோ. அவரைப் பார்த்துவிட்டேன். எங்கோ வேகமாக நடக்கிறாரே.. ஆனால் முன்பிருந்த வேகம் இப்போதில்லை. உடல் சற்று தளர்வாய் தெரிகிறது. ஆனால் கைகளை அதே போல் பின்னால் இறுக்கமாய் தீர்க்கமாய் கட்டியிருக்கிறார். அதே வெள்ளை உடைதான் உடுத்தியிருக்கிறார். அதே உடையாய் இருக்காது. அதே நிறத்தில் வேறு உடை. கார் கண்ணாடியை இறக்கிவிட்டுவிட்டு காரில் இருந்தபடியே கவனிக்கிறேன்.

ஒரு ஆறு வயது பையன் கையில் பம்பரத்துடன் கயிற்றை சுற்ற தெரியாமல் தப்புத்தப்பாய் சுற்றிவிட்டு நிற்கிறான். அவர் வேகமாக நடந்து வந்தது அவனை நோக்கிதான். அவன் கையில் இருந்த பம்பரத்தை வாங்கி நிதானமாய் சுற்றுகிறார். கையில் இருந்து பம்பரம் இப்போது தெருவில் இறங்கி சுற்றுகிறது. பம்பரத்தை கவனிக்காமல், சந்தோஷமாய் சிரிக்கும் அந்த பையனின் முகத்தை, தன் கண்களைச் சுருக்கி உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பால்பூத் பூச்சாண்டி’. அந்தப் பையன் சுற்றிமுடித்த பம்பரத்தை எடுத்து அவர் கையில் திணிக்கிறான்.

காரில் அமர்ந்து நான் இவை அனைத்தையும் கவனிப்பதை பார்த்துவிட்டார். அவரது கண்கள் வெகுவாகச் சுருங்கி என் முகத்தை உற்று நோக்குகின்றன. அவருக்கு என்னை அடையாளம் தெரிந்துவிட்டது. என்னைப் பார்த்து லேசாக சிரிக்கிறார். முதல்முறையாக அவர் முகத்தில் சிரிப்பை இப்போதுதான் பார்க்கிறேன். புன்முறுவலுக்கும் சும்மா இருத்தலுக்கும் இடைப்பட்ட சிரிப்பு அது. நானும் லேசாக சிரிக்கிறேன். இப்போது அவர் மீண்டும் பம்பரத்தில் மூழ்கி விட்டார்.

அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அதிமுக்கியமான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் பால் பூத் பூச்சாண்டி. எனக்கு மனம் நிறைய சந்தோஷமாய் இருக்கிறது. அவரை தொல்லை செய்ய விரும்பவில்லை. சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பிவிடுவேன். இந்த தெருவில் இருக்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். கடவுளை விடவும் நல்ல மனம் படைத்த பூச்சாண்டி அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.  

Monday, December 27, 2010

பதிவுலகம் என்ன குப்பைத் தொட்டியா? (100வது பதிவு!)

இது என் நூறாவது பதிவு. இந்த பதிவை படிச்சுட்டு "இனிமே இவன் பக்கமே வரக்கூடாதுடா யப்பா"னு நீங்க போனா கூட பரவால்ல. ஆனா சொல்லனும்னு நினைச்சதை சொல்லி முடிச்சிர்றேன்.

மூணு வருசமா இதுவரைக்கும் 100 பதிவுதான் போட்ருக்கேன். நம்மகிட்ட எதை யார் திருடினாலும் மனசு சமாதானம் ஆயிரும். ஆனால் நம்ம படைப்புகளை யாராச்சும் திருடுறப்ப மனசு தரும் குடைச்சலுக்கு அளவே இல்ல. என்னுடைய 'எட்டு வயது எனக்கு' என்ற ஈழம் பற்றிய ஒரு கவிதையை மாலைமலரில் என் அனுமதியின்றி வெளியிட்டிருந்தாங்க. இன்னொரு தளத்தில் இதே மாதிரி வந்திருந்துச்சு. இரண்டுக்குமே விளக்கம் கேட்டு மெயில் அனுப்புனேன்! மாலை மலர் ரியாக்ஷனே காட்டல. அந்த இன்னொரு தளம் உடனே அந்த கவிதைய என் பெயர்ல மாத்தி மன்னிப்பும் கேட்டார்கள். அப்போ மைக்ரோசாஃப்ட்ல இருந்ததுனால எனக்கு பிளாகில் செலவிட நேரமும் அவ்வளவா இல்லை. ஆனால் நிறைய எழுதும் எண்ணம் இருந்துட்டே இருந்துச்சு.

(இடைச்செருகல்: திருட்டுன்னவுடன ஞாபகம் வருது. குறிப்பிட்ட பதிவர் ஒருத்தர் பிரபல பதிவர் ஒருத்தரோட பிளாகில் இருந்து அப்படியே ஒரு ஆங்கில பட விமர்சனத்தை சுட்டு பாக்யாவில் வெளியிட்டிருந்தார். அதுக்கு இன்னும் உருப்படியான விளக்கம் எதும் கொடுக்கல. திருட்டுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும்! ஆனா இப்போ சமீபத்துல பிரபலமாகிவரும் அவரோட பிளாக் பார்த்தப்பதான் அவரு ஏன் திருடுனாருனு தெரிஞ்சுச்சு. அவரா அந்த விமர்சனத்த எழுதியிருந்தா அதை ஒண்ணாங்கிளாஸ் பையன் 'ரஃப் நோட்'ல கூட வெளியிட்டிருக்க முடியாது! இவரை பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு. நான் அந்த பிரபல பதிவரை கொஞ்சம் ஓவரா விமர்சனம் பண்ணப்ப இங்க வந்து "நீங்க நடத்துங்க தல"னு சொல்லிபுட்டு அங்க போயி "அவனுங்க கடக்குறானுங்க நாயிங்க"னு சொல்லிருந்தாரு நம்ம தல! இழந்த மதிப்பை மீட்டெடுக்குறாராமாம்!)

சரி அத விடுங்க. பிளாக்ல வேற என்னதான்டா எழுதித் தொலைக்கிறதுனு யோசிச்சேன். அப்போதான் ஒரு நண்பர் தமிழ்மணம், தமிலிஷ் போன்ற தளங்களை பத்தி சொன்னாரு. போயி பார்த்தேன். சில தலைப்புகளை "பரிந்துரைப்பில்" வச்சிருந்தாங்க. தொடர்ந்து பல நாட்களாக கவனிச்சதுல அர்த்தமற்ற மொக்கை பதிவுகளே நிறைய இருந்துச்சு. மேலும் நான் பெர்சனலா அருமையான கட்டுரைனு நினைச்ச எத்தனையோ கட்டுரைகளும், கதைகளும், சினிமா விமர்சனங்களும் தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் அடியில் ஒதுங்கி, ஒடுங்கி, நசுங்கி, பிரபலப்படுத்தப் படாம பரிந்துரைக்கப்படாம கிடந்துச்சு.

பின் நேரம் கிடைச்சவுடன அப்பப்போ எழுத ஆரம்பிச்சேன். என் சமூக, அரசியல் கட்டுரைகளை விட, என் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகளே அதிகமாக வாசிக்கப்பட்டு வந்தது. ஆனா தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி தெரிந்த பலர் அதை பெரும் குறையா சொல்லிட்டிருந்தாங்க. இன்னமும் எதாச்சும் எதிர்வாதம் பண்ணா "சினிமா பத்தி எழுதுறவனுக்கு என்ன அக்கறை"ங்குறாங்க!  நான் என்னமோ சினிமாக்காக பிரத்யேகமா 'behindwoods' நடத்துற மாதிரி! எனக்குமே காலைல பேப்பர்ல "ஈழத்தில் இத்தனை பேர் சாவு"னு செய்தி படிச்சிட்டு கம்ப்யூட்டர்ல அஜித் பத்தியும் விஜய் பத்தியும் எழுதுறது அறுவெருப்பா தோணுச்சு அப்பப்போ. சினிமாவை குறைச்சுகிட்டேன்.

இனிதான் முக்கியமான மேட்டர்! சில நாட்களுக்கு முன்பு என் ஜூனியர் ஒருத்தன் என்னையும் என் நண்பனையும் பார்த்து "அண்ணே நான் தமிழே வாசிக்க மாட்டேன். நீங்க தொடர்ந்து மெயில் அனுப்பிட்டே இருந்தீங்களா நானும் என்னதானு பார்ப்போம்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். என் ஃபிரண்ட்சுக்கும் அதை ஃபார்வர்ட் பண்றேன்"னு சொன்னான். நானும் என் நண்பனும் எங்கள் பதிவுகளை மட்டுமல்லாமல் இணையத்தில் விரவிக்கிடந்த எத்தனையோ நல்ல, மேலே நான் சொல்லிய "நசுக்கிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட" நல்ல பதிவுகளை எல்லாருக்கும் மெயில் அனுப்பிட்டிருந்தோம். ஆனா அது இப்படி கூட வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கல. ஒரு விளையாட்டுத்தனமா, ஆங்கிலம் மட்டுமே படிக்க சுலபமானதுன்ற கருத்தோட இருந்த பையன கூட உக்காந்து தமிழ் படிக்கவச்சதுல நிறைய சந்தோஷம் எனக்கு.
ஏன்னா பெரும்பான்மையான சின்ன பசங்களும், என் சகவயது நண்பர்களும் "தமிழ் எழுத்துக்கூட்டிப் படிக்க முடியல. கடுப்பா இருக்கு"னு என்கிட்ட சொல்லிருக்காங்க. அப்படிப்பட்ட இரண்டு மூன்று பேரை என் மெயில்களும், பிளாகும், தமிழையும் விரும்பிப் படிக்க கூடியவர்களா மாற்றி இருந்தது. இந்த ஒரு சம்பவம் தான் பொழுதுபோக்கா மட்டுமே நாங்க நினைச்சிருந்த 'பிளாக்'கை கொஞ்சம் சீரியசான விஷயமா நினைக்க வச்சுச்சு. இது பெரிய பத்திரிக்கைகளுக்கு நிகரான பொதுஜன ஊடகம்னு தெரிய வந்துச்சு.

ஆனாலும் நல்ல பதிவுகள் மக்களை சென்று சேரும் அளவானது, மொக்கை பதிவுகளின் அளவுக்கு இல்லை.

 
"உனக்கென்னாடா? மூடிட்டு போக வேண்டியதான? நீ என்ன கூகிள் ஓனரா?"னு கேக்காதீங்க. சொல்றேன். திரட்டிகளில் போய் பார்த்தா தமிழ் பதிவுலகின் கேரக்டரை எடுத்துக்காட்டும் முகமாக இந்த மாதிரி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் மேலே நிக்கிது.

சென்ற வார பிரபல பதிவுகளை பாருங்க "நமீதா வீட்டு கிச்சன், நமீதா பார்த்த மச்சான்ஸ், விஜய் வீட்டு கும்மி" இதான். அரசியல் கட்டுரைகள் கிட்டத்தட்ட எல்லாமே நோண்டி நோண்டி எடுத்தால் தான் வரும். மக்களும் ஓட்டுக்களை வாரி வழங்குறதுனால நல்ல பதிவுகள் எல்லாமே cloud ஆயிருச்சு!

இதை நான் காழ்ப்புணர்ச்சியோட சொல்லல. ஆனா அப்படி சொல்றதாகத்தான் நிறைய பேர் நினைப்பீங்க. ஆனா உண்மை அது இல்ல. என் பதிவுகளைப் படிங்க. எனக்கு யாரு மேலையும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் இல்லைனு புரியும்.

ஆனா சில நேரத்துல சில பதிவர்களைப் பார்த்து பொறாமை பட்டிருக்கேன். சீமானின் நாம் தமிழர் இயக்கத்த நான் விமர்சிச்சு எழுதுன அதே நேரத்தில, அதை பலர் பாராட்டிய அதே நேரத்தில, அதே விஷயத்த பத்தி நண்பர் ஸ்டாலின் குரு எழுதியிருந்தாரு. நமக்கு ஏன் இப்படி அழகான, மிகவும் நாகரீகமான அணுகுமுறை தோணலனு வருத்தப்பட்டேன். சீமான் மீதான அவரது பார்வைய ஒவ்வொரு விஷயமா அடுக்கி, காரணத்தோட அழகாக, செவிட்டுல அறைஞ்சா மாதிரி எழுதியிருந்தாரு. அதைப் படித்தபோது என் கட்டுரை எனக்கே குப்பையாகத் தெரிஞ்சுச்சு. அதை அவருகிட்டயே சொன்னேன். அவரின் அந்தக் கட்டுரை இண்ட்லி, தமிழ்மணங்களில் புதைந்து போனதை நான் சொல்லித்தான் தெரியனுமா? மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தர்ப்ப அரசியலின் புரிதலை உண்டு பண்ணியிருக்கக்கூடிய கட்டுரை அது. ஆனா வழக்கம் போல் vote இல்லாம அடங்கி, ஒடுங்கி, நசுங்கி எங்கேயோ புதைஞ்சு போச்சு!  

