Sunday, July 19, 2009

கடுகு பொறுக்கி


எத்தனையோ வாட்டி நான் என்னென்னவோ நினைச்சிருக்கேன். சின்ன வயசுல சூடு வச்ச அத்தையோட மகள கட்டக்கூடாதுன்றதுல ஆரம்பிச்சு, சங்கு மார்க் கைலியத் தவிர வேற எந்த மார்க் கைலியும் கட்டக்கூடாதுன்ற வரைக்கும். ஆனா அடிபட்டு, மிதிபட்டு, அல்லல்பட்டு செத்தாலும், அவிட்டம் நட்சத்திரத்துல மட்டும் சாகக் கூடாதுடா சடகோபானு நான் நினைச்சது, என் மாமா சுப்பிரமணி செத்து தூக்கிட்டுப் போனப்பதான். அப்போ நான் சென்னைல இருந்தேன், அதாவது மாமாவ தூக்கிட்டுப் போனப்ப இல்ல, மாமா செத்துப்போச்சுதுன்னு எனக்கு சேதி வந்தப்ப. சென்னைக்குன்னு அருமையான குணம் ஒன்னு உண்டு. எவன் சேர்ந்து இருந்தாலும் அதுக்கு புடிக்காது. அப்பன்-மவன், ஆத்தா-மவன், அண்ணன்-தம்பி, இதுக்கெல்லாம் மேல புருசன் பொண்டாட்டி சேர்ந்து இருந்தா இந்த சென்னை சனியனுக்கு புடிக்கவே புடிக்காது. நான் வாங்குற 8000 ரூவா சம்பளத்துல என்னால மட்டும் தான் சென்னைல இருக்க முடிஞ்சுச்சு. என் பொண்டாட்டி அழகுமணியும் என் புள்ள சுப்பிரமணியும் மதுரைலதான் இருக்குதுங்க. நான் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து பார்த்துட்டு போவேன். போனாவாட்டி வந்தப்ப மாமா நல்லாத்தான் இருந்துச்சு, பேசுச்சு, "டேய் சட பொண்டாட்டி புள்ளைய விட்டுப்போட்டு ஏண்டா அந்த சுடுகாட்டுல (மாமா எப்பயுமே சென்னைய சுடுகாடுனு தான் சொல்லும். எப்பயோ யாருகிட்டயோ, சென்னைல அப்படி என்னதான் இருக்குனு கேட்ருக்கு. அதுக்கு அவன் "என்ன இப்படிக்கேட்டுப் புட்டீங்கப்பு? அண்ணா சமாதி, எம்.ஜி.ஆரு சமாதி எல்லாம் இருக்குல்ல"னு சொல்லிருப்பான் போல்ருக்கு! அதுலேர்ந்து எங்க மாமாக்கு சென்னை சுடுகாடு தான்) இருந்து அல்லாடுற? பேசாம இங்க வந்துரு நம்ம மில்ல பார்த்துக்கடா"னு சொன்னுச்சு. என்னதான் நம்ம மாமான்னாலும் சொந்தபந்தத்துக்குள்ள வேலை பாக்குறது சரிவராதுனு நினைச்சு, நான் கடைசி வரைக்கும் ஒத்துக்கல. மாமாக்கு அதுல வருத்தம்தான். இப்போ என்னமோ இதய செயலிழப்புனு சொல்றாய்ங்க. மாமா செத்துப்போச்சுனு என்னால நம்பவே முடில. சுப்ரமணிக்கு, மாமா தாத்தான்னா அவ்ளோ புடிக்கும். அவனுக்கு தாத்தானா அவருதான். ஒரு பென்சில் பாக்சுனா கூட அவனுக்கு மாமாதான் வாங்கித்தரும். செத்த வீட்டுல அவன தேத்துறதே பெரிய விஷயமா இருக்கும் அழகுக்கு.

