Friday, July 31, 2009

உப்புத்துப்பியும் ஒலக சினிமாவும்


"என்னடா படமெடுக்குறாய்ங்க? அதே ஈரோ அதே ஈரோயினி. அதே பாட்ட மறுக்கா மறுக்கா போடுறாய்ங்க. என்னால இதெல்லாம் பாக்க முடில மக்கா.
நான் என்ன படிச்சிருக்கேன் சொல்லு. ரெண்டாப்புலயெ பொம்பளக வாத்திச்சிகிட்டெல்லாம் படிக்க கூடாதுனுட்டு எங்க அய்யா கூட்டியாந்துட்டாக. கிரகம் அவகளும் படிக்கல என்னையும் படிக்கவுல்ல. ஆனா நல்லவேளடா.. படிக்காததும் நல்லதுதேன். படிச்சிருந்தா கம்பூட்டரு முன்னாடியே உக்காந்து முதுகு வலி வந்துருக்கும்டா. இப்பல்லாம் சென்னையில அத்தன பயலும் முதுகுவலிக்காரனாம்ல, சுப்பையன் பாத்துட்டு வந்து சொன்னான். கிறுக்குப் பயலுவ. கம்பூட்டருனு ஒன்னு வெள்ளக்காரன் கண்டுபுடிச்சாலும் புடிச்சான், நம்ம பயலுவ அது முன்னாடியே பலியா கிடக்கானுவ. நமக்கு அதெல்லாம் வேணாம்டா.
நல்லா ஓடியாடி வேல பாத்தாதான் நமக்கு வசப்படும்"

பொறுமையா இருங்க, கோபப்படாதீங்க. அங்க குளத்து படிக்கட்டுல சின்னப்பயலுக கிட்ட பேசிகிட்டிருக்குறது நம்ம உப்புத்துப்பி ராமசாமி. பழக்கடை
மாணிக்கம் மகன். ஆனா அவரு இவன மகன்னு சொல்லுறதே இல்ல. ரெண்டு பேரும் பொது இடத்துல பார்த்துகிட்டா மூணாம் பங்காளி, நாலாம் பங்காளி கணக்கா முறைச்சுக்குவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. இப்படித்தான் ஒருநாளு சடகோப்பன் ரெண்டு பேருக்கும் சமாதானாம் பண்ணி வைக்கிறேன் பேர்வழினு போயி, அப்பனும் மகனும் சேர்ந்து மொத்திபுட்டாங்க. வாயில ரத்தத்தோட வந்தான் பாவம். நமக்கு ஏன் வம்புனு ஊருக்குள்ள அப்புறம் எவனுமே இவங்க பஞ்சாயத்துக்கு போறதேயில்ல. ராமசாமிக்கு ஏன் 'உப்புத்துப்பி'னு பேரு வந்துச்சுனு இப்போ நான் சொல்ல ஆரம்பிச்சேன்னா அப்புறம் கதைய முடிக்க முடியாது. போறபோக்குல தெரியும். விசயத்துக்கு வருவோம். நேத்து நைட்டு சேது டாக்கீசுல போன வருசம் ரீலீசான ஏதோ ஒரு படத்த பார்த்துட்டுதான் விமர்சனம் பண்ணிகிட்டிருக்கான். பரதேசி இன்னும் பல்லு கூட விலக்கல, ஏன்டானு கேட்டா, "ஆமா. பல்லு விலக்குறவய்ங்க மட்டும் நல்ல படம் எடுத்துட்டாய்ங்களாக்கும்"னு கேப்பான். நமக்கெதுக்கு அதெல்லாம். பேசாம அவன் பேசுறத கேட்டுத் தொலைப்போம்.

