Sunday, September 19, 2010

கொலையாய்வு. பகுதி-2. Video game திருடிய குற்றவாளிமுதல் பகுதியைப் படிக்க கொலையாய்வு. பகுதி-1. கொலைகளின் மறுபக்கம்லொரெனா காவல் துறையிடம், அன்றிரவு அரற்றிய விஷயம், தன் கணவன் ஜான் தன்னை படுக்கையறையில் மதிக்கவில்லையென்றும், தன் திருப்தியைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார். அன்றிரவு காவல்துறைக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு பெண், அதுவும் மிகவும் கூச்ச சுபாவமுள்ள லொரேனா தன் கணவன் தன்னை உடல் ரீதியாக திருப்தி படுத்தவில்லையென்பதால் ஆணுறுப்பை அறுக்கும் அளவிற்கா செல்வாள் என குழம்பினார்கள் பின் விசாரணையில் லொரெனாவே பல உண்மைகளைச் சொன்னார்.

 ஜான் தன்னை கடந்த மூன்று ஆண்டுகளாகவே மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகவும், தன்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். லொரேனா மீதான ஜானின் மூன்று வருடத்திய மனரீதியான, உடல்ரீதியான தாக்குதல்கள் லொரெனாவை நிலையிழக்கச் செய்து அவரால் தவிர்க்கமுடியாத ஆத்திரத்தில் ஜானின் ஆணுறுப்பை வெட்டியதாக லொரெனாவின் வழக்குரைஞர் வாதாடினார். ஜானுன் ஜானின் தரப்பும் லொரெனா தரப்பின் குற்றச்சாட்டுக்களை அறவே மறுத்தது. சம்பவம் நடந்த அன்று தான் மிகவும் குடித்திருந்ததாகவும், கட்டிலில் படுத்திருந்த லொரெனாவைப் பார்த்து தான் அன்றிரவு உடலுறவு வைக்க முற்பட்டதாகவும் முதலில் கூறினார். பின் போதையில் தூங்கிப் போனதாகவும், எதையோ உணர்ந்து எழுந்து பார்த்தபோது லொரெனாவின் கையில் தன் ஆணுறுப்பைப் பார்த்திருக்கிறார். சுதாரிக்கும் முன் தன் ஆணுறுப்பு வெட்டப்பட்டதாக கூறியுள்ளார் ஜான்.

சம்பவம் நடந்த அன்று ஜான் மிகவும் குடித்துவிட்டு லொரெனாவின் விருப்பத்திற்கு மாறாக அவரை வன்புணர்ச்சி (spousal rape) செய்திருக்கிறார். (இது சட்டப்படி குற்றம். இதற்காக 1994ஆம் ஆண்டு ஜான் மீது தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது தனிக்கதை). பின்னர் தூங்கிய லொரெனா, இரவில் எழுந்து சமையலறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றிருக்கிறார். அங்கு சமையலுக்காக பயன்படும் கத்தி கண்முன் கிடந்திருக்கிறது. ஜான் தனக்கு இதுவரை செய்த கொடுமைகளும், இப்போது செய்த கொடுமையும் ஒன்று சேர்ந்து நினைவலையில் சுழட்டியடித்திருக்கிறது. தன் நிலையை இழந்த லொரேனா அந்தக் கத்தியை எடுத்துக்கொண்டு நேராக அவர்கள் படுக்கையறைக்கு சென்றிருக்கிறார். நிர்வாணமாக கிடந்த, ஜானின் ஆணுறுப்பை ஆத்திரத்துடன் அறுத்துவிட்டு, கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் லொரெனா. திடீரென அவர் கையில் ஏதோ தட்டுப்பட, அது ஜானின் வெட்டப்பட்ட ஆணுறுப்பு! அலறியபடி அதை எங்கோ எறிந்துவிட்டு தொடர்ந்து தான் வேலை பார்க்கும் அழகு நிலையத்திற்கு காரை ஓட்டியுள்ளார். பின் சில மைல் தூரம் சென்ற பின் மற்றொரு கையில் ரத்தத்துடன் கூடிய கத்தி. அதையும் வீசிவிட்டு தன் முதலாளி (பெண்) வீட்டிற்கு சென்றுள்ளார் லொரேனா. அங்கிருந்துதான் அமெரிக்க உதவி எண் 911க்கு தானே ஃபோன் செய்து நடந்ததை சொல்லியிருக்கிறார் லொரெனா. பின் தான் போலீஸ் வந்திருக்கிறது.

     இதுதான் ஜான் மற்றும் லொரெனாவின் முதற்கட்ட வாக்குமூலத்தைக் கொண்டு முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள். ஆனால் இன்னும் மற்றொரு முக்கிய சாட்சி  மீதம் இருந்தது. அவர் பெயர் ராபி. ஜான்-லொரேனாவின் விருந்தாளியாக சம்பவம் நடந்த அன்று அவர்கள் வீட்டில் தங்கியிருந்த ஜானின் நண்பர். அவர் வாக்குமூலத்தில் கூறிய சில விஷயங்கள் காவல்துறையை மட்டுமல்லாது, இந்த வழக்கை கூர்மையாக கவனித்து வந்த ஒட்டுமொத்த மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 ஜானின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு காரில் சென்ற (தப்பிய என சொல்ல முடியாது) லொரெனா, தன் வீடீயோ கேமை (Hand video game) திருடி சென்றதாகவும்,  அதே நாள் முற்பகலில் தன் கைப்பையில் இருந்து 100$ பணமும் லொரெனா திருடியதாகவும் ராபி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். போலீசின் விசாரணையில் அது உண்மையென தெரிந்தது. ராபியின் வீடியோ கேம் லொரெனாவிடமிருந்து கைப்பற்றப்பட்டு ராபியிடம் சேர்க்கப்பட்டது (ரொம்ப முக்கியம்). ஆனால் லொரெனாவின் இந்த செயல்களுக்கு போலீசாரால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. பெரிய உளவியலாளர்கள் கூட திணறினார்கள். கடைசியில் அடுத்தகட்ட வாக்குமூலத்தில் லொரெனாவும் அவரது உளவியலாளரும் இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்தார்கள்.

 (குறிப்பு: ஜானின் ஆணுறுப்பு டாக்டர்கள் ஜேம்ஸ் மற்றும் பெர்மன் என்பவர்களின் 9.30 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் ஒட்டவைக்கப்பட்டது. செயல்பட்டதா என்பதைப்பற்றி எந்த செய்தியும் இல்லை.)
.............................கொலையாய்வு தொடரும்

Friday, September 17, 2010

பெண்ணிய- ஆணிய- சாணிய காமடிகள்...

'ஆணாதிக்கம்' என்றால் என்ன? ஒரு ஆண், மற்றொரு ஆண் மேல் ஆதிக்கம் செலுத்துவதா? அல்லது ஒரு ஆண், பெண் மேல் ஆதிக்கம் செலுத்துவதா? அல்லது ஆண்கள், ஆண்-பெண் என இருபாலரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துவதா?
   
