Monday, October 26, 2009

நாய் வாத்தியார்.

நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் எல்லாமே மிக சராசரியாகத் தான் இருக்கும். ஒன்றே ஒன்றைத் தவிர. இல்லை, ஒரே ஒருவரைத் தவிர. அவர் பெயர் நாய்வாத்தியார். அதோ அங்கே மஞ்சள் பெயிண்டில் கொஞ்சம் பழையதாய் தெரியும் வீடு தான் நாய் வாத்தியாரின் வீடு. என் வீட்டில் இருந்து ஒரு நாலு வீடு தள்ளி இருக்கிறது அவருடையது. எனக்கு இங்கு வந்ததில் இருந்து பயங்கர குழப்பம், தமிழ் வாத்தியார், இங்கிலீஷ் வாத்தியார் எல்லாம் எல்லா குடியிருப்பிலும் கண்டிப்பாய் இருப்பார்கள். “அதென்ன நாய் வாத்தியார்?” என்று.

அவரை எல்லோருமே நாய் வாத்தியார் என்று தான் அழைத்தார்கள். வெறும் 'வாத்தியார்' என அவரை எவரேனும் எங்கள் தெருவில் குறிப்பிட்டதாய்  எனக்கு நினைவில்லை. கடைசியாக இந்தக் குழப்பம், நான் வாத்தியாரின் நடவடிக்கைகளை கவனிக்க கவனிக்க, தானாகவே நாளடைவில் தீர்ந்தது எனக்கு. நாய் வாத்தியார் என்ற பெயர் ஆகுபெயர்!  அவர் வளர்க்கும் நாயினால் வந்தது அது.  நாய் வளர்க்கும் மற்றவர்களுக்கும் இவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இவரையும் அந்த நாயையும் கூர்ந்து கவனித்தால் அந்த வித்தியாசங்கள் நமக்குப் புலப்படும்.

இந்த வீட்டிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, திருமணமான புதிதில், நானும் என் மனைவி தனலட்சுமியும் வந்தோம். ஆரம்பத்தில், ‘நாய் வாத்தியார்’ என அவரை விளிக்க எனக்கு கொஞ்சம் சங்கடமாய் இருந்தது. பின் நாளடைவில் வெறும் வாத்தியார் என்றால் யாருக்குமே விளங்கவில்லையாதலால் எனக்கும் அந்தப் பெயர் பழகிவிட்டது. சூரியன் உதிக்காத காலைவேளை கூட இருக்கும். ஆனால் நாய்வாத்தியாரும் அவரது நாயும் நடைப்பயிற்சி செய்யாத காலை இந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததாய் நினைவில்லை எனக்கு. லேசாக தூரல் போடும் மழைக்கால காலை வேளைகளில் கூட அவரும் நாயும் மறக்காமல் நடைப்பயிற்சி செய்வார்கள். நடைப்பயிற்சியின் போது நான் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டால், சற்று நேரம் நின்று என்னுடன் பேசிப் போவார். பேச்சு, ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்டதோ, தெரு சம்பந்தப்பட்டதாகவோ இருக்காது. பெரும்பாலும் என்னை, என் மனைவியை, என் குடும்பத்தைப் பற்றிய நலவிசாரிப்புகளாகவே இருக்கும். அல்லது அவரது நாய் செய்த குறும்புகளையும், சேட்டைகளையும் வலுக்கட்டாயமாக விவரிப்பார். நமக்கு அதைக் கேட்பதில் ஆர்வம் உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படமாட்டார். சொல்லவந்ததை சொல்லிவிட்டுத்தான் நகர்வார்.

