Friday, September 17, 2010

பெண்ணிய- ஆணிய- சாணிய காமடிகள்...

'ஆணாதிக்கம்' என்றால் என்ன? ஒரு ஆண், மற்றொரு ஆண் மேல் ஆதிக்கம் செலுத்துவதா? அல்லது ஒரு ஆண், பெண் மேல் ஆதிக்கம் செலுத்துவதா? அல்லது ஆண்கள், ஆண்-பெண் என இருபாலரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துவதா?
   
     பொதுவாகவே நம் சமூகத்தின் பல நூறு வருட செயல்பாடுகளை கவனித்தால், பெண்கள் 'ஒருமாதிரியாக' அடக்கி ஆளப்பட்டே வந்திருக்கிறார்கள். உண்மைதான். ஆனால், அதற்கு முழு காரணமாய் ஆண்களை மட்டும் குற்றம் சொல்வதென்பது சரியாகப்படவில்லை. ஒரு சராசரி பெண் மீதான அடக்குமுறை என்பது, அந்தப் பெண்ணின் தந்தை, தாய், கணவன், மனைவி, மாமியார், மாமனார் என மொத்த குடும்பத்தின் மூலமே கட்டவிழ்க்கப்படுகிறதேயொழிய, அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களால் மட்டுமே அல்ல. இதுதான் நம் சமூகத்தில் காலாகாலமாய் நடப்பது. (இந்தப் பழக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் காரணமாய், மேற்கத்தியர்கள் பயன்படுத்தும் 'weaker sex' என்ற வார்த்தையையே நாமும் பயன்படுத்துவோம்.)
            
             ஒரு ஆணும்-பெண்ணும் இணைந்து தவறு செய்தாலும் கூட, அது உடல் ரீதியாக பெண்ணை மட்டுமே பாதிக்கும் என்ற காரணத்தால், கர்ப்பத்தடைகள் எதுவும் இக்காலம் போல் சுலபமாக கிடைக்காத அந்தக்காலத்தில், ஆண்-பெண் என இருபாலரும் உறுப்பினராய் இருக்கும் சமூகமே, weaker sex என தாங்கள் முடிவு செய்த பெண்பாலின் மீதான இந்த அடக்குமுறையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதே என் அபிமானம். ஒரு பெண் எந்த மாதிரியான உடையணிய வேண்டும் அல்லது ஒரு ஆணிடம் எந்த அளவில் பழக வேண்டும், ஒரு சமூக நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பவை இந்த அடக்குமுறையின் நேரடி விதிகள். ஆனால் ஒரு பெண் தன் கணவனுக்கு பணி செய்தல் வேண்டும், சமையல் அறையிலேயே காலம் கழிக்க வேண்டும் என்பதெல்லாம் உப-விதிகள், அதாவது பெண் இனம், 'weaker sex' என நிர்மாணிக்கப்பட்டதை பயன்படுத்தி ஆண்கள் சுயநலமாய் இணைத்துக்கொண்ட கோட்பாடுகள். மேலும், இந்தக் கட்டுரையில் நாம் பயன்படுத்தும் அடக்குமுறை என்ற செயல், அடக்கிவைக்கப்படும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது அவர்களை மீறியோ திணிக்கப்பட்டதாய் தெரியவில்லை. பெண்கள் இந்த அடக்குமுறையை ஏற்றே நடந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, அவர்கள் ஏற்றுகொண்ட அடக்குமுறையை தங்கள் மகள் மீதோ, மருமகள் மீதோ படரச்செய்திருக்கிறார்கள் . இந்த நிலை, பெரியார் போன்ற புரட்சியாளர்கள் மூலமும், விஞ்ஞான வளர்ச்சியினாலும், கால சுழற்சியினாலும் மட்டுமே தளர்ந்திருக்கிறது.

 நம் சமுதாயத்தின் நிலை இப்படியிருக்க, ஒரு பெண் என்ன உடையணிய வேண்டும் போன்ற விஷயங்களை ஏதோ காலம்காலமாய் ஆண்கள் 'மட்டுமே' தீர்மானித்து, அவர்களை அடிமைப்படுத்தியிருந்ததைப் போல் சிலர் பேசுவது சரியாகப் படவில்லை. சமுதாயத்தின், பெண்களுக்கு எதிரான சில செயல்பாடுகளை ஆண்கள் பயன்படுத்திக் கொண்டது உண்மைதானெனினும், ஒட்டுமொத்தமாக பெண் அடிமைத்தனத்திற்கு ஆண்கள்தான் முழுகாரணிகள் என்பதுபோல் பேசுவது முறையாகாது. ஆதலால் நமது சில ஆண்டுகளுக்கு முன்னதான சமுதாயத்தை 'பெண்ணடிமை சமுதாயம்' என அழைக்கலாமெயொழிய 'ஆணாதிக்க சமுதாயம்' என அழைத்தல் சரியாகாது. ஏனெனில் பெண்கள், ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்குமே அடிமையாய்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