     பொதுவாகவே நம் சமூகத்தின் பல நூறு வருட செயல்பாடுகளை கவனித்தால், பெண்கள் 'ஒருமாதிரியாக' அடக்கி ஆளப்பட்டே வந்திருக்கிறார்கள். உண்மைதான். ஆனால், அதற்கு முழு காரணமாய் ஆண்களை மட்டும் குற்றம் சொல்வதென்பது சரியாகப்படவில்லை. ஒரு சராசரி பெண் மீதான அடக்குமுறை என்பது, அந்தப் பெண்ணின் தந்தை, தாய், கணவன், மனைவி, மாமியார், மாமனார் என மொத்த குடும்பத்தின் மூலமே கட்டவிழ்க்கப்படுகிறதேயொழிய, அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களால் மட்டுமே அல்ல. இதுதான் நம் சமூகத்தில் காலாகாலமாய் நடப்பது. (இந்தப் பழக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் காரணமாய், மேற்கத்தியர்கள் பயன்படுத்தும் 'weaker sex' என்ற வார்த்தையையே நாமும் பயன்படுத்துவோம்.)
            
             ஒரு ஆணும்-பெண்ணும் இணைந்து தவறு செய்தாலும் கூட, அது உடல் ரீதியாக பெண்ணை மட்டுமே பாதிக்கும் என்ற காரணத்தால், கர்ப்பத்தடைகள் எதுவும் இக்காலம் போல் சுலபமாக கிடைக்காத அந்தக்காலத்தில், ஆண்-பெண் என இருபாலரும் உறுப்பினராய் இருக்கும் சமூகமே, weaker sex என தாங்கள் முடிவு செய்த பெண்பாலின் மீதான இந்த அடக்குமுறையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதே என் அபிமானம். ஒரு பெண் எந்த மாதிரியான உடையணிய வேண்டும் அல்லது ஒரு ஆணிடம் எந்த அளவில் பழக வேண்டும், ஒரு சமூக நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பவை இந்த அடக்குமுறையின் நேரடி விதிகள். ஆனால் ஒரு பெண் தன் கணவனுக்கு பணி செய்தல் வேண்டும், சமையல் அறையிலேயே காலம் கழிக்க வேண்டும் என்பதெல்லாம் உப-விதிகள், அதாவது பெண் இனம், 'weaker sex' என நிர்மாணிக்கப்பட்டதை பயன்படுத்தி ஆண்கள் சுயநலமாய் இணைத்துக்கொண்ட கோட்பாடுகள். மேலும், இந்தக் கட்டுரையில் நாம் பயன்படுத்தும் அடக்குமுறை என்ற செயல், அடக்கிவைக்கப்படும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது அவர்களை மீறியோ திணிக்கப்பட்டதாய் தெரியவில்லை. பெண்கள் இந்த அடக்குமுறையை ஏற்றே நடந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, அவர்கள் ஏற்றுகொண்ட அடக்குமுறையை தங்கள் மகள் மீதோ, மருமகள் மீதோ படரச்செய்திருக்கிறார்கள் . இந்த நிலை, பெரியார் போன்ற புரட்சியாளர்கள் மூலமும், விஞ்ஞான வளர்ச்சியினாலும், கால சுழற்சியினாலும் மட்டுமே தளர்ந்திருக்கிறது.

 நம் சமுதாயத்தின் நிலை இப்படியிருக்க, ஒரு பெண் என்ன உடையணிய வேண்டும் போன்ற விஷயங்களை ஏதோ காலம்காலமாய் ஆண்கள் 'மட்டுமே' தீர்மானித்து, அவர்களை அடிமைப்படுத்தியிருந்ததைப் போல் சிலர் பேசுவது சரியாகப் படவில்லை. சமுதாயத்தின், பெண்களுக்கு எதிரான சில செயல்பாடுகளை ஆண்கள் பயன்படுத்திக் கொண்டது உண்மைதானெனினும், ஒட்டுமொத்தமாக பெண் அடிமைத்தனத்திற்கு ஆண்கள்தான் முழுகாரணிகள் என்பதுபோல் பேசுவது முறையாகாது. ஆதலால் நமது சில ஆண்டுகளுக்கு முன்னதான சமுதாயத்தை 'பெண்ணடிமை சமுதாயம்' என அழைக்கலாமெயொழிய 'ஆணாதிக்க சமுதாயம்' என அழைத்தல் சரியாகாது. ஏனெனில் பெண்கள், ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்குமே அடிமையாய்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

   இந்தக்காலத்திற்கு வருவோம். பெண்கள் இன்னும் சமூகத்துக்கு அடிமையாய் இருக்கிறார்களா? அவர்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையின் (நாம் மேலே குறிப்பிட்டதைப் போல) 'உப-விதி'களை மட்டுமல்லாது, 'நேரடி-விதி'களையும் உடைத்தெறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் ஒரு தவறான உறவு ஆண்களை மட்டுமன்றி பெண்களையுமே பாதிப்பதில்லை. (உபயம்: கருத்தடை சாதனங்கள், தொலைக்காட்சியில் கூவி கூவி விற்கப்படும் மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்புக்கென்றே பிரதான மருத்துவமனைகள்.) கணவனுக்கு மனைவி சமைக்கவேண்டுமென்பது இப்பொழுது ஒரு விதியாக அல்லாது விருப்பமாகவே உள்ளது. உடைகள் விஷயத்தில் கேட்கவே வேண்டாம். பெண்களும் ஆண்களும் அணியும் உடையை சமுதாயம் நிர்மாணித்த காலம் போய் சினிமாக்காரர்களும், ஊடகமும், பன்நாட்டு நிறுவனங்களும் நிர்ணயிக்கும் நிலைதான் உள்ளது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் அணியும் உடையை தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள். எந்தெந்த பாகங்கள் வெளியே தெரிய வேண்டும் என்பதையும் அவர்களே முடிவெடுக்கிறார்கள், கணவர்களுக்கும் வாங்கிக் கொடுக்கிறார்கள். (கிராமப் புறங்களில் கூட தங்கள் உருவத்திற்கு சற்றும் ஒத்துவராத மேற்கத்திய உடைகளை அணியும் பெண்களை பலமுறை பார்த்திருப்பீர்கள்) முன்காலம் போல் அல்லாது ஆண்களுடன் வெகு சாதாரணமாக பழகுகிறார்கள், விருப்பப்பட்டால் வேலைக்கு செல்கிறார்கள், விருப்பமில்லாவிட்டால் வீட்டில் இருந்துகொண்டு 'Home maker' என ஸ்டைலாக சொல்கிறார்கள், திருமணத்திற்கு முன் குறைந்தபட்சம் மூன்று காதலாவது செய்கிறார்கள். (மூன்று காதல் செய்தாலும் கூட, கடைசியில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையே விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம்.) இதையெல்லாம் முன்னேற்றம் என நினைத்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள். நாமும் பட்டுக்கொள்வோம். என்ன வேண்டுமானாலும் அவர்கள் விருப்பப்படி செய்துகொள்வதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை!!

