Thursday, October 21, 2010

கடவுளான காகங்கள்

       உதிக்கப் போகும் சூரியனுக்கு யாரோ சிறிதும் ஒவ்வாத பின்னணி இசை அமைத்தது போல்தான் அந்த அழுகை சத்தம் இருந்தது. ஒரு ஒன்றரை வருட குழந்தையின் அழுகையில் பசியைத் தவிர வேறு என்னவெல்லாம் இருக்கமுடியுமோ அவை அனைத்தும் அதில். முழுதாய் சாப்பிட்டுவிட்டு தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் தள்ளப்பட்டதால் வந்த அழுகையாய் கூட இருக்கலாம். அல்லது யாரையுமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்க்க முடியாததால் வந்த அழுகையாகவும் இருக்கலாம். கண்ணீரே இல்லாத காய்ந்த அழுகையாய் இருந்தாலும் கூட, இப்போது அந்த அழுகை மட்டுமே அந்த இடத்தின் குரலாய் உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. முட்டிக்கால் வரை பூப்போட்ட பாவாடையும் ஒரு கச்சிதமாய் தைக்கப்பட்ட சட்டையுமாய் அந்தக் குழந்தை அழுதபடியே தத்தித் தத்தி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த செடிகள் தங்கள் முகத்தை கீழ் நோக்கி மண் பார்த்து புதைத்துக் கொண்டதைப் போல் வைத்துக் கொண்டிருந்தன. தெருவில் நடக்கும் போது எதிர்படும் மனிதர்கள் அனைவருமே நம்மைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டால் நமக்கு வரும் உணர்வு ஒருவேளை இந்தச் செடிகளின் செயலால் குழந்தைக்கு வந்திருக்கலாம். எது எப்படியோ,  ஒவ்வொரு செடியின் முகத்தையும் பார்த்துக் கொண்டே குழந்தை இன்னும் நடந்துகொண்டுதான் இருந்தது.

  மெலிதாக ஒரு தவளையின் சத்தம் அந்த இடத்தில் புதிதாய் முளைத்தது. அந்த சத்தத்தின் வீரியமின்மையை வைத்துப் பார்த்தால் அந்தத் தவளை இந்தக் குழந்தையின் தவளை வடிவாக இருக்கலாம். அது சத்தமிடுவதற்கான காரணங்கள் குழந்தை அழுவதற்கான காரணங்களாகவே இருக்கலாம். ஏனெனில் வேறு ஒரு தவளை அந்த இடத்தில் இருப்பதற்கான அறிகுறி எதும் தென்படவில்லை. குழந்தையின் வழியில் குறுக்கிட்ட தவளை, ஒருநிமிடம் குழந்தையைப் நின்று பார்த்தது. குழந்தையும் தான். அழுகையும் தவளையின் சத்தமும் சட்டெனெ நின்றதில் அந்த இடமே நிசப்தமானது. தவளை, எங்கோ வேகமாக சென்று கொண்டிருந்தாலும் எதிரில் தன் முன் நின்று கொண்டிருந்த குழந்தையின் காட்சி அதை ஏதோ செய்திருக்க வேண்டும். ஒருவேளை பேச முடிந்திருந்தால் தடுத்திருக்குமோ என்று தோன்றுமளவுக்கு அதன் பார்வை இருந்தது. இமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை வேறுவழியில்லாமல் விட்டுச் செல்வதைப் போல் வேண்டாவெறுப்புடன் அந்த இடத்தில் இருந்து தாவிக்குதித்து நகர்ந்தது தவளை. மீண்டும் அழத் தொடங்கியது குழந்தை. இடம் அழுகையால் நிரம்பி வழிந்தது. குழந்தை நடக்கத் தொடங்கியது.

தலை தொங்கிப் போன ஒரு சூரியகாந்திச் செடி வழியில் நின்றது. சூரியன் இன்னும் வெளிவராத அந்த அதிகாலையில், சூரியகாந்தியின் தலை தொங்கியிருப்பதைப் பார்த்த குழந்தை, அந்த சூரியகாந்திச் செடி சாகக்கிடப்பதாகவோ அல்லது மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாகவோ நினைத்திருக்க வேண்டும். தன் அழுகைக்கான காரணத்தைவிட சூரியகாந்தியின் சோகத்துக்கான காரணம் அதிகமாய் இருப்பதாக உணர்ந்ததாலோ என்னவோ தன் அழுகையை நிறுத்தியது குழந்தை.