நான்  எழுதுன 'அருந்ததி ராயும், தேசிய போதை மருந்தும்' கட்டுரையை பல எழுத்தாளர்களே தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார்கள். என்னைப் பொறுத்து என் எழுத்தில் ஒரு உருப்படியான கட்டுரை அதுதான். ஆனால் எத்தனை பேர் படிச்சாங்க தெரியுமா? 220 பேர்! இண்ட்லியில் 9 ஓட்டு! தமிழ்மணத்தில் அது காணப்படவே இல்லை!

இன்னொரு முக்கியமான விஷயம் நான் சமீபத்துல கவனிச்சது. இங்க யாருமே பதிவுகளுக்கு ஓட்டு போடுறதில்ல. பதிவர்களுக்கு ஓட்டு போடுறாங்க! அதாவது விஜய், அஜீத் எவ்வளவு கேவலமா நடிச்சாலும் "படம் சூப்பர்"னு சொல்ற அவங்களோட தீவிர ரசிகர்கள் மாதிரி. நான் எழுதுன  "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்"- அலறிய ராகுல் காந்தி" கட்டுரைக்கு 4000ஹிட்ஸ் மேல வந்தும், FBல எண்ணிலடங்கா 'லைக்' மற்றும் பாராட்டுக்கள் வந்தும் இண்ட்லில அதுக்கு 8 வோட்டுதான் விழுந்துச்சு. அதுல ஒன்னு என்னோடது! எனக்கு புரியவே இல்ல. அப்புறம்தான் ஒருத்தர் மேட்டரை சொன்னாரு! என் வலைதளத்துல கமெண்ட்டோ, voteஓ போட்டா அவர எதிர்கட்சிக்காரன்னு சொல்றாங்களாம்! என்னை புறக்கணிக்கிறாங்களாம்! :-) நான் வேணா அடுத்து template மாத்துறப்ப இண்ட்லி வாக்கு பட்டைய எடுத்துர்றேன். எல்லாரும் படிச்சீங்கன்னா மட்டும் போதும்!

மேட்டருக்கு வர்றேன். தீவிர ஃபேன் ஃபாலோயிங் கொண்ட பதிவர்கள் சிலரே பிரபல பதிவர்களா இருக்காங்க. ஆனால் இந்த லிஸ்ட்டில் 1000 ஃபாலோயர்கள் கொண்ட 'வால்பையன்' போன்றவங்களை சேக்க முடியாது! அவர்களையெல்லாம் விமர்சிக்கும் தகுதி கூட எனக்கு கிடையாது. ஏன்னா பிளாக்கை மிகச்சரியாக உபயோகிப்பவர்களில் அவர் ஒருவர்.  இன்னொருத்தரு பேரு மறந்துட்டேன். மிக அழகா ஃபோட்டோஷாப் பாடங்களை தமிழ்ல எழுதுறாரு. அருமையான முயற்சி அது. காமம் சார்ந்த உளவியல், உடலியல் பற்றி டாக்டர்.ஷாலினி அருமையான வலை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனா அந்தப் பக்கமே யாரும் போறதில்ல போல. அவங்க பதிவுக்கு கமண்ட்ஸ் கூட இல்ல! அப்புறம் மதி.சுதா. மிக குறுகிய காலத்துல பிரபலமானாரு. அருமையான செய்தி எழுத்தாளர் அவர். Informative. இதையெல்லாம் என் வாசிப்பு வரிசைல சேர்த்துருக்கேன். இன்னும் நிறைய நல்ல பிரபல பதிவர்கள் இருக்காங்க. டக்குனு ஞாபகம் வரல. குறிப்பிடாமல் விட்டதுக்கு மன்னிச்சுருங்க.

பதிவுலகம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். புத்தகங்களை கையில் எடுத்து, ஒவ்வொரு பக்கமாக பிரித்து பொறுமையா படிக்க முடியாத 99% மக்களிடம் மிகச்சரியா, நேரா போயி சேர்ந்து, அவங்க மூளைல உக்கார சக்தி வாய்ந்த ஊடகம். இதில் யாருக்கும் என்னவேணா எழுத உரிமை இருக்கு. யாரும் யாரையும் கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. நான் இதுவரைக்கும் செஞ்ச விமர்சனங்கள் கூட அதிகப்பிரசங்கித் தனம்னு அப்பப்போ தோணுது. ஆனாலும் எல்லாருக்கும் கொஞ்சமாச்சும் சமூகப் பொறுப்புணர்வு வேணும்னு நினைக்கிறேன். முக்கியமா பதிவுலகத்துல.

ஏன்னா, ஆங்கிலம் எப்படி அறிவுசார் (widely read to gain knowledge) மொழியா நம் இளைஞர்களால் பார்க்கப்படுதோ, தமிழையும் அவர்கள் அப்படிப் பார்த்தால் தான் தமிழ் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் "நமீதா கிச்சன், த்ரிஷா பாத்ரூம், அனுஷ்காவுக்கு பானிபூரி என்றால் பிடிக்கும், என் வீட்டு கழிப்பறையில் எவ்வளவு '####' தண்ணி வரல"னு எழுதுற பதிவுகளை மட்டுமே பிரபலப்படுத்துனா பதிவுலகத்தையும், தமிழ் இணைய ஊடகத்தையும் பெரும்பாலான இளைஞர்கள் குப்பைத் தொட்டியாகத்தான் பார்ப்பாங்க. எழுத்தை ஆதரிக்க வேண்டுமேயொழிய எழுதுபவர்களை என்னைக்கும் ஆதரிக்ககூடாது. அது மக்களை ஆட்டுமந்தைகளா மாற்றும் தன்மை உடையது. எழுதுறவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் ஆகுறதுனால தான் சில பேரு என்ன எழுதுனாலும் பிரபலம் ஆயிருது! விஜய் படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருக்க மாதிரி! என் எழுத்தை ஆதரிக்காமல் என்னை ஆதரிக்க ஆரம்பிச்சாங்கன்னா நாளைக்கு நான் மடத்தனமா ஏதாச்சும் எழுதுனா அதை எதிர்க்கும் திராணி படிக்கிறவங்களுக்கு போயிரும். பதிவுக்கு ஓட்டு போடுங்க. தானாவே நல்ல பதிவுகள் மேலேயும் தேவையற்ற பதிவுகள் கீழேயும் போயிரும்! ரொம்ப பெரிய பதிவா ஆயிருச்சு! பொறுமையா படிச்சதுக்கு நன்றி!

Thursday, December 23, 2010

"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்"- அலறிய ராகுல் காந்தி

பீகார்ல எதோ காங்கிரசு பிச்சை எடுத்து பொழைச்சிட்டு இருந்துச்சு. அதை பிச்சை கூட எடுக்கவுடாம அன்ட்ராயிரக் கழட்டி ஊரைவிட்டு விரட்டுனவரு நம்ம காங்கிரசோட வருங்கால தூணு. அதுனால இப்போ எந்த ஊருக்கு போனாலும் காங்கிரஸ் தலைவரு எல்லாம் வீட்டுல ஆமை புகுந்துட்ட மாதிரி பதறுறாங்களாம். ஒருத்தர் ராகுல் வந்துட்டு போன தொகுதிய கழுவி ஓமம் வளர்த்ததா கூட தகவல்!! நம்மாளு பார்த்தாரு.. தக்காளி இனிமே காங்கிரசே இல்லாத ஊருக்கு தான்டா டூர் போனும்னு முடிவு பண்ணி நேரா தமிழ்நாட்டுக்கு வந்துட்டாரு!

"தொண்டர்களே நான் எப்படி காங்கிரசை முன்னேத்த போறென்னா.. மச்சி நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்"னு சொல்றப்ப "போடா.. சுடுதண்ணிய மூஞ்சில புச்சி ஊத்திருவேன்"னு எல்லாரும் சொல்லிட்டாங்களாம். அப்புறம் கடைசில நிறைய காமெடி பீஸ் அப்புறம் ஆர்.கே.செல்வமணி, ராமநாராயணன் மற்றும் கவர்ச்சிக்காக நடிகை ராதாவோட மகள், இதுங்க கிட்ட போய் "டேய் வான்டட்டா வந்து காங்கிரச முன்னேத்த வந்திருக்கேன்டா நானும் ரவுடிதான்டா நம்புங்கடா. நார்த் இண்டியால ஃபார்ம் ஆயிட்டேன்டா"னு கெஞ்சி கதறி பேசிருக்கு. தமிழக இளைஞர் காங்கிரஸ்ல ஒருத்தரு தமிழக முதலமைச்சர் ஆவாராம். ஜோசியம் சொல்லிட்டு போயிருக்கு இந்த 'நார்த் இட்டாலியன் நாய் சேகர்!' சும்மாவே முதியோர் காங்கிரஸ்ல "நான் தான் ஃபர்ஸ்ட்.. நீதான் ஃபர்ஸ்ட்"னு அடிச்சுக்குவாய்ங்க. இதுல இந்த மென்டல் வேற இப்படி கிளப்பி விட்டுட்டு போயிருக்கு! இனிமே இளைஞர் காங்கிரசும் அடிச்சுகிட்டு நாறப் போறாய்ங்க.

இன்னொரு காமடி, "விலைவாசியை பத்தி கவலைப்பட வேண்டாமாம். அதை மத்திய அரசும், மாநில அரசும், பிரதமரும் பார்த்துக்குவாராம். ஏம்பா ராகூலு தமிழகத்தோட வருங்கால முதலமைச்சர்களுக்கு விலைவாசி பத்தி அக்கறை இருக்காதாப்பா? 


ஒரு காங்கிரஸ் தொண்டன் வேற "நீங்க ஏன் காமராஜர் பொறுப்பை ஏற்க கூடாது?"னு தண்ணிய போட்டு நகைச்சுவை உணர்வோட கிண்டல் பண்ணிருக்கான். இந்தாளுக்கு குஷியாயிருச்சு. "நான் அப்படி காமராசர் பொறுப்பை எடுக்கனும்னா நான் தமிழ் கத்துருக்கனும்"னு சொல்லிருக்காரு! டேய் டகால்டி.. நீ இப்ப மட்டும் என்னத்த கத்துகிட்டுடா அரசியலுக்கு வந்த? ஏதோ தமிழ் கத்துகிட்டா மட்டும் இவரு காமராசர் ஆகி கிழிச்சிருவாரு! வெங்காயம் 80 ரூபாய் விக்கிது கிட்னா நாயிக்கு ஆட்சிக்கு வரனுமாம்! ஆசைய பாரு!

ஊருக்குள்ள எல்லாரும் சனி ஞாயிறுனா முன்னால கறி எடுப்பாய்ங்க. இப்பலாம் கூடைய தூக்கிட்டு போய் வெங்காயம் வாங்கி வெங்காய சாம்பார் வைக்கிறாய்ங்கடா. பார்க்கவே பாவமா இருக்கு! கேட்டா இப்போ அதான் ஸ்பெஷலாம். கல்யாண மறுவீடு ஃப்ங்ஷன்ல 'தயிர் வெங்காயம்' வைக்கலேனு சம்பந்தி வீட்டுக்குள்ல அடிதடி வருதுடா. இதெல்லாம் அடுக்குமாடா? ஆனா இந்த மாதிரி சப்ப மேட்டரெல்லாம் பிரதமர் பார்த்து கிழிச்சுருவாராம். நம்ம காங்கிரசு ஆட்சிக்கு வர்றத மட்டுமே சிந்திச்சுகிட்டு உக்காந்திருக்கனுமாம்! அடேய் கோவிந்தசாமி, அந்தாளு பிரதமருங்குறதே அந்தாளுக்கு கொடியேத்துறப்ப மட்டும் தான் ஞாபகம் வரும். ஒபாமா "வேர் இஸ் தி பாத்ரூம் Mr.சிங்? (where is the bathroom Mr.Singh?)"னு கேட்டதுக்கு கூட "ஐ மஸ்ட் கன்சல்ட் சோனியாஜி. கொஞ்ச நேரம் அடக்கிக்கங்க"னு சொன்னவரு அந்தாளு! வெங்காயத்த பத்தி அந்த சர்தார்ஜிக்கு எங்கடா தெரிய போகுது? டேய் யப்பா ராகூலு நீ உங்க ஆத்தாவ மிஞ்சிருவடா சாமி!