    பெண் விடுதலை என்பது, சமூகத்தால் பெண்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளைத் தகர்த்து, பெண்கள் அடிமைகளாக அல்லாது மனிதர்களாக வாழ்வது என நாம் அர்த்தம் கொள்வோம்.
ஆனால் பல பெண் புரட்சியாளர்கள் சமையலில் ஆண்பெண் சரிசமம், உத்தியோகங்களில் சரிசமம், சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்களிப்பதில் சரிசமம், ஒரு குடும்பத்தை முன்னேற்றுவதில் சரிசமம் என்பதையெல்லாம் விட்டுவிட்டார்கள். அவர்கள் குறியெல்லாம் 'குறி'யைப் பற்றி எழுதுவதில் மட்டுமே இருக்கிறது. பொதுவாகவே நம் அங்கங்களைப் பற்றி காதலாய் எழுதுவதில் ஒரு 'அழகு' உண்டு. அதுவும் இலைமறைகாயாக எழுதும்போதுதான். ஆனால் சமுதாய புரட்சி என்ற பெயரில், தமிழ் சொற்களுக்கு வறட்சி ஏற்பட்டதைப் போல் அங்கங்களைப் பற்றி மட்டுமே வெகு விரிவாக எழுதிவருது அருவெறுப்பையன்றி வேறொன்றையும் தரவில்லை. இந்த எழுத்தாளர்கள் பெண்கள் என்பதால் நாம் 'பெண் எழுத்தாளர்கள்' என விளிக்கிறோம். இவர்கள் பெண்கள் என்பதற்காக நாம் எதிர்க்கிறோம் என்று அர்த்தமாகா. ஆண்களாய் இருந்தாலும் எதிர்த்தேயிருப்போம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக ஆண் எழுத்தாளர்கள் யாரும் புரட்சி என்ற பெயரில் ஆபாசமாய் எழுதவில்லை. காமத்தின் பெயரிலேயே எழுதுகிறார்கள். இந்தப் பெண்களும் காமத்தின் பெயரில் எழுதுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் இவர்களோ, எழுதும் அசிங்கத்தையெல்லாம் எழுதிவிட்டு, அதை ஆண்களின் அடக்குமுறைக்கெதிரான 'புரட்சி' எனும்போதுதான் கொதிக்கிறது. (வெறும் புரட்சி என்றால் கூட பரவாயில்லை!!!) கவிதை எழுதும் போது ஆளுயர கண்ணாடி முன்பு நிர்வாணமாய் நின்றுகொண்டு 'காப்பி' அடிக்கிறார்களோ என்ற அப்பாவித்தனமான கேள்வியும் எழுகிறது!!!!
              சரி. எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். சுருக்கமாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டுப் போகிறேன். சுடிதார் வாங்கித்தரலேனா வரதட்சிணை கொடுமை, நகை வாங்கித்தரலேனா பாலியல் கொடுமை, ஒருத்தனைக் காதலித்துவிட்டு அடுத்தவனுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு, பழைய ஆள் கோபமாய் ரெண்டு கேள்வி கேட்டால் 'ஈவ் டீசிங்' புகார் என்று ஆண்கள் மேல் அடுக்கடுக்காக புகார் செய்ய சட்டம் பெண்களுக்கு அனுமதியளித்திருப்பதை பற்றி நான் கேள்வி கேட்கப்போவதில்லை. ஏனெனில் சட்டம் தன் கடமையைச் செய்கிறதெனத் தெரியும்!! இந்த சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களையும், தனி நபர்களையும் கூட தெரியும்!

     ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, "நான் 'Home maker' ஆக இருக்கிறேன்" எனச் சிரித்துக்கொண்டே ஸ்டைலாக சொல்லும் பெண்களைப் பாராட்டும் அதே சமுதாயம், ஒரு ஆண் 'Home maker'ஆக இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள தயாராய் இருப்பதைச் சொன்னால், அவனுக்கு கடைசி வரை பெண் தராமல், ஏளனப்படுத்தி, 'கன்னிகழியாமலேயே' சாகவிடும் இந்த 'பெண்ணாதிக்க' சமூகத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?!!!!!! :-(

(இங்கயும் வேதனைப் பட்டிருக்கேன் பாஸ். அதையும் படிங்க!:-(அதிகப்பிரசங்கி பெண்கள்!!)


Thursday, September 16, 2010

இளையதளபதி விஜய்- தீவிர ரசிகனின் கொந்தளிப்பு.

(இன்று காலை என் மின்னஞ்சலில் ஒரு சிறுகுறிப்புடன் கூடிய கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் "தம்பி அசோக்குக்கு. நான் நடிகர் விஜய்யின் ரசிகன், தொண்டன். அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை பத்து பேர் படிக்கும் உங்கள் வலையில் வெளியிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். வெளியிடாவிட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி." என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் அவசரம் அவசரமாக அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் அப்படியே வெளியிடுகிறேன். மற்றபடி இந்தக் கட்டுரைக்கும் எனக்கும், என் வலைக்கும் எந்த சம்பந்தமோ, ஒட்டோ-உறவோ, தொட்டோ-தொடர்போ கிடையாது!)

              அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு முறை தமிழக அரசியல் வரலாற்றில் சரியான தலைவனின்றி ஒரு இடைவெளி விழும் போதும் ஒரு நடிகரின் வடிவில் ஒரு சகாப்தம் உருவாகும். அப்படி ஏற்பட்டிருக்கும் ஒரு மாபெரும் எழுச்சி தான் நடிகர் இளையதளபதி டாக்டர் விஜய். தான் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே மிகவும் அருமையான அரசியல் சார்ந்த-சாராத கருத்துக்களைப் பரப்பி, தன் கை கால்களை பரப்பி ஆடி குடும்பப் பெண்களையும் குத்தாட்டம் போட வைக்கும் தலைவனைப் பற்றியும் அவரின் வளர்ச்சியைப் பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

