Sunday, June 27, 2010

பிம்பம்

    
நான் அழுகவில்லை. பின் எப்படி அவ்வளவு கண்ணீர்? கண்களில் தூசி விழுந்ததைப் போல் இல்லை. அந்த உணர்வும், எரிச்சலும் கண்ணின் கருவிழியில் யாரோ மண்ணைத் தேய்த்துவிட்டுப் போனதைப் போல இருந்தது எனக்கு. கண் இருக்கும் கண்கூட்டுக்குள் ஏதோ  எரிந்து கொண்டிருக்கிறது. அல்லது என் கன்னங்களில் இவ்வளவு நீர் வழிந்தோட வாய்ப்பில்லை.

என் அருகில் கிடக்கும் தட்டில் இருக்கும் இட்லியைப் பார்த்தால், நான் இங்கு அமர்ந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கலாம். இல்லை அதற்கு மேலும் இருக்கலாம். கடைசியாய் ஒரு குழந்தை இந்தத் தட்டையும், அதன்மேல் இட்லியையும் எனக்காக என் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனது மட்டுமே நினைவில் இருக்கிறது. அந்த தட்டின் மீதிருந்த காய்ந்த இட்லியையும், மிகவும் காய்ந்திருந்த சில்லறைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கைகளை உள்ளே விட்டு, என் கோட்டுக்குள்ளிருந்த பணப்பையை தடவிப்பார்த்தேன். உள்ளேயிருந்த பெரிய ரூபாய் நோட்டுக்களும், கடன் அட்டைகளும் அப்படியே இருந்தன. இந்தப் பக்கப் பையில் மெல்லிய புத்தகம்போல் ஒன்று இருந்தது. அநேகமாய் அது விமானச் சீட்டாய் தான் இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கோ லண்டனுக்கோ எடுத்தது என நினைக்கிறேன். பயணம் என்றைக்கு என நினைவில்லை. ஆனால் அந்த இரண்டு ஊர்களில் ஏதோ ஒன்றுக்கு போக எத்தனித்து சீட்டு எடுத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. எழுந்து போய் எதையாவது வாயில் போட வேண்டுமென தோன்றினாலும், ஏதோ பெரிய சோகமும், சோம்பலும், விரக்தியும் தடுத்தன. ஆனால் என்னவெனத் தெரியவில்லை. பல நாட்களாய் திறக்காத இரும்புக்கதவு துருப்பிடித்து இறுகிவதைப் போல இறுகியிருந்தன என் உதடுகள்.

உடலின் ஒவ்வொரு முனையிலும் பல கிலோ பாரத்தை உணர்ந்தேன். நகரவில்லை நான். நகரமுடியவில்லை. வாயைக் கஷ்டப்பட்டுத் திறந்து அந்த இட்லியை பிய்த்து உள்ளே போட்டேன். காய்ந்த சருகைப் போல் இருந்தது அது. வாயில் இருந்த பல நாள் எச்சில், சாக்கடையைப் போல அந்த இட்லியுடன் குழைந்து தொண்டையில் இறங்கியது. கருவேலமர சருகுகளை வைத்து உட்தொண்டையில் சிறுவர்கள் விளையாடுவது போல நரகவேதனையத் தந்தது அந்த ஒருவாய் இட்லி.

அடுத்த வாய் சாப்பிட தெம்பும் இல்லை, தைரியமும் இல்லை. என்னைச் சுற்றி எல்லாமே நகர்ந்துகொண்டிருந்தன. சில பொருட்கள் சுழன்று கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த ஓரடி நிலத்தைத் தவிர்த்து மீதி நிலம் என்னைச் சுற்றி சீரான வேகத்துடன் சுழன்றுகொண்டே இருந்தது. நான் நகரவில்லை. சுழல்பவைகளையும், நகருபவைகளையும் பார்க்கத் தொடங்கினேன். குடும்பங்கள் என்னைச் சுற்றி அவசரத்துடன் கூடிய குதூகலத்துடன் திரிந்தார்கள். கையில் இறுக்கமாய் பையைப் பிடித்தபடியும், மிகவும் இறுக்கமாய் அழகிய குழந்தைகளைப் பிடித்தபடியும் வேகமாய் ரயில்களைப் பிடிக்க நடந்துகொண்டிருந்தார்கள். நான் நகரவே இல்லை. நகருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