அப்படி இந்த வீட்டுக்கு வந்த புதிதில் முதல்முறையாக என்னிடம்  பேசும் போது, "உங்க பேரு மணியாமே தம்பி! நல்லது நல்லது! மணித்தம்பி, நான் இந்த தெருவுலதான் முப்பத்தியஞ்சு வருசமா இருக்கேன். அஞ்சுடையார் ஸ்கூல்லதான் கணக்கு வாத்தியாரா இருந்தேன். இந்த வீட்டுக்கு நீங்க வந்தது ரொம்ப சந்தோசம் மணித்தம்பி. உங்களுக்கு  எதுனா வேணுமின்னா என்கிட்ட தாராளமா கேளுங்க...." என தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி மறக்காமல் “மணித்தம்பி” போட்டே பேசினார். அவர் பள்ளியில் நடந்த சம்பவங்களில் ஆரம்பித்து  அவர் மனைவியும், மகனும் பேருந்து விபத்தில் இறந்தது வரை எல்லாவற்றையும் மெலிதாய் சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் இருந்த துக்க விஷயம், அவர் முகத்தில் எந்த இறுக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் அருகில் நின்று கொண்டிருந்த நாயை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டே தன் குடும்பத்தின் மரணத்தை மெல்லிய சிரிப்போடு சொல்லிக்கொண்டே அடுத்த விஷயத்திற்கு தாவினார்.

அன்று இரவு முழுவதும் “எப்படி இந்த ஆளால் தன் மனைவி மகனின் இறப்பைக்கூட சிரிப்பு மாறாமல் சொல்ல முடிகிறது?” என வெகுநேரம் யோசித்தபடியே தூங்கிப்போனேன். அன்றைய கனவில் கூட  நாய் வாத்தியாரும், அவரது நாயும், முகம் தெரியாத அவரது மனைவியும் மகனும் வந்து போனார்கள்.

அன்று எனக்கு அவர் அளித்த ஆச்சரியமும், குழப்பமும், நாய்வாத்தியாரின் மேல் என்னை ஏனோ கவனம் கொள்ள வைத்தது. அவர் நாயுடன் மெதுவாக பேசியபடியே நடந்து செல்வதை கிட்டத்தட்ட தினமும் கவனிக்க ஆரம்பித்தேன். நாயுடன் அவர் பழகிய விதம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது.

இரவு நேரங்களில் நாயை வெளியே விடமாட்டார். அதுவும் அவருடன் உள்ளேதான் படுத்துக்கொள்ளும். அவர் நாயை சங்கிலியால் கட்டி யாருமே பார்த்ததில்லை. நாயின் கழுத்தில் பட்டை கூட இருக்கவில்லை. ஆனாலும் கூட, சங்கிலியால் கட்டிக் கூட்டிப்போவதைப் போல, நாய் அவர் கூடவே அழகாய் நடந்து போகும்.  அவர் நின்றால் உடனே தானும் நின்று அவர் முகத்தைப் பார்க்கும். அவரும் அந்த நாயும் நடப்பதை தூரத்தில் இருந்து பார்த்தால் யாரோ இரண்டு பால்ய நண்பர்கள் வெகுநாள் கழித்து சந்தித்து பழைய கதைகளை பேசிப்போவதைப் போல் தோன்றும். அந்த நாயும் அவர் அதனுடன் பேசுவதெல்லாம் அதற்குப் புரிவதைப் போல தலையாட்டும். அது என் கற்பனையா அல்லது உண்மையிலேயே அது புரிந்து தலையாட்டுகிறதா எனத் தெரியவில்லை.

பார்க்கவே ஆச்சரியமான காட்சிகள் அவை.  போகப்போக அந்த நாயையும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒருமுறை அவர் வீட்டிற்கு வந்தபோது என் கையில் இருந்த ரொட்டியை நாய்க்குப் போட்டேன். மணலில் விழுந்த ரொட்டியை நாய் கவ்வப்போனபோது, அதை அவசரமாய் எடுத்து, மணலை ஊதிவிட்டு அதற்கு கொடுத்தார் நாய் வாத்தியார். பின் நாயிடம், “மண்ல விழுந்தா எடுக்கக்கூடாதுடா மணி. வயித்த வலிக்கும்னு எத்தனத் தடவச் சொல்லிருக்கேன் உன்ட?”என பாசத்துடன் கண்டித்தார். பின் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.  அன்றுதான் அந்த நாயின் பெயர் மணி எனத் தெரியவந்தது எனக்கு.
மாதம் ஒருமுறை ஓய்வூதியத்தொகை வாங்க மட்டும் டவுனுக்கு செல்வார். அப்போது மட்டுமே நாய் தனியாக சுற்றிக்கொண்டிருக்கும்.  மற்ற நாட்களில் அவரும் நாயும் நடைப்பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் வீட்டுக்குள்ளேயே தான் இருப்பார்கள். அப்படி என்னதான் செய்கிறாரென யாருக்குமே தெரியவில்லை. என்னைத் தவிர அதை அறிய யாரும் ஆவலாய் இருந்ததாயும் தெரியவில்லை.