கூட்டம் பயங்கரக் கூட்டம். ரோஜா வாசம் குடலைப் பொறட்டுது. என்னதான் ரோஜாவ காதல் சின்னம்னு சொன்னாலும் எனக்கு அந்த வாசம் பட்டாலே சாவு வீடுதான் நினைவுக்கு வரும். பிஞ்சு பிஞ்சு வாசல் பூராவும் கிடக்குற ரோஜானாலே எனக்கு ஒப்பாது. எத்தனையோ தடவ நானும் மாமாவும் கேதத்துக்கு ரோஜா மாலை வாங்கிட்டுப் போயிருக்கோம். இன்னிக்கு அழகு என்ன வர்றப்ப மாலை வாங்கிட்டு வரச்சொன்னப்ப முடியாதுனுட்டேன். மாமாவப் போயி ஒரு பிணமா பாவிக்கவே எனக்கு மனசு வரல.

சுப்பிரமணி ஒன்னும் அழுத மாதிரி தெரியல. அழகு கண்ணெல்லாம் வீங்கிப் போயி இருந்துச்சு. எல்லாப் பொம்பளைங்களும் என்னப் பார்த்தவுடன கத்திக் கூச்சல் போட்டுச்சுங்க. வழக்கமான எல்லாம் முடிஞ்சோனே வெளிய பந்தலுக்கு கீழ நானும் என் மடியில சுப்பிரமணியும் உக்காந்தோம். அப்போ "நேரமாச்சுல்ல தூக்கிருவோமா?"னு ஒருத்தன் கத்துனான். அவன இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. சில சொந்தக்காரய்ங்க இருக்பாய்ங்க, சாவு வீட்டுக்கு மட்டும்தான் வருவாய்ங்க. அப்புறம் காணாம போயிட்டு அடுத்த சாவுக்குதான் வருவாய்ங்க. இவன் அப்படிப்பட்டவன் போல. எடுத்துருவோம்னு முடிவு பண்ணி சடங்கெல்லாம் ஆரம்பிச்சுட்டாய்ங்க.

"டேய் சம்முகம், அவிட்டம்ல செத்துருக்கான்டா உன் சித்தப்பன். சடங்கெல்லாம் சரியாப் பண்ணனும். எதுனாலும் என்கிட்ட கேட்டுப் பண்ணுங்கடா, அப்புறம் லோல்படாதீங்க. வாசவழியா தூக்கக்கூடாது, சன்னல் இல்லேனா செவுத்துல ஓட்டப்போட்டுத்தாண்டா தூக்கனும்" னு ஒரு கிழவி கூச்சல்போட்டுச்சு. "அதுக்குத்தான ஏற்பாடு பண்ணுது, கத்தாத ஆத்தா"னு சம்முகம் சொன்னான். வழக்கமா மாமா வீட்டுல கொசுறு வேலை பாக்குற முருகேசன் வந்து ஓட்டப் போட்டான் செவுத்துல. "ஓலப்பாயி கொண்டாந்தியா? அதுலச் சுத்திட்டு அப்புறம் ஒரு சாவலை அடிச்சு ரத்த பலி கொடுக்கனும். பிறவு ஓட்ட வழியா ஓலப்பாய வெளிய கொண்டாந்து, உடனே ஓட்டைய அடைச்சுப் புடனும்டா. பிறவு பாடேல ஏத்துற வரை யாரும் பாக்கக் கூடாது. முதல்ல இதச் செய்யிங்கடா மத்தத பிறவுச் சொல்லுறேன். டேய் முருகேசா போயி ஒரு கிலோ கடுகு வாங்கியாடா"னு காபியக் குடிச்சுக்கிட்டே சொல்லிட்டு உள்ளப் போயிருச்சு கிழவி. எனக்கு ஒன்னும் புரியல.