   திடீரென பயங்கர சத்தம். படு வேகமாய் ஒரு சில்லறை என்னருகில் இருந்த தட்டில் மேலிருந்து மோதியது. நிமிர்ந்து பார்த்தேன். என்னைப் போல் எவனோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். கோட் அணிந்திருந்தான். அங்கிருந்த மக்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமிரான பார்வையை கொண்டிருந்தான், அதனினும் மேலாக அலட்சியம் அவன் பார்வையிலும், உதட்டோரத்திலும் அநாயாசமாய் நடனமாடிக் கொண்டிருந்தது.

"ஏய். எழுந்திரு. விமானத்திற்கு ஒரு மணி நேரம் தான் உள்ளது. பிச்சையெடுத்தது போதும். எழுந்து வா."

"பிச்சையா?" எனச் சொல்லிவிட்டு கோட்டினுள் கைவிட்டு சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து வெளியே போட்டேன். பின், "நான் பிச்சையெடுக்கவில்லை. ஓய்வெடுத்தபடியே கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் என் குழந்தையும் வரப் போகிறார்கள். அதோ அங்கே பறந்தோடி வாழும் மனிதர்களைப் போல ஆனந்தமான ரயில் பயணம் எங்களுக்குக் காத்திருக்கிறது. நீ போ. சில்லறையை எடுத்துப் போ. எனக்கு சில்லறை வேண்டாம்."
எனத் திக்கித் திணறிச் சொன்னேன்

இமைக்காமல் என்னைப் பார்த்தான். பின், "இல்லை இல்லை. உனக்குத் தேவைப்படும். எடுத்துக் கொள். மனைவியால் நிராகரிக்கப்பட்ட நீ, பிச்சைக்காரனினும் கேவலமானவன்." எனக்கூறி பலமாக சிரித்தான். அந்தச் சத்தம் என் குடலைப் புரட்டியது.
இரயில் சத்தம் எல்லாம் காணாமல் போனது. அவன் சத்தம் இடி போல் மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது. என் மூளை வேர்விட்டிருக்கும் எனது மண்டை ஓட்டின் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்த சத்தம் நீண்டு ஒலித்தது.

"உனக்கென்ன தெரியும்? அவள் என்னை நிராகரிக்கவில்லை. வெறும் மனக்கசப்புதான். எல்லாம் சிலமணி நேரத்தில் சரியாகிவிடும். அவர்கள் வரப் போகிறார்கள். நீ போ. எனக்குத் தோன்றினால் நாங்கள் விமான நிலையம் செல்கிறோம். நீ போ"

"விவாகரத்திற்கும், மனக்கசப்புக்கும் அகராதி தெரியாதா உனக்கு? நினைவில்லையா? அல்லது இல்லாதது போல் நடிக்கிறாயா?"

"விவாகரத்தா?...... இருக்கிறது. அதனால் என்ன? எப்படியும் அவள் என்னிடம் வந்துவிடுவாள். என் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு என் நியாபகம் வரும். கண்டிப்பாய் வந்துவிடுவாள். நான் இல்லாமல் அவள் இருக்க மாட்டாள்." சொல்லிவிட்டு குனிந்து கொண்டேன்.

சில நொடிகள் சென்று நிமிர்ந்து பார்த்தேன். அவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். கண் எட்டும் தொலைவில் அவன் இல்லை. திடீரென அவளைப் பார்க்கத் தோன்றியது எனக்கு. உடலின் மூலைகளில் அங்கிங்கே ஒட்டிக் கொண்டிருந்த அனைத்து சக்தியையும் திரட்டி எழுந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வேகமாய் நடக்கத் தொடங்கினேன்.

