Thursday, December 17, 2009

கார்த்திகை நாய்கள்

சோபனாவுக்கு என்னாச்சுன்னே தெரில. நல்ல பொண்ணாதான் இருந்தா. ஆனா இப்பல்லாம் நைட்டு ஃபுல்லா கத்துறா, தூக்கத்துல நடக்குறா. பார்க்கவே பயமா இருக்கு! பக்கத்துல போயி கைய வச்சோம்னா கடிக்க வர்றா! கையி ஜஸ்ட்டு மிஸ்சு, வசமா மாட்டிருப்பேன்!! இன்னிக்குதான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்திருக்கேன். எங்கூட என் மச்சான் வேணுவும் வந்திருக்கான். அவன்னா சோபனாக்கு ரொம்ப புடிக்கும். அவன் சொன்னா என்ன வேணா செய்வா சோபனா. அய்யய்யோ! சோபனா, வேணுவோட முறைப் பொண்ணு இல்லீங்க, எங்க அத்தை வீட்டு டால்மேசன் சாதி நாய்!! அதாவது என் பொண்டாட்டியோட அம்மா வீட்டு நாய்!!
இப்போ ஒரு வயசு ஆகுது. எங்க அத்தைக்கு சோபனா ரொம்ப செல்லம். அதுனால யாரு சோபனாவ 'நாய்'னு சொன்னாலும் அத்தைக்கு கோபம் வந்துரும். "வள்"லுனு விழுவாங்க. எங்க மாமா ஒரு தடவ அத்தை மேல இருக்க கோபத்த சோபனா மேல காமிக்க, எங்க அத்தைக்கு வெறி புடிச்சு, மாமாவ காதுல கடிச்சு வச்சுட்டாங்க! அப்புறம் மாமாக்கு காதை சுத்தி ஊசி போட்டுட்டு வந்தோம். அந்த சம்பவத்துல இருந்து நான் 'சோபனா' மேட்டர்ல விளையாடுறதே இல்ல. சோபனா சம்பந்தமா என்கிட்ட அத்தை என்ன சொன்னாலும் செஞ்சுருவேன். இன்னைக்கு கூட பாருங்க இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு இந்த நாய் சனியன கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சுட்டிருக்கேன். என் பொண்டாட்டி பிரசவத்துக்கு கூட நான் இப்படி அலைஞ்சதில்ல. இத்தோட இது மூணாவது ஆஸ்பத்திரி. எந்த ஆஸ்பத்திரிலயும் டாக்டர் இல்ல! இன்னும் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். சோபனாக்கு முன்னாடி கீதா, லல்லு, சுரேஷ், டிம்மி, சின்கு, கோமளவள்ளி, கல்யாணசுந்தரம்னு பல நாய்கள் வெயிட் பண்ணுது. எல்லா நாய் முகத்துலயும் ஒரு கர்ணகொடூரம். லேட்டா வந்த புருசன முறைக்கிற பொண்டாட்டிங்க மாதிரி!

