Monday, October 5, 2009

காதலியின் பிணம்!
இருள், மிகவும் மெதுவாய் வெளிச்சத்தைக் கிழித்து அறையை கவ்விக்கொண்டிருந்தது. எதிர்ப்பேதும் காட்டாமல் நானும் வெளிச்சமும் மரணத்தின் தங்கை, மயக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டிருந்தோம். கவனிக்கப்படாத தொண்டை, யாரோ அதனுள் கள்ளிச் செடியை பயிரிட்டதைப் போல எரிந்துகொண்டிருந்தது. உடலில் இன்னும் தெம்பு ஒட்டிக்கொண்டிருந்ததை ஓரமாய் உணர்ந்திருந்தேன். மனதில் அமானுஷ்யமாய் ஏதேதோ தோணிற்று. எழுந்தேன். காலுக்கடியில், இறந்து போன அவளின் சீப்பு தட்டுப்பட்டது. அதில் மெலிதான, விஷமில்லா கரும்பாம்புகள் போல அவள் முடிக்கற்றைகள் சுற்றிக் கிடந்தன. கையில் இருகப் பிடித்து எடுத்தேன். சீப்புக் காம்புகள் கையை அழுத்த அழுத்த இன்னும் இருகிப் பிடித்தேன். வாயில் வைத்துக் கடித்தேன். முடிகள் நாக்கில் ஒட்டியது. அவளை அழைத்தேன். அவள் பெயரை ஒரு இருநூறு முறை கத்தினேன். வரமாட்டாள் என உறுதியாய்த் தெரியத் தெரிய இன்னும் குரலெடுத்துக் கத்தினேன். தொண்டை ரத்தம் என் எச்சிலில் வழிந்தது. இன்னும் இன்னும் கத்தினேன். என் உடம்பு சில்லிட்டது. அவள் இறந்து, அவள் உடல் சில நிமிடங்களில் இப்படித்தான் இருந்தது. இல்லை, இதைவிடப் பலமடங்கு அது சில்லென இருந்தது. எதற்காக செத்துப் போனாள்? செத்துதான் போனாளா? அல்லது கோபமாய் பேசாமல் இருக்கிறாளா? அதற்காக மூச்சைக் கூடவா விடாமல் இருப்பாள்? என்னைச் சுற்றி பரபரப்பு தொற்றிற்று. நான் அவளின் மூடா இமைகளையும் உயிரில்லா கண்களையும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மொழியும், இடமும், பெயரும், எதுவும் மறந்துபோயிருந்தது. அவளை என் கைகளில் இருந்து எவரோ பிடுங்க எத்தனித்தபோது இன்னும் இருகப் பிடித்தேன் அவளை. அப்போதுதான் கவனித்தேன். அவள் கைகள் என் விரல்களை இருகப் பற்றியிருந்தது அதை எடுக்காமல் அப்படியே அவளைத் தூக்கிப் போனோரின் பின்னே போய்க்கொண்டிருந்தேன். அவள் கண்களும், அதற்குக் கீழே அவள் தலையும், அதற்குக் கீழே அவளின் முடியும் என்னை வெறித்தபடியே, ஆடியபடி முன் போய்க்கொண்டிருந்தன. உதடுகளில் முத்தமிட விரட்டியபோதெல்லாம் உதடுகள் தெரியாதபடி கடித்துக் கொள்வாள். இப்போது அவள் வாய் திறந்தபடி இருந்தது. வாயின் ஓரம் நான் எத்தனையோ முறை சுவைத்த, முத்தமிட்ட அவளின் எச்சில் வழிந்துகொண்டிருந்தது.

