Wednesday, March 17, 2010

நித்யானந்தா- மூன்றாம் பரிமாணம்


முப்பதி இரண்டே வயதான இந்த நித்யானந்த பரமஹம்சர் யார்? மக்கள் இவரை இப்போது கீழ்கண்டவாறுதான் பார்க்கிறார்கள்.
*முற்றும் துறந்த இந்துமத சாமியார். ஆன்மீக குரு. நோய்களைத் தீர்க்கும் நடமாடும் மருத்துவமனை!

அல்லது

*பெண் பித்தன். பக்தர்களை நம்பிக்கை மோசடி
போலி சாமியார்.

இந்த இரண்டிலும் மட்டுமே அடைபட்டுப் போன நம் மக்களின் மூளை, இன்னொன்றைப் பற்றி சிந்திக்க மறந்துவிட்டது. அல்லது மறுக்கிறது. நித்யானந்தா என்ற முப்பத்தி இரண்டே வயதான ஒரு இளைஞன், ஆசாபாசங்களும், பொருளாசையும், புகழாசையும், காமமும், இன்ன பிற அனைத்து மனித குணங்களும் நிரம்பிய ஒரு சாதாரண மனிதன் என்பதை. அவனை ஆரம்பத்தில் ஏணியில் ஏற்றிவிட்டு, பின்புறத்தை பிடித்தும் விட்ட குமுதம் போன்ற ஊடகங்களை நாம் மறந்திருக்கிறோம் (இப்போது குமுதமும் நித்யானந்தாவை திட்டுகிறது). ஒரு இளைஞன், அதுவும் இளமையின் சீரிய கட்டத்தில் இருக்கும் இளைஞன், தான் ஒரு பிரம்மச்சாரி என உலகிற்கு சொல்லும் போது எப்படி இந்த மக்கள் நம்புகிறார்கள்? நம்புவதை விடுங்கள், இயற்கைக்குப் புறம்பாக ஒருவன் பிரம்மச்சாரியாய் இருந்தால், அவன் புனிதமானவன் என்ற ஒரு மகா மடத்தனத்தை எப்படி இந்த மக்கள் ஏற்றுகொள்கிறார்கள்?

இதைவிட எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் ஒரு பிரம்மச்சாரியாக, இயற்கைக்கும், அவன் வயதின் ஆசைகளுக்கும் புறம்பாக இருந்தபோது, மக்களுக்கு கடவுளாக தெரிந்த நித்யானந்தா, தன் வயசுக்கும், இயற்கை விதிகளுக்கும் உள்ளடங்கிய ஒரு காரியத்தை, அதுவும் அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் செய்த போது எப்படி அயோக்கியனாய் தெரிகிறான்? மக்களின் இந்த இயற்கைக்கு புறம்பான மனநிலை உச்சகட்ட அயோக்கியத்தனம் ஆகாதா? ஒரு இளைஞனுக்கும் அவன் காதலிக்கும் இடையே நடந்த காதல் பரிமாற்றங்களை, மகள், மகன், மனைவி, கணவன், தந்தை, தாய் என அனைத்து உறவுகள் சகிதமாக தொலைக்காட்சியில் கண்டு களித்தது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்? அதை அரைமணிக்கொருமுறை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தங்கள் டி.ஆர்.பி விகிதத்தை உயர்த்திக் கொண்ட தொலைக்காட்சியின் செயல் விபச்சாரத்திற்கு ஈடாகாதா?

நித்யானந்தா ஒரு நம்பிக்கை துரோகி (அவர் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாததால் இப்படித்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது) என விளிக்கும் உலகத்துக்கு எதை நம்புவதென ஒரு வரைமுறை வேண்டாமா? காவி உடை போட்டு எவன் எது சொன்னாலும் காலில் விழுந்து சேவகம் செய்துவிட்டு, பின் நம்பிக்கை துரோகம் எனச் சொல்வது சரியா? நித்யானந்தாவை மக்கள் நம்புவதற்காக அவருக்கு அழகாய், ஆடம்பரமாய், பக்திமயமாய் மேடை அமைத்துக் கொடுத்து காசு பார்த்த குமுதம் போன்ற பத்திரிக்கைகளையும், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களையும் சும்மாவா விடுவது? சொல்லப்போனால் நித்யானந்தா போன்ற, சும்மா இருந்த சாமியார்களை ஊதி ஊதி பெரிதாக்குவதே இது போன்ற ஊடங்கங்கள் தான்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை அம்பலப்படுத்துவதே துப்பறியும் பத்திரிக்கைகளின் வேலையாக இருக்க வேண்டுமேயொழிய, ஒருவன் தன் படுக்கையறையில் காதலியுடன் என்ன செய்கிறான் என்பதை துப்பறிவதாக இருக்க கூடாது. அடுத்தவன் கழிவறையில் எட்டிப் பார்த்து இன்பம் அடைவதைவிட கேவலமானது அது.

