Thursday, October 29, 2009

அதிகப்பிரசங்கி பெண்கள்!!


சமீபகாலமா ஒரு விஷயம் சில பெண்(??!!) (அதிகப்பிரசங்கிகள்) எழுத்தாளர்களிடம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதாவது ஆண்கள் மாதிரி ஜீன்ஸ் டி.ஷர்ட் அணிந்துகொண்டு, ஆண்களை திட்டிக்கொண்டு, ஆபாசக் கவிதைகள் எழுதிக்கொண்டு திரிவது என்பதுதான் அது. கவிதை தொகுப்புகளுக்கு பெண் அந்தரங்க உறுப்புகளின் பெயரை வைத்துவிட்டு, தாங்கள் ஏதோ ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டிருந்த பெண் இனத்திற்கு விடுதலை வாங்கிக்கொடுத்துவிட்ட பெண் பெரியார்கள் போல் பேசிக்கொண்டு அலையும் கூட்டத்தைப் பற்றியே இந்தக் கட்டுரை! மேற்கண்ட விசயங்களில் கைதேர்ந்த பெண் எழுத்தாளினிகள் பலர் உண்டு. பெயர்கள் உங்களுக்கே தெரியும்! இந்தக் கட்டுரை அலசப் போவது அதைத்தான்!!!!

பெண்ணின் அந்தரங்கங்களை, அசராமல், அலுக்காமல் ஆலோசித்து சிலாகிப்பதுதான் பெண்ணியமா, பெரியாரியமா?
பெரியாரியத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பெரியாரை படித்து மட்டும் வைத்து, புரியாமல் விட்டவர்கள், ஆபாசமாய் பேசுவதற்கு பெரியாரியம் ஒரு உரிமைச்சீட்டு என நினைத்துள்ளனர் போலும். பெண்களைப் பற்றி பெரியார் என்ன சொன்னார், என்பதைவிட, எப்போது சொன்னார்? எதனால் சொன்னார்? என்பவைகள் மிக முக்கியம்.

என்ன சொன்னார்? பெண்களை தலைமுடியை ஒட்ட வெட்டச்சொன்னார், கர்ப்பப்பைகளை அறுத்தெறியுங்கள் என்றார். ஆண்களைப் போல் உடையணியுங்கள் என்றார்.
சரி. எப்போது சொன்னார்? பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாகவும், அழகுப் பதுமைகளாகவும், போகப் பொருள்களாக மட்டுமே சமூகத்தால் பார்க்கப்பட்ட காலத்தில் சொன்னார்.
ஏன் சொன்னார்? இதைப் பார்க்கும் முன், உங்கள் வீட்டில், அலுவலகங்களில், தெருக்களில் என்று அனைத்து இடங்களிலுமே பெண்கள் முடியை ஒட்டவெட்டி, அழகு சாதனங்கள் அணியாமல், ஆண்கள் உடையணிந்து, கருப்பை அன்றி நடமாடுவதாக சிறு கற்பனை செய்து பாருங்கள். எப்படியிருக்கிறது? உங்கள் சுரப்பிகள் வழக்கமாய் சுரக்கும் காதல் ஹார்மோனான 'oxytocin' சுரக்கவே பயப்படுமே!!!! இதற்காகத்தான் பெரியார் அப்படிச் சொன்னார். அவர் சொன்னபடியெல்லாம் நடந்து தொலைத்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஆண்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்ற எண்ணத்திலேதான் அவர் அப்படியெல்லாம் சொன்னாரெயொழிய அவர் அதை 100% நடைமுறைபடுத்தும் பொருட்டு, பொருட்படுத்தி சொல்லவில்லை.
ஆனால் நம்மூரில் பெரியாரியம் பேசும் பெண்களில் 90% பேர், "எனக்கு ................ வருகிறது" என பொதுக்கூட்டத்தில் சொல்வதும், அந்தரங்க உறுப்புக்களின் பெயரில் கவிதைத் தொகுப்புகள் எழுதுவதும், மற்றவர்களையும் தூண்டிவிடுவதுமாகத்தான் திரிகிறார்கள். என்றாவது பெண்களை கவர்ச்சி நடனம் ஆடவிட்டு கமர்ஷியல் சினிமா எடுக்கும் இயக்குனர்களை திட்டியிருக்கிறார்களா? பெண்களை போகப் பொருள் என உலகுக்கு எடுத்துக்காட்டும் 'சிறந்த' உவமைகளான நடிகைகளை கண்டித்திருக்கிறார்களா? 'Low hip' ஜீனில் உள்ளாடையின் வண்ணத்தை விளம்பரம் செய்துப் போகும் பெண்மணிகளை திட்டியிருக்குறார்களா? இல்லையே. ஏனெனில் இவையெல்லாம் பரபரப்பான விளம்பரம் தரும் செயல்கள் அல்ல!!

என்னிடம் ஆர்குட் விவாதத்தில் ஒரு அறிவுஜீவி பெண் ஒன்று, "அண்ணனிடம் நாப்கின் வாங்கச்சொல்ல எங்களால் முடியுமா? எங்களுக்கு அந்த சுதந்திரம் உள்ளதா?" என்று அறிபூர்வமான ஒரு கேள்வி ஒன்றை கேட்டார். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், பெண் விடுதலை என்பது ஆண்களை நாப்கின் வாங்கிவரச் சொல்வதல்ல, பெண்களே தங்களுக்காக போய் வெட்கப்படாமல் நாப்கின் வாங்குவதுதான். (தன் பெண்பிள்ளைக்கும், மனைவிக்கும் நாப்கின் வாங்கித்தரும் எத்தனையோ அப்பாக்களை கடைகளில் நான் பார்த்திருக்கிறேன்.)