சரி. நீ அதெல்லாம் விடு ராகுல் மச்சி. நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆயிருவோம். இளைஞர் காங்கிரசுல நாளைக்கே தமிழ்கத்தின் முதல் உறுப்பினரா பதிஞ்சுர்றேன். ஆனா அதுக்கு நீ என்கிட்ட ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லனும். என்னத்துக்கு மச்சி நடிகை ராதா மகளை கட்சி மீட்டிங்குக்கு கூப்ட? சரி. அதைக் கூட நான் மன்னிச்சுருவேன். நாப்பது வயசுல கல்யாணம் ஆகாம இருக்க வயசு கோலாறு. கேர்ள் ஃபிரண்டு வேற் ஸ்பெயின்ல இருக்கு.. ரொம்ப டிஸ்டன்சு ஓகே! ராமநாராயணனையும், செல்வமணியையும் எதுக்கு கூப்ட? தமிழக காங்கிரசுக்கும் இவய்ங்களுக்கும் என்னடா சம்பந்தம்? அதுவுமில்லாம "அறிவுஜீவிகளுடன் ராகூல் உரையாடினார்"னு நியூஸ் கொடுக்க வுட்ருக்க? அறிவுஜீவினா என்ன தெரியுமா? உன்ன வச்சு காமடி பண்ணிருக்காய்ங்கடா எங்கூரு இளைஞர்கள்!

எங்கூரு அரசியல்வாதிங்க பரவால்ல போலயே! உன் அரசியல் உணர்வு, காங்கிரச முன்னேற்றனும்ங்குற வெறி எல்லாம் என்ன புல்லரிக்க வைக்கிது மச்சி. இப்படியே அடுத்த தடவ வர்றப்ப தமன்னா, இலியானா, த்ரிஷா, ஏ.எல்.அழகப்பன், ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த மாதிரி அரசியல் செல்வாக்கு உள்ள ஆட்களா உள்ள இழுத்துட்டீனா காங்கிரஸ் முன்னேறிரும். அப்புறமா நம்ம ஜாலியா அப்பன் இத்தாலிக்காரிய கூட்டிட்டு ஓடுன மாதிரி உன் கேர்ள்ஃபிரண்டு இருக்குற ஸ்பெயினுக்கு போயி அந்த வெள்ளைக்காரிய கூட்டியாந்து 'கானியா வாந்தி'னு பேரு மாத்திறலாம். அப்புறம் வழக்கம் போல காங்கிரஸ் கிழம் எல்லாம் அதுகளுக்குள்ள அடிச்சுகிட்டு 'கானியா' கிட்ட கட்சிய கொடுத்துருங்க. அப்புறம் தமிழ்நாட்டு இளைஞர் காங்கிரசை முன்னேத்த உன் மகன் வருவான். எங்களுக்கும் ஜாலியா டைம் பாஸ் ஆகும்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு. ஆனா அவரு தொங்குறப்ப கிரகம் தமிழ்நாட்டுல தொங்குனாருன்னா மின்வெட்டு டைமிங் சொல்லனும். பாவம் அவரு தொங்குற நேரத்துல கரண்ட் இல்லேனா (dissappoint)டிஸ்சப்பாயிண்ட் ஆகி (dispose)டிஸ்போஸ் ஆக முடியாம போயிரும்!

இப்பலாம் மனுஷன் சிரிச்சே சாகனும்னாலோ அல்லது குடிச்ச விஷத்தை வாந்தியெடுக்கனும்னாலோ ஒரே வழிதான். உங்க மீட்டிங்குக்கு வந்தா போதும்! ஆனா சும்மா சொல்லகூடாதுடா. SMSல மட்டுமே காமடி பண்ணிட்டு இருந்த ஒரு சர்தார்ஜிய கூப்பிட்டு நிஜத்துலயே காமடி பண்ண வச்சுட்டீங்களேடா! அந்தாளும் "ஐயாம் பாவம் ஐயாம் பாவம்"ங்குறாரு, விட மாட்றீங்களேடா! 

அது என்ன.. ஆங்.. ஊழல ஒழிப்பீங்களா? முதல்ல கொள்ளையடிச்ச காசை எங்கடா ஒளிப்பீங்க? அதை ஒளிக்கனும்னா பாகிஸ்தானை வாடகைக்கு எடுக்கனுமேடா! ஆனா ரொம்ப தைரியம்டா உங்களுக்கு. கூச்சப்படாம எப்படிடா ஊழலை ஒழிப்போமுங்குறீங்க. சிரிப்பு வரலையா அப்டி சொல்றப்ப? "நல்லா படிப்பேன் இனிமேலுனு" ஸ்கூல் படிக்கும்போது எங்க சார்ட பொய் சொல்றப்ப கூட சிரிப்பு வந்துச்சேடா எனக்கு. ஆனா கூச்சப்படாம சிரிக்காம ஊழலை ஒழிப்போம்னு உங்காத்தா சொல்லுது பாரு, அங்க நிக்குதுடா உங்க குடும்பம்!

சரி ராகுலு. அதெல்லாம் விடு. என்னமோ பண்ணித்தொலை. இன்னும் காங்கிரசு ஆட்சில இருக்க மாநிலத்துக்கெல்லாம் போயி அங்க இருக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உதவி பண்ற வேலை உனக்கு இருக்கு! ஆனா மவனே இனிமே நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்தீனா, என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது! ஏன்னா அங்க ஆள் இருந்தாதானே!!!

Tuesday, December 21, 2010

சிறந்த பத்து தமிழ் நகைச்சுவைப் படங்கள்.

என்னால் முடிந்தவரை பலரிடம் கருத்து கேட்டு தொகுத்திருக்கிறேன். காதலிக்க நேரமில்லை போன்ற classic திரைப்படங்களை சமகால படங்களுடன் இணைக்க எனக்கு மனமில்லை. அதனால் தனியாக classic list என கீழே பதிந்திருக்கிறேன். மேலும் எனதி தனிப்பட்ட விருப்பங்களுக்கே முக்கியத்துவன் கொடுத்து நான் தொகுத்த வரிசை இது. மாற்றுகருத்து இருந்தால் commentயில் தெரிவியுங்கள்.

10 சகாதேவன் மகாதேவன்(1988)

ராமநாரயணன் இயக்கத்தில் எஸ்.வி.சேகரும், மோகனும் நடித்த படம். பலமுறை பார்த்தாலும் சலிக்காத படமிது. மோகநெஸ்.வி.சேகரின் காமிகல் sense படம் நெடுகிலும் பட்டையக் கிளப்பும். எஸ்.எஸ்.சந்திரன் அப்போதைய எ.ம்.ஜி.ஆர் ஆட்சியை கண்டபடி கலாய்த்திருப்பார். முழுக்க முழுக்க சிரிப்பு படம்.

காட்சி:
ஆட்டோவுக்க பணம் கொடுக்க எஸ்.வி.சேகரின் பேண்ட் பாக்கட்டை மோகன் பார்க்கும் போது,
மோகன்: உன் பர்ஸை அடிச்சுட்டாங்கடா. ஜட்டி தெரியுது. டான்டக்ஸா?
எஸ்.வி.சேகர்: நான் எப்பவுமே சுடர்மணி தான் உபயோகிப்பேன்.
மோகன்: சுடர்மணி கோச்சுக்க மாட்டாரா?
ஆட்டோக்காரர்: கசுமாலங்களா.. காசக் கொடுங்கடா...!!

9 ஆஹா என்ன பொருத்தம்

மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தமிழ் நகைச்சுவை படமென்றால் அது இதுதான். ராம்கியும், தல கவுண்டரும் நடித்த கொடூர காமெடி படம் இது. தல பிச்சு உதறிருப்பாரு. குஞ்சு கவுண்டர்-பஞ்சு கவுண்டர்னு படமே செம காமடி. இந்தப் படம் பார்த்தவங்களுக்கு தெரியும். பார்க்காதவங்க கண்டிப்பா KTVல போடுறப்ப பார்த்துருங்க.
காட்சி:
ராம்கியும், கவுண்டரும் சிவன் பார்வதி வேஷம் போட்டு செந்திலை ஏமாற்றும் போது,
செந்தில்: என்ன? பார்வதி குரல் கரகரனு இருக்கு?
கவுண்டர்: கண்ட தண்ணில அபிஷேகம் பண்றானுகளா.. அதான் throat infection.. டேய் நோண்டி நோண்டி கேள்வி கேட்டினா என் வீட்டுக்காரர வுட்டு சூலாயிதத்தால குத்த வுட்டுருவேன்.
ராம்கி: பாரூரூரூரூ
கவுண்டர்: சாரி டார்லிங்!

8உனக்காக எல்லாம் உனக்காக

தல, கார்த்திக், சுந்தர்.சி. இதைப் பத்தி சொல்லவே தேவையில்ல! தலைவர் ரணகளம்.

"ஐயாம் குண்டலகேசி தர்ட் ஸ்டாண்டர்ட் அவ்வையார் ஆரம்பபாடசாலை!!"

7இன்று போய் நாளை வா

பாக்கியராஜ் படங்கள் அனைத்துமே நகைச்சுவைதானெனினும் இது ரொம்ம்ம்ம்ப ஓவர். "ஏக் கிசான் ரகுதாத்தா"வ மறக்க முடியுமா?


6 அவ்வை சண்முகி
கமல் நகைச்சுவைப் படங்களிலேயே சிறந்தது இதான். எல்லாரும் கமலையே பாராட்டினாலும் எனக்கென்னவோ இந்தப் படத்துல ரொம்ப புடிச்சது நாசரையும், டெல்லி கணேஷையும் தான். பட்டையக்கிளப்பிருப்பாங்க.5உள்ளத்தை அள்ளித்தா
சுந்தர்.சி யின் நகைச்சுவை உணர்வுக்கு சரியான சான்றி இந்தப் படம். சபாஷ் மீனாவில் இருந்து சில காட்சிகள் சுடப்பட்டிருந்தாலும் execution அட்டகாசம். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படம் இது. தலயின் top performance. இந்த வீடியோ பாருங்க,


4சதிலீலாவதி
உச்ச இடத்தில் இருந்தும் ஒரு படத்தில் காமெடியனாக நடிக்கும் தைரியம் கமலைத் தவிர வேறு எவருக்குமே வராது. அவரது கோவைத் தமிழைப் பாருங்கள். சரளாவே தோற்திருப்பார்.3 மணல் கயிறு
நாடகத்தை இவ்வளவு அழகான காமெடிப் படமாக மாற்ற விசுவால் மட்டுமே முடியும். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் இது ஏன் இந்த பதிவில் இடம்பெற்றிருக்கிறது என்று.  பார்க்காதவர்கள் கண்டிப்பாய் பாருங்கள். 39 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைக்கிறது.1 மற்றும் 2  

இந்த இடத்துக்கு மட்டும் என்னால் தீர்மானிக்கவே முடியல. ஆண்பாவம் மற்றும் தில்லுமுல்லுவை விட சிறந்த சமகால நகைச்சுவைப் படங்கள் கிடையவே கிடையாது. ரஜினியையும் தேங்காய் சீனிவாசனையும் முழுதாய் தில்லுமுல்லுவில் ரசிக்க வைத்ததற்கு வசனகர்த்தா விசு கூட பெரிய காரணம்.
ஆண்பாவம் பற்றி சொல்லவே வேண்டாம். முதல் படத்திலேயே உச்சாணிக்கு சென்ற பாண்டியராஜனின் ரணகள காமெடி.

ஆண்பாவம்


தில்லுமுல்லு


பழைய படங்களில் காமெடினா முதலில் வருவது காதலிக்க நேரமில்லை தான். இப்போது வரும் ஆள்மாறாட்ட காமெடிகளுக்கெல்லாம் தாத்தா அந்த படம். சபாபதி, சபாஷ்மீனா, பலே பாண்டியா, காசேதான் கடவுளடாவையும் கண்டிப்பாய் சேர்க்க வேண்டும். சமகால படங்களை விட பலமடங்கு timing comedyயில் சிறந்து விளங்கிய படங்கள்.  