நித்யானந்தா விஷயத்தில் அவன் நோய்களை குணப்படுத்துகிறான் என ஊடகங்கள் செய்தி பரப்பிய போதே நாம் அதை கண்டித்திருக்க வேண்டும். அதற்குதான் நமக்கு உரிமையுண்டே தவிர, அவன் ரஞ்சிதாவுடன் உடலுறவு வைத்ததை கண்டிக்க எவனுக்கும் உரிமை கிடையாது. நித்யானந்தா விஷயத்தில் சாகடிக்கப் பட்டிருப்பது மக்கள் அவன் மேல் கொண்ட மடத்தனமான நம்பிக்கை அல்ல, மனித உரிமை. ஒரு மனிதனின் மனித உரிமை ஊடகங்களின் வியாபர பேராசைக்காக முற்றிலுமாக சாகடிக்கப்பட்டுள்ளது. ஒரு 32 வயது இளைஞன் தன் காதலியுடன் இருந்த போது படம் பிடிக்கப்பட்டு, அந்தப் படம் விளம்பரப்படுத்தவும் பட்டிருக்கிறது. நான் சொல்வதெல்லாம் இதுதான், நித்யானந்தாவின் மீதான் பணமோசடி, கொலை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் அதே சமயம், நித்யானந்தாவின் மூன்றாவது பரிமாணமான, அவன் சாதாரண மனிதன் தான் என்பதையும், அவன் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் எண்ன வேண்டும். இதை இன்று நாம் கண்டிக்காமல் விட்டால், நாளை உங்கள் காதலியுடன் நீங்கள் இருக்கும் போது கவனமாய் இருங்கள், காமிரா பார்த்துக் கொண்டு இருக்கலாம். உங்கள் உரிமைகள் செத்துக் கொண்டிருக்கலாம்.

Wednesday, March 3, 2010

நித்யானந்தமும் பக்கத்து வீட்டு பாட்டியும்!


"கதவைத் திற காற்று வரட்டும் (open the door let the breeze come in)"
"உங்களுக்கான தியானம்(Meditation for you)",
"வாழும் ஞானம் (Living enlightment)"
,
இதெல்லாம் நம் நித்யானந்த பரமஹம்சர் எழுதிய புத்தகங்கள். இதெல்லாம் கூட காமெடி இல்ல. உச்சகட்ட காமெடி என்னன்னா, தலைவரு இன்னொரு புக்கு எழுதிருக்காரு "காமம், பயம், கவலைகளை கடப்பதற்கு உத்திரவாதமான வழிகள் (Guaranteed solutions for lust, fear, worries)"னு. இந்த புத்தகத்தோட பேரை படிச்சிட்டு, அப்படியே 'அந்த' சன் டிவி ஒளி-ஒலிக்காட்சியை பாருங்க! செம காமெடி!

"கதவைத் திற காத்து வரட்டும்"னு எழுதிட்டு அவரு ரூமை மூட மறந்துட்டாரு!!!