இங்கு பிரச்சினை என்னவென்றால், 'எதற்காக அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசவேண்டும்?', என்பதுதான்! பெண்கள் கூடி உங்கள் விஷயங்களைப் பேசுங்கள். என்ன பிரச்சினை, எதனால் இப்படி, ஏன் அப்படியென ஆலோசியுங்கள். பொது இடங்களில் மேடை போட்டு கெட்ட வார்த்தை பேசுவது நாகரீகமே அல்ல. ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் மேற்கத்தியர்கள் கூட "MEN ARE FROM MARS, WOMEN ARE FROM VENUS" என்ற கருத்தை ஏற்று கொண்டார்கள். அதாவது ஒரு ஆணுக்கும்- பெண்ணுக்கும் மனநிலையில் அவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவாம். அந்த வித்தியாசங்கள் தான் ஆணையும், பெண்ணையும் இத்தனை லட்ச வருஷமும் கட்டிப் போட்டுக் காதலிக்க வைத்திருக்கிறதாம். ஆனால் பெண்ணியம் பேசுகிறேன், பெரியாரியம் பேசுகிறேன் பேர்வழியென பெண்கள் எல்லோரையும் ஆண்கள் போல் மாற்றிவிட்டால் ஆண்-பெண் வேறுபாடுக்கும், காதலுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே?!!

ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பு சம்பந்தமான பிரசினைகளை இன்னொரு பெண் முன் சொல்வது எப்படி அவனது மனைவிக்கு அசிங்கமாக, அறுவெறுப்பாக இருக்குமோ, அதுபோல்தான் பெண்கள் இப்படி பொது இடத்தில் தங்கள் உறுப்புக்களைப் பற்றி பேசுவதும் இருக்கும். அந்தரங்கங்களே தேவையில்லையென்றால் உடைகள் எதற்கு?

நான் பெண்ணடிமைத்தனத்தை மெச்சவில்லை, அதை எதிர்க்க சில பெண் புரட்சியாள காமெடியாளர்கள் எடுக்கும் ஆயுதம் மிகவும் கேவலமானது. பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல, பெண்கள் அடிமைகளாய் இராது 'பெண்'களாகவே வாழ்தல் என்பதுதான்.
சில விஷயங்கள் பொது இடத்துக்கு விவாதப் பொருளாக வராமலிருப்பதுதான், ஆணுக்கு பெண் மீது உள்ள ஈர்ப்பையும், பெண்ணுக்கு ஆண் மீது உள்ள ஈர்ப்பையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

அதனால் விளம்பரத்துக்காக மேடைகளில் ஆபசமாய் பேசியும், கவிதைகளில் கண்டது கழியதை எழுதியும், கவிதை தொகுப்புகளுக்கு அசிங்கமாக பெயர் வைத்தும் அலையும் பெண்களை "பொது இடத்தில் ஆபசமாய் நடப்பதற்காக அல்லது நடந்ததற்காக ஏன் கைது செய்ய கூடாது? இதெல்லாம் கேட்கமாட்டோம்! நாங்கள் இப்படித்தான் செய்வொம் என அலைபவர்கள் அலையுங்கள். பெண்கள் எல்லோரும் தெருவில் வந்து கெட்ட வார்த்தை பேசுங்கள். ஜாலியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கும், அப்படியே இலவச இணைப்பாக பெண் சுதந்திரமும் கிடைக்கும்!!!!! யாராச்சும் திட்டுறதுன்னா கமெண்ட்ல திட்டுங்க!! நான் கிளம்புறேன்பா!

பயம்


மணி மதியம் 3.15
அழைப்பு வந்தபோது திருமண வீட்டில் எல்லாரும் அமர்ந்து விட்ட கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். “அப்பா சரவணன் தூக்கு போட்டுகிட்டான் பா” என என் மகன் முகிலன் சொன்னதில் இருந்து எனக்கு கை கால் ஓடவில்லை. “அங்கேயே இரு பத்து நிமிசத்துல வர்றேன்” என்று கூறிவிட்டு, சரவணன் வீட்டில் தகவல் கொடுத்துவிட்டு, காரில் பறந்தேன்.

சரவணன். முகிலனின் உயிர் நண்பன். இப்போது இருவரும் இருபதை கடந்திருந்தாலும், எனக்கு சரவணனை சின்ன வயதிலிருந்தே தெரியும். “அங்கிள்” என சரவணன் அழைக்கும் ஒவ்வொரு முறையும் பாசத்தையும், பயத்தையும், மரியாதையையும் ஒருசேர உணர்ந்திருக்கிறேன். அவன் இறப்பை, அதுவும் இருபத்தொரு வயதில் நிகழ்ந்த இப்படியொரு அகால சம்பவத்தை சரவணனின் பெற்றோரை விட என் மகன் முகிலன் எப்படி தாங்கப் போகிறான் என்பதில் மிகுந்த குழப்பம் இருந்தது எனக்கு. குழப்பம் என்பதை விட சரியான வார்த்தை பயம். ஆம். பயமாகதான் இருந்தது. எனக்கு இந்த நிமிடத்தில் சரவணனின் இழப்பை விட என் மகனின் பாதுகாப்பும், மனநிலையும் மிக முக்கியமாகப்படுகிறது. நான் ஆக்சிலரேட்டரில் கால்களை மிகக் கடினமாக அழுத்துவதற்கு காரணம் இதுதான். சென்னையில் இருவரும் தனி அறையில், வேலை நிமித்தமாக தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தது முகிலன் தான். சரவணனனை சென்னைக்கு அழைத்து தன் அலுவலகத்தில் வேலை வாங்கித் தந்து தன்னுடனே தங்கவும் வைத்துக்கொண்டான் முகிலன். உயிர் நண்பர்கள் இருவரும் ஒன்றாய் இருப்பது எனக்கு மிகுந்த நிம்மதியை தந்தது, ஒன்பது நிமிடங்கள் முன்பு வரை. சரவணனின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்? காதல் தோல்வியாக இருக்குமோ? வீட்டில் ஏதேனும் பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் முகிலனிடம் சொல்லியிருப்பானே? என்னவாக இருக்கும்? ஒருவேளை முகிலனுக்கும் சரவணனுக்கும் எதுவும் பிரச்சினையா? இருக்காது. அப்படி எதுவும் இருந்தால், போலீசு விசாரணை அது இதுவென என் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படுமே! இதோ வந்துவிட்டது முகிலன் தங்கியிருந்த அறை.