 முதல் படமான 'நாளைக்கழிச்சு தீர்ப்பு' திரைப்படம் வந்த நாட்களில், பல பத்திரிக்கைகள் "இந்த மூஞ்சிக்கு எதுக்கு நடிப்பு ஆசை?" என கிண்டலடித்த போது அந்தப் பத்திரிக்கைகளுக்கு தெரியாது, எங்கள் தலைவன் வரும் நாட்களில் நடிப்பைத் தவிர மற்ற அனைத்தையுமே செய்யப் போகிறார் என்று! நாளைகழிச்சு தீர்ப்பின் படுதோல்வியை தாண்டி மீண்டும் நம்பிக்கையுடன் கம்பீரமாய் எழுந்து நின்றார்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற  இயக்குனர் இமயமும், விஜய் என்ற வளரும் நடிகனும். அந்த நம்பிக்கையில் உருவானதுதான் 'செந்தூரநோண்டி' என்ற காவியம். கேப்டன் வல்லரசு துணை நிற்க விஜய் நடித்த  இந்தப் படத்தில் தான் வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பாடல் காட்சி இடம் பெற்றது. பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக கதாநாயகி யுவராணிக்கு ஒரு சட்டையை மாட்டி, அந்த சட்டையுடன் செட்டாக வந்த 'குட்டி டவுசர்'ஐ தன் மகன் விஜய்க்கு ஆசையுடன் மாட்டிவிட்டு, மழையில் ஆடவிட்டு அழகு பார்த்தார் எஸ்.ஏ.ச. மழையில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் மக்களால் வெகுவாகப் பாரட்டப்பட்டது. படம், விஜய் மற்றும் யுவராணியின் உடைகளுக்காகவே பல நாட்கள் எகிடுதகுடாக ஓடியது. முதல் முறையாக வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள் எங்கள் தலைவரும், அவர் தந்தையும் எங்கள் குருவுமான எஸ்.ஏ.ச. அடுத்த இடி வருவது தெரியாமல்.

செந்தூரநோண்டி பட வெற்றிக்கு யுவராணியின் கூச்சமின்மையும், ஊறுகாயாய் வந்து போன கேப்டனின் வெக்கமின்மையுமே காரணம் என பத்திரிக்கைகள் சாடின. வெகுண்டெழுந்தார்கள் தந்தையும் தனயனும். ஆரம்பித்தார்கள் 'ரெசிகன்' என்ற திரைக்காவியத்தை. இதில் தான் விஜயின் தொடர் நாயகி சங்கவியை முதல் முதலாக திறமை காட்டவைத்தார் எஸ்.ஏ.ச. சென்ற படத்தைப் போலவே இந்தப் படத்திலும் வரலாறு சொல்லும்படியாக ஒரு காட்சியை வைப்பதற்காக ஹாலிவுட் கலைஞர்களுடன் ஆலோசித்து எஸ்.ஏ.சு எடுத்த காட்சி தான் மாமியாருக்கு நடிகர் விஜய் சோப்பு போடும் காட்சி. இந்தக் காட்சி சிறப்பாக வருவதற்காக ஆலிவுட்டில் இருந்து தொழிநுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். திரைப்படம் வெளிவந்தது. ஆஹா, ரெசிகன் திரைப்படத்தில் மகனும், அப்பாவும் சேர்ந்து நிகழ்த்திய கலைக் கண்காட்சியில் உலகமே வாயைப் பிளந்தது. படம் 'ஒரே வாரத்தில்' 175 நாட்கள் ஓடி மகத்தான சாதனை படைத்தது.

பின் நடிகர் விஜய்க்கு ஏறுமுகம்தான். இலையே உனக்காக, டவுசருக்கு மரியாதை, சொரிமலை, பல்லி, ஆந்தை, பிச்சைக்காரன், இன்று புறா என தொடர் வெற்றிகள்.
 எங்கள் தலைவன் எங்களுக்காக என்ன செய்தார் எனக் கேட்கும் அறிவீலிகளே. இதோ கேளுங்கள்.  புறா திரைப்படத்தில் தமன்னாவின் டவுசரை விஜய் தூக்கி தூக்கி அழகாக ஆ(ட்)டுவதைப் பார்க்கும் போது, விஜய் பழசை மறக்காத, செந்தூரநோண்டியில் நடித்த அதே டவுசர்பாண்டி தான் என்ற எண்ணம் என் கண்களில் நீர் பெருகச் செய்தது. எனக்கு மட்டுமல்ல, என் போன்று, அமெரிக்கா, சோமாலியா, உகாண்டா, உருகுவே, உருகாதவே, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் கண்டங்களிலும் வசிக்கும் பல முண்டங்களான நாங்களும் பழசை மறக்கக் கூடாது என உறுதி பூண்டோம். "உழைத்திடு உயர்ந்திடு, உன்னால் முடியும்" என்ற எங்கள் தலைவனின் பொன்மொழியை வேதவாக்காக கொண்டு அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் வருவது போல எங்கள் வாழ்விலும் இடைவேளைக்கு முன்பு ஏழையாகவும், இடைவேளைக்குப் பின் பணக்காரனாகவும் மாறுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை செருப்பால் அடிக்கும் எதிரியிடம் கூட மிகவும் பாசமாக, காதுக்கு அருகே சென்று 'உம்ம்மா' கொடுப்பதைப் போல மெதுவாக போய் பஞ்ச் டயலாக் பேசும் பண்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் காதலைச் சொல்லும் பெண்களிடம் எல்லாம் எங்கள் ஏழ்மையை சொல்லி அழுது, மறுத்து, பிச்சையெடுத்து, பின் ''என் உச்சி மண்டையில் டம்முங்க்குது, சொர்ர்ருங்குது" என பாடல் பாடும் மாண்பை எங்கள் தலைவன் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார், பல ஆண்டுகள் படித்தோ, அல்லது ஏதேனும் துறையில் சாதனை செய்தோ பெற வேண்டிய கவுரவ 'டாக்டர்' பட்டத்தை, தமன்னாவின் டவுசரைக் கழட்டி மாட்டி. கழட்டி மாட்டி ஆடி பெறலாம் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார்!நாளை கண்டிப்பாக எங்கள் தலைவனின் ஆட்சி மலரும் என்றும், எங்கள் தலைவனைத் தூற்றும் பலருக்கும் இந்தக் கட்டுரை ஒரு சவுக்கடியாக அமையும் என்றும் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் .

Wednesday, September 15, 2010

ரஜினி என்ற பத்திரிக்கை பலியாடு.

       


                          நான் வெகு நாட்களாகவே எழுத நினைத்த விஷயம் இது. இப்போதுதான் பொழுதும், எண்ணமும், எழுத்தும் கூடி வந்திருக்கிறது, சமீபத்திய 'ரஜினி மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காத' சர்ச்சையால். இந்த சர்ச்சைக்குள் செல்லும் முன் நாம் சின்னதொரு பின்னோட்டம் (flashback) பார்போம்.

