Monday, November 15, 2010

இந்தியாவின் மிகச்சிறந்த கவிதை (மனுஷ்ய புத்திரன்)

இதுவரை என் வலையில் பிறர் எழுதிய பதிவுகள் எதையுமே நான் வெளியிட்டதில்லை. ஆனால் நேற்று நண்பர் ஒருவர் சாருவின் வலை சுட்டியை அளித்து அதில் வெளியிடப்பட்டிருந்த கவிதையை வாசிக்கச் சொன்னார். மனதை அதிர வைத்தது. கடவுள் நம்பிக்கையின் பேரில் சாத்தானுக்கு வேதம் ஓதும் மதவாதிகள் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை. என் வலையில் அதை வெளியிடுவதை பெருமையாகவே நினைக்கிறேன். 


அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன்-  மனுஷ்ய புத்திரன்

அங்கே ஒரு கடவுள் பிறந்தார்
அங்கே ஒரு அரசர்
தனது கடவுளுக்கு ஆலயம் எழுப்பினார்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பு
அரசர்கள் வருவதற்கு முன்பு
அங்கே யார் இருந்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது
நான் உள்ளுணர்விலிருந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
நம்பிக்கைகளிருந்தல்ல
நம்பிக்கையின்மைகளிலிருந்து
இந்த வரிகளைத் தொடங்குகிறேன்
இதன் அடுத்த வரியைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது
அங்கே ஒரு கோயில் இருந்தது
அங்கே ஒரு மசூதி இருந்தது
கோயில்களும் மசூதிகளும்
எழுப்பப்படுவதற்கு முன்னர்
அவை அழிக்கப்படுவதற்குமுன்னர்
அங்கே ஒரு காலம் இருந்தது
பிறகு அது அழிக்கப்பட்டது
நான் எனது வரலாற்றுப் புத்தகங்களை
எரித்துவிடுகிறேன்
நீங்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில்
காறித் துப்புங்கள்
நாம் அவற்றை இனி
ஒருபோதும் பயன்படுத்த முடியாது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றி
சொன்னதுதான் இதற்கும்:
அது ஒரு மூடனால் சொல்லப்பட்ட
புனைகதை
சத்தமும் சினமும் நிறைந்த
அற்பமான புனைகதை
அகழ்வாராய்ச்சிகள்
முக்கியமான தடயங்களைத் தருகின்றன
அவை வரலாறுகளை மாற்றி எழுதுகின்றன
புதிய வரலாறுகளை எழுதுகின்றன
தீர்ப்புகளை எழுதுகின்றன
ஆனால் அதில் ஒரு முக்கியமான
தடயம் மறைக்கப்பட்டுவிட்டது
அது நம் அனைவரையும் மனம்
உடையச் செய்வது
நான் அந்தத் தடயத்தை
இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
இன்னும் உங்களுக்கு
ஒரு இதயம் இருக்கிறது
ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது
இப்போது அங்கே என்ன  இருக்கிறது?
இடிபாடுகள் இருக்கின்றன
வெற்றிடம் இருக்கிறது
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
கடந்து செல்லும்
பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன
நீதிபதிகள் நம்பிக்கைகளின் பேரால்
தீர்ப்புகள் வழங்குகிறார்கள்
நீதியின் பெயரால் வழங்கப்படும்
நீதியைவிட
நம்பிக்கையின் பெயரால் வழங்கப்படும்
நீதி நமக்குப் பரிச்சயமானது
நாம் புரிந்துகொள்ளக் கூடியது
நமது அரசர்கள்
நம்பிக்கையின் பெயரால்
நாடுகளை வென்றார்கள்
நம்பிக்கையின் பெயரால்
வெல்லப்பட்டவர்களை
கழுமரங்களில் சொருகிவைத்தார்கள்
மைதானங்களை
சிரத்சேதம் செய்யப்பட்ட தலைகள்
இமைப்பதைப் பார்த்தபடி
தமது நம்பிக்கைகளை உறுதி செய்தார்கள்
ஔரங்கசீப்போ
சத்ரபதி சிவாஜியோ
நம்பிக்கையற்றவர்களாக இருந்திருந்தால்
இவ்வளவு புனித யுத்தங்களை
நாம் பார்த்திருக்க மாட்டோம்
காந்தி ஒரு நம்பிக்கையற்றவராக
இருந்திருந்தால்
இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட
ஒரு விடுதலையை அளித்திருக்க மாட்டார்
ஒரு நீதிபதியை வழிநடத்துவது போல
நம்பிக்கை ஒவ்வொரு மனிதனையும்
இப்போது வழிநடத்துகிறது