மதியம் மணி 3.27
முகிலன் ஒரு ஓரமாக நின்று நிலத்தை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான். என்னைப் பார்த்தவுடன் என்னை நோக்கி வரமால் இன்னும் அப்படியே நிற்கிறான். எனக்கு பயமாக இருக்கிறது. இவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்று. இருப்பினும் அறைக்குள் ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருக்கும் போது மகனை கவனிப்பது சரியாய் இருக்காது என நினைத்துக்கொண்டே, “முகிலா என்னாச்சுடா?” என்றேன். முகிலன் பேசவில்லை.அண்டை வீட்டாரிடம் விசாரித்தேன். “இரண்டரை மணிலேர்ந்து முகிலன் கதவை தட்டுனாரு சார். உள்ள இருந்து பதிலே வரல. உடைக்க முயற்சி பண்ணாரு. அப்புறமா பக்கத்துல இருந்த வக்கீல் ஒருத்தரு “உடைக்காதப்பா. உள்ள எதாச்சும் ஒன்னுகிடக்க ஒன்னுன்னா உனக்கு பிரச்சினை”னு சொன்னாரு சார். அதுக்கப்புறம் முகிலன் உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டாரு” என்று சொன்னார் முகிலன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருத்தர். அவர் முகிலன் மீது அக்கறையாய் இருந்தது எனக்கு ஏனோ நிம்மதியை தந்தது.


மதியம் மணி 3.45
அடுத்ததாய் என்ன செய்யலாம் என யோசிப்பதற்குள் சரவணனின் உறவினர்கள் அதோ வந்துவிட்டார்கள். ஜன்னலின் ஊடே சரவணன் தொங்குவதை எட்டிப்பார்த்துவிட்டு அவன் அப்பா கதறினார். “முகிலா உயிர் இருக்க மாதிரி இருக்குடா. கதவை உடைப்போம். உதவி பண்ணுடா”. முகிலன் பேசவில்லை. முகிலன் அதிர்ச்சியுற்றவனாய் என்னைப் பார்த்தான். நான் சுதாரித்துக்கொண்டு “கொஞ்சம் இருங்க. உயிர் இல்ல. முகிலன் பார்த்து ஒரு மணி நேரம் ஆகப்போகுது. உயிர் இருக்க வாய்ப்பே இல்ல. போலீசுக்கு சொல்லியாச்சு. அவங்க வந்து கதவை திறக்கட்டும்.” என்றேன். நான் சொல்வதைக் கேளாது தனியாளாக கதவை திறக்க (உடைக்க) முற்பட்டார் சரவணனின் அப்பா. அவரின் செயலில் பதற்றமும், பாசமும், பரிதவிப்பும் தெரிந்தது. சரவணன் உயிரோடு வந்துவிட மாட்டானா என நான் உள்ளுக்குள் ஏங்கினாலும், முகிலனின் மீதான அக்கறையில், போலீசு வரும் வரை கதவு உடையக் கூடாது ஆண்டவா என வேண்டிக்கொண்டேன். கதவு உடையவில்லை. முகிலன் திடீரென கதவை நோக்கி முன்னேறினான். “முகிலா போகாத. நில்லு” என்றேன். நின்றான். முகிலன் எதுவும் பேசவில்லை.


மாலை மணி 4.07
போலீசார் வந்துவிட்டனர். சரவணனின் அப்பா அவ்வளவு முயற்சி செய்தும் கதவு உடையாதது எனக்கு நிம்மதியாய் இருந்தது. முகிலனை அறைக்குள் அழைத்தனர். முகிலன் தலையை ஆட்டி மறுத்துவிட்டான். முகிலன் பேசவில்லை. பின் நான் அறைக்குள் சென்றேன். மின்விசிறியில் தொங்கிய சரவணனின் உடலை இரண்டு போலீசார் கீழே இறக்கினார்கள். அவன் உடலில் கைவைத்துப் பார்த்த போலீசார், “காலேல ஒரு பதினொரு பண்ணிரெண்டு மணிக்கு தொங்கிருக்கான் சார்” என ஆய்வாளரிடம் கூறினர். பின் வழக்கமான போலீசு விசாரணைகள் முடிந்து முகிலனும் நானும் என் நண்பன் அரவிந்தனின் வீட்டிற்கு புறப்பட்டோம்.


இரவு மணி 7.54
நானும் முகிலனும் அரை மணி நேரம் காரில் பயணித்தாலும் முகிலன் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே பதில் கூறிக்கொண்டிருந்தான். மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனை தொந்தரவு செய்ய வேண்டாமென நானும் விட்டுவிட்டேன். அரவிந்தன் வீடு வந்துவிட்டது.


அதிகாலை மணி 2.00
தூக்கம் வரமறுத்தது. கண் மூடினால் சரவணன் வந்தான். சரவணன் சிரிப்பதைப் போலவே கண்களுக்குள் தெரிந்தது. தண்ணீர் குடிக்கலாம் என எழுந்தேன். முகிலனின் அறையை கடந்து செல்லும் போது அதிர்ந்தேன். முகிலன் தூங்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தான். “முகிலா தூங்கலையாடா? தூங்கு”என்றேன். முகிலன் பேசினான் “அங்கிள். முகிலன் ஏன் அங்கிள் தூக்கு போட்டுகிட்டான்?”

Monday, October 26, 2009

நாய் வாத்தியார்.

நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் எல்லாமே மிக சராசரியாகத் தான் இருக்கும். ஒன்றே ஒன்றைத் தவிர. இல்லை, ஒரே ஒருவரைத் தவிர. அவர் பெயர் நாய்வாத்தியார். அதோ அங்கே மஞ்சள் பெயிண்டில் கொஞ்சம் பழையதாய் தெரியும் வீடு தான் நாய் வாத்தியாரின் வீடு. என் வீட்டில் இருந்து ஒரு நாலு வீடு தள்ளி இருக்கிறது அவருடையது. எனக்கு இங்கு வந்ததில் இருந்து பயங்கர குழப்பம், தமிழ் வாத்தியார், இங்கிலீஷ் வாத்தியார் எல்லாம் எல்லா குடியிருப்பிலும் கண்டிப்பாய் இருப்பார்கள். “அதென்ன நாய் வாத்தியார்?” என்று.