   ஜெயராம் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த சர்ச்சையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் பெண் ஜெயராமிடம் கேட்கிறார், "வீட்டில் வேலை செய்யும் பெண்களை முதலாளிகள் 'கரக்ட்' பண்ணுவார்களே அதுபோல் செய்ததுண்டா என்று. ஜெயராம் சொல்கிறார் "இல்லை, என் வீட்டில் ஒரு தமிழ் பெண் வேலை செய்கிறாள், எருமை போல் இருப்பாள். அவளிடம் எனக்கு அப்படியெல்லாம் தோன்றாது" என்று. பின் இருவரும் சிரிக்கிறார்கள், பேட்டி முடிகிறது. அடுத்த நாள் பத்திரிக்கைகள் எழுதுகின்றன "மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை எருமை என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது" என்று. உண்மையான நேரடியான செய்தியான "ஜெயராம் தன்னிடம் வீட்டுவேலை செய்யும் பெண்ணை தரக்குறைவாக தொலைக்காட்சியில் பேசியதால் சர்ச்சை"னு எழுதியிருந்தால் சமூகத்தில் நான்கு செயல்கள் நடந்திருக்கும். 

1)முதலில் பெண்களையெல்லாம் கேவலப்படுத்தும் விதமாக கேள்வி கேட்ட அந்தப் பெண்ணை கண்டித்திருப்பார்கள் தமிழக மற்றும் கேரள மக்கள்.

2)ரெண்டாவது "ஏன்டா நாயே. வேலைக்காரி எருமை மாதிரி இருக்குறதுனால தான் ஒழுங்கா இருக்கியா? இல்லேனா கரக்ட் பண்ணிருப்பியா?" எனத் திட்டி ஜெயராமை அவர் மனைவி செருப்பால் அடித்திருப்பார்.

3)மூன்றாவது, வெகுசன ஊடகத்தில் கள்ள தொடர்பை ஏதோ அத்தியாவசிய உரிமை போல் சித்தரித்து பேசிக்கொண்ட இருவரையும் எதிர்த்து மக்கள் திரண்டிருப்பர்.

4)நான்காவது, குடும்ப சுமையைப் போக்க உடல் வருத்திப்பாடுபடும் உழைக்கும் பெண் இனத்தை கேவலப்படுத்தியதற்காக ஜெயராமையும் கேள்வி கேட்ட அந்தப் பெண்ணையும் எதிர்த்து மகளிர் சங்கங்களால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும்.

 மேற்கண்ட அத்துணை எதிர்வினைகளையும் நடக்கவிடாது தடுத்தது நம் ஊடகங்களின் திரித்துக்கூறும் தன்மை. பிரச்சினையை, அவமானப்படுத்தப்பட்ட பெண்ணின் இடத்தினின்று பாராமால், ஒரு ஒட்டுமொத்த உழைக்கும் பெண் சமூகத்தையே கேவலமாய் ஒரு நடிகன் பேசியதை மறந்து, அதை ஏதோ தமிழர்-மலையாளி பிரச்சினை போல் சித்தரித்து, விஷயத்தையே திசை திருப்பிய ஊடகங்களை என்ன செய்வது?

          மேற்கண்ட விஷயம் நம் பத்திரிக்கைகளின் தன்மையைப் புரிய ஒரு உதாரணம். நாம் தற்போது நடக்கும் ரஜினி விஷயத்திற்கு வருவோம். ரஜினி ஒரு நடிகர். அவருக்கு மக்களிடம் ஓட்டு வாங்கும் தேவையோ, தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் தேவையோ அல்லது மக்களை முதுகில் சுமக்கும் தேவையோ அடியோடு கிடையாது. ரஜினி கோடி கோடியாக சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்துக் கொண்டிருந்தாலும் அவர் ஒரு தொழில் செய்பவர், நடிகர். அவர் தன் மகள் திருமணத்திற்கு ரசிகர்கள் அனைவரையும் வரவேண்டாம் என சொல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் பொதுநலத்திற்காக அப்படிச் சொன்னதாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் சுயநலமாகவே அப்படிச் சொல்லியிருந்தாலும் கூட அதில் தப்பு அறவே கிடையாது. என் வீட்டருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் நான் இருபது வருடமாக நான் பொருள் வாங்குகிறேன், ஆனால் அந்தக் கடைக்காரர் அவரின் மகள் திருமணத்துக்கு என்னை அழைக்கவில்லை என்பதால் நான் அவரிடம் கோபப்படுவது எவ்வளவு முட்டாள் தனமோ அவ்வளவு முட்டாள் தனம், ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் மகள் திருமணத்திற்கு அந்த நடிகர் தங்களையெல்லாம்  அழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது. ரஜினியின் ரசிகன் எவனும், மன்றத்தை சேர்ந்தவனும் சரி, மன்றத்தை சேராதவனும் சரி, இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் "ரசிகர்கள் கோபம்", "ரசிகர்கள் கொந்தளிப்பு", "ரசிகர்கள் ஆத்திரம்" என பொத்தாம் பொதுவாய் செய்தி போடும் இந்த ஊடகங்களிடம் கேட்கிறேன் "யார் ரசிகர்கள்? யாரிடமெல்லாம் நீங்கள் கருத்து கேட்டீர்கள்?". (இதைப் பற்றி நண்பன் சிவா எழுதியுள்ள கட்டுரையின் சுட்டி) அப்படியே ரசிகர்கள் கோபப்பட்டாலும் கூட, உங்கள் காலடியில் வந்து புலம்பி அழுதிருந்தால் கூட 'அந்த நடிகர் உனக்கென்ன சொந்தமா? அல்லது உன் முதலாளியா? உன் வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என ரசிகர்களிடம் கேட்கும் பொறுப்பு இப்போது வரிந்துகட்டிக் கொண்டு இணையத்திலும், பத்திரிக்கைளிலும் ரஜினியைத் திட்டும் பத்திரிக்கையாளர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும் இல்லையா? அதை விட்டுவிட்டு "அய்யோ ரஜினி இப்படி பண்ணிட்டாரே. உங்களுக்கு துரோகம் பண்ணிட்டாரே" எனப் புலம்பி கண்ணீர்விட்டு ஒரு சர்ச்சையைக் கிளப்பி வியாபாரம் பண்ணுவதுதான் உங்கள் தொழில் தர்மமா?

