Friday, September 10, 2010

கொலையாய்வு. பகுதி-1. கொலைகளின் மறுபக்கம்

     
  
        சுலபமாய் பதில் சொல்லக்கூடிய, ஆனாலும் வெளிப்படையாய் சொல்லமுடியாத ஒரு கேள்வி, சாதாரணமாக ஒரு மாதத்தில் எத்தனை முறை கொலை செய்ய நினைத்திருக்கிறீர்கள்?! குறைந்தபட்சம் ஒரு முறையும், அதிகபட்சம் பல நூறு முறையும் இருக்கலாம்தானே? உங்கள் எதிர்த்த வீட்டுக்காரரின் சதா சத்தம் போடும் மனைவியில் இருந்து உங்கள் மனைவி வரை இந்த பட்டியல் நீள்கிறதா இல்லையா? மனைவியை திட்டமிட்டு பொறுமையாய் கொலை செய்பவனுக்கும், உச்சகட்டமாய் சண்டை நடக்கும் போது யோசிக்காமல் சட்டெனெ கத்தியை பாய்ச்சி கொன்றுவிட்டு பின் வருந்துபவனுக்கும், மனைவியுடன் சண்டை போடும் போது "இவளைக் கொன்றால் நிம்மதியாய் இருக்கலாம்" என நினைக்க மட்டும் செய்து, பின் வேறு வேலைகளில் மூழ்கி, பின் மறந்து போகும் ஒருவனுக்கும் என்ன வித்தியாசம்? உலக நாடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் குற்றவியல் சட்டங்கள் மேற்கண்ட மூன்று வகையான மனிதர்களையும் பிரித்தே பார்க்கிறது! கொலைக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத்தை வழங்குவதென்பது கிமு.2050ல் எழுதப்பட்ட சுமேரிய மன்னனின் உர்-நமு சட்டப் புத்தகத்தில் இருந்து இன்றைய சட்டம் வரை அப்படியே இருக்கிறது. நான் எழுதப்போவது சட்டத்தைப் பற்றி அல்ல. கொலைகளைப் பற்றி. கொலையாளிகளைப் பற்றி. கொலையுண்டவர்களைப் பற்றி. கொலைகளின் நிறையியலைப் பற்றி. கொலையில் என்ன நிறையியல் என நினைக்கலாம். நிறையியல் என்ற வார்த்தையை நான் உபயோகித்திருப்பதால், இந்த வரி என்னை உங்களில் இருந்து வித்தியாசமாகவோ, அல்லது மனநிலை பிறழ்ந்தவனாகவோ காட்டலாம். ஆனால் ஒவ்வொரு கொலையிலும் அல்லது கொலை முயற்சியிலும் நாம் பார்க்காத அல்லது நமக்கு காட்டப்படாத மறுபக்கம் ஒன்று உண்டு. அது கொலையாளிக்கு கொலையின் பின் கிடைக்கும் நிறைவு. உதாரணமாக இதைப் படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்வில் இருந்தே சில சம்பவங்களைச் சொல்கிறேன். உங்கள் சட்டைக்குள் சிக்கிய எறும்பு உங்கள் தோளில் வெகுநேரமாய் கடித்துக் கொண்டிருக்கிறது. தாங்க முடியாத உறுத்தலில், வேதனையில் துடிக்கிறீர்கள். உங்கள் அறைக்கு வந்து சட்டையைக் கழற்றி எறிந்து உங்கள் தோளில் வியர்வையோடு ஒட்டி, உங்களைக் கடித்துக் கொண்டு இருக்கும் எறும்பை எடுத்து நசுக்கி, அது இறந்த பின்னும் கூட அதை மேலும் நசுக்கி அது உருத்தெரியாமல் சிதைந்து போவதை ரசித்து, பின் கட்டிலில் நிம்மதியாய் அமர்கிறீர்கள். இந்தக் கொலை உங்களுக்கு நிம்மதியையும், நிறைவையும் அளித்ததா இல்லையா? நீங்கள் வழக்கமாய் போகும் தெருவில் ஒரு நாய் உங்களை தினமும் துரத்துகிறது. திடீரென ஒருநாள் அது ஏதேச்சையாக ஒரு வண்டியில் அடிபட்டு தெருவோரம் உயிருக்கு போராடியபடி கிடக்கிறது. நீங்கள் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் 'சனியன் செத்துச்சு' என சந்தோஷமாக சொல்லியிருக்கிறீர்களா இல்லையா??  