அவரை எல்லோருமே நாய் வாத்தியார் என்று தான் அழைத்தார்கள். வெறும் 'வாத்தியார்' என அவரை எவரேனும் எங்கள் தெருவில் குறிப்பிட்டதாய்  எனக்கு நினைவில்லை. கடைசியாக இந்தக் குழப்பம், நான் வாத்தியாரின் நடவடிக்கைகளை கவனிக்க கவனிக்க, தானாகவே நாளடைவில் தீர்ந்தது எனக்கு. நாய் வாத்தியார் என்ற பெயர் ஆகுபெயர்!  அவர் வளர்க்கும் நாயினால் வந்தது அது.  நாய் வளர்க்கும் மற்றவர்களுக்கும் இவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இவரையும் அந்த நாயையும் கூர்ந்து கவனித்தால் அந்த வித்தியாசங்கள் நமக்குப் புலப்படும்.

இந்த வீட்டிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, திருமணமான புதிதில், நானும் என் மனைவி தனலட்சுமியும் வந்தோம். ஆரம்பத்தில், ‘நாய் வாத்தியார்’ என அவரை விளிக்க எனக்கு கொஞ்சம் சங்கடமாய் இருந்தது. பின் நாளடைவில் வெறும் வாத்தியார் என்றால் யாருக்குமே விளங்கவில்லையாதலால் எனக்கும் அந்தப் பெயர் பழகிவிட்டது. சூரியன் உதிக்காத காலைவேளை கூட இருக்கும். ஆனால் நாய்வாத்தியாரும் அவரது நாயும் நடைப்பயிற்சி செய்யாத காலை இந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததாய் நினைவில்லை எனக்கு. லேசாக தூரல் போடும் மழைக்கால காலை வேளைகளில் கூட அவரும் நாயும் மறக்காமல் நடைப்பயிற்சி செய்வார்கள். நடைப்பயிற்சியின் போது நான் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டால், சற்று நேரம் நின்று என்னுடன் பேசிப் போவார். பேச்சு, ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்டதோ, தெரு சம்பந்தப்பட்டதாகவோ இருக்காது. பெரும்பாலும் என்னை, என் மனைவியை, என் குடும்பத்தைப் பற்றிய நலவிசாரிப்புகளாகவே இருக்கும். அல்லது அவரது நாய் செய்த குறும்புகளையும், சேட்டைகளையும் வலுக்கட்டாயமாக விவரிப்பார். நமக்கு அதைக் கேட்பதில் ஆர்வம் உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படமாட்டார். சொல்லவந்ததை சொல்லிவிட்டுத்தான் நகர்வார்.

அப்படி இந்த வீட்டுக்கு வந்த புதிதில் முதல்முறையாக என்னிடம்  பேசும் போது, "உங்க பேரு மணியாமே தம்பி! நல்லது நல்லது! மணித்தம்பி, நான் இந்த தெருவுலதான் முப்பத்தியஞ்சு வருசமா இருக்கேன். அஞ்சுடையார் ஸ்கூல்லதான் கணக்கு வாத்தியாரா இருந்தேன். இந்த வீட்டுக்கு நீங்க வந்தது ரொம்ப சந்தோசம் மணித்தம்பி. உங்களுக்கு  எதுனா வேணுமின்னா என்கிட்ட தாராளமா கேளுங்க...." என தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி மறக்காமல் “மணித்தம்பி” போட்டே பேசினார். அவர் பள்ளியில் நடந்த சம்பவங்களில் ஆரம்பித்து  அவர் மனைவியும், மகனும் பேருந்து விபத்தில் இறந்தது வரை எல்லாவற்றையும் மெலிதாய் சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் இருந்த துக்க விஷயம், அவர் முகத்தில் எந்த இறுக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் அருகில் நின்று கொண்டிருந்த நாயை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டே தன் குடும்பத்தின் மரணத்தை மெல்லிய சிரிப்போடு சொல்லிக்கொண்டே அடுத்த விஷயத்திற்கு தாவினார்.

அன்று இரவு முழுவதும் “எப்படி இந்த ஆளால் தன் மனைவி மகனின் இறப்பைக்கூட சிரிப்பு மாறாமல் சொல்ல முடிகிறது?” என வெகுநேரம் யோசித்தபடியே தூங்கிப்போனேன். அன்றைய கனவில் கூட  நாய் வாத்தியாரும், அவரது நாயும், முகம் தெரியாத அவரது மனைவியும் மகனும் வந்து போனார்கள்.

அன்று எனக்கு அவர் அளித்த ஆச்சரியமும், குழப்பமும், நாய்வாத்தியாரின் மேல் என்னை ஏனோ கவனம் கொள்ள வைத்தது. அவர் நாயுடன் மெதுவாக பேசியபடியே நடந்து செல்வதை கிட்டத்தட்ட தினமும் கவனிக்க ஆரம்பித்தேன். நாயுடன் அவர் பழகிய விதம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது.

இரவு நேரங்களில் நாயை வெளியே விடமாட்டார். அதுவும் அவருடன் உள்ளேதான் படுத்துக்கொள்ளும். அவர் நாயை சங்கிலியால் கட்டி யாருமே பார்த்ததில்லை. நாயின் கழுத்தில் பட்டை கூட இருக்கவில்லை. ஆனாலும் கூட, சங்கிலியால் கட்டிக் கூட்டிப்போவதைப் போல, நாய் அவர் கூடவே அழகாய் நடந்து போகும்.  அவர் நின்றால் உடனே தானும் நின்று அவர் முகத்தைப் பார்க்கும். அவரும் அந்த நாயும் நடப்பதை தூரத்தில் இருந்து பார்த்தால் யாரோ இரண்டு பால்ய நண்பர்கள் வெகுநாள் கழித்து சந்தித்து பழைய கதைகளை பேசிப்போவதைப் போல் தோன்றும். அந்த நாயும் அவர் அதனுடன் பேசுவதெல்லாம் அதற்குப் புரிவதைப் போல தலையாட்டும். அது என் கற்பனையா அல்லது உண்மையிலேயே அது புரிந்து தலையாட்டுகிறதா எனத் தெரியவில்லை.