   இந்தக்காலத்திற்கு வருவோம். பெண்கள் இன்னும் சமூகத்துக்கு அடிமையாய் இருக்கிறார்களா? அவர்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையின் (நாம் மேலே குறிப்பிட்டதைப் போல) 'உப-விதி'களை மட்டுமல்லாது, 'நேரடி-விதி'களையும் உடைத்தெறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் ஒரு தவறான உறவு ஆண்களை மட்டுமன்றி பெண்களையுமே பாதிப்பதில்லை. (உபயம்: கருத்தடை சாதனங்கள், தொலைக்காட்சியில் கூவி கூவி விற்கப்படும் மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்புக்கென்றே பிரதான மருத்துவமனைகள்.) கணவனுக்கு மனைவி சமைக்கவேண்டுமென்பது இப்பொழுது ஒரு விதியாக அல்லாது விருப்பமாகவே உள்ளது. உடைகள் விஷயத்தில் கேட்கவே வேண்டாம். பெண்களும் ஆண்களும் அணியும் உடையை சமுதாயம் நிர்மாணித்த காலம் போய் சினிமாக்காரர்களும், ஊடகமும், பன்நாட்டு நிறுவனங்களும் நிர்ணயிக்கும் நிலைதான் உள்ளது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் அணியும் உடையை தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள். எந்தெந்த பாகங்கள் வெளியே தெரிய வேண்டும் என்பதையும் அவர்களே முடிவெடுக்கிறார்கள், கணவர்களுக்கும் வாங்கிக் கொடுக்கிறார்கள். (கிராமப் புறங்களில் கூட தங்கள் உருவத்திற்கு சற்றும் ஒத்துவராத மேற்கத்திய உடைகளை அணியும் பெண்களை பலமுறை பார்த்திருப்பீர்கள்) முன்காலம் போல் அல்லாது ஆண்களுடன் வெகு சாதாரணமாக பழகுகிறார்கள், விருப்பப்பட்டால் வேலைக்கு செல்கிறார்கள், விருப்பமில்லாவிட்டால் வீட்டில் இருந்துகொண்டு 'Home maker' என ஸ்டைலாக சொல்கிறார்கள், திருமணத்திற்கு முன் குறைந்தபட்சம் மூன்று காதலாவது செய்கிறார்கள். (மூன்று காதல் செய்தாலும் கூட, கடைசியில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையே விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம்.) இதையெல்லாம் முன்னேற்றம் என நினைத்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள். நாமும் பட்டுக்கொள்வோம். என்ன வேண்டுமானாலும் அவர்கள் விருப்பப்படி செய்துகொள்வதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை!!