தொகுப்பை பற்றிய கருத்தை comentயில் கூறுங்கள்.


.

Sunday, December 19, 2010

ஈசன் திரைப்படம் சறுக்கியது எங்கே?

ஈசன் படத்தை பலர் ஏற்கனவே விமர்சித்துவிட்டார்கள். ஏகபோகமாக சுப்ரமணியபுரம் பெற்ற வரவேற்புக்கு நேரெதிரான வரவேற்பை பெற்றுள்ளது. பல தோல்விப் படங்களைப் போல் அல்லாது ஈசனில் தோல்விக்கான காரணங்கள் மிகவும் தெளிவாக உள்ளதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். 
கதை:  ஒரு அப்பாவிப் பெண் நகர வாழ்க்கைக்குள் நுழைகிறார். தீய நண்பர்களின் பழக்கம் கிடைக்கிறது. வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. பின் தற்கொலை. அதன் பிறகு அந்தப் பெண்ணின் தம்பி, தன் அக்காவை சீரழித்தவர்களை பழி வாங்குகிறார். நாவரசு கொலைவழக்கு நடந்ததில் இருந்து பல காலமாக பலர் தோளில் தூக்கி சுமக்கும் கதையை முதலில் தேர்ந்தெடுத்ததே சசிகுமார் தரத்துக்கு தேவையில்லாதது. கதைக்கா பஞ்சம்? உலகில் உள்ள ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொருத்தர் பார்க்கவும் ஒவ்வொரு மாதிரி சினிமா எடுக்கலாம். கதையை சசிகுமார் தேடக் கூட இல்லை. சென்னையின் நகர வாழ்க்கையை மையமாய் வைத்து கதை எடுக்க முடிவு செய்து, பின் ஒவ்வொன்றாக பிண்ணி கதை செய்திருக்கிறார்.
திரைக்கதை: கதை இல்லாம படம் எடுக்கலாம் ரொம்ப சுலபம். ஆனால் திரைக்கதை இல்லாமல் எடுக்கவே முடியாது. திரைக்கதை தான் எந்த ஒரு படத்தின் முதுகெலும்பு. ஈசனில் முதுகெலும்பு மிகவும் வளைந்துள்ளது. ஈசனின் கதை வழக்கமானதாக உள்ளது என்பதால் திரைக்கதையிலும், பாத்திரப்படைப்பிலும் சில வித்தியாசங்கள் செய்துள்ளார் சசிகுமார். வழக்கமாக அப்பாவிப் பெண்கள் தான் நம் படங்களில் ஏமாற்ற படுவார்கள், கொல்லப்படுவார்கள். ஆனால் ஈசனில் ஆண்களை கட்டித் தழுவி ஆடிய பெண் முதல் காட்சியில் ஈவ் டீசிங்கால் கொல்லப்படுகிறார். அதே போல் அபிநயா கதாபாத்திரமும், தன் நண்பர்கள் நடத்தி வரும் நகர வாழ்க்கையான  பப், குடி, கூத்து போன்றவற்றை விரும்பி ஏற்கிறார், பழகிக் கொள்கிறார். ஒரு பாத்திரம் வில்லன்களால் கொல்லப்படும்போது அந்த பாத்திரத்தின் மேல் நமக்கு இரக்கம் ஏற்பட்டால் தான் நம்மால் வில்லன்களை கெட்டவர்களாக பார்க்க முடியும். வில்லன்களை கெட்டவர்களாக பார்க்கமுடிந்தால் தான் கதையுடன் ஒன்ற முடியும். ஆனால் ஈசனின் திரைக்கதை அதைச் செய்ய மறுக்கிறது. படத்தில் நடக்கும் இரண்டு கொலைகளுமே நம் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திரைக்கதையின் மிகப்பெரிய சறுக்கல் இது.

முதல் பாதியில் ஒரு காட்சி விட்டு ஒரு காட்சி 'பப்'பில் எடுக்கப்பட்டுள்ளது எரிச்சலாக இருந்தது. படப்பிடிப்புக்கு செல்லும் முன் ஸ்டோரிபோர்டில் முழு திரைக்கதையையும் செய்துவிட்டு போனால் கிட்டத்தட்ட 90% வேலை முடிந்துவிடும். பப் காட்சிகள் போன்ற திரும்ப திரும்ப வரும் காட்சிகளை ஸ்டோரிபோர்டிலேயே மாற்றி விடலாம். நேரடியாக படப்பிடிப்பிற்கு செல்வதால் இந்த குறைகளை இயக்குனர்களால் கண்டுபிடிக்கமுடிவதில்லை.

மேலும், ஒரு சிறந்த படத்தில் இருந்து எந்த காட்சியை நீக்கினாலும் அந்தப் படம் அர்த்தமற்றதாய் ஆகிப்போகும். உதாரணமாக காட்ஃபாதர் படத்தை சொல்லலாம். அந்தப் படத்தில் எந்தக் காட்சியை நீக்கினாலும் படம் நகராது. ஆனால் ஈசனில் தேவையில்லாத காட்சிகள் ஏராளமாய் இருப்பதால், பல பாத்திரங்கள் வலுவிழந்து விட்டன.


இயக்கம்: ஈசன் சசிகுமார் இயக்கிய படம் போல் இல்லை. எதோ amateur இயக்குனர் இயக்கியது போல் இருந்தது. உதாரணமாக அமைச்சரும், கமிஷனரும் பேசும் காட்சியில் காமிரா அமைச்சர் முகத்தில் ஒரு நொடி நிற்கிறது, பின் மெதுவாக கமிஷனர் முகத்துக்கு தாவி ஒரு நொடி சென்ற பின் அதுவரை அமைதியாய் இருந்த கமிஷனர் சட்டென்று செயற்கையாக பேச ஆரம்பிக்கிறார். இயக்கத்தில் மிகப்பெரிய ஓட்டை இது. நல்ல இயக்குனருக்கு இது அழகல்ல. முதல் பாதியில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுமே மிகவும் மட்டமானவை. சசிகுமார் படப்பிடிப்பின் போது விடுமுறையில் சென்றது போல் தான் இருந்தது எல்லா காட்சியும்.

நடிகர்கள்: புது நடிகர்களாக இருப்பது படத்துக்கு மிகப்பெரும் ஆபத்து என்பதற்கு ஈசன் ஒரு உதாரணம். வைபவ், வைபவின் காதலி அபர்ணா, வைபவின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அழகப்பன், அபர்ணாவின் அப்பா கதாபாத்திரம் ஆகியோர் நடிக்க முயற்சிக்க கூட இல்லை. ஸ்டில் காமிராவுக்கு போஸ் கொடுப்பது போல் நிற்கிறார்கள். பல காட்சிகளில் சிறப்பாய் நடித்திருந்த சமுத்திரக்கனி கூட ஒருசில காட்சிகளில் வெறுமனே நிற்கிறார்.  இயக்குனரின் தவறு என்றே தோன்றுகிறது.

படத்தில் நல்ல விஷயங்கள்:
பப் வாழ்க்கையை சரியாக படம் பிடித்தது, முதல் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி போன்ற சில இடங்களில் சசிகுமார் தெரிகிறார். படத்தின் மாபெரும் பலம் அபிநயாவின் தம்பியாக நடித்துள்ள பிள்ஸ்ஸி. பட்டையக் கிளப்பியுள்ளார். இரண்டாவது பாதியை முழுதாய் சுமப்பது அவரும் சமுத்திரக்கனியும் தான்.

சறுக்கல்:
சுப்பிரமணியபுரம், நாடோடிகள் தந்த வழக்கத்துக்கு மாறான திடீர் புகழும், ரசிகர் ஆதரவும் சசிகுமாரை ஏனோதானோ என ஒரு படம் எடுக்கவைத்து விட்டதோ என்ற ஐயம் தான் மிஞ்சுகிறது. நம் இயக்குனர்கள் அனைவருமே ஒரு படம் சம்பந்தப்பட்ட எழுத்துவேலைகள் அனைத்தையுமே தங்கள் தோள்மேல் போட்டு சுமப்பதால் தான் எந்த துறையிலுமே முத்திரை பதிக்க முடியாமல் போகிறது. ஆலிவுட் போல திரைக்கதைக்கென தனி கலைஞர்கள் எப்போது தமிழகத்தில் உருவாகிறார்களோ அப்போதுதான் சினிமா தரமும், இயக்குனரின் திறமையும் உச்சாணிக்கு போகும். அதுவரை திண்டாட்டமே. அடுத்த படத்திலாவது திறமையான இயக்குனர் சசிகுமார் நல்ல படத்தை தருவார் என நம்புவோம். 

ட்ரான் (ஆங்கிலம் TRON) விமர்சனம்

ஒரு விஞ்ஞானி அவர் தயாரித்த வீடியோ கேம்குள்ள மாட்டிக்கிறாரு. 21 வருஷம் கழிச்சு விஞ்ஞானியின் மகன் போய் அப்பாவ பாக்குறாரு. காப்பாத்துனா கூட பரவால்ல. சும்மா பாக்குறாரு. அப்போ அந்த வீடியோ கேம்ல அப்பாவோட இளமை உருவத்துல அப்பாவால் படைக்கப்பட்ட ஒரு programm சேட்டை பண்ணிட்டிருக்கு. அதை அழிச்சு அப்பாவும் மகனும் வெளிய வர்றாங்களா என்பதுதான் கதை. 
28 வருஷத்துக்கு அப்புறம் என்ன கருமத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கனும்? நம்ம ஊருல சண்டை படம் ஓடுனா வரிசையா சண்டை படமா வரும். காதல் படம் ஓடுனா வரிசையா காதல் படமா வரும். இப்போ நம்ம ஊருல தாடி-கைலி ட்ரெண்ட் இருக்க மாதிரி ஆலிவுட்ல 3D மோகம் தலைவிரித்தாடுது. போன வருஷம் Boltங்குற அருமையான படத்த 3Dல மாற்றி திரையரங்குகள்ல போட்டு தலை வலிக்க வச்சாய்ங்க. இப்போ வந்திருக்க ட்ரான் அதே ரகம் தான். கண்ணாடி போடு பாத்தாலும் படம் முழுக்க முழுக்க 2Dஆகத்தான் தெரியுது.

சரி படம் நல்லா இருந்தாலாவது சகிச்சுகிட்டு பார்க்கலாம். இந்த படம் மாதிரி ஒரு கேவலமான படத்தை நான் சமீபத்துல பார்த்ததில்ல. கடைசியா நான் ஆங்கிலத்துல பார்த்த கேவலமான படம் 'Watchmen'.  ஆனா ட்ரான் அதையெல்லாம் தூக்கி சாப்ட்ருச்சு. 62 வயது Jeff Bridgesஅ 30 வயது மாதிரி Live Action technologyல காமிச்சிருக்காங்க. பொதுவாகவே ஒரு படத்த முழுக்க முழுக்க அனிமேட்டர்களை வைத்து அனிமேஷனில் எடுப்பதற்கும், நடிகர்களின் உடல்மொழியை பதிவு செய்து அதை கேரக்டர்களுக்குள் புகுத்தி (Live Action) நடிக்க வைப்பதற்கும் பயங்கர வித்தியாசம் இருக்கும். அதாவது லைவ் ஆக்ஷனில் நடிப்பு மிகவும் செயற்கையா இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் போக போக இன்னும் நேர்த்தி ஆகலாம். அப்படி ஆனா நம்ம ரஜினி 'பில்லா'ல இருந்த மாதிரி தோற்றத்துடன் கடைசி வரைக்கும் டூயட் பாட வாய்ப்பு இருக்கு. 