    
   நீங்கள் எறும்புக்கும், நாய்க்கும் செய்ததை சக மனிதனுக்கு செய்தால் நீங்கள் குற்றவாளி என கருதப்படுவீர்கள். அதிகபட்ச தண்டனையாக மரணம் கூட கிடைக்கலாம். ஆனால் நீங்கள் தினசரி சந்திக்கும் மனிதர்களான உங்கள் முதலாளி (Boss), நீங்கள் கடன் கொடுத்த நபர், கடன் வாங்கிய நபர், பேருந்துகளில் உங்களை உரசி பாலியல் தொல்லை தரும் வக்கிரர்கள் போன்றோர் எறும்பையும், நாயையும் விட உங்களுக்கு அதிக தொல்லை தருகிறார்கள் தானே? அவர்களை என்ன செய்வீர்கள்? தண்டனைகளும், சமூக அந்தஸ்துகளும் இல்லையென்றால் கொலை செய்திருப்பீர்கள் தானே! அப்படி நினைத்துக் கொண்டு இந்த தொடர்-கட்டுரையை படிக்கத் தொடங்குங்கள். இதை நான் எழுதுவதற்கான காரணம் என் பாட்டி சில வருடங்கள் முன்பு என்னிடம் சொன்ன ஒரு உண்மை சம்பவம். என் தாத்தா ஒரு புகழ்பெற்ற குற்றவியல் வழக்குரைஞர். அவரிடம் பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் இரவு 11மணியளவில் மாரியம்மாள் (பெயர் மாற்றியுள்ளேன்) என்ற பெண் வந்து "அய்யா எம்புருசன் மேல கல்லப் போட்டேன் சாமி. அய்யாதான் காப்பாத்தனும். அந்தாளு செத்தவுடன உசிர கையில் புடிச்சு இங்க ஓடியாந்துட்டேன்" என கூறியிருக்கிறாள். என் தாத்தா அவளை வீட்டிலேயே தங்க வைத்து மறுநாள் காலை நீதிமன்றத்தில் சரணடைய வைத்திருக்கிறார். என் பாட்டி என்னிடம் வியந்தபடி சொன்னது இதுதான் "அந்தப் பொம்பள ஒன்றரை நாளு நம்ம வீட்ல தான் இருந்தாப்பா, ஆனா அவ நம்மல மாதிரிதான் இருந்தா. ரொம்ப சாதாரணமா. ரொம்ப மரியாதையா பேசுனா. நம்ம வீட்டுல வேலை செஞ்ச அம்மாவோட குழந்தைய கொஞ்சுனா. அப்புறம் என்கிட்ட சொல்லிட்டு கோர்ட்டுக்கு கிளம்பி போயிட்டா!!" எனக்கு ஏதோ செய்தது. கொலைகளைப் பற்றியும், கொலை முயற்சிகளைப் பற்றியும், படிக்கவும், பலரிடம் பேசவும் ஆரம்பித்தேன்.  தோண்ட தோண்ட அதில் ஒரு அழகியல் தெரிந்தது. நான் உபயோகித்திருக்கும் 'அழகியல்' என்ற இந்த வார்த்தை சரியா என தெரியவில்லை. ஆனால் க்வென்டின் டாரண்டினோ இயக்கும் ஆலிவுட் படங்களில் காட்டப்படும் கலையூட்டப்பட்ட வன்முறை போன்ற ஒரு அழகியல் எனக்கு சில கொலை சம்பவங்களில் தெரிந்தது. அதை உங்களுடன் பகிரவும், விவாதிக்கவுமே இந்த தொடர்-கட்டுரை.

    1990களில் அமெரிக்காவையே உலுக்கிய ஒரு கொலை முயற்சியில் இருந்து கட்டுரையை துவக்குகிறேன். நான் சொல்லப்போகும் சம்பவம் கொலை முயற்சி என முழுமையாய் சொல்ல முடியாதெனினும் ஒரு உயிரை போக்கவல்ல வன்முறை எனச் சொல்லலாம். ஒரு அழகான இரவில் ஊரே தூங்கச் சென்றிருந்த நேரம் ஒரு ஆணின் அலறல் குரல் சுற்றத்தை எழுப்பியது. ஜான் பாப்பிட் என்பரின் குரல் அது.  காவல் துறை வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் ஜானின் ஆணுறுப்பு வெட்டப்பட்டு, அவரின் மயங்கிய உடலின் அருகே கிடந்தது. அருகில் ஜானின் மனைவி. தன் கணவனின் ஆணுறுப்பை தான் வெட்டக் காரணம் என ஜானின் மனைவி லொரெனா சொன்ன விஷயம் அன்றிரவு காவல்துறையினரை கொஞ்சம் உலுக்கத்தான் செய்தது. 