தன் சிறிய கைகளால் பூவின் முகத்தை தூக்கி நிறுத்தியது. ஆனால் குழந்தை கையை எடுத்த அடுத்த நொடி, பூ தனக்கு மிகவும் பிடித்தது பூமிதான் என சொல்வதைப் போல் மீண்டும் தலை கவிழ்ந்தது. ஏமாற்றமடைந்த குழந்தை தான் சில விநாடிகளுக்கு முன் அழுததை மறந்துபோனது போல முகத்தை மிகவும் உன்னிப்பாக வைத்துக் கொண்டு பூவைப் பார்த்தது. பின் இரண்டாம் முறையாக பூவின் தலையை நிமிர வைக்க முயற்சித்தும் தோல்வி அடைந்தது. இப்போது குழந்தையின் முகத்தில் ஏமாற்றத்தை விடவும், எப்படியும் பூவின் சோகத்தை தீர்த்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. தீர்க்கமாக குனிந்து பூச்செடியின் வேர்பிடி அருகே அமர்ந்து, சுற்றி இருந்த மணலையெல்லாம் தன் பிஞ்சுக் கரங்களால் வேரைச் சுற்றி இருக வைத்தபடியே பூவை நிமிர்ந்து பார்த்தது. இந்நேரத்தில் சூரியனும் வெளிவரத் துவங்கியதால், தோய்ந்திருந்த பூவின் முகம் மெதுவாக நிமிரத்துவங்கியது. குழந்தையின் முகத்தில் உலகின் அத்தனை சந்தோஷமும் ஒரே இடத்தில் குவிந்ததைப் போல் சிரிப்பு மலர்ந்திருந்தது. தன்னால் தான் பூ நிமிர்ந்துள்ளது என குழந்தை வெகு நிச்சயமாய் நம்பி கைதட்டிக் கொண்டே பூவைப் பார்த்து சிரித்தது.

  வெளிச்சம் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. தூரத்தில் எதோ விண்ணைக் கிழிக்கும் சத்தம். பெரிய காகங்கள் விண்ணில் வரிசையாக படுவேகமாக பறந்தன. குழந்தை இன்னும் மகிழ்ச்சியில் குதித்தது. காகங்ள் பறக்கும் சத்தம் வின்ணைக் கிழிக்க, தான் பூவை மலர வைத்ததற்கு கடவுளின் வாழ்த்து என்று குழந்தை எண்ணியிருக்க வேண்டும். ஆசையாய் அண்ணாந்து பார்த்து கைகாட்டியபடியே சிரித்துக் கொண்டிருந்தது. பெரிய காகங்கள் இதுவரை அடக்கி வைத்திருந்த விஷ எச்சங்களை  கீழ்நோக்கி தெளித்துக் கொண்டிருந்தன. அரைநொடியில் வெளிச்சமும், வெப்பமும் படுபயங்கர வேகத்தில் பரவியது.

   காகங்களின் ஒலி ஏதும் பின் கேட்கவில்லை. அந்த இடமே, செடிகள் பல நூற்றாண்டுகளாய் முளைக்காதது போல் மாறி இருந்தது. தவளையோ, சூரியகாந்தியோ எதுவும் தென்படவில்லை. அழுகையோ, சிரிப்புச் சத்தமோ இருப்பதற்கான அல்லது இனிமேலும் கேட்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை. ஒரு சின்ன உள்ளங்கையும், அதன் வழியே எட்டிப் பார்க்கும் ஒரு சூரியகாந்தி இலையும் மட்டும் இன்னும் அந்த இடத்தில் உயிர் இருந்ததற்கான அடையாளமாய் மண் தரையில் கிடக்கிறது. அதுவும் நாளை வரப்போகும் காகத்தின் விஷ எச்சத்தில் மறைந்து போகலாம். நமக்கு மறந்தும் போகலாம். இருள் பரவத் துவங்கியிருந்தது!

6 comments:

எஸ்.கே said...

அருமையான கதை!

பயணமும் எண்ணங்களும் said...

அற்புதமான கதை...

பிரியமுடன் ரமேஷ் said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அசோக்...இதுக்கு முன்னாடி நீங்க எழுதன கதை எதையும் படிச்சதுல்ல...படிச்சிடறேன்... ஒரு மாதிரி கஷ்டப்படுத்திட்டீங்க... இந்தக் கதைல...

பதிவுலகில் பாபு said...

நல்ல கதை.. அருமையா எழுதியிருக்கீங்க..

Ilavarasan.R said...

@ramesh
நன்றி ரமேஷ்.. கண்டிப்பாக படித்து கருத்திடுங்கள்..

Ilavarasan.R said...

@எஸ்.கே, பாபு, பயணங்களும்
அனைவருக்கு நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...