சண்டை காட்சிகள், ஆயுதங்கள் எல்லாமே முழுக்க முழுக்க Starwars, Matrix போன்ற படங்களின் காப்பி. ஒரு நிமிடம் கூட படத்தோட ஒன்ற முடியல. மிகவும் செயற்கைத்தனமான கிறுக்குத்தனமான படம். அப்பப்போ இப்படி ஆலிவுட்டுக்கு பைத்தியம் புடிச்சுரும். அப்படி புடிச்ச மிக பயங்கரமான பைத்தியம்தான் ட்ரான். நடிப்பு, வசனம், திரைக்கதை என ஒரு விஷயத்தில் கூட தேறவில்லை படம். படுதோல்வியே அடைகிறது. TRON உலகின் வடிவமைப்பு முதலில் கொஞ்சம் ஈர்த்தாலும் போக போக வாந்தி வரும் அளவுக்கு ஓவர் டோஸ். நம்மூரில பரோட்டா கடைகளில் பச்சை ட்யூப் லைட் போட்டிருப்பார்களே, படம் முழுக்க அப்படித்தான் இருக்கிறது.தயவு செஞ்சு பார்த்துறாதீங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

Wednesday, December 15, 2010

டயரிக் குறிப்புகள்

சில நேரத்துல பல சீரியசான விஷயங்கள் கூட ரொம்ப சாதாரணமா நகைச்சுவையா முடிஞ்சிருது,. ஒருவேளை அது அந்த விஷயத்துல சம்பந்தப்பட்டவங்க அதை எப்படி எடுத்துக்குறாங்கன்றத பொறுத்து இருக்குனு நினைக்கிறேன்..

காதல் தோல்விக்காக தற்கொலை செய்துகிட்ட நண்பனும் எனக்கு உண்டு. காதல் தோல்விக்காக காதலியை பழி வாங்கிய நண்பன் கூட உண்டு. ஆனா இது ரெண்டுலயுமே சேராம சைலண்டா இருக்க நண்பன் ஒருத்தனும் எனக்கு இருக்கான். என் உயிர் நண்பன்!! அது காதல்தானானு என்னால சொல்ல முடில. ஆனா காதல்னு தான இப்போ எல்லாத்தையுமே சொல்றாங்க, அதுனால இதையும் அப்படி சேத்துக்குவோம்.

இப்போலாம் காதலிக்க பொண்ணு கிடைக்கிற மாதிரி ஈசியான விஷயம் கிடையாது. அப்படி ஈசியா என் நண்பனுக்கு ஒரு ஃபிகரோட பழக்கம் கிடைச்சுச்சு. இதுல ஒரு பிரச்சினை என்னனா சின்ன வயசுல இருந்து பெண்களோட கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத பசங்க, ஒரு பொண்ணோட பழக்கம் கிடைச்சவுடன கண்டிப்பா காதல்ல விழுந்துருவாங்க. இவனும் அப்படிதான். ஸ்கூல்ல ஒரு பொண்ணை நிமிர்ந்து பார்த்தது கூட கிடையாது.. அதுனால அந்த பொண்ணு கொஞ்சம் உசுப்பி விட்டவுடன தலைவரு டக்குனு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. என்கிட்ட சொன்னப்போ நான் அந்த பொண்ணோட ஆர்குட் அக்கவுண்ட் பார்த்தேன். ஏடாகூடமா இருந்துச்சு. ஆனா இவன் கிட்ட சொன்னா இவனுக்கு புரியிற நிலைமை தாண்டி போயிருச்சு! அதுனால சரி மகனே நீயா பட்டு திருந்தி வானு விட்டுட்டேன்!!

ஒரு மாதம் அவளுடன் சராமாரியான தொலைபேசி காதலுக்கு அப்புறம் தலைவரு எனக்கு கால் பண்ணாரு. 

அவள பாக்க மதுரைல இருந்து திருச்சிக்கு பைக்ல 1.5மணி நேரத்துல போயிருக்காரு அண்ணே. (திருச்சி போக குறைந்தபட்சம் 2.5 மணி நேரமாவது ஆகும்.) அங்க போயி அவளப் பார்த்து வெக்கப்படுறதெல்லாம் முடிச்சிட்டு சினிமாக்கு போகலாமுனு முடிவு பண்ணிருக்காங்க.  மிச்சத்த அவன் வாயாலயே கேளுங்க, 

"பைக்லயே நேத்து படத்துக்கு போனேன்டா அவ கூட. டிக்கெட் கொடுக்குறவரைக்கும் loungeல உக்காந்திருந்தோம். அப்போ அவ ஹேண்ட் பேக பார்த்தா பத்து பதினைஞ்சு சிம்கார்டு வச்சிருக்கா மச்சி. ஆனா நான் எப்பவும் பேசுறப்பலாம் "உனக்காக தான் நான் ஃபோனே வச்சிருக்கேன். வேற யாருகூடயும் பேச மாட்டேன்"னு சொல்லுவா. அதுனால "என்ன இப்படி சொன்னியே அப்புறம் எதுக்கு இத்தன சிம்னு கேட்டதுக்கு காலேஜ்ல ஃபிரீயா கொடுத்தாங்க அப்படி இப்படினு என்னென்னமோ உளறுனா மச்சி. சரினு விட்டுட்டேன். அப்புறம் பார்த்தா பத்து செகண்டுக்கு ஒரு தடவ கால் வந்துகிட்டே இருக்கு அவளுக்கு. முணமுணமுணனு முணங்குறா ஃபோன்ல. அப்புறம் தியேட்டர் குள்ள போனா லைட் ஆஃப் பண்ணவுடன என்னை முத்தம் கொடுக்க சொன்னா. எனக்கு வெக்கமாவும் பயமாவும் இருந்துச்சு. அவ டக்குனு முத்தம் கொடுத்துட்டா மச்சி.  எப்படா படம்,முடியும்னு வெயிட் பண்ணி அலறியடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்டா. அப்புறம் அவளும் கால் பண்ணல நானும் பண்ணல" 

எனக்கு செம சிரிப்பு. ஏன்னா அவ ஆர்குட் புரொஃபைல் பாக்குறப்பையே அவளப் பத்தி ஓரளவுக்கு இப்படிதான் நினைச்சு வச்சிருந்தேன். "மச்சி அவ ஆளு இல்லடா. ஐட்டம்"னு சொல்லி சிரிச்சுட்டு சாயங்காலம் அவனைப் பார்த்து தேத்துறதுக்குள்ள செம காமடியா ஆயிருச்சு.

 வாழ்க்கைல முதல் முதல்ல பேசுன, பழகுன பொண்ணே ஐட்டம்னு தெரிஞ்சவுடன அந்த குழந்தை பையன் மனசு எவ்வளோ பாடுபட்டிருக்கும்! ஆனா அவனும் அதை அப்புறம் சீரியசா எடுத்துக்கல. "நல்லவேளை மச்சி. இப்பவே தெரிஞ்சுருச்சு. அவளை கல்யாணம் பண்ணி தொலைச்சிருந்தா ஃபர்ஸ்ட் நைட்ல ஃபோன் வந்திருக்குனு எந்திரிச்சு வெளிய போயிருப்பா"னு சொல்லி சிரிச்சான்! 

இன்னொரு நாள், "மாப்ள சொந்த வீடு வாங்குவனு நினைச்சேன் இப்படி வாடகை வீடாயிருச்சேடா"னு சொன்னேன் அவன்கிட்ட,
அதுக்கு அவன் "வாடகை வீடுன்னாதான் பரவாயில்லையே மாப்ள. அது ஓட்டல்"டான்னான்!! 

அப்படியே நாளாக நாளாக அவனோட காதல் தோல்வி காமடியா மாறிருச்சு! நாளைக்கு அவன் மனைவிகிட்ட சொன்னா கூட இது சிரிப்பாதான் இருக்கும். இப்படி எத்தனையோ விஷயம் வாழ்க்கைல கொட்டி கிடக்கு. ஆனா அதுல உள்ள நகைச்சுவைய நாம தெரியாமலே மறந்துறோம் இல்லேனா கண்டுக்காம விட்டுர்றோம். அதை எடுத்து நம்மகிட்ட கொடுக்க நண்பர்களும் நகைச்சுவை உணர்வும்  தேவை!  இப்படி என்னுடைய மற்றும் ஏராளமான நண்பர்களோட டயரிக் குறிப்புகள் நிறைய நகைச்சுவையுடனும், கொஞ்சம் சோகத்துடனும், நிறைய நிறைய நட்புடனும் கொட்டிக் கிடக்கு! இன்னும் சொல்லுவேன்! படிங்க!

(இதை நான் பிளாக்ல போடப் போறேன் மச்சினு சொன்னதுக்கு "போடு போடு. நாலு பய திருந்துனா சரி. ஆனா மாப்ள என் பேரைப் போட்றாதடா"ன்னான்!!)

Monday, December 13, 2010

முகம் படுத்தும் பாடு..

"இதோட எட்டாவது மாப்ள இது. இதுக்கு மேலயும் நீ தட்டிக்கழிச்சுட்டே போனீனா வெறும் கிழவனுங்க தான் வருவாங்க", காபி ஆத்திக்கொண்டே அத்தை பேசினார்.

"இங்க பாரு. உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க? நம்ம குடும்பத்துக்கு காதல் எல்லாம் ஒத்து வராது. அப்படி ஏதாச்சும் இருந்தா தயவுசெஞ்சு மறந்துட்டு அடுத்த வர்ற மாப்ளைய கண்ண மூடிட்டு ஓகே சொல்லிரு." இந்த வசனத்தை சொல்வதற்காகவே ஊரில் இருந்து வந்திருந்தார் மாமா.

"எல்லாருக்கும் சூர்யா மாதிரி, விஜய் மாதிரி தான் மாப்ள வேணும்னா எங்க போறது? அவனுங்கள புடிச்சு குளோனிங் தான் பண்ணனும். உலகத்துல எந்த அப்பனும் இப்படி பொறுமையா இருக்க மாட்டான்" இது பல்லைக்கடித்துக் கொண்டே அப்பா. 
  
"பொறுமையா பார்ப்போங்க. இப்ப என்ன? அவ நாளைக்கு நம்மள குறை சொல்லிற கூடாதுல" நூறாவது முறையாக அம்மா.

"கடைசியா பார்த்த மாப்ள நல்லாதான் இருந்தாரு. சூப்பர் கேரக்டர் அவரு. அவர வேணாம்னு சொல்லிட்டல... பாரு... நானே உன் கல்யாணத்துக்கு கெஸ்ட் மாதிரி வந்து 100ரூபாய் மொய் எழுதிட்டு சைலென்டா போகப்போறேன்" இது தம்பி.

இப்படி பக்கம் பக்கமாக வசனங்களை உறவினர்கள் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது நம் கதாநாயகி அனுஷாவினுடைய வாழ்க்கை. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இரண்டு வருடத்தில் இதுவரை வந்த எட்டு பேரில் யாருமே இவளைப் பார்த்து பிடிக்கவில்லையென சொல்லவில்லை.

முதல் மாப்பிளை பார்த்தது தரகர் மூலமாக தான். "சார். மாப்பிள்ளை வீடு நல்ல இடம். திருச்சிலயே நிறைய சொத்து இருக்கு அவங்களுக்கு. மாப்ள RTOவா இருக்காரு. சின்ன வயசுலயே எக்சாம் எழுதி போனவரு. புத்திசாலி. பேரு அருண். நம்ம பாப்பா ஜாதகத்தையும், ஃபோட்டோவும் கொடுத்தீங்கன்னா பையன் டீடெய்ல்ஸ் வாங்கி கொடுத்துருவேன்." இப்படிதான் ஆரம்பித்தது முதல் மாப்பிள்ளை 'காதை'. ஒரு மூன்று நாட்களில் புகைப்படம் வந்தது.  எப்போதோ கொடைக்கானலில் எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டில் அனுப்பிருந்தார்கள். மாப்பிள்ளை நன்றாக இருந்தான். தன் பெண் அழகாகத்தான் இருக்கிறாள் என நம்புகிற கோடிக்கணக்கான அப்பாக்களில் அனுஷா அப்பாவும் ஒருத்தர் என்பதால் அனுஷாவின் அழகுக்கு ஏற்ற மாதிரி முதல் மாப்பிள்ளையே அமைந்துவிட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம். அலுவலகத்தில் இருந்து பெண் வந்தவுடன் மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டிவிட்டு எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம் என முடிவு செய்திருந்தார். எப்படியும் பையனுக்கு பெண்ணை பிடித்துவிடும். ஏனெனில் அவர் பெண்ணை பிடிக்கவில்லையென்றால் அந்த மாப்பிள்ளை ஒன்று சின்ன பைத்தியமாக இருக்கவேண்டும், இல்லை பெரிய பைத்தியமாக இருக்கவேண்டும் என்பது அவருடைய நம்பிக்கை. அதனால் மாப்பிள்ளை வீட்டில் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காமலேயே தன் பெண்ணின் சம்மதத்துக்காக காத்திருந்தார் அனுஷாவின் அப்பா சண்முகம். அனுஷா வந்தவுடன் மாப்பிள்ளை அருணை பற்றிய சரக்கையெல்லாம் பெருமையுடன் எடுத்துவிட்டார்.