    பெண் விடுதலை என்பது, சமூகத்தால் பெண்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளைத் தகர்த்து, பெண்கள் அடிமைகளாக அல்லாது மனிதர்களாக வாழ்வது என நாம் அர்த்தம் கொள்வோம்.
ஆனால் பல பெண் புரட்சியாளர்கள் சமையலில் ஆண்பெண் சரிசமம், உத்தியோகங்களில் சரிசமம், சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்களிப்பதில் சரிசமம், ஒரு குடும்பத்தை முன்னேற்றுவதில் சரிசமம் என்பதையெல்லாம் விட்டுவிட்டார்கள். அவர்கள் குறியெல்லாம் 'குறி'யைப் பற்றி எழுதுவதில் மட்டுமே இருக்கிறது. பொதுவாகவே நம் அங்கங்களைப் பற்றி காதலாய் எழுதுவதில் ஒரு 'அழகு' உண்டு. அதுவும் இலைமறைகாயாக எழுதும்போதுதான். ஆனால் சமுதாய புரட்சி என்ற பெயரில், தமிழ் சொற்களுக்கு வறட்சி ஏற்பட்டதைப் போல் அங்கங்களைப் பற்றி மட்டுமே வெகு விரிவாக எழுதிவருது அருவெறுப்பையன்றி வேறொன்றையும் தரவில்லை. இந்த எழுத்தாளர்கள் பெண்கள் என்பதால் நாம் 'பெண் எழுத்தாளர்கள்' என விளிக்கிறோம். இவர்கள் பெண்கள் என்பதற்காக நாம் எதிர்க்கிறோம் என்று அர்த்தமாகா. ஆண்களாய் இருந்தாலும் எதிர்த்தேயிருப்போம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக ஆண் எழுத்தாளர்கள் யாரும் புரட்சி என்ற பெயரில் ஆபாசமாய் எழுதவில்லை. காமத்தின் பெயரிலேயே எழுதுகிறார்கள். இந்தப் பெண்களும் காமத்தின் பெயரில் எழுதுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் இவர்களோ, எழுதும் அசிங்கத்தையெல்லாம் எழுதிவிட்டு, அதை ஆண்களின் அடக்குமுறைக்கெதிரான 'புரட்சி' எனும்போதுதான் கொதிக்கிறது. (வெறும் புரட்சி என்றால் கூட பரவாயில்லை!!!) கவிதை எழுதும் போது ஆளுயர கண்ணாடி முன்பு நிர்வாணமாய் நின்றுகொண்டு 'காப்பி' அடிக்கிறார்களோ என்ற அப்பாவித்தனமான கேள்வியும் எழுகிறது!!!!
              சரி. எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். சுருக்கமாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டுப் போகிறேன். சுடிதார் வாங்கித்தரலேனா வரதட்சிணை கொடுமை, நகை வாங்கித்தரலேனா பாலியல் கொடுமை, ஒருத்தனைக் காதலித்துவிட்டு அடுத்தவனுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு, பழைய ஆள் கோபமாய் ரெண்டு கேள்வி கேட்டால் 'ஈவ் டீசிங்' புகார் என்று ஆண்கள் மேல் அடுக்கடுக்காக புகார் செய்ய சட்டம் பெண்களுக்கு அனுமதியளித்திருப்பதை பற்றி நான் கேள்வி கேட்கப்போவதில்லை. ஏனெனில் சட்டம் தன் கடமையைச் செய்கிறதெனத் தெரியும்!! இந்த சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களையும், தனி நபர்களையும் கூட தெரியும்!

     ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, "நான் 'Home maker' ஆக இருக்கிறேன்" எனச் சிரித்துக்கொண்டே ஸ்டைலாக சொல்லும் பெண்களைப் பாராட்டும் அதே சமுதாயம், ஒரு ஆண் 'Home maker'ஆக இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள தயாராய் இருப்பதைச் சொன்னால், அவனுக்கு கடைசி வரை பெண் தராமல், ஏளனப்படுத்தி, 'கன்னிகழியாமலேயே' சாகவிடும் இந்த 'பெண்ணாதிக்க' சமூகத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?!!!!!! :-(

(இங்கயும் வேதனைப் பட்டிருக்கேன் பாஸ். அதையும் படிங்க!:-(அதிகப்பிரசங்கி பெண்கள்!!)


3 comments:

ம.தி.சுதா said...

///...சரி. எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். சுருக்கமாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டுப் போகிறேன். சுடிதார் வாங்கித்தரலேனா வரதட்சிணை கொடுமை, நகை வாங்கித்தரலேனா பாலியல் கொடுமை.../// அருமை... தங்கள் மீது மான நஸ்ட வழக்கு போடப் போகிறேன்...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//ஒரு ஆணும்-பெண்ணும் இணைந்து தவறு செய்தாலும் கூட//

இதில் 'தவறு' என்று திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவை குறிப்பிடுகிறீர்கள் அல்லவா?

தவறு என்ற வார்த்தை சரியான பயன்பாடா?

Anonymous said...

ஆணும்-பெண்ணும் இணைந்து செய்தாலே அது தவறு ஆகாது! :-) ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் பொருளில் கொண்டோமேயானால், அந்தக்கால சமூகத்தின் நோக்கில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு பெண்ணுக்கு மட்டுமே பாதிப்பை உண்டாக்கியதால், (பாதிப்பை உண்டாக்கும் செயல்கள் அனைத்தும் தவறுதானே) அது பெண்ணின் தவறான செயல் என பார்க்கப்பட்டு பெண்கள் மட்டுமே தண்டனைக்கும் அவச்சொல்லுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். பாதிப்பை உண்டாக்கும் யாவையும் தவறென பார்த்த சமூகத்தின் பார்வையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு தவறென பார்க்கப்பட்ட காரணத்தால் நானும் தவறு என குறிப்பிட்டுள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...