பார்க்கவே ஆச்சரியமான காட்சிகள் அவை.  போகப்போக அந்த நாயையும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒருமுறை அவர் வீட்டிற்கு வந்தபோது என் கையில் இருந்த ரொட்டியை நாய்க்குப் போட்டேன். மணலில் விழுந்த ரொட்டியை நாய் கவ்வப்போனபோது, அதை அவசரமாய் எடுத்து, மணலை ஊதிவிட்டு அதற்கு கொடுத்தார் நாய் வாத்தியார். பின் நாயிடம், “மண்ல விழுந்தா எடுக்கக்கூடாதுடா மணி. வயித்த வலிக்கும்னு எத்தனத் தடவச் சொல்லிருக்கேன் உன்ட?”என பாசத்துடன் கண்டித்தார். பின் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.  அன்றுதான் அந்த நாயின் பெயர் மணி எனத் தெரியவந்தது எனக்கு.
மாதம் ஒருமுறை ஓய்வூதியத்தொகை வாங்க மட்டும் டவுனுக்கு செல்வார். அப்போது மட்டுமே நாய் தனியாக சுற்றிக்கொண்டிருக்கும்.  மற்ற நாட்களில் அவரும் நாயும் நடைப்பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் வீட்டுக்குள்ளேயே தான் இருப்பார்கள். அப்படி என்னதான் செய்கிறாரென யாருக்குமே தெரியவில்லை. என்னைத் தவிர அதை அறிய யாரும் ஆவலாய் இருந்ததாயும் தெரியவில்லை.

அடுத்து சில நாட்கள் சென்று, மீண்டும் வீட்டு வாசலில் அவரை சந்திக்க நேர்ந்தது. வெளியில் நின்றுகொண்டு பல் துலக்கிக் கொண்டிருந்தேன். என்னைக் கவனித்த வாத்தியார் முகம் நிறைய புன்னகையோடு என்னை நோக்கி வந்து நலம் விசாரிக்கத் தொடங்கினார். வாயில் பிரஷ் இருந்ததால் என்னால் ‘ஹ்ம்ம்’ மட்டுமே போட முடிந்தது. பின் தன் கல்லூரி காலத்தில், ஒருமுறை வீட்டு வாசலில் நின்று பல்துலக்கியதற்காக தன் அப்பாவிடம் தான் வாங்கிய அடியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். அதென்னவோ எனக்கு அவர் என்ன பேசினாலும் அலுக்கவே அலுக்காமல் போனது. அவர் பேசும் விஷயங்களைவிட அவர் பேசும் தொனியும், அந்த தொனியில் மிதமிஞ்சிநின்ற இனம்புரியாத அன்பும் என்னை நெளியாமல் கட்டிப்போட்டன.

இப்படி அவர் அந்தக் கதையைப் பேசிக்கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளிருந்து என் மனைவி உச்சக்குரலில், “எட்டு மணி ஆச்சு… வர்றவங்க போறவங்க கிட்டல்லாம் நின்னு வெட்டியா அரட்டை அடிக்க வேண்டியது. அப்புறம் ஆஃபீசுக்கு லேட்டாயிருச்சுன்னா நான் தான் காரணம்னு என் உயிர எடுக்க வேண்டியது… இதே வேலையாப் போச்சு உங்களுக்கு” எனக் கத்தினாள். அதைக் கேட்டு நான் நெளிவதைப் பார்த்த வாத்தியார், தான் பேசுவதை சட்டென நிறுத்திவிட்டுப் புறப்பட்டார். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. அவர் நடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன். நாயுடன் ஏதோ பேசியபடியே மெதுவாக நடந்து ரொம்ப தொலைவு சென்றுவிட்டிருந்தார்.

எனக்கு தனலட்சுமியின் மேல் ஆத்திரம் பொங்கியது. என்றுமே இல்லாமல், இன்று அவள், அதுவும் வாத்தியாரிடம் பேசும்போது இப்படி நடந்துகொண்டது மிகுந்த கோபமூட்டியது எனக்கு. “எதுக்குடி கத்துன இப்ப? வாத்தியார் மூஞ்சியே தொங்கிப் போச்சு. பாவம் அவரு.” என்றேன். தனலட்சுமி, “அவர் ஒரு மாதிரியாங்க. பொண்டாட்டியும் புள்ளையும் செத்துப்போனதுல இருந்து மனசு சரியில்லாம அலையிறாராம். அவரு புள்ளை பேரு மணிங்குறதுனால, மணின்ற பேருல யாரு இருந்தாலும் வலிய வலிய போயி பேசுவாராம். நல்லா பழகிட்டா, வீட்டுக்குள்ள அவரா வந்து உக்காந்துகிட்டு கண்டதையும் பேசி உயிரை எடுப்பாராங்க... எந்திரிக்கவே மாட்டாராம்.. நம்ம வீட்டுல வேலை பாக்குறால சித்ரா, அவதான் சொன்னா. நீங்க ஆஃபீஸ் போயிருக்க நேரத்துல அந்தாளு பாட்க்கு வந்து உக்காந்துகிட்டாருன்னா நான் என்ன பண்றது? அதான் உங்களை அப்படி கத்தி உள்ள கூப்ட்டேன்” என்றாள்.  நான் பதில் எதும் பேசவில்லை. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளிக்கப்போய் விட்டேன்.

அன்றுதான் அவர் என் வீட்டிற்கு கடைசியாய் வந்தது. பின் எப்போதாவது தெருவில் பார்த்துக்கொண்டால், ஒரு புன்முறுவல் மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாய் சென்றுவிடுவார். நானே சென்று ஒருமுறை பேச முயற்சித்த போதுகூட தன் நடை வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு வேகமாய் நடந்து கடந்து சென்றுவிட்டார்.
பின் அவரிடம் பேச முயற்சிக்கும் எண்ணம் தானாகவே மறந்து போய்விட்டது. எனது வழக்காமன வாழ்க்கையில் இருந்து நாய்வாத்தியார் முற்றிலும் விலகிப்போயிருந்தார்.