அனுஷா கேட்டாள் "எந்த ஊருப்பா?"
"திருச்சி மா. RTOவா இருக்காரு" பதில் சொன்னார் சண்முகம்
"வாட்ட்ட்ட்ட்ட்ட்? என்னப்பா சொல்றீங்க? பையன் சாஃப்ட்வேர் இல்லையா? திருச்சில எப்படிப்பா இருக்க முடியும் என்னால? கடைசில கிராமத்துல என்ன கல்யாணம் பண்ணி அனுப்பப் பாக்குறீங்களேப்பா? ஏன்பா?"என்று பயங்கர கோபத்துடனும், ஏமாற்றத்துடனும் பேசினாள் அனுஷா. சண்முகம் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பேச்சுக்காக கூட மாப்பிள்ளை புகைப்படத்தை அனுஷா பார்க்கவே இல்லை. இந்த சம்பவத்துக்குப் பின் தரகர் திருச்சி, மதுரை என்று வாயைத் திறந்தாலே சண்முகம் கடுப்பாக ஆரம்பித்தார். அப்புறம் வந்து சிக்கியவன் தான் ஜானகிராமன். பெங்களூருவைச் சேர்ந்த டிபிகல் (typical) 21ஆம் நூற்றாண்டு சாஃப்ட்வேர் மாப்பிள்ளை.  

 ஜானகிராமன் புகைப்படத்தை சண்முகத்துக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லல. திருமணத்துக்காகவே ஸ்டூடியோ போய், இயற்கை காட்சிகள் அமைந்த சுவர்சித்திரங்கள் முன் ஃபுல் ஃபார்மல்ஸில்(formals) எடுக்கப்பட்ட ஃபோட்டோ அது. ஜானகிராமன் காமிராவைப் பார்க்காமல் ஒரு 60 டிகிரி அந்தப் பக்கமாக திரும்பி இருந்தான். அதாவது அவன் முகத்தில் எவையெல்லாம் நன்றாக இருக்கிறதென அவன் நினைத்திருந்தானோ அவை மட்டும் காமிராவில் தெரிகிற மாதிரி போஸ் கொடுத்திருந்தான். ஸ்டைலாக கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுத்திருந்த மாப்பிள்ளையை சண்முகத்தை தவிர எல்லாருக்குமே புடித்திருந்தது. ஃபோட்டோவில் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். தொலைபேசியில் பேசி, சண்முகத்தின் வீட்டுற்கு வந்து பார்த்துவிட்டு மற்றதை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினார்கள் இரு வீட்டாரும். ஒரு 12 பேரை அழைத்துக்கொண்டு அனுஷா வீட்டிற்கு வந்தார்கள் ஜானகிராமனின் குடும்பத்தார். அனுஷா இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. எல்லாரும் ஐந்து நிமிடம் காத்திருந்த பின் அனுஷா வந்துவிட்டாள். பெண்ணைப் பார்த்தவுடன் மாப்பிள்ளை கீழே குனிஞ்சவன் தான், வெக்கப்பட்டே செத்துப்போயிவிடுவானோ என்று பயந்து அவனது அம்மாதான் அவனுக்கு தைரியம் கொடுத்தார்கள். கடைசியில் ஒருவழியாய் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான். அனுஷா மட்டுமல்லாமல் அந்த மொத்த குடும்பமும் அவனை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது. மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டார்கள். அப்புறம் ஜானகிராமன் அம்மா, "வேற ஒன்னும் பேசுறதுக்கு இல்ல. பொண்ணை ரொம்ப புடிச்சிருச்சு. நீங்களே தேதி பார்த்து ஃபோன் பண்ணுங்க" என்று சொன்னவுடன், சண்முகம் "சந்தோஷம். நான் பொண்ணுட்ட பேசிட்டு இன்னைக்கோ நாளைக்கோ ஃபோன் பண்றேன்" என்று பதிலளித்தார். எல்லாரும் கிளம்பி போனபின் அனுஷா சண்முகத்தை முறைத்துப் பார்த்தாள்.
"என்னமா.. பேசி முடிச்சிரலாமா??"
"ஏம்ம்ம்ம்ம்பா இப்படி பண்ணுறீங்க? அவன் காதை பார்த்தீங்களாப்பா? கூலிங்கிளாஸ் போட்டா கூட  நிக்காது போல. அவ்ளோ சின்னதா அசிங்கமா இருக்கு. மூஞ்சி பாக்க சகிக்கல."
இது சண்முகம் தவிர அவரது மீதமுள்ள குடும்பத்தார் எதிர்பார்த்தது தான். எல்லோரும் சிறிது நேரத்துக்கு முன் மாப்பிள்ளையை வெறித்து பார்த்தார்களே அது அந்த காதைத்தான். ஆனால் உண்மையிலேயே ஜானகிராமனின் காது அப்படிதான் இருந்தது. சின்ன வயதில் காதை திருகிய வாத்தியார் யாரோ அதிகமாக திருகிவிட்டதைப் போல. அரை காதுக்கு மேல் வளரவில்லை! இப்படிதான் ஜானகிராமன் சம்பந்தம் சண்முகம் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாமல் போன சம்பவம் நடந்தது.
 
இப்படி அடுத்தடுத்த வாரத்தில் இன்னும் இரண்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். ஒருத்தன் சம்பத். வயது 29. அனுஷாவைவிட ஐந்து வயது அதிகம். சம்பளம் 5000ரூபாய் குறைவு. ஃபோட்டோ மற்ற மாப்பிள்ளைகள் போலவே வழக்கம் போல பயங்கரமாக போஸ் கொடுத்து அனுப்பியிருந்தான். ஸ்டூடியோவில் எடுத்ததுதான். சென்னையில் வேலை. சண்முகத்துக்கு சம்பத்தை ஓரளவுக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் வீட்டுக்கு அவர்களை நேரில் வர சொல்வதற்க்கு முன் எதற்கும் தரகரிடம் ஒருதடவைக்கு இரண்டு தடவைகள் பையன் முகலட்சணத்தை பற்றி கேட்டுக்கொள்ளலாம் என்று தரகரை தொலைபேசியில் அழைத்தார்,

"ஏம்பா.. பையன நேர்ல நீயே பாத்திருக்கியா? முகத்துல எதாச்சும் சராசரிக்கு சின்னதாவோ, சராசரிக்கு பெருசாவோ இருக்காதுல்லப்பா? போன தடவ மாதிரி ஆயிறக்கூடாது"
"என்ன சார் நீங்க? போன தடவ தெரியாம தப்பு நடந்து போச்சு சார். நம்ம பாப்பா அழகுக்கு ஏத்த மாதிரி மாப்ள கொண்டு வராதது தப்புதான் சார். இந்த தடவ அப்படி இல்ல சார். பையன் ரொம்ப அழகு. பார்க்க ஆக்டர் பிருத்விராஜ் மாதிரி இருப்பாரு. வந்தோன நீங்களே சொல்லுவீங்க பாருங்க."
"அப்ப சரிய்யா. அவங்கட்ட சொல்லி அடுத்த ஞாயிறு வரச் சொல்லு."
கொஞ்சம் யோசித்துவிட்டு அவரே தொடர்ந்தார்
"வீட்ல வேணாம். வடபழனி முருகன் கோவில்ல பார்ப்போம்னு சொல்லுய்யா."
"சரி சார். அப்படியே பண்ணிருவோம்"

எல்லாம் பேசியபடி ஏற்பாடாகி வடபழனி முருகன் கோவிலில் சந்தித்தார்கள்.  மாப்பிள்ளை வீடு சொன்ன நேரத்தை விட ஒரு 15நிமிடம் தாமதமாக வந்தார்கள். அதற்காக சம்பத் நிறைய முறை சண்முகத்திடம் மன்னிப்பு கேட்டான். சம்பத் பார்க்க ரொம்ப நல்லவனாகத் தெரிந்தான். ஆனால் சண்முகம், சம்பத் முகத்தை பலமாக ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவருக்கு ரொம்ப திருப்தி. புகைப்படத்தில் பார்த்தது போலவே அப்படியே இருக்கிறான் என்று நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டே சம்பத்தின் அப்பாவுடன் பேசிக்கொண்டே கோவிலை சுற்றி நடக்க ஆரம்பித்தார். பின்னால் அனுஷா, சம்பத், அனுஷாவின் தம்பியும் பேசியபடியே நடந்து வந்தார்கள். அனுஷா சிரிக்கும் சத்தம் அவ்வப்போது சண்முகத்துக்கு கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு இருபது நிமிடங்களுக்குப் பின் எல்லோரும் கோயிலை விட்டு வெளியே வரும்போது அனுஷா செருப்பு மாட்ட சிறிது நேரமானது. அவள் சரியாய் செருப்பை மாட்டிமுடிக்கும் வரையிலும் அவளுக்கு துணைக்கு நின்றான் சம்பத். பின் இருவரும் வெளியே வந்த பின் இருகுடும்பங்களும் விடைபெற்றார்கள்.

 வீட்டுக்கு வந்து தன் பெண்ணிடம் கண்டிப்பாக சரியென்ற பதிலை எதிர்பார்த்து வழக்கமான கேள்வியை கேட்டார் சண்முகம், "ஏம்மா. சம்பத் வீட்டுல சரினு சொல்லிறவாம்மா? அவங்க வீட்டுல உன்ன பிடிச்சிருக்குனு அன்னைக்கே சொல்லிட்டாங்க. எதுக்கும் உன்கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு நான் தான் பதில் எதும் சொல்லாம வந்துட்டேன்." அனுஷா சில நொடி அமைதிக்குப் பின் சொன்னாள் "அப்பா...... அவனுக்கு பயங்கர ஆய்லி ஃபேஸ் பா. எண்ணை வழியுது. எனக்கு அப்படியிருந்தா சுத்தமா புடிக்காதுப்பா. அதுவும் போக என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்கப்பா.."
இதைக்கேட்ட சண்முகத்துக்கு முதல் முறையாக மகள் மீது கோபம் வந்தது. ஆனால் தந்தையின் கோபத்தை விளையாட்டுக்கு கூட அறிந்திராத மகள் அனுஷா. தான் சொல்லிய மறுப்புக்கு தந்தையின் பதிலை எதிர்பாராமல் அலுவலகம் கிளம்பினாள் அனுஷா.

இந்த சம்பவத்துக்குப் பின் அனுஷாவுக்காக மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தில் அவருக்கிருந்த ஆர்வமே குறைந்து போனது. சம்பத்தை அனுஷாவின் தம்பிக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்த்த அந்த ஒரே நாளில் மிகவும் ஒட்டிவிட்டான். ஆனால் அக்கா சம்பத்தை நிராகரித்துவிட்டாள் எனத் தெரிந்த போது அவனுக்கே எரிச்சலாகத்தான் வந்தது. அனுஷாவின் இந்த நிராகரிப்புகளில் எல்லாமே அவளுக்கு உற்ற துணையாய் செயல்பட்டது அவளின் அம்மா தான். சிவப்பு போல அழகில்லை என்பதும் சிவப்பாய் இருப்பது மட்டுமே அழகு என்றும் நம்பும் தமிழகத்தின் 8கோடி பேரில் அனுஷாவின் அம்மாவும் ஒருவர். இந்த நம்பிக்கையை இதுவரை அனுஷாவை பெண் பார்த்து போன எல்லா மாப்பிள்ளை வீட்டாருமே மேலும் உறுதி செய்வதாகவே பேசினார்கள். அனுஷாவின் சிகப்பழகை புகழ்ந்து தள்ளினார்கள். மிகவும் சிவப்பாக இருக்கும் தன் மகளுக்கு நிகராக-அழகாக இருக்கும் மாப்பிள்ளையை எப்படியேனும் தேடிப்பிடிப்பது சண்முகத்தின் கடமை என மிகவும் தீவிரமாக நம்பினார் அனுஷாவின் அம்மா. சம்பத் வரனை மிகுந்த தர்மசங்கடத்துடன் நிராகரித்த பின் தான் ஊரில் இருந்து அனுஷாவின் மாமாவும், அத்தையும் வந்திருந்தார்கள். அவர்களின் மூலம் வந்த மாப்பிள்ளைதான் நவீன். மும்பையில் பிரபல தனியார் கம்பனியில் மேலாளர் பதவியில் இருக்கும் மென்பொருள் வல்லுனன். மாதத்துக்கு ஒருமுறை கம்பெனி செலவில் நாடு நாடாக பறப்பவன். அவனை பேசிமுடிக்கலாம் என்று மாமாவும் அத்தையும் சொன்னார்கள். சண்முகம், "என்னமோ செய்யிங்க" என சொல்லிவிட்டார்.