சரி விஷயத்துக்கு வருவோம்! கடவுள், மதம், தியானம், ஞானம் போன்ற சகல விஷயங்களையும் உலகத்துக்கே எடுத்துரைக்கும் இவனைப் போன்ற சாமியார்கள் சிந்திக்கும் திறன் கொஞ்சம் அதிகமாய் அமையப் பெற்ற சாதாரண மனிதர்களே என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் தான் நித்யானந்தா என்ற ராஜசேகரன். 32 வயதுக்குள் பல கோடி ரூபாய் சொத்துக்கள், பல வெளிநாட்டு-உள்நாட்டு பணக்கார பக்தர்கள், ஆடம்பர வாழ்க்கை, பல நாடுகளில் ஆசிரமம், தான் எழுதிய புத்தகங்களை விறபனை செய்வதற்கென்றே பிரத்தியேக குளிர்சாதன கடைகள் என அனைத்தும் எப்படி நித்யானந்தாவுக்கு கிடைத்தது? மக்களின் குழம்பிய மனங்களில் தெளிவாய் திமிங்கலம் பிடிக்கத் தெரிந்த கலைதான் இவனைப் போன்றவர்களின் ஒரே முதலீடு.
சமீபகால அவசர வாழ்க்கையின் நேரடி விளைவுகள் நிம்மைதியின்மை, தூக்கமின்மை, மன உளைச்சல், இதர, இதர. மக்கள் தாங்கள் 'மென்டல்' ஆகாமல் இருக்க இவனைப் போன்ற 'மென்டல்'களிடம் போகிறார்கள். இவர்களின் சொற்பொழிவுகள் மக்களை அப்படியே கட்டிப் போட்டு, இவர்கள் சொற்களுக்கு அடிமையாக்குகின்றன. முதலில் சாமியார்களின் அல்லது ஞானிகளின் சொற்களுக்கு மட்டுமே அடிமையாகும் மக்கள், பின் அந்த சொற்கள் தங்களுக்கு தரும் மயக்கநிலையை ஆழ்ந்து அனுபவிக்கத் துவங்கிவிடுகிறார்கள். இதன் அடுத்த கட்டம் தான் அந்த சொற்களை உதிர்த்த 'மனிதனுக்கு' அடிமையாதல். இரண்டு மூன்று சொற்பொழிவுகளைக் கேட்டால் கூட போதும் பிரச்சினை உள்ள மனம் அடிமையாகிவிடும்! மேலும் இவரைப் போன்ற சாமியார்கள் இல்லாததைச் சொல்வதைப் போன்ற ஒரு பிரம்மையை மனம் நம்புவதும் அடிமைத் தனத்தின் ஒரு வடிவம்தான். புத்தரின் தம்மபதாவிலும், ஜென்னிலும் உள்ள கோட்பாடுகளை அழகாக மக்கள் நம்பும் கடவுள்களுடன் இணைத்து இவர்கள் ஆளுக்கொரு சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாறு அதை மாற்றுகிறார்கள். மக்களுக்கு அதைப் படிக்க படிக்க ஏதோ இல்லாததைக் கண்டுபிடித்ததைப் போல் மயங்கி தலையில் வைத்து ஆடுகிறார்கள்.
மனிதனுக்கு(குருவுக்கு) அடிமையாகிவிட்டது, அடுத்த கட்டம் என்ன? அவன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாய் செய்வது! நித்யானந்தத்தின் வீடியோவில் கூட ரஞ்சிதா என்ற நடிகை ஒரு பணிப்பெண் போல செயல்பட்டதைப் பார்க்கலாம்! ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட மனிதன் (குரு) 'என்ன' சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும், ஏனென்றால் அவன்தான் தன் கடவுள் என்ற குருட்டு நம்பிக்கை பக்தனுக்கு தனதுஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. பின் அந்த பக்தன் தன் கடவுள் தன்னிடம் என்ன சொன்னாலும் செய்வான். "தாயை கொல்" என்றாலும் "செத்துமடி" என்றாலும், "500 பேரை கொளுத்து என்றாலும் அந்த மனம் அதை செவ்வனே செய்து முடித்து தன் கடவுளிடம் வாலாட்டும்! அமெரிக்காவின் 'heaven's gate' போன்ற இயக்கங்கள் இது போல் செயல்பட்டவை தான். கிறுக்குப் பிடித்த சாமியார்கள் வசம் மாட்டிக்கொண்டு, அவர்களுக்கு அடிமையாகி பின் அவர்களின் கட்டளைப்படி கும்பல் கும்பலாக தற்கொலை செய்து கொண்ட கூட்டம் அங்கு ஏராளம். Marshal Applewhite(ஹெவன்ஸ் கேட்டின் தலைவன்) என்பவனின் கீழ் 1997ஆம் ஆண்டு 39பேர் (அவனையும் சேர்த்து) தற்கொலை செய்துகொண்டனர். இது ஒரு உதாரணம் தான். இதுபோன்ற