"............ ஆமா அது என்னடா, ஈரோ வந்தோன ஒரு பாட்டு வைக்கிறாய்ங்க. உடனே எல்லாம் எந்திரிச்சு ஆடுறாய்ங்க. படிக்கிற பயலுக அத்தன பேரும் பரீட்ச பேப்பர கிழிச்சு வானத்துல வுட்றான் ஏதோ காசு கொடுத்து பூ வாங்குன மாதிரி. இவய்ங்கள்லாம் படிச்சு.. உருப்பட்டு..எங்க போயிச் சொல்ல. இந்த பூ போடுறதெல்லாம் நல்ல படத்துக்கு போட்டாலும் பரவால்ல. நம்மூருல எவன் நல்ல படம் எடுக்குறான்? எல்லாம் அதே கதைதான். இவன் எடுத்து முடிச்சுட்டு கதை பேப்பர அடுத்தவன்ட தர்றான். அவன் ஈரோ ஈரோயின மாத்தி அதே கதைய எடுக்குறான் நம்மலும் மூணு மூணு ரூவாயா கொடுத்து பாக்குறோம் கண்றாவி.. இதுல சேருக்கு தள்ளுமுள்ளு வேற. நான் முடிவு பண்ணிட்டேன்டா. காரக்குடில பல ஒலக சினிமா பார்த்தவன்தான் நானு. இப்பகூட அமீர்கான்னு ஒரு வெள்ளக்காரன் எடுத்த கஜினினு ஒரு படம் பார்த்தேன். அதப் பாத்துதான் நம்ம ஊர்ல சூர்யாவ வச்சு எடுத்தாய்ங்களாம். ஆனா என்ன, எழவு நமக்கு அந்த பாசை தான் புரியல. இன்னிக்கு ராவே கிளம்பி சென்னை போறேன், ஒரே வாரம்தான். படம் எடுக்குறேன். அருமையான கதை ஒன்னு இருக்கு. ஈரோ ரெட்ட வேசம். என் சிநேகிதன் சிவமுத்து சென்னைலதான் இருக்கான். அவனப் போயி பாக்குறேன். பிறவு நேரா ஏவிஎம் போறோம், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரப் பார்த்து கதையச் சொல்லி, பெரிய இயக்குனரா ஆயித்தான்டா ஊருக்கு வருவேன். இது எங்கப்பன் மாணிக்கம் மேல சத்தியம்டா"

இப்படிச் சொல்லிவிட்டு அப்படியே குளிக்காமல் கொள்ளாமல் கட்டுன கைலியோட பஸ்சு ஏறுனவன பார்த்து "அண்ணே போயிட்டு வாண்ணே.
பெரியாளானவுடன எங்கள மறந்துறாதண்ணே."னு சொல்லி கையசைச்சு அனுப்பி வச்ச சிறிசு ரெண்டும் அவன் போனோன பேசிகிச்சுங்க,

"போடி போ.. அடிபட்டு வரப் போற.. கடலைய எங்கப்பா கடையில களவாண்டு தின்னாய்ல.. உனக்கு மெய்யப்ப செட்டியார் செத்ததே தெரில. இதுல ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்னு இனிசியலோட வேற சொல்ற!!!"
.........

இரண்டு நாட்களுக்குப் பிறகு.

வாயில தையல் போட்டு ஊருக்கு வந்திருக்க உப்புத்துப்பிய பத்திதான் ஊரெல்லாம் பேச்சு. ஆனா அவனோ வந்ததுல இருந்து யாருகிட்டயும் பேசவே
இல்ல. எதோ யோசிக்கிற மாதிரி, வீட்டுல இருந்தா விட்டத்தையும், வெளில இருந்தா மரக்கிளையவும், வானத்தையும் மாறி மாறி வெறிச்சு பார்த்துட்டே இருக்கான். அவங்கப்பன், "கொரங்குப்பய ஒரு வாரத்துல வயிறு காய்ஞ்சு வருவான்னு நினைச்சேன். ரெண்டே நாள்ல வந்துட்டானே. வாயில வேற தச்சு அனுப்பிருக்காய்ங்க. என்னத்தப் பண்ணித் தொலைச்சான்னு நமக்கும் தெரில. கேட்டா வெறிச்சு பார்த்துட்டு எதையோ யோசிச்சுட்டே நடந்து போயிறான்."னு ஊரெல்லாம் புலம்பிட்டிருக்காரு. என்ன ஆச்சுனு யாருக்கும் தெரில. அவனும் சொல்லல. பொம்பள புள்ளைகள்லாம் அவன 'அறுந்த வாய்' ராமசாமினு கிண்டல் பண்ண ஆரம்பிச்சவுடன அவனச் சுத்தி இருக்க சிநேகித பயலுக கடுப்பாயி ஒருநாளு சென்னையில இருக்க சிவமுத்துக்கு ஃபோன் போட்டு விசயத்த கேட்டுருக்காய்ங்க. அவன் இவய்ங்களுக்கு மேல கடுப்பா,

"அந்த கருமம் புடிச்சவன் இனிமே சென்னைக்கு வந்தா செத்தே போயிருவான்டா. நானே அடிச்சுக் கொன்னுபுடுவேனு சொல்லிருங்கடா அவன்கிட்ட. மனுசனாடா அவன்? "மாப்ள படமெடுக்கப்போறேன்டா. அருமையான கதை இருக்கு. மெய்யப்பச் செட்டியாருட்ட கூட்டிப் போடா"ன்னான். மெய்யப்பச் செட்டியாரு செத்துட்டாருனு அவனுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளயே எனக்கு நாக்கு தள்ளிருச்சு. அப்புறமா நம்ம கூட ரெண்டாப்புல படிச்சபய, அந்தக்காலத்துல கோக்குமாக்க இருந்தாலும் இப்ப ஏதோ திருந்தி வாழ்க்கைல முன்னேறனும்னு வந்திருக்கானு நினைச்சு என் கூட தங்கிருக்க வசதியான பய ஒருத்தன் கைல கால்ல விழுந்து, அவனுக்குத் தெரிஞ்ச ஹீரோ ஒருத்தன்ட கூட்டிப்போனேன்டா.. அங்க வந்து இவன்..... "

"என்னடா பண்ணான்? சொல்லுடா..."