                  அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் ரகசியமாக செய்த வாட்டர் கேட் ஊழலை வெளிக்கொணர்ந்தது Carl Bernstein மற்றும் Bob Woodward என்ற இரண்டு பத்திரிக்கையாளர்கள். நம் ஊரில் மீனவர்கள் தினமும் சாகிறார்கள். மத்திய அமைச்சன் அப்படித்தான் சாவார்கள் என்கிறான்.  தினமும் அப்பாவி மக்கள் தீவிரவாத ஒழிப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு என்ற பெயரில் ராணுவத்தால் சாகடிக்கப்படுகிறார்கள். சோற்றுக்கு பிச்சையெடுக்கும் நாட்டில் வறுமையை மறைக்க, ரூபாய்க்கு குறியீடு (symbol) கொண்டு வந்துவிட்டதாகவும் அதுதான் அளப்பெரிய சாதனை என்றும் மக்களை நம்பச் செய்து பீற்றுகிறார்கள். இன்னும் எத்தனையோ இருக்க, நம் வெகுசன ஊடகங்கள் என்ன செய்கிறார்கள்? திரிஷா என்ன நிறத்தில் உள்ளாடை போட்டிருக்கிறார் என அவருக்கு அடியில் காமிரா வைத்து படம்பிடித்து நடுப்பக்கத்தில் போட்டு சம்பாதிக்கிறார்கள்.  சூர்யா தங்கை கல்யாணத்தின் போது ஒரு பக்க அளவில் செய்தி போட்டு "மணமகள் பச்சை நிறத்தில் பிளவுசும், சிகப்பு சேலையும் அணிந்திருந்தார். அய்யர் அரைமணி நேரம் தாமதமாய் வந்தார்" என உலகுக்கு தேவையான செய்தியை போடுகிறது தினமலர். நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என படத்துடன் செய்தி போட்ட தினமலரின் இணைப்பான வாரமலரில் தானே வாராவாரம் நடுப்பக்கத்தில் அதே நடிகைகளின் கவர்ச்சிப் படம் இருக்கிறது? அவர்கள் விபச்சாரம் செய்கிறார்களென்றால் அவர்களின் படத்தை வைத்து வியாபாரம் செய்யும் நீங்கள் மாமாக்களா? (இந்த விஷயத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரை ("விபச்சாரம் செய்யும் விகடன்")

         ரஜினி போன்ற நடிகர்கள் படம் நடிக்கப் போவதாய் அறிவித்த உடனேயே "எந்திரன் கதை" "எந்திரன் புதிய படங்கள்" "எந்திரன் என்ன செய்கிறான்" "எந்திரனுக்கு வயிற்றுபோக்கு" என என்னென்னவோ தலைப்பு வைத்து கேடுகெட்ட தனமாய், நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு மக்களை முழுக்க முழுக்க சினிமா மோகத்தில் வைத்திருந்து சம்பாதிக்கும் பத்திரிக்கைகளுக்கு, தன் வீட்டு திருமணத்திற்கு கூட்டமாய் வரவேண்டாம் என பொதுநலத்துடன் கேட்டுக்கொண்ட ரஜினியைச் சாடவும், அவரால் ஏதோ நாடே கெட்டது போல செய்தி போடவும் என்ன தார்மீக உரிமை, நியாயம் இருக்கிறது?  ரஜினி மற்றும் பிற நடிகர்களை வைத்து செய்தி போடுவது உங்கள் உரிமை. ஆனால் இப்போது அதுவே கடமையாய் மாறிவிட்டதே. ரஜினி மகள் திருமணத்தில் அவர் யாரை அழைத்தால் என்ன அழைக்காவிட்டால் என்ன? ரஜினி, கமல், சூர்யா வேறு யாராகட்டும் இவர்கள் அனைவரும் பரபரப்பான விறபனைக்கு தேவைப்படுகிறார்கள். நாட்டின் முக்கிய பிர்ச்சினைகளையும், செய்திகளையும் சேகரித்து ஆராய்ந்து செய்தி வெளியிட முதுகு வளையாத காரணத்தால் வெகுசன ஊடகங்களுக்கு பிரபலங்களும், அவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளும் தேவைப்படுகி(றார்கள்)றது. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த கையாலாகாத ஊடகங்களின் விறபனைக்கும், வியாபரத்திற்கும் இன்றைய காலகட்டத்தில் முதலாகவே மாறிப் போயிருக்கிறார்கள். அதனால் பிரபலங்கள் பற்றிய வெறும் பரபரப்பான செய்தி மட்டுமே பத்திரிக்கை விற்பனைக்கு போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் செய்திகளையும், பேட்டிகளையும் திரித்து சர்ச்சையாக்கும் இழிநிலையில் இன்றைய பத்திரிக்கைகள் உள்ளன. இந்த பாணியில் தான் தற்போது ரஜினியின் பேட்டியும் வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டு பத்திரிக்கைகளின் விற்பனைக்காக பலிகடா ஆகி இருக்கிறார் என்பதே உண்மை.

Saturday, September 11, 2010

லார்ட் கணேஷ் இஸ் டபுள் கிரேட் (double great)இது பேரு மவுஸ் விநாயகராம். பாவம்டா அவரு.
சீனா தானா ரகசியா மாதிரி ஆக்கிட்டிங்களேடா!!

என்னடா பேண்ட் இது? பாவமா இல்லையாடா உங்களுக்கு!!


என்னடா விநாயகர இப்படி செக்சு போஸ்டர் மாதிரி ஆக்கிட்டீங்க. அத இந்தம்மா உத்து வேற பாக்குது.


ஹாய் ட்யூட்.. வாட்ஸ் அப் மேன்?சூப்பர். இன்னும் கொஞ்ச நாள்ல எங்கெங்க குத்த போறாய்ங்களோ!!


உங்கள் கார், ஷெல்ஃப், பர்ஸ், கக்கூசை அலங்கரிக்க விதவிதமான லார்ட் கணேஷ்.

ஆஹா. சாமிக்கே நம்மாளுங்க குட்டி ஜட்டி மாட்டிவுட்டாய்ங்க!
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி விஷ்சஸ்.
        மேல நீங்க பார்த்த எல்லா விநாயகர் படத்தையும் பண்ணது நாத்தீகர்கள் இல்லப்பா. பெரியாராவது விநாயகர உடைச்சாரு. பக்தர்கள் விநாயகரா இப்படி சகீலா பட போஸ்டர் மாதிரி ஆக்கிவுட்டாய்ங்க!! அந்தக் காலத்துல் நம்ம விநாயகரு ஒரே மாதிரிதான் இருப்பாரு. தும்பிக்கை, தொந்தி, பெரிய காது, ஒத்த தந்தம். ஆனா இப்போ லேட்டஸ்டா எல்லாருக்கும் விநாயகர புடிச்சதால பயங்கர ஃபேஷனா டிசைன் டிசைனா ஆயிட்டாருப்பா. அதுவும் இப்போ காலேஜ் பொண்ணுங்க எல்லாம் "ஹேய். ஐ லைக் லார்ட் கணேஷ்"னு சொல்லி இந்த பசங்களையெல்லாம் உசுப்பேத்திவுட்டு, இப்ப விக்கிற விநாயகர் பொம்மை எல்லாம் ஹேர் க்ளிப் மாதிரி ஆயிருச்சு. அதை வாங்கி அலமாரில வைக்கிறாய்ங்க, கார்ல வைக்கிறாய்ங்க, கீசெயின்ல வைக்கிறாய்ங்க, பர்ஸ்ல வைக்கிறாய்ங்க, பொட்டுல வைக்கிறாய்ங்க. இவ்ளோ ஏன், என் நண்பன் ஒருத்தன் கக்கூஸ்ல வச்சிருந்தான். என்னடானு கேட்டா பிராப்ளம் இல்லமா கக்கூஸ் போறதுக்காக வேண்டிகிட்டானாம். இதுல பெரிய காமடி என்னான்னா இப்போ இருக்குற பிள்ளையார்ஸையெல்லம் உத்து உத்து பாத்தாதான் பிள்ளையார்னே தெரியுது. இவனுங்க கைல பிள்ளையார் படுற பாடு இருக்கே. (பார்க்க படங்கள்) தாங்க முடிலடா சாமி. இதுக்கு அவரு அழுக்குருண்டையாவே இருந்திருக்கலாம்.

