Thursday, August 19, 2010

வம்சம்- விமர்சனமும், ஒரு பொதுப் பார்வையும்


வம்சம் படத்தின் மூலம் கலைஞர் வம்சத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் நடிகர் அருள்நிதி. வம்சத்தை இயக்கியுள்ளவர் 'பசங்க' பாண்டிராஜ். இது அனைவரும் அறிந்ததே.  நல்ல படம் என்றோ, நன்றாக இல்லாத படமென்றோ வம்சத்தைப் பற்றி உடனே சொல்ல  முடியாத அளவிற்கு தடுமாற செய்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அருமையான கதைக் களம். புதுவிதமான, மிக அருமையான கற்பனை மற்றும் பாத்திரப் படைப்புகள். புதுக்கோட்டை அருகில் உள்ள குக்கிராமங்களில் பல வம்சங்கள் உள்ளதாகவும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பதாகவும், அவர்கள் பழி தீர்க்க கோவில் திருவிழாக்களை பழி தீர்ப்பதற்காக பயன்படுத்திக் கொள்வதாகவும், இது போன்ற செயல்களில் இருந்து ஒதுங்கி வாழும் கதாநாயகன் அருள்நிதி, எப்படி இதற்குள் தள்ளப்படுகிறார் என கதை எழுதியுள்ளார் பாண்டிராஜ். வழக்கமான, அமைதியான ஒருவன் வெகுண்டெழும் கதைதான் என்றாலும், அதற்கு இயக்குனர் பூசியுள்ள சாயமும், கதைச் சூழலும் வெகு புதிது. சுனைனாவும், வில்லன் ஜெயப்பிரகாசும் மட்டுமே படத்தில் பளிச் என நடித்திருக்கிறார்கள். சுனைனா ஜெயப்பிரகாசு மீது சாணி ஊற்றி அடிக்கும் போது ஆக்ரோஷத்தில் பின்னியிருக்கிறார். விசில் பறக்கிறது. ஜெயப்பிரகாசின் நடிப்பில் இயல்பாகவே அவ்வளவு வில்லத்தனம். பாடல்களும், பிண்ணனி இசையும் இதற்கு மேல் சிறப்பாக செய்ய முடியாத அளவுக்கு பின்னியிருக்கிறார் புது இசையமைப்பாளர் தாஜ் நூர். 
ஆனால்............