"அதை அந்தக் கபோதி கிட்டயே கேளுங்கடா"னுட்டு ஃபோன வச்சுட்டான்.
இவய்ங்களுக்கு இப்போ ஆர்வம் தாங்க முடில. உப்புதுப்பி என்ன பண்ணானு தெரிஞ்சாதான் சோறு இறங்கும்ன்ற நிலைக்கு வந்துட்டாய்ங்க.

உப்புதுப்பிட்ட கெஞ்சி கெதறி ஊரணி படிக்கு கூட்டியாந்து,அவன்கிட்ட,

"அப்படி என்னதான்டா நடந்துச்சு சென்னையில? என்னதான் பண்ணித் தொலைச்ச? நீ சொன்ன கதை ஹீரோக்கு புடிக்கலயா? புடிக்கலேனா கூட,
அதுக்காக அடிக்க மாட்டாய்ங்களேடா. அடிக்கிற அளவுக்கு என்னடா பண்ண?"னு கேட்டதுக்கு,

"மாப்ள, அவன் கூட்டிப்போன ஈரோக்கு அன்னிக்கு கோபிசெட்டிப்பாளையத்துல படப்பிடிப்பாம்டா. சிவமுத்து சிநேகிதனுக்கு அவரு ரொம்ப வேண்டப்பட்டவருன்றதால படப்பிடிப்புக்கு கூட போகாம என்கிட்ட கதை கேக்குறதுக்காக வரச் சொல்லிருந்தாருடா. நாங்களும் போனோம். காபித்தண்ணியெல்லாம் நல்லாதான் கொடுத்தாய்ங்க. பாக்கவும் சுமாரா இருந்தாரு. முழுக்கதையவும் கேட்டுட்டு பிறவு புடிக்காம அடிச்சிருந்தா கூட
பரவால்லடா. நான் ஒரு வரிதான்டா சொன்னேன். திடீர்னு ரெண்டு பேரு வாயிலயே அடிச்சு என்னைய விரட்டி விட்டாய்ங்கடா"

"என்னடா சொன்ன?"

"சார். படத்துல நீங்க டபுள் ஆக்ட்டு சார். ஹீரோ, கதாநாயகன்னு ரெண்டையுமே நீங்கதான் பண்றீங்க"ன்னு சொன்னேன்டா. இதக் கேட்டவுடன ஒருநிமிசம் என்ன மேலயும் கீழயும் பார்த்துட்டு, வாயில அடிச்சுபுட்டாய்ங்கடா. நானும் ஏன் அடிச்சாய்ங்கன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன். ஒன்னும் புரியலடா மாப்ள."

இதக் கேட்டவுடன, கூடியிருந்த அத்தனைப் பேரும் ஒருத்தனை ஒருத்தன் பார்த்துட்டு களைஞ்சு போயிட்டாய்ங்க, நம்ம உப்புதுப்பி ராமசாமி மட்டும்
யோசிச்சிட்டே அதே படியில உக்காந்திருக்கான். இன்னும்!!!!!!

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான நகைச்சுவை எழுத்து, ரசித்துச் சிரித்தேன்.

Anonymous said...

நன்றி. :-))

satheeskannan said...

அட, என்ட கூட ஒரு டபுள் ஆக்சன் கதை இருக்குங்க.. மெய்யப்பச் செட்டியாரோட நம்பர் இருந்த கொஞ்சம் சொல்லுங்க..

Anonymous said...

ada.. namma upputhuppiye comment potrukaaru.. :-))

சுட்டபழம் :) said...

தல......முடியல.......

elkay said...

kathai ellaam nallathEn irukku.saringappu, namma upputhuppi endru yaen azhaichanga appu, kadaisi varaikkum paer vantha kathaiyai sollalaiye appu?!
irunthlum namma upputhookkiyai karanamillamal adichathu romba thappu appu..ithu avarathulla...

Yuvaraj said...

உங்கள் போஸ்ட் நன்றாக உள்ளது. நன்றி

shcc said...

you can atted my site your blog
HTML CODE your taken


http://puthumainew.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...