Thursday, September 3, 2009

கர்த்தாவே!

(இந்தக் கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே!!!!!)


மதமாற்றம் மதமாற்றம்னு ஒன்னு இருக்கு!. அதாவது ஆவியாய் இருப்பதுல இருந்து பரிசுத்த ஆவியாய் மாறுவது!
ஜீவான்ற நான், உங்களிடம் என் கதையை.. இல்லையில்லை.. நிலையை சொல்ல நினைப்பது, யாரையும் புண்படுத்துறதுக்காகவோ, கிண்டல் பண்றதுக்கோ இல்ல! முழுக்க முழுக்க என் மனசில் இருக்குற பெரும் வேதனையை தீர்த்துக்கத்தான்!

ஒரு நாலு மாசமிருக்கும், அம்மா கூட வடபழநி முருகன் கோவிலுக்கு போனப்பத்தான் அவளப் பார்த்தேன்! பயங்கர அழகு! அய்யய்ய, இது நமக்கு சரிப்படாதுனு நினைச்சுட்டே திரும்பினப்பதான் இவளப் பாத்தேன்! வடபழநி முருகன் கிட்ட நான் வேண்டிகிட்ட மாதிரியே எல்லாமே நடந்துச்சு! நான் இருக்குற தெருவில எதிர்த்த வரிசைலயே வந்துட்டா அவ! அவ சித்ரா. அவங்கப்பா பேரு பாலுச்சாமி. அம்மா பேரு என்னவோ வரும், அது தெரில! அண்ணன் ரத்தினகோபால்.

நானும் அவள அப்பப்ப பாப்பேன். பேசுவேன். அவளும் எதோ வேண்டா வெறுப்பா பால்காரன், தபால்காரன்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டு போவா! அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும், இவனுங்க ஒரு மாதிரினு! பெருமாளு சொன்னான், "மச்சி இவனுங்க குடும்பமே சரில்ல. நீ உசாராயிரு! வேண்டாம்"னு, நாந்தான் கேக்கல. "அப்படிலாம் சொல்லாத மச்சான். பாக்கத்தான் வேலில வுட்ட ஓணான் மாதிரி எங்கயோ வெறிச்சு பார்த்துடே திரியிறானுங்க, நிசத்துல ரொம்ப கெத்தானவய்ங்கடா, இந்துவா இருந்துகிட்டு சர்ச்சுக்கெல்லாம் வாரி வழங்குறானுங்க மச்சான். அவங்க வளக்குற ராமுன்ற நாயி கூட தெரு நாயிங்களுக்கு சாப்பாட்ட பிரிச்சுக் கொடுக்காம சாப்புடாதுனா பாரேன்!"னு பெருமையா சொன்னேன்!

நல்லபடியா போய்கிட்டே இருந்த என் வாழ்க்கையில இன்னொரு தென்றல முருகன் வீச வச்சான்! ராமு என்கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சுச்சு! எப்போ சிக்கன் பண்ணாலும், "பெருமாளுக்கு ஒரு டப்பால வச்சுக் கொடும்மா"னு சொல்லி வாங்கிட்டுப் போயி ராமுக்கு கொடுப்பேன். அது ஆசையா சாப்பிடுறத பாக்குறப்ப நானும் சித்ராவும் தலப்பாக்கட்டுல பிரியாணி சாப்பிடுற மாதிரி எனக்கொரு திருப்தி! அதுலயும் லெக் பீசுனா ராமுக்கு உயிரு! நாள் ஆக ஆக ராமு நல்லா குண்டாயிருச்சு! எனக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி வேற காத்திருந்துச்சு! அதாவது, என் ஆளு, எங்க சாதிதான்னு அம்மா சொன்னாங்க! "எப்படிம்மா கண்டுபுடிச்ச?"னு கேட்டா, "அவங்க வீட்டுலயும் 'அவரு' படம் மாட்டியிருந்துச்சுடா"னு சொன்னாங்க! ஆகா... ஜீவா பட்டயக் கிளப்பு, எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்டா, பொறுமையா லவ்வ சொல்லிக்கலாம்னு இருந்தேன். அவங்க வீட்ட கவனிச்சுட்டே இருப்பேன். அடிக்கடி பஜாஜ் ஸ்கூட்டர்ல நகையே போடம ஒரு அம்மா கைல புத்தகத்தோடவும், அதுகூட ஒரு ஆளும் வந்துட்டு வந்துட்டு போனாங்க! அப்பப்போ ரெண்டு மூணு நகை போடாத பெண்கள் வந்துட்டு போயிட்டி இருந்தாங்க! எனக்குன்னா செம கோபம். பெருமாளுகிட்ட சொன்னேன், "ஆனாலும் என் மாமனாருக்கு ரொம்ப இரக்க மனசுடா. காசை நன்கொடையா அள்ளி அள்ளி விடுறாரு மச்சி! நான் அவருக்கு மருமகன் ஆனவுடன இப்படிலாம் இருக்க விட மாட்டேன்டா. யார் வீட்டுக் காச யாரு திங்கிறது!!?" பெருமாளு என்ன ஏற இறங்க பார்த்துட்டு, "உன் ஆளு கழுத்துல போட்டுருந்த செயின ரெண்டு மூணு நாளா காணோமே, அதையும் வித்தா நன்கொடை கொடுக்குறானுங்க?"னு கேட்டுட்டு போயிட்டான். ஆமா, சித்ரா ஏன் செயினு போடலனு யோசிக்கிறதுலயே ஒரு வாரம் போயிருச்சு!