மணி அடிச்சாச்சு. நான், வேணு, சோபனா மூணு பேரும் டாக்டர் ரூம்குள்ள போனோம். டாக்டர் கண்ணாடி போட்டிருந்தாரு. நாய்க்கு நல்லா மருத்துவம் பாப்பாரானு மனசுகுள்ள ஒரு டவுட்டு வேற. இந்தாளு பாட்டுக்கும் சோபனாக்கு எதையாவது மருந்த குடுத்து, அது மூணாவது நாளு மண்டைய போட்டுருச்சுன்னா, என்ன நடக்குமோ? ஆத்தி.... நினைச்சாலே பயமா இருக்கே. காதை தடவி பார்த்துகிட்டே, டாக்டர பார்த்தேன். டாக்டர் பேசுனாரு. "ராத்திரிலாம் ஊளையிடுதா? முறைச்சு பாக்குதா? கடிக்க வருதா?"
"அட ஆமா டாக்டர். எப்படி டாக்டர் நாங்க சொல்லமயே அப்படியே கரெக்டா சொல்றீங்க?" ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து கேட்டான் வேணு.
டாக்டர் நாயின் பின்புறத்தை ஒருநிமிடம் உற்று பார்த்துவிட்டு பேசினார்,
"தம்பி, கார்த்திகை மாசம் ஐயப்பனுக்கு மட்டும் உகந்த மாசமில்ல, நம்ம வைரவருக்கும் உகந்த மாசம். இந்த மாசத்துலதான் அவங்க குட்டி போடுறதுக்கான ஆயத்த வேலைகள்ல முழுமூச்சா இறங்குவாங்க. நம்மல மாதிரி அவங்க 'லைஃப் டைம் சிம்' கிடையாதுப்பா, அவங்களுக்கெல்லாம் லிமிட்டெட் வேலிடிட்டி தான். அதுவும் போக மனுசன் மாதிரி வருசம் ஃபுல்லா 'இதே' வேலையா அலைய மாட்டாங்க, கார்த்திகை, மார்கழி முடிஞ்சா அவங்க 'மூடு' எக்ஸ்பையிரி ஆயிரும், பாவம்!! அதுனால, அவங்களுக்கு ஒரு நல்ல ஜோடியா பார்த்து 'ஜோடி' சேர்த்து விடுறது நம்ம கடமை! அத விட்டுட்டு அவங்கள கட்டி போட்டு அவங்க 'உணர்ச்சிகளை' அடக்கனும்னு நினைச்சீங்கன்னா, உங்கள கண்ட இடத்துல கடிச்சு வச்சுருவாங்க, அப்புறம் உங்களுக்கு வேலிடிட்டி ஓவராயிரும்!! உங்க நாய்க்கு அதான் பிரச்சினை! ஜோடி சேர்த்தா சரியாயிரும், புரியுதா?" எனக் கூறிவிட்டு சோபனாவின் பின்புறத்தைப் மிக சீரியசாக உற்று பார்த்து எதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
வேணு என் காதில் மெதுவாக, "என்ன மச்சான் இவன்? சரியான லூசா இருப்பான் போல, மாத்ரூபூதம் டாக்டரு மாதிரி "உணர்ச்சி கிணர்ச்சி"னு டயலாக் பேசுறான்! நாய்க்கு, மாமா வேலை வேற பாக்க சொல்றான்! அவனையே பாக்க சொல்லிரு மாப்ள. எவ்ளோ கமிசனோ அதைக் கொடுத்துருவோம்!" என்றான் சீரியசாக!