இது இப்படின்னா நம்ம வீட்ல இருக்க பொம்பளைங்க சாணி அல்லது களிமண்ணை அள்ளி பிள்ளையாரு புடிக்கிறேன் பேர்வழினு ரோட்டுல தட்டுல வச்சு நடப்பாங்க. அதை பார்த்தா ஏதோ அசிங்கம் பண்ணத தட்டுல வச்சி கொண்டு போற மாதிரியே இருக்கும்.

மெயின் மேட்டர் ஓவர். இப்போ லார்ட் கணேஷோட பர்த் ஸ்டோரி தெரியாதவங்க கீழ படிங்க....
எல்லா சாமிலயும் கொஞ்சம் ஸ்பெஷல் நம்ம லார்ட் கணேஷ். அவர கும்பிட்டா ஆப்ப எடுத்துவுடுவாரு. கும்பிடலேனா ஆப்பு அடிச்சிவுட்ருவாரு. நம்ம தமிழ் பட வில்லனுங்க மாதிரி. அவரு பர்த் ஸ்டோரியே செம டெரரா இருக்கும். ஒருநாளு பார்வதி ஆன்ட்டி குளத்துல குளிக்க போனாங்க. அப்போ யாருனா எட்டி பாத்துட்டா த்ரிஷா மாதிரி எதாச்சும் பிரச்சினை ஆயிடுமோனு பயந்து அவங்க உடம்புல இருந்த அழுக்க எல்லாம் ஜாயின் பண்ணி, உருட்டி ஒரு பெரிய்ய உருவம் செஞ்சாங்க. (டேய் எவன் டா அது "அதான் அழுக்கையெல்லாம் உருட்டிட்டாங்களே அப்புறம் எதுக்கு குளிக்க போனாங்க"னு கேக்குறது? சாமி மேட்டர்டா கண்ணா. நோ கிராஸ் டாக். கன்னத்துல போட்டுக்க) அப்படி அழுக்கையெல்லாம் உருட்டி அதுக்கு லைஃப் கொடுத்து, குளத்தாங்கரைல நிப்பாட்டி "யாராச்சும் கேமராவோட உள்ளாற வந்தா பாத்துக்கோ, அம்மா குளிச்சிட்டு வந்துர்றேன்"னு சொல்லிட்டு குளிக்கப் போயிட்டாங்க. அப்போ பார்த்து நம்ம பரமசிவன் அங்கிள் அங்க வந்துட்டாரு. சிவன் அங்கிள் அவரு பொண்டாட்டிய பாக்க உள்ள நுழைஞ்சா அழுக்குருண்டை உருவம் அடிக்க வருது. அவரு கைல இருந்த உடுக்கைய கேமரானு நினைச்சிருக்கும் போல. என்னாடா இது நம்ம பொண்டாட்டிய பாக்க இவன் உள்ள வுட மாட்றானே.. யாருடா இவன்னு டவுட்டாயிட்டாரு சிவன் அங்கிள். அப்புறம் கடுப்புல கத்திய எடுத்து கழுத்துலயே ஒரு சொருவு சொருவுனாரு, அழுக்குருண்டையோட தல உலகத்துக்கு அந்தாண்ட போயி விழுந்துருச்சு. இதைப் பாத்த பார்வதி ஆன்ட்டி ஒரே ஃபீலிங்ஸ் ஆயிட்டாங்க. "என்னாயா நீ? நம்ம புள்ளைய வெட்டிபுட்டியே?"னு சொல்லி ஓ னு அழுதாங்க. சிவனும் ஃபீலிங்ஸ் ஆயிட்டாரு, அப்புறமா அந்தப் பக்கமா வந்த ஒரு அப்பாவி யானைய புடிச்சு கழுத்தவெட்டி அழுக்குருண்டை கழுத்துல ஃபெவிகுயிக் வச்சு ஜாயின் பண்ணாங்க. இதான் நம்ம காட் கணேஷோட ஃபிளாஷ்பேக். 

என்னமோப்பா... நானும் விநாயகர் சதுர்த்திக்கி ஸ்பெஷலா ஒரு பிளாக் போஸ்ட் போட்டேன். நன்றி வணக்கம். Friday, September 10, 2010

கொலையாய்வு. பகுதி-1. கொலைகளின் மறுபக்கம்

     
  
        சுலபமாய் பதில் சொல்லக்கூடிய, ஆனாலும் வெளிப்படையாய் சொல்லமுடியாத ஒரு கேள்வி, சாதாரணமாக ஒரு மாதத்தில் எத்தனை முறை கொலை செய்ய நினைத்திருக்கிறீர்கள்?! குறைந்தபட்சம் ஒரு முறையும், அதிகபட்சம் பல நூறு முறையும் இருக்கலாம்தானே? உங்கள் எதிர்த்த வீட்டுக்காரரின் சதா சத்தம் போடும் மனைவியில் இருந்து உங்கள் மனைவி வரை இந்த பட்டியல் நீள்கிறதா இல்லையா? மனைவியை திட்டமிட்டு பொறுமையாய் கொலை செய்பவனுக்கும், உச்சகட்டமாய் சண்டை நடக்கும் போது யோசிக்காமல் சட்டெனெ கத்தியை பாய்ச்சி கொன்றுவிட்டு பின் வருந்துபவனுக்கும், மனைவியுடன் சண்டை போடும் போது "இவளைக் கொன்றால் நிம்மதியாய் இருக்கலாம்" என நினைக்க மட்டும் செய்து, பின் வேறு வேலைகளில் மூழ்கி, பின் மறந்து போகும் ஒருவனுக்கும் என்ன வித்தியாசம்? உலக நாடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் குற்றவியல் சட்டங்கள் மேற்கண்ட மூன்று வகையான மனிதர்களையும் பிரித்தே பார்க்கிறது! கொலைக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத்தை வழங்குவதென்பது கிமு.2050ல் எழுதப்பட்ட சுமேரிய மன்னனின் உர்-நமு சட்டப் புத்தகத்தில் இருந்து இன்றைய சட்டம் வரை அப்படியே இருக்கிறது. நான் எழுதப்போவது சட்டத்தைப் பற்றி அல்ல. கொலைகளைப் பற்றி. கொலையாளிகளைப் பற்றி. கொலையுண்டவர்களைப் பற்றி. கொலைகளின் நிறையியலைப் பற்றி. கொலையில் என்ன நிறையியல் என நினைக்கலாம். நிறையியல் என்ற வார்த்தையை நான் உபயோகித்திருப்பதால், இந்த வரி என்னை உங்களில் இருந்து வித்தியாசமாகவோ, அல்லது மனநிலை பிறழ்ந்தவனாகவோ காட்டலாம். ஆனால் ஒவ்வொரு கொலையிலும் அல்லது கொலை முயற்சியிலும் நாம் பார்க்காத அல்லது நமக்கு காட்டப்படாத மறுபக்கம் ஒன்று உண்டு. அது கொலையாளிக்கு கொலையின் பின் கிடைக்கும் நிறைவு. உதாரணமாக இதைப் படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்வில் இருந்தே சில சம்பவங்களைச் சொல்கிறேன். உங்கள் சட்டைக்குள் சிக்கிய எறும்பு உங்கள் தோளில் வெகுநேரமாய் கடித்துக் கொண்டிருக்கிறது. தாங்க முடியாத உறுத்தலில், வேதனையில் துடிக்கிறீர்கள். உங்கள் அறைக்கு வந்து சட்டையைக் கழற்றி எறிந்து உங்கள் தோளில் வியர்வையோடு ஒட்டி, உங்களைக் கடித்துக் கொண்டு இருக்கும் எறும்பை எடுத்து நசுக்கி, அது இறந்த பின்னும் கூட அதை மேலும் நசுக்கி அது உருத்தெரியாமல் சிதைந்து போவதை ரசித்து, பின் கட்டிலில் நிம்மதியாய் அமர்கிறீர்கள். இந்தக் கொலை உங்களுக்கு நிம்மதியையும், நிறைவையும் அளித்ததா இல்லையா? நீங்கள் வழக்கமாய் போகும் தெருவில் ஒரு நாய் உங்களை தினமும் துரத்துகிறது. திடீரென ஒருநாள் அது ஏதேச்சையாக ஒரு வண்டியில் அடிபட்டு தெருவோரம் உயிருக்கு போராடியபடி கிடக்கிறது. நீங்கள் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் 'சனியன் செத்துச்சு' என சந்தோஷமாக சொல்லியிருக்கிறீர்களா இல்லையா??  