யாருமே அருகில் இல்லாமல், நான் மட்டும், இறந்த அவளின் உடலை அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோணிற்று. அதைச் சொல்லிக் கத்தினேன். தூக்க மருந்தை என் நரம்புகளில் ஏற்றினர். அப்படியே சென்று அவள் அருகில் படுத்துக் கொண்டேன். எவன் எவனோ என்னை இழுத்தும் கேளாது அவளருகில் படுத்திருந்தேன். கண்களை இமைக்காததால் நீர் வடிந்துகொண்டே இருந்தது. அவள் என்னைப் பார்க்கவேயில்லை. தூக்கத்தில் என் பெயர் சொல்லி கையைப் பிடிப்பாள். எப்படியும் பிடித்துவிடுவாள் என வெகுநேரம் காத்திருந்தேன். என்னைப் பிடிக்காதவள் போலவே படுத்திருந்தாள். அவளை எரிக்கச் சொல்லி எவனோ பேசியது காதில் விழுந்தது. நான் அணுஅணுவாய் ரசித்த தேகம். வெறிபிடித்தவனை போல, சொன்னவனை அடித்துக் கீழே தள்ளினேன். அதையே, நான் புதைக்கச் சொல்வதாய் நினைத்து புதைப்பதற்கு தயாராயிற்று எல்லாமும்.

குளிர்சாதனப் பிணப்பெட்டியில் அரவமற்று படுத்திருந்த அவளைப் பார்க்க பலபேர் வந்திருந்தனர். ரோஜா வாசனை குடலைப் புரட்டியது. கடைசியாய் இந்த மணத்தை இரண்டு மாதம் முன்பு எங்கள் முதலிரவில் பார்த்திருக்கிறேன். இடுகாட்டிற்கு வரமறுத்துவிட்டேன். ஒரு பெரும் கும்பல் அவளைச் சுமந்து சென்றது. எங்கள் திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து அவளின் கைகளில் சூடு போட்ட அவள் அண்ணன் முன்னே சென்றுகொண்டிருந்தான். "படுபாவி ரெண்டே மாசத்துல பிணமாக்கி கொடுத்துட்டானே" என ஏதேதோ சொன்னான். எனக்கு காதில் யாரோ இடைவெளியின்றி எச்சில் துப்புவது போல் இருந்தது. எங்கள் அறையில் சென்று படுத்துவிட்டேன். அவளின் சீப்பு தட்டுப்பட்டது. உடல் சில்லிட்டது.

இரவுபோலத்தான் இருக்கிறது. தூக்கிச்சென்று என்ன செய்து தொலைத்தனர் எனத் தெரியவில்லை. எத்தனை நேரம் படுத்திருந்தேன் எனத் தெரியவில்லை. அவள் வந்துவிடுவாள் போலவே இருந்தது. பொய்தான் எனினும் அதை நம்புவது எனக்கு மிகவும் பிடித்தமாயும், அது ஒன்றே இப்போது என்னை சீவிக்க வைக்கும் விஷயமாகவும் உள்ளுணர்வு சொன்னதால் அதை நம்பிக்கொண்டிருந்தேன். 'நாதியற்ற' என்ற வார்த்தைக்கான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. இழவு வீட்டில் ஒரே நாளில் அத்துணை சொந்தமும் காலியாகி தனிமரமாய் நிற்கும், பறிகொடுத்தவன் அநேகமாய் உலகில் நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

இடுகாட்டுக்குச் சென்று அவளைக் கூட்டிவரலாம் எனத் தோணிற்று. ஒருவேளை இந்த சனியன்கள் அவளை உயிருடன் புதைத்திருந்தால்.....?? வேகமாய் நடந்தேன். மகிழுந்து என காருக்கு தமிழ் பெயர் சூட்டியவனை கெட்டவார்த்தையில் திட்டியபடி ஓட்டினேன், வேகமாய். இடுகாடு. சிறு மேடு தெரிந்தது. அதன் மேல் அவளைப் போர்த்தியிருந்த துணி கிடத்தப்பட்டிருந்தது. எவ்வளோ சொல்லியும் கேளாது எங்கள் திருமணப் புடவையைப் போர்த்தாமல் வேறு ஏதையோ போர்த்தியிருக்கிறார்கள் புதைத்துப் போனவர்கள். தோண்டினேன். வெறும் கையை வைத்தே தோண்டினேன். நகங்களில் ரத்தம் வர வர எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவேளை நான் இவ்வளவு கஷ்டப்பட்டதைப் பார்த்து அவள் இரக்கப்பட்டு உயிரோடு வந்துவிட்டாள்.....??!!!! தோண்டினேன்....