ஒருநாளு சித்ரா தெருல நடந்துட்டு இருந்தப்ப, "சித்ரா வீட்டுக்கு போறீங்களா? என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க? எங்க வீட்டுல சொல்லி உங்கள பொண்ணு கேக்க சொல்லவா?"னு கேட்டு முடிக்கல, அதுக்குள்ள "இயேசப்பா!!!!"னு கத்திட்டே ஓடிட்டா! என்னடா இது, சித்தப்பா, பெரியப்பானு கத்தாம, 'இயேசப்பா'னு கத்துறாளேனு ஒரு டவுட்டு! சரி தொலையிறா. இன்னொரு நாளு பார்த்துக்குவோம்னு விட்டுட்டேன்!

அடுத்தநாள் காலைல போஸ்ட்மேன் என்கிட்ட ஒரு அட்ரசை கேட்டான்.
"திரு.பால்சாமி(Paul Sami),
நம்பர் 14,"னு.

"நம்பர் 14ல பால் சாமினு யாரும் இல்லையே, பாலுச்சாமினு ஒருத்தருதான் இருக்காரு. எதாவது எழுத்துப்பிழையா இருக்கும். அங்கயே போயி கேளுங்க"னு சொல்லிட்டு போயிட்டேன்!

அதுக்கப்புறம் முருகன் ஒரு புயல வீச வச்சான் பாருங்க, யம்மா!!! ராமுக்கு வழக்கம்போல சிக்கன் எடுத்துட்டு போயி "ராமு வாடா"ன்னேன். ஓரப்பல்லு குரூரமா தெரியிற மாதிரி ராமு முறைச்சான்.
"லெக் பீசு இருக்கு ராமு, மாமாட்ட வா"னு கூப்டேன் பாருங்க, ஒரே தாவுல விரட்டிட்டு வந்து கைலிய கடிச்சு இழுத்துருச்சு! துண்டக்காணோம் துணியக் காணோம்னு ஓடி வந்தேன் வீட்டுக்கு. சாயங்காலம் பெருமாளு வந்தான், "டேய் என் ஆளு சித்ரா வீட்டு நாய் ராமுக்கு வெறி புடிச்சிருக்கு போலடா. அவங்கள பார்த்தா சொல்லுனும்டா"ன்னேன்!!
அவன் சொன்னான், "என்னடா? சோகமா இருப்பனு பார்த்தா, நாயை பத்தி பேசுற? உனக்கு விசயமே தெரியாத? சித்ரா வீட்டுல மதம் மாறிட்டாங்களாம்டா. எனக்கே இன்னிக்குத்தான் தெரியும்."

"என்னடா குண்டத் தூக்கிப் போடுற?"

"அட ஆமாடா. இனிமே உன் ஆளு வெறும் சித்ரா இல்லையாம், ஜோசப்பைன் சித்ராவாம். அவங்க அப்பா பேரு பால் சாமியாம், அண்ணன் பேரு ஆரோக்கிய ரத்தினமாம்! என்ன பெரிய காமெடினா உன் மாமனார் விவரமானவன்டா. பாலுச்சாமிங்கிற பேரை எவ்ளோ விவரமா பால்சாமினு மாத்திருக்கான் பாரு!!
ஆமா நீ ஏன்டா அந்த நாய்கிட்ட போற? என்ன பண்ண அதை?"

"ராமுனுதான்டா கூப்டேன், உடனே விரட்டிட்டு கடிக்க வந்துச்சுடா!!"

"ஏன்டா, 'ராபர்ட்'னு பேரு மாத்துன நாயை 'ராமு'னு கூப்டா உன்ன விரட்டாம என்னடா செய்யும்!!"

"கர்த்தாவே!!!!!!"
Related Posts Plugin for WordPress, Blogger...