நான் தயங்கி தயங்கி டாக்டரிடம், "டாக்டர் எங்களுக்கு சோபனா 'சாதியில' எந்த ஆம்பிளை நாயையும் தெரியாது. இனிமே நாங்க தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள யாரையாவது கடிச்சு வச்சுருமோனு பயமா இருக்கு. அதுனாலே நீங்களே பார்த்து ஒரு நல்ல ஆம்பிளை நாயா சொன்னீங்கன்னா, நாங்க சோபனாவ கூட்டிட்டு வந்து 'மேட்டர' முடிச்சுட்டு கூட்டிட்டு போயிருவோம்.. கமிஷன்.. சீ... ஃபீஸ் எவ்ளவோ அத கொடுத்துர்றோம்." என கொஞ்சம் நெளிந்தபடி தயக்கத்துடன் சொன்னேன்.
என்னை ஏற இறங்க பார்த்த டாக்டர்,
"ஹ்ம்ம்.. சரி. என்கிட்ட இப்ப 'மொகம்மது அப்ரிடி'னு ஒரு நாய் இருக்கு. அது ஒன்னுதான் இப்போதைக்கு என்கிட்ட இருக்குற டால்மேசன் நாய். ஆனா ரெண்டையும் சேர வைக்கிறது அவ்ளோ சுலபமான விஷயம் இல்ல. முதல்ல சோபனாக்கு அப்ரிடிய புடிக்கனும், அப்புறம் அப்ரிடிக்கு சோபனாவை புடிக்கனும்."
இடைமறித்தான் வேணு, "அதெல்லாம் சரி டாக்டர். அப்ரிடி முஸ்லிம் நாயா டாக்டர்? சாதி ஒன்னுன்னாலும் மதம் வேறயாவுல இருக்கு!!!" என்றான். நான் முறைத்தேன். டாக்டர் தொடர்ந்தார் "ஏன்யா உன் தங்கச்சிக்கா பொண்ணு பாக்குற? விட்டா ஜாதகம் கேப்ப போல. அது இந்து நாய்தான்யா. முஸ்லிம் ஆளுக யாரும் நாய் வளக்க மாட்டாங்க. அப்ரிடியோட ஓனருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் அப்ரிடிய புடிக்குமாம்யா. அதான் அந்த பேரு வச்சிருக்கான். அவன் பேரு நடராஜன்யா!!!" என்றார்.
வேணுவின் முகம் மலர்ந்தது, "அப்ப சரி டாக்டர். மேல சொல்லுங்க சார்" என்றான். "என்ன குடும்பமோ! கருமம்!" என நினைத்துக் கொண்டு டாக்டர் சொல்வதைக் கேட்க தயாரானேன்.
"உங்க நாய்க்கு மாதவிடாய் முடிஞ்சு கரெக்டா ஒரு வாரத்துல கூட்டிட்டு வந்துருங்க. அப்பத்தான் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம். என்ன?" என்றார்.
"அடக் கொடுமையே. இதை வேற எண்ணிகிட்டு உக்காந்துருக்கனுமா?" என வேணு என் காதில் கிசுகிசுத்தான். பின் டாக்டரிடம் அவனே மெதுவாக, "ஏன் டாக்டர். இந்த 'உணர்ச்சி'ய ஊசி போட்டு கட்டுப்படுத்த முடியாதா டாக்டர்?"என்றான்.
டாக்டரின் முகம் சட்டென இறுகியது. கடும்கோபத்துடன் "ஏன்யா? நீயெல்லாம் மனுசனா? உனக்கு கல்யாணம் பண்ணி முதல் ராத்திரிக்கு போறப்ப உனக்கு ஊசிய போட்டுவிட்டா உனக்கு எப்படி இருக்கும்? போடுவோமா உனக்கு?"என்றார். எனக்கு பயங்கரமாய் சிரிப்பு வந்தது. ஆனால் வேணுவைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. பின் "சும்மா ஒரு ஆர்வக்கோளாறுல கேட்டான் டாக்டர். தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொன்னபடி 'அந்த' விஷயங்களை கவனிச்சு ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு வர்றோம். ஆனா அதுக்குள்ள யாரையாச்சும் கடிச்சா என்ன டாக்டர் பண்றது?" என்றேன். "அதுவரைக்கும் ஒரு மருந்து எழுதி கொடுக்குறேன் அதை சாப்பாட்டுல கலந்து கொடுங்க. அதுக்கு உணர்ச்சி குறையும்" எனக்கூறிவிட்டு என் கையில் எதையோ திணித்தார். பிறகு டாக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருநூறு ரூபாய் ஃபீசையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

வழி முழுவதும் வேணு பேசவேயில்லை. டாக்டர் சொன்னதற்காக வெட்கப்படுகிறான் போல என நினைத்து "விடு வேணு, டாக்டர் ஏதோ கோவத்துல சொல்லிட்டான். அவன் லூசு மாப்ள." என்றேன். அவன், "அது இல்ல மச்சான். எனக்கு இப்ப பொண்ணு பாக்குறாங்கள்ல, அத நினைச்சேன்" என்றான். நான் "அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்?". அதற்கு அவன் "ஒன்னுமில்ல, இதுவரைக்கும் சும்ம்ம்மா இருந்துட்டு, எனக்கு கரெக்டா இருபத்தஞ்சு வயசனாவுடன பொண்ணு பாக்குறாங்களே, சோபனாக்கு கார்த்திகைனா நமக்கு இருபத்தஞ்சோ?னு ஒரு டவுட்டு வந்துருச்சு மச்சான்" என்றான். அவனே தொடர்ந்தான், "அது போக இன்னொன்னும் நினைச்சேன், நமக்கும் இப்ப இருக்குற மாதிரி இல்லாம, சீசனுக்கு சீசன் "உணர்ச்சி" வந்தா, நமக்கும் சீசனுக்கு சீசன் சம்பந்தம் பார்ப்பாங்கள்ல!! அதுகூட பரவால்ல மச்சான் நமக்கும் சோபனா மாதிரி கார்த்திகைக்கு கார்த்திகை வெறி புடிச்சா எப்படி இருக்கும்"னு நினைச்சேன், வயித்த கலக்கிருச்சு" என்றான் அதிர்ச்சியுடன்!!!!! எனக்கும்தான்!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...