மணல் மணலாய் அவள் தெரிந்தாள். எடை கூடியிருந்தாள். பால் குடித்த மயக்கத்தில் அசந்து தூங்கும் குழந்தையின் மேல் ஒட்டியிருக்கும் பால் சொட்டுகள் போலத்தான் அவள் மேல் ஒட்டியிருந்த மணற்துகள்கள் தெரிந்தன. அவளை எழுப்ப மனம் வரவில்லை. பாதி தூக்கத்தில் எழுப்பினால் "தலை வலிக்குதுடா" என்பாள். பின் என்னை தூங்கவிடமாட்டாள். அப்படியே அவளைக் நான் கொண்டுவந்திருந்த திருமணப் புடவையின் மேல் கிடத்தினேன். வீட்டிற்கு செல்ல பயமாக இருந்தது. மீண்டும் புதைக்கும் கூட்டம் வந்து இவளைத் தூக்கிச் சென்றுவிட்டால்..?

அவள் தூங்கிக்கொண்டிருந்த படுக்கையை சற்று அகலமாக்கினேன். அவளை வழக்கம் போல் இடதுபக்கம் படுக்க வைத்துவிட்டு, நான் வலப்பக்கம் படுத்துக்கொண்டேன். எங்களுக்குக் கீழே அவளின் திருமணப்புடவை இதமாக இருந்தது. கைகளை மேலே நீட்டி மணலை உள்தள்ளினேன். என் முகத்தை மூடியது. பின் என் முழங்கையை. கையையும் உள்ளிழுத்தேன். சுவாசத்தில் மணல் வாடை. பின் மணல் துகள். பின் மணல். நுரையீரல் வலித்தது. காலை அவள் எழுப்பும்போது திட்டவேண்டும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனேன்......

7 comments:

eLKay.... said...

எனக்கு மொழியும், இடமும், பெயரும், எதுவும் மறந்துபோயிருந்தது. ///

NENJAI PISAIYA VAIKKUM NISAMANA UNARVU....

ரோஜா வாசனை குடலைப் புரட்டியது. ///
evvalavu unmai...

ITHU PONDRA UNARVUKALAI ABSURD IL MATTUMEEEEEE PANNA MUDIYUM ENBATHU POL UNARA THONDRUKIRATHU....

ITHAI EZHUTHA MUYATCHI SEITHA ASHOK AVARKALUKKU PARATTUKAL....

ITHU PONDRA UNMAIYANA ANBIN AZHATHUKKU ITHU PONDRA VALI NITCHAYAM UNDU ENBATHAI UNARUM POTHU ROMBAAAAAAAAAAAAAA PAYAM ATKOLKIRATHU....

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

சொல்லணுமேன்னு சொல்லல... நல்லா வந்துருக்கு...

திகில் கதைன்னு ஆரம்பத்துல நெனைச்சிட்டேன்... நல்லா இருந்தது முடிவு!

கிருபாகரன் said...

மிகவும் அருமை..
உண்மையான காதலின் வலி, அழுகை, விரக்தி..அனைத்தும் இணைந்த ஒன்று..
அழகான வார்த்தைகள்..!!!

GERSHOM said...

கத ரொம்ப பிடிச்சிருந்தது...நெஞ்ச நக்கீட்டீங்க போங்க!

Anonymous said...

very touching pa :(

jegan said...

Sensitive! But he shall had lived his life thinking of her until his natural death, Thats real lovable part he missed it,

அருண் சரவணன் said...

அற்புதமா வந்திருக்கு இளா!

Related Posts Plugin for WordPress, Blogger...