அடுத்து சில நாட்கள் சென்று, மீண்டும் வீட்டு வாசலில் அவரை சந்திக்க நேர்ந்தது. வெளியில் நின்றுகொண்டு பல் துலக்கிக் கொண்டிருந்தேன். என்னைக் கவனித்த வாத்தியார் முகம் நிறைய புன்னகையோடு என்னை நோக்கி வந்து நலம் விசாரிக்கத் தொடங்கினார். வாயில் பிரஷ் இருந்ததால் என்னால் ‘ஹ்ம்ம்’ மட்டுமே போட முடிந்தது. பின் தன் கல்லூரி காலத்தில், ஒருமுறை வீட்டு வாசலில் நின்று பல்துலக்கியதற்காக தன் அப்பாவிடம் தான் வாங்கிய அடியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். அதென்னவோ எனக்கு அவர் என்ன பேசினாலும் அலுக்கவே அலுக்காமல் போனது. அவர் பேசும் விஷயங்களைவிட அவர் பேசும் தொனியும், அந்த தொனியில் மிதமிஞ்சிநின்ற இனம்புரியாத அன்பும் என்னை நெளியாமல் கட்டிப்போட்டன.

இப்படி அவர் அந்தக் கதையைப் பேசிக்கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளிருந்து என் மனைவி உச்சக்குரலில், “எட்டு மணி ஆச்சு… வர்றவங்க போறவங்க கிட்டல்லாம் நின்னு வெட்டியா அரட்டை அடிக்க வேண்டியது. அப்புறம் ஆஃபீசுக்கு லேட்டாயிருச்சுன்னா நான் தான் காரணம்னு என் உயிர எடுக்க வேண்டியது… இதே வேலையாப் போச்சு உங்களுக்கு” எனக் கத்தினாள். அதைக் கேட்டு நான் நெளிவதைப் பார்த்த வாத்தியார், தான் பேசுவதை சட்டென நிறுத்திவிட்டுப் புறப்பட்டார். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. அவர் நடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன். நாயுடன் ஏதோ பேசியபடியே மெதுவாக நடந்து ரொம்ப தொலைவு சென்றுவிட்டிருந்தார்.

எனக்கு தனலட்சுமியின் மேல் ஆத்திரம் பொங்கியது. என்றுமே இல்லாமல், இன்று அவள், அதுவும் வாத்தியாரிடம் பேசும்போது இப்படி நடந்துகொண்டது மிகுந்த கோபமூட்டியது எனக்கு. “எதுக்குடி கத்துன இப்ப? வாத்தியார் மூஞ்சியே தொங்கிப் போச்சு. பாவம் அவரு.” என்றேன். தனலட்சுமி, “அவர் ஒரு மாதிரியாங்க. பொண்டாட்டியும் புள்ளையும் செத்துப்போனதுல இருந்து மனசு சரியில்லாம அலையிறாராம். அவரு புள்ளை பேரு மணிங்குறதுனால, மணின்ற பேருல யாரு இருந்தாலும் வலிய வலிய போயி பேசுவாராம். நல்லா பழகிட்டா, வீட்டுக்குள்ள அவரா வந்து உக்காந்துகிட்டு கண்டதையும் பேசி உயிரை எடுப்பாராங்க... எந்திரிக்கவே மாட்டாராம்.. நம்ம வீட்டுல வேலை பாக்குறால சித்ரா, அவதான் சொன்னா. நீங்க ஆஃபீஸ் போயிருக்க நேரத்துல அந்தாளு பாட்க்கு வந்து உக்காந்துகிட்டாருன்னா நான் என்ன பண்றது? அதான் உங்களை அப்படி கத்தி உள்ள கூப்ட்டேன்” என்றாள்.  நான் பதில் எதும் பேசவில்லை. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளிக்கப்போய் விட்டேன்.