அந்த இளைஞனுக்கு என்ன தெரியும்
இஸ்லாத்தின் தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவேயில்லை
ஐந்து நேரமும் தொழுகிறான்
ஒரு சிறிய வேலைக்குப் போகிறான்
அவனது சகோதரிகள் அவனை நம்புகிறார்கள்
ஒரு நாள் காணாமல் போகிறான்
அவனது புகைப்படம்
பத்திரிகைகளில் வெளிவருகிறது
அவன் நம்பிக்கையின் பெயரால்
பிறந்த நாள் விருந்திற்குக் கூடியவர்களைக்
கொலை செய்கிறான்
அந்த சன்னியாசிக்கு என்ன தெரியும்
இந்து தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவே இல்லை
கிடைத்ததை உண்டு
கிடைத்த இடத்தில் தூங்கி
கங்கையில் குளித்து எழுகிறான்
வாளை உயர்த்தி
சூரியனை நோக்கி சந்தியா வந்தனம்
செய்தபடி
நம்பிக்கையின் பெயரால்
யாரோ ஒருத்தியின் வயிற்றைக் கிழிக்கிறான்
எவ்வளவு கொன்றாலும்
ஜனங்கள் மிச்சம் இருக்கிறார்கள்
கூட்டம் கூட்டமாக எல்லா இடத்திலும்
பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்
மனித அழிவு நமக்கு
எந்த அதிர்ச்சியையும் தருவதில்லை
இது ஒரு அலுப்பூட்டும் வேலை
ஏராளமான மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள்
ஏராளமான கோயில்களுடன்
ஏராளமான மசூதிகளுடன்
ஏராளமான நம்பிக்கைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
நம்புங்கள்
நான் ஒரு மத சார்பற்றவன்
நான் நடு நிலையாகவே
கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்
எல்லாத் தரப்பு நியாயங்களையும்
நான் பேசுகிறேன்
நான் அந்த நாடகத்தை ஆடியே தீரவேண்டும்
இந்துவாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
இஸ்லாமியனாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
மத சார்பற்றவனாக இருப்பதும்
ஒரு தேர்வு அல்ல
கடவுள்
அங்கே பிறப்பதற்கு முன்பு
நிறைய மனிதர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள்
கடவுள்களின் ஆலயங்கள்
அங்கே எழுப்பப்படுவதற்கு முன்பு
அது வேட்டைப் பொருள்களைப்
பங்கிட்டுக் கொள்ளும் நிலமாக இருந்தது
அது ரத்த வாடையாலும்
மாமசத்தின் மிச்சங்களாலும் நிறைந்திருந்தது
கருணையின் கடவுள்
தவறான ஒரு இடத்தில் வந்து பிறந்தார்
கருணையே வடிவான இறைவனுக்கு
ஒரு அரசன் தவறான இடத்தில்
ஒரு ஆலயம் எழுப்பினான்
இப்போதும் அந்த இடம்
வேட்டைப் பொருள்களின் பங்கிடும்
நிலமாக  இருக்கிறது
யாரெல்லாம் எதையெல்லாம்
வேட்டையாடினீர்கள்
என்று உங்களுக்குத் தெரியும்
ஒருவர்கூட அதை
பயத்தாலோ
வெட்கத்தாலோ
குற்ற உணர்வாலோ
மறைக்க முயற்சி செய்யவில்லை
நீங்கள் நம்பிக்கையின்
பெயரால் வேட்டையாடினீர்கள்
நீங்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டீர்கள்
நம்பிக்கை என்பதே
எப்போதும் இன்னொருவர்மீதான
தண்டனையாக இருக்கும்போது
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
மறுமை நாளில்கூட
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
கொஞ்சம்
சமாதான முயற்சிகளில் பங்கெடுங்கள்
கொஞ்சம்
தேர்தல் அறிக்கைகளைத் தாமதியுங்கள்
அது பங்கிடப்படுகிறது
நம்பிக்கையின் தராசில்
உங்கள் வேட்டைப் பொருள் நிறுக்கப்படுகிறது
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
மேல் முறையீடுகளுக்கு நேரமிருக்கிறது
இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள்
கொலைகளுக்கு
இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது
கொல்லப்படுவதற்கு
இன்னும் எவ்வளவோ
ஜனங்கள் இருக்கிறார்கள்
அது பங்கிடப்படுகிறது.

 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...