சில மாதங்கள் சென்று ஒருநாள்  அலுவலகம் விட்டு வீடு வந்தபோது, தனலட்சுமி, “ஏங்க. நம்ம தெருவுல குப்பை பொறுக்குற பசங்க அட்டகாசம் தாங்க முடிலங்க. வாத்தியாரோட நாயை தலைலயே கல்லக்கொண்டி அடிச்சுட்டானுங்க. பாவம் அது. வாத்தியார் வேற இல்ல. டவுனுக்குப் போயிருந்தாரு போல. என்னாச்சுன்னே தெரில. ரொம்ப நேரம் வாத்தியாரு வீட்டு வாசல்ல படுத்திருந்துச்சு. அப்புறம் வாத்தியார் வந்து உள்ள கூட்டிட்டுப் போயிட்டாருனு நினைக்கிறேன்.” எனக் கொஞ்சம் பரிதாபத்தோடு கூறிவிட்டு டிவி பார்க்கத் தொடங்கிவிட்டாள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றியது. நாளை அவர் நடைப்பயிற்சி வரும் போது எப்படியும் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

ஆனால் அவர் அடுத்த நாள் வரவில்லை. நான்கு நாட்கள் சென்றது. வாத்தியாரும் நாயும் நான்கு நாட்களாக நடை பயிற்சி செல்லவில்லை. அநேகமாக எங்கள் தெருவில் யாருமே அதை கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.

அடுத்தநாள் தெருவெங்கும் பயங்கர துர்நாற்றம். தெருவில் உள்ள அனைவரும் வாத்தியார் வீட்டிலிருந்துதான் துர்நாற்றம் வருவதாக கூறினார்கள். “என்னனு பாப்போம் வாங்க தம்பி” என்று என்னையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். மனம் நிறைய பாரத்தோடும், திகிலோடும் அவர் வீட்டை நோக்கி அவர்களுடன் சேர்ந்து நடந்தேன்.

கும்பலாய் ஒரு ஆறு, எழு பேர் சென்று கதவைத் தட்டினோம். கதவைத் திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. எனக்கு கதவைத் தட்ட ஏனோ பயமாய் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "சார். மணி வந்திருக்கேன் சார். கொஞ்சம் கதவை திறங்களேன்" என்றேன். சிறிது நேரத்தில் வாத்தியார் வந்து கதவைத் திறந்தார். திறந்தவுடன், உயிரே போகும் அளவுக்கு துர்நாற்றம் அடித்தது. என்னைப் பார்த்தவுடன், லேசாக சிரித்தபடியே "வாங்க மணித்தம்பி" எனச் சொன்னவர், மற்ற யாரையும் கவனிக்காமல் உள்ளே வேகமாக நடந்து சென்று வரவேற்பறையில் இருந்த கட்டிலில் படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.


"மணி எங்க சார்?" என்றேன். வாயைத் திறக்காமல், சைகையிலேயே அடுப்பறையைக் காட்டிவிட்டு பின் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார். அடுப்பறைக்குள் சென்றோம். அங்கு இறந்து கிடந்த நாயை ஈக்களும், புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில், அன்று காலையில் வடிக்கப்பட்டிருந்த சுடுசோறு நாயின் தட்டில் வைக்கப்பட்டிருந்தது. அடுப்பில் காலை சோறு வடித்ததற்கான தடயங்கள் தெரிந்தன. பின் சில ஆட்களைக் கூப்பிட்டு நாயை அப்புறப்படுத்தச் சொன்னேன். சித்ராவை விட்டு வாத்தியாரின் வீட்டை கிருமி நாசினி போட்டு கழுவி விடச் சொல்லிவிட்டு அவர் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். சுவற்றில், அவர் நல்லாசிரியர் விருது வாங்கும்போது ஜனாதிபதியுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படம் தொங்கிக் கொண்டிருந்தது. வாத்தியாரிடம் எந்த அசைவும் இல்லை.  நான் கிளம்பும் போது "வர்றேன் சார். போரடிச்சா வீட்டுக்கு வாங்க சார். நான் இன்னைக்கு லீவுதான்" என சொன்னேன். "சரி மணித்தம்பி" என என்னைப் பார்க்காமலேயே சொன்னார்.


வீட்டிற்கு வந்ததில் இருந்து வாத்தியாரின் நினைவாகவே இருந்தது. வாத்தியாருக்கு ஒரு நாய் குட்டி வாங்கித் தரலாம் என நண்பனிடம் சொல்லி வைத்திருந்தேன். மூன்று நான்கு நாட்களில் வாங்கித்தருவதாய் சொல்லியிருந்தான். நாய்க்குட்டியோடு சென்று வாத்தியாரைப் பார்க்கலாம் எனக் காத்திருந்தேன்.

மூன்று நாட்கள் போனது. மீண்டும் தெரு முழுதும் பயங்கர துர்நாற்றம். போனமுறை வந்த அதே கும்பல் மீண்டும் வாத்தியார் வீட்டிலிருந்து தான் துர்நாற்றம் வருவதாகச் சொன்னார்கள். என்னையும் அழைத்தார்கள்.  என்ன நடந்திருக்கும் என என்னால் நன்றாகவே உணர முடிந்தது. உடலெங்கும் குளிர் பரவியது எனக்கு. இதயம் பயங்கர வேகத்தில் அடித்தது. என்னைக் கூப்பிட்டவர்களிடம் பதில் ஏதும் சொல்லாமல் வீட்டின் உள்சென்று அமர்ந்தேன். குரல் தொண்டையில் இருந்து இதயத்திற்குக் கீழே இறங்கியிருந்தது. பின், வீட்டின் உள்ளிருந்தபடியே சக்தியையெல்லாம் திரட்டி சத்தமாக “எனக்கு எதும் நாத்தம் வரல. நீங்களே போயிப் பாருங்க ” எனச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன்.  நல்லாசிரியர் விருது புகைப்படத்தில் இருந்த, வாத்தியாரின் கர்வமான, பெருமிதத்துடன் கூடிய சிரித்த முகம் மனதில் வந்து மறைந்தது.