பின் நவீன் வீட்டில் பேசி நவீனின் புகைப்படத்தை அவனை விட்டே அனுஷாவின் மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொல்வது என முடிவாகியது. நவீன் புகைப்படத்தை நவீன்-அனுஷாவுக்கும், அனுஷா புகைப்படத்தை அனுஷா-நவீனுக்கும் ஒரே நாளில் அனுப்பிக் கொண்டர்கள். பார்க்க சுமாராக இருந்தான் நவீன். கண்டிப்பாக சிவப்பு கிடையாது. நெற்றியில் முடி கொஞ்சம் ஏறி இருந்தது. அவனுக்கு வழுக்கை விழாமலேயே இருக்கும் சாத்தியங்கள், இந்தியா வல்லரசாகும் சாத்தியத்துடன் ஒத்திருந்தன. நவீன் புகைப்படத்துடன் அவனது விரிவான பணி வர்ணணையையும், இமாலய சம்பள விவரங்களையும் அனுப்பியிருந்தான். அனுஷா நவீனின் புகைப்படத்தை அலுவலகத்தில் பார்த்ததால் அவளது தோழிகளும் சேர்ந்தே பார்த்தார்கள். நவீனின் பணி வர்ணனையை பார்த்து வாயடைத்துப் போனார்கள். அனுஷாவை கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒத்துக்கொள்ள சொன்னார்கள். இதுபோல் மாப்பிள்ளை கிடைக்கவே கிடைக்காது என்றும், பல நாடுகளுக்கு நினைத்தவுடன் செல்லலாம் என்றும் புகழ்ந்தார்கள் நவீனை. அனுஷாவுக்கு நவீனின் கலரும், நெற்றியும் மற்ந்து போனது. நவீனை கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது என முடிவு செய்துவிட்டாள். இப்போதும் நவீன் அவளை ஒத்துக்கொள்ள வேண்டுமே என அவள் எண்ணவில்லை. தீடிரென ஜீ-டாக் (gtalk) அறிவிப்பொலி கேட்டது. நவீன் chat அழைப்பு அனுப்பியிருந்தான். உடனே ஏற்றுகொண்டாள் அனுஷா!

அனுஷா அழகை ஆகா ஓகோவென புகழ்ந்தான் நவீன். வீட்டில் எல்லோரிடமும் நவீனை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்லிவிட்டாள். பெண் பார்க்கும் சடங்கெல்லாம் தேவையில்லை, நேராக நிச்சயதார்த்தமே செய்துவிடலாம் என்றும் கூறினாள். சண்முகத்துக்கு பயங்கர ஆச்சரியம். இதுவரை பார்த்த மாப்பிள்ளைகளிலேயே மட்டம் நவீன் தான். ஆனால் தன் மகள் இவனைப் பிடித்திருப்பதாய் சொல்லும் ரகசியம் சண்முகத்துக்கு பிடிபடவேயில்லை. சரி, எப்படியோ மணமானால் சரி என விட்டுவிட்டார். சண்முகத்தின் வீட்டில் சதா நவீன் பேச்சாகவே இருந்தது. அம்மாவும்-பொண்ணும், அத்தையும்-மாமாவும் நவீன் புராணம் பாடியபடியே அனுஷா நவீனுடன் தொலைபேசியில் பேசும் காட்சியை ரசித்தார்கள். நவீன் அனுஷா அம்மாவுடனும் அவ்வப்பொழுது பேசினான். அனுஷாவை தான் மிகவும் விரும்புவதாகவும் மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளப்போவதாகவும் நொடிக்கொருமுறை தெரிவித்தான். மேலும் தான் இரண்டு மாதத்தில் ஸ்விட்சர்லாந்து போகப் போவதைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டான். சண்முகத்தையும், அனுஷாவின் தம்பியையும் தவிர எல்லாருமே குடும்பத்தில் புலங்காங்கிதம் அடைந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் ஒருநாள் நவீன் தான் சென்னை வரப்போவதாகக் குறிப்பிட்டான். குடும்பம் மிகப்பெரும் வரவேற்புக்கு தயாராகியது.

நவீன் வருவதற்கு முந்தைய நாள் அனுஷாவின் அம்மா அனுஷாவை அழைத்து,  "இங்கப் பாரு.  நாளைக்குதான் அவனை நேருல பாக்க போற. அவன் எப்படி இருந்தாலும், அவன புடிக்கலேன்லாம் சொல்லிறாத.. அந்த பையன் உன் மேல உயிரையே வச்சிருக்கான். நீ இல்லனா எதாவது பண்ணிக்குவான் போல. அவ்ளோ ஆசையா இருக்கான். புரியுதா?"
"அம்மா. அப்படில்லாம் பண்ண மாட்டேன்மா. நாங்க நிறைய பேசிட்டோம். நவீன தவிர வேற யாரையும் என்னாலயும் கல்யாணம் பண்ண முடியாதும்மா.",அனுஷா சொன்னாள்.

அடுத்த நாள் காலையில் நவீன் வந்தான். புகைப்படத்தைவிட நேரில் படு சுமாராக இருந்தான். வழுக்கை ஏற்கனவே விழ ஆரம்பித்திருந்தது. அவன் அனுப்பியிருந்த புகைப்படம் அநேகமாய் ஐந்து ஆறு வருடத்திற்கு முந்தைய புகைப்படமாக இருந்திருக்க வேண்டுமென அத்தை, மாமா என எல்லாருக்குமே பட்டது.  அனைவருமே நவீனைப் பார்த்து கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். இன்னும் அறையிலிருக்கும் அனுஷா நவீனைப் பார்த்தவுடன் என்ன சொல்வாளோ என அனைவருமே வயிற்றில் புளி கரைத்தபடியே அமர்ந்திருந்தார்கள். அனுஷாவின் தம்பி, தன் அக்கா இவனை பிடிக்கவில்லையென கண்டிப்பாய் சொல்லிவிடுவாள் என்பதில் நவீனைப் பார்த்த மறுநொடியில் இருந்து பலமான நம்பிக்கை கொண்டவனாக மாறி இருந்தான். ஒரு பத்து நிமிடத்தில் அனுஷா அறையில் இருந்து வெளியில் வந்தாள். நவீனைப் பார்த்ததும் அவள் கொஞ்சம் கூட சங்கடப்பட்டதாய் தெரியவில்லை. மிகவும் ஆர்வமாக நவீனுடன் எப்போதும் தொலைபேசியில் பேசும் தொனியில் சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள். அனுஷாவின் தம்பிக்கு தன் நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கியதை கண்டவுடன் வேகமாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான். மிகுந்த வருத்தம்அனுஷா வரும்வரை எல்லாரிடமும் நன்றாக பேசிய நவீன், அனுஷா வந்ததில் இருந்து வழக்கமாய் பேசுவதைப் போல பேசவில்லை, மென்று முழுங்கினான். வெக்கமாய் இருக்கலாம். பின்னர் அனுஷாவும் நவீனும் அடையார் ஆனந்தபவனுக்கு கிளம்பினார்கள். உடன் அனுஷாவின் தம்பி வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டான்.

நவீன் வந்து சென்றதில் இருந்தே வீட்டில் ஒருவித சோகத்துடன் கூடிய உற்சாகம் தொற்றிற்று. நவீனின் உருவம் பற்றிய கவலை இருந்தாலும் இப்போதாவது அனுஷா திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாளே என்ற சந்தோஷம் கவலையை மறைக்க தன்னால் முயன்ற அளவுக்கு உதவியது. கடைசியாக குடும்பத்தாரின் நச்சரிப்புக்கு இணங்க சண்முகம் நவீனின் பெற்றோரை அழைத்து நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்வது குறித்தும், அதற்கு முன் சம்பிரதாயமாக வீட்டுக்கு வந்து செல்லுமாறும் அழைத்தார்.
நவீனின் அப்பா பேசினார், "இல்ல சார். தம்பி அங்க வந்துட்டு போனானாம்ல போன வாரம். வந்ததில இருந்து பொண்ணு பிடித்தமில்லனு சொல்றான். அவன் பேச்சை எதிர்த்து நாங்க ஒன்னும் செய்யிறதில்ல. நானே உங்கள கூப்பிடலாம்னு இருந்தேன்...அதுகுள்ள...."செல்பேசியின் ஸ்பீக்கரில் நடந்த இந்த உரையாடலை சண்முகம் குடும்பத்தார் எல்லாருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனுஷாவையும் சேர்த்து. 


Thursday, December 9, 2010

நடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

ஐஸ்வர்யா ராயும் அருந்ததிராயும் என்ற மிகவும் அருமையான, எழுத்தாளுமை மிக்க, மூளையை முழுதாய் சலவை செய்யவல்ல, இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவல்ல ஒரு மகத்தான விஷம் தடவிய கட்டுரையை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நாம் மிகவும் ரசிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் சில நேரங்களில் யார்மீதோ தங்களுக்கிருக்கும் தனிப்பட்ட விருப்பத்தையும், வெறுப்பையும், கருத்தையும், நமக்குப் பிடித்த அதே எழுத்தின் துணையோடு ஒரு சமூக புரட்சி போல நம்மிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் போது பலர் ஏமாந்துதான் போகிறோம். ஆனால் அப்படிப்பட்ட எழுத்துக்களில் அடிக்கும் கழிவு வாசனையை முகர்ந்து, சீண்டாமல் நகர்ந்து செல்லும் கடமையும் நமக்கிருக்கிறது. தனிப்பட்ட துவேசமும், வஞ்சமும், ஆண்மையற்ற தன்மையும்,ஒருசேரக் கொண்டிருக்கும் கட்டுரையாகவே ஜெயமோகனின் '' கட்டுரை பட்டது எனக்கு.

அருந்ததிராயின் நாவலின் தன்மையையும், காஷ்மீர் பிரச்சினையின் சாரத்தையும் எப்படி ஜெயமோகனால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது? இதற்கு முன் அருந்ததி ராயின் நாவலை ஏன் உலகமே கொண்டாடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய நாவல்கள் இந்தியாவை வழக்கமான கலாசார துதி போர்வைக்குள் அடைப்பவையாகவே இருக்கின்ரன. கலாச்சாராம், மதம் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நடந்துகொண்டிருக்கும் பெண்ணடிமை அவலங்களையோ, சாதிய பிரச்சினைகளையோ அவைகள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் வெள்ளைக்காரன் முன் மானம் போய்விடுமோ என்ற பயமோ, அல்லது நமது ஊடகங்களினால் எதிர்க்கப்படுவோமோ என்ற பயமோ, அல்லது நம் வீட்டு பிரச்சினைகளை எதற்காக பக்கத்துவீட்டுக்காரனிடம் சொல்ல வேண்டும் என்ற தயக்கத்துடன் கூடிய பயமாகவோ மட்டுமே இருக்க முடியும். ஆனால் அருந்ததிராயின் நாவல் இலக்கியத்தரமில்லாமல் இருக்கலாம். ஆனால் பச்சையான நாவல் அது. மலத்தை கழிவு எனச் சொல்லாமல் 'பீ' எனச் சொன்ன நாவல் அது. இந்தியாவின் வேறு பரிமாணத்தை உலகுக்கு காட்டிய நாவல் அது. அதனால் தாங்கள் இதுவரை மிகவும் கண்ணியமானதாகவும், மிகுந்த கலாச்சார பலம் பொருந்தியதாகவும் நினைத்துக்கொண்டிருந்த இந்தியாவின் மறுபக்கம் தங்களுக்கு ஒரு இந்திய எழுத்தாளராலேயே காட்டப்பட்டவுடன் மேலை நாடுகள் அந்நாவலைக் கொண்டாடின. பரிசுகளாக தந்து குவித்தன. அருந்ததிராய் out of the box எழுத்தாளராக ஆக்கப்பட்டார், ஆனார். ஸ்லம்டாக் மில்லியனைர் படம் கூட இதே வகையறா தான். இந்தியாவின் சினிமா மோகத்தையும், வறுமையையும் உலகுக்கு காட்டிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை உலகத்துடன் சேர்ந்து இந்தியாவே கொண்டாடியதே, சினிமா உலகின் மிகப்பெறும் விருதான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதே, அதை கொண்டாடினோமே, அதனால் ஜெயமோகனின் பார்வையில் நாம் எல்லாருமே அருந்ததிராய்களா?