............................கொலையாய்வு தொடரும்.

8 comments:

சத்ரியன் said...

கொலையாய்வு தொடரட்டும் தோழா....

Rajesh said...

Super ashok. Its thrilling and am expecting more. Continue ur awesomeness

ம.தி.சுதா said...

தொடரட்டும் காத்திருக்கிறேன்... வாழ்த்துக்கள்.. என்ன நம்ம ஓடைப்பக்கம் கனகாலம் காணக்கிடைக்கல..

முத்துசிவா said...

machi super da... kadaisila potturukka sambavam ethirpaarpai thoonduthu..... seekiram aduthathu podu

lkc said...

ஜான் பாப்பிட் //

nalla thodar...uLaviyalai alasum thodar...

nalla ayivukku pin ezhutha arambithu irukkeenga enbathu johnbobett sambavathil irunthu unarkindren...

vazhthukkaL..thodarungaL...

lkc said...

padangaL eppovum pol arumaiyO arumai....

Anonymous said...

You have all capabilities to write a book dude. Try that out. Words used in the essay is so Powerful. Keep it up.

hey itz me kuruvu said...

நேர்த்தியாய் வரையறுக்கப்பட்ட கட்டுரை...எனது பாராட்டுக்கள் பல பல ...கொலையாய்வு கொலைகளின் மறுபக்கத்தில்,கொலையை அழகியல் கோணத்தில் சிந்தித்த விதம் சிந்தனை..ஆனால் நிதானமற்ற எழுத்துக்களின் தாக்கம் ஆங்காங்கே
.\\\\\ கொலைகளைப் பற்றி. கொலையாளிகளைப் பற்றி. கொலையுண்டவர்களைப் பற்றி. கொலைகளின் நிறையியலைப் பற்றி. கொலையில் என்ன நிறையியல் என நினைக்கலாம். நிறையியல் என்ற வார்த்தையை நான் உபயோகித்திருப்பதால், இந்த வரி என்னை உங்களில் இருந்து வித்தியாசமாகவோ, அல்லது மனநிலை பிறழ்ந்தவனாகவோ காட்டலாம்///
ஆனால் நிதானமற்ற எழுத்துக்களின் தாக்கம்..ஒரு கவிதை அல்ல ஒரு கட்டரை படிக்கும் போது எழுதியவனை எழுத்தாளனாகவே மட்டுமே பார்க்க முடியுமே தவிர..ஒரு வித்தியாசமாகவோ, அல்லது மனநிலை பிறழ்ந்தவனாகவோ படிப்பவர்கள் பார்ப்பார்கள் என்பது படிப்பவரின் மனதில் உங்கள் இயலாமை புகுந்த விதம் வறுமையாய் இங்கே..எழுதுபவனின் சிந்தனையும் எழுதுகோலும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் தலைப்பை நோக்கியே பயணிக்க வேண்டும் .
////தண்டனைகளும், சமூக அந்தஸ்துகளும் இல்லையென்றால் கொலை செய்திருப்பீர்கள் தானே! ///////
சமூக அந்தஸ்து இருக்ற வங்கதான் கொலைகளை நல்லாவே செய்றாங்க தண்டனைக்கும் கொலைக்கும் சம்பந்தமே இல்லைங்க.. கொலை செய்ய மன தைரியம் இருந்த போதும்.கொலைகளின் அடிப்படை ரெண்டே வகைதான்... எதிர்பாராமல் நிகழ்வது அது நீங்க சொன்ன பாட்டி கதை.. ரெண்டாவது கொலைகளை செய்ய சந்தர்பங்களை ஏற்படுத்தி கொள்வது [கொல்வது]..

பகுதி ஒன்று,பகுதி இரண்டு என உங்கள் படைப்புக்கள் பரிணாமம் அடையும் போது ..எனது கருத்துக்கள் வார்ப்புகளாய் ...நட்புடன் ..

Related Posts Plugin for WordPress, Blogger...