Thursday, October 22, 2009

புத்தனின் பல்.


இந்திய புத்தனின் பிந்திய பல்
இலங்கையில் இருக்குது..
அதைக் கும்பிடும் மன்னனின்
சிங்களக் காதில் சிரிச்சுப் பேசுது.
கொலையும், சதியும்,
வெறியும், பொய்யும்
சொல்லிக் கொடுக்குது..
நடப்பவைக் கண்டு
காவிக் கலரில் சிரித்துக் காட்டுது.

தாயின் மார்பில் விந்தைக் உறிந்து
வளர்ந்ததைப் போல,
சிங்களவனுக்கு
எச்சிலாய் காமம் ஊறுது..

விந்து வழியும் புத்தனின் பல்,
தமிழச்சி கருப்பை கடிக்குது..
கருப்பை புகினும்,
சாக்கடை என்பதால்,
அவள் மலத்தில் கலக்குது.
தமிழச்சி கழிவறையில் மட்டுமே
சிங்கள விந்தின் நாற்றமடிக்குது!

தமிழன் உயிரையும்,
தமிழன் உணர்வையும்
நக்கப் பார்த்தது..
நக்கிய நாக்கு பொசுங்கிப் போய்தான்
பல் மட்டும் எஞ்சுது.
தமிழின் வீட்டில் திருடிய சோற்றில்
சிங்களம் வளருது..
சிங்களன் திங்கும் சோற்றிலும்
தமிழனின் விந்தின் வாடையடிக்குது!!
புத்தனின் பல்லும்,
புத்தனின் சொல்லும்,
ருசித்து அதையே தின்று தீர்க்குது,
இன்று இரண்டும் மாறி
விஷமாய்ப் போனது!

இலங்கையில் உள்ளது புத்தனின் பல்லென
உலகமே சொல்லுது..
இல்லை அது பாம்பின் பல்லென
பல்லே சொல்லுது..!!
இலங்கை,
அதை செஞ்சும் காட்டுது!!

Monday, October 5, 2009

காதலியின் பிணம்!
இருள், மிகவும் மெதுவாய் வெளிச்சத்தைக் கிழித்து அறையை கவ்விக்கொண்டிருந்தது. எதிர்ப்பேதும் காட்டாமல் நானும் வெளிச்சமும் மரணத்தின் தங்கை, மயக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டிருந்தோம். கவனிக்கப்படாத தொண்டை, யாரோ அதனுள் கள்ளிச் செடியை பயிரிட்டதைப் போல எரிந்துகொண்டிருந்தது. உடலில் இன்னும் தெம்பு ஒட்டிக்கொண்டிருந்ததை ஓரமாய் உணர்ந்திருந்தேன். மனதில் அமானுஷ்யமாய் ஏதேதோ தோணிற்று. எழுந்தேன். காலுக்கடியில், இறந்து போன அவளின் சீப்பு தட்டுப்பட்டது. அதில் மெலிதான, விஷமில்லா கரும்பாம்புகள் போல அவள் முடிக்கற்றைகள் சுற்றிக் கிடந்தன. கையில் இருகப் பிடித்து எடுத்தேன். சீப்புக் காம்புகள் கையை அழுத்த அழுத்த இன்னும் இருகிப் பிடித்தேன். வாயில் வைத்துக் கடித்தேன். முடிகள் நாக்கில் ஒட்டியது. அவளை அழைத்தேன். அவள் பெயரை ஒரு இருநூறு முறை கத்தினேன். வரமாட்டாள் என உறுதியாய்த் தெரியத் தெரிய இன்னும் குரலெடுத்துக் கத்தினேன். தொண்டை ரத்தம் என் எச்சிலில் வழிந்தது. இன்னும் இன்னும் கத்தினேன். என் உடம்பு சில்லிட்டது. அவள் இறந்து, அவள் உடல் சில நிமிடங்களில் இப்படித்தான் இருந்தது. இல்லை, இதைவிடப் பலமடங்கு அது சில்லென இருந்தது. எதற்காக செத்துப் போனாள்? செத்துதான் போனாளா? அல்லது கோபமாய் பேசாமல் இருக்கிறாளா? அதற்காக மூச்சைக் கூடவா விடாமல் இருப்பாள்? என்னைச் சுற்றி பரபரப்பு தொற்றிற்று. நான் அவளின் மூடா இமைகளையும் உயிரில்லா கண்களையும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மொழியும், இடமும், பெயரும், எதுவும் மறந்துபோயிருந்தது. அவளை என் கைகளில் இருந்து எவரோ பிடுங்க எத்தனித்தபோது இன்னும் இருகப் பிடித்தேன் அவளை. அப்போதுதான் கவனித்தேன். அவள் கைகள் என் விரல்களை இருகப் பற்றியிருந்தது அதை எடுக்காமல் அப்படியே அவளைத் தூக்கிப் போனோரின் பின்னே போய்க்கொண்டிருந்தேன். அவள் கண்களும், அதற்குக் கீழே அவள் தலையும், அதற்குக் கீழே அவளின் முடியும் என்னை வெறித்தபடியே, ஆடியபடி முன் போய்க்கொண்டிருந்தன. உதடுகளில் முத்தமிட விரட்டியபோதெல்லாம் உதடுகள் தெரியாதபடி கடித்துக் கொள்வாள். இப்போது அவள் வாய் திறந்தபடி இருந்தது. வாயின் ஓரம் நான் எத்தனையோ முறை சுவைத்த, முத்தமிட்ட அவளின் எச்சில் வழிந்துகொண்டிருந்தது.

