Thursday, October 29, 2009

பயம்


மணி மதியம் 3.15
அழைப்பு வந்தபோது திருமண வீட்டில் எல்லாரும் அமர்ந்து விட்ட கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். “அப்பா சரவணன் தூக்கு போட்டுகிட்டான் பா” என என் மகன் முகிலன் சொன்னதில் இருந்து எனக்கு கை கால் ஓடவில்லை. “அங்கேயே இரு பத்து நிமிசத்துல வர்றேன்” என்று கூறிவிட்டு, சரவணன் வீட்டில் தகவல் கொடுத்துவிட்டு, காரில் பறந்தேன்.

சரவணன். முகிலனின் உயிர் நண்பன். இப்போது இருவரும் இருபதை கடந்திருந்தாலும், எனக்கு சரவணனை சின்ன வயதிலிருந்தே தெரியும். “அங்கிள்” என சரவணன் அழைக்கும் ஒவ்வொரு முறையும் பாசத்தையும், பயத்தையும், மரியாதையையும் ஒருசேர உணர்ந்திருக்கிறேன். அவன் இறப்பை, அதுவும் இருபத்தொரு வயதில் நிகழ்ந்த இப்படியொரு அகால சம்பவத்தை சரவணனின் பெற்றோரை விட என் மகன் முகிலன் எப்படி தாங்கப் போகிறான் என்பதில் மிகுந்த குழப்பம் இருந்தது எனக்கு. குழப்பம் என்பதை விட சரியான வார்த்தை பயம். ஆம். பயமாகதான் இருந்தது. எனக்கு இந்த நிமிடத்தில் சரவணனின் இழப்பை விட என் மகனின் பாதுகாப்பும், மனநிலையும் மிக முக்கியமாகப்படுகிறது. நான் ஆக்சிலரேட்டரில் கால்களை மிகக் கடினமாக அழுத்துவதற்கு காரணம் இதுதான். சென்னையில் இருவரும் தனி அறையில், வேலை நிமித்தமாக தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தது முகிலன் தான். சரவணனனை சென்னைக்கு அழைத்து தன் அலுவலகத்தில் வேலை வாங்கித் தந்து தன்னுடனே தங்கவும் வைத்துக்கொண்டான் முகிலன். உயிர் நண்பர்கள் இருவரும் ஒன்றாய் இருப்பது எனக்கு மிகுந்த நிம்மதியை தந்தது, ஒன்பது நிமிடங்கள் முன்பு வரை. சரவணனின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்? காதல் தோல்வியாக இருக்குமோ? வீட்டில் ஏதேனும் பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் முகிலனிடம் சொல்லியிருப்பானே? என்னவாக இருக்கும்? ஒருவேளை முகிலனுக்கும் சரவணனுக்கும் எதுவும் பிரச்சினையா? இருக்காது. அப்படி எதுவும் இருந்தால், போலீசு விசாரணை அது இதுவென என் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படுமே! இதோ வந்துவிட்டது முகிலன் தங்கியிருந்த அறை.


மதியம் மணி 3.27
முகிலன் ஒரு ஓரமாக நின்று நிலத்தை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான். என்னைப் பார்த்தவுடன் என்னை நோக்கி வரமால் இன்னும் அப்படியே நிற்கிறான். எனக்கு பயமாக இருக்கிறது. இவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்று. இருப்பினும் அறைக்குள் ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருக்கும் போது மகனை கவனிப்பது சரியாய் இருக்காது என நினைத்துக்கொண்டே, “முகிலா என்னாச்சுடா?” என்றேன். முகிலன் பேசவில்லை.அண்டை வீட்டாரிடம் விசாரித்தேன். “இரண்டரை மணிலேர்ந்து முகிலன் கதவை தட்டுனாரு சார். உள்ள இருந்து பதிலே வரல. உடைக்க முயற்சி பண்ணாரு. அப்புறமா பக்கத்துல இருந்த வக்கீல் ஒருத்தரு “உடைக்காதப்பா. உள்ள எதாச்சும் ஒன்னுகிடக்க ஒன்னுன்னா உனக்கு பிரச்சினை”னு சொன்னாரு சார். அதுக்கப்புறம் முகிலன் உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டாரு” என்று சொன்னார் முகிலன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருத்தர். அவர் முகிலன் மீது அக்கறையாய் இருந்தது எனக்கு ஏனோ நிம்மதியை தந்தது.