அருந்ததிராயின் நாவல் ஒன்றுக்கும் உதவாத காகித குப்பையாகவே இருக்கட்டும். Over rated நாவலாகவே இருக்கட்டும். ஆனால் அதற்கும், அருந்ததிராயின் சமீபத்திய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஜெயமோகன் எதிர்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இல்லாத இந்திய இறையாண்மையை அருந்ததிராய் சீர்குலைப்பதாய் அவர் நினைத்தால், காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு சரிதான் என்பதை தன் கருத்துளோடு முன்வைக்கும் கட்டுரையை எழுதியிருக்க வேண்டுமே தவிர, "உன் நாவல் சரியில்லை. அதனால் நீ இந்தியாவை குறை சொல்லும் தகுதியை இழக்கிறாய்" எனச் சொல்வது மகாகேவலமான, கருத்தே இல்லாதவனுடைய வாதமாகத்தான் இருக்கமுடியும்.
 சீனாவும், மேலைநாடுகளும் இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க அருந்ததிராயை ஏவிவிடுகிறார்கள் எனச் சொல்கிறார் ஜெயமோகன். ஏற்கனவே இந்தியாவின் தலையில் பெட்ரோல் எரிந்து கொண்டிருக்கும் போது அதில் மண்ணெண்ணய் ஊற்றும் அவசியம் சீனாவுக்கோ, வேறு யாருக்கோ கிடையாது. மேலும் இந்திய ஊடகங்கள், இந்திய இறையாண்மையை தங்கள் அரசியல் லாபத்துக்காக எப்போதுமே தூக்கிப் பிடிக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் தானே ஒழிய மேலைநாடுகளின் கூலிகள் அல்ல. எப்போதுமே அரசியல்வாதிகளின் அத்தியாவசிய தேவையான இந்திய இறையாண்மையை காக்க போராடும் ஊடகங்கள், பாகிஸ்தான் பிரச்சினையை பிரதானமாகவும், உள்நாட்டு பிரச்சினைகளான மாவோயிஸ்ட், மீனவர்கள் சாவு, காஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல் ஆகிய செய்திகளை மறைத்தோ மறந்தோ அல்லது தேன் தடயியோ தான் தந்திருக்கின்றன. உண்மை நிலைமையை சொன்னதாய் ஆதாராமே இல்லை. ஆனால் அதையும் மீறி ஊடகங்கள் அருந்ததிராயின் இந்திய இறையாண்மையை துகிலுரிக்கும் பேச்சையும், எழுத்துக்களையும் வெளியிடுகின்றன என்றால், அவர் ஏற்கனவே மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஊடகங்களால் தவிர்க்க முடியாத சக்தியாய் அவர் ஆனதாலேயே ஊடகங்கள் அவரை மேலேற்றி வைத்திருக்கின்றன.

                                         
இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி கவலைப்படும் ஜெயமோகன், காஷ்மீர மக்கள் தெருக்களில் நின்று தங்கள் மகனையோ, தந்தையோ, கணவனையோ, மகளையோ, மனைவியையோ கொன்று இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைத்த ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்களே அதைப் பற்றி ஏன் கவலைப் பட மறுக்கிறார்? வடகிழக்கு மாநில பெண்கள் தங்களை துச்சமென எண்ணி, தங்கள் உடல்களை கசக்கி, தாங்கள் இந்தியர்கள்தான் நம்மை காப்பாற்றதான் இந்திய ராணுவம் உள்ளது என்ற நம்பிக்கையை உடைத்து. அந்த மக்களின் மனதில் இருந்த இந்திய ஒருமைப்பாட்டை வன்புணர்வு செய்த ராணுவத்துக்கெதிராக நிர்வாணமாக போராடினார்களே அதைப் பற்றி ஏன் கவலைப் பட மறுக்கிறார்? மீனவர்கள் சாவதை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது எனச் சொன்ன மத்திய அரசு ஒருமைப்பாட்டை சீர்குலைத்த போது தமிழகத்தையும், இந்தியாவையும் இரண்டாகப் பிரித்துப் பார்த்து இந்திய ஒருமைப்பாட்டை சீகுலைத்ததே அதற்கு என்ன குரல் கொடுத்தார்?

2004ல் 'சிட்னி அமைதி' பரிசு, மாவோயிஸ்ட்டுகளையும், காஷ்மீர போராட்டத்தையும் ஆதரிக்கும் அருந்ததிராய்க்கு வழங்கப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அமைதியான ஒரு நாட்டில் போராட்டம் வெடிக்காது. வெடிக்கும் போராட்டங்கள் எல்லாமே அமைதியை தங்கள் முடிவாகவோ நோக்கமாகவோ கொண்டவைதான். இங்கே உண்ணாவிரதம் இருப்போரை சாகவிடும் நாட்டில், வாழ்நாள் முழுதும் உண்ணாவிரதம் இருப்போரை மதிக்காத நாட்டில் எப்படி அமைதியை, அமைதியான போராட்டத்தால் வெல்ல முடியும்? அமைதிக்காக போராடும், அமைதியைத் தவிர வேறெதையுமே நாடாத போராளிகளை ஆதரிப்பவருக்கு அமைதிக்கான பரிசு கொடுக்காமல், மலைவாழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு நிலவிய அமைதியை சீர்குலைத்து, பெண்களின் உடலை பொருளென எண்ணி சூறையாடி, அப்பாவி உயிர்களை குண்டுகள் அனுப்பிப் பறிக்கும் இந்திய ராணுவத்தை ஆதரிக்கும் ஜெயமோகனுக்கா கொடுப்பார்கள்??

மேதா பட்கர் நடத்தும் போராட்டங்களைப் போல் அல்லாது அருந்ததிராய் ஊடகப் போராட்டம் நடத்துகிறாரா? ஆமாம். ஊடகங்கள் இன்றியோ, அல்லது ஊடகங்களைத் தவிர்த்தோ ஒரு போராட்டம் வெற்றி பெற முடியுமா? புலிகளின் போராட்டம் தற்காலிகமாக படுதோல்வியை சந்தித்ததில் ஊடகங்களின் பங்களிப்பை மறந்துவிட்டாரா ஜெயமோகன்? ஒரு இன மக்களோ அல்லது ஒரு ஊரைச் சேர்ந்த மக்களோ தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற அந்த போராட்டத்தை பார்க்கும், அல்லது கேள்விப்படும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாக வேண்டும். அந்த போராட்டத்தின் சரியான பரிமாணத்தை பிரச்சினைல்லு சம்பந்தமில்லாத மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகங்களின் பங்களிப்பு தேவை. அந்த பங்களிப்பை, அருந்ததிராய் தன்னை போராட்டங்களில் இணைத்துக் கொள்வதன் மூலமும், புக்கர் பரிசு பெற்ற தன் முகத்தின் பிரபலத்தை வைத்தும் ஊடகங்களை செய்ய வைக்கிறார்? இது என்ன குற்றம்? இதை குற்றம் என சொல்வது பச்சை பொறாமையேயொழிய வேறெந்த நல்லெண்ணமாகவோ, ஈரவெங்காயமாகவோ எனக்குப் படவில்லை. இப்போது ஜெயமோகன் அருந்ததிராயை- ஐசுவர்யா ராயை ஒப்பிட்டு விளம்பரம் தேடுவது போல் தேடிய விளம்பரம் அல்ல அருந்ததிராயின் விளம்பரம். அவரது முதல் நாவல் புக்கர் பரிசு பெற்ற போதே உச்சகட்ட விளம்பரத்தையும், புகழையும் அடைந்துவிட்டார். இப்போது அவர் செய்வதெல்லாம் அந்த விளம்பரத்தின் பலனை மக்களின் பலனுக்காக திருப்பி விடும் வேலையைதானேயொழிய ஜெயமோகனுக்கு பழக்கப்பட்ட சுய-விளம்பரம் போன்றது அல்ல.
                                         
  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் தங்களுக்கும் தங்கள் கொள்கைக்கும் தீங்கு விளைவிக்கும் இந்திய போலி இறையாண்மையின் மீதான தாக்குதலை உள்நோக்கம் கொண்டே எதிர்ப்பதாக தோன்றுகிறது. அவரது கட்டுரையில் 'ராய்' என பெயர்கள் முடியும் ஒரே காரணத்திற்காக உலக அழகி ஐசுவர்யாராயையும்-அருந்ததிராயையும் ஒப்பிடும் இழிவேலையை செய்துள்ளார் ஜெயமோகன். இதைப் படிக்கும் போது, ஒரு எழுத்தாளர், ஒரே நாவலில் புகழின் உச்சிக்குப் போன தன் சக எழுத்தாளருக்கு போராட்டங்களின் மூலமும், பேச்சுக்களின் மூலமும், எழுத்துக்களின் வாயிலாகவும் கிடைக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு வரும் பொறாமையும் வயிற்றெரிச்சலுமேயன்றி வேறில்லை என்றே நாம் முடிவுக்கு வர நேரிடுகிறது. நல்லவேளை ராய் ராய் என பெயர் முடிவதற்காக நம்மூர் நடிகை லட்சுமிராயையாவது விட்டு வைத்தாரே ஜெயமோகன்!

இந்தியாவைப் பற்றி இவ்வளவு வருத்தப்படும் ஜெயமோகன் இதுவரை எந்த சமூகப் பிரச்சினைக்காக போராடியிருக்கிறார்? அவரால் போராடவே முடியாது. ஏனெனில் அவர் ஆதரிக்கும் 'இசங்களும்' 'கொள்கைகளும்' போராட்டத்தை உற்பத்தி செய்பவைகளாக உள்ளனவே தவிர மக்களின் இடத்தில் இருந்து மக்களை ஆதரிப்பவைகளாக இல்லை.


மேலும் சொல்வதானால், ஜெயமோகன் என்ற 'சுயநல இந்திய ஒருமைப்பாடு காவலாளி'களை விட்டுவிடுவோம். உண்மையாகவே மக்களின் போராட்டங்களாலும், அருந்ததிராயின் போராட்ட குணம் கொண்ட பேச்சுக்களாலும் இந்திய ஒருமைப்பாடு கெடுகிறது என நினைக்கும் மக்களுக்கு சொல்கிறேன், கண்டிப்பாக கெடவில்லை. ஏனெனில் இந்திய ஒருமைப்பாடு என்பது அனைத்து மாநிலங்களும் இந்திய வரைபடத்தில் ஒன்றோடு ஒன்று ஓட்டி இருப்பதல்ல, ஒருமைப்பாடு என்பது ஒவ்வொரு மாநில மக்களும், ஒவ்வொரு மலைவாசி மக்களும், ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்குள் ஒருமைப்பாடாக இருப்பதே ஆகும். அப்படிப்பட்ட மனிதம் சார்ந்த, அடக்குமுறை இல்லாத, ஒருமைப்பாடான இந்தியாவைக் காண அருந்ததிராய்கள் தேவை. இந்தியாவை வரைபடமாகவே தேசியவாதிகள் இன்னும் பார்க்கிறார்கள். இந்திய வரைபடம் கிழிந்தால் அவர்களுக்கு வரும் கோபம், ஏனோ இந்திய ராணுவம் தன் அடக்குமுறையால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் கன்னித்திரையை கிழிக்கும் போது வருவதில்லை. இந்திய நாட்டை வெறும் நிலமாகவே பார்க்கிறார்கள். ஆனால் அருந்ததிராய் போன்றோர் மக்களாக பார்க்கிறார்கள். இந்தியா வெறும் நிலப்பரப்பு அல்ல, இந்திய மக்களால் ஆனது. இந்தியா என்பது இந்திய மக்களேயன்றி மாநில எல்லைகள் அல்ல.  மக்களை ஒற்றுமையாயும், சமாதானமாயும், சுயமரியாதையுடனும் நடத்தவல்லாத ஒரு தேசமானது, ஒரு அரசானது, வரைபடத்தில் ஒருமைப்பாடாய் இருந்தென்ன லாபம்? அழிந்துதான் போகட்டுமே! 
Related Posts Plugin for WordPress, Blogger...