கிறுக்குப் பிடித்த 'cult'கள் அங்கு ஏராளம் உண்டு! ஆனால் இந்திய சாமியார்கள் குறியாய் இருப்பது காமத்திலும், பணத்திலும் தான்! அதனால் தான் பெரும்பாலும் உணர்ச்சியை அடக்க முடியாமல் மாட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இவ்வளவு கேவலமாக இருக்கும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு அருமையாக பேசவும், எழுதவும் வருகிறது? எப்படி மக்களை வசீகரிக்கிறார்கள்? என்று. நல்ல கேள்விதான். பதிலும் வெகு சுலபமான பதில். நிறைய படிக்கிறார்கள். கற்பனை சக்தியை படர விடுகிறார்கள். மக்கள் தன்னை குருவாகவும் கடவுளாகவும் ஏற்று கொள்ள கொள்ள தாங்களே தங்களை எல்லாம் வல்ல கடவுளாக பார்க்கின்றனர். தான் எது செய்தாலும் நியாயம் தான் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு கண்டதையும் செய்கிறார்கள். இது ஒருவிதமான மனநோயே! டாமர், டெட்பண்டி போன்ற கொடுரமான கொலையாளிகளுக்கு அழகான, வசீகரிக்கிற, நகைச்சுவையான, யாரையுமே பேச்சால் மயக்கக்கூடிய அளவுக்கு பேச்சுத் திறமை இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகின் இயல்பு நடைமுறையில் இருந்து வெளியில் வரும்போதே பேச்சும் மாறுபடுகிறது. திரும்பிப்பார்க்க வைக்கிறது. ஏதோ விஷயம் உள்ளது போல் நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஒன்றே ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்க, "புத்தனைப் போல் பேசுபவன் எல்லாம் புத்தன் அல்ல." புத்தனைப் போல் யார் வேண்டுமானாலும் பேச முடியும். அதற்கு கொஞ்சம் அறிவும், பேச்சுத்திறமையும், கற்பனாசக்தியும் போது. இதுதான் இந்த சாமியார்களுக்கு நான் முதலிலேயே சொன்னது போல், வாய்த்துள்ளது!
சரி. இதற்கு என்னதான் வழி? மனக்கவலைகளை, கஷ்டங்களைத் தீர்க்க நிறைய புத்தகங்களும் (ஜென், டாவோயிசம், கன்ஃபூஷனிசம், தம்மபதம்), முறையாக தியானம் சொல்லித்தரும் பயிற்சி நிலையங்களும் நிறைய உண்டு. எதுவும் சரிப்படவில்லையெனில் தயவுசெய்து மனநல மருத்துவர்களை பாருங்கள். மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு உண்டு. அங்கு மட்டுமே உண்டு. தியானம் போன்றவற்றை அவர்களே சொல்லித் தருகிறார்கள். சாமியார் எவனையும் நம்பாதீங்க. கடவுள் பேரால் பிழைக்கும் அனைவரும் ஏமாற்றுக்காரர்களே, அயோக்கியர்களே. எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, இத்தனை நாள் இந்த நித்யானந்தாவை நம்பி தங்கள் வீட்டில் புகைப்படங்களை மாட்டி, தங்கள் குடும்பப் பெண்களையும் சாமியாரின் பணிகளில் ஈடுபடுத்திய பக்தர்களுக்கு, தங்கள் குரு ஒரு அயோக்கியன் எனத் தெரியும் போது எப்படிப்பட்ட மனநிலை இருக்கும், என்பதுதான். தீவிரமான பக்தர்கள் தங்கள் குருவை இன்னமும் நம்பிக்கொண்டிருப்பார்கள் என்பது வேறு விஷயம். அவர்களையெல்லாம் மனநல மருத்துவர்கள் தான் காப்பாற்றவேண்டும். நான் சொல்வது மிதவாத பக்தர்களைப் பற்றி. நேற்றைய செய்திக்குப் பின் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்பு எவ்வளவு அவமானப்படுவார்கள்? நினைக்கவே பாவமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி, ஆன்மீக, மத ஆசிரமங்களை அரசு உடனே தடை செய்வதுதான். இன்னமும் நீங்கள் சாமியார்களை நம்புவதாக இருந்தால் அந்த இல்லாத கடவுள் தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்!