மதியம் மணி 3.45
அடுத்ததாய் என்ன செய்யலாம் என யோசிப்பதற்குள் சரவணனின் உறவினர்கள் அதோ வந்துவிட்டார்கள். ஜன்னலின் ஊடே சரவணன் தொங்குவதை எட்டிப்பார்த்துவிட்டு அவன் அப்பா கதறினார். “முகிலா உயிர் இருக்க மாதிரி இருக்குடா. கதவை உடைப்போம். உதவி பண்ணுடா”. முகிலன் பேசவில்லை. முகிலன் அதிர்ச்சியுற்றவனாய் என்னைப் பார்த்தான். நான் சுதாரித்துக்கொண்டு “கொஞ்சம் இருங்க. உயிர் இல்ல. முகிலன் பார்த்து ஒரு மணி நேரம் ஆகப்போகுது. உயிர் இருக்க வாய்ப்பே இல்ல. போலீசுக்கு சொல்லியாச்சு. அவங்க வந்து கதவை திறக்கட்டும்.” என்றேன். நான் சொல்வதைக் கேளாது தனியாளாக கதவை திறக்க (உடைக்க) முற்பட்டார் சரவணனின் அப்பா. அவரின் செயலில் பதற்றமும், பாசமும், பரிதவிப்பும் தெரிந்தது. சரவணன் உயிரோடு வந்துவிட மாட்டானா என நான் உள்ளுக்குள் ஏங்கினாலும், முகிலனின் மீதான அக்கறையில், போலீசு வரும் வரை கதவு உடையக் கூடாது ஆண்டவா என வேண்டிக்கொண்டேன். கதவு உடையவில்லை. முகிலன் திடீரென கதவை நோக்கி முன்னேறினான். “முகிலா போகாத. நில்லு” என்றேன். நின்றான். முகிலன் எதுவும் பேசவில்லை.


மாலை மணி 4.07
போலீசார் வந்துவிட்டனர். சரவணனின் அப்பா அவ்வளவு முயற்சி செய்தும் கதவு உடையாதது எனக்கு நிம்மதியாய் இருந்தது. முகிலனை அறைக்குள் அழைத்தனர். முகிலன் தலையை ஆட்டி மறுத்துவிட்டான். முகிலன் பேசவில்லை. பின் நான் அறைக்குள் சென்றேன். மின்விசிறியில் தொங்கிய சரவணனின் உடலை இரண்டு போலீசார் கீழே இறக்கினார்கள். அவன் உடலில் கைவைத்துப் பார்த்த போலீசார், “காலேல ஒரு பதினொரு பண்ணிரெண்டு மணிக்கு தொங்கிருக்கான் சார்” என ஆய்வாளரிடம் கூறினர். பின் வழக்கமான போலீசு விசாரணைகள் முடிந்து முகிலனும் நானும் என் நண்பன் அரவிந்தனின் வீட்டிற்கு புறப்பட்டோம்.


இரவு மணி 7.54
நானும் முகிலனும் அரை மணி நேரம் காரில் பயணித்தாலும் முகிலன் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே பதில் கூறிக்கொண்டிருந்தான். மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனை தொந்தரவு செய்ய வேண்டாமென நானும் விட்டுவிட்டேன். அரவிந்தன் வீடு வந்துவிட்டது.


அதிகாலை மணி 2.00
தூக்கம் வரமறுத்தது. கண் மூடினால் சரவணன் வந்தான். சரவணன் சிரிப்பதைப் போலவே கண்களுக்குள் தெரிந்தது. தண்ணீர் குடிக்கலாம் என எழுந்தேன். முகிலனின் அறையை கடந்து செல்லும் போது அதிர்ந்தேன். முகிலன் தூங்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தான். “முகிலா தூங்கலையாடா? தூங்கு”என்றேன். முகிலன் பேசினான் “அங்கிள். முகிலன் ஏன் அங்கிள் தூக்கு போட்டுகிட்டான்?”

3 comments:

eLKay said...

“அப்பா சரவணன் தூக்கு போட்டுகிட்டான் பா” என ///

“அங்கிள். முகிலன் ஏன் அங்கிள் தூக்கு போட்டுகிட்டான்?”

Anonymous said...

என்ன சொல்ல வர்றீங்க எல்கே??!!!! தெளிவா சொன்னீங்கன்னா விளக்கமளிக்கலாம்!

eLKay said...

என்ன சொல்ல வர்றீங்க எல்கே??!!!! தெளிவா சொன்னீங்கன்னா விளக்கமளிக்கலாம்!//

பயம் > நண்பனின் மரணம் , அவனின் பயம் அவனை எப்படி மாற்றி இருக்கிறது...என்பதைத்தான் உங்க பதிவையே சுட்டி காட்டி இருக்கிறேன்...
பயத்தில் இருந்த ஆரம்பம் முடிவில் அவனை எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது.
பயம் என்னை தொற்றிக்கொண்டது ..!!..

Related Posts Plugin for WordPress, Blogger...