யாருமே அருகில் இல்லாமல், நான் மட்டும், இறந்த அவளின் உடலை அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோணிற்று. அதைச் சொல்லிக் கத்தினேன். தூக்க மருந்தை என் நரம்புகளில் ஏற்றினர். அப்படியே சென்று அவள் அருகில் படுத்துக் கொண்டேன். எவன் எவனோ என்னை இழுத்தும் கேளாது அவளருகில் படுத்திருந்தேன். கண்களை இமைக்காததால் நீர் வடிந்துகொண்டே இருந்தது. அவள் என்னைப் பார்க்கவேயில்லை. தூக்கத்தில் என் பெயர் சொல்லி கையைப் பிடிப்பாள். எப்படியும் பிடித்துவிடுவாள் என வெகுநேரம் காத்திருந்தேன். என்னைப் பிடிக்காதவள் போலவே படுத்திருந்தாள். அவளை எரிக்கச் சொல்லி எவனோ பேசியது காதில் விழுந்தது. நான் அணுஅணுவாய் ரசித்த தேகம். வெறிபிடித்தவனை போல, சொன்னவனை அடித்துக் கீழே தள்ளினேன். அதையே, நான் புதைக்கச் சொல்வதாய் நினைத்து புதைப்பதற்கு தயாராயிற்று எல்லாமும்.

குளிர்சாதனப் பிணப்பெட்டியில் அரவமற்று படுத்திருந்த அவளைப் பார்க்க பலபேர் வந்திருந்தனர். ரோஜா வாசனை குடலைப் புரட்டியது. கடைசியாய் இந்த மணத்தை இரண்டு மாதம் முன்பு எங்கள் முதலிரவில் பார்த்திருக்கிறேன். இடுகாட்டிற்கு வரமறுத்துவிட்டேன். ஒரு பெரும் கும்பல் அவளைச் சுமந்து சென்றது. எங்கள் திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து அவளின் கைகளில் சூடு போட்ட அவள் அண்ணன் முன்னே சென்றுகொண்டிருந்தான். "படுபாவி ரெண்டே மாசத்துல பிணமாக்கி கொடுத்துட்டானே" என ஏதேதோ சொன்னான். எனக்கு காதில் யாரோ இடைவெளியின்றி எச்சில் துப்புவது போல் இருந்தது. எங்கள் அறையில் சென்று படுத்துவிட்டேன். அவளின் சீப்பு தட்டுப்பட்டது. உடல் சில்லிட்டது.

இரவுபோலத்தான் இருக்கிறது. தூக்கிச்சென்று என்ன செய்து தொலைத்தனர் எனத் தெரியவில்லை. எத்தனை நேரம் படுத்திருந்தேன் எனத் தெரியவில்லை. அவள் வந்துவிடுவாள் போலவே இருந்தது. பொய்தான் எனினும் அதை நம்புவது எனக்கு மிகவும் பிடித்தமாயும், அது ஒன்றே இப்போது என்னை சீவிக்க வைக்கும் விஷயமாகவும் உள்ளுணர்வு சொன்னதால் அதை நம்பிக்கொண்டிருந்தேன். 'நாதியற்ற' என்ற வார்த்தைக்கான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. இழவு வீட்டில் ஒரே நாளில் அத்துணை சொந்தமும் காலியாகி தனிமரமாய் நிற்கும், பறிகொடுத்தவன் அநேகமாய் உலகில் நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

இடுகாட்டுக்குச் சென்று அவளைக் கூட்டிவரலாம் எனத் தோணிற்று. ஒருவேளை இந்த சனியன்கள் அவளை உயிருடன் புதைத்திருந்தால்.....?? வேகமாய் நடந்தேன். மகிழுந்து என காருக்கு தமிழ் பெயர் சூட்டியவனை கெட்டவார்த்தையில் திட்டியபடி ஓட்டினேன், வேகமாய். இடுகாடு. சிறு மேடு தெரிந்தது. அதன் மேல் அவளைப் போர்த்தியிருந்த துணி கிடத்தப்பட்டிருந்தது. எவ்வளோ சொல்லியும் கேளாது எங்கள் திருமணப் புடவையைப் போர்த்தாமல் வேறு ஏதையோ போர்த்தியிருக்கிறார்கள் புதைத்துப் போனவர்கள். தோண்டினேன். வெறும் கையை வைத்தே தோண்டினேன். நகங்களில் ரத்தம் வர வர எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவேளை நான் இவ்வளவு கஷ்டப்பட்டதைப் பார்த்து அவள் இரக்கப்பட்டு உயிரோடு வந்துவிட்டாள்.....??!!!! தோண்டினேன்....

மணல் மணலாய் அவள் தெரிந்தாள். எடை கூடியிருந்தாள். பால் குடித்த மயக்கத்தில் அசந்து தூங்கும் குழந்தையின் மேல் ஒட்டியிருக்கும் பால் சொட்டுகள் போலத்தான் அவள் மேல் ஒட்டியிருந்த மணற்துகள்கள் தெரிந்தன. அவளை எழுப்ப மனம் வரவில்லை. பாதி தூக்கத்தில் எழுப்பினால் "தலை வலிக்குதுடா" என்பாள். பின் என்னை தூங்கவிடமாட்டாள். அப்படியே அவளைக் நான் கொண்டுவந்திருந்த திருமணப் புடவையின் மேல் கிடத்தினேன். வீட்டிற்கு செல்ல பயமாக இருந்தது. மீண்டும் புதைக்கும் கூட்டம் வந்து இவளைத் தூக்கிச் சென்றுவிட்டால்..?

அவள் தூங்கிக்கொண்டிருந்த படுக்கையை சற்று அகலமாக்கினேன். அவளை வழக்கம் போல் இடதுபக்கம் படுக்க வைத்துவிட்டு, நான் வலப்பக்கம் படுத்துக்கொண்டேன். எங்களுக்குக் கீழே அவளின் திருமணப்புடவை இதமாக இருந்தது. கைகளை மேலே நீட்டி மணலை உள்தள்ளினேன். என் முகத்தை மூடியது. பின் என் முழங்கையை. கையையும் உள்ளிழுத்தேன். சுவாசத்தில் மணல் வாடை. பின் மணல் துகள். பின் மணல். நுரையீரல் வலித்தது. காலை அவள் எழுப்பும்போது திட்டவேண்டும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனேன்......

Related Posts Plugin for WordPress, Blogger...