பல நாட்கள் கண் மூடிக் கிடந்ததால் வீதியின் விளக்கு வெளிச்சம் என் விழிகளைக் கொத்தித் தின்றன. என் மனமெங்கும் ஒரே எண்ணம் தான். அவளையும் என் குழந்தையையும் பார்க்க வேண்டும். இமைகளை பாதி மூடியபடியே நடந்தேன். எங்கள் வீடு இருக்கும் வீதி வந்துவிட்டது.

பகலில் கூட மர நிழல் நிறைந்திருக்கும், எப்போதும் இருள் நிறைந்த வீதி அது. எத்தனையோ முறை இந்த வீதியில் வசிக்க பயமாய் இருப்பதாகவும், வீட்டை மாற்றுமாறும் என்னிடம் கூறியிருக்கிறாள்.  இந்த வீதியில் இருக்கும் தனிமை எனக்குப் பிடித்தமாய் இருந்தது. எங்கள் காதலை அது முழுமையாய் ஆதரிப்பதைப் போல் தோன்றியது. வெளியுலகின் அசுத்தங்களில் இருந்து எங்கள் காதலை அம்மரங்கள் சுத்திகரிப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தேன் நான். அதனால் வீட்டை மாற்றும் முடிவை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். எனைப் பிரிந்த இந்த ஒரு மாதமாக அவள் மட்டும் எப்படி தனியே இருக்கிறாள் எனத் தெரியவில்லை.

இதோ.. எங்கள் வீடு வந்துவிட்டது. முன்வாசல் வழியே செல்ல பயமாய் இருந்தது. பயம் எனச் சொல்வது எனக்கு இப்போது வெட்கத்தைத் தந்தாலும் வேறெந்த உணர்வின் பெயரையும் எனைத் தடுக்கும் அந்த உணர்வுக்குச் சூட்ட முடியவில்லை.  வீட்டின் பக்கவாட்டில் நின்றபடி வரவேற்பறையின் சன்னலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கண்ணாடி சன்னல் மூடியபடி இருந்தது. உள்ளே மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அவள் உருவம் நகருவது நிழலாடியது. நிழலாய் தெரிந்தாள் அவள்.

அநேகமாய் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாள் என நினைக்கிறேன்.  கைப்பையை கழட்டி மேஜையில் வைத்தாள். அவள் அசைவுகள் வெறும் நிழலாய்த் தெரிந்தாலும் அதை என்னை முற்றிலும் மறந்து முழுதாய் ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது. அவன் மீண்டும் வந்துவிட்டான்.

"இங்கே வருவாயென தெரியும். என்ன செய்கிறாள் உன் முன்னாள் மனைவி?"

"அலுவலகத்தில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறாள். தூங்கப்போவாள். வேறென்ன செய்வாள்? களைப்பாய் இருக்கிறாள்"

ஒருநொடி அமைதியாய் என்னைப் பார்த்தான். பின்,
"தூங்கத்தான் போகிறாள் என உறுதியாய்த் தெரியுமா?" என மிகவும் மெலிதான குரலில் சலனமேயில்லாமல் கேட்டான் அவன்.

நிமிர்ந்து சன்னலைப் பார்த்தேன். என் மனைவி நகர்ந்து கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடையில் தடித்த இரு கைகள் இறுகிப் பற்றியபடி இருந்தன. அவள் இடையை முழுதாய் அணைத்தபடி, அவளின் கழுத்தை ஒட்டி முகம் புதைத்து, ஒரு பெரிய நிழல் அவளை மேஜையில் சாய்த்தது. அந்நிழல் செய்வதற்கெல்லாம், இவள் ஒரு காமத்தில் நெளியும் பாம்பு போல இசைந்து கொண்டிருந்தாள். இருவரும் மிக மெதுவாய் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்நிழல் அவள் மீது முழுதாய்ப் பரவி இருட்டைப் பரப்பிக் கொண்டிருந்தது. எனக்கு மூச்சு நொடிக்கு இருநூறு முறை வெளியேறியது.