இதையெல்லாம் விட்டுவிடுவோம். என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு கவலையைப் பாருங்கள்.
"ஏம்பா அசோக்கு அந்த வீடியோல வந்த நடிகை யாருப்பா?"
"அது ரஞ்சிதாவாம் பாட்டி"
"அய்யயோ. அப்ப கலைஞர் டீவில தெக்கத்திப் பொண்ணை நிப்பாட்டிருவானாப்பா??!!!"
"???!!!!!!!!!"

Tuesday, March 2, 2010

சிம்புவின் முதல் படம்'விண்ணைத் தாண்டி வருவாயா-விமர்சனம்' னு தலைப்பு வைக்க ஏனோ பிடிக்கவில்லை. படம் முழுதும் சிம்பு மட்டுமே கண்ணிலும் மனதிலும் நிற்பதால். வழக்கமாய் நம்மையெல்லாம் எரிச்சலூட்டும் சிம்புவை மிக கண்ணியமாக, நேர்த்தியாக நடிக்க (சொல்லியதற்கு) வைத்ததற்கு ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் கவுதமுக்கு. சிம்புவின் முதல் படம் இப்படிப்பட்ட படமாக இருந்திருந்தால் நமக்கு மிகவும் பிடித்த நடிகராய் இப்போது சிம்பு இருந்திருக்கக்கூடும். இதையே நாம் சிம்புவின் முதல் படமாய் எடுத்துக்கொண்டு அவருக்கு வாழ்த்து சொல்வோம்! இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவேயில்லை. நிஜத்தில் ஒரு 22 வயது பையனை அப்படியே வார்த்திருக்கிறார். அவர் நடை, உடை, வசன உச்சரிப்பு, கண்ணசைவு என பின்னியிருக்கிறார். அவருக்காகவே இந்தப் படத்தை எத்தனை முறையேனும் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. த்ரிஷா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை இறகு சுமப்பதைப் போல் மிக சுலபமாக செய்து போகிறார். சிம்புவுடன் கூடவே சுற்றும் அந்த ஒளிப்பதிவாளர் கதாப்பாத்திரமும் அருமை. மொத்தத்தில் எந்தக் கதாப்பாத்திரமுமே திணிக்கப்பட்டதாய் தெரியவில்லை. வசனங்களும் தான். கவுதமின் மற்ற படங்களை விட இதில் ஆங்கில வசனங்கள் சாலக் குறைவு. அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது. பின்ணணி இசை பின்னுகிறது. முக்கியமாக அந்த 'முஸ்தஃபா முஸ்தஃபா' இசையை சரியான இடத்தில் கோர்த்தது அருமையான ரசனை! படத்தில் மிக மிக மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒவ்வொரு 'Frame'மும் ஒரு புகைப்படத்தின் அழகோடு இருக்கிறது. ஒளிப்பதிவு இவ்வளவு அழகாக கொண்ட ஒரு படம் வந்ததாய் நினைவில்லை. கதை என எதுவும் பெரிதாக இல்லை. ஏற்கனவே வந்த பல படங்களின் கதை தான். காட்சிகளும் மிகவும் புதிதாய் இல்லை. ஆனால் சிம்புவும், வசனங்களில் உள்ள மெல்லிய நகைச்சுவையும் நம்மை காட்சிகளில் நிலைக்க செய்கிறது. ஆனாலும் கூட சில இடங்களில் மக்கள் 'உஸ்ஸ்' என்கிறார்கள்.

அருமையான நடிகர்கள். மிகவும் அழகான ஒளிப்பதிவு. சில்லிடும் இசை. அழகான காதல். மெல்லிய நகைச்சுவை. மொத்தத்தில் இது ஒரு அருமையான படம் என சொல்லிவிடலாம் தான். ஆனால் நம் அண்ணன் கவுதம் மேனனும், அவரது 'கவுதம் மேனனிஸங்'களும் தடுக்கிறது. கதாநாயகனுக்கு காதல் வந்தால் உடனே நெஞ்சில் குத்திக் கொள்வது, திரைக்கதையில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே தடம் மாறி எங்கெங்கோ அலைவது, அனைத்து பாடல்களின் ஒளிக்காட்சியும் ஒரே மாதிரி அமைத்துள்ளது, (அதாவது எல்லா பாடல்களிலும் சிம்புவின் பின்னால் வெள்ளைக்காரர்களும் கறுப்பர்களும் ஆடுகிறார்கள்), இரண்டாவது பாதியில் எங்கெங்கோ போய் என்னென்னமோ செய்து மக்களை பொறுமையிழக்க செய்தது, படம் முடிந்ததா இல்லையா எனத் தெரியாமல் மக்கள் திரையரங்குக்குள் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தது போன்ற பல பிரச்சினைகளை சகிக்கத்தான் வேண்டியிருந்தது! இதைவிட பெரிய கொடுமை, த்ரிஷாவுக்கு கடைசியில் திருமணம் ஆனதா இல்லையா என 90% பேருக்கு தெரியவில்லை!! எனக்கும் தான்! ஹி ஹி!!!

கவுதம் மேனன் இன்னும் கொஞ்சம் தெளிவடைய வேண்டும்.
கவுதமின் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் இது 'மின்னலே' படத்தை ஒத்த படம். கண்டிப்பாய் சிம்புவுக்காகவேனும் பார்க்கவேண்டிய படம். கண்டிப்பாக பாருங்கள். நீங்கள் பார்ப்பதற்குள் கடைசி 20 நிமிடத்தை வெட்டி விடுவார்கள் என நம்புவோமாக!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...