அன்றுதான் அவர் என் வீட்டிற்கு கடைசியாய் வந்தது. பின் எப்போதாவது தெருவில் பார்த்துக்கொண்டால், ஒரு புன்முறுவல் மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாய் சென்றுவிடுவார். நானே சென்று ஒருமுறை பேச முயற்சித்த போதுகூட தன் நடை வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு வேகமாய் நடந்து கடந்து சென்றுவிட்டார்.
பின் அவரிடம் பேச முயற்சிக்கும் எண்ணம் தானாகவே மறந்து போய்விட்டது. எனது வழக்காமன வாழ்க்கையில் இருந்து நாய்வாத்தியார் முற்றிலும் விலகிப்போயிருந்தார்.

சில மாதங்கள் சென்று ஒருநாள்  அலுவலகம் விட்டு வீடு வந்தபோது, தனலட்சுமி, “ஏங்க. நம்ம தெருவுல குப்பை பொறுக்குற பசங்க அட்டகாசம் தாங்க முடிலங்க. வாத்தியாரோட நாயை தலைலயே கல்லக்கொண்டி அடிச்சுட்டானுங்க. பாவம் அது. வாத்தியார் வேற இல்ல. டவுனுக்குப் போயிருந்தாரு போல. என்னாச்சுன்னே தெரில. ரொம்ப நேரம் வாத்தியாரு வீட்டு வாசல்ல படுத்திருந்துச்சு. அப்புறம் வாத்தியார் வந்து உள்ள கூட்டிட்டுப் போயிட்டாருனு நினைக்கிறேன்.” எனக் கொஞ்சம் பரிதாபத்தோடு கூறிவிட்டு டிவி பார்க்கத் தொடங்கிவிட்டாள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றியது. நாளை அவர் நடைப்பயிற்சி வரும் போது எப்படியும் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

ஆனால் அவர் அடுத்த நாள் வரவில்லை. நான்கு நாட்கள் சென்றது. வாத்தியாரும் நாயும் நான்கு நாட்களாக நடை பயிற்சி செல்லவில்லை. அநேகமாக எங்கள் தெருவில் யாருமே அதை கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.

அடுத்தநாள் தெருவெங்கும் பயங்கர துர்நாற்றம். தெருவில் உள்ள அனைவரும் வாத்தியார் வீட்டிலிருந்துதான் துர்நாற்றம் வருவதாக கூறினார்கள். “என்னனு பாப்போம் வாங்க தம்பி” என்று என்னையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். மனம் நிறைய பாரத்தோடும், திகிலோடும் அவர் வீட்டை நோக்கி அவர்களுடன் சேர்ந்து நடந்தேன்.

கும்பலாய் ஒரு ஆறு, எழு பேர் சென்று கதவைத் தட்டினோம். கதவைத் திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. எனக்கு கதவைத் தட்ட ஏனோ பயமாய் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "சார். மணி வந்திருக்கேன் சார். கொஞ்சம் கதவை திறங்களேன்" என்றேன். சிறிது நேரத்தில் வாத்தியார் வந்து கதவைத் திறந்தார். திறந்தவுடன், உயிரே போகும் அளவுக்கு துர்நாற்றம் அடித்தது. என்னைப் பார்த்தவுடன், லேசாக சிரித்தபடியே "வாங்க மணித்தம்பி" எனச் சொன்னவர், மற்ற யாரையும் கவனிக்காமல் உள்ளே வேகமாக நடந்து சென்று வரவேற்பறையில் இருந்த கட்டிலில் படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.


"மணி எங்க சார்?" என்றேன். வாயைத் திறக்காமல், சைகையிலேயே அடுப்பறையைக் காட்டிவிட்டு பின் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார். அடுப்பறைக்குள் சென்றோம். அங்கு இறந்து கிடந்த நாயை ஈக்களும், புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில், அன்று காலையில் வடிக்கப்பட்டிருந்த சுடுசோறு நாயின் தட்டில் வைக்கப்பட்டிருந்தது. அடுப்பில் காலை சோறு வடித்ததற்கான தடயங்கள் தெரிந்தன. பின் சில ஆட்களைக் கூப்பிட்டு நாயை அப்புறப்படுத்தச் சொன்னேன். சித்ராவை விட்டு வாத்தியாரின் வீட்டை கிருமி நாசினி போட்டு கழுவி விடச் சொல்லிவிட்டு அவர் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். சுவற்றில், அவர் நல்லாசிரியர் விருது வாங்கும்போது ஜனாதிபதியுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படம் தொங்கிக் கொண்டிருந்தது. வாத்தியாரிடம் எந்த அசைவும் இல்லை.  நான் கிளம்பும் போது "வர்றேன் சார். போரடிச்சா வீட்டுக்கு வாங்க சார். நான் இன்னைக்கு லீவுதான்" என சொன்னேன். "சரி மணித்தம்பி" என என்னைப் பார்க்காமலேயே சொன்னார்.