என் அருகில் இருப்பவனைப் பார்க்கத் திராணியற்று இருந்தேன். அவனோ சலனமே இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். என் கைகள் நடுங்கத் தொடங்கின. வீட்டின் முன்வாசலுக்குச் சென்றேன். படியேறினென். கதவும் அவர்களின் உடைகளும் திறதிருந்தபடியே என்னை வரவேற்றன.

அவர்கள் என்னைப் பார்த்தார்கள். மங்களான வெளிச்சத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்த உறுப்புக்களை மறைக்க அவசரமாய் எத்தனித்தார்கள். பாவமாய் இருந்தது. அவன் மறைத்தான் சரி. இவள் ஏன் எனைக் கண்டதும் மறைக்கிறாள்? அவன் பார்க்கும் போதுதானே மறைத்திருக்க வேண்டும்? யோசிக்க நேரமில்லை. அந்த நேரத்தில் அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. அவனுக்கு முழுதாய் கட்டுப்பட்டிருந்த என் மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. என் கோபம் முற்றிலும் நீங்கியிருந்தது. அவள், அவனுக்கு அடிமைப்பட்டிருந்த அவளது உடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு விடுதலை கொடுப்பது என் கடமையென உணர்ந்தேன்.

வீட்டின் உட்புகுந்த சில நொடிகளில், மேஜையில் இருந்த ஒரு பெரிய கத்தியை, கனிந்த பழத்துக்குள் இறக்குவதைப் போல மிருதுவாக அவன் உடலில் மூன்று முறை இறக்கினேன். சிறிய சத்தத்துடன் இறந்தே கிழே விழுந்தான். கத்தி அவனுள் சொருகி இறுகியிருந்தது. சில நிமிடங்களுக்கு முன் என் மனைவியின் உடலில் பரவியிருந்தவன், ஊற்றிய திரவம் போல தரையில் பரவியிருந்தான். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள், கத்திக் கொண்டிருந்தாள். உயிர் போவதைப் பார்த்தால் யார்தான் கத்த மாட்டார்கள்? அவள் கத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருப்பினும் அவளைக் கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்தி அவள் பயத்தைப் போக்க முயற்சித்தேன். அவள் மூச்சுக்காற்று சில நொடிகளில் ஓரளவிற்கு சீரானது.

பின் கடமையை உணர்ந்தவனாய், மெதுவாக அவளது கழுத்தைச் சுற்றி பற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த ரத்தம் நிரம்பிய நரம்புகளை கைகளால் அழுத்தமாகப் பிடுங்கி வெளியே இழுத்தேன். அவள் உடலின் மொத்த ரத்தமும் சில நொடிகளில் வெளியேறின. தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூனை மேலிருந்து கீழே போட்டதைப் போல கீழே விழுந்து காலியாக உடைந்தாள்.

சில நொடிகள் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்தேன். உள்ளே சென்ற போது இருந்த வெட்கமும், அவமானமும் மறைந்திருந்தது. அவனைப் பார்ப்பதற்காக சுற்றும் முற்றும் தேடினேன். அவனிடம் என் மனைவி விடுதலையான கதையைச் சொல்ல வேண்டுமென துடித்தேன். ஆனால் அவன் எனக்காக காத்திருக்கவில்லை. சற்று தொலைவில் என் குழந்தையை மார்போடு அணைத்து சுமந்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அநேகமாய் அவன் ரயில் நிலையமோ, விமானநிலையமோ சென்றுகொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். அவனை அழைக்கத் தோன்றவில்லை. அவன் நடந்துகொண்டே இருந்தான். அவன் தொலைவில் மறைய மறைய, நான் காணாமல் போய்க் கொண்டிருந்தேன்......
Related Posts Plugin for WordPress, Blogger...