    
   நீங்கள் எறும்புக்கும், நாய்க்கும் செய்ததை சக மனிதனுக்கு செய்தால் நீங்கள் குற்றவாளி என கருதப்படுவீர்கள். அதிகபட்ச தண்டனையாக மரணம் கூட கிடைக்கலாம். ஆனால் நீங்கள் தினசரி சந்திக்கும் மனிதர்களான உங்கள் முதலாளி (Boss), நீங்கள் கடன் கொடுத்த நபர், கடன் வாங்கிய நபர், பேருந்துகளில் உங்களை உரசி பாலியல் தொல்லை தரும் வக்கிரர்கள் போன்றோர் எறும்பையும், நாயையும் விட உங்களுக்கு அதிக தொல்லை தருகிறார்கள் தானே? அவர்களை என்ன செய்வீர்கள்? தண்டனைகளும், சமூக அந்தஸ்துகளும் இல்லையென்றால் கொலை செய்திருப்பீர்கள் தானே! அப்படி நினைத்துக் கொண்டு இந்த தொடர்-கட்டுரையை படிக்கத் தொடங்குங்கள். இதை நான் எழுதுவதற்கான காரணம் என் பாட்டி சில வருடங்கள் முன்பு என்னிடம் சொன்ன ஒரு உண்மை சம்பவம். என் தாத்தா ஒரு புகழ்பெற்ற குற்றவியல் வழக்குரைஞர். அவரிடம் பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் இரவு 11மணியளவில் மாரியம்மாள் (பெயர் மாற்றியுள்ளேன்) என்ற பெண் வந்து "அய்யா எம்புருசன் மேல கல்லப் போட்டேன் சாமி. அய்யாதான் காப்பாத்தனும். அந்தாளு செத்தவுடன உசிர கையில் புடிச்சு இங்க ஓடியாந்துட்டேன்" என கூறியிருக்கிறாள். என் தாத்தா அவளை வீட்டிலேயே தங்க வைத்து மறுநாள் காலை நீதிமன்றத்தில் சரணடைய வைத்திருக்கிறார். என் பாட்டி என்னிடம் வியந்தபடி சொன்னது இதுதான் "அந்தப் பொம்பள ஒன்றரை நாளு நம்ம வீட்ல தான் இருந்தாப்பா, ஆனா அவ நம்மல மாதிரிதான் இருந்தா. ரொம்ப சாதாரணமா. ரொம்ப மரியாதையா பேசுனா. நம்ம வீட்டுல வேலை செஞ்ச அம்மாவோட குழந்தைய கொஞ்சுனா. அப்புறம் என்கிட்ட சொல்லிட்டு கோர்ட்டுக்கு கிளம்பி போயிட்டா!!" எனக்கு ஏதோ செய்தது. கொலைகளைப் பற்றியும், கொலை முயற்சிகளைப் பற்றியும், படிக்கவும், பலரிடம் பேசவும் ஆரம்பித்தேன்.  தோண்ட தோண்ட அதில் ஒரு அழகியல் தெரிந்தது. நான் உபயோகித்திருக்கும் 'அழகியல்' என்ற இந்த வார்த்தை சரியா என தெரியவில்லை. ஆனால் க்வென்டின் டாரண்டினோ இயக்கும் ஆலிவுட் படங்களில் காட்டப்படும் கலையூட்டப்பட்ட வன்முறை போன்ற ஒரு அழகியல் எனக்கு சில கொலை சம்பவங்களில் தெரிந்தது. அதை உங்களுடன் பகிரவும், விவாதிக்கவுமே இந்த தொடர்-கட்டுரை.

    1990களில் அமெரிக்காவையே உலுக்கிய ஒரு கொலை முயற்சியில் இருந்து கட்டுரையை துவக்குகிறேன். நான் சொல்லப்போகும் சம்பவம் கொலை முயற்சி என முழுமையாய் சொல்ல முடியாதெனினும் ஒரு உயிரை போக்கவல்ல வன்முறை எனச் சொல்லலாம். ஒரு அழகான இரவில் ஊரே தூங்கச் சென்றிருந்த நேரம் ஒரு ஆணின் அலறல் குரல் சுற்றத்தை எழுப்பியது. ஜான் பாப்பிட் என்பரின் குரல் அது.  காவல் துறை வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் ஜானின் ஆணுறுப்பு வெட்டப்பட்டு, அவரின் மயங்கிய உடலின் அருகே கிடந்தது. அருகில் ஜானின் மனைவி. தன் கணவனின் ஆணுறுப்பை தான் வெட்டக் காரணம் என ஜானின் மனைவி லொரெனா சொன்ன விஷயம் அன்றிரவு காவல்துறையினரை கொஞ்சம் உலுக்கத்தான் செய்தது. 


............................கொலையாய்வு தொடரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...