திரைக்கதை மிகவும் தெளிவாகத்தான் உள்ளது. கதாநாயகன் வீரன் தான் எனினும் தன் அம்மாவுக்காக பொறுமை காக்கிறார். காதலி அவமானப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் பொங்கி எழுகிறார். ஆனால் இயக்கம் தான் தொய்வு. முதல் காட்சியில் இருந்து இடைவேளைக்கு முந்தைய காட்சி வரை வில்லன்களிடம் இருந்து ஓடி ஒளியும் ஒருவன் தீடீரென வீறுகொண்டெழுந்தால் அந்தக் காட்சி எவ்வளவு தீவிரமாகவும், நடிப்பு எவ்வளவு ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும்??? இரண்டுமே எள்ளளவும் இல்லை. சுனைனா காட்டிய ஆக்ரோஷமான நடிப்பு கூட அருள்நிதியிடம் இல்லை. ஒருவேளை பெரிய இடத்துப் பிள்ளையென இயக்குனர் கண்டுகொள்ளாமல் விட்டாரோ என்னவோ!! பல இடங்களில் அருள்நிதிக்கு இது முதல் படம் என தெளிவாக தெரிகிறது. அருள்நிதியின் முகம், உடலமைப்பு என அனைத்தும் கதைக்கு மிகச் சரியாக பொருந்தியிருந்தாலும், அவரிடம் சரியான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் பெறாதது இயக்குனர் குற்றமே! அதனால் படத்தைப் பார்ப்பவர்களுக்கு தீவிரமான காட்சிகளில் கூட படத்துடன் ஒன்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
                     பொதுவாகப் பார்க்கையில் பல திரைப்படங்களில் கட்டப்பஞ்சாயத்தையும், வன்முறையையும், குடும்பப் பகையையும் வீரமாகவும், ஒரு குறிப்பிட்ட சாதி மக்களின் கவுரவமாகவும் மடத்தனமாக காண்பிக்கப்பட்டு வரும் வேளையில், வன்முறை காட்டுமிராண்டித் தனம் தான் என்பதை ஆணித்தரமாக, தன் கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்லியுள்ளார் பாண்டிராஜ்.  பன்னிக்கறி தின்றுவிட்டு, சாராயம் குடித்துவிட்டு, பிணவாடை பிடித்துவிட்டு கொலை செய்ய வில்லனின் ஆட்கள் கிளம்பும் பொழுது நமக்கு வன்முறை மீது அருவெறுப்பு வரத்தான் செய்கிறது. அறிவுநிதியின் நடிப்பை விமர்சனம் செய்வதற்கு பதிலாக நம் இந்தியத் திரையுலகில் நடக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். அமெரிக்காவில் ஜாம்பவான்களான அர்னால்டோ, ஸ்டாலனோ, அல்பேச்சினோவோ  கூட தங்கள் மகனை நடிக்க வைக்கவேண்டும் என்றால் முறையாக நடிப்பு கற்று, பல படங்களில் சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த பின் திறமை இருந்தால் தான் முக்கியமான வேடங்களில் நடிக்க வைக்க முடியும். ஆனால் இங்கு எடுத்தவுடனேயே நாயகன் தான்!! அபிசேக் பச்சனில் இருந்து அறிவுநிதி வரை. ஆனால் இந்திய படங்களின் மற்றும் அமெரிக்க படங்களின் தயாரிப்புச் செலவை ஒப்பிட்டால் இந்தியப் படங்கள் மிகக் குறைவு. அதானால் இதைத் தவிர்க்க முடியாது. குறைந்தபட்சம் இயக்குனர்களாவது கவனமாக இருந்தால் வம்சம் போன்ற நல்ல திரைப்படங்கள் தப்பிக்கும்! இதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். 

அப்புறம்..  வம்சத்தை கண்டிப்பாக பாருங்கள்...

6 comments:

duraiarasan said...

Vasamthin peryarkal karpanai all athu indrum kiramangalil puzhakathil ullana

Anonymous said...

Nandri. Thappana seithiyai eduthu vidugiren. :-)

mohan said...

அருமையாக சொன்னீர்கள். நிதர்சனமான உண்மை இது.

- Sathya said...

அருள் நிதி யாரு கலைஞர் புள்ளையா.....?????

முத்துசிவா said...

மச்சி.. இந்த அறிவுநிதி தான் ஆரம்பம்... இன்னும் உதயநிதி, தயாநிதி ன்னு பல ஹீரோக்கள் வர இருக்காங்க. பேருல மட்டும் இல்ல கையிலயும் நிதி இருந்தாதன் இப்பலாம் ஹீரோ.. இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ் சினிமால நடிக்கிறவங்க, படம் புடிக்கிறவங்க, படத்த பணம் போட்டு எடுக்குறவங்க எல்லாருமே கலைஞர் குடும்பத்துலேர்ந்து தான் இருப்பாங்க.

@Satya:
கலைஞருக்கு இவ்வளவு வயசான பசங்க இல்லிங்க.. அவரு பசங்க எல்லாம் இப்ப தான் school la படிச்சிகிட்டு இருக்காங்க.

ம.தி.சுதா said...

நீண்ட நாள் தங்கள் தளம் வரவில்லை... மன்னிக்கவும்.. .ருந்தாலும் ஆக்கங்களில் எந்த தொய்வும் இல்லை சகோதரா...

Related Posts Plugin for WordPress, Blogger...