வீட்டிற்கு வந்ததில் இருந்து வாத்தியாரின் நினைவாகவே இருந்தது. வாத்தியாருக்கு ஒரு நாய் குட்டி வாங்கித் தரலாம் என நண்பனிடம் சொல்லி வைத்திருந்தேன். மூன்று நான்கு நாட்களில் வாங்கித்தருவதாய் சொல்லியிருந்தான். நாய்க்குட்டியோடு சென்று வாத்தியாரைப் பார்க்கலாம் எனக் காத்திருந்தேன்.

மூன்று நாட்கள் போனது. மீண்டும் தெரு முழுதும் பயங்கர துர்நாற்றம். போனமுறை வந்த அதே கும்பல் மீண்டும் வாத்தியார் வீட்டிலிருந்து தான் துர்நாற்றம் வருவதாகச் சொன்னார்கள். என்னையும் அழைத்தார்கள்.  என்ன நடந்திருக்கும் என என்னால் நன்றாகவே உணர முடிந்தது. உடலெங்கும் குளிர் பரவியது எனக்கு. இதயம் பயங்கர வேகத்தில் அடித்தது. என்னைக் கூப்பிட்டவர்களிடம் பதில் ஏதும் சொல்லாமல் வீட்டின் உள்சென்று அமர்ந்தேன். குரல் தொண்டையில் இருந்து இதயத்திற்குக் கீழே இறங்கியிருந்தது. பின், வீட்டின் உள்ளிருந்தபடியே சக்தியையெல்லாம் திரட்டி சத்தமாக “எனக்கு எதும் நாத்தம் வரல. நீங்களே போயிப் பாருங்க ” எனச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன்.  நல்லாசிரியர் விருது புகைப்படத்தில் இருந்த, வாத்தியாரின் கர்வமான, பெருமிதத்துடன் கூடிய சிரித்த முகம் மனதில் வந்து மறைந்தது.

10 comments:

முத்துசிவா said...

machi... superrr....

MAHI said...

நண்பா ,எனக்கும் ஒரு நாய் வாத்தியாரை தெரியும் ,ஆனா அவர் நாயெல்லாம் வளர்கல,நாய் மாதிரியே எப்பபாத்தாலும் குழச்சிக்கிட்டே இருப்பாரு ....[:D]

Anonymous said...

மிக அருமை. சுஜாதாவின் கதையை படித்தது போன்ற உணர்வு.

rathipriya said...

excellent article....very tought provoking

ச.முரளி மனோகர் said...

நல்ல கதை அண்ணே... முடித்ததில் மட்டும் எழுதி முடிக்கும் அவசரம் லேசாகத் தெரிகிறது. கதை சொல்லி மற்றும் அவரது மனைவி கதாப்பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம். மற்றபடி வாத்தியார் முழுமையாக எழுதப்பட்டிருக்கிறார். குறும்படமாக்கத் தகுதியான கதைதான். சிக்கல் என்னவென்றால் நாய்தான். பழக்க வேண்டும். வேறென்ன, திரைக்கதையாக்கத்தில் காட்சிகளின் விவரங்கள் கூடுதலாகத் தேவை. எனக்குத் தெரிந்தவரை அவ்வளவுதான் அண்ணே... நன்றி!

Ilanchezhian said...

மிக அருமை...! maniratnam padam paatha mathiri ye irukku. SEMA..

சமுத்ரா said...

மிக அருமை.

Mounam pesum Mozhigal! said...

fantastic!

Mounam pesum Mozhigal! said...

Fantastic!!!

அருண் சரவணன் said...

அருமை இளா!!!

Related Posts Plugin for WordPress, Blogger...