சோமு மாமா அப்பத்தான் பக்கத்துல வந்து உக்காந்தாரு. துக்கம் விசாரிப்புக்குப் பிறவு பொதுவா பேசிகிட்டிருக்கப்ப கேட்டேன், "மாமா எதுக்கு ஓலப்பாயி, செவுத்துல ஓட்டைனு என்னென்னெமோ செய்றாங்க. பாவம் மாமா. அவரு வீட்டுலயே இப்படில்லாம் பண்ணலமா?" "அட என்னப்பா நீயி? ரொம்ப பாசக்காரய்ங்கதான் அவிட்டத்துல சாவாய்ங்க. உன் மாமனப் பத்திக் கேட்கவே வேணாம். அவிட்டத்துல செத்தவுக ஆவி வீட்ட விட்டு அவ்ளோ சுளுவா போவாதுப்பா. அதுக்குத்தான் இதெல்லாம். ஓலப்பாயில சுத்தி செவுத்து வழியா தூக்குனா ஆவி குழம்பிரும். அதுக்கு எது வாசல்னு தெரியாது."ன்னாரு. சுப்புவும் கேட்டுகிட்டே இருந்தான். ஓலப்பாயில சுத்தி எடுத்துட்டு வந்து பாடேல ஏத்திட்டாக. திடீர்னு கடுகு பாக்கெட்ட எடுத்துட்டு ஓடியாந்துச்சு கிழவி, "சம்முகம் இதக் கையில வச்சுக்க. சுடுகாடு வர ரோட்டுல போட்டுக்கிட்டே போனும்டா. போறவர தீராம பார்த்துக்க."னு சொல்லிட்டு கைல கொடுத்துட்டு பாடைய பார்த்து அழுவ ஆரம்பிச்சுருச்சு.

மாமாவ தூக்கிட்டு சுடுகாடு போக ஆரம்பிச்சாய்ங்க, நான், சுப்பிரமணி, சோமு மாமா பின்னாடியே நடந்தோம். என் மூஞ்சில குழப்பத்த பார்த்துட்டு அவரா பேச ஆரம்பிச்சாரு, "சுடுகாட்டுல எரிச்சவுடனே ஆவி வீட்டுக்கு வரப்பாக்கும் டா. கடுகப் போட்டுகிட்டே போனோம்னா அதப் பொறுக்கிகிட்டே அது வீடு வந்து சேர்றதுக்குள்ள விடிஞ்சி போகும். அதால ஆவி திரும்பிப் போயிரும்னு ஒரு நம்பிக்கை"னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சாரு.

சுப்பிரமணி என் கைய சுரண்டி தூக்கச் சொன்னான்.
"அப்பா. மாமா தாத்தா இனிமே வரவே மாட்டாராப்பா?"
"ஆமாடா. செத்துப்போயிட்டாருல. இனிமே சாமிடா அவரு" "ஆவியா கூட வரமாட்டாராப்பா?"
"வரமாட்டாருடா. அதுக்குத்தான் கடுகெல்லாம் போட்டுட்டே போறாங்க"
"ஏம்பா? மாமா தாத்தா செத்துட்டாருனு எல்லாரும் அழுதாங்கல்ல. அவரு ஆவியா வந்தா நல்லதுதானப்பா. நம்மகூடவே இருப்பாருல்ல. ஏம்பா விட மாட்றாங்க?"

10 comments:

அப்பாதுரை said...

hilarious.

Raja said...

//ஏம்பா? மாமா தாத்தா செத்துட்டாருனு எல்லாரும் அழுதாங்கல்ல. அவரு ஆவியா வந்தா நல்லதுதானப்பா. நம்மகூடவே இருப்பாருல்ல. ஏம்பா விட மாட்றாங்க?//

Great Punch!

ramesh said...

அழகான எழுத்து நடை இலவராசா.....வாழ்த்துக்கள் !

Joe said...

Casper - the friendly ghost, மாதிரி அவரும் இருந்திட்டுப் போகட்டுமே? பாவம் அவரை ஏன் விரட்டுகிறார்கள்?

அழகான சிறுகதை, தொடர்ந்து எழுதுங்கள்.

Packiarajan said...

மிக அருமை தம்பி.. யாருக்கும் அவ்வளவு சுளுவா வராத எழுத்து நடை உன் கைவர பெற்று இருக்கிறாய்.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

அனைவருக்கும் நன்றிகள். :-)

Anonymous said...

Machi.. Supeeerrrrrraaaaaa..... eppadi da unakku eppadillaam thonuthu....

srinivasan said...

eppadi pa room pottutu yosipingalo, super entertainment.

Anonymous said...

nice story..you can share this world by submitting in newspaanai.com ...

அ.பிரபாகரன் said...

சுவாரசியாமா எழுதுரீங்க அசோக்.. உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...